என் மலர்tooltip icon

    கோவில்கள்

    இறைவன் மந்தாரவணேஸ்வரர் என்ற பெயருடனும், அம்பாள் சுவர்ணவல்லி என்ற பெயருடனும் இந்த கோவிலில் வீற்றிருக்கிறார்.
    முருகனுக்கு அழகன் என்ற பெயர் உண்டு. அந்த அழகனுக்கு அண்ணன் அழகனாகத்தானே இருக்க வேண்டும். ஆனால் விநாயகருக்கே, முருகப்பெருமானுக்கு எதிரிடையான முகம். முருகனைக் காட்டிலும், விநாயகர் உடலால் பருமனானவர். அவருக்கு தலையாக இருப்பது யானையின் தலை. பெரிய வயிறு, பெரிய உடம்பு என்று மலைபோல் காட்சியளிப்பவர் விநாயகர். ஆனால் சிறு குழந்தை. ஆகையால்தான் அவரை ‘குழந்தை சாமி’ என்றும் அழைப்பார்கள்.

    அந்தக் குழந்தைசாமி கையிலே கொழுக்கட்டையை வைத்துக் கொண்டிருக்கிறார். யானை போன்ற உடல்வாகுடன் இருக்கும் அவருக்கு, வாகனமாக இருப்பதோ சின்னஞ்சிறு மூஞ்சுறு. தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று வைத்திருக்கும் விநாயகப்பெருமான், அந்தக் கொம்பில் ஒன்றை ஒடித்துத்தான் வியாசர் கூற, மகாபாரதக் கதையை எழுதினார் என்பது புராணம் கூறும் தகவல். உருவத்தில் இவ்வாறு இருக்கும் விநாயகர், தொடக்கத்தில் மனித முகத்துடன் தான் இருந்தார். அதை காட்சிப்படுத்தும் ஆலயம் பற்றியும், கதையையும் இங்கே பார்க்கலாம்.

    கஜமுகாசுரன் என்னும் அசுரன், பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். அவனது கடும் தவத்தின் பயனாக அவன் முன்பாக தோன்றினார் பிரம்மதேவர். ‘கஜமுகா! உன்னுடைய தவத்தினால் மகிழ்ந்தேன். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்’ என்றார்.

    அவனோ பேராசை காரணமாக தான் எப்போதும் சிரஞ்சீவியாக இருக்கும் வரம் தந்தருள வேண்டும் என்று பிரம்மாவை வேண்டினான்.

    பிரம்மாவோ, ‘உலகில் பிறந்த அனைவருக்கும் அழிவு என்பது உண்டு. ஆகையால் இயற்கையைத் தாண்டி எதையும் செய்ய இயலாது. வேறு ஏதாவது வரம் கேள்’ என்றார்.

    சற்று சிந்தித்த கஜமுகாசுரன், ‘ஆண்- பெண் கலப்பு இல்லாமல் பிறந்த ஒருவனால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும்’ என்று வரம் கேட்டான். ஆண்- பெண் சேர்க்கை இல்லாமல் உயிர்கள் பிறப்பு இல்லை. எனவே தனக்கு அழிவு என்பதே கிடையாது என்ற எண்ணம் அவனிடம் இருந்தது. ஆகையால்தான் அப்படியொரு வரத்தைக் கேட்டான்.

    அவன் கேட்ட வரத்தை அப்படியே தந்தார் பிரம்மதேவர். தான் பெற்ற வரத்தால் இறப்பு என்பதே தனக்கு இல்லை என்று நினைத்த கஜமுகாசுரன், உலக உயிர்கள், தேவர்கள், முனிவர்கள் அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினான். அவனால் அனைவரும் எல்லையில்லாத துன்பங்களை அடைந்தனர். உலகமே அவனது ஆளுகையின் கீழ் வந்தது. இதனால் தேவர்களும், முனிவர்களும், தங்களைக் காத்தருளும்படி அன்னை பார்வதிதேவியிடம் சென்று முறையிட்டனர். அன்னையும், சிவபெருமானுடன் பேசி இதற்கு தீர்வு செய்வதாக உறுதியளித்தார்.

    சோழ நாட்டில் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையை ஒட்டி ஓடும் நதி அரிசிலாறு. அந்த நதிக்கரையை ஒட்டி மந்தார மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. இதனால் அந்தப் பகுதி மந்தாரவனம் என்று அழைக்கப்பட்டது. அங்கு இறைவன் மந்தாரவணேஸ்வரர் என்ற பெயருடனும், அம்பாள் சுவர்ணவல்லி என்ற பெயருடனும் வீற்றிருந்தனர். இத்தலத்தில் தேவர்களும், கணங்களும் வந்து நீராடி இறைவனை வழிபடுவது வழக்கம். அம்பாளும் கூட இத்தல இறைவனை வழிபாடு செய்வார்.

    ஒரு நாள் உலக வலம் சென்றிருந்தார். அப்போது அம்பாள் நீராடி இறைவனை வழிபட நினைத்தார். நீராடச் செல்லும் முன்பாக தான் வரும் வரை காவலாக இருக்க ஒருவரை நியமிக்க எண்ணினார். நீராடுவதற்காக எடுத்துச் சென்ற மஞ்சளில், அழகான இளம் பிராயத்து பிள்ளை ஒன்றை உருவாக்கினார்.

    பின்னர் அந்த சிறு பிள்ளையிடம், ‘மங்கள மகனே! யார் வந்தாலும் உள்ளே அனுமதிக்காதே’ எனக் கட்டளையிட்டு நீராடச் சென்றார். அழகனின் அண்ணனோ சரியென்று தலையாட்டி விட்டு, வாசல்படியில் அமர்ந்து காவல் காக்கத் தொடங்கினான்.

    அந்த நேரம் பார்த்து உலக உலாவை முடித்துக் கொண்டு வந்தார் சிவபெருமான். வாசலில் அமர்ந்திருந்த குழந்தையைப் பார்த்ததும் அவர் அனைத்தையும் உணர்ந்து கொண்டார். கஜமுகாசுரனை அழிக்க சிறந்த பிறவி என முடிவு செய்தார். வாசலில் அமர்ந்திருந்த பாலகனை கவனிக்காதது போல, உள்ளே நுழைய முயன்றார். ஆனால் அந்த பாலகனோ, ‘யாருக்கும் உள்ளே செல்ல அனுமதி இல்லை’ என்று கூறி சிவபெருமானைத் தடுத்தான்.

    இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஈசனுக்கு கோபம் உண்டானது. சினம் மேலோங்க பாலகனின் சிரத்தை துண்டித்தார். பிள்ளையின் சத்தம் கேட்டு ஓடி வந்தார் பார்வதிதேவி. அங்கு தனது பிள்ளை தலை துண்டிக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு, அந்தக் குழந்தையை உயிர்ப்பிக்க வேண்டும் என்று சிவனிடம் வேண்டினார்.

    சிவனும் தன்னுடைய தவறை உணர்ந்தவர் போல் அந்த பாலகனுக்கு உயிர் தர முன் வந்தார். சிவகணங்களை அழைத்து, ‘உலகில் இயற்கைக்கு மாறாக வடபுறம் தலை வைத்திருக்கும் உயிர்களில், உயர்ந்தது எதுவோ அதன் தலையைக் கொண்டுவந்து வையுங்கள்’ என்றார். வடக்கில் தலை சாய்த்து படுத்திருந்த யானையின் தலை கொண்டுவந்து பொருத்தப்பட்டு, பாலகனுக்கு உயிர் கொடுக்கப்பட்டது. வேழ முகத்தோடு வேறு உருவில் உயிர் பெற்றான் பார்வதி பாலன். தன்னை படைத்த தாயையும், தலை மாற்றி தனக்கு உயிர் கொடுத்த தந்தையையும் வணங்கினான்.

    இதையடுத்து அந்த பாலகனுக்கு கஜ முகாசுரனின் வரலாறும், அவனது தவமும், பெற்ற வரமும் விளக்கிக் கூறப்பட்டது. ‘விக்னங்களை அழிக்க உருவெடுத்தவன் நீ!. கஜமுகாசுரன் என்னும் அசுரனுக்குச் சமமாக நின்று போர் புரிய வேண்டுமாதலால், கஜத்தின் தலை உனக்கும் பொருத்தப்பட்டுள்ளது. உலகமும், உலகில் உள்ள மக்களும், தேவர்களும் உன் வரவுக்காக காத்திருக்கின்றனர்’ என்றார் சிவபெருமான். அதைக் கேட்டு அனைவரிடமும் ஆசி பெற்றுச் சென்று கஜமுகாசுரனுடன் கடும்போர் புரிந்து அவனை அழித்து வெற்றி பெற்றுத் திரும்பினார் விநாயகப்பெருமான்.

    மகிழ்ந்த சிவனும், உமையும் விநாயகருக்கு அங்கீகாரம் அளிக்க விரும்பினர். அதற்காக அவரது விருப்பத்தையும் கேட்டனர். வேழ முகத்தான் தன்னுடைய விருப்பத்தைக் கூறினார்.

    ‘எப்போதும் பெற்றோரான நீங்கள் வசிக்கும் இடத்தில் உங்களோடு நானும் இருக்க வேண்டும். நீங்கள் செல்லும் இடங்களில் மூத்த மகனாக நான் முன் இருக்க வேண்டும். நான் உருவான இடத்தில், இதற்கு முன்பான எனது மனித உருவத்துடன் நான் இருந்து என்னை வணங்க வருபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்’ என்று கேட்டார்.

    அதன்படி விநாயகப்பெருமானுக்கு சிவாலயங்களில் தனி சன்னிதி அமைக்கப்பட்டது. பஞ்சமூர்த்தி புறப்பாடுகளில் சிவன்- பார்வதி புறப்பாடுக்கு முன்பாக, விநாயகர் புறப்பாடும் நடைபெறுகிறது. சிவன் தனது கணங்களுக்கு எல்லாம் அவரைத் தலைவனாக்கினார். அதனால் விநாயகர் ‘கணபதி’ என்றும் அழைக்கப்படுகிறார்.

    எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் மனித முகத்தோடு ‘ஆதி விநாயகர்’ என்னும் பெயருடன், திருக்கோவிலின் முன்புறம் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறார். ஆதி விநாயகர் குடியிருக்கும் இந்த ஊர் ‘செதலப்பதி’ எனப்படுகிறது. இந்தத் தலத்தை திருஞானசம்பந்தர் ‘மதி முத்தம்’ என்று குறிப்பிடுகிறார். முன்னோர்களுக்கு எள் வைத்து தர்ப்பணம் செய்யும் தலம் என்பதால் பலரும் இதை ‘தலதர்ப்பணபுரி’ என்றே அழைத்தனர். பின்னர் திலதைப்பதி என்றானது. இங்கு ஆதி விநாயகர், மனித முகத்தோடு, வலதுகாலை தொங்கவிட்டு, இடது காலை மடித்து வைத்து, இடது கையை இடதுகாலின் மீது வைத்தும், வலது கையை சற்றே சாயத்து அபய முத்திரை காட்டிய படியும் காட்சி தருகிறார்.

    ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி திதி அன்றும், விநாயகர் சதுர்த்தி அன்றும், ஆதி விநாயகரை தரிசனம் செய்வது உகந்த நாட்களாக கூறப்படுகிறது.

    திலதைப்பதி என்று வழங்கப்படும் இந்தத் திருத்தலம் மயிலாடுதுறை - திருவாரூர் பாதையில், பூந்தோட்டம் என்ற இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோவிலுக்குச் செல்ல பூந்தோட்டத்தில் இருந்து ஆட்டோக்களில் எளிதாக செல்லலாம்.
    இந்த ஆலயத்தில் பக்தர்கள் குழந்தை வரம், மாங்கல்ய வரம் வேண்டி கயிறு கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.
    கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து மேற்கே 11 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை உள்ளது. இங்கு அரங்கநாதராக, திருமால் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

    ஆலய வரலாறு :

    முன் காலத்தில் காரை வனமாக இருந்த இப்பகுதியில் வசித்த மக்கள், பசு மாடுகளை வளர்த்து வந்தனர். அதில் ஒரு பசு தினமும் காரை வனத்துக்குள் புகுந்து அங்கிருந்த ஒரு காரை மரத்துக்கு அடியில் பாலை சுரந்து வந்தது. இதனைப் பார்த்த பசுவின் உரிமையாளர் இதுபற்றி ஊர் மக்களிடம் தெரிவித்தார். அவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒலித்த அசரீரி, ‘நான் இங்கு அரங்கனாக எழுந்தருளி உள்ளேன்’ என்றது.

    இதைத் தொடர்ந்து அங்கு சுயம்புவாக இருந்த பெருமாளை, சிறிய குடில் அமைத்து வழிபடத் தொடங்கினர். நாளடைவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரங்கநாதருக்கு சிறிய கோவில் கட்டி வழிபட வேண்டும் என்று விரும்பினர். இந்த நிலையில் ஒரு நாள் அந்தப் பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. வெடிச்சத்தம் வந்த இடத்திற்கு சென்று மக்கள் பார்த்தனர். அப்போது ஒலித்த அசரீரி, ‘வெடி சத்தம் கேட்ட ஈசானிய மூலையில் பாறைகளும், வாயு மூலையில் மண்ணும் கிடைக்கும். அதை கொண்டு கோவில் கட்டுங்கள்’ என்றது.

    அசரீரியின் வாக்குப்படியே அந்தப்பகுதியில் இருந்து கிடைத்த பாறாங்கற்களையும், மணலையும் கொண்டு கோவில் கட்டி எழுப்பப்பட்டது. கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாமல் இருந்ததால் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து 27.1.2002-ல் 3 நிலை ராஜகோபுரத்தை அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினர்.

    ஆலய தரிசனம் :

    திருக்கோவிலை அடைந்தவுடன் ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் அர்த்தமண்டபத்தில் சக்கரத்தாழ்வாரையும், யோக நரசிம்மரையும் ஒரே சன்னிதியில் தரிசிக்கலாம். சக்கரத்தாழ்வார் கிழக்கு நோக்கியும், அதே பீடத்தில் மேற்கு நோக்கி யோக நரசிம்மரும் காட்சி தருகின்றனர். மகா மண்டபத்தில் ஊஞ்சலில் பள்ளிகொண்ட கோலத்தில் அரங்கநாதர் உற்சவ மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கிறார். அவருடன் செங்கோதை, பூங்கோதை தாயார் வீற்றிருக்கின்றனர்.

    அர்த்த மண்டபத்தில் நின்று கருவறையில் எழுந்தருளிய அரங்கநாதரை வழிபடலாம். சுமார் 4½ அடி உயரம் கொண்ட திருவுருவம், அலங்கார பிரியர் என்பதால் மலர் மாலைகள் சூழ காட்சி தருகிறார். நான்கு திருக்கரங்களுடன், நின்ற திருக் கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். சுயம்பு மூர்த்தியாய் வெளிப்பட்ட அரங்கநாதருக்கு முதலில் பூஜை நடைபெற்ற பின்னர் தான் மற்ற தெய்வங்களுக்கு பூஜை நடைபெறுகிறது.

    மூலவருக்கு வடக்குப்பகுதியில் பூங்கோதை தாயாரும், தென் பகுதியில் செங்கோதையம்மன் தாயாரும் தனித்தனி சன்னிதியில் நின்றபடி அருள்புரிகின்றனர். கோவிலின் தென்புறத்தில் தேவியரோடு பரமவாசுதேவன் தனி சன்னிதியில் சேவை சாதிக்க, அதன் முன்புறம் பன்னிரு ஆழ்வார்களின் திருமேனிகள் உள்ளன.

    கோவிலின் பின்புறம் தும்பிக்கையாழ்வார், ராமானுஜர், காளிஅண்ணன் சுவாமி ஆகியோர் தனிசன்னிதியில் எழுந்தருளி உள்ளனர். மகா மண்டபத்தை ஒட்டி ராமதூதனான ஆஞ்சநேயர், கோரிக்கை மாலைகளை சுமந்து வடக்கு நோக்கி காட்சி தருகிறார். கோவிலின் பின்புறத்தில் தல விருட்சமாக காரை மரம் விளங்குகிறது. தும்பிக்கை ஆழ்வார் சன்னிதிக்கு பின்புறம் உள்ள பூவரச மரத்தில், பக்தர்கள் குழந்தை வரம், மாங்கல்ய வரம் வேண்டி கயிறு கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.

    சாப விமோசனம் பெற்ற ரம்பை :

    முன்னொரு காலத்தில் விஸ்வாமித்திரர் பல ஆண்டுகளாக தவம் செய்து வந்தார். அதைக் கண்டு பயந்த தேவர்கள், அவரது தவத்தைக் கலைக்க ரம்பையை அனுப்பினர். ரம்பை பூலோகம் வந்து விஸ்வாமித்திரரின் முன்பு நின்று தவத்தைக் கலைக்க முயன்றாள். இதனால் கோபமடைந்த விசுவாமித்திரர், ‘நீ கல்லாகப் போவாய்’ என்று சபித்தார். அதன்படி ரம்பை கல்லாக மாறி அவரது ஆசிரமத்தின் முன்பு பல ஆண்டுகளாக கிடந்தாள்.

    இந்த நிலையில் முனிவர் ஒருவரான சபிக்கப்பட்ட கிருதாசீ என்ற தேவ கன்னிகை, ராட்சத உருவம் கொண்டாள். அவள் ஒரு முறை விசுவாமித்திரர் ஆசிரமம் வந்து அவரை தொந்தரவு செய்தாள். இதனால் ஆத்திரமடைந்த விசுவாமித்திரர், கல்லாக கிடந்த ரம்பையை எடுத்து ராட்சசியின் மீது வீசினார். இருவரும் அருகில் இருந்த பத்ம தீர்த்தத்தில் விழுந்தனர். அந்தத் தீர்த்தம் பெருமாளால் உருவாக்கப்பட்டது. எனவே அவர்கள் இருவரும் தங்கள் சுயஉருவை அடைந்தனர். பின் இத்தல இறைவனை வழிபட்டு தேவலோகம் சென்றனர்.

    திருவிழாக்கள் :

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 10 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறும். சித்ரா பவுர்ணமி அன்று தேரோட்டம் நடைபெறும். இது தவிர புரட்டாசி சனிக்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி, அனுமன்ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தீபாவளி, பொங்கல் திருநாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நடை திறந்தே இருக்கும். தினமும் 3 கால பூஜை நடைபெறுகிறது.

    சிந்தையை தெளியவைக்கும் பத்மதீர்த்தம் :

    சோம வம்சத்தை சேர்ந்த நந்தபூபாலர் தர்மநெறியுடன் இந்த பூமியை ஆட்சி செய்து வந்தார். பின்னர் அவர் ஆட்சி பொறுப்பை தனது புத்திரன் தர்மகுப்தரிடம் ஒப்படைத்து விட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றார். தந்தையை போல் தனயனும் சிறப்பாக தர்மநெறியுடன் ஆட்சி செய்தார்.

    ஒரு முறை அவருக்கு புத்தி சுவாதீனம் இல்லாமல் போயிற்று. இதையடுத்து தர்மகுப்தரை, அவரது மந்திரிகள், காட்டில் தவம் செய்து கொண்டிருந்த நந்தபூபாலரிடம் அழைத்துச் சென்றனர். அவரும் மகனை அழைத்து கொண்டு ஜைமினி மகரிஷியை சந்தித்து, தனது மகன் சாபவிமோசனம் பெற வழிகூறுமாறு வேண்டினார்.

    அதை கேட்ட மகரிஷி, ‘தென்சமுத்திர கரையோரம் பாலமலை இருக்கிறது. அங்குள்ள பத்மதீர்த்தத்தில் புனித நீராடி நாராயணனை பிரார்த்தனை செய்து வந்தால் பலன் கிடைக்கும்’ என்றார். அதன்படி பாலமலை வந்த தர்மகுப்தன் தினமும் பத்மதீர்த்தத்தில் நீராடி அரங்கனை ஒரு ஆண்டு காலம் வழிபட்டு வந்தார். தர்மகுப்தனின் பக்தியில் மனம் இரங்கிய அரங்கன், புத்தி சுவாதீனம் தெளிந்து நீங்கி மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வரம் வழங்கினார்.

    அமைவிடம் :

    கோவை காந்திபுரத்தில் இருந்து பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவனூருக்கு அடிக்கடி அரசு டவுன் பஸ்கள் இருக்கிறது. அங்கிருந்து தனியார் ஜீப்புகள் மூலம் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பால மலைக்கு செல்லலாம். அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் உண்டு. தனியே நடந்து செல்வதோ, மோட்டார் சைக்கிளில் செல்வதோ சவுகரியம் அல்ல.
    மதுர நாதீஸ்வரர் கோவில் உள்ள சுயம்பு மாணிக்க விநாயகரை வணங்கினால் நவக்கிரக தோஷம் நீக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
    திருவண்ணாமலை அருகே உள்ள வடமாத்தூர் கிராமத்தில் மரகதாம்பிகை உடனுறை மதுர நாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வடமாத்தூரில் வாழ்ந்த நிலக்கிழார் ஒருவரின் கனவில் தோன்றிய விநாயகப்பெருமான், தான் அங்குள்ள பூமிக்கடியில் இருப்பதாக கூறினார்.

    இந்த நிலையில் அந்த நிலக்கிழார் தனது நிலத்தை உழுதபோது, ஒரே அளவில் 1½ அடி உயரத்தில் 2 கற்கள் கிடைத்தன. அவை இரண்டையும் இணைத்துப் பார்த்தபோது அது விநாயகர் உருவில் காட்சிதந்தது. பின்னர் அந்த விநாயகரை சிறு கோவிலில் நிர்மாணித்து ‘சுயம்பு மாணிக்க விநாயகர்’ என்று பெயரிட்டு வழிபட்டு வந்தார்.

    இந்த விநாயகரால் ஊரில் பல நல்ல விஷயங்கள் நடைபெற்றதால், ஆலயத்தின் புகழ் பரவத் தொடங்கியது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆலயத்தை விரிவுபடுத்த எண்ணம் கொண்டனர். அதன்படி விநாயகரை அவரது குடும்பத்தோடு, அதாவது சிவபெருமான், பார்வதி சன்னிதிகளோடு ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். அதன் படியே கோவில் பெரிய அளவில் கட்டப்பட்டது. இங்குள்ள மூலவர் சிவபெருமான், ‘மதுரநாதீஸ்வரர்’ என்ற பெயரில் அருள்புரிகிறார். அம்மாளின் திருநாமம் மரகதாம்பிகை என்பதாகும்.

    இந்தக் கோவில் புனரமைக்கப்பட்டு 7-2-1979 அன்று ‘குடமுழுக்கு விழா’ (கும்பாபிஷேகம்) நடந்தது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஊரில் வறட்சி ஏற்பட்டது. இதனால் மக்கள் பிழைப்பு தேடி நகரங்களுக்குச் செல்லத் தொடங்கினர். கிராமத்தின் மக்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியதால், ஆலய விழா நடத்துவது முடங்கியது. 10 நாள் உற்சவம் என்பது ஒரு நாள் விழாவாக மாறியது. பிறகு அதுவும் இல்லாமல் போனது.

    இந்த நிலையில் ஊர்மக்கள் ஒத்துழைப்போடு கோவிலை மேலும் விரிவாக்கம் செய்து கடந்த 9-2-2014 அன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. முப்பது ஆண்டுகளாக நின்று போயிருந்த 10 நாள் பிரம்மோற்சவம், கடந்த மே மாதம் சிறப்பாக நடந்தேறியது. இந்த ஆலயத்தின் முகப்பின் மேற்புறத்தில் விநாயகர், சிவன், பார்வதி மற்றும் முருகன் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழைந்ததும் குளிர்ச்சியான ஒரு பெரிய வழிபாட்டுக் கூடம், பலி பீடம், 33 அடி உயர பித்தளை தகடுகள் வேயப்பட்ட கொடிமரம், நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளன.

    பக்தியோடு உள்ளே நுழைந்தால் இடதுபுறம் சுயம்பு மாணிக்க விநாயகர் சன்னிதி உள்ளது. அடுத்து நடுநாயகமாக லிங்கத் திருமேனியாக விளங்கும் மதுரநாதீஸ்வரர் சன்னிதியும், வலப்புறம் வள்ளி-தெய்வானையோடு பாலசுப்பிரமணியர் சன்னிதியும் இருக்கின்றன. இந்த சன்னிதி விமானங்கள் மூன்றும் சோழர் கால பாணியில் கட்டப்பட்டு, சுதை சிற்பங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.

    தலவிருட்சம் :

    வெளிப்பிரகாரத்தின் தெற்கு புறத்தில் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி வீற்றிருந்து அருள்கிறார். அடுத்து லிங்கோத்பவர், பின்புறம் மதிற்சுவரில் மகாலட்சுமி உள்ளனர். அதற்கு அடுத்ததாக, மரகதாம்பிகையின் சன்னிதி உள்ளது. தொடர்ந்து பிரம்மா, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை, நவக்கிரக சன்னிதி, யாகசாலை, இறுதியாக சாந்த சொரூபியாக நின்ற கோலத்தில் நாய் வாகனத்துடன் காட்சிதரும் கால பைரவர் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன.

    இக்கோவிலின் தலவிருட்சமான வில்லா மரம் பிரமாண்டமாக பரந்து நிற்கிறது. ஆலயத்தின் பிரதான தெய்வமாக சுயம்பு மாணிக்க விநாயகர் விளங்கு கிறார். உளி படாமல் உருவான இந்த நாயகனை பலரும் வந்து வணங்கிச் செல்கின்றனர். இவரையும், கால பைரவரையும் ஒரு சேர வணங்கினால் நவக் கிரக தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருவண்ணாமலையில் இருந்து காஞ்சி (காஞ்சிபுரம் அல்ல) பெரியகுளம் என்ற ஊருக்கு சென்று, அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் வந்தால் வடமாத்தூர் உள்ளது. திருவண்ணாமலையில் இருந்து செங்கம் செல்லும் வழியில் கண்ணக்குருக்கை என்ற இடத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் வடமாத்தூர் அமைந்துள்ளது.
    இத்தலத்தில் ஈசனே, பைரவ வடிவம் என்பதால் தேய்பிறை அஷ்டமி நாளில் வீரட்டேஸ்வரரை வழிபட்டால் தீவினைகள் அகன்று, செல்வங்கள் தேடி வரும்.
    தன் பூவுலக வாழ்வை முடித்துக் கொண்டு திருக்கயிலாயம் செல்வதற்காக ஈசனை உருகி வேண்டிக்கொண்டிருந்தார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதையடுத்து ‘அயிராவணம்’ என்னும் யானையை ஈசன் அனுப்பினார். அதில் ஏறிய சுந்தரர் கயிலாயம் புறப்பட்டார்.

    அவரோடு, அவரது நண்பரான சேரமான் பெருமானும், குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஓதி, குதிரையில் ஏறி கயிலாயம் சென்றார். இருவரும் வானில் சென்றபோது, கீழே திருக்கோவிலூர் என்ற சிவதலத்தில் வீற்றிருக்கும் தல விநாயகரை, அவ்வையார் வழிபட்டுக் கொண்டிருந்தார்.

    அவரிடம் சுந்தரரும், சேரமானும், ‘அவ்வையே! நாங்கள் கயிலாயம் செல்கிறோம். நீயும் வருகிறாயா?’ என்று கேட்டனர்.

    கயிலாயம் செல்லும் எண்ணம் யாருக்குத்தான் இருக்காது! ‘நானும் வருகிறேன்’ என்று கூறிய அவ்வை, விநாயகர் வழிபாட்டை அவசரம் அவசரமாக முடிக்க எண்ணினார்.

    அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. அது விநாயகரின் குரல். ‘அவ்வையே! நீ எனது பூஜையை வழக்கம்போல் பொறுமையாகவே செய். வழிபாடு முடிந்ததும், சுந்தரர், சேரமான் இருவருக்கும் முன்பாக உன்னை கயிலாயத்தில் சேர்க்கிறேன்’ என்றார்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த அவ்வை, ‘சீதக்களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசை பாட...’ எனத் தொடங்கும் ‘விநாயகர் அகவல்’ பாடி விநாயகரை வழிபட்டார்.

    அவ்வையார் ‘விநாயகர் அகவல்’ பாடி முடித்ததும், அவர் முன் விநாயகர் தோன்றி, தனது துதிக்கையால் அவ்வையை ஒரே தூக்கில் திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்ப்பித்து விட்டார். விநாயகர் துதிக்கையால் அவ்வையாரை திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்த்த பிறகுதான், சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமான் பெருமானும் திருக்கயிலாயம் வந்தடைந்தனர் என்பது வரலாறு.

    அவ்வையாரை இத்தல விநாயகர், விஸ்வரூபம் எடுத்து தனது துதிக்கையால் திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்த்ததால், ‘பெரிய யானை கணபதி’ என்று அழைக்கப்படுகிறார். இவ்விநாயகர் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இத்தல ஈசன் வீரட்டேஸ்வரர்.

    தல பெருமை :

    கொன்றையும், வில்வமும் தல மரங்களாக உள்ளன. மெய்ப்பொருள் நாயனார் ஆட்சி செய்த அருட்பதி இதுவாகும். ராஜராஜ சோழன் பிறந்த ஊர் இது. ராஜராஜ சோழனின் சகோதரி, இந்த ஆலயத்திற்கு விளக்குகள் ஏற்றிட நிதி வழங்கினார் என கல்வெட்டு சான்று பகிர்கிறது. இத்தல தீர்த்தம் தென்பெண்ணை ஆகும். கபிலர் வழிபட்ட தலம் இது. தென்பெண்ணை ஆற்றின் நடுவில் கபிலர் குகைக்கோவில் அமைந்துள்ளது.

    இத்தல ஈசனும், அம்பாளும் மேற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார்கள். இங்குள்ள அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கையை ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலங்களில் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண மற்றும் சுப காரியத் தடங்கல்கள் அகலும். வறுமை அகன்று வசந்தங்கள் ஓடிவரும். பிணி நீங்கி வளங்கள் நம்மை வந்து சேரும். தீவினைகள் அண்டாது. ‘துர்க்கா சப்த ஸ்லோகி’ என்ற ஸ்தோத்திரத்தை ராகு கால வேளைகளில் படித்து வழிபட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரின் பாடல் பெற்ற தலம். சப்த கன்னிகளும், 64 வித பைரவர்களும் தோன்றிய தலம். பைரவ உபாசகர்களுக்கு முதன்மையான கோவில் இது என பல்வேறு சிறப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த ஆலயம். இத்தலத்தில் ஈசனே, பைரவ வடிவம் என்பதால் தேய்பிறை அஷ்டமி நாளில் வீரட்டேஸ்வரரை வழிபட்டால் தீவினைகள் அகன்று, செல்வங்கள் தேடி வரும்.

    வழிபட்ட தெய்வங்கள் :

    இந்த ஆலயத்தில் விநாயகர், முருகப்பெருமான், ராமர், பரசுராமர், கிருஷ்ணர், இந்திரன், காளி, எமன், காமதேனு, சூரியன், குரு, உரோமச முனிவர், கண்வ மகரிஷி, மிருகண்டு முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், வாணாசுரன், ஆதிசேஷன், மன்மதன், குபேரன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இத்தலம் பஞ்சபூத லிங்கங்கள், விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், சந்திரசேகரர், லிங்கோத்பவர் ஆகிய மூர்த்தங்கள் அருள் நிறைந்தவையாகும்.

    விநாயகர் சதுர்த்தி அன்று, இங்குள்ள பெரிய யானை கணபதி சன்னிதியில், அவ்வையார் பாடிய ‘விநாயகர் அகவல்’ பாடி வழிபட்டால் வேண்டியவை அனைத்தும் நடைபெறும்.

    திருவண்ணாமலையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோவிலூர் உள்ளது. பண்ருட்டி, கடலூர், விழுப்புரத்தில் இருந்தும் ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.
    செவிக் குறைபாடு நீங்க விரும்புபவர்கள் வழிபட்டு பிரார்த்திக்க வேண்டிய ஆலயம் ‘அன்பில் ஆலந்துறை’ என்று சொல்லப்படுகிறது.
    ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

    செல்வத்துள் எல்லாம் தலை’

    எத்தனை செல்வங்கள் இருந்த போதிலும் செவிப்புலன் நன்றாக செயல்படவில்லை என்றால், எந்த பயனுமில்லை என்பதுதான் இதன் உட்பொருள். மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களில் ஒன்றாக காது கேட்கும் திறனும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் குறைபாடு இருப்பின் மருத்துவ உலகில் இ.என்.டி துறை அதனைச் சரிசெய்கிறது.

    மருத்துவம் மட்டுமல்லாது, இறைவன் மீதும் நம்பிக்கை வைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறு செவிக் குறைபாடு நீங்க விரும்புபவர்கள் வழிபட்டு பிரார்த்திக்க வேண்டிய ஆலயம் ‘அன்பில் ஆலந்துறை’ என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயம் செவிக்குறைபாடு நீக்கும் திருத்தலமாக விளங்குகிறது.

    செவிசாய்த்த விநாயகர் :

    அப்பரும், திருஞானசம்பந்தரும் தேவாரப் பாடல்கள் பொழிந்த ஆலயம் இது. இந்தக் கோவிலின் தென் மேற்கு மூலையில் உள்ள விநாயகப் பெருமான், சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார். ஒரு காலை சம்மணம் போட்டு, மற்றொரு காலை குத்துக்கால் வைத்துக் கொண்டு அமர்ந்து இருக்கிறார். முறம் போன்ற தனது காதுகளில் ஒன்றை, சற்றே சாய்த்து கூர்மையாக எதையோ கேட்பதைப் போன்ற திருக்கோலத்தில் இவர் அருள்பாலிக்கிறார். எனவே இவரை ‘செவி சாய்த்த விநாயகர்’ என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

    இதற்கு ஒரு கர்ண பரம்பரைக் கதையும் உலவுகிறது. அதைப் பார்க்கலாம்.

    சம்பந்தர் பாடல் :

    காவிரி நதி, அதை அடுத்து கொள்ளிடம் நதி ஓடுகிறது. கொள்ளிடத்தின் வடபுறத் துக் கரையில்தான் இந்தச் சிவாலயம் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், சிவாலயங்கள் தோறும் தரிசனம் செய்து, சிவபெருமானைப் பாடித் துதித்தபடி வந்து கொண்டிருந்தார். அப்போது இந்தத் தலத்திற்கும் வர எண்ணினார். ஆனால் அப்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அவர் அக்கரையில் இருந்தே சிவபெருமானை மனதால் எண்ணி பதிகங்களைப் பாடினார்.

    ‘கணைநீடெரி மாலர வம்வரை வில்லா

    இணையாஎயில் மூன்றும் உரித்த இறைவர்

    பிணையமயி லுங்குயில் சேர்மட அன்னம்

    அணையும்பொழில் அன்பில் ஆலந்துறை யாரே’

    என்று இனிய குரலில் காற்றில் மிதந்து வந்தது திருஞானசம்பந்தரின் தேவாரத் திருப்பாடல்கள். அந்த பாடல்களின் கீதங்களை மறுகரையில் இருந்தபடி இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் விநாயகப்பெருமான், தன் காதினை கூர்மையாகத் தீட்டிக் கேட்டு இன்புற்றதாகவும், எனவேதான் அவருக்கு செவி சாய்த்த விநாயகர் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விநாயகப்பெருமானை வணங்கி வழிபட்டால் காது தொடர்பான குறைபாடுகள் நீங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

    காது புலன் குறை தீர, விநாயகப் பெருமானுக்கு எளிமையான முறையில் அருகம்புல் மாலை சாத்தி, சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் விநாயகப்பெருமானுக்கு பிடித்த ஜெய்மினி சாமவேதம் பிறந்த தலம் இதுதான் என்று கூறப்படுகிறது. விநாயகப்பெருமானோடு, ஆலயத்தில் உள்ள சுவாமி - அம்பாளுக்கும் சேர்த்து வழிபாடு செய்தால் மிகுந்த நன்மையுண்டு என்றும் சொல்கிறார்கள்.

    அன்பில் ஆலந்துறை :

    தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில், காவிரி வடகரையின் 57-வது தலமாக இது விளங்குகிறது. அன்பில் ஆலந்துறை என்பது ஆலயத்தின் பெயர். துறை என்றால் ஆற்றின் கரையோரம் அமைந்த ஊர் என்றும், ஆலந்துறை என்றால் ஆலமரங்கள் நிறைந்த வனமாக விளங்குகிற ஊர் என்பதும் பொருளாகும். ஆலயத்தின் தல விருட்சமும் ஆல மரம்தான். இது கோவிலுக்கு வெளியே இருக்கிறது.

    சுவாமி - அம்பாள் :

    ஐந்து நிலை ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால், அழகிய தோரண வாசல் உள்ளது. அதையும் கடந்து உள்ளே சென்றால் பழமையான இந்த ஆலயத்தை கண்டு தரிசிக்கலாம். இத்தல இறைவனின் பெயர் சத்தியவாகீஸ்வரர் என்பதாகும். சுயம்பு மூர்த்தியான இந்த சிவபெருமானை, வாகீச முனிவர் என்பவர் வழிபட்டுள்ளார். இதனால் இறைவனுக்கு வாகீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பிரகாரத்தில் விநாயகரை அடுத்து சப்தகன்னியர், லிங்கோத்பவர், பிச்சாடனர், விசுவநாதர், விசாலாட்சி அம்மன், வள்ளி - தெய்வானை சமேதராக மயில் மீது அமர்ந்து காட்சி தரும் ஆறுமுகப்பெருமான் ஆகியோர் சன்னிதிகள் வரிசையாக உள்ளன.

    கிழக்கு நோக்கி உள்ள சிவபெருமானின் சன்னதியை ஒட்டி, இடதுபுறம் சவுந்தரநாயகி அம்பாள் சன்திதியும் இருக்கின்றது. குழந்தைப் பேறுக்காக இந்த அம்பாளை பிரார்த்தனை செய்வதால் பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். இத்தலத்து இறைவனை அம்பிகையும், பிரம்மனும், சூரியனும் பூஜை செய்துள்ளனர். வடகிழக்கு மூலையில் நவக்கிரக சன்னிதி உள்ளது. சுவாமி கோவிலில் பிரம்மா பூஜை செய்யும் சிற்பம், அஷ்ட நாகங்கள் வழிபடும் புடைப்புச் சிற்பம் போன்றவை எழிலுற விளங்குகின்றன.

    இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள இந்த ஆலயம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவிலின் துணைக்கோவிலாகவும் விளங்குகிறது. நீர் வளமும், நிலவளமும் மிக்க, எழில் சூழ்ந்த ஊரில் அமைந்திருக்கும் இந்தத் திருக்கோவில், காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் இருக்கும் அன்பில் என்ற ஊரில் இந்த ஆலயம் உள்ளது. லால்குடியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் இருக்கிறது. திருச்சியில் இருந்து பஸ்வசதி உள்ளது.
    ஒரே இடத்தில் 108 விநாயகரும் அமர்ந்திருக்கும் அற்புத கோயில்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளன. அவற்றை பார்க்கலாம்.
    ஆனந்தத்தை அள்ளி வழங்கும் ஆனை முகனை சரணடைந்து குட்டி கொண்டு, தோப்பு கரண மிட்டால், அளவற்ற செல்வங்களையும், வரங்களையும் வழங்கிடுவான். ஒற்றை விநாயகனாய் அருள்பாலித்தாலே இத்தனை அளிவில்லா ஆனந்தம் வழங்கும் விநாயகப்பெருமான் 108 விநாயகராய் அருள்புரிந்தால், எத்தனை எத்தனை வரங்களை அருள்வான் என்பதற்கு அளவே இல்லை. ஒற்றை, இரட்டை விநாயகரை இதுவரை வணங்கியிருப்போம். ஒரே இடத்தில் 108 விநாயகரும் அமர்ந்திருக்கும் அற்புத கோயில்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளன. அத்தகைய 108 விநாயகர் அருள் புரியும் சில ஆலயங்களில் தரிசிப்போம்.

    கோவை ஸ்ரீ செல்வ விநாயகர்:-

    கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் சாலையில், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் அருகிலேயே ஸ்ரீசக்ர வடிவத்தில் 108 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 108 விநாயகரின் திருநாமங்களின் படி அதன் பெயருக்கு ஏற்ற உருவ வேறுபாடுகளுடன் இருக்கின்றன. 108 விநாயகரும் 5 அடுக்குகளாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் சுலபமாக 108 விநாயகரையும் சுற்றி விடலாம். விநாயகர் சதுர்தியன்று 108 விநாயகரும் மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனை செய்யப்படும் அழகே அலாதியானது.

    திண்டுக்கல் 108 விநாயகர் திருக்கோயில்:-

    பல சிறப்புகளை பெற்ற திண்டுக்கல் நகரின் மத்தியில் கோபால சமுத்திர கரையில் 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அருள்பாலித்து வருபவர் ஆதி விநாயகர். 2002-ம் ஆண்டு இவ்விநாயகரிடம் திருவுளசீட்டு மூலம் ஆசிபெற்று இங்கு 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோவில் என்று பெயர் பெற்ற இக்கோவில் 108 விநாயகரும் மூல விநாயகரின் இருபுறமும் வரிசைக்கிரமமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இங்குள்ள 108 விநாயகருக்கும் நமது கரங்களின் மூலம் அபிஷேகம் செய்து நமக்கு வேண்டி விபரங்களை பெறலாம். அதிசயத்தின் அடிப்படையில் பக்தர்கள் பலர் பல அபிஷேகங்கள் தங்கள் கைகளால் செய்து நல்ல பலன்களை பெற்று உள்ளனர்.

    காரைக்குடி வயிரன்பட்டி 108 விநாயகர்கள்:-

    காரைக்குடியிலிருந்து வயிரவன்பட்டி செல்லும் வழியிலுள்ள சிவன் கோவிலில் 108 விநாயகர்கள் எழுந்தருளியுள்ளனர். அதுபோல் சிதம்பரம் நர்த்தன விநாயகர் கோவிலும் 108 விநாயகர் ஸ்தலங்களில் ஒன்றாக உள்ளது.
    700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், புகழ்பெற்றதுமான இந்த ஆலயம் 1305-ம் ஆண்டு பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது.
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ளது தர்மசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் திருக்கோவில். 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், புகழ்பெற்றதுமான இந்த ஆலயம் 1305-ம் ஆண்டு பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. இந்த சிவாலயத்தில் 35 கல்வெட்டுகள் உள்ளன. சோழ மன்னராலும், பாண்டிய மன்னராலும் சமரசம் செய்து கொண்டு கட்டப்பட்டு இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    ஆலயத்தின் தலவிருட்சமாக காசி வில்வம் விளங்குகிறது. இங்கு குரு தட்சிணாமூர்த்தி தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவர் ரிஷபத்தோடும், 4 ரிஷிகளுக்கு பதிலாக 2 ரிஷிகள் மற்றும் முயலகனோடு வீற்றிருப்பது வித்தியாசமான தோற்றமாக உள்ளது.

    சைவமும், வைணவமும் :

    சிவாலயமான இங்கு மகாவிஷ்ணுவுக்கும், ஆஞ்சநேயருக்கும், இவர்களுக்கு எதிர்புறம் மகாலட்சுமிக்கும் தனிச் சன்னிதிகள் இருப்பது சிறப்புக்குரியதாகும். சைவமும், வைணவமும் இணைந்த இந்த ஆலயத்திற்கு வந்து சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். வழக்கமாக சனிக்கிழமை வரும் பிரதோஷமே, மகா பிரதோஷம் என்ற பெயரில் விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆலயத்தில் புதன்கிழமையில் வரும் பிரதோஷம்தான் சிறப்புக் குரியதாக உள்ளது. புதனுக்கும், சனீஸ்வரனுக்கும் அதிதேவதையாக மகாவிஷ்ணு இருப்பதால், இத்தல சிவனையும், விஷ்ணுவையும் வணங்கினால் சனி, புதன் கிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

    இந்தக் கோவிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு, நெற்றியில் திருநாமம் உள்ளது. இதனால் இத்தல சிவபெருமானுக்கு நாம புரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இங்கு காசி பைரவர், காலபைரவர், சூரியன், குழந்தை வடிவாக பால சனீஸ்வரர் ஆகியோர் தனிச் சன்னிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி தினத்தன்று காலபைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகிய மூவரையும் வழிபட்டால் அனைத்து விதமான பலன் களையும் பெறலாம்.

    தத்து கொடுக்கப்படும் குழந்தைகள் :

    ஜாதகரீதியான கிரக தோஷங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் உபாதைகள் அகல்வதற்கு, இந்த ஆலயத்தில் குழந்தைகளை தத்து கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு சில விதிமுறைகளும், வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. அவற்றைப் பார்க்கலாம்.

    ஜாதக ரீதியாக கிரகதோஷம் உள்ள குழந்தைகளை இந்த ஆலயத்தில் தத்துக் கொடுக்கும்போது, குழந்தைகளின் தாய்-தந்தை அவசியம் வர வேண்டும். குழந்தையின் தாய்மாமா அல்லது குழந்தையின் தாய் வழி உறவினர் யாராவது, பெற்றோரிடம் இருந்து கோவில் சார்பாக குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    குழந்தைக்கு ஏற்கனவே உள்ள பெயரை மாற்றாமல், புதியதாக ஆலயத்தில் வைக்கின்ற பெயரை வைத்து கூப்பிட வேண்டும். உதாரணத்திற்கு ஏற்கனவே கார்த்திகேயன் என்று பெயர் வைத்திருக்கலாம். தத்துக் கொடுத்தப் பின் கோவிலில் ஈஸ்வரன் என்று பெயர் வைக்கிறார்கள் என்றால், ஈஸ்வரன் (எ) கார்த்திகேயன் என்று பெயர் வைத்துக் கொண்டு, வாயால் கூப்பிடும்போது ஈஸ்வரன் என்றே அழைக்க வேண்டும். ஏதாவது கோவில்களுக்குச் சென்று அர்ச்சனை செய்தால் கூட ஈஸ்வரன் (எ) கார்த்திகேயன் என்று முழு பெயரைச் சொல்லியே அர்ச்சனை செய்ய வேண்டியது கட்டாயம்.

    பிற தெய்வங்களுக்கோ, குலதெய்வத்திற்கோ குழந்தைகளின் பெயரில் வேண்டுதல் இருந்தால் தத்துக் கொடுப்பதற்கு முன்பாகவே அதைச் செய்வது நல்லது. ஏனெனில் தத்துக் கொடுத்தபின்னர் ஒரு மாதத்திற்குள் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனுக்கே முடி காணிக்கை போன்ற நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும். அதன்பிறகே பிற தெய்வங்கள், குலதெய்வத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்த முடியும்.

    திருமண பந்தம் :


    பிள்ளை வளர்ந்து திருமணம் ஆகும் சமயத்தில், முன்னதாகவே ஆலயத்திற்கு தகவல் தெரிவித்து குழந்தையை முறையாக பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போது குழந்தையின் நினைவாக ஆலயத்திற்கு அவர்கள் பெயரில் ஏதாவது பொருளை உபயமாக வழங்குவது நன்மை தரும். திருமணத்தை தவிர வேறு எந்த காரணத்திற்காகவோ, காரண காரியங்கள் இல்லாமலோ குழந்தையைப் பெற்றுச் செல்லக் கூடாது. தத்துக் கொடுத்தவர் களின் திருமண காலங்களில், சுவாமிக்கு பட்டு வஸ்திரம், மாலை சாத்தி திருமண தம்பதிகள் வழிபடுவதால் அவர்களுக்குள் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை. இதை மெய்பிக்கும் வகையில் இன்றும் முகூர்த்த நாட்களில் 15 முதல் 20 திருமணங்கள், திருமண நிச்சயதார்த்தங்கள் இந்த ஆலயத்தில் நடைபெறுவதைக் காணலாம்.

    இந்த தத்துக் கொடுக்கும் பிரார்த்தனையால், ஜாதகத்தில் தோஷம் உள்ள குழந்தைகள் பலன் பெறுவதோடு, அவர்களை கோவில் சார்பில் தத்து பெறும் உறவினர்களும் பலன் பெறுவார்கள்.

    சூரியனின் வழிபாடு :

    இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 25-ந் தேதி முதல் தை மாதம் 10-ந் தேதி வரை அதிகாலை 6.30 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் சூரியபகவான் தன்னுடைய ஒளிக்கதிர்களால் சிவபெருமானை சிவபூஜை செய்யும் அற்புதக் காட்சியை நேரில் தரிசிக்கலாம். இந்த அற்புத நிகழ்வை மூன்று நிமிடம் மட்டுமே காண முடியும்.

    சிறப்பு மிகுந்த இந்த ஆலயத்தில் ராஜகோபுரம் மற்றும் திருக்கோவில் திருப்பணிகள் முழுமையாக நடைபெற்று கடந்த 28-1-2007 அன்று வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடந்தது.
    நாகதோஷ நிவர்த்தி பெற அருள்மிகு கருக்கினில் அமர்ந்தவள் திருக்கோவிலில் பிரார்த்தனை செய்கிறார்கள்.
    மூலவர் : கருக்கினில் அமர்ந்தவள்
    தல விருட்சம் : மகிழமரம்.
    பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
    ஊர் : காஞ்சிபுரம்
    திருவிழா: பவுர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
    தல சிறப்பு: பல்லவர் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது.
    திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    பொது தகவல்:

    கோயில் நுழைவு வாயிலிலுள்ள இலுப்பை மரத்தின் அடியில் நவகன்னியர் சந்நிதியும், அதன்முன் தெப்பக்குளமும் உள்ளன. ராஜகோபுரத்தைக் கடந்ததும் காவல்தெய்வமான அண்ணமார் சந்நிதியும், பாம்புப் புற்றும் உள்ளது. மூலவருக்கு முன்பகுதியில் புத்தருக்கு இரு சிலைகளும், அதற்கு நடுவில் வேதாளம் சிலையும் உள்ளது. அம்பிகைக்கு வேதம் உபதேசித்த சிவன் வேதபுரீஸ்வரராக தனி சந்நிதியில் இருக்கிறார். விநாயகர், முருகன், துர்க்கை சந்நிதிகளும் உள்ளன.

    பிரார்த்தனை :

    நாகதோஷ நிவர்த்தி பெற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

    நேர்த்திக்கடன் :

    இங்குள்ள புற்றுக்கு பாலூற்றி வழிபடுகின்றனர், அம்மனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

    தலபெருமை :

    பெயர்க்காரணம்: பனைமரத்திற்கு கருக்கு என்றொரு பெயருண்டு. நடு இரவு நேரத்தையும் கருக்கு என்றே குறிப்பிடுவர். ஒரு இரவு வேளையில், இங்குள்ள பனைமரத்தின் கீழ் அமர்ந்து மகிஷனை அம்பிகை சம்ஹாரம் செய்தாள். அதனால், கருக்கினில் அமர்ந்தவள் என்ற பெயர் அவளுக்கு ஏற்பட்டது.

    வடக்கு நோக்கி அமர்ந்த இவள், வலதுபாதத்தை அசுரனின் தலைமீதும், இடதுபாதத்தை அவன் கால்மீதும் வைத்திருக்கிறாள். தலையை இடதுபுறம் சாய்த்த இவளது கையில் திரிசூலம் உள்ளது. வெள்ளியன்று இவளை தரிசித்தால் எண்ணிய எண்ணம் ஈடேறும். தடைபட்ட திருமணம் நடந்தேறும். நோய்நொடி விலகி ஆரோக்கியம் சீராகும். வடக்கு நோக்கி அமர்ந்த சக்திகள், காவல் தெய்வங்களாகக் கருதப்படும். அவ்வகையில், மாங்கல்யம், உத்தியோகம், தொழில் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு அளிப்பவளாக விளங்குகிறாள்.

    தல வரலாறு :

    ரம்பன் என்னும் அசுரன் ஒரு எருமை மாட்டின் மூலமாக பெற்ற பிள்ளை மகிஷன். எருமை முகம் கொண்டவன் என்பதால் மகிஷன் என பெயர் பெற்றான். மகாபலசாலியான இவன், தேவர்களையும், முனிவர்களையும் யாகம் செய்ய விடாமல் துன்புறுத்தி வந்தான். ரம்பனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர்.

    உடனே கலைமகள், திருமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் சக்திகளும் ஒன்றிணைந்து ஒரே வடிவில் நின்றனர். துர்க்கை என்ற பெயர் கொண்டு திரிசூலம் ஏந்தி துர்க்கையாக சிங்க வாகனத்தின் மீதேறிச் சென்று, அசுரனைச் சூலத்தால் அழித்தாள். மகிஷனைக் கொன்றதால் மகிஷாசுரமர்த்தினி என்றும் பெயர் பெற்றாள். அந்த மகிஷாசுரமர்த்தினியே, காஞ்சிபுரம் தெற்கு பட்டடை கிராமத்தில் கருக்கினில் அமர்ந்தவள் என்ற திருநாமத்தோடு கோயில் கொண்டிருக்கிறாள்.

    சிறப்பம்சம் :

    அதிசயத்தின் அடிப்படையில்: பல்லவர் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது.

    முகவரி :

    அருள்மிகு கருக்கினில் அமர்ந்தவள் திருக்கோயில் காஞ்சிபுரம்.

    போன் :

    +91 92454 56412
    திக்கிப் பேசுபவர்கள் தெளிவாகப் பேசவும், பேசும் சக்தி இழந்தவர்கள் அந்த சக்தியை புதிதாகப் பெறவும் அருள்கிறது இக்கோயில்.
    அய்யம்பாளையத்தில் உத்தமராய பெருமாள் கோயில் உருவான தல புராணத்தை இப்போது பார்க்கலாம்.

    திக்கிப் பேசுபவர்கள் தெளிவாகப் பேசவும், பேசும் சக்தி இழந்தவர்கள் அந்த சக்தியை புதிதாகப் பெறவும் அருள்கிறது இக்கோயில். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவில் பெரிய அய்யம்பாளையத்தில் அமைந்துள்ளது. வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் கண்ணமங்கலத்திலிருந்து 4 கி.மீ. தூரம்.

    தென்னகத்தில் அந்நிய கலாசார தாக்குதல்கள் மேலும் விரிவடையாமல் விஜயநகர நாயக்க மன்னர்கள் தடுத்ததோடு, அந்தத் தாக்குதல்களால் சிதறடிக்கப்பட்ட கோயில்களை புதுப்பிக்கவும் செய்தார்கள். கூடவே, புதிய கலையம்சம் கொண்ட கோயில்களையும் நிர்மாணித்தார்கள். அந்த வரிசையில் பெரிய அய்யம்பாளையத்தில் மலை மீது உருவான இந்தக் கோயில் ஒரு கற்றளி கோயிலாகும்.

    சதுர வடிவான கருவறையில் ஏகாந்தமாக, தேவியர்கள் இன்றி சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற தத்துவத்தை விளக்கும் முகமாக, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் உத்தமராய பெருமாள் நான்கு கரங்களுடன் திகழ்கிறார். மேலிரு கரங்கள் சங்கு, சக்கரத்தைத் தாங்க, கீழ் இரு கரங்கள் திருப்பதி-திருமலை பெருமாளைப் போல அபய, கடி ஹஸ்தங்களாகக் கொண்டு அருள்பாலிக்கிறார்.

    கருவறையை சுற்றியுள்ள புறச்சுவர்களில் சிற்ப வேலைப்பாடுகள் ஏதுமில்லை. அறைத் தூண்களும், மேல் கோஷ்டங்களும் மகரத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மேல்பகுதியில் விஜயநகர கலைப்பாணியில் புடைப்புச் சிற்பங்களாக வீரன் அஞ்சலி செலுத்தும் நிலையிலும், அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து செல்லும் நிலையிலும் காணப்படுகிறார்கள்.

    அதிஷ்டானம், சுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்ற ஆறு பெரும் பகுதிகளாக கோயில் விமானம் அமைந்துள்ளது. சுவரின் மேலுள்ள பிரஸ்தரம் என்று அழைக்கப்படும் கூரைப் பகுதி, கருவறையை மூடும் அமைப்பாக உள்ளது. இவற்றின் நான்கு மூலைகளிலும் கருட பகவான் காட்சியளிக்கிறார். கிரீவப் பகுதியின் முதல் தளத்தின் நான்கு மூலைகளிலும் கர்ண கூடங்கள் அமைந்துள்ளன.

    இரண்டாவது தளத்தை தெய்வ, மானிட உருவங்கள் தாங்கி நிற்கின்றன. குழல் ஊதும் அனுமன், நரசிம்மர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி ஆகிய தெய்வ உருவங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன. இங்குள்ள அர்த்த மண்டபம் சதுர வடிவிலும், தூண்கள் சதுரப் பட்டையாகவும் உள்ளன. தூண்களில் விஜயநகர காலத்திய பெண், திருமால், அனுமன், சங்கு, சக்கரம், அன்னப் பறவை, பெரியாழ்வார், ராமானுஜர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன.

    கருவறைக்கு எதிரில் கருட பகவான் மூலவரை நோக்கி கூப்பிய கரங்களுடன் காட்சியளிக்கிறார். கருவறை வாயில் காவலர்களாக  துவார பாலகர்கள் விஜயநகர கலைப்பாணியில் அமைந்துள்ளனர். கோயில் அமைந்துள்ள குன்றின் ஒரு பக்கத்தில் அமர்ந்து அமைதியாக தியானம் செய்ய குகையும், அனுமன் சந்நதியும் அமைந்துள்ளன. இந்தக் கோயிலில் தின பூஜைகளும், சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன.

    புரட்டாசி மாதத்தில் நவராத்திரி, கார்த்திகையில் விஷ்ணு கார்த்திகை, தை மாதத்தில்  காணும் பொங்கலுக்கு மறுநாள் மகரத் திருவிழா என்று விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இதுதவிர ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நடைபெறும் விசேஷ பூஜையில் பெண்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயம் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும் என்பது திடமான நம்பிக்கை.

    திக்கிப் பேசும் குழந்தைகள், பேச்சிழந்த குழந்தைகள், ஞாபக சக்தி குறைந்த குழந்தைகளுக்கு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஏழு வாரங்கள் அவர்கள் பூஜையில் கலந்து கொண்டு பிரசாத தேனை அருந்தி வந்தால் குறைகள் படிப்படியாக குணமாகிறது என்கிறார்கள். கோயிலைச் சூழ்ந்துள்ள இயற்கை எழில், அதற்குக் கட்டியம் கூறுகிறது.

    இந்த கோவில்கள் பற்றிய தகவல்கள் அறிய இந்த எண்ணில் +91 4181-248 224, 248 424, 93455 24079 தொடர்பு கொள்ளலாம்.
    சிவகுருநாத சுவாமி கோவில் அப்பரும், திருஞானசம்பந்தரும் தேவாரப் பாடல்கள் இசைத்த காவிரி தென்கரைக் கோவில்களில், இது 67-வது திருத்தலமாகப் பிரகாசிக்கிறது.
    கோவில் நகரம் எனப்படும் கும்பகோணம் நகரின் ஒரு பகுதியாக விளங்குகிறது சாக்கோட்டை என்ற ஊர். முற்காலத்தில் சாக்கியர் கோட்டை என்று அழைக்கப்பட்டு, காலச்சூழலால் சைவக்கோட்டையாக மாறிய இந்த ஊர், தற்போது சாக்கோட்டை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ஊரில் இருந்து கிழக்கு நோக்கி ஒரு கல் தொலைவு சென்றால் - சோழநாட்டுக்கே உரிய நீர் வளமும், நிலவளமும் நிறைந்த சிவபுரம் என்ற திருத்தலம் இருக்கிறது. இதற்கு குபேரபுரம், பூகைலாயம் என்றும் பெயர்கள் உள்ளன.

    இந்த பகுதியில் சிவகுருநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. அப்பரும், திருஞானசம்பந்தரும் தேவாரப் பாடல்கள் இசைத்த காவிரி தென்கரைக் கோவில்களில், இது 67-வது திருத்தலமாகப் பிரகாசிக்கிறது. திருஞானசம்பந்தர் இந்த ஆலயத்தை தரிசனம் செய்வதற்காக வந்தபோது, இந்த புண்ணிய பூமியின் கீழ் அடிக்கொன்றாக சிவலிங்கம் புதைந்து இருப்பதை அறிந்தார். ஆகவே இந்த திருத்தலத்தில் கால்பதிக்க அஞ்சி, தனது உடலை பூமியில் கிடத்தி, அங்கப்பிரதட்சணமாக திருத்தலத்தையும், கோவிலையும் வலம் வந்தார் என்று தல வரலாறு கூறுகிறது. எனவே இந்த ஆலயத்தில் அங்கப்பிரதட்சணம் செய்யும் வேண்டுதல் பழக்கம் சிறப்புக்குரியதாக இருக் கிறது.

    சந்திரபுஷ்கரணி என்ற அழகிய தீர்த்தக் குளத்தையும், ஐந்துநிலை ராஜகோபுரத்தையும், இரண்டு பிரகாரங்களையும் கொண்ட தூய்மையான சிவாலயம் இது. கிழக்கு நோக்கிய சன்னிதியில் பெரிய லிங்கத் திருமேனியுடன், மூலவர் சிவகுருநாத சுவாமி அருள் பாலிக்கிறார். தெற்கு நோக்கிய சன்னிதியில் அம்பாள் சிங்காரவல்லி என்னும் ஆர்யாம்பாள் அழகிய திருக்கோலத்தில் வீற்றிருந்து கருணை பொழிகிறார்.

    குபேரனின் சாபம் :

    ஒரு முறை நந்தியின் சாபத்துக்கு ஆளான குபேரன், பூமியில் பிறப்பெடுத்தான். அங்கு தனபதி என்ற பெயரோடு வந்த குபேரன், இத்தலம் வந்து இங்குள்ள இறைவனை வழிபட்டு வந்தான். தன்னுடைய சாபம் நீங்கவும், தனக்கு மேலும் செல்வம் கிடைக்கவும் வழிபாடு செய்த அவன், தன் வழிபாடு பூர்த்தியாக, வடு இல்லாத ஆண் குழந்தை ஒன்றை பலியிட்டு சிவ வழிபாடு செய்ய முற்பட்டான். அப்போது அந்தக் குழந்தை, இத்தல அம்பிகையை மனமாற உருகி வேண்டியது.

    அன்னையும் தாயுள்ளத்தோடு இறைவனிடம் குழந்தைக்காக வேண்டி, அந்தக் குழந்தையைக் காப்பாற்றியதாக தல வரலாறு எடுத்துரைக்கிறது. கயிலாயத்தில் நந்தியின் சாபம் பெற்ற குபேரன், இத்தல மகேசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றான்.

    பிரார்த்தனை :

    இத்தலத்தில் உள்ள சிங்காரவல்லி அம்பாளுக்கு, பதினோறு வெள்ளிக்கிழமை விரதமிருந்து விளக்கேற்றி, அர்ச்சனை செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய நோயை ‘பாலரிஷ்டம்’ என்கிறார்கள். அப்படி மழலைகளுக்கு நோய் நொடிகள் ஏற்பட்டாலோ, காரணமில்லாமல் உடல் மெலிந்து வளர்ச்சி குறைபாடு இருந்தாலோ, இந்த ஆலயத்திற்கு வந்து அம்மனை மனமுருக வழிபட்டால் நோய்கள் சரியாகும் என்பது ஐதீகம்.

    திருமாலின் சிவபூஜை :

    முன்னொரு யுகத்தில் இரண்யாட்சன் என்ற அரக்கன் இருந்தான். அவன் பூமியை கடலுக்குள் கொண்டு சென்று ஒளித்து வைத்தான். இதனால் பூமியில் உள்ள உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. இதையடுத்து உலகைக் காக்க, மகாவிஷ்ணு வெண் பன்றி (வராகம்) உருவம் எடுத்து பூமியை மீட்டு வந்தார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. அப்படி வராக அவதாரம் எடுத்த பெருமாள், இத்தல சிவநாதரை பல நாட்கள் வழிபட்டு, தன்னுடைய காக்கும் தொழிலை கண்ணும் கருத்துமாக செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அப்பர் பாடிய பாடல் வாயிலாக அறியலாம்.

    ‘பாரவன் காண் பாரதனில் பயிரானான் காண்

    பயிர் வளர்க்கும் துளியவன் காண் துளியினின்ற

    நீரவன் காண் நீர்சடைமேல் நிகழ்வித்தான் காண்

    நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோக்கும்

    பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றி

    பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும்

    சீரவன்காண் சீருடைய தேவர்க்கெல்லாம்

    சிவனவன் காண் சிவபுரத்தெம் செல்வன் தானே’

    திருமால் சிவனைத் தாமரையால் பூசிக்கும் காட்சி, மூலவர் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி சன்னிதிக்கு அருகில் சிற்பமாக மிளிர்கிறது.

    காலபைரவர் :

    இந்த ஆலயத்தில் வெளிப்பிரகாரத்தில் தனிச்சன்னிதியில் நிற்கும் கால பைரவர் விசேஷமாகக் கருதப்படுகிறார். எல்லா ஆலயங்களிலும் மேற்கு திசை நோக்கி இருப்பார் காலபைரவர். அவரது நாய் வலது புறமாக கீழ்நோக்கிப் பார்க்கும் வண்ணம் நின்றிருக்கும். ஆனால் இங்கே தெற்கு திசை பார்த்திருக்கும் பைரவரின் நாய், இடதுபுறம் மேல் நோக்கியவாறு பைவரவரின் கையில் உள்ள கபாலத்தை நக்கியவாறு நிற்கிறது.

    இந்தப் பைரவருக்கு 11 தேய்பிறை அஷ்டமி திதிகளில் தயிர்சாதம், வடைமாலை சாத்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால் தீயசக்திகள் விலகும். மேலும் நவக்கிரக தோஷங்கள் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாக இந்த தலத்தில் நவக்கிரக சன்னிதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. அருணகிரி நாதரின் பாடல்பெற்ற முருகப்பெருமான், வள்ளி-தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ள இந்த திருக்கோவில், தினமும் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
    சனிபகவான் என்று சொன்னவுடனேயே நம் சிந்தையில் அருள்மிகு திருநள்ளாற்று உறை சனிபகவானின் நினைவே தோன்றும்.
    நவக்கிரக மூர்த்திகளில் சனிபகவான் நிரம்பவும் பெருமை உடையவர். ஈஸ்வரனுக்கு சமமாக அவருக்கு மட்டுமே ஈஸ்வரப்பட்டம் இருக்கிறது. அதனாலேயே சனீஸ்வரன் என்று போற்றப்படுகிறார்.

    கோவில்களில் நவக்கிரகப் பிரதிஷ்டை இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால் சனீஸ்வரன் பிரதிஷ்டை இல்லாமல் இருக்காது. உயர்ந்த மேடை ஒன்றில் அவரது பிரதிஷ்டை அமைந்திருக்கும்.

    மன்னாதி மன்னர்கள் என்றாலும் சனிபகவானை வழிபடாதவர்களே இல்லை. சனீஸ்வர மூர்த்தியை வழிபட்டே தசரத மகாராஜா பலகாரியங்களில் வெற்றி அடைந்திருக்கிறார். புரூவரசு சக்கரவர்த்தியும், நளச்சக்கரவர்த்தியும் சனிபகவானை வழிபட்டே புகழும், சிறப்பும் எய்தி ஆட்சி செய்திருக்கிறார்கள்.

    சனீஸ்வர மூர்த்தியை வழிபட்டு அவரது அருளைப் பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்தும், சிறந்தும் விளங்குவர். சனிபகவான் என்று சொன்னவுடனேயே நம் சிந்தையில் அருள்மிகு திருநள்ளாற்று உறை சனிபகவானின் நினைவே தோன்றும்.

    இந்த தலம் ஆதிகாலத்தில் பிரமதேவர் பூஜை செய்ததால் ஆதிபுரி, தருப்பாரண்யம், நகவிடங்கபுரம், நளேச்சுரம் என்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. இந்நான்கு பெயர்களும் முறையே நான்கு யுகங்களுக்கும் வழங்கப்படுகின்றன. நளன் என்னும் பெயர் சொல்லின் “அன்” விகுதி கெட்டு ஆறு என்னும் சொற்புணர்ந்து நள்ளாறு என்றாயிற்று. அதாவது நளனுக்கு நன்னெறி காட்டிய தலம் என்று பொருள்படும். யும் நல்லாறு என்பது நள்ளாறு என மருவி அழைக்கப்படுகிறது.

    திருநள்ளாற்று கோவில் கிழக்கு நோக்கி திசையில் உள்ளதாகும். இரண்டு திருச்சுற்று மதில்கள் உள்ளன. இறைவர் சன்னதி கிழக்கு முகமாகவும், அம்மையார் சன்னதி முதல்பிரகாரத்தில் சோபன மண்டபத்தில் தெற்கு முகமாகவும் இருக்கிறது. சனீசுவர பகவான் சன்னதி கிழக்கு முகமாய் அம்மையார் சன்னதிக்கு முன்புறம் அமைந்துள்ளது.

    திருநள்ளாற்றுக் கோவில் அழகும், அருளும் நிறைந்த ஓர் கலைக்கோவிலாகும். கோவிலை வலம் வரும்போது தெற்கு உட்பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் உருவங்கள் காணப்படுகின்றன.

    இக்கோவிலின் நீண்ட வெளிப்பிரகாரத்தை வலம் வந்தால் அருள்மிகு காளத்தியப்பர் சன்னதிக்கு வந்து சேரலாம். இக்கோவில் ஓரு சிற்றாலயமாக எழிலுற அமைந்திருக்கிறது. காளத்தியப்பர் சிவஜோதியாக வீற்றிருக்கிறார். இத்தலம் சனி பகவானுக்கு மட்டுமில்லாமல் ராகு, கேது இவர்களுக்காகவும் வழிபட வேண்டிய தலமாகும்.

    ஸ்ரீசனிபகவான் சன்னதி இரண்டாவது கோபுர வாயிலின் வலது புறமாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பொதுவாக சனிபகவான் சன்னதி மேற்கு நோக்கியே இருக்கும்.

    உக்ரமூர்த்தியாகிய சனீஸ்வரன் இங்கு அனுக்கிரக தேவதையாக கிழக்கு நோக்கி அபயமுத்திரையுடன் அருள் வழங்குகின்றார். ஏனைய நவக்கிரகங்கள் இத்தலத்தில் தனியாக பிரதிஷ்டை செய்யப்படவில்லை என்பதும் இவருடைய முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும்.

    நளச்சக்கரவர்த்தியை துன்புறுத்தி கொண்டிருந்த ஸ்ரீசனிபகவான் நளன் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரரை வந்து வணங்கி தரிசித்தவுடன் விலகி விடுகின்றார். பின்பு எம்பெருமானுடைய அருளாணையின் வண்ணம் பக்தர்களுக்கு அருள் வழங்கும் அனுக்ரக மூர்த்தியாக ஈஸ்வரப்பட்டம் பெற்றுக்கொண்டு துவார தேவதையாக இரண்டாவது கோபுர வாயிலில் விளங்குகின்றார்.

    இங்கு நளன் விடுதலை பெற்று திருப்பணிகள் செய்து முடித்து திருக்கோவில் அமைத்து இறைவனை பூசித்தான். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்ல எண்ணத்தினால் நளன் இறைவனிடத்தில் வரங்களை வேண்டினான்.

    அவையாவன:

    இங்கு என்னைப்போல் ஸ்ரீசனிபகவானை வந்து வணங்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ சனிபகவான் அருள்செய்து துன்பம் போக்கி நலம்பல செய்திடல் வேண்டும் என்று ஒரு வரமும்.

    இரண்டாவதாக இத்தலத்தின் ஒருகாத விஸ்தீரணம் பரப்புகளில் சனிபகவான் அனுக்கிரஹ பார்வை உடையவராக இங்கு இருப்பவர்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்று ஒரு வரமும்.

    மூன்றாவதாக, இந்த பகுதிக்கு இன்று முதல் மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் என் பெயரில் விளங்கிட வேண்டும் என்று வேண்டினான்.

    சனிபகவானும் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு அவ்வாறு அருள் செய்தனர்.

    ஆகையால் இங்கு நளனுக்கு விமோசனம் அளித்தபடியால் இறைவனுக்கு ஸ்ரீநளேஸ்வரர் என்ற பெயரும் திருக்குளத்திற்கு நளத்தீர்த்தம் என்ற பெயரும் இவ்வூருக்கு திருநள்ளாறு என்ற பெயரும் விளங்கலாயிற்று. முதலில் நளதீர்த்தம் சென்று அந்த தீர்த்த குளத்தை வலமாக பிரதட்சிணம் செய்து குளத்தின் நடுவில் இருக்கும் நளச்சக்கரவர்த்தி தமயந்தி குழந்தைகளின் உருவச்சிலைகளை வணங்கி வழிபடுதல் வேண்டும்.

    பின்னர் நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ ஒன்பது முறை ஸ்நானம் செய்து தலை முழுக்காட வேண்டும். பின்னர் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகிய திருக்குளத்திலும் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்.

    பிறகு கோவிலுக்குள் நுழைந்து வலமாக வந்து ஸ்ரீசொர்ண கணபதியை முதலில் வழிபட்டு ஸ்ரீசுப்ரமணியர் சன்னதியை தரிசனம் செய்துக்கொண்டு, மூலஸ்தானமாகிய ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரருக்கு அர்ச்சனை பூஜைகள் செய்து ஸ்ரீ தியாகேசர் சன்னதியை தரிசிக்க வேண்டும்.

    பிறகு இரண்டாவது முறை வலமாக வந்து அம்மன் சன்னதியை அடைந்து அர்ச்சனை பூஜைகள் முடித்துக்கொண்டு கடைசியாக ஸ்ரீசனிபகவான் சன்னதியில் வந்து வழிபடுதல் வேண்டும். அவரவர்களுடையே வசதிக்கும், சக்திக்கும் ஏற்றபடி ஸ்ரீசனிபகவானுக்கு அர்ச்சனை, தீபாராதனை, அபிஷேகம், ஜபம், ஹோமம், தர்ப்பணம், தானம் முதலியன செய்யலாம்,,

    காலை, மாலை இரு வேளையிலும் ஸ்ரீசனிபகவானை நவப்பிரதட்சிணம் செய்வது நல்ல பயன் தரும்.

    புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் பகுதியில் திருநள்ளாறு அமைந்துள்ளது. காரைக்காலுக்கு மேற்கே 5 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்தில் 45 கி.மீ தொலைவிலும், மயிலாடுத்துறையிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 23 கி.மீ தொலைவிலும் உள்ளது.
    உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
    கிருஷ்ணர் வளர்ந்த பிருந்தாவனத்தின் பெருமை அளவிடற்கரியது, உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளை யாடல்களை நிகழ்த்திய இடம் இதுவே.

    கண்ணனின் பால லீலைகளோடும், மற்றும் இளமைக் கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக விரஜபூமி என்று அழைக்கப்படுகிறது. வட நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது. சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன. இந்த விரஜ பூமி சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது.

    இதை வலமாகக் சுற்றி வருவது, விரஜ பரிக்ரமா எனப்படும். இதில் பெரிய சிறிய பாதைகள் உண்டு. இப்படி வலம் வர இயலாதவர்கள் கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர். உடலளவில் அதற்கும் முடியாதவர்கள், மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு.

    பக்தர்கள் அனைவரும் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற போதிலும், நிம்பார்க்கர் மற்றும் வல்லபர் மரபைச் சேர்ந்த வைணவ அடியார்கள், பரிக்ரமாவை முக்கியமாகக் கருதுகிறார்கள். கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பிருந்தாவனம் சென்று சேர இதைச் செய்கிறார்கள். பெரிய பாதை வழியாகச் சென்று இதை முடிக்கச் சுமார் இரண்டு மாதங்கள் வரை கூட ஆகலாம்.

    கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர் பாடியான கோகுலம் எல்லாம் விரஜ பூமியில் உள்ளன. பிருந்தா என்பது துளசியைக் குறிக்கும் என்று கூறுவர். பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான். பிருந்தாவனத்தில் 12 வனங்கள் உண்டு. இவற்றுள் யமுனைக்கு மேற்கில் ஏழும், கிழக்கில் ஐந்தும் உள்ளன.

    பிருந்தாவனத்தில் தான் கிருஷ்ண லீலைகள் எல்லாம் நிகழ்ந்தன. கிருஷ்ணன் மேய்த்த மாடு, கன்றுகளையும், மற்ற கோபாலச் சிறுவர்களையும் ஓராண்டுக் காலம் பிரம்மன் ஒளித்துக் கொண்டு போன பொழுது அவை எல்லாமாகத் தானே இருந்து, பிரம்மனைக் கண்ணன் மயக்கிய இடமும் இதுவே!

    பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன. யமுனையில் நீராடிய பின் இந்த தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும். கேசீகாட், காளிய மதன்காட், சீர்காட், ரமண்ரேதீ, வம்சீவட், சேவாகுஞ்ச், நிதிவனம், பாங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திரி. ரங்கஜி மந்திர் முதலானவை முக்கிய தலங்களாகும்.

    இவற்றுள் பாங்கே விஹாரி கோவிலில் அடிக்கடி திரையால் மூலஸ்தானத்தை மறைப்பார்கள். தரிசிக்க வரும் பக்தர்கள் பின்னால் குறும்புக்கார கண்ணன் ஓடி விடுவான் என்ற பயம் தான் இதற்குக் காரணம்.

    மதுராவிற்குச் சற்று வடமேற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள பிருந்தாவனம், அவசியம் அன்பர்கள் தரிசித்து மகிழ வேண்டிய தலமாகும்.
    ×