என் மலர்
வழிபாடு

வேண்டுதலை நிறைவேற்றும் ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா
- இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, ஏசு சபை குருவானார்.
- புதுமை ஊற்றுதான் மாதாவின் அருமருந்து என்பதை கண்டு கொண்டார்.
திருத்தலம்
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற அடைக்கல மாதா திருத்தலம் அமைந்துள்ளது. உடல் நலம், திருமண வரம், குழந்தை பேறு வேண்டுபவர்கள் அடைக்கல மாதாவை மனமுருகி வழிபட்டால் வேண்டுதல் நிறை வேறும் என்பது ஐதீகம்.
தல வரலாறு
தஞ்சையை ஆண்ட ஷாஜி என்பவர் 1682-ம் ஆண்டு முதல் 1711-ம் ஆண்டு வரை கத்தோலிக்க கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். 'தஞ்சை நாட்டு நீரோ' என்று அழைக்கப்பட்ட அவர் ஜோசப் கர்வாலோ அடிகளாரை சிறைப்படுத்தி கொன்றார். பின்னர் அவரது தம்பி சரபோஜி 1711-ம் ஆண்டு அரியணை ஏறினார். அவராவது கிறிஸ்தவர்களுக்கு கருணை காட்டுவார் என்று எதிர்பார்த்த மக்கள் ஏமாந்து போயினர். கொடுமைகளின் கோரத்தை தாங்க முடியாத கிறிஸ்தவர்கள் தங்களது உயிரையும், உயிரினும் மேலான கத்தோலிக்க நம்பிக்கையையும் காத்து கொள்ளும் பொருட்டு கொள்ளிடம் ஆற்றை தாண்டி தப்பித்து வந்து நடுகாட்டில் குடியேறினர்.
முதன் முதலில் புளியங்குடியில் இருந்து சில கிறிஸ்தவா்கள் ஏலாக்குறிச்சியில் குடியேறி கூரையால் வேயப்பட்ட தேவாலயத்தை நிறுவினர். முதல் மறை பரப்பு பணியாளராக ஏலாக் குறிச்சி வந்தவர் தஞ்சை சைமன் கர்வோலா அடிகளார். அவர் 1705-ம் ஆண்டு மதுரை மறை மாநிலத்தை விட்டு, திருவாங்கூர் சென்றதால் தந்தை மானுவேல் மச்சாடோ அடிகளார் ஏலாக்குறிச்சியில் பணியாற்றினார்.
வீரமாமுனிவர்
இதையடுத்து, இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, ஏசு சபை குருவானார். 1710-ம் ஆண்டு கோவா துறைமுகம் வந்து இறங்கிய ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி 1716-ம் ஆண்டு ஏலாக்குறிச்சியில் 3-வது பங்கு தந்தையாக பணியாற்றினார். அந்த ஆண்டிலே ஏலாக்குறிச்சியில் அழகிய ஆலயம் ஒன்றை கட்டி எழுப்பினார். அதில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவில் இருந்து கொண்டு வந்த மாதா சிலையை நிறுவினார். அந்த மாதாவுக்கு 'அடைக்கல மாதா' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். பின்னர் அவர் ஏலாக்குறிச்சியில் தங்கியிருந்து பல இடங்களுக்கு சென்று மாதாவின் புகழை பறைசாற்றினார்.
ஏசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு செய்தியை தமிழ் கூறும் நல்லுலகு அறிய வேண்டுமானால் ஏசுவின் மறை உண்மைகளை தமிழிலேயே கூற வேண்டும். தமிழனாகவே வாழ வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து தமிழ் கற்று, தமிழ் மீது காதல் கொண்டு தமிழ் இலக்கண இலக்கியங்களை நுணுக்கமாக ஆராய்ந்து தேம்பாவணி என்ற தேன் சொட்டும் காப்பியத்தை படைத்தார். ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி என்ற தன் இயற்பெயரை 'வீரமாமுனிவர்' என்று மாற்றிக் கொண்டார்.
இவர் தனது இறுதி காலமான 1747-ம் ஆண்டு வரை 36 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு நூல் என்று 36 தமிழ் நூல்களை இயற்றியுள்ளார். அதில் புனித வளவனாரை போற்றி இயற்றிய தேம்பாவணியும், ஏலாக்குறிச்சி அடைக்கல மாதாவை போற்றி எழுதிய திருக்காவலூர் கலம்பகமும் குறிப்பிடத்தக்கவை. அவரது சிலை திருத்தல வளாகத்தில் உள்ளது.
தீராத நோயை தீர்த்த மாதா
அப்போதைய காலக்கட்டத்தில் ஏலாக்குறிச்சியை உள்ளடக்கிய அரியலூர் பகுதியை ஆண்ட சிற்றரசன் அரங்கப்ப மழவராய நயினார் என்ற மன்னர் ராஜப்பிளவை என்னும் தீராத நோயினால் மரணத்தை எதிர்நோக்கி கொண்டிருந்தார். மருத்துவ முறைகள் அனைத்தும் பயனற்று போகவே, அவர் ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா திருத்தலத்தை நாடி வந்தார். அப்போது, வீரமாமுனிவர் மன்னரின் வேதனையை கண்டு மாதாவை நோக்கி மாதாவே நீயல்லால் மன்னரின் நோயை யார் தீர்ப்பார்? என வேண்டி பச்சிலையை தேடி சென்றார். அப்போது சுட்டெரிக்கும் வெயில் காலம் புல்லெல்லாம் பொசுங்கிப்போன கடுங்கோடை, வறண்டு போன பூமியில் இருந்து தண்ணீர் கொப்பளித்து (மாதா குளம்) வந்ததை கண்ட வீரமாமுனிவர் இது மாதாவின் புதுமை, புதுமையோ புதுமை என பூரித்து போனார்.
புதுமை ஊற்றுதான் மாதாவின் அருமருந்து என்பதை கண்டு கொண்டார். சற்று தாமதியாமல் நீரோட சேற்றை அள்ளி மன்னரின் ராஜப்பிளவை கட்டியில் பூசினார். என்ன விந்தை அன்றே மன்னர் குணமடைந்தார். 7 ஆண்டுகளாக தூங்காத மன்னர் வலியின்றி தூங்கினார். குணமாக்க முடியாத நோயை அடைக்கல மாதா பாதம்பட்ட மண்ணே குணமாக்கியது. இதனால் நன்றி காணிக்கையாக ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா திருத்தலத்திற்கு அப்போதே மன்னர் அரங்கப்ப மழவராய நயினார் 175 ஏக்கர் நிலத்தை காணிக்கையாக வீரமாமுனிவரிடம் அளித்தார். மன்னர் அளித்த நில சாசனம் (கல்வெட்டு) இன்றும் ஏலாக்குறிச்சியில் மாதா புதுமைக்கு சாட்சியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
53 அடி உயர வெண்கல மாதா சிலை
1980-ம் ஆண்டு திருத் தலம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 2000-ம் ஆண்டு தமிழக அரசு ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா திருத்தலத்தை சுற்றுலா தலமாக அங்கீகரித்தது. திருத்தலத்தின் பின்புறம் உள்ள மாதா குளத்தில் ஜெப மாலை பூங்கா அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டில் மாதா குளத்தில் ஆசியாவிலேயே மிக உயரமான 53 அடி உயரமுள்ள மாதாவின் வெண்கல சொரூபம் (சிலை) அமைக்கப்பட்டது. மத, இன வேறுபாடின்றி தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் ஏலாக் குறிச்சி அடைக்கல மாதா திருத்தலத்தை தேடி வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
திருத்தலத்தில் தினமும் காலை 6 மணி மற்றும் 11.30 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி மற்றும் 11.30 மணிக்கும் திருப்பலி நடைபெறும். மாதத்தின் முதல் சனிக்கிழமை காலை 11 மணிக்கு மாதா குளத்தை சுற்றி சிறிய தேர்ப்பவனி, மாதத்தின் 2-ம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அருங்கொடை ஜெபமும், திருப்பலியும் நடைபெறும். ஈஸ்டர் பண்டிகைக்கு பின்வரும் 2-ம் சனிக்கிழமை திருத்தல ஆண்டு பெருவிழாவின் கொடியேற்றமும், 3-ம் சனிக் கிழமை அலங்கார தேர்ப்பவனியும் நடக்கிறது.






