என் மலர்
வழிபாடு

2026 New Year rasi palan- சிம்மம் முதல் விருச்சிகம் வரை 4 ராசிபலன்களுக்கான புத்தாண்டு ராசிபலன்
- சிம்ம ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு நல்லவிதமான ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.
- பிறக்கப் போகும் 2026 ஆம் ஆண்டு கன்னி ராசியினருக்கு இன்பத்தில் திளைக்கும் ஆண்டாக அமையப் போகின்றது.
புகழ்ச்சியை விரும்பும் சிம்ம ராசியினரே,,,,
புகழ்ச்சியால் மகிழ்ச்சி அடையும் சிம்ம ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு நல்லவிதமான ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். லாபஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் வரை பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். தாரள தன வரவு உண்டு. வீட்டில் சுப விசேஷங்கள் நடக்கும். புதிய வாய்ப்புகள் கைகூடும் உங்களை சாதாரணமாக நினைத்தவர்கள் உங்களது திறமைகளை உணர்வார்கள். சவாலான செயல்களைக் கூட நேர்த்தியாக செய்து முடித்து வெற்றி வாகை சூடுவீர்கள். பட்டம், பதவி போன்ற அதிகார அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகொடுக்கும்.
குருவின் சஞ்சார பலன்கள்
சிம்ம ராசிக்கு 5,8-ம் அதிபதியான குரு பகவான் ஜுன்2, 2026 வரை 11ம் மிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். அதன் பிறகு 12ம் மிடமான விரய ஸ்தானத்திற்கு செல்கிறார். அஷ்டமச் சனியின் தாக்கத்தால் பிரிந்து வாழ்ந்த தம்பதிகளுக்கு சேர்ந்து வாழும் விருப்பம் அதிகரிக்கும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கும். வீடு, மனை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். கர்பிணி பெண்களுக்கு ஆண் மகவு பிறக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும்.
நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும். பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். தீர்க்கமாக யோசிக்காமல் எடுக்கும் முடிவு எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும். விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது அவசியம். சட்டச் சிக்கல் காரணமாக மன அமைதி குறையும் என்பதால் எந்த விதமான சட்டச் சிக்கலாக இருந்தாலும் நீதிமன்ற படி ஏறுவதை தவிர்த்து பேசித் தீர்க்க முயல வேண்டும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் மனக் சஞ்சலத்தால் தாமதமாகும். யாருக்கும் பணம் கடனாக தர, வாங்கக்கூடாது.
சனியின் சஞ்சார பலன்கள்
சிம்ம ராசிக்கு 6,7ம் அதிபதியான சனி பகவான் 2026ம் ஆண்டு முழுவதும் அஷ்டம ஸ்தானத்தில் நின்று அஷ்டமச் சனியாக பலன் தருவார். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் உண்மையாக இருப்பவர்கள் யார்? பகடைக்காயாக பயன்படுத்துபவர் யார்? என்ற அனுபவ உண்மை புரியும். உடல் உபாதைகள், நோய் தொந்தரவு மாற்று வைத்தியத்தில் பலன் தரும். கொடுக்கல் வாங்கலில் நிதானத்தை கடைபிடிக்கவும். தாய் வழியில் மனக்கவலை கருத்து வேறுபாடு உண்டாகும். புதிய முயற்சிகளைத் சுய ஜாதக பரிசீலனைக்கு ஏற்ப செய்வது நல்லது. பணவரவில் முன்னேற்றம் இருக்கும். பெண்கள் புதிய வாகனம் வாங்குதல், ஆடம்பரப் பொருட்கள் வாங்குதல், உல்லாசப் பயணம் செல்லுதல் என்று இனிமையாகப் பொழுதை கழிப்பார்கள்.
சிலர் பணிச்சுமை அல்லது ஆரோக்கிய குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெறலாம்.தம்பதிகள் அமைதி கடைபிடித்தால் நிலமை சீராகும். குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும்படியாக இருந்தாலும் நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சனைகளைத் தடுக்கும். பழைய வீட்டைப் புதுப்பிப்பீர்கள். பொழுது போக்கான விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற சுப நிகழ்விற்கு எதிர்பார்த்திருந்த தொகை கிடைத்து பணவரவு சரளமாகும்.உங்கள் பேச்சால், முன் கோபத்தால் நல்ல வாய்ப்புகள் தள்ளிப்போகும். பணியாளர்களால் சில அசவுகரியங்கள் ஏற்படலாம்.
ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்
2026 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி வரை கேது பகவான் ராசியிலும் ராகு பகவான் சம சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.இது அஷ்டம சனி பிரச்சனை, ஜென்ம கேது, ராகுவின் காலம் என்பதால் எதையும் எடுத்தும் கவிழ்த்தோம் என்று செய்யக்கூடாது. வாழ்க்கை என்பது கண்ணாடி பாத்திரம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். எந்த கிரகம் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் திருமணம் முயற்சியை தவிர்ப்பது நல்லது. விருப்ப விவாகமோ பெற்றோர்களின் ஆசிர்வாத திருமணமாக இருந்தாலும் ஏழில் ராகு இருப்பதால் சில தவறான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து பின் நாட்களில் வருந்த நேரம் என்பதால் திருமணத்தை ஒத்தி வைப்பது சாலச் சிறந்தது.
பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் சில சங்கடங்கள் உண்டாகலாம்.அதனால் பார்க்கும் வேலையை மாற்றலாம். பெண்கள் இந்த கால கட்டத்தில் மாங்கல்ய சரடு மாற்றுவது, தாலி பெருக்கிப் போடுவது போன்றவற்றை தவிர்க்கலாம்.கையில் காசு சரளமாக புரளும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விற்காமல் தேங்கிய சரக்குகள், கையிருப்பில் இருக்கும் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனையாகும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.
மகம்
மாற்றமும் ஏற்றமும் தேடி வரும் வருடம். பூமி, மனை, வாகனம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் முடிவிற்கு வரும். காணமல் போன நகை, பணம் கிடைக்கும். கடந்த கால கடன் பிரச்சனைகள் குறையத் துவங்கும். போதிய தன வரவால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். சொத்தை அடமானம் வைத்து சில்லறைக் கடனை அடைத்து கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் பெறுவீர்கள். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கு ஏற்ப சிலரின் இளைய சகோதரம் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
சிலருக்கு சளி, இருமல் காய்ச்சல், உடல் அசதி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் உண்டாகும். அஷ்டம சனி மற்றும் விரய குரு காலம் என்பதால் அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தவிர்ப்பது நல்லது. கிடைக்கும் உபரி பணத்தை வேறு வகையில் முதலீடு செய்வது நல்லது. சிலர் பதிவுத் திருமணம் செய்து உற்றார் உறவினரை சங்கடப்படுத்துவர். தொழில் பங்குதாரரின் மேல் நம்பிக்கை குறைவு உண்டாகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.தினமும் சிவ கவசம் படிக்கவும்.
பூரம்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய வருடம். வரவுக்கு மீறிய செலவுகள் மனதை வருத்தும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.தொழில், உத்தியோக ரீதியான பாதிப்பு எதுவும் இருக்காது. பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. நல்ல சொந்த வீட்டிற்குச் செல்வீர்கள். கை மறதியாக வைத்த முக்கியமான ஆவணங்கள் நகைகள் கிடைக்கும். இடப் பெயர்ச்சி செய்ய நேரும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் ஏற்படலாம்.
குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகன, சொத்து யோகம் உண்டாகும். தாயின் உடல் நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்சியை அதிகரிக்கும். பெண்களின் ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் வங்கி சேமிப்பை கரைத்து விடும்.வீண் விரயம் அல்லது வைத்தியச் செலவு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். வருமானத்தில் பெரும் பகுதி கடனுக்கு செல்லும். வியாழக்கிழமை குரு பகவானை வழிபடவும்.
உத்திரம் 1
மேன்மையான பலன்கள் உண்டாகும் வருடம்.சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும்.மாற்றுமுறை வைத்தியத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத்திற்கு பொன், பொருள் வாங்குவீர்கள். எதிர்காலம் குறித்த சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைபாடு அகலும்.தொழிலில் லாபம் அதிகரிக்கும்.வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். சிலருக்கு தாய்வழிச் சொத்தில் தாய்மாவுடன் எல்லைத் தகறாறு உண்டாகும்.மத்தியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடக்கும்.
விவாகரத்து வரைச் சென்ற வழக்குகள் சுமூகமாகும்.சிலருக்கு எண்ணங்களை செயலாக மாற்ற முடியாது. மனதில் இனம் புரியாத பய உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.சொத்துக்களுக்கு நல்ல வாடகைதாரர் கிடைப்பார்கள்.அரசு வழி ஆதாயம் உண்டு. தந்தையின் கட்டளைக்கு இணங்குவீர்கள். குழந்தை பாக்கியம் தொடர்பான உங்களின் எண்ணம் ஈடேறும். குல தெய்வ வழிபாடு நற்பலன் தரும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.
பரிகாரம்: மாதம் ஒருமுறை உங்கள் ஜென்ம நட்சத்திரம் நாளில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று வருவதால் நவகிரக தோஷம் விலகும்.
எதிலும் சிறப்பாக செயல்படும் கன்னி ராசியினரே...
பிறக்கப் போகும் 2026 ஆம் ஆண்டு கன்னி ராசியினருக்கு இன்பத்தில் திளைக்கும் ஆண்டாக அமையப் போகின்றது. அடடா மழைடா அடை மழைடா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப கன்னி ராசியினர் வீட்டில் பண மழை பெய்யும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கால, நேரத்தை வீணடிக்காமல் உழைப்பீர்கள். தடைபட்ட பணிகள் மளமளவென்று நிறைவேறும். புதிய தெளிவும், நம்பிக்கையும் உண்டாகும். தைரியசாலியாக இருப்பீர்கள். பயம் என்பதே இருக்காது.
குருவின் சஞ்சார பலன்கள்:
கன்னி ராசியினருக்கு 4,7ம் அதிபதியான குரு பகவான் ஜூன் 2, 2026 வரை பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். அதன் பிறகு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். இதுவரை சொந்த தொழில் நாட்டம் இல்லாதவர்களுக்கு கூட சுய தொழில் ஆர்வம் உருவாகும். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்து லாபம் ஈட்டும் மார்க்கம் தென்படும். பங்கு வர்த்தகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
தடைபட்ட காரியங்கள் துரிதமாகும் வருடம். கடுமையாக உழைப்பீர்கள். பல சிக்கல்கள், சங்கடங்களிலிருந்து விடுபடுவீர்கள். கடந்த கால கடன்களைத் தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.சுய ஜாதக ரீதியான திருமணத் தடை அகலும். மறுதிருமணத்திற்கு நல்ல வரன் அமையும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும். தொலைந்த கைவிட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். சிலருக்கு தாயார் மூலம் திரண்ட சொத்து அல்லது பெரிய அதிர்ஷ்ட தொகை கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
சனியின் சஞ்சார பலன்கள்:
கன்னி ராசிக்கு 5,6ம் அதிபதியான சனி பகவான் ஆண்டு முழுவதும் ராசிக்கு ஏழாம் இடத்தில் நின்று கண்டகச் சனியாக பலன் தருவார். குருபகவான் கூட்டுத் தொழிலை தந்தால் கூட சுய ஜாதக ரீதியான தசாபுத்தி காலம் அறிந்து கூட்டு தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.தசா புத்தி சாதகமற்றவர்கள் நிதானமாக செயல்பட்டால் எதிர் விளைவுகள் வராது. மதிப்பு, மரியாதை கூடும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகமாகும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வீர்கள்.
பொருளாதார முன்னேற்றம் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.தாராள தன வரவு ஏற்பட்டாலும் மிகைப்படுத்தலான சுப விரையமும் இருக்கும். குரு பார்வை ராசிக்கு 7ம் இடத்தில் பதியும் காலகட்டங்களில் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் இணையலாம்.பிள்ளைகளுக்கு சாதகமான நேரம் இருப்பதால் கவலையின்றி இருக்கவும். உயில் எழுத, திருத்தம் செய்ய உகந்த நேரம். ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் அகலும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்:
தற்போது கோட்சாரத்தில் ராசிக்கு 12ம் இடத்தில் கேதுவும் 6ம் மிடத்தில் ராகுவும் சஞ்சரிகிறார்கள். டிசம்பர் 5, 2026 முதல் கேது பகவான் 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். ராகு பகவான் 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்கிறார். எதிரிகளை வெல்லும் தைரியம் உண்டாகும். போட்டிப்பந்தயத்தில் வெற்றி உண்டாகும். பாவம் புண்ணியம் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். உலக வாழ்வில் பற்றற்ற நிலையை அடையச் செய்யும் பக்தி மார்க்கத்தில் மனம் லயிக்கும். பாவம், புண்ணியம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். இதனால் சிலருக்குக் காரியத்தடைகள், கால தாமதங்கள் ஏற்பட்டாலும் வெற்றி நிச்சயம்.
வரவும் செலவும் சமமாக இருக்கும். வீடு கட்ட போட்ட பட்ஜெட் எகிறும். புதிய கடன் தொகைக்காக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை அணுகுவீர்கள். சிலருக்கு கண் சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகும். முன்னோர்களின் ஆசிர்வாதமும் வழிகாட்டலும் விரும்பிய மாற்றத்தை தரும் என்பதால் நம்பிக்கை மிக முக்கியம். சிலர் கை இருப்பை செலவழித்து விட்டு கடன் வாங்க நேரிடலாம். கலைத்துறையினர் கலை நிகழ்ச்சிக்காக வெளிநாட்டு பயணம் செல்லலாம். பிறரின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதால் மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க முடியும்.
உத்திரம் 2,3,4:
தடைகள் தகர்ந்து வெற்றி நடைபோடும் வருடம். லாப குருவால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மனதில் புதிய தெம்பு, தைரியம் குடி புகும். விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும். நேரம் காலம் சாதகமாக இருந்தாலும் எந்த செயலையும் பல முறை யோசித்து செயல்பட வேண்டும்.
சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதிலும் விருப்பம் கூடும். குடும்ப உறவுகளின் செயல்களில் நன்மை இருக்கும். கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். இதுவரை சந்தித்த பிரச்சனைகள் பனி போல் விலகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும். தடைபட்ட வாடகை வருமானம், குத்தகை பணம் வரத்துவங்கும்.முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து செயல்களும் வெற்றி வாய்ப்பை தேடித்தரும். சனிக்கிழமை நவகிரகங்களை வழிபடவும்.
அஸ்தம்:
பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும் வருடம்.குருவின் பார்வை 7ம் இடத்தில் உள்ள சனியின் மேல் பதிவதால் மனக் கவலைகள் அகலும்.லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டீர்கள். வாழ்க்கையே போராட்டமாக இருந்த நிலை மாறும். சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதி கூடும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். செலவுகள், விரயங்கள் குறையும். சேமிப்புகள் கூடும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் குரு பகவானை சேரும்.தொழில் கடனை குறைக்க புதிய வழிபிறக்கும்.
தேவைக்கு பணவசதி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். சிலருக்கு திருமணம் நடந்தாலும் குடும்பத்தினரின் விருப்பத்திற்காகவோ, மனதிற்கு பிடிக்காத தகுதி குறைந்த திருமணமாகவோ இருக்கும். ஒரு முக்கிய கோரிக்கைக்காக குல தெய்வத்திற்கு வேண்டுதல் வைப்பீர்கள். பங்கு வர்த்தகர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது அவசியம். எதிரிகளின் கை தாழ்ந்து உங்கள் கை ஓங்கும்.வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும்.
சித்திரை 1, 2:
எதிர்பார்த்த முன்னேற்றங்களால் மகிழும் வருடம்.செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். வருமானம் உயர்வதால் உங்கள் சொல்வாக்கிற்கு மதிப்பு உயரும். குடும்பத்தில் நிம்மதி நிறைந்திருக்கும். கடன் சார்ந்த பாதிப்புகள் குறையும்.அடமான நகைகளை மீட்கக் தேவையான பண உதவி கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.திருமணம் நடக்கும்.
குழந்தை பாக்கியம் உண்டாகும். அழகு, ஆடம்பர நவீன பொருட்கள், தங்க, வெள்ளி நகை சேர்க்கை அதிகரிக்கும். திருமணம், வீடு, வாகனம் என சுப செலவுகளும் ஏற்படலாம். தொழில் லாபங்கள் மறு முதலீடாக மாறும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீடுகளால் சுப பலன் ஏற்படும். 7ம் இடத்தில் சனி பகவான் நிற்பதால் திருமண விஷயத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும். கவுரவப் பதவிகள், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். எல்லாம் முறையாக நடந்தாலும் எதிர்காலம் பற்றிய பயமும் அவ்வப்போது வந்து மறையும். வாரம் ஒரு முறை விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும்.
பரிகாரம்: உங்கள் ஊரின் எல்லை தெய்வம் காவல் தெய்வங்களை வழிபட நினைத்ததை சாதிக்கக்கூடிய வல்லமை உண்டாகும்.
நியாயமான துலாம் ராசியினரே...
நியாயம் தர்மத்தில் நம்பிக்கை நிறைந்த துலாம் ராசியினருக்கு 2026-ம் ஆண்டு நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டில் நீங்கள் எண்ணியது ஈடேறும். உங்களை சாதாரணமாக நினைத்தவர்கள் கூட உங்களது திறமைகளை உணர்வார்கள். வாழ்க்கையை நகர்த்துவதில் இருந்த சிரமங்கள் சீராகும். நிம்மதியாக இருப்பீர்கள். சொல்வாக்கால் மற்றவர்களால் மதித்திடக்கூடிய நிலையை அடைவீர்கள்.
குருவின் சஞ்சார பலன்கள்:
துலாம் ராசிக்கு 3,6ம் அதிபதியான குரு பகவான் ஆண்டின் துவக்கத்தில் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். 2.6.2026 முதல் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்படும். இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டுப் பெறப் போகிறீர்கள். உங்களின் கற்பனைகள் கனவுகள் நனவாகும். இளமையாக பரபரப்பாகவும், சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். துக்கத்தால் தூக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும். வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும். பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் பாதுகாப்பு கூடும் அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு.
பொருளாதார ஏற்றத் தாழ்வு அகலும். வட்டிக்கு வட்டி கட்டிய நிலைமாறும். வியாபாரத்தில் நிலவிய மந்த நிலை நீங்கி தொழிலில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு தாயார் மூலம் திரண்ட சொத்து அல்லது பெரிய அதிர்ஷ்ட தொகை கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். குல தெய்வம் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சொத்துக்கள், அழகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சுப விசேஷங்கள் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலைமாறி படிப்பில் ஆர்வம் உண்டாகும்.தாயின் உடல் நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும்.
சனியின் சஞ்சார பலன்கள்:
துலாம் ராசிக்கு 4,5ம் அதிபதியான சனி பகவான் ஆண்டு முழுவதும் 6ம் மிடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியைத் தரும். பணிச் சுமை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது முன்னேற்றத்துக்கு உதவும். தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். ஊர் மாற்றம், நாடு மாற்றம் வரலாம். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். திருமண வாய்ப்பு கூடி வரும். சிலருக்கு மறு விவாகம் நடக்கும். அரசியல் பிரமுகர்களின் பொறுப்புகள் கூடும்.
மாணவர்கள் அக்கரையாக படிப்பார்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் சுப விசேஷங்கள் நடக்கும்.தொலைந்த கைவிட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். அதிக வேலைச் பளுவால் உரிய நேரத்தில் சாப்பிட முடியாமல் அல்சர் போன்ற உடல் உபாதைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 6ல் உள்ள சனிபகவான் கடன் சார்ந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். எனினும் எல்ல விஷயத்தையும் பொறுப்புடன் பொறுமையாக கையாள வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.
ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்:
தற்போது கோட்சாரத்தில் துலாம் ராசிக்கு 5ம்மிடத்தில் ராகுவும் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். 5.12.2026 முதல் சுக ஸ்தானத்தில் ராகுவும் தொழில் ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். ஐந்தில் உள்ள ராகு தொழில், உத்தியோகத்தில் குறுக்கு சிந்தனையை புகுத்துவார். பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டாகும். பங்குச் சந்தை ஆதாயம் இரட்டிப்பாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். வெளிநாட்டு முயற்சிகள் பலன் தரும். விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு சிறு தடைக்குப் பிறகு சாதகமாகும். பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ளவது சற்று கடினமாக இருக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் வைத்தியத்தில் கட்டுப்படும்.
பொருளாதார நிலையில் நல்ல நிரந்தரமான உயர்வு ஏற்படும். பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத விரயங்களை சந்திக்க நேரும். தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும். அரசியல்வாதிகள் மெளனமாக இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். மருமகனால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். வம்பு, வழக்குகள் சாதகமாகும். பிறரின் பொறாமை குணத்தால் கண் திருஷ்டி உருவாகலாம். தாய்மாமன் மூலம் அனுகூலம் கிடைக்கும். வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.
சித்திரை 3,4:
காரிய தடைகள் நீங்கும் வருடம். கிரகங்களின் நிலவரம் சித்திரை நட்சத்திரத்திற்கு மிகச் சாதமாக உள்ளது. கவலைகள் அகலும் உற்சாகமாக, ஆரோக்கியமாக இருப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும். வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். தடைபட்டிருந்த தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும்.
வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். திட்டமிட்டு செயல்படுவதால் காரிய ஜெயம் உண்டாகும். நோய் பாதிப்புகள் குறைய துவங்கும். இழுபறியான பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். பெண்கள் வேலை பார்க்கும் இடத்தை மாற்றலாம். விவகாரத்து வரை சென்ற வழக்குகள் திரும்பப் பெறப்படும். திருமண விசயத்தில் வேண்டாம் என்று ஒதுக்கிய வரனே சாதகமாக முடியும். எந்த செயலையும் இடம் பொருள் ஏவல் பார்த்து நடத்த வேண்டும் யாரையும் பகைக்க கூடாது. முருகனை வழிபடுவதால் இன்பங்கள் கூடும்.
சுவாதி:
பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் வருடம். பொதுவாக ஒரு ஜாதகத்தில் 5ம் இடத்தில் உள்ள கிரகங்கள் மிக நன்மையை செய்யும். அந்த வகையில் தற்போது அதிர்ஷ்டத்தை கூறும் ஐந்தாம் இடத்தில் நட்சத்திரநாதன் ராகு பகவான் நிற்பதால் வருமானம், பெயர், புகழ் அந்தஸ்து உயரும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும். தொழிலில் போட்டிகள் இருப்பினும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் வருமானம் உயரும்.
குடும்பத்திற்கு பொன், பொருள் வாங்குவீர்கள். புத்திர பாக்கியம், வீடு, வாகன யோகம் போன்ற தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் தேடி வரும். திருமணம் மற்றும் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். விலகிய குடும்ப உறவுகளின் புரிதல் மகிழ்ச்சி அதிகரிக்கும். விண்ணப்பித்த வீடு, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். காலத்தின் அருமை அறிந்து செயல்பட வெற்றி நிச்சயம். ராகு காலத்தில் துர்க்கை அல்லது காளியை வழிபடவும்.
விசாகம் 1, 2, 3:
துலாம் ராசி விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 2026ம் ஆண்டு தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். எதிலும் சிறப்பாக செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட மனக்குழப்பம், பணிச் சோர்வு அகலும். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் மற்றும் வெற்றி வாய்ப்பு அதிகமாகும். நீங்கள் எதிர்கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி. தந்தை வழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும் சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம் அல்லது பழைய தொழிலை விரிவாக்கம் செய்யலாம்.
பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பார்க்கும் வேலையை மாற்ற செய்ய வேண்டாம். விரும்பிய பதவி உயர்வு தேடி வந்தாலும் பணிச் சுமை உங்களை வாட்டும். சிலருக்கு குடும்ப நிர்வாகச் செலவு, வீண் விரயங்கள் அதிகமாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். பருவ வயதினர் மண நாளை எண்ணலாம். வீட்டில் சுப காரியங்கள் நடை பெறும். தினமும் கால பைரவ அஷ்டகம் படிக்கவும்.
பரிகாரம்: காஞ்சி காமாட்சியை வழிபட லட்சுமி கடாட்சம் அதிகமாகும்.
உயர்வான எண்ணம் கொண்ட விருச்சிக ராசியினரே....எதையும் வெல்லக்கூடிய ஆற்றல் மிகுந்த விருச்சிக ராசியினருக்கு 2026 ம் ஆண்டு நல்ல வாய்ப்புகளை பெறக்கூடிய ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சில சங்கடங்கள் தோன்றினாலும் பிற்பகுதி நல்ல வாய்ப்புகளை வழங்கும்.உங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த எதிர்ப்புகள் அகலும்.எதையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். விரைந்து வேகமாக செயல்படுவீர்கள். தொட்டது துலங்கும்.பட்டது பூக்கும். புதிய மாற்றம் உண்டாகும். சம்பாதிக்கும் பணத்தில் உபரியாகும் லாபத்தை முறையாக சேமித்து வைத்துக் கொண்டால் கிரக சூழ்நிலை சாதகமற்று இருக்கும் காலங்களில் நிம்மதியாக இருக்க முடியும்.
குருவின் சஞ்சார பலன்கள்:
மே மாதம் 2026 வரை குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் நிற்பார். ஜூன் 2ம் தேதி முதல் பாக்கிய ஸ்தானத்தில் நின்று பலன் தருவார். 2026 ஆம் ஆண்டு விருச்சிக ராசியினருக்கு விட்டதை மீட்டு பிடிக்கும் காலமாகும். உங்களிடம் புதிய தெளிவு பிறக்கும் அறிவாற்றல் மேம்படும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். அஷ்டம குரு காலத்தில் விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். அஷ்டம குருவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். பாக்கிய ஸ்தான குரு பகவான் இடமாற்றத்தை தந்து அதன் மூலம் நல்ல பலன்களை வழங்குவார். ஒருவர் வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் பிள்ளைகளின் வருமானத்தில் உயர்ந்து நிற்கும். வரா கடன்கள் வசூலாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகி கடனை அடைக்க கூடிய சூழ்நிலைகள் உருவாகும்.
வீடு வாகன யோகம் என வளமான வாழ்க்கையை வாழ போகிறீர்கள். நாலு பேருக்கு உதவி செய்து சமூக மரியாதையை அதிகரிப்பீர்கள். அரசு சார்ந்த துறை மூலம் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து மருமகன் மருமகள் வரும் நேரம் இது. சுய உழைப்பினால் வெற்றியை தக்க வைத்துக் கொள்வீர்கள். வருமானம் உயர்வதால் வீட்டிலும் வெளியிலும் செல்வாக்கு உயரும். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை வாக்கு வாதங்களை குறைத்தால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.
சனியின் சஞ்சார பலன்கள்:
இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். உயர்வுகள் உண்டாகும் வருடமாக இது இருக்கும். புதிய தொழில் எண்ணங்கள் வரும். அதை செயல்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். சில நேரங்களில் விரய செலவுகள் இருந்தாலும் அதை சமாளிக்க கூடிய அளவில் வருவாயும் இருக்கும். மாணவர்கள் விரும்பிய பாடத்திட்டத்தில் இணைந்து படிப்பீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும். சொந்த வீடு வாகனம் அழகு ஆடம்பரப் பொருட்கள் என வாழ்க்கை இன்பமயமாக மாறும். எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும்.
திருமணம் ஆன தம்பதிகள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக் கொடுத்து சென்றால் வாழ்க்கை இன்பமாகும். சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப திருமண முயற்சியில் ஈடுபடலாம். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு விவாகம் நடக்கும். எதிர்பார்த்த வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் பணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சொந்தங்களையும் சுற்றி இருப்பவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ராகு கேதுவின் மையப்புள்ளியில் ராசியும் 7ம்மிடமும் இருப்பதால் சுய ஜாதக பரிசீலினைக்குப் பிறகு திருமணம் தொடர்பான முடிவு எடுப்பது நல்லது.
ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்:
ஆண்டின் துவக்கத்தில் ராகு பகவான் சுக ஸ்தானத்திலும் கேது பகவான் தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்கள். 5.12.2026 முதல் ராகு பகவான் மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்திலும் கேது பகவான் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்கள். பத்தில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்பது பழமொழி. திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உபரி லாபத்தை அரசு நிதி நிறுவனங்களில் சேமிப்பது முக்கியம். அல்லது வீடு வாகனம் என சுப விரயமாக மாற்றுவது உங்கள் கையில் உள்ளது.
மேலும் திருமணம் தொடர்பான விஷயங்களில் சற்று பொறுமையாக இருப்பது நல்லது. எந்த புதிய முயற்சிகளையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் இருந்தால் வருட கிரகங்களால் பாதிப்பு ஏற்படாது. சந்தோஷத்தில் கிடைக்கும் அனுபவத்தை விட வலியில் கிடைக்கும் அனுபவத்திற்கு பலம் அதிகம். கடந்த சில மாதங்களாக அனுபவ பாடத்தை சனி ராகு கேதுக்கள் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். கடவுள் கெட்டவர்களை சோதிக்க மாட்டார். சோதனை காலங்களில் காப்பாற்ற மாட்டார். நல்லவர்களை அதிகம் சோதிப்பார். ஆனால் கைவிட மாட்டார் எனவே கவலை வேண்டாம்.
விசாகம் 4:
செல்வாக்கு அந்தஸ்து உயரும் வருடம். இந்த வருடம் முழுவதும் இதுவரை கடனால் ஏற்பட்ட பாதிப்புகள் சிறிது சிறிதாக குறைய துவங்கும். வட்டிக்கு வட்டி கட்டிய நிலையில் இருந்து மீள துவங்குவீர்கள். உங்களின் தனித்திறமையால் குடும்பத்தை உயர்த்துவீர்கள். முன்னேற்ற பாதை தென்படும். புதுப்பொலிவு உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சங்கடங்கள் அகலும். பூர்வீகச் சொத்துக்களில் நிலவிய சங்கடங்கள் விலகும். உங்கள் பங்குச் சொத்து முறையாக வந்து சேரும்.
மனதில் நினைத்ததை செயல்படுத்தக் கூடிய வகையில் சொல்வாக்கு செல்வாக்கு உயரும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய வைத்தியம் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமையும். சிலருக்கு புதிய தொழில் துவங்கும் எண்ணம் உருவாகும். பார்க்கும் வேலையை மாற்றக்கூடாது. சந்தர்ப்பம் அமையும் போது காஞ்சி காமாட்சியை வழிபட நிலையான செல்வாக்கு உண்டாகும்.
அனுஷம்:
கோட்ச்சார கிரகங்கள் சாதகமாக இருப்பதால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நம்பிக்கை அதிகரிக்கும். சேமிப்பு, சிக்கனத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலம். வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சக ஊழியர்களுடன் நிலவியபிணக்குகள் மறையும். தொழில், வியாபாரத்தில் நிலவிய போட்டி, பொறமைகளை சமாளிப்பீர்கள். விவசாயிகள் ஏற்றம் பெறுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். வீடு, வாகன, சொத்து யோகம் உணடாகும்.
இந்த வருடம் முழுவதும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம், லாபம் உங்களை மகிழ்விக்கும். பிள்ளைகளுக்கு உத்தியோகம், திருமணம் சுப நிகழ்வு போன்ற நல்ல விசயங்கள் நடக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைபாடு அகலும். சிலருக்கு இளைய சகோதரரால் தொழில் விரயம், முடக்கம், வில்லங்கம் ஏற்படலாம்.சுப மங்களச் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். அனாவசிய வைத்தியச் செலவு இருக்காது. புகுந்த வீட்டாருடன் நிலவிய கருத்து வேறுபாடு மறையும். சாதகமும் பாதகமும் நிறைந்த காலம் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரை வழிபடவும்.
கேட்டை:
தடை, தாமதங்கள் விலகி நினைத் ததை நிறைவேற்றக் கூடிய சந்தர்ப்பம் கூடிவரும். பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும். பற்றாக் குறை வருமானத்தில் சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்தியவர்களுக்கு பணம் எனும் தனம் சமூக அந்தஸ்து பெற்றுத் தரும்.ராஜ மரியாதை கிடைக்கும். உங்கள் முயற்சியால் வெற்றியும்,சாதனையும் படைப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடைபெறும்.தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள் மற்றும் பெற்ற மக்களால் பெருமை சேரும். கடன் பெற்றாவது வீடு, வாகன யோகம் கிடைக்கப் பெறுவீர்கள். பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
உற்சாகமான மன நிலை இருப்பதால் வேலையில் இருந்த விரக்தி தன்மை மாறும். சிலருக்கு ஆடம்பர வீடு, ஆடம்பர கார் வாங்கும் வாய்ப்பு உண்டு.கவுரவப் பதவிகள் தேடி வரும். தற்காலிக உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிரந்தரமாகும். வாழ்கையிலும், தொழில், உத்தியோகத்திலும் முன்னேற்றமான நல்ல மாற்றம் உண்டாகும். பிரதோசத்தன்று பிரதோஷ காலத்தில ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபடவும்.
பரிகாரம்: விருச்சிக ராசியினர் திருச்செந்தூர் முருகனை வழிபட நிலையான முன்னேற்றங்கள் உண்டாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






