என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது, பவானி அம்மன் திருக்கோவில்.
    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது, பவானி அம்மன் திருக்கோவில். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மன் சக்தி வாய்ந்தவராக திகழ்கிறார்.

    தல வரலாறு :

    கம்சன் என்னும் அசுரனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திருமணம் நடைபெற்றது. தங்கையையும், மைத்துனரையும் தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றான் கம்சன். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘கம்சா! உன்னுடைய தங்கைக்கு பிறக்கப்போகும் 8-வது ஆண் குழந்தையால் உனக்கு மரணம் நிகழும்’ என்றது அந்தக் குரல். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த கம்சன், தங்கையென்றும் பாராமல் தேவகியை கொல்ல முயன்றான். அவனைத் தடுத்து நிறுத்திய வசுதேவர், தங்களுக்கு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளையும், பிறந்த மறு கணமே கொடுத்துவிடுவதாக கம்சனிடம் வாக்குறுதி கொடுத்தார்.

    கம்சனும் இதற்கு ஒப்புக்கொண்டான். இருப்பினும், தங்கை தேவகியையும், வசுதேவரையும் தன் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்று சிறையில் அடைத்தான். சிறையிலேயே வாழ்க்கை நடத்திய தேவகிக்கும், வசு தேவருக்கும் பிறந்த 7 குழந்தைகளை கம்சன் அழித்து விட்டான். 8-வதாக கண்ணன் பிறந்தார். அது ஒரு நள்ளிரவு நேரம். கண்ணன் பிறந்ததும் ஒரு அசரீரி ஒலித்தது. ‘வசுதேவரே! உங்கள் மகனை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்து விட்டு, அங்கு யசோதையிடம் இருக்கும் பெண் குழந்தையை இங்கே தூக்கி வந்து விடுங்கள்’ என்றது.

    மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் வசுதேவர், தன்னுடைய மகன் கண்ணனை கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி சென்று, யசோதையிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் அருகில் வைத்தார். அதிகாலையில் தேவகிக்கு 8-வது குழந்தைப் பிறந்தது பற்றி கம்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த கம்சன், ஆண் வாரிசுக்கு பதிலாக பெண் குழந்தை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தான். இருப்பினும் 8-வது குழந்தையால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்தக் குழந்தையை கையில் எடுத்து, அந்தரத்தில் சுவரில் வீசி கொல்ல முயன்றான். அந்தரத்தில் பறந்த குழந்தை, சக்தியின் உருவம் எடுத்து காட்சியளித்தது.

    ‘கம்சனே! உன்னைக் கொல்லப்போகிறவன், ஏற்கனவே பிறந்துவிட்டான். அவன் கோகுலத்தில் வளர்ந்து வருகிறான். உரிய நேரத்தில் உன்னைக் கொல்வான்’ என்று கூறி மறைந்தது. அந்த சக்தியே அங்கிருந்து இங்குள்ள பெரியபாளையம் தலத்தில் பவானியாக வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது.

    வளையல் வியாபாரி :

    முற்காலத்தில் ஆந்திரப்பகுதியில் இருந்த வளையல் வியாபாரிகள் பலரும் இங்குவந்து வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள் தங்களிடம் வளையல் வாங்கும் பெண்களுக்கு, மாங்கல்ய சுகத்துடன் வாழ மஞ்சள், குங்குமமும் வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு முறை வளையல் வியாபாரி ஒருவர் தன்னுடைய வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஆந்திராவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், பெரியபாளையத்தில் ஒரு வேப்பமரத்தடியில் அவர் ஓய்வெடுத்தார். அதிகாலையில் கண் விழித்து பார்த்தபோது, அவர் அருகில் இருந்த வளையல் மூட்டையைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்த அவருக்கு, அங்கிருந்த புற்று ஒன்று கண்ணில்பட்டது. சந்தேகத்தின் காரணமாக அந்தப் புற்றை எட்டிப் பார்த்தபோது, அதற்குள் வளையல் மூட்டை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் பயத்துடன் ஊருக்குத் திரும்பினார். அன்று இரவு வளையல் வியாபாரியின் கனவில் தோன்றிய அம்மன், ‘நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி அம்மனாக அமர்ந்திருக்கிறேன். அங்குள்ள புற்றில் நான் சுயம்புவாக இருக்கிறேன். எனக்கு கோவில் அமைத்து வழிபட்டு வா’ என்று கூறி மறைந்தார்.

    மறுநாள் பெரியபாளையம் வந்த வளையல் வியாபாரி, கடப்பாரையால் புற்றை உடைத்தார். அப்போது சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்டு ரத்தம் பீறிட்டது. இதனைக் கண்டு பயந்த வளையல் வியாபாரி, தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து தேய்த்தார். உடனே ரத்தம் நின்று போனது. இதையடுத்து புற்றை முழுமையாக நீக்கி விட்டு, அம்மனுக்கு அலங்காரம் செய்து தினமும் வழிபட்டு வந்தார். பிற்காலத்தில் அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட்டது. சுயம்புவாக உள்ள அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும். கவசத்தை நீக்கும் போது, சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்ட தழும்பு இருப்பதைக் காண முடியும்.

    ஆலய அமைப்பு :

    பாளையம் என்பதற்கு படைவீடு என்று பெயர். அம்மன் வீற்றிருக்கும் பெரிய படைவீடு என்பதால், பெரிய பாளையம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

    ஆலயத்திற்குள் நுழையும் போது விநாயகர் வீற்றிருக்கிறார். அவருக்கு பின்புறம் மாதங்கி அம்மன் காட்சியளிக்கிறார். ஆலயத்தின் சுற்று பிரகாரத்தில் பவானி அம்மனின் உற்சவர் சன்னிதி அமைந்திருக்கிறது. பிரகார வீதியில் வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமான், தாயாருடன் பெருமாள், ஆஞ்சநேயர், பரசுராமர் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. கருவறையில் பவானி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஓங்கார வடிவமாக, சங்கு சங்கரதாரிணியாக, பாதி திருவுருவத்துடன் அமர்ந்த கோலத்தில் அன்னை வீற்றிருக்கிறார். நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் அன்னையின் மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ் இரு கரங்களில் வாள், அமுத கலசமும் தாங்கியிருக்கிறார். அன்னையின் அருகில் கண்ணன், நாகதேவன் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன.

    இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அன்னைக்கு எலுமிச்சைப் பழ விளக்கேற்றி வழிபட்டாலும் கோரிக்கைகள் நிறைவேறும்.

    இந்த ஆலயத்தில் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி அன்று 108 பால்குட ஊர்வலம், அபிஷேகம் நடைபெறும். ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் உற்சவமும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் ஆடி மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோவில் நடை பக்தர் களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும். ஞாயிற்றுக் கிழமையில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை முழுமையாக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    சென்னையில் இருந்து 43 கிலோமீட்டர் தூரத்திலும், திருவள்ளூரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம்.
    செட்டிக்குளத்தில் உள்ள மலைக்குன்றின் மீது தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்திருக்கிறது. இத்தலத்தில் முருகன் வேலுக்கு பதிலாக கையில் செங்கரும்பை ஏந்தியபடி காட்சிதருகிறார்.
    செட்டிக்குளத்தில் உள்ள மலைக்குன்றின் மீது தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்திருக்கிறது. இங்கு எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமான், வேலுக்கு பதிலாக கையில் செங்கரும்பை ஏந்தியபடி காட்சிதருகிறார். இந்த சிறப்பு வேறு எந்த முருகன் தலத்திலும் இல்லாததாகும். மலைக்கு செல்ல சிமெண்டு சாலையும், படிக்கட்டுகளும் உள்ளன.

    கடம்ப வனத்தில் தவம் செய்து வந்த முனிவர்கள் மற்றும் ரிஷிகளுக்கு தொல்லைகொடுத்த அசுரர்களை, முருகப்பெருமான் தன் கையில் இருந்த வேலால் வீழ்த்தி வெற்றி கொண்டார். அந்த முருகப்பெருமானுக்கு, இந்த ஊரில் உள்ள காமாட்சி அம்மன் செங்கரும்பை வழங்கி வாழ்த்தினார். எனவே அம்மன் கொடுத்த செங்கரும்புடனேயே இத்தல முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இவரை வழிபட்டால் ஞானமும், வாழ்வில் இனிமையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    மலை மீதுள்ள கருவறையில் மேற்கு நோக்கிய வண்ணம், 4 அடி உயரத்தில் தண்டாயுதபாணி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவரது சிலை மீது மாசி மாதம் 3,4,5 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளி விழுவது சிறப்புக்குரியதாகும். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறும். அப்போது நடைபெறும் தேர்த் திருவிழாவில் இரட்டை தேரோட்டம் நடைபெறும்.

    மலை அடிவாரம் மற்றும் உச்சியில் ராஜகணபதி சன்னிதி உள்ளது. மலையில் இருந்து இறங்கும் வழியில் இடும்பன், வீரபாகு ஆகியோருக்கு சன்னிதிகள் அமைந்துள்ளன. பொதுவாக எல்லா ஆலயத்திலும் திருவிழா காலங்களில் ஒரு நாள் மட்டுமே திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். ஆனால் இங்குள்ள முருகப்பெருமானுக்கு, ஒவ்வொரு உற்சவத்தின் போதும், ஒருநாள் விட்டு ஒரு நாள் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. அப்போது முருகப்பெருமானை வணங்கினால் திருமணத் தடை விலகும் என்பது நம்பிக்கை.

    கோவில் தல விருட்சம் வில்வமரமாகும். பஞ்சநதி குளம் என்ற தீர்த்தம் உள்ளது. இந்த ஆலயம் அகத்திய முனிவர் மற்றும் அருணகிரி நாதர் ஆகியோரால் பாடல் பெற்றதாகும். இங்கு வெள்ளிக் கிழமை மற்றும் இதர விசேஷ தினங்களில் வெள்ளி ரத உலா நடைபெறும். பவுணர்மி நாளில் மலைக்குன்றை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்வதும் உண்டு. குழந்தைப் பேறு இல்லாதவர்கள், சஷ்டி நாளில் இத்தல முருகனுக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள். தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும், பங்குனி உத்திர திருவிழாவின்போது, கரும்பு தொட்டிலில் குழந்தையைக் கிடத்தி கோவிலை வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.

    சித்திரை 1-ந் தேதி படிவிழாவும், வைகாசி விசாக திருவிழா மற்றும் சங்காபிசேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. ஐப்பசி கந்தசஷ்டி விழாவை ஒட்டி 7 நாட்கள் லட்சார்ச்சனையும், அபிசேக ஆராதனைகளும் நடைபெறும். கார்த்திகை மகா தீபத் திருவிழாவும், ஆடிக்கிருத்திகை விழாவும் சிறப்புக்குரியது.

    இக்கோவிலில் தற்போது அனைத்து கோபுரங்களும் புதுப்பிக்கப்பட்டுவருகின்றன. சிலமாதங்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    இங்குள்ள பகவதி அம்மன் கன்னியாக இருந்தாலும், பக்தர்கள் அனைவருக்கும் தாயாக இருந்து அனைத்துத் துன்பங்களையும் போக்கி வருகிறாள்.
    உலக சுழற்சியை முன்னெடுத்துச் செல்லும் சூரியனின் உதயமும், அஸ்தமனமும் நடைபெறும் இடம் என்ற வகையிலும், முக்கடல் சங்கமிக்கும் மகத்துவம் மிகுந்த இடம் என்ற வகையிலும் இந்தியத் திருநாட்டின் தென் கோடியில் உள்ள கன்னியாகுமரியின் சிறப்பு மேலோங்கி நிற்கிறது.

    இந்தச் சிறப்புகளை காண்பதற்காகவே கன்னியாகுமரியில் ஒவ்வொருநாளும் காலை மற்றும் மாலை வேளைகளில் கூடும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானது. இந்தச் சிறப்புகளை எல்லாம் தனக்குள் அடக்கியபடி மெல்லிய சிரிப்புடன் கடற்கரையோரம் கொலுவிருக்கும் பகவதி அம்மன் சிறப்பு பிரசித்தமானது.

    இங்குள்ள பகவதி அம்மன் கன்னியாக இருந்தாலும், பக்தர்கள் அனைவருக்கும் தாயாக இருந்து அனைத்துத் துன்பங்களையும் போக்கி வருகிறாள். அவள் கன்னியாக அமர்ந்த கதையைக் இங்குக் காணலாம்.

    “கன்னிப் பெண் ஒருத்தியைத் தவிர, வேறு எவராலும் தனக்கு மரணம் நிகழக்கூடாது”; என்ற வரத்தைப் பிரம்ம தேவரிடம் இருந்து பெற்றவன் பாணாசுரன் என்னும் கொடிய அசுரன். ஒரு கன்னிப் பெண் தன்னை என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தினால்,
    அவன் பெற்ற அந்த வரத்தை வைத்துக் கொண்டு தேவர்களையும், முனிவர்களையும் படாதபாடு படுத்தினான்.

    தேவர்களும், முனிவர்களும், தங்கள் துன்பங்களை துடைத்தருளும்படி மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அவரோ, 'பாணாசுரன், கன்னிப்பெண்ணால் தான் தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம் பெற்றுள்ளான். ஆகையால் உங்களுக்கு அந்த
    மகேசனின் அருகில் அமர்ந்துள்ள மகேஸ்வரியால்தான் உதவ முடியும்' என்று உபாயம் கூறினார்.

    இதனால் அனைவரும் அன்னை பார்வதியை வேண்டி யாகம் செய்தனர். யாகத்தின் நிறைவில் ரிஷப வாகனத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் காட்சியளித்தனர். அம்மையப்பன் இருவரையும் கண்டதும் ஆனந்தக்கூத்தாடினர் தேவர்களும், ரிஷிமுனிவர்களும். அவர்களைப் பார்த்து, அன்பர்களே! தங்களின் குறையை நான் அறிவேன். உங்கள் துயரங்கள் விலகும் வேளை வந்து விட்டது. எனது தேவியானவள்,

    தென் பகுதியான குமரியில் ஒரு கன்னியாக வடிவெடுத்து, பாணாசுரனை வதம் செய்து உங்களுக்கு வாழ்வளிப்பாள்; என்று ஆசி கூறினார் சிவபெருமான். அவ்வாறு கன்னியாக வந்துதித்தார் அன்னை பார்வதி தேவி.

    அவர் ஈசன் மேல் பற்று கொண்டு அவரை நோக்கி கடுமையாக தவம் இருந்து வந்தார். அப்போது தேவியின் அழகில் மயங்கிய சுசீந்திரம் தாணுமாலயன், தேவியை மணம் புரியவேண்டி தேவர்களை அழைத்துப் பேசினார். ஆனால் தேவர்கள் கலக்கம் கொண்டனர்.

    ஈசன், தேவியை மணம் புரிந்து விட்டால், அவர் எப்படி கன்னியாக இருப்பார். பாணாசுரனை அழிக்க ஒரு கன்னியால் அல்லவா முடியும்?' என்று எண்ணிய தேவர்கள் அனைவரும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து போயினர். அவர்களின் கலக்கத்தை நாரதர் போக்கினார்.

    எல்லாம் நல்லபடியாக நடைபெறும். பாணாசுரன் அழிவு என்ற உங்களின் நோக்கம் நிறைவேறும். அதற்கான முதற்படிதான் இது' என்று தேவர்களுக்கு நாரதர் ஆறுதல் கூறினார். எனவேதான் சிவபெருமான் தேவியை மணம் முடிக்கப் பேசி கவனத்தைத் திருப்பி, ஏதாவது காரணத்தால் திருமணம் நிறுத்தப்பட்டால் தேவியின் கோபம் உச்சத்தை எட்டும்.

    அப்போது அங்கு வரும் பாணாசுரன் நிச்சயமாக அழிந்துபோவான். அதற்காகத் தான் சிவபெருமான் திருமண திருவிளையாடலைக் கையில் எடுத்திருந்தார்.

    அந்தத் திருவிளையாடல் விதிப்படி திருமணப் பேச்சின் போது சிவபெருமானிடம், தேவர்கள் சார்பில் நாரதர் ஒரு கோரிக்கை வைத்தார். 'சூரிய உதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாகவே மாப்பிள்ளை திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து விட வேண்டும் என்பதுதான் அது. தேவியிடமும், இந்தக் கோரிக்கை கூறப்பட்டது. சூரிய உதயத்திற்கு ஒரு நாழிகை முன்பு மாப்பிள்ளை வரவில்லை என்றால் திருமணம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மணநாள் வந்தது. சுசீந்திரத்தில் இருந்து அனைத்துச் சீதனங்களுடன் குமரி நோக்கி புறப்பட்டுச் சென்றார் ஈசன். அப்போது குறித்த நேரத்திற்கு முன்பாகவே நாரதர் சேவலாக மாறி உரக்கக் கூவினார். சேவல் கூவிவிட்டதால் சூரிய உதயத்திற்கு முன்பாக எப்படியும் குமரியை அடையவழியில்லை என்பது ஈசனுக்குப் புலப்பட்டது.

    எனவே அவர் மீண்டும் சுசீந்திரம் திரும்பிச் சென்று விட்டார். இதுபற்றி அறிந்ததும் ஈசனுக்காகக் காத்திருந்த தேவியின் காதல் கலந்த கண்கள், கோபத்தில் சுட்டெரிக்கும் சூரியனைப் போல் தகதகக்கத் தொடங்கியது. திருமணத்திற்காகச் சமைத்த அனைத்துச் சாதங்களையும் கடலிலும், கரையிலும் வீசி, மண்ணாய் போக சபித்தார் தேவி.

    பின்னர் கோபம் அடங்காமல், தவத்தை மேற்கொள்ள எண்ணினார். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பாணாசுரன், தேவியின் அழகில் மயங்கி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினான். மேலும், தேவியைத் தொடும் எண்ணத்தில் நெருங்கியவனை, அவள் பார்த்த பார்வை நெருங்கவிடாமல் அனலில் தகிக்கச் செய்தது.

    ஓங்கி உயர்ந்து, வீராவேசமாய் சிரித்த தேவி, பாணாசுரனை தன் காலால் மிதித்து வதைத்தார். தேவர்கள் அனைவரும் வானுலகில் இருந்து தேவிக்கு பூமாரி பொழிந்தனர். இதனால் தேவி கோபத்தை விடுத்து மனம் குளிர்ந்தாள். கன்னியாகுமரியில் கன்னியாய் அமர்ந்திருக்கும் இந்தத் தேவி பகவதி அம்மனிடம் தங்கள் குறைகள் நீங்கி நன்மை விளைய எண்ணுவோர், பூச்சொரிதல் நடத்தினால், அவர்கள் வேண்டிய வரங்கள் எளிதில் நடைபெறும் என்பது நம்பிக்கை. குமரி பகவதியிடம் வேண்டியவை அனைத்தும் கிடைக்கும்.

    பகவதி இன்றும் ஈசனை வேண்டி, உலகம் உய்ய தவம் செய்வதாகக் கூறப்படுகிறது. எனவே தேவியிடம் வேண்டும் அனைத்தும், ஈசனிடம் கொண்டு சேர்க்கப்படும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.
    தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 128-வது கோவிலாக விளங்குகிறது திருவலிவலம் திருத்தலம்.
    திருவாரூர் அருகே அமைந்துள்ளது திருவலிவலம் திருத்தலம். தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 128-வது கோவிலாக இது விளங்குகிறது. இந்த திருத்தல இறைவனைப் பற்றி திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் புகழ்ந்து பாடியுள்ளனர். திருவலிவலத்துக்கு வடக்கே திருக்கோளிலி என்னும் திருக்குவளை, தெற்கே கைச்சின்னம் எனும் கச்சனம், கிழக்கே திருக்கன்றாப்பூர், மேற்கே திருநெல்லிக்காஆகிய பாடல் பெற்ற சிவத்தலங்கள் சூழ்ந்திருப்பது தனிச் சிறப்பாகும்.

    தல வரலாறு :

    முன்னொரு காலத்தில் ஒழுக்கத்தில் சிறந்த ஒருவன் இருந்தான். அவன் முன்வினைப் பயன் காரணமாக சில பாவங்களைச் செய்தான். அதனால் அவன் அடுத்தப் பிறவியில் கரிக்குருவியாக பிறவி எடுக்க நேரிட்டது. மிகச் சிறியதாக இருந்த அந்தப் பறவையை, பெரிய பறவைகள் ஒன்றுசேர்ந்து தாக்கியதால் ரத்தம் வழிந்தது. காயம் அடைந்த அந்தக் குருவி, அங்கிருந்து நெடுதூரம் பறந்து ஒரு மரத்தில் போய் அமர்ந்தது. அந்த மரத்தின் கீழ் சிவனடியார் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் தன் சீடர்கள் சிலருக்கு ஞான உபதேசம் செய்து கொண்டிருந்தார்.

    அந்த சிவனடியாரின் உபதேசங்களை கரிக்குருவியும் கேட்டுக்கொண்டிருந்தது. சிவனடியார் தன் சீடர்களிடம், ‘அன்பர்களே! சிவ தலங்களில் சிறந்தது மதுரை திருத் தலம். தீர்த்தங்களில் சிறந்தது, அந்த மதுரையம்பதியில் இருக்கும் பொற்றாமரைக் குளம். மூர்த்திகளில் சிறந்தவர் மதுரை சொக்கநாதர். மதுரைக்கு சமமான தலம் இந்த உலகத்தில் வேறு இல்லை. எனவே வாழ்நாளில் ஒரு முறையேனும் மதுரை திருத்தலம் சென்று பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சொக்கநாத பெருமானை வழிபட்டு வர வேண்டும். அங்குள்ள சோம சுந்தரக் கடவுள் தன்னை வழிபடுபவர்களுக்கு, வேண்டும் வரங்களைக் கொடுத்து அருள்வார்’ என்று கூறினார்.

    சிவனடியாரின் உபதேசத்தைக் கேட்ட கரிக்குருவி, தானும் மதுரைக்கு சென்று இறைவனை தரிசிக்க முடிவு செய்தது. அதன்படி அந்தக் கரிக்குருவி, மதுரையை அடைந்து சொக்கநாதர் கோவிலை வலம் வந்து, பொற்றாமரைக் குளத்தில் மூழ்கியது. பின்னர் அங்குள்ள இறைவனை மனமுருக வழிபட்டது. மூன்று நாட்கள் இவ்வாறு தொடர்ந்து வழிபட்டு வந்தது, அந்தக் குருவி. அதன் வழிபாட்டைக் கண்டு சொக்கநாதர் மனமிளகினார். கரிக் குருவியின் முன்பாகத் தோன்றி அதற்கு, சில மந்திரங்களை உபதேசம் செய்தார். அதனால் கரிக்குருவி சிற்றறிவு நீங்கி, பேரறிவு பெற்றது.

    ஞானம் பெற்ற கரிக்குருவி, ‘இறைவா! உங்களது கருணையால் நான் ஞானம் பெற்றவனானேன். இருந்தாலும் எனக்கு ஒரு குறை உள்ளது. மிகச் சிறிய பறவையான நான், மற்ற பெரிய பறவைகளால் துன்புறுத்தப்படுகிறேன். பார்ப்பவர்கள் கேலி செய்யும் நிலையில் உள்ளேன்’ என்று முறையிட்டது.

    அதற்கு சிவபெருமான், ‘எல்லாப் பறவைகளையும் விட நீ வலிமையுடையவனாக மாறுவாய்’ என்று அருளினார். ஆனால் அந்தக் கரிக்குருவி, ‘சுவாமி! எனக்கு மட்டுமின்றி, எனது மரபில் உள்ள அனைவரும் வலிமையுடன் இருக்கும் வரம் தந்தருள வேண்டும்’ என்று கேட்டது. இறைவனும் அப்படியே அருளினார். இதனால் அந்தக் கரிக்குருவி ‘வலியான்’ என்ற பெயரையும் பெற்றது. வரம் பெற்றகுருவி திருவலிவலம் திருத்தலத்திற்கு வந்து மனத்துணை நாதரை வழிபட்டு முக்தி அடைந்தது. எனவே இந்த தலத்திற்கு ‘திருவலிவலம்’ என்ற பெயர் ஏற்பட்டதாக தல புராணம் தெரிவிக்கிறது.

    ஆலய அமைப்பு :

    மூன்று பக்கமும் நீர் நிறைந்த அகழியால் சூழப் பெற்ற இத்திருக்கோவிலில், பஞ்சமூர்த்திகள் உள்ளடக்கிய தோரணவாயில் நம்மை வரவேற்கிறது. ஆலயத்தின் இரண்டாவது பிரகாரம் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. கோச்செங்கண் சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம், ‘மாடக்கோவில்’ வகையைச் சேர்ந்தது. பதினாறு படிகள் ஏறிச் சென்று பார்த்தால் மூன்று நிலை விமானத்தின் உள்ளே கருவறையில், சிவலிங்க ரூபமாக மூலவர் மனத்துணை நாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவரை இதயக்கமலேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள்.

    ‘மனத்துணையே என்றன் வாழ்முதலே’ என்று மாணிக்கவாசகர் புகழ்கிறார். ‘அன்பருக்கு இன்னருள் செய்துய்ய வலிவலத்துச் சொன்முடியே’ என்கிறார் ராமலிங்க வள்ளலார். அப்பரோ தனது பதிகத்தில் ‘மனத்துளானே’ என்று கூறுகிறார். சுந்தரரும், ‘நல்லுடையார் மனத் தெய்ப்பினில் வைப்பை நானூறு குறைஅளித் தருள் புரிவானை’ என்று இத்தல இறைவனை புகழ்ந்துரைக்கிறார்.

    மனம் என்ற ஒன்று இருப்பதால்தான், நமக்கு மனிதன் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அந்த மனமுடைய மனிதர்கள் வாழ்வில் இன்ப, துன்பங்கள், ஏற்ற இறக்கங்கள், கஷ்ட, நஷ்டங்கள் என்று எத்தனையோ நன்மை-தீமைகளை அனுபவிக்கிறார்கள். மனித மனதிற்கு துன்பம் வரும்போது மனம் கனமாகிறது. அந்த மன அழுத்தத்தால் ‘ரத்த அழுத்தம்’, ‘இதய நோய்கள்’, ‘மாரடைப்பு’ போன்றவை ஏற்படுகிறது. இன்று கவலை இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். அவர்கள் மனம் எப்போதும் இலகுவாக இருக்க எல்லாக் கவலைகளையும் விட்டொழிக்க வேண்டும்.

    ஆம்! அனைத்தையும் இறைவன் திருவடியில் சமர்ப்பித்து ‘நீயே துணை’ என்று நம்பி வந்தால், உடலும் உள்ளமும் தெளிவாகி நோய்கள் விலகுகின்றன.

    அந்தப் பெரும்பேற்றைத் தருபவர் தான் இத்தல நாயகர் மனத்துணை நாதர். மனதில் ஏற்படும் விரக்தி, சோர்வு ஆகியவற்றிக்கும் இத்தலத்தில் தீர்வு கிடைக்கின்றன என்கிறார்கள்.

    ‘பிடியதன் உருஉமை கொளமிகு கரியது

    வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்

    கடிகண பதிவர அருளினன் மிகுகொடை

    வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே’

    என்று இந்தத் திருக்கோவில் நிருதி மூலையில் எழுந்தருளியுள்ள வலம்புரி விநாயகருக்கு பாமாலை சூட்டுகிறார் திருஞானசம்பந்தர். தேவாரப் பண்ணிசைப்போர் புகழ்பெற்ற இத்திருப்பதிகத்தைப் பாடியே, மற்ற பண்களை இசைக்கிறார்கள் என்றால் இத்தலமும் அதில் எழுந்துள்ள விநாயகரும் எத்தகைய சிறப்புடையது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். அடியவர்களின் துயர் களைய சிவசக்தியால் உருவாக்கப்பட்ட கண நாதர் இவர்.

    இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில், ‘அமரர்கள் மதித்த சேவக வலிவலம் நகருறை பெருமானே’ என்று போற்றுகிறார்.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த வலிவலத்தில் அம்பிகை ‘மழையொண்கண்ணி’ என்ற பெயரில், தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். அம்பிகை சன்னிதிக்கு எதிரில் உள்ள நந்தவனத்தில் தலவிருட்சமான புன்னை மரம் காற்றில் அசைந்து இனிய மணம் பரப்புகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழித்தடத்தில் கச்சனம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந் திருக்கிறது திருவலிவலம். திருநெல்லிக்கா ரெயில் நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஊர் இருக்கிறது.

    அடுத்த வாரம்: குழந்தைகள் நலம் காக்கும் திருத்தலம்.

    சுண்ணாம்பு கொளத்தூரில் பழமையான மரகத லிங்கத் திருமேனியையும், விஷ்ணு திருமேனியையும் கொண்ட திருக்கோவில் ஒன்று அமைந்துள்ளது.
    சென்னை மாநகரையொட்டி அமைதி தவழும் கிராம சூழலில் அமைந்த ஊர் சுண்ணாம்பு கொளத்தூர். கோவிலம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள இந்த ஊரில், பழமையான மரகத லிங்கத் திருமேனியையும், விஷ்ணு திருமேனியையும் கொண்ட திருக்கோவில் ஒன்று அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்தை அந்தப் பகுதி மக்கள் ‘சிவா-விஷ்ணு ஆலயம்’ என்று அழைக்கிறார்கள். நாலரை ஏக்கர் பரப்பளவில் பழமையான திருக்குளத்தோடு கூடிய இந்த ஆலயம் மனதுக்கும், சிந்தனைக்கும் இதமளிக்கும் சூழ்நிலையில் இருப்பது தனிச் சிறப்பு.

    பழங்காலத்து வீடு கட்டும் முறையில், முக்கிய பொருளாக விளங்கிய சுண்ணாம்பு வளம் மிகுந்த ஊராகவும், நீர் ஊற்றுகள் கொண்ட குளம் அமையப்பெற்றதாகவும் திகழ்ந்ததால், இந்த ஊர் ‘சுண்ணாம்பு குளத்தூர்’ என்று பெயர் பெற்றதாக பெயர்க்காரணம் கூறப்படுகிறது.

    ஆலய வரலாறு :

    மன்னர் காலத்தில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழ வள நாட்டின் பகுதியாக, இந்த ஊர் இருந்திருக்கிறது. அப்போதே இந்த ஊரில் மரகத லிங்கத்திற்கும், விஷ்ணுவுக்கும் தனித்தனியாக ஆலயங்கள் இருந்திருக்கின்றன. இவை அன்னிய படையெடுப்பின் போது தரைமட்டமாக்கப்பட்டு விட்டன.

    ஒரு முறை இந்தப் பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவிலில் விழா நடைபெற்றது. அப்போது முனீஸ்வரருக்கு புனித நீர் கொண்டு செல்வதற்காக, விழா நடத்திய மக்கள் இங்குள்ள குளக்கரைக்கு வந்துள்ளனர். அப்போது வேகமாக காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்யத் தொடங்கியது.

    இதனால் நீர் எடுக்க வந்தவர்கள் அனைவரும் குளக்கரையோரம் இருந்த ஆலமரத்தின் கீழ் ஒதுங்கி நின்றிருக்கிறார்கள். அங்கு செடிகொடிகளுடன் மண் மூடிக்கிடந்த ஒரு மேடானப் பகுதி பலத்த மழையால் கரையத் தொடங்கியது. அந்த இடத்தில் பச்சை நிறத்தில் குழவிக்கல் போன்ற ஒன்று தென்பட்டது.

    அங்கிருந்த அனைவரும் அது ஒரு குழவிக்கல் என்றே நினைத்து அதனை எடுத்தபோது, அதன் அடியில் லிங்க பாணம் இல்லாத ஆவுடையார் இருப்பதைக் கண்டனர். இதையடுத்து லிங்கத்தை அந்த ஆவுடையாரில் பொருத்தி வெளியே எடுத்துவிட்டு புதரை அப்புறப்படுத்தினர். அப்போது அங்கிருந்து அழகிய நந்தி சிலையும், பழமையான விஷ்ணு உருவமும் கிடைத்தன.

    பூமியில் தெய்வச் சிலைகள் கிடைத்ததால், முன்பு இங்கு ஆலயம் இருந்திருக்கலாம் என்று எண்ணி பொதுமக்கள், இது தொடர்பாக பிரசன்னம் பார்த்தபோது இங்கு ஒரு கோவில் இருந்த விஷயம் தெரியவந்திருக்கின்றன. இதனால் மனம் மகிழ்ந்த அடியவர்களில் சிலர் ஒன்று கூடி சிறு ஓலைக் கொட்டகை அமைத்து தெய்வச் சிலைகளை அங்கு வைத்து வழிபட்டு வந்தனர்.

    புதிய ஆலயம் :

    நாளடைவில் அது மக்கி விடவே, இறைவன் வானம் பார்த்த பூமியாக வாழ்ந்துவந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு பெண்மணிக்கு அருள் வந்து, ‘இறைவனை வெயிலில் வைப்பது முறையா? உடனே நல்ல கொட்டகை அமைத்து அதன்பிறகு வழிபடுங்கள்’ என்று கூறினார்.

    இதையடுத்து ஊர் மக்கள் அனைவரின் நடவடிக்கையின் பேரில் ஆலயம் கொஞ்சம் கொஞ்சமாக உருப்பெறத் தொடங்கியது. இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானையும், விஷ்ணுவையும் வழிபடுபவர்களுக்கு நல்ல விஷயங்கள் பல நடைபெறத் தொடங்கியதைத் தொடர்ந்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. எனவே ஆலயத்தை மேலும் அழகுற அமைத்துள்ளனர்.

    தற்போது திருக்குளத்தை உள்ளடக்கிய பெரிய அளவிலான சிவா- விஷ்ணு ஆலயம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. இத்தல மரகத லிங்கத்தை, பிரம்மதேவன் வழிபட்டதாக பிரசன்னம் பார்த்தபோது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆலயம் மயிலை கபாலீசுவரர், மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர், திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் ஆலயங்களோடு தொடர்பாக இருந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.



    ஆலய அமைப்பு :

    கிழக்கு நோக்கிய சிவன், விஷ்ணுவிற்குத் தனித்தனி ஆலயங்கள், பழமையான திருக்குளத்தோடு அமைந்துள்ளன. இறைவன் மரகத லிங்கத் திருமேனியுடன், சதுர வடிவ ஆவுடையாருடன், கிழக்கு முகமாய் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இவர் மரகதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

    லிங்கத் திருமேனியில் பொன்னிற சொர்ண ரேகை அமைந்துள்ளது. இதனை அபிஷேக நேரங்களில் மட்டுமே கண்டுகளிக்க முடியும். இவரே பிரம்மன் வழிபட்ட இறைவன் என்று கூறப்படுகிறது. (தொண்டை நாட்டில் திருவடிசுரத்திலும் மரகத சிவன் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.)

    இங்குள்ள சிவபெருமான் கருவறைக்கு எதிரே, இடதுபுறம் தெற்கு நோக்கிய அன்னை மரகதாம்பிகை சன்னிதி அமைந்துள்ளது. அன்னை நின்ற கோலத்தில் எளிய உருவில் அருளாசி வழங்குகிறாள். இதன் இடதுபுறம் தனி ஆலயமாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் ஆலயம் கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. பழமையான இந்தப் பெருமாள், அபயகரம் காட்டி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

    இவை தவிர விநாயகப் பெருமான், வள்ளி - தெய் வானை சமேத முருகப்பெருமான் சன்னிதி, சண்டிகேசுவரர், மகாலட்சுமி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், பைரவர், மற்றும் நவக்கிரக சன்னிதிகளும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளன.

    இக்கோவிலில் மரகதலிங்கம், விஷ்ணு, நந்திதேவர் மட்டுமே பழமையானவர்கள் என்றாலும், புதியதாக வடிக்கப்பட்ட தெய்வத் திருமேனிகளும் கூட அதே தனித்தன்மையுடன் விளங்குவது அற்புதமானதாகும். ஆலய தல மரமாக ஆலமரம் விளங்குகிறது. இது திருக்குளத்தின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது. ஆலய தலத் தீர்த்தம் ‘மரகதத் தீர்த்தம்’ எனும் திருக்குளமாகும்.

    விழாக்கள் :

    சிவ, வைணவ ஆலயங்களில் நடத்தப்படும் அனைத்து விழாக்களும் இங்கே சிறப்புடன் நடத்தப்படுகின்றன. இது தவிர, சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தையும், இந்த ஆலயத்தில் வைத்துதான் நடத்துகின்றனர். இறைவன் மணமக்களை நன்முறையில் வாழ வைப்பார் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    காஞ்சீபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டத்தில் கோவிலம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கிராமமாக சுண்ணாம்பு கொளத்தூர் அமைந்துள்ளது. துரைப்பாக்கம் - பல்லாவரம் புறவழிச் சாலையில் இவ்வூர் இருக்கிறது. வாகனத்தில் வர, சாலை வசதி உள்ளது.

    பேருந்து மூலம் வருபவர்களுக்கு, திருவான்மியூர், பள்ளிக் கரணை, பல்லாவரம் முதலான இடங்களில் இருந்து பேருந்து வசதியும் உள்ளது. சுண்ணாம்பு கொளத்தூரிலேயே பஸ்கள் நின்று செல்லும். இந்த ஆலயத்தின் அருகில், பழமையான மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் ஆகிய திருக்கோவில்களும் அமையப்பெற்றுள்ளன.
    பெரம்பலூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செட்டிக்குளத்தில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்.
    பெரம்பலூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செட்டிக்குளம் என்ற ஊர். இங்கு இரண்டு முக்கிய ஆலயங்கள் உள்ளன. வடபழனி என்று அழைக்கப்படும் மலைக்குன்றின் மீது ஞானம் அருளும் தண்டாயுதபாணி திருக்கோவிலும், ஊருக்குள் ஏகாம்பரேஸ்வரர் ஆலயமும் இருக்கின்றன. இதில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் செல்வம் வழங்கும் குபேரனுக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது.

    தல வரலாறு :

    முற்காலத்தில் இந்தப் பகுதி கடம்ப மரங்கள் நிறைந்த, கடம்ப வனமாக இருந்திருக்கிறது. இந்தக் கடம்ப வனத்தில் தினமும் நள்ளிரவு வேளையில் தீம்பிழம்பு தோன்றுவது வாடிக்கையாக இருந்துள்ளது. ஒரு முறை நள்ளிரவு நேரத்தில் இந்தக் கடம்ப வனம் வழியாக வணிகன் ஒருவன் சென்று கொண்டிருந்தான். அப்போது திடீரென்று அங்கு ஒரு தீம்பிழம்பு தோன்றி, அதில் இருந்து சிவலிங்கம் வெளிப்பட்டது. அந்த சிவலிங்கத்தை தேவர் களும், முனிவர்களும் வழிபட்டனர். இந்தக் காட்சியைக் கண்ட வணிகன் பரவசம் அடைந்தான்.

    தான் கண்ட காட்சியைப் பற்றி, அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த பராந்தகச் சோழ மன்னனிடம் போய் கூறினான் வணிகன். அந்த நேரத்தில் சோழ மன்னனின் அரண்மனையில் குலசேகர பாண்டியன் விருந்தினராக தங்கியிருந்தார். வணிகன் கூறியதைக் கேட்டு ஆச்சரியம் கொண்ட சோழ மன்னனும், பாண்டிய மன்னனும் தங்கள் பரிவாரங்களுடன் கடம்ப வனப் பகுதிக்கு வந்தனர். பின்னர் அந்த வனத்திற்குள் சிவலிங்கத்தைத் தேடி அலைந்தனர்.

    அப்போது கையில் செங்கரும்பை ஊன்றியபடி ஒரு முதியவர் வந்தார். அவர் சிவலிங்கம் இருக்கும் இடத்தை சுட்டிக் காட்டி விட்டு ஜோதி வடிவாக மறைந்தார். இதைக் கண்டு மெய்சிலிர்த்த பராந்தக சோழனும், குலசேகர பாண்டியனும் ஏக ஜோதியின் இடையில் தோன்றிய ஏகாம்பரேஸ்வரருக்கு தனி ஆலயம் கட்ட தீர்மானித்தனர். அதற்கு முன்பாக சிவலிங்கத்தை தேடி எடுத்தனர்.

    தொடர்ந்து 96 அடி உயரம் கொண்ட 7 நிலை ராஜகோபுரத்துடன் இறைவனுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஏக்கர் நிலப் பரப்பில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இறைவனுக்கு ஏகாம்பரேஸ்வரர் என்று பெயரிட்டனர். அம்மனுக்கும் தனிச் சன்னிதி அமைத்து காமாட்சி அம்மன் என்று பெயரிட்டு அழைத்தனர்.

    ஆலய அமைப்பு :

    ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்குள் நுழையும் முன்பாக கம்பீரமான தோற்றத்துடன் கூடிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால், பிரமாண்டமான ஸ்தபன மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் உள்ள சிற்பக் கலை, திருச்சி ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயங்களில் உள்ள சிற்பங்களை கண் முன் நிறுத்துவதாக அமைந்துள்ளன.

    இந்த மண்டபத்தில் ஆலயத்திற்கு திருப்பணி செய்த மன்னர்களின் சிலைகள், மண்டப தூண்களில் யாளி மீதும், குதிரைகள் மீதும் அமர்ந்திருக்கும் வீரர்களின் சிற்பம், மண்டபத்தின் மேல் விதானத்தில் திருஞானசம்பந்தர், பதஞ்சலி முனிவர், பிருங்கி முனிவர், வியாக்ரபாதர் மற்றும் சிவனடியார்கள் பலரும் சிவபூஜை செய்யும் காட்சி, சித்திரகுப்தர் ஓலைச்சுவடியுடன் நிற்க, எருமை வாகனத்தில் வரும் எமதர்மனை சூலாயுதத்தால் தடுக்கும் சிவபெருமான் ஓவியம் என்று கண்களை கொள்ளைகொள்ளும் காட்சிகள் ஏராளம்.

    இந்த அழகை ரசித்தபடி நடந்தால் கொடிமரம் உள்ளது. அதைக் கடந்தால் மகா மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் ஓசை எழுப்பும் கல் தூண்கள் அமைந்துள்ளன. அதற்கு அடுத்தாற்போல் மூலவரின் கருவறை இருக்கிறது. கரு வறையில் ஏகாம்பரேசுவரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் உத்திராயண காலத்தில் 2 நாட்கள், மூலவர் மீது சூரிய ஒளி நேரடியாக படும்படி இறைவனின் கருவறையை அமைத்திருப்பது நமது முன்னோர்களின் அறிவுக்கூர்மையை பறைசாற்றுகிறது. வாரத்தில் அனைத்து தினங்களிலும் நடைதிறக்கப்பட்டு பூஜை நடத்தப்படுகிறது. மூலவர் கருவறையின் வடமேற்கில் காமாட்சி அம்மன் சன்னிதி உள்ளது.

    இந்த ஆலயத்தில் அம்மன் சன்னிதிக்கு எதிரே மகா குபேரனுக்கு தனிச் சன்னிதி உள்ளது. இங்கு சித்திரலோகா சமேதராக வீற்றிருந்து மகா குபேரன் அருள்பாலிக்கிறார்கள். ஆலயத்தின் ஸ்தபன மண்டபத்தில் 12 ராசிக்காரர்களும் வழிபட, மீன் வாகனத்தில் 12 குபேரன் சிலைகள் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. அவரவர் ராசிக்குரிய குபேரனை, தங்களது ஜனன நட்சத்திரத்தன்று வழிபடுவது நன்மை தரும். மேலும் குபேரனுக்கு உகந்த பச்சை வஸ்திரமும், பச்சை குங்குமமும் சாத்தி, நிவேதனம் செய்து வழிபட்டால், யோகம் பெருகி தொழிலில் விருத்தி ஏற்படும். செல்வச் செழிப்பு மிகுந்த வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

    குபேரனின் ஜன்ம நட்சத்திரன் பூசம் ஆகும். ஆனால் ஒரு முறை குபேரன் தன்னுடைய சக்திகளை இழந்து, செல்வங்களையும் பறிகொடுத்தான். பின்னர் இத்தலத்தில் உள்ள காமாட்சி அம்மனை வழிபட்டு இழந்த செல்வங்களை மீட்டெடுத்தான். செல்வங்களை மீட்ட தினம் பூரட்டாதி நட்சத்திரமாகும். எனவே அந்த நட்சத்திரத்தன்று மகா குபேரனுக்கு அபிஷேகங்களும், யாகமும் நடைபெறுகிறது. இந்த நாளில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்திருந்து வழிபாட்டில் கலந்துகொள்கிறார்கள்.

    இந்தக் கோவிலின் தல விருட்சம் ‘வில்வ மரம்’ ஆகும். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, பங்குனி உத்திர திருவிழா, திருவாதிரை திருநாள், மார்கழி அதிகாலை வழிபாடு, சோம வார வழிபாடு போன்றவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
    இத்தல சுவாமியையும், அம்பாளையும் பிரார்த்தித்து விபூதி தரித்துக் கொண்டால், நாள்பட்ட நோய்களும், தோல் நோய்களும் குணமாகும் என்று கூறப்படுகிறது.
    தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக, திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது மத்தாக நின்ற மந்தரமலை சரியத் தொடங்கியது. ஆகையால் திருமால், ‘கச்சம்’ என்ற ஆமை உருவம் கொண்டு மலையைத் தாங்கினார். அந்த மலையைத் தாங்குவதற்கான வலிமையை பெறுவதற்காக, சிவபெருமானை நோக்கி திருமால் வழிபாடு செய்தார். அந்தத் திருத்தலமே திருக்கச்சூர் என்று அழைக்கப்படுகிறது.

    திருக்கச்சூரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பெரிய கோவில் ‘ஆலக்கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. விழுதுகள் விடாத கல்லால மரம், தலவிருட்சமாக இருப்பதனால் இப்பெயர் வந்துள்ளது. இந்த ஆலயத்தை தாழக்கோவில் என்றும் அழைக்கிறார்கள். இங்குள்ள இறைவன் ‘கச்சபேஸ்வரர்’ என்று பெயர் பெற்று விளங்குகிறார். அம்பாள் திருநாமம் ‘அஞ்சனாட்சி’ என்பதாகும்.

    இத்தல இறைவன் தியாகராஜர் என்றும் அழைக்கப்படுகிறார். அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியில் மகாவிஷ்ணுவின் வேண்டுகோளை ஏற்று, இத்தல ஈசன் அமுத நடனம் ஆடினாராம். ஆகையால் இங்குள்ள இறைவனை அனைவரும் ‘அமுத தியாகர்’ என்று செல்லமாக அழைக்கின்றனர். ஆலயத்தின் தனி மண்டபத்தில் கிழக்கு நோக்கியபடி தியாகராஜர், அம்பாள் மற்றும் முருகப்பெருமானுடன் ‘சோமாஸ்கந்தராக’ காட்சி தருகிறார்.

    இத்தலத்துக்கு வந்து சிவனருள் பெற்ற சுந்தரர், தேவாரப் பாடல்களைப் பாடியுள்ளார். அவர் தனது ஐந்தாவது பதிகத்தில்

    ‘மாலை மதியே மலைமேல் மருந்தே

    மறவேன் அடியேன் வயல்சூழ்ந்த

    ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்

    ஆலக்கோயில் அம்மானே’

    என்று குறிப்பிடுவதை வைத்துப் பார்க்கும் போது, முற்காலத்தில் நெல் வயல்களும், கரும்பு ஆலைகளும் செழித்த ஊராக இந்தத் திருத்தலம் இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது.

    மருந்தீசர் :

    சரி.. ‘அது என்ன? மலைமேல் மருந்து!’ என்று வினவிய போது, இங்கிருந்து மேற்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் மலைக் கோவில் ஒன்று இருப்பது தெரியவந்தது. பெரிய மலையோ, குன்றோ அல்ல. கொஞ்சம் மேடிட்ட உயரமான பகுதி. அதன் மேலும் இறைவன் குடி கொண்டிருக்கிறார். அவர்தான் ‘மருந்தீசர்’ எனப்படும் மகாதேவன். ‘ஔடத கிரி’ எனவும், ‘மருந்து மலை’ எனவும் புகழ் வீசிக் கொண்டிருக்கிறது. இந்த மலைக் கோவிலில் உள்ள ஔடத தீர்த்தம் சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.

    தெற்கு நோக்கிய நுழைவு வாசல் வழியே சென்றால், மேற்குத் திசை பார்த்து மருந்தீசர் குடிகொண்டிருக்கிறார். எதிரே வாசல் கிடையாது. ஆலக்கோவில் போலவே சுவரும், அதில் சாளரத் துளைகளும் உள்ளன. அதன் நேரே பலிபீடமும், நந்தியும், கொடிமரமும் இருக்கின்றன.

    கோவிலைச் சுற்றி வலம் வரும்போது, நான்கு முகங்களுடன் சண்டேசர் அமர்ந்துள்ளார். இந்தத் தோற்றம் வேறு கோவில்களில் இல்லை. இவரது சன்னிதிக்கு அருகே தலவிருட்சமான வேர்ப்பலா, சுவாமி யின் கருவறை விமானத்தின் பின்புறம் கிளை விரித்து நின்றாடுகிறது. சற்று நடந்தால் சிறிய தனிச் சன்னிதியில், நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் இருள்நீக்கி அம்மை வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    இவ்வாலயச் சிறப்புகளை அறிந்த போது, இது நோய் தீர்க்கும் மருந்துமலை எனவும், அபூர்வ மூலிகைகள் இந்த மலைமீது உள்ளன எனவும், அகத்திய முனிவர் திருவான்மியூர், திருக்கச்சூர் போன்ற தலங்களில் மருந்தீசராக எழுந்தருளியுள்ள இறைவனை தியானித்துதான் மூலிகை வைத்தியம் கற்றார் எனவும் கூறுகிறார்கள்.

    மூலிகை மலை :

    ஒரு முறை தேவேந்திரனுக்கு சாபத்தின் காரணமாக தீர்க்க முடியாத நோய் ஒன்று வந்தது. இதையடுத்து அவன், தன்னுடைய தேவ மருத்துவர்களான அசுபதி, பசுபதியை அனுப்பி, பலை, அதிபலை போன்ற மூலிகையை கொண்டுவரப் பணித்தான். பல இடங்களில் அலைந்து திரிந்து தேடியும் அந்த மூலிகைகள் கிடைக்கவில்லை. இறுதியில் தேவ மருத்துவர்கள், இந்த மலைப் பகுதிக்கு வந்தனர்.

    ஆனால் இப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டதால், மூலிகைகளை அடையாளம் காண முடியாமல் அவர்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து இத்தல அம்மை, இருளை நீக்கி ஒளிகாட்டி அருளினார். அதன் பின்னர் தேவ மருத்துவர்கள் தங்களுக்குத் தேவையான மூலிகையை பறித்துச் சென்று இந்திரனின் நோயைக் குணப்படுத்தினர். இருளை நீக்கி ஒளி காட்டியதால், இத்தல அன்னை ‘இருள்நீக்கி அம்மை’ என்ற பெயரைப் பெற்றார். இறைவனும் மருந்தீசர் எனப்பட்டார்.

    பிரார்த்தனை :

    உடல் நலமில்லாதவர்கள், பவுர்ணமி நாளிலோ அல்லது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது பிறந்த நட்சத்திர தினத்தன்றோ இத்தலம் வந்து, கிரிவலம் வருவது சிறப்பு தரும். கிரிவலம் வரும்போது இங்கு வீசும் மூலிகைத் தென்றல் உடலையும், உள்ளத்தையும் தழுவி நோயைக் குணப்படுத்துகிறது என்பது நம்பிக்கை. மேலும் சுவாமியையும், அம்பாளையும் பிரார்த்தித்து விபூதி தரித்துக் கொண்டால், நாள்பட்ட நோய்களும், தோல் நோய்களும் குணமாகும் என்று கூறப்படுகிறது.

    கோவில் கொடிமரத்தடியில் உள்ள குழியில் இருக்கும், மண்ணே மருந்தாக கொடுக்கப்படுகிறது. ஆம்! பக்தர்கள் பலரும் அதனை எடுத்து நெற்றியில் இட்டும், உடலில் பூசியும், வீட்டுக்கு எடுத்து கொண்டும் செல்கிறார்கள்.

    மலையே மருந்தாகவும், இறைவனே மருத்துவனாகவும் விளங்கும் இந்தத் திருக்கோவில், தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    சுந்தரருக்கு உணவளித்த ஈசன் :

    சிவ தல யாத்திரை மேற்கொண்டிருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஒரு முறை திருக்கழுக் குன்றம் சென்று விட்டு, காஞ்சீபுரம் செல்லும் வழியில் திருக்கச்சூர் திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தார். நீண்ட தூர பயணக் களைப்போடு, பசியும் சேர்ந்து சுந்தரரை வாட்டியது. அவர் கோவில் வளாகத்தில் அடியாளர்களுடன் சேர்ந்து ஓரிடத்தில் அமர்ந்தார். அவரது பசியை அறிந்த இறைவன், முதியவர் வடிவம் கொண்டு சுந்தரரிடம் வந்தார்.

    பின்னர் அவரிடம், ‘நீ பசியால் மிகவும் வாடியிருக்கிறாய். கொஞ்ச நேரம் இங்கேயே இரு. நான் உணவு கொண்டு வருகிறேன்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார் முதியவர் உருவில் வந்த இறைவன்.

    ஊருக்குள் சென்ற இறைவன், கையில் ஒரு திருவோட்டை ஏந்திக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று யாசகம் பெற்று, உணவு கொண்டு வந்தார். அதனை சுந்தரருக்குக் கொடுத்து பசியாற்றினார். சுந்தரருடன் இருந்த அடியார்களும் உணவை உண்டு பசியாறினர். பின்னர் முதியவராக இருந்த இறைவன் மறைந்தார். வந்தது இறைவன் என்பதை அறிந்த சுந்தரர், இறைவனின் அருளை எண்ணி வியந்தார். பின்னர் இறைவனைப் பற்றி பதிகம் பாடினார்.

    சுந்தரருக்காக இரந்த (பிச்சை எடுத்து) சிவபெருமான், ‘இரந்தீஸ்வரர் என்ற பெயரில் கோவிலுக்கு சற்று தூரத்திலும், சுந்தரருக்கு விருந்து படைத்த சிவன், ‘விருந்திட்டீஸ்வரர்’ என்ற பெயரில் ஆலயப் பிரகாரத்தில் தனிச் சன்னிதியிலும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

    அமைவிடம் :

    சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் சிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கிருந்து வடக்கே சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருக்கச்சூர் திருத்தலத்தை அடையலாம்.

    ஸ்ரீகல்யாண ஆஞ்சநேயருக்கு வடைமாலை சார்த்தி வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் கூட விரைவில் நடந்தேறி விடும் என்கிறார்கள் பக்தர்கள்.
    சென்னை தாம்பரத்தை அடுத்து, செங்கல்பட்டு செல்லும் சாலையில் உள்ளது கூடுவாஞ்சேரி. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், எஸ்.ஆர்.எம். கல்லூரி அருகில் உள்ளது ஸ்ரீகல்யாண ஆஞ்சநேயர் திருக்கோயில். கடந்த 99-ஆம் வருடம், சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலின் ஸ்தாபகரான ரமணி அண்ணாவால், மூலவரான ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயரின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆலயம் அமைக்கப்பட்டதாம்!

    பிறகு, 2004-இல், ஸ்ரீகல்யாண ஆஞ்சநேயரின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தசகோடி ஸ்ரீராமநாம மணித்தூண், ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி ராமநாம ஜப மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டு, ஸத்குரு ஸ்ரீநாமானந்தகிரி சுவாமி முன்னிலையில் ஸம்ப்ரோக்ஷணம் நடந்தது.

    பத்மபீடத்தில் நின்ற திருக்கோலம்; இடது கையை இடுப்பில் வைத்திருக்க, வலது கையில் கதை வைத்த நிலையில் காட்சி தருகிறார் ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயர். மூலவரான இவர் இந்தக் கோலத்தில் தரிசனம் தர... உற்ஸவர் சதுர்புஜங்களுடன் சங்கு, சக்கரம், கதையுடனும், அருகில் தன் தேவியும் சூரிய புத்திரியுமான ஸ்ரீஸூவர்ச்சலாதேவியுடனும் அற்புதமாகக் காட்சி தருகிறார்! இவரின் திருநாமம்... கல்யாண ஆஞ்சநேயர்!

    சனிக்கிழமைகளில் சென்னை, தாம்பரம் முதலான பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து அனுமனை தரிசித்து வாழ்வில் வளம் பல பெறுகின்றனர் என்கிறார் அர்ச்சகர் முரளி

    இந்த ஆலயத்துக்கு வந்து ஸ்ரீஸூவர்ச்சலா தேவியுடன் காட்சி தரும் ஸ்ரீகல்யாண ஆஞ்சநேயருக்கு வடைமாலை சார்த்தி வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் கூட விரைவில் நடந்தேறி விடும் என்கிறார்கள் பக்தர்கள்!
    நாகதோஷங்களை அடியோடு நீக்கும் வல்லமை பெற்ற திருத்தலமாக நாகராஜா திருக்கோவில் திகழ்கிறது.
    கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகராக விளங்குவது நாகர்கோவில். அந்த மாவட்ட தலைநகரத்தின் தலைசிறந்த ஆலயமாக விளங்குகிறது, அங்குள்ள நாகராஜா திருக்கோவில். நாகதோஷங்களை அடியோடு நீக்கும் வல்லமை பெற்ற திருத்தலமாக இது திகழ்கிறது. கன்னியாகுமரியில் உள்ள குமரி அம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக, மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும் இது பெயர் பெற்றுள்ளது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் நாகராஜரின் பெயரிலேயே, இந்த ஊர் ‘நாகர்கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.

    மூலவராக நாகர் :

    நம் நாட்டில் நாகர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்தக் கோவில் இதுவேயாகும். திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருக்காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழ்ப்பெரும் பள்ளம், திருநெல்வேலி (கோடகநல்லூர்) போன்ற ஆலயங்களில் எல்லாம் மூலவரான சிவபெருமானை வழிபட்டு நாகங்கள் தங்களது கொடிய தோஷங்களைப் போக்கிக் கொண்டதால் பெருமை மிக்கதாகும். ஆனால் நாகருக்கென்றே தனிக்கோவில், அதாவது நாகர் மூலவராக வீற்றிருக்கும் ஆலயம் நாகராஜா கோவில் ஆகும்.

    ஆதிகாலத்தில் இந்த பகுதி வயல்கள் சூழ்ந்ததாக இருந்துள்ளது. வயலில் அரிவாளை வைத்து நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்த ஒரு பெண், நெற்கதிரை அறுக்கும்போது, திடீரென ரத்தம் வந்தது. இதைக் கண்டு பயந்து போன அந்தப்பெண் அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, அவர்கள் ரத்தம் வந்த இடத்தைப் பார்த்தபோது, அங்கே பாறையொன்றில் ஐந்து தலையுடன் கூடிய நாகர் உருவம் இருந்தது.

    ரத்தம் வழிந்தது :

    அந்த நாகர் சிலையின் மேற்பகுதியில் இருந்துதான் ரத்தம் வந்து கொண்டிருந்தது. பின்பு அந்த நாகர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வழிபட்டனர். இதையடுத்து ரத்தம் வருவது நின்றது. எனவே அந்தப் பகுதி மக்கள், தினமும் அந்த சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கினர். இதனால் அந்த மக்களின் வாழ்க்கையில் துன்பங்கள் அகன்று, வசந்தம் வீச ஆரம்பித்தது.

    முதலில் குடிசைப் போட்டு சிலையை வைத்து ஆராதித்து வந்தனர். ஒரு முறை சரும நோயால் பாதிக்கப்பட்ட களக்காடு பகுதியை ஆண்டுவந்த மன்னன் மார்த்தாண்டவர்மா, நாகராஜா கோவிலுக்கு வந்தார். அவர் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். இதனால் மகிழ்ந்த மன்னன், அவ்விடத்திலேயே நாகராஜாவுக்கு ஆலயம் எழுப்பினார். ஆனால் கருவறை மட்டும் நாகங்கள் வசிப்பதற்கேற்ப, ஓலைக் கூரையாலேயே வேயப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் இத்தல அர்ச்சகர்களே ஓலைக் கூரையைப் பிரித்து விட்டு, புதிய கூரையை வேய்கிறார்கள். கேரள கட்டிட பாணியில் இந்த ஆலயம் அமையப்பெற்றுள்ளது. இந்தக் கோவிலை நாகங்களே பாதுகாக்கின்றன. கருவறையில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். இத்தலத்தில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்ற பெண் நாகமும் துவார பாலகர்களாக உள்ளனர்.

    மண் பிரசாதம் :

    இத்தல மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது. கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. மேலும் வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இது இன்றும் காணக் கூடிய ஒரு அதிசய நிகழ்வாகும். இந்த நீருடன் சேர்ந்த மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கு கிறார்கள். இந்த மணலானது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருப்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.

    நாகராஜர் சன்னிதிக்கு வலது புறம் காசி விஸ்வநாதர், அனந்த கிருஷ்ணன் மற்றும் கன்னி மூல கணபதி சன்னிதிகள் அமைந்துள்ளன. தினமும் நாகராஜருக்கு பூஜைகள் நடைபெற்று முடிந்த பின்னர்தான், இவர்களுக்கு பூஜைகள் நடைபெறும். அர்த்த ஜாம பூஜையில் மட்டும் அனந்த கிருஷ்ணருக்கு முதல் பூஜை நடைபெறுகிறது.

    இத்தல காசி விஸ்வநாதருக்கு சிவராத்திரி மற்றும் பிரதோஷ நாட்கள் விசேஷமானவை. இந்த இரு தினங்களிலும் காசி விஸ்வநாதர் மற்றும் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் இன்பம் பெருகும். ஆலயமானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆனால் பிரதான வாயில் தெற்கு நோக்கியே இருக்கிறது. இந்த வாசலை ‘மகாமேரு மாளிகை’ என்று அழைக்கிறார் கள்.

    கோவில் வெளி வளாகத்தில் துர்க்கை சன்னிதி, பாலமுருகன் சன்னிதி, திறந்தவெளியில் குழலூதும் கண்ணன் சன்னிதி முதலியவை உள்ளன. மேலும் காவல் தெய்வங்களான சாஸ்தாவும், நாகமணி பூதத்தான் சன்னிதியும் ஆலய வளாகத்திற்குள்ளேயே இருக்கிறது.

    கொடிமரத்தில் ஆமை :

    இந்தக் கோவிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்த கிருஷ்ணர் சன்னிதிக்கு எதிரிலேயே கொடி மரம் இருக்கிறது. தை மாதத்தில் அனந்த கிருஷ்ணருக்கே பிரம்மோற்சவமும் நடக்கிறது. அப்போது அனந்தகிருஷ்ணர் திருத்தேரில் எழுந்தருள்வார். தைமாத ஆயில்ய தினத்தன்று ஆராட்டு வைபவமும் நடைபெறும். பெருமாள் கோவில்களில் கொடி மரத்தின் உச்சியில் கருடன் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு ஆமை உள்ளது. பாம்பும், கருடனும் பகைவர்கள் என்பதால், இத்தல பெருமாள் சன்னிதியின் கொடி மரத்தில் ஆமை இருப்பதாக ஐதீகம் கூறப்படுகிறது. விழாக்களில் வாகனமாகவும் ஆமையே இருக்கிறது.

    தீர்த்த துர்க்கை :

    இந்த தலத்தில் உள்ள துர்க்கை சிலை, இங்குள்ள நாக தீர்த்தத்தில் கிடைத்தது. எனவே அன்னையை ‘தீர்த்த துர்க்கை’ என்று அழைக்கிறார்கள். துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    ‘ஓடவள்ளி’ என்ற கொடியே இத்தல விருட்சமாகும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது. வேணாட்டு அரசனான வீர உதய மார்த்தாண்டன் இந்த ஆலயத்தை புதுப்பித்துள்ளான். இந்த மன்னன், ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து விசேஷ வழிபாடுகள் நடத்தினான். அரசன் தொடங்கிய இந்தப் பழக்கம் இன்றும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்.

    ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) இவ்வாலயத்தின் முன்புள்ள அரச மரங்களின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் தங்கள் கையாலேயே மஞ்சள் பொடி தூவி, பால் அபிஷேகம் செய்யலாம். இவ்வாலயத்தில் தினமும் காலை 10 மணிக்கு மூலவர் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது.
    விழுப்புரம் மாவட்டம், தும்பூர் தாங்கல் என்னும் திருத்தலத்தில் உள்ள நாகம்மன் திருக்கோவில், தொன்மையான வரலாறும், பெருமையும் கொண்டதாக விளங்குகிறது.
    விழுப்புரம் மாவட்டம், தும்பூர் தாங்கல் என்னும் திருத்தலத்தில் உள்ள நாகம்மன் திருக்கோவில், தொன்மையான வரலாறும், பெருமையும் கொண்டதாக விளங்குகிறது.

    ஒரே வயிற்றில் தோன்றி, ஒரே ரத்தமான பங்காளியையே ஏமாற்றியவனுக்கு கடுமையான தண்டனை நிறைவேற்றி தீர்ப்பு வழங்கியவள், தும்பூர் தாங்கல் நாகம்மன் ஆவாள்.

    அந்தப் பழங்காலக் கதையைக் காண்போம்.

    அண்ணன் - தம்பி :

    பல நூற்றாண்டுகளுக்கு முன் திருவாமாத்தூர் பகுதியில் ஒரு வசதியான குடும்பம் வாழ்ந்து வந்தது. அண்ணன், தம்பி என இருவர் மட்டுமே குடும்ப வாரிசுகள். தம்பி வெளியூர் சென்ற சமயத்தில், தந்தை நோய்வாய்பட்டு இறந்துவிடுகிறார். அண்ணனோ அனைத்துச் சொத்துக்களையும் விற்று காசாக்கி, மறைத்து வைத்து விடுகிறான்.

    தந்தையின் மறைவுக்குப் பின்னர் ஊர் திரும்பிய தம்பி, தன் அண்ணனிடம் தனக்குரிய பங்கைக் கேட்கிறான். அண்ணனோ முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறான். தந்தையின் சொத்து ஏதும் இல்லை எனப் பசப்புகிறான்.

    தம்பி, ஊர்ப் பெரியவர்களிடம் முறையிடுகிறான். ஊரார் தம்பிக்குப் பரிந்து பேசியும் பயன் இல்லை; அண்ணன் மனம் இளகுவதாக இல்லை. வேறு வழியில்லாமல், திருவாமாத்தூரில் உள்ள திருவட்டப்பாறைக்குச் சென்று, அதன்மீது கை வைத்துச் சத்தியம் செய்யட்டும் என முடிவு செய்கிறார்கள். அண்ணனும் அதற்கு ஒப்புக் கொள்கிறான்.

    நீதி தரும் திருவட்டப்பாறை :

    அந்தப் பகுதியில் மிகவும் சிக்கலான வழக்கு ஒரு முடிவுக்கு வரவில்லை என்றால், திருவாமாத்தூர் வட்டப்பாறையில் சத்தியம் செய்துவிட்டால் போதும். அது பொய் சத்தியமாக இருக்குமானால், சத்தியம் செய்தவன் உடனே தண்டனையை அனுபவிப்பான் என்பதை அந்தப் பகுதி மக்கள் கண்கூடாக கண்டு வருகின்றனர்.

    எனவே, ஊர்ப் பெரியவர்களுடன், அண்ணன்- தம்பி இருவரும் வட்டப்பாறைக்கு வந்து சேர்கின்றனர். வட்டப்பாறையை அடைந்ததும் தன் கையிலிருந்த தடியைத் தன் தம்பியின் கையில் கொடுத்துவிட்டு, ‘எங்கள் குடும்பத்தில் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து எதுவுமே என்னிடத்தில் இல்லை. இது சத்தியம்’, என்று வட்டப்பாறையில் கை வைத்து சத்தியம் செய்கிறான்.

    ஆனால், ஊரார் எதிர்பார்த்தபடி அண்ணனுக்கு ஒன்றுமே நடக்கவில்லை. திருவட்டப்பாறையில் நீதி பொய்த்ததே என வேதனையோடு கலைந்தனர். தம்பி கையில் கொடுத்த தடியைத் திரும்பப் பெற்றுக்கொண்ட அண்ணன், ஏக மகிழ்ச்சியில் அருகேயுள்ள தும்பூர் தாங்கல் கிராமம் நோக்கி நடக்கலானான்.

    ‘பொய் சத்தியம் செய்த என்னை, தெய்வம் என்ன செய்து விடும்; திருவட்டப்பாறை தெய்வம் சீறி கொத்துமோ...’ என ஏளனமாகச் சொல்லி வாய் மூடுவதற்குள், பூமியிலிருந்து பீறிட்டு எழுந்த கருநாகம் ஒன்று அவனைச் சீறி கொத்தியது. அவனும் இறந்து போனான். அவன் கையில் இருந்த தடி உடைந்து, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொற்காசுகளும் நவரத்தினங்களும், அங்கேயே கொட்டி சிதறிக் கிடந்தன.

    அண்ணன் உயிர் துறந்த இடம் தும்பூர் தாங்கல். இங்கு தான் சுயம்பு வடிவான நாகம்மன் கோவில் அமைந்துள்ளது.

    தசையாய் இருந்த நாகம், கல்லாக மாறியது மட்டுமின்றி, தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது என்பதும், இது மிக நீளமான கல் நாகம் என்பதும், அண்மையில் திருப்பணி மேற்கொள்ள முயன்றபோது தெரியவந்துள்ளது.

    ஆலயத் திருப்பணிக்கு முன்னர் நிகழ்ந்த அம்மனின் திருவிளையாடல் இது. புதுச்சேரியைச் சார்ந்த ஒரு அடியார் தனக்கு ஜாதகப்படி நடந்த ஏழரைச் சனியால் பல்வேறு தோல்விகளைக் கண்டு விரக்தி அடைந்து சன்னியாசம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

    அதற்கு முன்பு தும்பூர் தாங்கல் நாகம்மன் சன்னிதிக்கு வந்து வழிபட்டார். அப்போது ஒரு ஊனமுற்றவர் அவரிடம் வந்து, ‘உங்களை ஒருவர் கூப்பிடுகிறார்’ என்று கூறினார். அவர் கூறிய திசையை நோக்கியபோது, அங்கே எவருமே இல்லை. சொன்னவரைப் பார்த்தால் அவரும் அங்கே இல்லை. இது ஏதோ நாகம்மன் செய்த திருவிளையாடல் என முடிவு செய்தார். எனவே, மீண்டும் இவ்வாலயம் வந்து சேர்ந்தார்.

    அங்கே ஒருவர் அருள்வாக்கு சொல்லிக் கொண்டிருந்தார். அவர், இவரைப் பார்த்ததும் அருகில் அழைத்து, அடியாரின் கையில் என்னவென்று தெரியாத ஒரு பொருளை மறைத்தபடி அவர் கையில் வைத்தார். ‘இதை வைத்துக்கொண்டு நீ விரும்பும் தொழிலைச் செய்து வா. எல்லாம் நன்மையாகவே நடக்கும்’ என அருள்வாக்கு கூறினார்.

    அதன்பின்னர், ஊர் திரும்பிய அவருக்கு அனைத்தும் ஏற்றமாகவே அமைந்தது. ஆகவே அம்மன்பால் ஈடுபாடு கொண்ட அவர், ஆலயம் எழுப்பத் திட்டமிட்டார்.

    திருப்பணியில் மகிமை :

    சிமெண்டு கூரையின் கீழ் அருள் வழங்கி வந்த நாகம்மனைத் தோண்டி எடுத்து உயரமான பீடத்தில் வைத்து புதிய ஆலயம் எழுப்ப அடியார் முயன்றார். ஆழம் எடுக்க எடுக்க அந்த கல்நாகம் பருத்த உடலுடன் முழு வடிவமாக பூமியின் கீழே நீண்டு கொண்டே போனது. அது மட்டுமின்றி, நாகர் உருவத்தைச் சுற்றி ஏராளமான நீர் சுரந்து கொண்டு வெள்ளமாக நின்றது. இத்தனைக்கு அருகேயுள்ள திருக்குளம் வறண்டு காணப்படுவதுதான் அதிசயம்.

    இதற்கு மேலும், தோண்டுவது அம்மனின் சக்தியையே சோதிப்பதற்கு ஒப்பாகும் என்று பக்தர்கள் அஞ்சினர். எனவே பழையபடியே தோண்டிய பகுதிகளை மீண்டும் மண்ணால் மூடிவிட்டு இருக்கின்ற இடத்திலேயே உயர்ந்த மண்டபம் கட்டி, ஆலயம் எழுப்பினார்கள். பின்னர் குடமுழுக்கு விழாவும் நடத்தப்பட்டது.

    ஆலய அமைப்பு :

    மேற்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. வலது புறம் விநாயகர் சன்னிதியும், இடதுபுறம் வள்ளி -தெய்வானை சமேத ஆறுமுகர் சன்னிதியும் உள்ளன. அருகே அரசமரமும், அதன் அடியில் நாகர்களும் அமைந்துள்ளன. இவற்றில் பக்தர்கள் தாலிச்சரடு உள்ளிட்ட காணிக்கைகளைச் செலுத்துகின்றனர்.

     அதையடுத்து அன்னை நாகம்மன் உருவம் மேற்கு முகமாய் மெய்சிலிர்க்கும் வண்ணம் காட்சி தருகின்றது. அகன்ற நாகமாய் அன்னை கருணையோடு காட்சி தருகின்றாள். அன்னையின் தலைப்பகுதி மட்டும் 5½ அடி அகலமும், 3½ அடி நீளமும் கொண்டதாகும்.

    அருகே வலதுபுறம் அழகிய திருக்குளம் நீர் வேண்டி நிற்கிறது. பின்புறம் நவக்கிரக சன்னிதி தனியே அமைந்துள்ளது. விநாயகர் சன்னிதியின் எதிரில், அஷ்டலட்சுமி சன்னிதி அமைந்துள்ளது.

    ராகு- கேது தோஷங்கள், காள சர்ப்ப தோஷம் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களுக்கும், கண்கண்ட பரிகாரத் தலமாக தும்பூர் தாங்கல் ஆலயம் திகழ்கின்றது. ஆலயத்தின் வடமேற்கே அமைந்துள்ள இயற்கையான புற்றில், இதற்கான பரிகார பூஜை செய்யப்படுகிறது.

    முத்தாம்பிகை கோவில் :

    தும்பூர் தாங்கல் நாகம்மன் ஆலயத்திற்குத் தென்மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில், இவ்வாலயத்தோடு தொடர்புடைய பழம்பெரும் தேவாரத் தலமான திருவாமாத்தூர் அமைந்துள்ளது. இங்கு முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் ஆலயம் உள்ளது. தனிக்கோவிலாக விளங்கும் முத்தாம்பிகை அம்மனே, நாகமாக வந்து தர்மத்தையும், சத்தியத்தையும் நிலை நாட்டியதாகக் கூறப்படுகின்றது. தும்பூர் தாங்கலில் வெளியே காட்சி தரும் நாகத்தின் நிறைவுப் பகுதியான வால், முத்தாம்பிகையின் திருமேனியில் இன்றும் காணப்படுகிறது. இதனை அபிஷேக காலங்களில் மட்டுமே காண முடியும்.

    நாகத்தின் நடுப்பகுதி :

    தும்பூரில் தாங்கல் நாகம்மனின் தலைப்பகுதி ஆலயமாக விளங்குவது போல, நடுப்பகுதி ஆலயத்தின் பின்புறம் சுமார் 300 அடி தூரத்தில் தெற்கே பூமிக்கு வெளியே காணப்படுகிறது. இது மண்வெட்டியால் வெட்டப்பட்டு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பல நூறாண்டுகளுக்கு முன்பு வயதான ஒருவர், வயலில் மண்ணைச் சீர் செய்து கொண்டிருந்தார். அப்போது ஏதோ ஒரு பொருளின் மீது வெட்டுப்பட, ரத்தம் பீறிட்டு வந்தது. அதைக் கண்ட விவசாயி மயக்கமடைந்து விழுந்தார். விவரம் அறிந்து அங்கு வந்த ஊர்மக்கள் உண்மையை உணர்ந்து, அம்மனிடம் மன்னிப்பு வேண்டி நின்றனர். அதன்பின் பீறிட்ட ரத்தம் நின்று போனது. ஆனால் அந்த வடு மட்டும் மாறாமல் நிலைத்துவிட்டது. அதனை இன்றும் நாம் கண்டு வியக்கலாம்.

    அமைவிடம் :

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் தும்பூர் தாங்கல் தலம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து தென்மேற்கே 160 கிலோமீட்டர், விழுப்புரத்தில் இருந்து வடகிழக்கே 12 கிலோமீட்டர், செஞ்சியில் இருந்து தெற்கே 29 கிலோமீட்டர், திருவாமாத்தூரிலிருந்து வடகிழக்கே 10 கிலோமீட்டர் தூரத்தில் தும்பூர் தாங்கல் தலம் உள்ளது.

    விழுப்புரம் - செஞ்சி பேருந்து வழித்தடத்தில் தும்பூர் என்ற இடத்தில் இறங்கி, ஷேர் ஆட்டோ மூலம் கிழக்கே சுமார் 2 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த ஆலயத்தினை அடையலாம்.
    தேவி கருமாரியம்மன் இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
    ஆவணி வளர்பிறை முதல் வெள்ளியில் காப்பு கட்டி அடுத்த வெள்ளியில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் அபிஷேக ஆராதனை, சமபந்தி போஜனம், சக்தி கிரகம் எடுத்தல் போன்றவைகள் நடைபெறும். மறுநாள் சனிக்கிழமை பொது மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். அன்று இரவு அப்பகுதி முழுவதும் சாமி சுற்றி வரும்.

    அப்போது ஒவ்வொரு வீடுமே மண்டகப்படி தான். அனைத்து மதத்தினரும் வந்து வழிபாடு செய்வதும் தனி சிறப்பு தான். இத்தலத்தில் சங்கடகர சதுர்த்தியில் விநாயகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு, வெள்ளி தோறும் நடத்தப்படும் ராகு கால பூஜை, மாத கடைசி வெள்ளி சிறப்பு அர்ச்சனை, செவ்வாய் தோறும் முருகனுக்கு சிறப்பு அலங்காரம், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை ஆகியவையும் ஆவணித்திருவிழாவும் உபயதாரர்களால் சிறப்பாக நடத்தப்படுகிறது.

    இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    காலை 5 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    இந்த தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் கோயிலுக்கு சென்றால் விநாயகர், முருகன், சிவன், நாகர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், அஷ்டலட்சுமிகள், நவகிரகம் ஆகியவற்றை ஒரே தலத்தில் தரிசனம் செய்யலாம்.

    செவ்வாய் தோறும் இங்குள்ள முருகனுக்கு காலை பத்து மணியளவில் செய்யப்படும் மாங்கல்ய தோஷ பரிகார பூஜை மிகவும் பிரசித்தமானது. மாங்கல்யம்தான் இக்கோயிலின் அதிக காணிக்கையாக வருகிறது. அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

    இங்கு கோயிலுக்கு முன்னும், பின்னும் அரசும் வேம்பும் இணைந்து வளர்ந்து வருகின்றன. இதில் கோயிலின் முன் அம்மனின் பார்வையில் உள்ளதில் வேப்பமரம் பெரியதாகவும் அரசமரம் சிறியதாகவும் வளர்ந்துள்ளது. அதே போல் கோயிலின் பின் உள்ளதில் அரசு பெரியதாகவும் வேம்பு சிறியதாகவும் வளர்ந்துள்ளது.

    கிழக்கு பார்த்த இச்சன்னதியில் ஐம்பொன்னில் அமைந்திருக்கும் உற்சவ மூர்த்திக்கு நாள்தோறும் வெவ்வேறு அலங்காரம் சிறப்பாக செய்யப்படுவதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். மங்கையர் மனம் கலங்கினால் இந்த மகமாயிக்கு மனம் தாங்காது. இத்தலத்திற்கு ஒரு முறை வந்து வழிபட்டாலே நமது தேவையறிந்து கொடுத்து காத்திடுவாள் தேவி கருமாரி.

    பல ஆண்டுகளுக்கு முன் காடாக இருந்த இப்பகுதியில் தானாக கிடைத்த சூலாயுதத்தை வைத்து மக்கள் சில காலம் வழிபட்டு வந்தனர். பின் சுயம்புவாக கிடைத்த மார்பளவு கருமாரி சிலை வைத்து அதை மூலவராக வழிபாடு செய்து வருகிறார்கள்.

    அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
    ஆனந்தம் வழங்கும் புற்றிடங்கொண்டீஸ்வரர் திருத்தலம் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    கண்ணாடிக்கு பொய் பேசத் தெரியாது. கண்ணாடியின் முன்பாக நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ, அதைத்தான் அது திரும்பிக் காட்டும். வாழ்க்கையும் அப்படிப்பட்டதுதான். நாம் எதை செயல்படுத்து கிறோமோ, அதுதான் நம் வாழ்வில் வேறொரு ரூபத்தில் வெளிப்படுகிறது. நன்மையான செயல்பாடு நன்மையாகவும், தீமையான செயல்பாடு தீமையாகவும் உருமாறி நம்மிடமே வந்து சேர்கிறது.

    பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கீதாஉபசாரத்தை அறிந்து கொள்வதற்கு, நாம் மன பக்குவம் அடைய வேண்டும். இதற்கு இறைசக்திதான் துணை நிற்க வேண்டும். ஏனெனில் நிலையற்ற வாழ்வில் ஆசை என்னும் மாயையில் சிக்கித் தவிக்கிறோம். இதில் இருந்து விடுபட இறைபக்தி அவசியம். இறைவன், அனைத்து இடங்களிலும் நிறைந்திருந்தாலும், ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதே சால சிறந்தது என்பது ஆன்மிக பெரியோர்களின் கூற்றாகும்.

    புற்றிடங்கொண்டீஸ்வரர் கோவில் :

    அத்தகைய சிறப்புமிக்க திருத்தலமாக விளங்குகிறது கோவை அருகே ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந்துள்ள புற்றிடங்கொண்டீஸ்வரர் திருத்தலம். பரபரப்பான சாலையோரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இந்த திருத்தலம் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த சோழர்களில் ஒருவன், இந்தப் பகுதியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தான்.

    திருவாரூரில் எழுந்தருளிய புற்றிடங்கொண்டீசுவரரின் திருநாமத்தையே இங்குள்ள இறைவனுக்கும் அவன் சூட்டி வழிபட்டதாக தெரிகிறது. அம்பிகையும் அன்றைய காலத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலவெள்ளத்தில் கோவில் சிதலமடைந்து விட்டது. அதை தொடர்ந்து இங்குள்ள சிவனடியார்கள் ஒன்று சேர்ந்து நிறைநிலை வழிபாட்டு மன்றம் ஒன்றை ஏற்படுத்தி கோவில் திருப்பணியில் ஈடுபட்டனர். ஐந்து மாடங்கள் கொண்ட கோபுரம், கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரம், விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமைத்து, கடந்த 5.4.1995-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    தமிழ்முறைப்படி பூஜைகள் :

    பொதுவாக மற்ற திருத்தலங்களில் சாமிக்கு அர்ச்சனை செய்யும் போது சமஸ்கிருத மொழியில் மந்திரங்களை அர்ச்சர்கள் கூறுவார்கள். ஆனால் இந்த திருத்தலத்தில் தமிழ்முறைப்படி தான் பூஜைகள் நடைபெறுகின்றன. தமிழிலேயே தான் திருவாசகம், சிவபுராணம், தேவார பாடல்கள் பாடப்பட்டு புற்றிடங்கொண்டீசுவரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அர்ச்சனை செய்ய வரும் போது, தமிழிலேயே செய்யப்படுகிறது. மற்ற சன்னிதிகளிலும் தமிழ் முறைப்படி தான் பூஜைகள் நடக்கின்றன.

    ஆலய அமைப்பு :

    ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று கூறுவார்கள். தூரத்தில் இருந்து வரும் போதே இந்த ஆலயத்தில் முன்கோபுரம் மற்றும் மூலஸ்தான கோபுரங்களை தரிசிக்கலாம். கோவில் உள்ளே நுழைந்தவுடனேயே நம் கண்ணில் தென்படும் புற்றிடங்கொண்டிடீஸ்வரரை தரிசனம் செய்யலாம். ஆனாலும் நாம் அதற்கு முன்பாக உள்ள கொடி மரம், பலிபீடம் போன்றவற்றை தரிசிக்க வேண்டும்.

    பின்னர் தெற்குப்புறமாக பிரகாரத்தை வலம் வர வேண்டும். அங்கே கன்னி மூலையில் விநாயகப்பெருமான் வீற்றிருக்கிறார். அவரை வணங்கி விட்டு நகர்ந்தால் வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். 6 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்துடன் காட்சியளிக்கும் இவரை தரிசித்துக் கொண்டே இருக்கலாம். அப்படிப்பட்ட அருள் வீசும் முகம் இவருடையது. சுப்பிரமணியருக்கு அருகிலேயே பைரவர் வீற்றிருக்கிறார்.

    பின்னர் கருவறைக்குள் செல்லும் முன்பாக, வழியில் உள்ள நந்தியம்பெருமானை தரிசித்து, இறைவனைக் காண்பதற்கு உள்ளே செல்ல அனுமதி கேட்க வேண்டும். அதன் பிறகே கருவறையில் வீற்றிருக்கும் மூலவரான புற்றிடங்கொண்டீஸ்வரை தரிசிக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு செய்த திருப்பணியின் காரணமாக, கருவறை சற்று உயரமாக அமைந்துள்ளது.

    அதன் உள்ளே லிங்கத் திருமேனியராக, இறைவன் புற்றிடங்கொண்டீஸ்வரர் வீற்றிருக்கிறார். அவர் மீது ஆதிசேஷன், குடை போன்று எழுந்தருளியுள்ளார். உலக நன்மைக்காக ஆலகால விஷம் உட்கொண்ட திருநீலக்கண்டர் அல்லவா?. தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் துயரை துடைக்க அருஉருபமாய் இந்த ஆலயத்தில் காட்சி தருகிறார்.

    மூலவருக்கு வலதுபுறம் இறைவனைப் போற்றித் தொழுது அருள்பெற்ற 63 நாயன்மார்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். இவர்களை வணங்கினாலே இறைவனின் அருள் நமக்கு முழுமையாக கிடைக்கும். மூலவர் சன்னிதிக்கு தென்புறத்தில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் அண்ணாமலையாரும், வடக்கே பிரம்மாவும், துர்க்கை தேவியும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். மூலவரை வணங்கியவாறே தனிச் சன்னிதியில் எழுந்தருளியிருக்கிறார் சண்டிகேசுவரர்.

    சுவாமிக்கு இடதுபுறம் அகிலத்தை ரட்சிக்கும் அன்னை பராசக்தி, ‘பூங்கோதை நாயகி’ என்ற திருநாமத்துடன் இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ளார். நான்கு திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கிய வண்ணம் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார் அன்னை. அவளது இரு திருக்கரங்களில் தாமரை ஏந்தியபடியும், மற்ற இரு கரங்களில் அபய ஹஸ்த முத்திரையுடனும் காட்சி தருகிறார். அம்மன் சன்னிதிக்கு தெற்கே இச்சா சக்தியும், மேற்கே கிரியா சக்தியும், வடக்கே ஞானசக்தியும் எழுந்தருளி உள்ளனர். அவரை தரிசித்து விட்டு நகர்ந்தால், நடராஜர்-சிவகாமி அம்மாள் சன்னிதி உள்ளது. ஆடல்வல்லானாகிய நடராஜர், இங்கு ஆனந்த தாண்டேசுவரராக இருந்து அருள்பாலிக்கிறார்.

    திருவிழாக்கள் :

    இந்தக் கோவிலில் சித்திரை மாதம் திருத்தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. சித்ரா பவுர்ணமி அன்று திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. தெப்பத் தேர்த் திருவிழாவும் நடக்கிறது. தெப்ப உற்சவம் நடைபெறுவதற்காக, கோவிலுக்கு எதிரே சாலையைக் கடந்து புதிதாக தெப்பக்குளம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, மார்கழி திருவாதிரை, ஆனி திருமஞ்சனம், கிருத்திகை, பவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் நடை திறந்தே இருக்கும்.

    அமைவிடம் :

    கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஒத்தக்கால் மண்டபம். கோவை காந்திபுரத்தில் இருந்து ஒத்தக்கால்மண்டபம் செல்ல ஏராளமான டவுன் பஸ்கள் உண்டு.

    1008 மலர் போற்றி வழிபாடு:

    இந்த திருத்தலத்தில் உள்ள யாக சாலை மண்டபத்தில், தினமும் மாலை 3 மணிக்கு, 2 கலசங்களில் சுவாமியையும், அம்மனையும் எழுந்தருள செய்து சிறப்பு வேள்வி பூஜை நடக்கிறது. அதைத் தொடர்ந்து அந்த கலசங் களில் உள்ள புனித நீரை கொண்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது.

    பின்னர் உற்சவ மூர்த்திகள் இருவரும் கோவிலின் மகா மண்டபத்தில் தென்மேற்கு புறத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளுகின்றனர். அதைத் தொடர்ந்து 1008 மலர்களை கொண்டு உற்சவ மூர்த்திக்கு தமிழ்மொழியில் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். மேலும் இந்த திருத்தலத்தில் 60 வயது, 70 வயது, 80 வயது பூர்த்தியானவர்களுக்கு சிறப்பு பூஜை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
    ×