என் மலர்tooltip icon

    கோவில்கள்

    அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், ‘சங்கரநாராயணராக’ தோன்றிய அற்புதமான திருத்தலம் இதுவாகும்.
    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ளது சங்கரநாராயணர் திருக்கோவில். சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், ‘சங்கரநாராயணராக’ தோன்றிய அற்புதமான திருத்தலம் இதுவாகும்.

    இந்த ஆலயத்தின் தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது. ஒன்பது நிலை கொண்ட ராஜகோபுரம் மூலவர் சங்கரலிங்கத்தையும், அம்பாள் கோமதி அம்மனையும் காண நம்மை அழைக்கிறது. இத்தல கால பைரவரை அஷ்டமி நாட்களில் சந்தனக் காப்பிட்டு வழிபாடு செய்தால், முன்ஜென்ம வினைகளும், நாம் செய்த தவறுகளால் உண்டான தோஷங்களும், பாவங்களும் விலகும்.

    சங்கர நாராயணர் சன்னிதி :

    இந்த ஆலயத்தில் சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையே சங்கரநாராயணர் சன்னிதி அமைந்துள்ளது. மூலவர் சன்னிதி பிரகாரத்தில் புற்று வடிவில் அமைந்த வன்மீகநாதர் சன்னிதி இருக்கிறது. நாகதோஷம் அகல இப்புற்றில் மஞ்சள் பூசி, இங்குள்ள பஞ்ச நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ளலாம்.

    இவ்வாறு வழிபட நாக தோஷங்கள் அகலும். பெரும்பாலும் சிவாலயங்களில் லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, அர்த்த நாரீஸ்வரர் ஆகிய மூவரில் ஒருவர் தான் கருவறை பின்புறம் இருப்பார். ஆனால் இங்குள்ள ஈசன் கருவறை சுற்றுச் சுவரின் பின்புறத்தில் யோக நரசிம்மர் அருள் பாலிக்கிறார். இந்த யோக நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷ நேரத்தில் நெய்தீபம் ஏற்றி, பானகம் படைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும். ஆலயத்தில் சிவபெருமானின் எதிரில் அழகிய வேலைப்பாட்டுடன் அமைந்த, ருத்ராட்சப் பந்தலின் கீழ் நந்தி பகவான் அமர்ந்துள்ளார்.

    ஆடித் தபசு  :

    சங்கரநாராயணர் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறும். ‘தபசு’ என்றால் ‘தவம்’ என்று பெயர்.

    தற்போது அமைந்திருக்கும் கோமதி அம்பாள் சன்னிதி முன்பு, நடு மண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கிறது. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர். இதில் சங்கன் என்னும் நாகர் சங்கரனாகிய சிவபெருமான் மீதும், பதுமன் என்னும் நாகர் பாற்கடலில் பள்ளி கொண்டருளும் பரந்தாமன் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தார்கள்.

    இருவரும் சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்று தங்களுக்குள் வாதம் செய்து கொண்டனர். அது பற்றி அறிந்து கொள்வதற்காக பார்வதிதேவியிடம் சென்று முறையிட்டனர். அம்பாள் சிவபெருமானை வேண்ட, ஈசன் அம்பாளை பொதிகை மலை பகுதியில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பாள் தற்போது சங்கரநாராயணர் கோவில் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து தவம் செய்தார். அப்போது ஈசன் சங்கரநாராயணராக வந்து அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். அன்றைய தினம் ஆடித்தபசு ஆகும்.

    சங்கர நாராயணராக காட்சி :

    அரியும் அரனும் ஒருங்கே இணைந்து ஓருருவில் காட்சி கொடுத்தனர். இந்தக் காட்சியை அம்பாளின் அருளால் சங்கனும், பதுமனும் தரிசித்து நற்பேறு பெற்றனர். சங்கர நாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில் தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன், திருவாசியில் நாகவடிவில் சங்கன் குடைபிடிக் கிறான். அதே போல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சங்கரநாராயணர் சன்னிதியில் காலை நடைபெறும் பூஜையில் துளசி தீர்த்தம் தருகிறார்கள். பகல், மாலை மற்றும் இரவு நேரப் பூஜைகளில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சங்கர நாராயணருக்கு வில்வமும், துளசியும் சாத்தப்படுகிறது.

    இங்கு சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது.  ஸ்படிக லிங்கமாக வெள்ளிப் பேழையில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்குத் தான் அபிஷேகம் நடைபெறுகிறது. இத்தல உற்சவருக்கே சிவராத்திரி மற்றும் ஏகாதசி நாட்களில் அபிஷேகங்கள் நடைபெறும். ஆடித்தபசு நாளில், இந்த உற்சவரே அம்பாளுக்கு சங்கர நாராயணராக எழுந்தருளி காட்சி தருகிறார். ஆலய வடக்குப் பிரகாரத்தில் சொர்க்கவாசல் உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கப்படும்.

    12 நாள் திருவிழா :

    கோமதி அம்பாள் சன்னிதியின் முன் மண்டபத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாளுக்கு திங்கட்கிழமைகளில் மலர் பாவாடை, வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடை அணிவித்து அலங்காரம் செய்விக்கிறார்கள். அம்பாளுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை, புத்திரதோஷம், நாகதோஷம் முதலியவை அகலும் என்று கூறப்படுகிறது. அம்பாள் சன்னிதி முன்புள்ள ஸ்ரீசக்கரம், ‘ஆக்ஞா சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. அதில் உட்கார்ந்து அம்மனை வேண்டி தியானித்தால் சகலமும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம். கூடவே நிலையான மன அமைதியும் பெறலாம்.

    ஆடித்தபசு விழா இத்தலத்தில் 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். ஆடித்தபசு அன்று காலையில் தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி தபசு மண்டபம் வந்தருள்வாள். மாலை 4 மணிக்கு ஈசன் சங்கர நாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில், தெற்கு ரத வீதியில் உள்ள காட்சி மண்டப பந்தலுக்கு வருகை தருவார்.

    தொடர்ந்து அம்பாளும் காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்வாள். அங்கு அம்பாள் தனது வலது காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து அதை இரு கைகளால் பிடித்தபடி தபசுக் காட்சி அருள்வாள். மாலை 6 மணிக்கு ஈசன் சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி தருவார். அப்போது பக்தர்கள், தங்கள் வயலில் விளைந்த பொருட்களான நெல், பருத்தி, கம்பு, சோளம், பூ, மிளகாய் போன்றவற்றை ‘சூறை விடுதல்’ என்ற பெயரில் அம்பாள் மீது வீசியெறிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    மீண்டும் தவம் :

    பின்பு அம்மன் மீண்டும் தவக்கோலம் பூணுகிறாள். எதற்காக மீண்டும் தவம்?. அம்பாளின் அண்ணன் மகாவிஷ்ணு, சிவபெருமானின் ஒரு பாதியில் வீற்றிருந்து சங்கர நாராயணராக உள்ளார். ஈசனின் ஒரு பாதியில் அண்ணன் இருப்பதால் ஈசனை எவ்வாறு மணப்பது?. எனவேதான் அம்மன் மீண்டும் ஈசனை வேண்டி சங்கரலிங்கமாக காட்சி அருள வேண்டுகிறாள். இரவு 11.30 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்தில் புறப்பட்டு காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்கிறார். சரியாக இரவு 12 மணிக்கு ஈசன், கோமதி அம்மனுக்கு சங்கரலிங்கமாகக் காட்சி கொடுக்கிறார். பின் அம்பாள் ஈசனுக்கு திருமண மாலை மாற்றி மணந்து கொள்கிறார். பின்னர், சுவாமி- அம்பாள் ஊஞ்சல் சேவை நடைபெறும்.

    நோய் தீர்க்கும் புற்றுமண் :

    இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு, புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த புற்று மண்ணை நீரில் கரைத்து குடித்து வந்தால் விரைவில் நோய்கள் தீர்ந்து விடுகின்றன. வீடுகளில் கொடிய விஷ ஜந்துகள் தொல்லை இருந்தால், இறைவனை வேண்டிக்கொண்டு அவற்றின் வெள்ளி உருவங்களை வாங்கி நேர்ச்சையாக செலுத்தி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விஷ ஜந்துகள் தொல்லை தீரும். புற்று மண்ணை வயல் வெளிகளில் தூவினால், பயிர்கள் மிகவும் செழிப்பாக வளரும், அதிக விளைச்சல் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. புற்று மண்ணை வீட்டிற்கு வெளியே ஒரு துணியில் கட்டி தொங்கவிட்டால், தீவினைகள், தீய சக்திகளை அண்டவிடாமல் குடும்பத்தை காக்கும்.

    திருநெல்வேலியில் இருந்து வடமேற்கே 48 கிலோமீட்டர் தூரத்தில் சங்கரன்கோவில் அமைந்துள்ளது.
    தஞ்சாவூர் அருகே திருச்சோற்றுத்துறை என்னும் தலத்தில் வீற்றிருக்கும் ஈசன் ‘சோற்றுத்துறைநாதர்’ என்றும், அம்பாள் ‘அன்னபூரணி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
    தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படுவது தஞ்சாவூர். இதன் அருகே திருச்சோற்றுத்துறை என்னும் தலத்தில் வீற்றிருக்கும் ஈசன் ‘சோற்றுத்துறைநாதர்’ என்றும், அம்பாள் ‘அன்னபூரணி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். இத்தல இறைவனுக்கு ஓதனவனேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

    திருஞானசம்பந்தர், அப்பர் மற்றும் சுந்தரரின் பாடல் பெற்ற தலம் இது. திருவையாறை மையமாகக் கொண்ட ஏழுர் தலங்களில் (சப்த ஸ்தானத் தலங்கள்), திருச்சோற்றுத்துறை ஆலயம் மூன்றாவது திருத்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயத்திற்கு அருகில் உள்ள திருமழபாடியில் நடைபெற்ற நந்தியம்பெருமான் திருமணத்திற்கு, திருச்சோற்றுத்துறையில் இருந்துதான் உணவுகள் அனைத்தும் சென்றதாக தல வரலாறு கூறுகிறது. எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் உணவுக்கு பஞ்சம் இருக்காது என்பது ஐதீகம்.

    பசிப் பிணி நீக்கிய இறைவன் :

    ஒரு காலத்தில் அருளாளர் என்னும் சிவ பக்தரும், அவரது மனைவியான திருநகையாளும், இத்தல ஓதனவனேஸ்வரரை வழிபட்டு, தங்கள் நிலத்தில் விளையும் பொருட்களைக் கொண்டு சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்து வந்தனர். ஒரு முறை மழை பொய்த்துப் போனது. அதனால் எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. சிவனடியார்களுக்கு அன்னம் பாலிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அருளாளரும், அவரது மனைவியும் மனம் வருந்தினர். தங்களின் இந்த நிலையை இத்தல ஈசனிடமும், அம்பாளிடமும் கூறி முறையிட்டனர்.

    அந்த நொடியே ஈசனும், அம்பாளும் அவர்கள் முன்பாகத் தோன்றி, அள்ள அள்ளக்குறையாத அட்சயப் பாத்திரத்தை வழங்கி மறைந்தனர். ஈசன் தந்த அட்சயப் பாத்திரத்தின் மூலம், அந்த தம்பதியர் அடியவர்களுக்கு தடையில்லாமல் உணவு வழங்கினார்கள். ஊர் மக்களின் பசிப் பிணியையும் போக்கினார்கள். மக்களின் பசியைப் போக்கிய இறைவன் என்பதால், இத்தல ஈசன் ‘திருச்சோற்றுத்துறைநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். அருளாளர் தம்பதிக்கு, ஆலயத்தின் உள்ளே இருக்கும் நந்திக்கு அருகில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

    மூலவரான சோற்றுத்துறை நாதர் சுயம்பு மூர்த்தி ஆவார். பசிப்பிணியை மட்டுமின்றி, பிறவிப் பிணியையும் தீர்த்தருள்பவர் திருச்சோற்றுத்துறைநாதர். இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சூரியன், கவுதம மகரிஷி போன்றவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு பேறுபெற்றுள்ளனர். மூலவரின் கருவறை கோஷ்டத்தின் பின்புறத்தில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவரை வழிபட்டால் திருமணத் தடைகளும், தம்பதியர் இடையே ஏற்படும் மனமுறிவுகளும் நீங்கும்.

    ஆலய சன்னிதிகள் :

    ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் சுவாமி சன்னிதிக்கு வலதுபுறம், அன்னபூரணி அம்பாள் நான்கு திருக்கரங்களுடன் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் காலசம்ஹார மூர்த்தி உருவம் வெகு நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. இவரை வணங்கினால் எம பயம் நீங்கும். ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. கவுதம முனிவருக்கும், அவரது மனைவி அகலிகைக்கும் சன்னிதிகள் உள்ளன. மேலும் விநாயகர், ஐயனார், சப்த கன்னிகள், சப்த ஸ்தான லிங்கங்களும் உள்ளன. இத்தல முருகப்பெருமான் பெரிய உருவமாக உள்ளார். இவரது சன்னிதிக்கு தெற்கே மகாவிஷ்ணு அருள்கிறார்.

    இங்கு காசி விஸ்வநாதர் தனிச் சன்னிதியில் அருள்புரி கிறார். இந்த ஆலயத்தில் சித்திரை மாத திருவிழா சிறப்புக்குரியது. சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள், திருவையாறு ஐயாறப்பரும், அறம்வளர்த்த நாயகியும், நந்திதேவரும், சுயாம்பிகையும், திருப்பழனம் ஆபத்சகாயர்- பெரியநாயகி ஆகியோர் இங்கு எழுந்தருள்வார்கள். இதுவே ‘ஏழுர்ப் பெருவிழா’. அப்போது அனைவருக்கும் மதிய உணவு திருச்சோற்றுத்துறையிலேயே வழங்கப்படும்.

    ஊருக்கே உணவிட அட்சயப் பாத்திரம் வழங்கிய சோற்றுத்துறைநாதருக்கு, ஐப்பசி மாத பவுர்ணமியில் சாதத்தால் அபிஷேகித்து அலங்கரிப்பார்கள். அந்த அன்னாபிஷேக விழாவில் இறைவனையும், இறைவியையும் வணங்கினால் பட்டினி, வறுமை நீங்கும்.

    அதிகர்த்தன் என்பவரின் மகன் நற்கனதேவன். அவனது முற்பிறப்பில் அவனைப் பீடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இத்தல ஈசனை வழிபட்டதும் விலகியது. எனவே நாமும் நமது முற்பிறவி, இப்பிறவி தோஷங்கள் அகல, இத்தல இறைவனை வழிபடுவது சாலச் சிறந்தது.

    தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருக்கண்டியூருக்கு கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருச்சோற்றுத்துறை திருத்தலம்.
    இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் தொழில், வியாபாரம், தானம், புண்ணியம் ஆகியவை கோடி மடங்காக பெருகும் என்பது ஐதீகம்.
    மனிதன் குழந்தையாய் இருக்கும் போதும், வாலிப வயதில் வாழும் போதும், முதுமை வந்த போதும் உடல் ரீதியாய் தோற்றப் பொலிவுடன் திகழ விரும்புகிறான். அதிலும் குறிப்பாக பெண்கள், தாங்கள் வாழும் நாட்கள் எல்லாம் வயது வித்தியாசம் இன்றி என்றும் இளமையுடன் விளங்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு.

    கொட்டையூர் :

    முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக திகழும், சுவாமிமலைக்கு அருகில் உள்ளது திருக்கொட்டையூர் என்னும் திருத்தலம்.

    ‘மடவார் திரைபுரளும் காவிரிவாய் வலஞ்சுழியின்

    மேவிய மைந்தன் கண்டாய்

    கொடியாடு நெடுமாடக் கொட்டையூர்

    கோடீச்சரத்து உறையும் கோமான் தானே!’

    என்ற திருநாவுக்கரசரின் தேவாரப் பாடலின் படி, கொட்டையூர் அருகே காவிரி நதி பொங்கிவரும் பண்டைய கால காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.

    கொட்டையூர் என்று பெயர் வரக் காரணம் என்ன? :

    கொட்டை முத்து எனப்படும் ஆமணக்கு செடியே தலவிருட்சமாக இருப்பதால், இந்தத் தலத்திற்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஆமணக்கு கொட்டையில் இருந்துதான் அடர்த்தி மிகுந்த விளக்கெண்ணையைப் பிழிந்தெடுக்கிறார்கள். இந்த ஆலயத்தில் தல விருட்சமான ஆமணக்குச் செடிகள் உயர்ந்து வளர்ந்து நிற்கின்றன. இத்திருக்கோவிலில் பெரிய அகல் விளக்குகளில், ஆமணக்கு எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றுவதைப் பார்க்கலாம். இவ்வாறு தீபம் ஏற்றுவதால், பூர்வ ஜென்ம பாவங்கள், பித்ரு தோஷ சாபங்கள் தீரும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாக உள்ளது.

    எல்லாம் கோடி :

    கிழக்கு பார்த்து உயர்ந்து நிற்கும் ஐந்து நிலை ராஜகோபுரத்தை அண்ணாந்து பார்த்து கை தொழுகிறோம். இதன் தென்புறத்தில் தனிச் சன்னிதியில் விநாயகப் பெருமான் கருணையே வடிவாகக் காட்சி தருகிறார். அவர் பெயர் ‘கோடி விநாயகர்’ என்பதாகும். இந்த ஆலயத்தில் எல்லாருமே கோடி தான். சிவபெருமானோ, ‘கோடீஸ்வரர் என்னும் கயிலாசநாதர்’. சக்தி வடிவான அம்பிகையோ ‘கோடீஸ்வரி என்னும் பந்தாடுநாயகி’. சிவசக்தியின் செல்லப்பிள்ளையான முருகப்பெருமான், ‘கோடி முருகனாகவும், தலைமை பக்தரான சண்டேசவரர் ‘கோடி சண்டீசுவரர்’ ஆகவும் வீற்றிருக் கிறார்கள். இந்த ஆலயமே ‘கோடீச்சுரம்’ என்றுதான் அழைக்கப்படுகிறது.

    சுவாமியும் அம்பாளும் :

    பழமையான இந்த ஆலயத்தில் கிழக்கு பார்த்த சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் மூலவரான கோடீஸ்வரர். இவரை தரிசிக்கும் போது நம் கண்கள் வியப்பால் விரியாமல் இருக்காது. ஏனெனில் ஈசனின் லிங்கத் திருமேனி கொட்டை கொட்டையாக காட்சி தருகிறது. கிட்டத்தட்ட முள்ளுடன் கூடிய ஒரு பலாப்பழத்தின் தோற்றமே அங்கு நமது கண்ணுக்குத் தெரிகிறது. ஆமணக்குச் செடியின் கீழ் இந்த லிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. இந்த சிவலிங்கத்தை பத்திரயோகி முனிவர் என்பவர் தரிசித்து பேறுபெற்றதாக புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்தக் கோடீஸ்வரர்தான் நம் பாவங்களைப் போக்குபவர் என்று நினைத்துவிடக்கூடாது. அம்பாளும் சக்திவாய்ந்தவளாக வீற்றிருக்கும் ஆலயம் இது. தெற்கு பார்த்த சன்னிதியில் இருக்கும் அம்பாளின் தோற்றம், வித்தியாசமான அமைப்பு கொண்டது. அம்பாளின் தோற்றம் பந்தை கால்கொண்டு உதைப்பது போன்று அமைந்திருக்கிறது.

    இந்த தோற்றத்தை வேறு எங்கும் காண முடியாது. எனவேதான் அம்பாளுக்கு ‘பந்தாடும் நாயகி’ என்ற பெயரும் ஏற்பட்டுள்ளது. நாம் செய்த பாவங்களைப் பந்தாக உதைத்து விரட்டுவாள் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மேலும் விளையாட்டில் விருப்பம் உள்ளவர்கள், இந்த அம்பிகையை வழிபட்டு செல்கிறார்கள். தோற்றப் பொலிவுக்கு உடல் பயிற்சியும், விளையாட்டும் தேவை என்பதை இந்த ஆலய அம்பிகை சொல்லாமல் சொல்கிறாளோ என்னவோ!

    இங்குள்ள எந்திரங்களுடன் கூடிய நவக்கிரகங்கள் சிறப்பு வாய்ந்தவை. ஒன்பது கிரகங்களும் தங்கள் வாகனங்களில் இருக்கும் நிலை மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.

    ‘கொட்டை நகர்ப் பெருமாளே!’ என்ற அருணகிரிநாதரின் பாடல் பெற்ற கோடி முருகன் கேட்டதை எல்லாம் கொடுப்பவர்.

    திரும்பக் கிடைத்த திருமேனி :

    வட தேசத்தை ஆட்சி செய்து வந்த சத்தியரதி என்ற மன்னனின் மகன் சுருசி. இவன் சாபம் காரணமாக பேய் வடிவம் பெற்றான். இவனது உருவைக் கண்டு அனைவரும் பயந்தனர். அவன் பேய் உருவை விட்டு மனித உருவிற்கு மாற வேண்டும் என்று சிவபெருமானைப் பிரார்த்தித்து வந்தான். சிவபெருமானின் கட்டளைப் படி கொட்டையூர் திருத்தலம் வந்து இங்கு ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து, ஆமணக்கு எண்ணெய்யில் தீபம் ஏற்றி வைத்து கோடீஸ்வரப் பெருமானை மனமுருக வேண்டினான். இதையடுத்து அவனது பேய் உருவம் மறைந்து அழகிய உருவத்தைப் பெற்றான்.

    தாடிவைத்து அமர்ந்த நிலையில் உள்ள ஏரண்ட முனிவரின் திருஉருவம், மூலவர் சன்னிதிக்கு செல்லும் முன்பாக வடக்கு பார்த்த நிலையில் இருக்கிறது. ஏரண்டம் என்றால் கொட்டைச் செடி என்பது பொருளாகும். அந்தச் செடியின் அடியில் இருந்து தவம் செய்ததால் அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. ‘ஆத்ரேய மகரிஷி’ என்பது இவரது இயற்பெயராகும்.

    முனிவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் இன்று அமுதக் கிணறு என்று அழைக்கப்படுகிறது. தங்கள் பாவம் நீங்கவும், அழகு மெருகேறவும் இந்தத் தீர்த்தத்தை பக்தர்கள் தலையில் தெளித்துக் கொண்டு இறைவனை வேண்டுகின்றனர். இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் தொழில், வியாபாரம், தானம், புண்ணியம் ஆகியவை கோடி மடங்காக பெருகும் என்பது ஐதீகம்.

    சிறப்பு மிக்க இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில், கும்பகோணத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருக்கொட்டையூர் திருத்தலம். கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் பேருந்தில் சென்றால் வழியில் திருக்கொட்டையூர் ஆலயத்தில் இறங்கிக்கொள்ளலாம்.
    பழமை வாய்ந்த, வரலாற்று சிறப்பு பெற்ற தலத்தில் பிரம்ம சிரகண்டீசுவரர் கோவில் அமைந்துள்ளது.
    தஞ்சாவூரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கண்டியூர். இந்த பழமை வாய்ந்த, வரலாற்று சிறப்பு பெற்ற தலத்தில் பிரம்ம சிரகண்டீசுவரர் கோவில் அமைந்துள்ளது. பாடல் பெற்ற தலமாக விளங்கும் இந்தக் கோவிலில் இறைவனாக பிரம்ம சிரகண்டீஸ்வரரும், இறைவியாக மங்களநாயகியும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    ஸ்தல வரலாறு :

    ஒரு சமயம் பிரம்ம தேவர், தான் படைத்த ஒரு பெண்ணின் மீது ஆசை கொண்டார். உடனே அந்த பெண் அம்பாளிடம் சென்று நடந்ததை கூறி முறையிட்டார். அம்பாள், சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டு, உக்கிரமாக பைரவர் வடிவம் எடுத்தார். பின்னர் பிரம்மாவின் ஒரு தலையை நகத்தினால் கொய்து கண்டனம் செய்தமையினால் இந்த ஊர் கண்டியூர் என்று பெயர் பெற்றது.

    தன் தவறை உணர்ந்த பிரம்மதேவர், சிவனிடம் மன்னிப்பு கேட்க தவம் மேற்கொண்டார். சிவனும், பிரம்மாவின் தவறை மன்னித்து அருளினார். பிரம்மாவின் தலையை கொய்தவர் என்பதால் இவருக்கு பிரம்ம கண்டீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டதாக தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

    பிரம்மஹத்தி தோஷம் :

    மேலும் சிவபெருமான் துண்டித்து பிரம்மதேவரின் தலை, அப்படியே ஈசனின் கையில் ஓட்டிக் கொண்டு பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. அறநெறியை உலகத்தவரும் உணர்ந்து கடைபிடிக்குமாறு தாமே அதனை கடைபிடித்து காட்ட சிவபெருமான் எண்ணினார். அதன்படி, பைரவரை பார்த்து இத்தீவினை தீர நீயும் பிச்சை ஏற்க வேண்டும் என்று கூறினார். பைரவர் பல சிவ தலங்களுக்கும் சென்று பிச்சை கேட்டு திரிந்தார்.

    கண்டியூருக்கு வந்து இந்தக் திருக்கோவிலை அடைந்தவுடன் அத்தலை, சிவபெருமானின் கையை விட்டு போனது. பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. இதனையடுத்து பிரம்மதேவர் ஆணவமின்றி தன் துணைவியும் தானுமாய் இக்கோவில் இறைவனை வழிபட்டு மீண்டும் படைப்பு தொழிலை பெற்றார் என்கிறது தலவரலாறு.

    பிரம்மனுக்கு தனிக் கோவில் :

    ஆணவமுற்றோர் அழிவர் என்னும் உண்மையை உணர்த்தும் நிகழ்ச்சி நடந்த இடம் கண்டியூர் ஆகும். எத்தலத்திலும் பிரம்மனுக்கு தனிக் கோவில் கிடையாது. ஆனால் திருக்கண்டியூரில் பிரம்ம தேவருக்கு தனிக் கோவில் அமைந்துள்ளது. இதில் பிரம்மன், தன் பிழையை உணர்ந்து வருந்தி, பூ ஜடமாலை ஏந்தி இருகைகளும் வேண்டுகின்ற அமைப்பில் வைத்து வலப்பக்கத்தில் சரஸ்வதியுடன் அமர்ந்த திருக்கோலத்தில் அழகுடன் காட்சி அளிக்கிறார்.

    பிரம்மா அன்னப்பறவையாக சென்று சிவபெருமானது முடியை கண்டதாக பொய் கூறிய காரணத்தால் ‘உனக்கு எங்கும் கோவில் இல்லாமல் போகக்கடவாய்’ என்று சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்திற்கு ஏற்ப இங்கு பிரம்மனுக்கும் பெரிய கோவில் இருந்தும், இடிபாடுகளுடன் வழிபாடில்லாது இருப்பது சிவ சாப வன்மை போலும்.

    பிரம்மனது கோவிலுக்கு பக்கமே அரன் சாபம் தீர்த்த பெருமாள் கோவில் உள்ளது. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலை புரியும் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் தனித்தனியே மிகப்பெரிய கோவில்கள் உள்ள தலம் இதுவே.

    துவார பாலகர்கள் இல்லை :

    துரோணர் தமக்கு மகப்பேறு இல்லாத குறையை போக்க இங்குள்ள இறைவனை தும்பை மலரால் அர்ச்சித்து மகப்பேறு எய்தினார். இந்த தலம் அட்ட வீரட்ட தலங்களில் முதல் தலமாகவும், சப்தஸ்தான தலங்களில் 5–வது தலமாகவும் போற்றப்படுகிறது.

    எல்லா சிவன் கோவில்களிலும் இருப்பது போல் இத்தலத்தில் துவார பாலகர்கள் இல்லை. முருகப்பெருமான் ஞான குருவாக இத்தலத்தில் வீற்றிருக்கிறார்.

    அர்த்தமண்டப வாசலுக்கு வலது புறத்தில் சப்தஸ்தான தலங்களை குறிக்கும் வகையில் 7 லிங்கங்களும், பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் 5 லிங்கங்களும் உள்ளன. பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வலது கையில் ஜெபமாலையும், இடது கையில் வஜ்ர சக்தியும் கொண்டு காட்சி அளிக்கிறார். மயில் வாகனம் இங்கு இல்லை.

    நவக்கிரக சன்னிதியில் சூரியன் தனது மனைவியரான உஷா, பிரத்யூஷாவுடன் வீற்றிருக்கின்றார். மற்ற அனைத்து கிரகங்களும் சூரியனை பார்த்த படி உள்ளன. தவறு செய்து விட்டு மனம் வருந்துவோர் மன நிம்மதிக்காகவும், திருமண தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.

    திருமணம் தடை உள்ளவர்கள் வாழைக்கன்றில் மஞ்சள் கயிற்றை கட்டி இங்குள்ள இறைவனை வேண்டினால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டுவதாக ஐதீகம்.

    தஞ்சாவூர் – திருவையாறு செல்லும் சாலையில், தஞ்சாவூரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் கண்டியூர் அமைந்துள்ளது.

    இத்தலத்திற்கு செல்ல தஞ்சாவூரில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. கும்பகோணம் – திருவையாறு மார்க்கமாகவும் இத்தலத்திற்கு செல்லலாம்.

    தமிழகத்தில் உள்ள மகாலட்சுமி கோவில்களை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    சென்னை திருவான்மியூர் : சென்னையில் காமக்கோடி பரமாச்சாரியார் பேரருளோடு, அலைகடல் அன்னைக்கு மிக அற்புதமான ஆலயம் திருவான்மியூர் ஓரம் கட்டப்பட்டுள்ளது. கடலை நோக்கி மகாலட்சுமியும், ஸ்ரீமந்நாராயணனும் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்கள். இவர்களைத் தரிசித்து விட்டு பிரதட்சணமாக வந்தால், தெற்கே ஆதிலட்சுமி மேற்கில் தானிய லட்சுமி வடக்கில் தைரிய லட்சுமி மூவரையும் தரிசிக்கலாம். இந்த ஆலயத்தில் சங்க நிதிக்கும், பதும நிதிக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    திருமழிசை : சென்னை பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் வீற்றிருந்த பெருமாள் கோவில் உள்ளது. இந்த பெருமானிடம் அஷ்டலட்சுமிகளும் ஐக்கியமாகி இருக்கிறார்கள். பெருமாளின் தலை கிரீடத்தில் 4 லட்சுமிகள், மார்பில் 2 லட்சுமிகள், பெருமாளின் இருபிறமும் பக்கத்துக்கு ஒருவர் என அஷ்டலட்சுமிகள் உள்ளனர். அஷ்டலட்சுமிகள் வீற்றிருக்கும் அந்த பெருமாளை சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தி வழிபட குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

    உத்திரமேரூர் : உத்திரமேரூர் திருத்தலத்தின் தாயார் ஆனந்தவல்லி ஆவார். தாயாருக்குத் தனிச் சந்நிதி உண்டு. இப்பிராட்டியாரின் திருவருளால் மாங்கல்ய பாக்கியம், பிள்ளைப்பேறு முதலியன கிடைப்பதால் இத்தலத்திற்குத் திருமாங்கல்யம் அதிக அளவில் காணிக்கையாகக் கிடைக்கிறது. அழகிய அஷ்டாங்க விமானம் கொண்ட அற்புதத் தலம் இது.

    காஞ்சீபுரம் : காஞ்சீபுரம் ஸ்ரீ அஷ்டபுஜம் திருக்கோவிலின் தாயார் புஷ்பவல்லி ஆவார். பகவானின் திருநாமம் அஷ்டபுஜத்தான் என்பது. இத்தலத்தில் ஸ்ரீ வராகப் பெருமாள் தாயாரைத் தன் மடியில் வைத்துக் கொண்டு சேவை சாதிக்கிறார்கள். இதுவன்றி ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீலஷ்மி தேவிக்கென தனிச் சந்நிதி உள்ளது.

    சோழிங்கபுரம் : வடஆற்காடு மாவட்டம் அரக்கோணத்திலிருந்து மேற்கே சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் சோழிங்கபுரம் ஆகும். இந்த மலைக்கோவிலில் தனிச்சந்நிதியில் அமிர்தவல்லித் தாயார் எழுந்தருளியுள்ளார். அண்டிவரும் அன்பர்களுக்கு அமிர்தமயமான பலன்களை வழங்கி வருகிறார்.

    திருத்தங்கல் : விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் என்னும் திருத்தலத்தில் முனிவர்களின் வேண்டுகோளுக் கிணங்க திருமகள் அருண கமல மகாதேவி (செங்கமல நாச்சியார்) என்னும் திருநாமத்துடன் திருநின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

    திருக்கண்ண மங்கை : திருவாரூருக்கு அடுத்துள்ள திருத்தலம் திருக்கண்ண மங்கையாகும். இங்கு தாயார் அமிர்தவல்லி திருச்சந்திதியில் ஒரு பெரிய தேன்கூடு உள்ளது. பல ஆண்டுகளாக இத்தேன்கூடு இருந்து வருவதாகக் கூறுகிறார்கள். முனிவர்கள் தேனீ வடிவத்தில் இருந்து தாயாரையும் பெருமாளையும் சேவித்து வருவதாக ஐதீகம்.

    உத்தமர்கோவில் : திருச்சிக்கு அருகில் உள்ள திருத்தலம் பிச்சாண்டார் கோவிலாகும். உத்தமர் கோவில் என்றும் இதனை அழைப்பர். சிவன், பிரும்மா, விஷ்ணு மூவருக்கும் தனிச் சந்நிதிகள் ஒரே ஆலயத்தினுள் அடங்கியுள்ளன. இந்த அற்புதத் திருத்தலத்தின் நாச்சியார் பூர்ணவல்லித் தாயார் ஆவர். பூர்வா தேவி என்றும் அழைக்கப்பெறுகிறார்.

    லால்குடி : திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடிக்கு திருத்தவத்துறை என்ற பெயரும் உண்டு. இங்குள்ள தலத்தில் தான் தாயார் தவம் இருந்து எம்பெருமானைத் தலைவராக அடைந்தார். இதேபோல் நாமக்கல் திருத்தலத்தின் தாயாரும் தவமிருந்து எம்பெருமானைத் தலைவராகப் பெற்றார் என்று கூறப்படுகிறது. இத்தாயாரின் திருநாமம் ‘ஹரி’ ஆகும்.

    தலைச்சங்காடு : மாயவரம் - தரங்கம்பாடி பாதையில் ‘தலைச்சங்காடு’ என்ற திருத்தலத்தில் உள்ள தாயார் செங்கமலவல்லி ஆவார். இந்த நாச்சியார் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

    திருக்கண்ணபுரம் : தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் எம்பெருமானுக்கு ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி என்னும் நான்கு தேவியர்கள் தம் இரு பக்கம் சூழ எம்பெருமான் சௌரிராஜன் அருட்காட்சி நல்கி வருகிறார். அற்புதத் திருத்தலம் இது.

    நாச்சியார்கோவில் : கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் நாச்சியார்கோவில் என்ற திருத்தலம் உள்ளது. அங்கு எம்பெருமான் இரண்டு திருக்கரங்களுடன் வஞ்சுளவல்லி தாயாருடன் அருட்காட்சி நல்கி வருவது மிகவும் விசேஷமானது. இங்கு தாயாருக்கெனத் தனிச் சந்நிதி கிடையாது.

    திருவாரூர் : திருவாரூரில் ஸ்ரீ லெட்சுமி தேவிக்கு ஒரு ஆலயம் உள்ளது. இத்திருக்கோவிலின் தலவிருக்ஷமான புன்னை மரத்தடியில் தாயார் அவதாரம் செய்துள்ளார் என்பது ஐதீகம். இதனால் இப்பிராட்டியாருக்குப் புன்னைப் பிராட்டி என்பது திருநாமம்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் : பிராட்டியாரின் அவதாரமான கோதை நாச்சியார் ஸ்ரீ வில்லிப்புத்தூர் திருத்தலத்தில் வடபத்திர சாயியான எம்பெருமானுடன் ஆண்டாளாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.

    துறையூர் : துறையூருக்குச் செல்லும் பாதையில் திருவெள்ளறை என்னும் திருத்தலம் அமைந்துள்ளது. தாயார் தவம் செய்து பெரும் பேறு பெற்ற திருத்தலம்.

    பெருமானின் திருநாமம் புண்டரீகாஷன். இத்திருக்கோவிலில் தாயாருக்குத்தான் முதலில் பூஜை நடைபெறும். இக்கோவிலைச் சேர்ந்த சுவாமி புஷ்கரணி ஸ்வஸ்திகா வடிவில் அமைந்திருப்பது மிக்க சாந்நித்யம் உடையதாகும்.

    பிச்சாண்டார் கோவில் : திருச்சிக்கு அருகே பிச்சாண்டார் கோவிலில் தாயாரைச் சேவிக்கலாம். இங்குள்ள தாயாருக்கு பூரணவல்லி என்று திருநாமம். இக்கோவிலுள்ள மும்மூர்த்திகளுக்கும் சந்நிதிகள் உண்டு. சிவபெருமான் கபாலம் ஏந்தி பிசைக்கு வந்த போது முதலில் தாயார் பிசை இட்டார் என்றும் அதனால் அவரது கபாலம் நிரம்பி வழிந்தது என்பதும் இத்திருக்கோவிலின் சிறப்பைச் சொல்லும் புராண வரலாறாகும்.

    நாமக்கல் : நாமக்கல் என்னும் தலத்தில் தவமிருந்து விஷ்ணுவை அடைந்தார் தாயார்! இத்தலத்தில் தாயாருக்கு ஹரி என்று திருநாமம். இங்கு தாயாருக்கு, நாயகரான நரசிம்ம சுவாமியை விட சிறப்பு அதிகம்.

    திருமலை : திருமலை திருப்பதியில் ஸ்ரீவிக்னேஸ்வரரின் ஆலயம் ஒன்றுள்ளது. அதில் அஷ்டலட்சுமிகளான ஸ்ரீஆதிலட்சுமி, ஸ்ரீவீரலட்சுமி, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீதான்யலட்சுமி, ஸ்ரீவிஜயலட்சுமி, ஸ்ரீதீபலட்சுமி, ஸ்ரீதனலட்சுமி, ஸ்ரீஐஸ்வர்யலட்சுமி எனும் திருநாமங்களோடு அர்ச்சாவதார மூர்த்திகளாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள். இம்மூர்த்தங்களை ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து வைத்தார் என்று கூறுகிறார்கள்.

    ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அம்மா மண்டப வீதி புது அக்ரகாரத்தில் அஷ்டலட்சுமி மண்டபம் என்றே ஒரு மண்டபம் உள்ளது. அதில் நுழைவுப்பகுதி முன் வாயிலுக்கு ஸ்ரீராஜராஜேஸ்வரி வாசல் என்பது பெயராகும். அம்மண்டபத்தினுள் எண் திசைகளுக்கும் ஒவ்வொன்றாக எட்டு லட்சுமி மூர்த்தங்கள் உள்ளன.

    மதுரையில் அஷ்டலட்சுமி : மதுரை மையப்பகுதியில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் அஷ்டலட்சுமிகளுக்கு என்று தனி சன்னதி உள்ளது. 8 லட்சுமிகளும் வீற்றிருக்கும் காட்சி அற்புதமாக உள்ளது. மதுரை நகர மக்கள் லட்சுமி வழிபாட்டுக்கும், பரிகார பூஜைகளுக்கு இந்த அஷ்டலட்சுமிகளை ஆராதிக்கிறார்கள்.

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள ரங்கநாதர் கோவில் இந்திரனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கியதலமாகும்.
    தென் தமிழகத்தின் ஸ்ரீரங்கம் போல, வடதமிழகத்தின் புகழ்மிக்க ஆலயமாக திகழ்வது, பாலாற்றின் ஓரம் உள்ள உத்திர ரங்கநாதர் கோவில். பிரம்மனின் யாகத்தைக் காத்தருளியவர் இந்தப் பெருமாள். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள இந்த ஆலயம், இந்திரனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கியதலம், ஆண்டாளை மணம் முடித்தது போல், பள்ளிகொண்டாவில் செண்பகவல்லியை மணம் புரிந்த தலம் என பல்வேறு பெருமைகளைக் கொண்டதாக திகழ்கிறது.

    புராண வரலாறு :

    இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் நாரதர், பிருகு மகரிஷிக்கு இரண்டு அத்தியாயங்களாகக் கூறப்பட்டுள்ளது. காஞ்சி மகாத்மியத்திலும், ஹஸ்தகிரி மகாத்மியத்திலும் சொல்லப்பட்டுள்ளது என பள்ளிகொண்டை எனும் உத்திரரங்கஷேத்திர புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    பள்ளிகொண்டா ரங்கநாதரைத் தரிசித்து மகிழ்ந்த பிரம்மா, யாகம் செய்ய விரும்பினார். அதற்கான இடத்தைத் தேடினார். முடிவில் வேறு இடங்களில் நூறு யாகங்கள் செய்வதைவிட, சத்யவிரத ஷேத்திரம் எனும் காஞ்சீபுரத்தில் செய்வதே சாலச் சிறந்தது என்று தீர்மானித்தார்.

    இந்த நிலையில் சரஸ்வதிக்கும், லட்சுமிக்கும் தங்களுள் யார் பெரியவர்? என்ற போட்டி ஏற்பட்டது. இதற்கான பஞ்சாயத்து பிரம்மாவிடம் வந்தது. பிரம்மா, லட்சுமியே உயர்ந்தவள் என்று கூறினார். கோபம் கொண்ட சரஸ்வதி அங்கிருந்து, மேற்கேயுள்ள நந்திதுர்க்க மலைக்குச் சென்றாள்.

    ஆனால் காஞ்சீபுரத்தில் தான் செய்யவிருக்கும் யாகத்திற்கு, தம்பதி சமேதராய் செல்ல வேண்டும் என்பதால் சரஸ்வதியை அழைத்தார் பிரம்மா. ஆனால் அவர் உடன் வர சம்மதிக்கவில்லை.

    எனவே, சாவித்திரி என்ற பெண்ணை உருவாக்கி, அவளை மணம்புரிந்து யாகத்தைத் தொடங்கினார் பிரம்மா. இதைக் கேள்வியுற்ற சரஸ்வதி, பெரும் வெள்ளமாகப் பெருக்கெடுத்து, ஷீர நதி எனும் பாலாற்றில் பாய்ந்து, யாகத்தை அழிக்க முற்பட்டாள். இதையறிந்த பிரம்மா ஸ்ரீமன் நாராயணனிடம் தஞ்சம் புகுந்தார். அவரது வேண்டுதலுக்கு செவிசாய்த்த பெருமாள், பள்ளிகொண்டா, திருப்பாற்கடல், காஞ்சீபுரம் என மூன்று இடங்களில் பாலாற்றை வழிமறித்து வெள்ளத்தைத் தடுத்து, பிரம்மாவின் யாகத்தைக் காத்தருளினார். பள்ளிகொண்டாவில் சயனம் செய்த பெருமாள், பள்ளிகொண்டான் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார்.

    சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாளை ஸ்ரீவில்லிபுத்தூரில் மணம் புரிந்ததுபோல, பள்ளிகொண்டாவில் சம்பாதிமுனிவர் விருப்பப்படி, செண்பகவல்லி என்ற பக்தையை பங்குனி உத்திர நாளன்று திருமால் மணம் புரிந்ததாக தல புராணம் கூறுகிறது.

    கல்வெட்டுகள் :

    1925-ம் ஆண்டு இந்தியத் தொல்லியல்துறை ஆய்வறிக்கையின்படி, இத் தலத்தை பற்றிய 22 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 18 கல்வெட்டுகள் உத்திர ரங்கநாதர் ஆலயத்திலும், மூன்று கல்வெட்டுகள் நாகநாதீஸ்வரர் கோவிலிலும், ஒரு கல்வெட்டு செல்லியம்மன் கோவிலிலும் கிடைக்கப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டுகள் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.848), முதலாம் பராந்தகன் (கி.பி.926), முதலாம் ராஜராஜன் (கி.பி. 985), முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012), இரண்டாம் ஜடாவர்மவீரப் பாண்டியன் (கி.பி.1306), குலசேகரசம்புவராயன் (கி.பி.1307) போன்ற மன்னர்களின் கொடைகளையும், நிலதானங்களையும் எடுத்துரைக்கிறது.

    ஆலய அமைப்பு :

    பாலாற்றின் தென்கரையில், கிழக்கு முகமாய் அமைந்துள்ளது இந்த ஆலயம். ஐந்து நிலை ராஜகோபுரம், அதன் எதிரில் நான்கு கால் ஊஞ்சல் மண்டபம், இடது புறம் வியாசர் புஷ்கரணி என அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன. இரண்டு திருச்சுற்றுக்களைக் கொண்டதாக அமைந்துள்ள கோவில் கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பலி பீடம் காட்சியளிக்கின்றன. இதனையடுத்து மகாமண்டபம், அர்த்த மண்டபம் உள்ளன.

    வெளிச்சுற்றில் ராமானுஜர், ராமர், கண்ணன், ஆண்டாள், தலமரங்களான பாதிரி, பாரிஜாதம், கருடாழ்வார், எம்பெருமான் திருவடி, சொல்லின் செல்வனான வீர அனுமன் அருகே பக்த அனுமன், மணவாளமாமுனிகள் ஆகியோருக்குத் தனித்தனி சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன.

    மகாமண்டபத்தில் இடதுபுறம் உற்சவமூர்த்திகள் 12 ஆழ்வார்களும் திருமுகம் சாதிக்கின்றனர். இது தவிர, பிள்ளைலோகாச்சார்யார், முதலியாண்டான், மணவாளமாமுனி, ஆளவந்தார், நவநீதகண்ணன் ஆகிய திருமேனிகள் கலைநயத்துடன் காட்சி தருகின்றன. இதில் கண்ணன் திருமேனி மிகவும் கலை அம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ளது.

    மூலவர் பள்ளிகொண்ட பெருமாள், தெற்கே தலை வைத்து, வடக்கே தன் திருப்பாதங்களைக் காட்டி, பாம்பணையின் மீது எழிலாகப் பள்ளிகொண்டுள்ளார். அவரின் திருமார்பில் திருமகளும், கொப்பூழ் தாமரையில் நான்முகனும், அருகே ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்துள்ளனர். எம்பெருமானின் திருக்கரம் பக்தர்களை ‘வா’ என்று அன்போடு அழைக்கும் கோலத்தில் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் அதேப் பொலிவுடன் எம்பெருமான் காட்சி தருகின்றார்.

    தாயார் ரங்கநாயகி தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அழகுற அருளாசி வழங்குகிறாள்.

    உத்திரரங்கநாதர் :

    தெற்கே ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள எம்பெருமான் ஸ்ரீரங்கநாதர் என்பதுபோல, வடக்கே பள்ளிகொண்டுள்ள இத்தல பெருமாள், உத்திர (வடக்கு) ரங்கநாதர் என அழைக்கப்படுகிறார். இவர் சின்னஞ்சிறு வடிவில் சயனித்துள்ளதால் பாலரங்கநாதன் என்றும் பக்தர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். மகாமண்டபத்தில் கஸ்தூரிரங்கன் எனும் சோட்டாரங்கநாதர் வடிவமும் தனியே அமைந்துள்ளது. இவரே அன்னியப் படையெடுப்பின் போது மூலவரைக் காத்தவர் என வரலாறு கூறுகிறது.

    பிரம்மஹத்தி தோஷம் :

    திரேதாயுகத்தில் தேவேந்திரன் தன் மனைவி இந்திராணியோடு வனத்தில் உலாவிக் கொண்டிருந்தான். அப்போது கிளி வடிவில் கூடியிருந்த ரிஷிகளை கொன்றான். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதற்கு பரிகாரம் வேண்டி நின்ற இந்திரன், காச்சயப்ப முனிவர் அறிவுரைப்படி, பள்ளிகொண்டா தலத்து வியாச புஷ்கரணியில் நீராடி, ஓராண்டு காலம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதரைத் தரிசித்து, தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.

    பரிகாரத் தலம் :

    இத்தலம் பதினாறு வகை செல்வங்களையும் அள்ளித் தரும் தலமாகப் போற்றப்படுகிறது. அதிலும் குறிப்பாக திருமணப்பேறு வழங்கும் தலமாக திகழ்வதால், இங்கே திருமண வைபவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. நீண்டகாலம் திருமணம் தடைபட்டவர்கள், இங்கு வந்து வேண்டிசென்றால் விரைவில் திருமணம் கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    தலமரம் பாதிரி மற்றும் பாரிஜாதம் ஆகும். தல தீர்த்தமாக வியாசர் புஷ்கரணி எனும் திருக்குளம் உள்ளது. ஆலயத்தின் அருகே ஓடும் நதி ‘ஷீரநதி’ அல்லது ‘பத்மினி’ எனும் பாலாறாகும். இத்திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    விழாக்கள் :

    இந்த ஆலயத்தில் சித்திரையில் பத்து நாட்கள் பிரமோற்சவப் பெருவிழா நடைபெறுகிறது. இது தவிர, வைகாசியில் விசாககருட சேவை, ஆனியில் ஜேஷ்டா திருமஞ்சனம், ஆடியில் பூரம், நான்காம் வெள்ளி, ஆவணியில் கிருஷ்ணஜெயந்தி, பவித்ர உற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசியில் தீபாவளி, கார்த்திகையில் தீபத் திருவிழா, மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, தனுர் மாத பூஜை, தை மாதத்தில் கிரிவலம், மாசியில் தெப்பல் உற்சவம், பங்குனியில் உத்திரம், பெரியபிராட்டியார் உற்சவம் என விழாக்களுக்குப் பஞ்சமில்லை.

    காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் நடை திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    வேலூர் மாவட்டம், வேலூர் வட்டத்தில் பாலாற்றின் தென்கரையில் இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. தெற்கே பீஜாசலம் எனும் வித்துமலை இருக்கிறது. சென்னைக்கு மேற்கே 150 கிலோமீட்டர், வேலூர் - குடியாத்தம் வழித்தடத்தில், வேலூருக்கு மேற்கே 23 கிலோமீட்டர், ஆம்பூருக்கு கிழக்கே 25 கிலோமீட்டர், குடியாத்தத்திற்குத் தென்கிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில், பள்ளிக்கொண்டான் ஆலயம் உள்ளது.
    பத்துமலைக் குகை முருகன் கோயிலில் இந்துக்கள் தவிர சீனர்களும் தங்கள் குறை தீர வேண்டிக் கொள்வது குறிப்பிடத்தக்கதாகும்.
    மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்) மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோயில். இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

    இங்குள்ள முருகப்பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோயிலில் இந்துக்கள் தவிர சீனர்களும் தங்கள் குறை தீர வேண்டிக் கொள்வதுடன், இந்துக்களைப் போல் அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற வேண்டுதலுடன் அந்த நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்து மதத்திற்குரிய கோயிலாக இருந்தாலும், மதப்பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவானதாகிப் போய் விட்ட இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வருடந்தோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    தலவரலாறு :

    மலேசியாவின் பத்துமலையிலுள்ள சிறிய குகையில் வேல்மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்ப்பக்தர் ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்தார். பிறகு உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகப்பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது என்கிறார்கள்.

    தமிழகத்தில் நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்த காயோராகணம் பிள்ளை மலேசியாவில் குடியேறி நிறைய சம்பாதித்திருக்கிறார். இவர் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை இறைபணிகளுக்காகவும் செலவழித்தார். கோலாலம்பூரில் மாரியம்மன் கோயில், கோர்ட்டு மலைக்குப் பக்கத்தில் விநாயகர் ஆலயம் போன்றவைகளைக் கட்டுவித்த இவர் 1890-91 ஆண்டுகளில் பத்துமலைக் குகை முருகப்பெருமானுக்கும் ஆலயத்தை கட்டியிருக்கிறார். இந்த மூன்று ஆலயங்களிலும் அனைத்து விழா நாட்களிலும் காயோராகணம் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள்.

    இந்த பத்துமலையில் இரு குகைகள் உள்ளது. ஒன்று மிக ஆழமாகச் செல்வது, மிகவும் இருண்டது. மற்றொரு குகையில்தான் முருகன் கோயில் கொண்டிருக்கிறார். நக்கீரர் வரலாற்றில் ஒரு பூதம் அவரை ஒரு குகைக்குள் அடைத்து விட்டதாகவும், அங்கு ஏற்கனவே 999 பேர் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் நக்கீரரையும் சேர்த்து இவர்கள் எண்ணிக்கை ஆயிரமாகிவிட்டதாகவும் நபர்களின் எண்ணிக்கை ஆயிரமான பின்பு இவர்களைத் தின்ன பூதம் திட்டமிட்டிருந்தது என்கிற வரலாறு அனைவரும் அறிந்ததே.

    ஆயிரம் பேர் அடைத்து வைக்கக் கூடிய அளவிலான குகைகளை உடைய முருகனின் மலைக் கோயில்கள் தமிழ்நாட்டில் எதுவுமில்லை. பூதங்கள் கடல் கடந்து செல்லக் கூடிய ஆற்றலுடையவை என்பதால் நக்கீரர் அடைபட்டுக் கிடந்தது இந்த மலேசிய பத்துமலைக் குகையாகத்தான் இருக்கும். எனவேதான் இங்கு முருகனின் வேல் தமிழ்ப்பக்தர் ஒருவருக்குத் தென்பட்டது. அதன் பிறகுதான் இங்கு முருகன் கோயில் அமைக்கப்பட்டது என்றும் இங்குள்ள ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

    கோயில் அமைப்பு :

    பத்துமலைக் குகை முருகன் கோயில் 1891ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்த முருகனைத் தரிசிக்க கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின்பு 1938 ஆம் ஆண்டில் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டது. இது தவிர தனியே இரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழிகளைப் பயன்படுத்தி தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியான முருகப் பெருமானைத் தரிசித்து வரலாம்.

    மிகப் பெரிய முருகன் சிலை :

    தற்போது இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதைகளுக்கு முன்பாக, அதாவது நுழைவு வாயிலின் அருகில் தங்கம் போல் தகதகவென மின்னும்படியாக வர்ணம் பூசப்பட்ட மிகப் பெரிய முருகன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய வேலை வலது கையில் தாங்கி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் 42.7 மீட்டர், அதாவது 140.09 அடி.

    இந்த சிலை அமைக்க 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006 ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது. இந்த சிலை அமைக்க 2006 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. இந்த சிலை அமைப்பிற்கான கட்டுமானப் பொருட்கள் அதிகமாக பக்கத்து நாடான தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய முருகன் சிலையாக அமைக்கப்பட்ட பின்பு இந்த பத்துமலைக் குகை முருகன் கோயிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கையுடன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

    சிறப்பு விழாக்கள் :

    முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இங்கு வருடந்தோறும் தை மாதம் வரும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தைப்பூச விழாவில் இந்துக்கள் தவிர சீனர்கள் மற்றும் வேறு சிலரும் இங்குள்ள புனித ஆற்றில் நீராடிவிட்டு, தமிழ்நாட்டில் முருகன் கோயில்களில் நேர்த்திக் கடன்களாகச் செய்யப்படும் அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற பலவிதமான நேர்த்திக் கடன்கள் இங்கும் இருக்கிறது. ஆனால் இங்கு தமிழர்களைத் தவிர சீனர்கள் மற்றும் பிற மதத்தைச் சார்ந்தவர்களும் முருகனுக்கு வேண்டிக் கொள்வதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் ஆச்சரியமான ஒன்றாகும்.
    ஆகம முறைப்படியும், சித்த மருத்துவ முறைப்படியும் அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கம், நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருள் வழங்கியது.
    தமிழகத்தில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு அற்புதங்களை தனக்குள் வைத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் தீராத நோய்களை தீர்த்து வைக்கும் திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் வரலாறு 500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

    விஜயநகர பேரரசின் கீழ், திம்மிரெட்டி, பொம்மி ரெட்டி ஆகியோர் வேலூர் கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர். குறுநில மன்னர்களான இவர்களது வழித்தோன்றல்தான் சதாசிவராய மன்னர். இவர் ஆற்காட்டை அடுத்த திவாகராயர் எல்லைப் பகுதியில் பல நல்ல காரியங்களைச் செய்து வந்தார்.

    ஒரு சமயம் அந்தப் பகுதியில் தொற்று நோய் ஏற்பட்டு மக்கள் அனைவரும் அவதிப்பட்டனர். இரக்க குணமும், இறை பற்றும் மிக்க சதாசிவராயர், இதனைக் கண்டு வேதனை அடைந்தார். நோயை விரட்டும் வழி குறித்து, அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அரண்மனை ராஜ வைத்தியரான கன்னிகா பரமேஸ்வரரிடம், மக்களின் நோயைப் போக்க ஏதாவது செய்யும்படி பணித்தார்.

    மன்னனின் ஆணைப்படி ராஜவைத்தியரான கன்னிகா பரமேஸ்வரர், தன்வந்திரி முறையில் ஒரு லிங்கத்தை தயார் செய்ய முடிவு செய்தார். சந்திர பாஷாணம் எனப்படும் திமிரி பாஷாணம் உள்பட 5 வகை பாஷாணங்களை பக்குவப்படுத்தி, தெய்வாம்சமும், மருத்துவ குணமும் இரண்டற கலந்திருக்கும் வகையில் சோமநாத ஈஸ்வர பாஷாண லிங்கத்தை வடிவமைத்தார். இந்த லிங்கத்தின் உயரம் வெறும் 7 அங்குலம் மட்டுமே.

    கி.பி.1379–ம் ஆண்டு தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், திமிரி நகரின் கோட்டையில் இந்த பாஷாண லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12–வது சங்கராச்சாரியார் வித்யாரண்ய சுவாமிகள் ஆசீர்வாதத்துடன் இந்த பிரதிஷ்டை விழா நடந்தது.

    ஆகம முறைப்படியும், சித்த மருத்துவ முறைப்படியும் அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கம், நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருள் வழங்கியது. திமிரி லிங்கம் பாஷாணத்தால் உருவாக்கப்பட்டதால், புகையும் தன்மை கொண்டது. எனவே லிங்கத்தை குளிர்விக்கும் வகையில் அதன் மீது எப்போதும் நீர் விழுமாறு செய்யப்பட்டது. அந்த அபிஷேக தீர்த்த நீரே, நோய் தீர்க்கும் பிரசாதமாக மாறியது.

    அதுவரை திவாகராயர் எல்லை என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி, திமிரி பாஷாண லிங்கத்தின் பெருமையால் ‘திமிரி’ என பெயர் மாற்றம் கொண்டது. மக்கள் நோய் குணமாவதைக் கண்ட மன்னன் சதாசிவராயர் பெருமகிழ்ச்சி அடைந்தார். பக்தி பரவசத்தில் மிதந்தார்.

    ஆனால் சோதனைகள் மனிதர்களுக்கு மட்டுமே வருவதல்லவே.. சில சமயங்களில் கடவுள்களுக்கும் கூட சோதனை ஏற்படுவதுண்டு. அந்தச் சோதனை படையெடுப்பின் வாயிலாக வந்தது. ஆற்காடு நவாப் படை எடுப்பின் போது வேலூர் கோட்டை பிடிபட்டது. திமிரி கோட்டை அவர்கள் கட்டுக்குள் வந்ததால், கோட்டை இடிக்கப்பட்டது. திமிரி பாஷாண லிங்கத்தை பாதுகாக்கும் பொருட்டு, வேதியியல் கலவையிலான கூர்ம வடிவ கூட்டுக்குள் வைத்தனர். அதன்பிறகு அந்த லிங்கத்தை, திமிரி சோமநாத ஈஸ்வரர் கோவிலின் அருகில் இருந்த குளத்தில் புதையச் செய்தனர்.

    500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த வரலாற்றின் தொடர்ச்சி, கடந்த 1985–ம் ஆண்டு மீண்டும் தொடங்கியது. அப்போது திமிரியில் ஐயப்பன் கோவில் கட்டும் பணி நடைபெற்றது. ஒரு கட்டத்தில் அந்தப் பணி தடைபட்டது. ‘கோவில் நிர்மாணிக்கும் பணியில் ஏதேனும் தெய்வ குற்றம் நிகழ்ந்து விட்டதோ?’ என சந்தேகம் கொண்ட, திமிரி ஐயப்பன் நற்பணி மன்ற நிர்வாகி ராதாகிருஷ்ணன் என்பவர் ஒரு நாடி ஜோதிடரை அணு கினார்.

    அப்போது, திமிரி சோமநாத ஈஸ்வரர் ஆலய குளத்தில் புதைந்து போன பாஷாண லிங்கம் பற்றிய செய்தி தெரியவந்தது. மேலும், அந்த பாஷாணலிங்கம், ராதாகிருஷ்ணன் முயற்சியால் குளத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பெருமுயற்சி மேற்கொண்டு, கோவில் குளத்தில் புதைத்ததாக கூறப்பட்ட பாஷாண லிங்கத்தை தேடினார். இறுதியில் 1985–ம் ஆண்டு ஜூன் மாதம் 14–ந் தேதி வெள்ளிக் கிழமை குளத்தில் இருந்து பாஷாணலிங்கம் கிடைத்தது.

    இதையடுத்து அந்த பகுதியிலேயே திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. இந்தலிங்கம் தற்போது நீர் நிரப்பப்பட்ட கண்ணாடி தொட்டிக்குள் வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி தருகிறது. இந்த நீர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பாஷாணலிங்கம் இருந்த இந்த நீரை அருந்துபவர்களுக்கு நோய்கள் தீருவதாக நம்பப்படுகிறது.

    திமிரி பாஷாணலிங்கேஸ்வரர் கோவில் வெளிப்புற வளாகத்தில் அரசமர விநாயகர், சப்த கன்னியர், சுயம்பு சதுரகிரி சிவன், அகத்தியர், தட்சிணாமூர்த்தி உள்பட பரிவார தெய்வங்கள் உள்ளன. கோவில் உள்புற வளாகத்தில் சந்திரகலா சோமநாயகி அம்மனுக்கு தனிசன்னிதி உள்ளது. இந்த சன்னிதியானது லிங்க வடிவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு அருகில் பாஷாணலிங்கம் கிடைத்த சோமநாத ஈஸ்வரர் கோவில் குளத்தின் அருகில் பெரிய அளவில் யோக நிலையில் இருக்கும் சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    பாஷாண லிங்கம் கிடைத்த பெரிய குளத்தில், லிங்கம் கிடைத்த பகுதியை மட்டும் சிறிய குளம்போல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த சிறிய குளத்தில் இருந்து எடுக்கப்படும் நீரையே கோவில் கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேகத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்று நாடி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    பேச்சுத்திறனில் குறைபாடு உள்ளவர்களும், இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி அம்பிகையை உள்ளம் உருக வழிபட்டு, அபிஷேகத் தேனை தினமும் பக்தியுடன் சுவைத்தால் குறைகள் தீரும்.
    விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள ஒலிக்குறிப்புகளே உதவுகின்றன. வாய்திறந்து, மொழி வாயிலாக பேசவும், பாடவும் இயலக்கூடிய உயிரினம் மனிதன் மட்டும்தான். ‘மனித குலத்துக்கு கிடைத்த இந்த அற்புதமான வரத்தை, எல்லோரும் பெற்று விட்டார்களா?’ என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    சிலருக்கு பிறவிலேயே பேச்சு இல்லாமல் போகிறது. வார்த்தைகளை தட்டுத்தடுமாறி பேசுபவர்களும் உண்டு. நோய், விபத்து போன்ற காரணங்களால் இடையில் பேச்சை இழந்தவர்களும் இருக்கிறார்கள்.

    நோயின் தன்மைக்குத் தக்கபடி மருத்துவமும், பயிற்சிகளும் இருப்பினும், தெய்வத்தை நம்பி அதற்கேற்ற கோவில்களுக்கு வந்து கை தொழுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

    திருத்தல மகிமை :

    பிறந்தாலே முக்தி தரும் திருவாரூரில் இருந்து கிழக்காக 3 கிலோமீட்டர் சென்றால், விளமல் என்ற ஊர் உள்ளது. திருவிளமர் என்ற பெயரில் விளங்கிய இந்தச் சிற்றூரில், சம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற சிவாலயம் ஒன்று இருக்கிறது. திருக்கோவிலில் சுயம்பு வடிவாக மூலவர் பதஞ்சலி மனோகரர், கிழக்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார்.

    ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன், பதஞ்சலி முனிவராக வடிவெடுத்து, சிவபெருமானின் திருநடனம் காண தவம் இருந்தார். அவருக்கு இந்த ஆலயத்தில் அஜபா நடனம் ஆடி திருப்பாதம் காட்டியருளினார் ஈசன். ஆகவேதான் பதஞ்சலியின் பெயரிலேயே இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். மண்ணால் உருவான இத்தல சிவலிங்கம், தீபாராதனையின் போது கண்ணாடி போல் பிரதிபலிப்பதைக் காணலாம்.

    தென்முகம் பார்த்த சன்னிதியில் நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறார் பராசக்தி மதுரபாஷிணி அம்மன். தமிழில் ‘யாழினும் மென் மொழியம்மை’ என்று புகழப்படுகிறார். அம்பிகைக்கு தேன் அபிஷேகம் செய்வது சிறப்புக்குரியதாகும். அபிஷேகம் செய்த தேனை, பள்ளி செல்லும் குழந்தைகளின் நாவில் தடவினால், அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.

    பேச்சுத்திறனில் குறைபாடு உள்ளவர்களும், நா குழறுபவர்களும், இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி அம்பிகையை உள்ளம் உருக வழிபட்டு, அபிஷேகத் தேனை தினமும் பக்தியுடன் சுவைத்தால் குறைகள் தீரும். அமாவாசை நாளில் இத்தல தீர்த்தத்தில் மூழ்கி, சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்தால், பிதுர் தோஷம் விலகும் எனவும், மோட்ச தீபம் ஏற்றினால், ஆன்மா அமைதியுறும் என்பதும் இத்தல சிறப்புகளாகும்.

    இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கை, வலது கையில் திரிசூலமும், இடக்கையில் கிளியும் ஏந்தி, சிம்ம வாகனத்தில் காட்சி யளிக்கிறார். தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

    திருக்கோலக்கா :

    திருஞான சம்பந்தர் அவதரித்த சீர்காழிக்கு மேற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கோலக்கா திருத்தலம்.

    மூன்று வயதில் உமையம்மையின் ஞானப்பால் அருந்தி, பதிகம் பாடத் தொடங்கிய சம்பந்தர், கோவில்கள் தோறும் சென்று பாடல்களைப் பாடி வந்தார். அதன் ஒரு பகுதியாக திருக்கோலக்கா வந்து கையால் தட்டி தாளமிட்டு பாடிக்கொண்டிருந்தார். அப்படி தாளம் போடும்போது, அந்தப் பிஞ்சுக் கைகள் வலிக்குமே என்று நினைத்த ஈசன், அவருக்கு பொன்னால் ஆன தாளங்களை வழங்கி அருளினார். அதை சம்பந்தர் தட்டியபோது ஓசை வரவில்லை.

    பிறகு இத்தலத்தில் கிழக்கு பார்த்த தனிச்சன்னிதியில் அருளும், அம்பிகை அந்த தாளத்திற்கு ஓசை கொடுக்க, அதில் இருந்து இனிய இசை பிறந்தது. இத்தல இறைவன் சப்தபுரீஸ்வரர் என்றும், தாளமுடையார் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி ‘ஓசை கொடுத்த நாயகி’ என்று வணங்கப்படுகிறார்.

    பேச்சு சரியாக வராதவர்கள், குரலில் இனிமை வேண்டுபவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து ஆனந்த தீர்த்தத்தில் நீராடி, இறைவிக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். பின்னர் அந்த அபிஷேகத் தேனை நாவில் தடவினால் வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    திருப்பந்துறை :

    திருப்பேணு பெருந்துறை என்று சம்பந்தரின் தேவாரப் பாடல்களிலும், திருப்பந்துறை என்று பேச்சுவழக்காகவும் அழைக்கப்படும் சிவத்தலம் இது. இந்த ஆலயம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் என்ற தலத்துக்கு வட கிழக்கே 3 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

    மூன்று நிலை ராஜகோபுரத்துடன் விளங்கும் இந்த ஆலயத்தின் மூலவர் ‘சிவானந்தேஸ்வரர்’ என்றும், ‘பிரணவேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். தெற்கு நோக்கிய சன்னிதியில் அம்பாள் மங்களாம்பிகையாக அருள்பொழிகிறார்.

    தலையில் குடுமியுடன், சின்முத்திரை காட்டி கண் மூடி மவுனியாக நிற்கும் ஞான தண்டாயுதபாணி பெருமான், வடக்கு திசை நோக்கி அருள்கிறார்.

    ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துக்குப் பொருள் கூறாத காரணத்தால், பிரம்மனைச் சிறையிலடைத்துப் பின் தந்தைக்கு உபதேசம் செய்தார் முருகப்பெருமான். ஈசனுக்கு நிபந்தனை விதித்ததால் முருகன் மவுனியாகி விட்டதாகவும், பின்னர் இத்தல பிரணவ ஈஸ்வரனை பூஜித்ததும், மவுனம் கலைந்து பேசியதாகவும் தல புராணம் சொல்கிறது.

    எனவே பேசவராத குழந்தைகள், பாதியில் பேச்சு நின்றவர்கள் இத்தலம் வந்து, இரட்டை விநாயகர் வீற்றிருக்கும் மங்கள தீர்த்தத்தில் நீராடி, பின்னர் ஞான தண்டாயுதபாணிக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். மேலும் இறைவனையும், இறைவியையும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

    பின்னர் அபிஷேகத் தேனை நாவில் தடவிக் கொண்டு, கோவிலில் சொல்லிக் கொடுக்கும் மந்திரத்தை, 48 நாட்கள் ஜெபித்தால், வார்த்தைகள் தங்குதடையின்றி வெளிப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
    விழுப்புரம் மாவட்டத்தில் பூவரங்குப்பம் என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் கோவில் தென் அகோபிலம் என்று போற்றப்படுகிறது.
    நரசிம்மர் அவதரித்த இடம் தற்போது அஹோபிலம் என்று அழைக்கப்படுகிறது, இது ஆந்திர மாநிலத்தில் உள்ளது. சப்தரிஷிகள் அத்ரி, பரத்வாஜர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், காச்யபர், கௌசிகர் ஆகியவர்கள் இரண்யவதத்தை காண விரும்பி இறைவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்காக திருமால் காட்சி கொடுத்த இடம் தான் பூவரசன்குப்பம். இத்திருத்தலம் தென்அஹோபிலம் என்று போற்றப்படுகிறது.

    இத்திருக்கோவில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் முதலாம் பல்லவ மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய எட்டு நரசிம்மர் தலங்களில் நடுவில் இருப்பது பூவரசன்குப்பம் ஆகும். அதாவது பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில், பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.

    இத்தகைய சிறப்புவாய்ந்த இத்திருத்தல மூலவர் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்தவல்லித் தாயாரை) அணைத்துக் கொண்டிருக்கிறார். வலது கையால் பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

    சித்திரை மாதம் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியன்று சகஸ்ர கலச திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். லட்சுமி நரசிம்மரை வேண்டினால் கடன்கள் தீரும், செல்வம் குவியும், சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் உண்டு. இக்கோவிலில் பக்தர்கள் அனைவரும் சட்டை பனியன் கழற்றி தான் உள்ளே செல்லவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தூண் வழிபாடு :

    கி.பி. மூன்றாம் நூற்றாண்டில், நரசிம்மர் தூணிலிருந்து தோன்றியதால் ஆதிகாலத்தில் பூவரசன் குப்பத்தில் ஒரு தூணையே நரசிம்மராக வழிபாடு செய்து வந்துள் ளார்கள். அதன் பின் பல்லவர்கள் நரசிம்மருக்கு கோயில் கட்டி சிலை பிரதிஷ்டை செய்தனர். இதையடுத்து அந்த தூண் ஹோம மண்டபம் பகுதியில் ஒரு இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

    தென் அகோபிலம்:

    நரசிம்மர் இரணியனை அழித்து பிரகலா தனுக்கு காட்சி கொடுத்த தலம் ஆந்திராவில் “அகோபிலம்‘ என் றும், முனிவர்களுக்கு காட்சி கொடுத்த தலம் பூவரசன் குப்பம் என்றும் கூறுவர். எனவே இத்தலம் “தென் அகோபிலம்‘ எனவும் அழைக்கப்படுகிறது.

    பதவி உயர்வு தருபவர் :

    தீயசக்திகளை அழிக்க கடவுள் அவதாரம் எடுப்பதை புராணங்களில் படித்து இருப்பீர்கள். ஒரு கடவுள் எந்த நோக்கத்துக்காக அவதாரம் எடுக்கிறாரோ, அந்த நோக்கம் முடிந்ததும், அந்த அவதாரமும் நிறைவு பெற்றுவிடும்.

    மகாவிஷ்ணு ராம அவதாரம் எடுத்தார். ராவணனை அழித்ததும் அவர் அவதாரம் முடிந்து போனது. அதுபோல தான் கிருஷ்ண அவதாரமும். கம்சனை வதம் செய்த பிறகு அந்த அவதாரம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் நரசிம்ம அவதாரம் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. நொடியில் தோன்றி தன் பக்தன் பிரகலாதனுக்காகக் காட்சி கொடுத்த இணையற்ற சிறப்பு அந்த அவதாரத்துக்கு உண்டு.

    இரண்யனை வதம் செய்து அழித்த பிறகு நரசிம்மர் உடனே தன் அவதாரத்தை முடித்துக் கொள்ளவில்லை. அதற்கு பதில் தன் பக்தன் பிரகலாதன் சீரும், சிறப்புமாக வாழ எல்லாவித ஏற்பாடுகளையும் செய்தார். ராஜநீதிக்கான சாஸ்திரங்களை அவர் பிரகலாதனுக்கு சொல்லிக் கொடுத்தார்.
     
    ஒரு நாட்டை ஆள்வதற்கு ஏற்ப பிரகலாதனை தயார்படுத்தினார். எல்லா வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார். அதுமட்டுமின்றி பிரகலாதனை அரியணையில் அமர்த்தி பட்டாபிஷேகமும் செய்து வைத்தார். தொடர்ந்து வழிகாட்டவும் உறுதி அளித்தார்.

    எனவே நரசிம்மர், ராஜபரிபாலனம் செய்ய உகந்தவர் என்று புகழப்படுகிறார். இதனால் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வெற்றி இலக்கை குறி வைத்து இத்தலத்து இறைவனிடம் சரண் அடைவது அதிகரித்தபடி உள்ளது. அரசுப் பணிகளில் இருப்பவர்கள் மற்றும் பதவி உயர்வு பெற விரும்புபவர்கள் இத்தலத்துக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த வழிபாடு பூவரசன்குப்பம் தலத்தில் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது.

    பூவரசங் குப்பம் :

    விழுப்புரம் மாவட்டத்தில் பூவரங்குப்பம் என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் கோவில் தென் அகோபிலம் என்று போற்றப்படுகிறது.

    விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் உள்ள சிறுவந்தாடு என்னும் ஊரில் இருந்து பூவரசங்குப்பம் 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது. விழுப்புரம் பண்ருட்டி சாலையில் உள்ள கள்ளிப்பட்டியில் இறங்கினால் இத்தலம் மூன்று கி.மீ. தொலைவில் இருக்கிறது. விழுப்புரத்தில் இருந்து நேரடி பஸ் வசதியும் இருக்கிறது.

    கோவில் மூலவர் சன்னதி முன்னால் கொடிமரமும் அதன் முன் பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளது. கொடிமரத்தின் முன்னே கருடாழ்வார் சன்னதி மூலவரை நோக்கிய வண்ணம் இருக்கிறது. இந்த தலத்தின் விஷேசம் என்னவென்றால் மற்ற இடங்களில் பயங்கரமான உருவில் காட்சியளிக்கும் நரசிம்மர் இங்கே, தம்பதியர் சமேதராக மிகவும் சாந்தமாய் காட்சியளிக்கிறார். தாயாரின் ஒரு கண் நரசிம்மரைப் பார்த்துக் கொண்டிருக்க, மற்றோர் கண் நம்மை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

    இரணிய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார். அவ்வாறு காட்சித் தந்தத் தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.

    அப்படி நரசிம்மனாக முனிவர்களுக்குக் காட்சிக் கொடுத்தபோது அவரது ஆக்ரோசஷத்தைத் தாங்க முடியாத முனிவர்களும், சப்த ரிஷிகளும் (அத்ரி, பரத்வாஜர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், காச்யபர், கௌசிகர் ஆகியவர்களே அந்த ஏழு ரிஷிகள்) மகாலட்சுமியை வேண்டினார்கள்.

    ஸ்ரீலட்சுமியானவள் நரசிம்மரின் மடியில் அமர்ந்து ஒரு கண்ணால் நரசிம்மரையும், ஒரு கண்ணால் சப்த ரிஷிகளையும் பார்த்தபோது நரசிம்மர் கோபம் தணிந்து, சாந்தரூபியாக காட்சியளித்தார்.

    திருமால் காட்சிக் கொடுத்த இடம்தான் பூவரசன்குப்பம். இப்பூவுலகில் வேறு எங்கும் காணாதக் காட்சியாக நரசிம்மர் சாந்த சொரூபனாக காட்சியளித்ததால் இன்று முதல் நீங்கள் இருவரும் இவ்வாறே பக்தர்களுக்கு காட்சியளிக்க வேண்டும் என சப்தரிஷிகள் வேண்ட அவ்வாறே இருக்குமாறு வரமளித்தாரம் இந்த லட்சுமிநரசிம்மர்.

    இந்த தலம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாறு வருமாறு:-

    முன்காலத்தில் தமிழகத்தில் சமண ஆதிக்கம் நிலவி வந்தது. இந்த இடத்தை ஆண்ட பல்லவ மன்னன் சமண சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். திருநீறும், திருமண்ணும் துவேஷத்தோடு பார்க்கப்பட்டன. கோயில்கள் இடிக்கப்பட்டன.

    பல்லவனின் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்தார் நரஹரி என்ற வைணவ ரிஷி. அவரைக் கொல்ல ஆணையிட்டான் மன்னன். வெகுண்டாராம் நரஹரி. என்னைக் கொல்ல ஆணையிட்ட உனக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கட்டும். உன் உடல் அழுகட்டும் என்று சாபமிட்டுக் காற்றோடு கரைந்தாராம் நரஹரி. மன்னனை பிரம்மஹத்தி தோஷம் பிடிக்க, உடல் வேதனையால் துடிக்க, மன்னனின் கெட்ட காலம் ஆரம்பித்தது. மன்னன் பைத்தியம் பிடித்தவன் போலானான்.

    சாபவிமோசனம் பெற நரஹரியை நாடெங்கும் தேடினான் மன்னன். ஆனால் அவர் கிடைக்கவில்லை. நோய் முற்றி புழுக்கள் உடலில் நெளியவே மன்னனின் மனைவி மக்கள் கூட அவனை வெறுத்து ஒதுக்கினார்கள். நாட்டை விட்டே வெளியேறிய மன்னன் ஒரு நாள் தென்பெண்ணையாற்றின் வடகரையில் ஒரு பூவரச மரத்தடியில் களைப்புடன் விதியை நொந்தபடி படுத்திருந்தான். அவன் ஆணவம் அழிந்து ஆதிக்க வெறியில் தான் செய்த பாவங்களுக்காகக் கண்ணீர் விட்டு கலங்கி சோர்ந்து அப்படியே தூங்கி விட்டான்.

    திடீரென்று விழித்தபோது, அவன் மேல் ஒரு பூவரச இலை விழுந்திருந்தது. கீழே விழுந்த அந்த இலையின் அதிர்வைக்கூட அவனால் தாங்க முடியாமல் அந்த இலையை நகர்த்த எண்ணி அதைக் கையில் எடுத்தான். அதில் லட்சுமி நரசிம்மர் உருவம் தெரிந்தது. பூவரச இலையில் பூத்த முறுவலுடன் நரசிம்மர் அன்னையுடன் சேர்ந்து இருப்பதைக் கண்டான். அவனையும் அறியாமல் கைகள் கூப்பின. கண்ணீர் பெருகியது. அப்போது வானிலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது.

    மன்னா, கோயில் கட்டுவதாக நினைத்தாலே கோடி புண்ணியம் உண்டாகும். நீ எத்தனை கோயில்களை இடித்திருக் கிறாய். அதற்குப் பிராயச்சித்தம் செய்தே ஆக வேண்டும். இந்தப் பூவரச மரத்தடியிலேயே லட்சுமி நரசிம்மருக்கு கோவில் எழுப்பு. அதுவே பூவரசமங்கலம் எனப் பெயர் பெறும் என்றும், மேலும் இந்தக் கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உன் மனத்தில் எழுந்த மறுகணமே உனக்கு விடிவு காலம் பிறக்கும்` எனசொல்லியதாம்.

    மன்னன் கோயில் கட்ட நினைத்த மறுகணமே அவன் உடலில் தெம்பு வந்தது. உடனே கோயில் கட்டும் வேலையில் ஈடுபட்டான். மனம் மாறவே, மதமும் மறைந்தது. மன்னன் மறுபடியும் மாமன்னன் ஆனான். பூவரச மங்கலத்தில் லட்சுமி நரசிம்மப் பெருமாளின் அருளாட்சியும் தொடங்கியது.

    கருவறையில் அழகு சொரூபமாக நரசிம்ம மூர்த்தியும், அமிர்தவல்லி தாயாரும் அருள் பாலிக்கின்றனர். இத்திருக்கோவிலில் இருக்கும் தாயார் அமிர்தத்திற்கு இணையான பலனை கொடுக்கவல்லவள். இதனால் அமுதவல்லி என திருநாமம் கொண்டு அழைக்கபடுகிறாள். கருவறையில் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்தவல்லித் தாயாரை) அனைத்துக்கொண்டிருக்கிறார். வலது கை அருள் காட்டுகிறது.

    இடது காலை மடக்கி வைத்து அதில் லட்சுமியை அமர்த்தியுள்ளார். நரசிம்மருடைய மடியில் பெருமிதத்துடன் தாயார் அமர்ந்திருக்கிறார். வலக்கரம் அன்புக்கரமாக அண் ணலைத் தழுவிக் கொண்டிருக்கிறது. ஒரு கண் அண்ணலை நோக்குகின்றது. மற்றொரு கண் பக்தர்களை நோக்கியுள்ளது. இது போன்ற அமைப்பு இந்த பூவுலகில் வேறு எங்கும் இல்லை.

    ஒரு கண் நரசிம்மர் மீது, மற்றொரு கண் பக்தர் மீது :

    முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் இத்தலத்தில் மகாலட்சுமியை தன் இடது மடியில் அமர்த்தி காட்சி அளித்தார். அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார்.

    உடனே நரசிம்மர், “நீ முனிவர்களை பார்த்து அருள்பாலிக்காமல் என்னை மட்டும் ஏன் பார்த்து கொண்டிருக்கிறாய்” என்றார். அதற்கு லட்சுமி, “கோபமாக உள்ள நீங்கள் உங்களது வெப்பத்தை, தரிசிக்க வரும் பக்தர்களிடம் காட்டக்கூடாது. எனவேதான் நான் உங்களையே பார்த்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

    அதன் பின் நரசிம்மரின் கட்டளைக்கிணங்க லட்சுமி ஒரு கண்ணால் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள்பாலித்து வருகிறாள்.

    பிரகாரத்தினுள் இராமானுஜர், நாகசன்னதியும் இருக்கிறது.

    இந்த லட்சுமி நரசிம்மபெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும். பதவி உயர்வு வந்து சேரும் மற்றும் எதிரிகள் எல்லாம் இல்லாமல் நண்பர்களாகி விடுகிறார்கள் என்பது ஐதீகம்.

    இந்த திருக்கோவிலில் பஞ்சராதிர ஆகமப்படி இரண்டு காலபூஜைகள் நடக்கின்றன. இதில் மற்றுமொரு சிறப்பு சித்திரை மாதம் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியன்று சகஸ்ரகலச திருமஞ்சனம் எனும் இந்த விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாளை வேண்டினால் கடன் தொல்லை தீரும், பொருள்கள் குவியும், இங்கே உற்சவர் வரதராஜ பெருமாள் இவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் காட்சி தருகிறார்.

    தினமும் இங்கே அன்னதானம் நடைபெறுகிறது. சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் மற்றும் பூஜைகள் உண்டு. பூவரசன்குப்பம் தலம் பற்றி மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த திருக்கோவில் பட்டரான பார்த்தசாரதியை 9585178444 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு தகவல்களை பெறலாம்.

    திருப்பணிக்கு உதவுங்கள் :

    பூவரசன் குப்பம் தலத்தில் மாத சுவாதி நட்சத்திரம், சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தி, தமிழ் வருடப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, , புரட்டாசி சனிக்கிழமை, வைகாசி விசாகம் கருட சேவை, தைமாதம் 5ம் தேதி தீர்த்தவாரி ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

    பூவரசங்குப்பம் ஆலயத்தில் தற்போது பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன. நீங்களும் இந்த திருப்பணியில் பங்கேற்கலாம். அந்த புண்ணியத்தைப்பெற நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

    ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் தேவஸ்தானம்,
    பூவரசன்குப்பம் - 605 105.
    மோட்ச குளம் வழி,
    விழுப்புரம் மாவட்டம்.
    போன்: +91-413 269 8191, 99435 30122.

    உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆலயம் சென்று ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை தரிசித்துவிட்டு வாருங்கள் உங்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெருகுவதை நீங்களே உணர்வீர்கள்.
    குழந்தைகளுக்கு இளவயதில் நோய் தாக்கம் ஏற்படக்கூடிய பாலாரிஷ்டம் எனும் ஜாதக ரீதியான அமைப்பு மெய்கண்டார் திருக்கோவிலின் திருநீறு அணிவதால் நீக்கம் பெறுகிறது
    கயிலாயத்தில் சிவபெருமானிடம் உபதேசம் பெற்றவர்கள், அகச்சந்தான குரவர்கள் எனப்படுவர். விண்ணிலேயே இருக்கும் இவர்கள், திருக்கயிலாய பரம்பரை எனவும் அழைக்கப்படுவர். முதன் முதலாக இந்த பரம்பரை பூமியில் (மண்ணில்) தோன்ற காரணமானவர் மெய்கண்டார்.

    விருத்தாச்சலம் அருகே உள்ள பென்னாகடத்தில் அச்சுத களப்பாளர் எனும் சிவபக்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு இறையருளால் பிறந்தவர் மெய்கண்டார். இவரது இயற்பெயர் சுவேதனப்பெருமான் என்பதாகும். இவருக்கு இரண்டு வயதாக இருக்கும்போது, தனது மாமனார் ஊராகிய திருவெண்ணைநல்லூரில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பொதிகை மலையில் இருக்கும் அகத்தியரை காணும் பொருட்டு, அகச் சந்தான ஆச்சாரியருள் ஒருவரான பரஞ்சோதி முனிவர் ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருந்தார்.

    திருவெண்ணைநல்லூரை நெருங்கியபோது, அவரது பயணம் தடைபட்டது. பூமியில் 2 வயது குழந்தை ஒன்று, பக்குவ நிலையில் இருப்பதை கண்டு தரையிறங்கிய அவர், அந்தக் குழந்தைக்கு தனது ஞான ஆசிரியரிடம் பெற்ற சிவஞான போதத்தை உபதேசித்தார். சத்யஞான தரிசினி எனும் தமது ஞான ஆசிரியர் பெயரை, தமிழில் மொழி பெயர்த்து, ‘மெய்கண்டார்’ என்று அந்தக் குழந்தைக்கு பெயரும் சூட்டினார்.

    சந்தான ஆச்சாரியர்களுள் முதன்மையானவராக போற்றப்படும் மெய்கண்டார், 18 சைவ ஆதீனங்கள் தோன்ற காரண கர்த்தா ஆவார். 13-ம் நூற்றாண்டில் சித்தாந்த சைவநெறி உபதேசமாக திருக்கயிலாயப் பரம்பரை என்று அழைக்கப்படும் 18 சைவ ஆதீனங்கள் மெய்கண்டாரையே முதன்மையாக கொண்டுள்ளது.

    சிவஞானபோதம் :

    மெய்கண்டார் தமது குருநாதரிடம் பெற்ற உபதேசத்தை சிவஞான போதம் எனும் தலைப்பில் தமிழில் நூலாக இயற்றினார். இது 12 சூத்திரங்கள் 40 வரிகள் 216 சொற்கள் 624 எழுத்துகள் உடையது. உலகில் தோன்றிய தத்துவ நூல்களுள் மிகவும் சுருக்கமான நூலாகும். இச்சிவஞான போதத்தை மணிமகுடமாகக் கொண்டு சித்தாந்த சாத்திரங்கள் பதிநான்கும் மெய்கண்ட சாத்திரம் என இன்றளவும் வழங்கப்படுகிறது.

    மெய்கண்டார் தமது நூலை, தன்னுடைய சீடர்களுக்கு உபதேசம் செய்து வந்தார். அப்போது மெய்கண்டாரின் குலகுருவாகிய சகல ஆகம பண்டிதருக்கு ஒரு வருத்தம் ஏற்பட்டது. ‘நம் வழிகாட்டுதல்படி பிறந்த குழந்தை, நம்மைக் கண்டு வணங்கி ஆசிபெறவில்லையே’ என்று வருந்தினார். மேலும் அந்தக் குழந்தை தானே குருவாக இருந்து உபதேசம் செய்வதும் அவருக்குப் பிடிக்கவில்லை. இதையடுத்து தனது மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து, திருவெண்ணைநல்லூருக்கு சென்று விவரம் அறிந்து வரும்படி அனுப்பிவைத்தார்.

    ஆனால் சென்றவர்கள் யாரும் திரும்பி வரவில்லை. அவர்கள் அனைவரும் மெய்கண்டாரின் உபதேசத்தைக் கேட்டு, அவரிடமே சீடர்களாக சேர்ந்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சகல ஆகம பண்டிதர், தானே நேரடியாக மெய்கண்டாரைச் சந்திக்க வந்தார். அவர் வந்த நேரத்தில், மெய்கண்டார் தன்னுடைய சீடர்களுக்கு ஆணவம் (அறியாமை) பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார்.

    அதை நிதானத்துடன் கேட்ட சகல ஆகம பண்டிதர், ‘ஆணவத்துக்கு ஒரு வடிவை காட்ட இயலுமா?’ எனக் கேட்டார்.

    உடனே மெய்கண்டார், ‘28 ஆகமங்களும் கற்று, ஆணவத்திற்கு வடிவம் இல்லை எனும் உண்மை உணராத நீங்கள்தான், ஆணவத்தின் வடிவம்’ என்று சுட்டிக் காட்டும் வகையில், அவரை தலை முதல் கால் வரை நோக்கினார்.

    மெய்கண்டாரின் ஞானப்பார்வை பட்ட மாத்திரத்தில், சகல ஆகம பண்டிதரின் அறியாமை நீங்கியது. ‘இவரே என்னை ஆட்கொள்ளும் குருநாதர்’ எனக் கருதிய அவர், மெய்கண்டாரின் திருவடியில் விழுந்து தம்மை சீடராக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.

    மெய்கண்டாரும், சகல ஆகம பண்டிதருக்கு திருநீறு இட்டு, அருள்நந்திசிவம் என்னும் தீட்சாநாமத்தைச் சூட்டி, தன்னுடைய தலைமை சீடராக ஏற்றுக்கொண்டார். அவரோடு சேர்த்து 49 பேர், மெய்கண்டாரிடம் உபதேசம் பெற்றனர். மெய்கண்டார் ஒரு ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரத்தின் போது திருவெண்ணெய்நல்லூரில் முக்தி அடைந்தார்.

    மெய்கண்டார் திருக்கோவில் :

    திருவெண்ணெநல்லூரில் மெய்கண்டாருக்கு திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவானதேசிக பரமாசாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆலயத்தில் மூலவராக அமைந்துள்ள மெய்கண்டாரை வணங்கினால், திருமணத் தடை, குழந்தை பேறின்மை, உடல் நலக்குறைவு முதலிய இடர்பாடுகள் நீங்கும் என்று தலபுராணம் கூறுகிறது.

    இங்கு சுமார் 500 ஆண்டுகள் பழமையான 2 யந்திரங்கள் உள்ளன. இவை யந்திரங்களில் தலைமையான திரு அம்பலச்சக்கரம் என்பவையாகும். வேண்டுபவர் களுடைய நோய்களை நீக்குவதும், வேண்டுவதை அருள்வதும் இந்தச் சக்கரங்களே என நம்பப்படுகிறது.

    ஆலயத்தின் வெளிப்பிரகார சுற்றுச்சுவரில் வடக்கு நோக்கிய நிலையில், சட்டைநாதர் வடிவில் ஒரு பைரவர் புடைச்சிற்பமாக அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும். இவருக்கு தினமும் நித்ய பூஜையும், அஷ்டமிகளில் விசேஷ பூஜையும், மாலை நேர பூஜையும் நடைபெறுகிறது.

    கட்டிடச் சிறப்பு :

    கோவிலின் மகாமண்டப மேற்கூரையின் நடுவில், ஒரு பிரமிடு வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கே சக்தி ஆற்றல் குவிக்கப்பட்டு மன ஒருமைப்பாடு நடக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமைந்ததுபோல், இங்கேயும் அதற்கும் சற்று பெரியதான பஞ்சாட்சர படி அமைந்துள்ளது. ‘நமசிவாய’ என்ற 5 அட்சரங்களும் யந்திரங்களாக இப்படிகளின் கீழே அமைந்திருப்பதால், இவை பஞ்சாட்சரபடி என அழைக்கப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சுவாதி அன்று மெய்கண்டார் குருபூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு குருபூஜை விழா வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. காலை 11 மணி அளவில் சிறப்பு வழிபாடும், இரவு 7 மணிக்கு மேல் பூப்பல்லக்கில் திருவீதி உலாவும் நடைபெற இருக்கிறது.

    ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றும், ஒவ்வொரு மாதமும் வரும் சுவாதி நட்சத்திர நாள் மற்றும் வியாழக்கிழமை அன்றும் குரு வழிபாடு விசேஷமாக நடைபெறும். மெய்கண்டாருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படும்.

    மெய்கண்டார் சன்னிதியில் வைக்கப்பட்டுள்ள சங்கில், தீர்த்தம் நிரப்பப்பட்டு பூஜை செய்யப்படும். இந்த சங்கு தீர்த்தம் மகிமை வாய்ந்தது. உடல் நலம் இல்லாத குழந்தைகளுக்கு இந்த தீர்த்தத்தை கொடுத்தால் உடனே குணம் அடைவார்கள் என்பது நம்பிக்கை. உடல் நலிவுற்ற ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் இந்த சங்கு தீர்த்தம் அருமருந்தாக வழங்கப்படுகிறது.

    திருநீற்று பிரசாத மகிமை :

    குழந்தைகளுக்கு இளவயதில் நோய் தாக்கம் ஏற்படக்கூடிய பாலாரிஷ்டம் எனும் ஜாதக ரீதியான அமைப்பு மெய்கண்டார் திருக்கோவிலின் திருநீறு அணிவதால் நீக்கம் பெறுகிறது. குழந்தைபேறு வேண்டி வழிபடுவோருக்கு உறுதியாக அவ்வரம் கிடைக்கப்பெறுகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வரக்கூடிய நோய்கள் அனைத்திற்கும் மெய்கண்டாரின் திருநீறு அணிவதால் குணம் அடைகிறது.

    இங்கு வழங்கப்படும் திருநீற்று பிரசாதம் மனிதர்கள் மட்டும் அல்லாது ஆடு, மாடு முதலிய விலங்கினங்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களை தீர்க்கும் மருந்தாக விளங்குவது வியப்புக்குரியது. மிகுந்த மன அழுத்தம் மற்றும் மனக்கவலை உடையவர்கள் இங்கே வழிபடுவதன் மூலம் மன அமைதி பெறுகிறார்கள். இங்கே மகா மண்டபத்தில் உள்ள விநாயகரை வழிபடுவதன் மூலம் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கப் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அமைவிடம் :

    திருவெண்ணைநல்லூர் மெய்கண்டார் கோவில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகாவில் அமைந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து அரசூர் கூட்டு ரோடு வழியாக 22 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. திருக்கோவிலூரில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருவெண்ணைநல்லூர் திருத்தலம். ரெயிலில் வருபவர்கள் விழுப்புரத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், கார் மூலம் திருவெண்ணைநல்லூரை அடையலாம். திருவெண்ணைநல்லூரின் வடக்கு வீதியில் மெய்கண்டார் கோவில் உள்ளது.
    ஆடுதுறை அபராதரட்சகர் திருத்தலத்தில் உள்ள இறைவன் அபராதரட்சகர், குற்றம் பொறுத்தவர், குற்றம் பொறுத்தருளிய நாயனார் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
    பெரம்பலூர் அருகே உள்ளது ஆடுதுறை அபராதரட்சகர் திருத்தலம். நீவா நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் சு.ஆடுதுறை என்று அழைக்கப்படுகிறது. இனாம் கிராமமாக இந்தக் கோவிலுக்கு இந்த ஊர் வழங்கப்பட்டதால், சுரோத்ரியம் (இனாம்) ஆடுதுறை எனவும், சுவேதகேது முனிவர் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி பாவம் நீங்கப்பெற்றதால் சுவேதகேது ஆடுதுறை எனவும், சுக்ரீவன் ஆடுதுறை எனவும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இவற்றின் சுருக்கமாக சு.ஆடுதுறை எனவும் அழைக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

    தட்சன் யாகத்தில் கலந்து கொண்டதால், சப்த ரிஷிகளான அகத்தியர், வசிஷ்டர், பரத்வாஜர், பராசரர், கவுதமர், காசிபர், கவுசிகர் ஆகிய முனிவர்கள் ரிஷி பதம் இழந்தனர். அந்தப் பாவம் தீர சப்தரிஷிகளும், நீவா நதியின் கரையில் ஏழு இடங்களில் சிவனை நினைத்து வழிபட்டனர். அந்த சப்த ஸ்தலங்களில் நான்காவதாக நடுவில் அமைந்துள்ள இடம்தான் ஆடுதுறை.

    காதல் லீலை :

    ஒருமுறை சுவேதகேது முனிவர், இறைவன் திருவடியை நினைத்து தவம் புரிந்தார். அப்போது அவர் உச்சரித்த, அபாயம் அகற்றும் ‘சிவாய நம’ என்னும் மந்திரம் உச்சரிப்பில் தடுமாறியது. அவரது மனம் தவத்தை மேற்கொள்ள ஒன்றுபடாமல் குரங்குபோல் பல நிகழ்வுகளை எண்ணிக் கொண்டிருந்தது. இந்த நிலை பற்றி சுவேதகேது முனிவர், தனது தந்தையான உத்தாலகரிடம் சென்று விளக்கம் கேட்டார்.

    அவர் தனது தத்துவ உபதேசத்தில், ‘மகனே! உனது தீர்த்த யாத்திரையின்போது தாகத்தால் தவித்த உன்னை, திலோத்தமை மோகத்தால் மயக்கி தன் மாயா வனத்திற்கு கொண்டு சென்றாள். அந்தப் பகுதியில் யாத்திரை மேற்கொண்டிருந்த முனிபுங்கவர்கள் பிருகு, மரீசி, அத்திரி, புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர் ஆகியோர் பிரதோஷ காலம் வரவே அங்கிருந்த சிவலிங்கத்தை வழிபட்டனர்.

    அந்த பூஜை வேளையில் நீ திலோத்தமையுடன் காதல் லீலை புரிந்து பேரின்பத்தை மறந்து சிற்றின்பத்தில் லயித்து இருந்தாய். இந்தக் குற்றத்தை செய்ததால் நீ இப்போது மனக்குழப்பத்தில் உள்ளாய். அந்த பாவம் அகல, நீவா நதியில் நீராடி சிவபெருமானிடம் நீ பாவமன்னிப்பு கோரினால் உன் பாவம் தொலையும்’ என்று கூறினார்.

    பாவ மன்னிப்பு :

    அதனைக்கேட்ட சுவேதகேது பெரிதும் மனம் வருந்தினார். தனது இந்த நிலைக்கு காரணமான திலோத்தமை மேல் தீராத சினம் கொண்டார். தனது மனம் குரங்குபோல் அலைந்து திரிந்ததற்கு காரணமான திலோத்தமையை குரங்காக பிறக்க சபித்தார். பின்னர் தந்தை சொல்படி யாத்திரை சென்று நீவா நதியில் நீராடி ஆடுதுறை ஈசனிடம் வேண்டி வணங்கி நின்றார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், அவருக்கு மன்னிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியால் இறைவன் திருநாமம் அபராதரட்சகர் என்றானது. அன்று முதல் இறைவன் குற்றம் நீக்கும் குணக்குன்றாக ஆடுதுறையில் அருள்பாலித்து வருகிறார்.

    இங்குள்ள இறைவன் அபராதரட்சகர், குற்றம் பொறுத்தவர், குற்றம் பொறுத்தருளிய நாயனார் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். இறைவி ஏலவார் குழலி அம்மை, எழில்வார் குழலி அம்மை, சுகந்த கூந்தலாம்பிகை என்று அழைக்கப்படுகிறார்.

    கோவிலின் அமைப்பு :

    வடவெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இந்தக் கோவில் கிழக்கு முகமாய் கம்பீரமாக நிற்கிறது. இந்த பகுதியிலேயே மிகப் பெரிய கோபுரத்தை கொண்ட கோவில் இதுவாகும். நீவா நதியில் நீராடி கணபதியை கைதொழ ஏதுவாக ராஜகோபுரத்திற்கு வெளியே வட கிழக்கு மூலையில் கோடி விநாயகர் கோவில் எழுப்பப்பட்டு உள்ளது. இதில் விநாயகர் விமான பிரதிஷ்டையுடன் கோவில் சுவரிலேயே எழுந்தருள செய்திருப்பது ஒரு சிறப்பாகும்.

    சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள இக்கோவில் 12–ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கக்கூடும் என்பதை கல்வெட்டுக்கள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. கோவிலின் முன்புறம் உள்ள ராஜகோபுரம் விஜயநகர மன்னன் மல்லிகார்ச்சுனராயர் என்பவரால் கி.பி.1450–ல் கட்டப்பட்டதாகும். ஏழு அடுக்கு கொண்ட இந்த கோபுரத்தில் உள்ள சுதை வேலைப்பாடுகளும், சிற்ப வேலைப்பாடுகளும் காண்போர் மனதை ஈர்க்கக்கூடியதாக உள்ளது.

    சூரிய கிரகணம் :

    ராஜகோபுரத்தை தாண்டி சென்றதும் வலப்புறத்தில் அலங்கார மண்டபமும், இடப்புறத்தில் ஊஞ்சல் மண்டபமும் உள்ளன. அதற்கு அடுத்து கல்யாண மண்டபம் உள்ளது. உள்மண்டப வாசலின் இருபுறமும் கணபதியும், முருகனும் வீற்றுள்ளனர். கோவிலுக்குள் இரு பிரகாரங்களும், ஒரு வெளி வீதியும் உள்ளன. முதல் பிரகாரத்து மண்டபத்தில் அருவ லிங்க வடிவில் மூலவர் உள்ளார். உள்மண்டப வட கிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் உள்ளன. சுற்றில் அம்பாளின் சப்த சொரூபங்கள், வலஞ்சுழி விநாயகர், தண்டபாணி, சுப்ர மணியர், வள்ளி, தெய்வானை, விசாலாட்சி, விஸ்வநாதர், பெருமாள், கஜலட்சுமி, சரஸ்வதி சன்னிதிகள் உள்ளன.

    அம்மன் சன்னதி தனியே தெற்கு நோக்கி முன்மண்ட பத்தில் அமைந்துள்ளது. சூரியன் இத்திருக்கோவிலில் பீடாதாரமாக எழுந்தருளியிருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். சூரிய கிரகணங்கள் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 11, 12, 13–ம் தேதிகளில் மூலவர் மேல்பட்டு இறைவனை சூரியன் பூஜிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மிகப்பெரிய கோவிலான இதில் சூரிய கிரகணம் மூலவர் மேல்படும் வகையில் கட்டப்பட்டு உள்ளது ஒரு சாதனையே ஆகும்.

    குரங்காக மாறிய திலோத்தமை :

    பாவம் செய்த திலோத்தமை, சுவேதகேது இட்ட சாபத்தை நாரதர் மூலம் அறிந்தாள். தனக்கு ஏற்பட்ட சாபம் தீர வழி யாது? என்று பிரகஸ்பதியிடம் வினவினாள். தேவகுரு, சுவேதகேதுவையே சந்தித்து சாபம் நீங்க வழி கேட்குமாறு அறிவுறுத்தினார். அபராதரட்சகர் தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த சுவேதகேதுவிடம் வந்தான் திலோத்தமை. தவசீலர் விழித்ததும் அவரது தாழ்பணிந்து சாபவிமோசனம் அளிக்கும்படி கோரினாள்.

    ‘ஓ திலோத்தமையே! எனது சாபம் பொய்க்காது. நீ தேவாம்சத்துடன் புவியில் நீலன் என்னும் வானரமாய் பிறப்பாய்! பின் மதுவனத்தில் உள்ள அபராதரட்சக பெருமானை வணங்கி விமோசனம் பெறுவாய்’ என்றார். தேவதச்சனின் மகனாக நீலம் பூத்த உடலுடன் நீலன் என்னும் குரங்காக திலோத்தமை பிறந்தாள். அபராதரட்சகர் தலத்திற்கு நீலனாக வந்தாள். நீவா நதியில் நீராடி இறைவழிபாடு செய்தாள். ஆடுதுறை பரமனும் நீலனை தனது அருட்பார்வையால் ஆட்கொண்டார்.

    பின்னர், ‘நீலனே! தேவர்கள் வானர வடிவில் கிஷ்கிந்தையில் தோன்றியுள்ளனர். நீயும் அவர் களுடன் சேர்ந்து கொண்டு ராமனுக்கு தொண்டு செய்வாய்’ என்று கூறினார். அதன்படி ராமனுடன் இருந்து சேது சமுத்திரப் பாலம் அமைக்க முக்கிய பங்காற்றி பெருமை பெற்றாள். இறுதியில் அங்கதன், சுக்ரீவன், அனுமன், சுஷேணன் ஆகிய வானரர்களுடன் ஒருங்கே ஆடு துறைக்கு வந்து நீவா நதியில் நீராடி இறைவனை வணங்கி சாபம் நீங்க பெற்றாள். வானரங்கள் நீராடியதால் அத்தலம் ‘வானர ஸ்நான தீர்த்த புரம்’ எனவும் அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் உள்ள அம்மன் சன்னிதிக்கு எதிரில் நீலன், அனுமன் முதலானோரின் சிற்பங்கள் மண்டப தூண்களில் செதுக்கப்பட்டு உள்ளது. கோபுரத்திலும், மண்டப தூண்களிலும் குரங்கு சிற்பங்கள் அதிக அளவில் உள்ளன.

    பெரம்பலூர் தாலுகா தொழுதூர்–திட்டக்குடி சாலையில் ஆக்கணூருக்கு தெற்கே ½ மைல் தொலைவிலும், திருச்சி–விழுப்புரம் ரெயில் பாதையில் பெண்ணாடம் ரெயில் நிலையத்தில் இருந்து மேற்கே 12 மைல் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
    ×