என் மலர்
வழிபாடு

மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் உடனடி முன்பதிவு 2 ஆயிரமாக குறைப்பு
- மண்டல பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து நேற்று புறப்பட்டது.
- சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிரடியாக குறைக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது.
மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து நேற்று புறப்பட்டது. இந்த ஊர்வலம் பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு நாளைமறுநாள்(26-ந்தேதி) நண்பகல் பம்பா திரிவேணி சங்கமத்துக்கு வந்து சேருகிறது.
அன்று மாலை 3 மணிக்கு பிறகு பம்பா கணபதி கோவிலில் இருந்து புறப்படும் தங்க அங்கி, நீலிமலை மற்றும் அப்பாச்சி மேடு, சரங்குத்தியை கடந்து சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அதன்பிறகு தங்க அங்கி ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும். மறுநாள் (27-ந்தேதி) மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் முழுவதும் ஐயப்பன் தங்க அங்கியில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மண்டல பூஜையை முன்னிட்டு வருகிற 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிரடியாக குறைக்கப்பட்டது.
ஆன்லைன் முன்பதிவு மூலம் 26-ந்தேதி 30ஆயிரம் பேருக்கும், மண்டல பூஜை நடைபெறக்கூடிய 27-ந்தேதி 35 ஆயிரம் பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இரண்டு நாட்களும் உடனடி முன்பதிவு(ஸ்பாட் புக்கிங்) 2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி தங்க அங்கி ஊர்வலம் வரக்கூடிய, 26-ந்தேதி காலை 9 மணிக்கு பிறகு நிலக்கல்லில் இருந்தும், 10 மணிக்கு பிறகு பம்பாவில் இருந்தும் பக்தர்கள் சன்னதிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். தங்க அங்கி ஊர்வலம் சரங்குத்தியை அடைந்தபிறகே, பம்பாவிற்கு வர பக்தரகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






