என் மலர்tooltip icon

    கோவில்கள்

    கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையார் ஆலயத்தை ராஜேந்திர சோழன், தனது தந்தை ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியக் கோவிலைப் போன்றே வடிவமைத்தான்.
    தஞ்சைக்கு அடுத்ததாக பிற்கால சோழர்களின் தலைநகராக இருந்த பெருமைக்குரிய ஊர் கங்கைகொண்டசோழபுரம். ராஜராஜசோழனின் மகனும் கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவனுமான ராஜேந்திர சோழனால், தனது கங்கை படையெடுப்பின் வெற்றிச் சின்னமான நிர்மாணிக்கப்பட்ட ஊர், கங்கைகொண்ட சோழபுரம்.

    தனது தந்தை ராஜராஜசோழன் தென்திசையிலுள்ள நாடுகளை வெற்றிக்கொண்டு, அந்த நினைவை போற்றும் விதமாக தஞ்சையில் மிகப்பெரிய கற்றளியை கட்டியதுபோல, தானும் பல வெற்றிகளைப் பெற்று அதன் நினைவாக ஒரு கற்றளியை எழுப்ப வேண்டும் என்பது ராஜேந்திர சோழனின் ஆசை. அதன்படி கட்டப்பட்டதுதான் கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பெருவுடையார் கோவில். இந்த ஆலயம் மாடக்கோவில் என்று அழைக்கப்படும் விமானங்களைக் கொண்டவை.

    ஆலய அமைப்பு :

    இந்த ஆலயத்தை ராஜேந்திர சோழன், தனது தந்தை ராஜராஜ சோழன் கட்டி தஞ்சை பெரியக் கோவிலைப் போன்றே வடிவமைத்தான். தஞ்சைகோவில் 216 அடி உயரமும் நான்கு பட்டை வடிவிலான விமானத்துடன் 9 தளங்களைக் கொண்டது. கங்கைகொண்டசோழபுரம் கோவில் 180 அடி உயரமும் எட்டு பட்டை வடிவிலான விமானத்துடன் 7 தளங்களைக் கொண்டது.

    கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்தில், அனைவரையும் கவரும் அமைப்பாக ஆலய விமானத்தைக் குறிப்பிடலாம். தஞ்சை கோவிலுக்கு அடுத்து கங்கைகொண்டசோழபுரம் விமானமே தமிழ்நாட்டில் உள்ள விமானங்களில் உயர்ந்தது. உள்ளே இருக்கின்ற லிங்கத்தின் பரிமாணத்திற்கேற்ப விமானம் கட்டப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் வடக்கு என இரு வாசல்கள் உள்ளன. கோவிலுக்கு முன்னாள் திருக்குளம் அமைந்துள்ளது.

    கோவில் அமைப்பில் கருவறை, அர்த்தமண்டபம், இடைநாழி, மணிமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், நந்திமேடை ஆகியவை இடம்பெற்றுள்ளன. பிரகாரமானது தென் கயிலாயம், விநாயகர் சன்னிதி, வடகயிலாயம் (அம்மன் சன்னிதி), சண்டிகேஸ்வரர் சன்னிதி, வடவாசல் மண்டபம், கொற்றவை சன்னிதி, சிங்கமுகக்கிணறு, திருச்சுற்று மதில் ஆகியவற்றுடனும் விளங்குகிறது. கோவிலின் கிழக்கு வாசலிலும், கர்ப்ப கிரகத்தின் முன்னேயும், தெற்கு வாசலிலும் 10 அடி உயரத்தில் துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர்.

    மகாமண்டபம், இடைநாழி மற்றும் கருவறை புறச்சுற்றுகளிலும், விமானத்தின் மாடங்களிலும் மகாலட்சுமி, கங்காளமூர்த்தி, நர்த்தன விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், ஆலமர்செல்வன், அரிகரன், ஆடவல்லான், கவுரிபிரசாதமூர்த்தி, லிங்கோத்பவர், திருமால், முருகப்பெருமான், சிவன்-பார்வதி, காலசம்ஹாரமூர்த்தி, எண்தோள் காளி, பிரம்மா, சரஸ்வதி, பைரவமூர்த்தி, சண்டேசர், ஞானசரஸ்வதி ஆகிய சிற்பங்கள் உள்ளன.

    13 அடி உயரமும் 20 அடி சுற்றளவும் கொண்ட லிங்கம், 45 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார் மேல் பொருத்தப்பட்டுள்ளது. பழமைவாய்ந்த லிங்கங்களில் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் இதுவேயாகும். மகாமண்டபத்துக்குள் பல அரிய சிற்பங்கள் உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கது சூரியபீடமாகும். (சூரியனின் தேர்போன்ற ஒரேகல்லில் வடிக்கப்பட்ட நவக்கிரகங்கள்). இதையொட்டி பைரவர் சூரியன் மற்றும் சிம்மதுர்கை இடம்பெற்றுள்ளனர். மகாமண்டபத்தின் வடதிசையில் நடராஜர், வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர், தென்திசையில் உற்சவத் திருமேனிகள் இடம்பெற்றுள்ளன. தென்புறத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார்.

    கும்பாபிஷேகம் :

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழா 84 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, மாநில அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை மற்றும் இந்துசமய அறநிலையத்துறை ஆகியவை எடுத்துள்ளன. சுமார் 2 கோடி மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. வருகிற 2-2-2017 அன்று (வியாழக்கிழமை) இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடத்தப்படும்.

    இந்த விழாவிற்காக 17 வேதிகைகள், 51 ஹோமகுண்டங்கள் கொண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் முன்னதாக யாகசாலை பூஜைகள் தொடங்கப்படவுள்ளது. கும்பாபிஷேக விழாவில் புதிய கொடிமரம் நிலைநாட்டுதல் மற்றும் 9 அடி உயரத்திற்கு புதிய கலசம் வைத்து அதற்கு கங்கைநீரைக் கொண்டு கும்பாபிஷேகம் செய்தல் என்ற இரண்டு சிறப்பம்சங்கள் இடம்பெற உள்ளன. இதற்காக 35 லட்ச ரூபாய் மதிப்பில், 48 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம் தயாரிக்கப்பட்டு தங்க கவசம் பொருத்தப்பட்டுள்ளது.

    பகீரதன் விண்ணுலகில் இருந்து கங்கையை மண்ணுலகிற்கு கொண்டு வந்தான். அதே போல வடஇந்தியாவில் இருந்து கங்கை நீரை தென்னிந்தியாவிற்கு கொண்டு வந்து பெருவுடையார் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்தான் ராஜேந்திர சோழன். பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெற உள்ள இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவிலும் கங்கை நீரே பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக உத்திரகாண்ட் மாநிலம் பிரயாகையில் இருந்து 108 கேன்களில் கங்கைநீர் எடுத்துவரப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம் திருலோக்கி உமாமகேஸ்வரர் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. விழா நேரத்தில் மேளதாளங்கள், வேத மந்திரங்கள் முழங்க கங்கை நீர், பெருவுடையார் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது.

    அமைவிடம் :

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் திருச்சி-சிதம்பரம் தேசியநெடுஞ்சாலையில் ஜெயங்கொண்ட சோழபுரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் கிழக்காகவும், விக்கிரவாண்டி- தஞ்சை தேசியநெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் மேற்காகவும் அமைந்துள்ளது கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையார் கோவில்.

    வரலாற்றை மீள்உருவாக்கம் செய்யும் விதமாக 84 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த மாபெரும் விழாவில் கலந்துகொண்டு பெருவுடையார் அருளையும் பெறுவோம்.
    குளித்தலையில்தான் அமைந்துள்ளது காவிரியின் தென்கரையில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் 65-வது தலம் என்று புகழப்படும் கடம்பவன நாதர் திருக்கோவில்.
    மலைக்கோட்டை மாநகர் என்று அழைக்கப்படும் திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கே 33 கி.மீ. தொலைவில், கரூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காவிரி பாயும் வளமான நகரம் குளித்தலை. இந்த திருத்தலத்தை கடம்பதுறை, தட்சிணாகாசி, குழித்தண்டலை என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். இந்த குளித்தலையில்தான் அமைந்துள்ளது, காவிரியின் தென்கரையில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் 65-வது தலம் என்று புகழப்படும் கடம்பவன நாதர் திருக்கோவில்.

    துறை என்றால் ஆற்றின் கரையோரம் அமைந்த ஊர் என்று பொருள்படும். எனவே கடம்ப மரங்கள் நிறைந்த காவிரிக்கரை ஊர் என்பதால் கடம்பந்துறை என்பது பொருத்தமே யாகும். பெயருக்கு ஏற்ப திருக்கோவிலின் வெளிச்சுற்று முழுவதும் உள்ள நந்தவனத்தில் கடம்ப மரங்கள் நின்று அசைந்தாடுகின்றன.

    ‘முற்றிலா முலையாள் இவளாகிலும்
    அற்றந்தீர்க்கும் அறிவில ளாகிலும்
    கற்றைச் செஞ்சடை யான்கடம்பந் துறைப்
    பெற்றம் ஊர்தியென்றால் எங்கள் பேதையே’

    என்பது அப்பர் பெருமானின் முதல் தேவாரப் பதிகமாகும். இவர் பத்துப் பாக்களால் இத்திருத்தலத்தைப் புகழ்ந்துள்ளார்.

    டக்கு நோக்கிய மூலவர் :

    வடக்கு நோக்கியுள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்தைத் தரிசித்து விட்டு உள்ளே நுழைந்தால், நந்தி தேவர் அமர்ந்திருக்கிறார். அவருக்கு நேர் எதிர் கருவறையின் உள்ளே சிறிய சிவலிங்கத் திருமேனியுடன் இறைவன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கடம்பவன நாதர் என்று பெயர் பெற்ற இந்த இறைவன் வடக்கு திசை நோக்கி வீற்றிருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிவாலயங்களில் சென்னை கோயம்பேடு குறுங்காலீசுவரரும், குளித்தலை கடம்பவனநாதரும் மட்டும்தான் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளனர். மூலவருக்குப் பின்புறம் கருவறையில் சப்த கன்னியர்கள் வீற்றிருப்பது எங்குமில்லாத சிறப் பம்சமாகும்.

    இதுபற்றி தலவரலாறு ஒன்று உண்டு :

    தூம்ரலோசனன் என்ற அரக்கன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க அம்பாள், துர்க்கை வடிவமெடுத்து போரிடச் சென்றாள். ஆனால் துர்க்கையால் அரக்கனின் அட்டகாசத்தை அடக்க முடியவில்லை. எனவே அவள், சப்த கன்னியரை தனக்கு துணையாக அழைத்துக் கொண்டுபோய், மீண்டும் அசுரனுடன் போர் புரிந்தாள். இதில் அசுரன் வதம் செய்யப்பட்டான். அசுரனை அழித்த தோஷம் நீங்க, சப்த கன்னியர்கள் அனைவரும் இத்தல இறைவனை பூஜிப்பதாக ஐதீகம். இந்த ஆலயத்தில் துர்க்கை அம்மன் இல்லை. சப்த கன்னியருள் ஒருவரான சாமுண்டியே, துர்க்கையாக இருப்பதாக கூறப்படுகிறது. இவருக்கே ராகு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

    சுவாமி வடக்கு நோக்கி இருப்பதால், எதிரே தெற்கு நோக் கியபடி ஆடவல்லான் நடராஜர் இருக்கிறார். அவரது காலடியில் முலயகன் இல்லை. பிரகாரம் வலம் வரும்போதே மூலவருக்கு கோஷ்டத்தின் பின்புறம் வழக்கமாக லிங்கோத்பவரோ, மகாவிஷ்ணுவோ இருப்பார்கள். ஆனால் இங்கே தட்சிணாமூர்த்தி இருக்கிறார். கிழக்கு நோக்கியபடி விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், அவருக்கு எதிரில் லிங்கோத்பவர் காட்சி தருகிறார்.

    கிழக்கு நோக்கிய தனிச்சன்னிதியில் அம்பிகை ‘முற்றிலா முலை அம்மை’ என்ற பெயரில் அருளாட்சி தருகிறார். அப்பர் தனது முதல் பதிகத்தில் இந்த அம்மனைப் பற்றிதான் குறிப்பிடுகிறார். அறுபத்து மூவர் மூர்த்தங்களும், நவக்கிரகங் களும் திருக்கோவில் சுற்றில் வீற்றிருக்கிறார்கள்.

    கடம்பவன நாதரை சப்த கன்னியர் மட்டுமில்லாது, அகத்தியரும், கண்ணுவ முனிவரும் வழிபட்டுள்ளனர். முருகப் பெருமான் பூஜித்த தலம் என்பதால் கந்தபுரம் என்றும், அசுரனிடமிருந்து திருமால் வேதங்களை மீட்க இத்தல இறைவனை வழிபட்டதால் சதுர்வேதபுரம் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.

    ‘காமன் காய்ந்தபிரான் கடம்பந்துறை
    நாமம் ஏந்த தீவினை நாசமே’
    என்ற அப்பரின் வாக்குப் புனிதமாக, நம் தீவினைகள் தீர்க்கும் கடம்பந்துறை திருக் கோவிலை ஒரு முறை வலம் வரலாமே.
    கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபட்டால், 16 வகையான பேறுகளை அடைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெறலாம்.
    கேரள மாநிலம், திருச்சூரில் வடக்குநாதர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபட்டால், 16 வகையான பேறுகளை அடைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெறலாம்.

    தல வரலாறு :

    ஜமதக்னி முனிவர், ரேணுகாதேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் பரசுராமர். இவர் விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார். ஜமதக்னி முனிவரிடமிருந்த காமதேனுப் பசுவின் சிறப்புகளை அறிந்த கர்த்தவீரியன் என்ற மன்னன், அந்தப் பசுவைத் திருடிச் சென்று விட்டான். கர்த்த வீரியனை அழித்துப் பசுவை மீட்டு வந்தார் பரசுராமர். இதனால் கர்த்தவீரியனின் மகன்களுக் கும், பரசுராமருக்கும் பகை ஏற்பட்டது. இதனால் அவர்கள் பரசுராமரின் தந்தையான ஜமதக்னியை கொன்றனர். இதையடுத்து அரச குலத்தவர் மீது கோபம் கொண்ட பரசுராமர், கர்த்த வீரியன் மகன்களை அழித்ததுடன் நிற்காமல் அரச குலத்தவர்கள் பலரையும் அழித்தார்.

    அதனால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க நினைத்த பரசுராமர், சிவபெருமானுக்குப் பல கோவில்களை நிறுவ விரும்பினார். அதற்காகக் கடல் அரசனிடம் சென்ற அவர், சிவபெருமான் கோவில்களுக்காகப் புதிய இடத்தை உருவாக்க உதவும்படி வேண்டினார். கடல் அரசனும் அவர் வேண்டுகோளை ஏற்று, பரசுராமரின் கையிலிருந்து வீசியெறிந்த வேள்விக்கான அகப்பை விழுந்த இடம் வரைப் பின் வாங்கிப் புதிய நிலப்பரப்பை உருவாக்கிக் கொடுத்தான்.

    புதிய நிலப்பரப்பில் ஒரு மேடான இடத்தில், சிவபெருமானுக்கு முதல் கோவில் அமைக்க விரும்பினார் பரசுராமர். அதன்படி வடக்குப் பகுதியில் இருந்த நிலத்தை சிறிய குன்று போல் உயர்த்தி கோவில் அமைத்தார்.

    சிவபெருமான், தன்னுடைய சிவ கணங்களில் ஒன்றான சிம்மோதரன் என்பவனை, கோவிலுக்குள் நடைபெற்று வரும் பணிகளை கவனித்து வரும்படி அனுப்பினார். ஆனால் போனவன் வரவில்லை. அங்கிருந்த அமைதி அவனை கட்டிஇழுத்தது. அங்கேயே அமர்ந்து தியானத்தில் மூழ்கினான்.

    நீண்ட நேரமாகியும் சிம்மோதரன் வராததால், உள்ளே சென்றார் சிவபெருமான். தன்னிலை மறைந்திருந்த சிம்மோதரனை தன் காலால் உதைத்தார். அதன் பிறகு அங்கிருந்த தூணில் ஒளிமயமாகி நின்றார். கோவில் பணி நிறைவடையாத நிலையில், இறைவன் கோவிலுக்குள் வந்து விட்டதை உணர்ந்த பரசுராமர், இறைவனின் கோபத்தைக் குறைப்பதற்காக அவரை நெய் கொண்டு குளிர்வித்தார். இதனால், இறைவனின் உருவம் நெய்லிங்கமாக மாறியது. 12 அடி உயரம், 25 அடி அகலம் எனும் அளவில் அமைந்த இந்த லிங்கம் முழுவதும் நெய்யால் ஆனது. அமர்நாத் கோவில் லிங்கத்தைப் ‘பனிலிங்கம்’ என்று அழைப்பது போல், இந்தக் கோவில் இறைவனை ‘நெய்லிங்கம்’ என்று சிறப்புப் பெயரால் அழைக்கின்றனர்.

    மூலவருக்கு நெய் கொண்டுதான் அபிஷேகம் செய்கின்றனர். சில வேளைகளில் பன்னீர், சந்தனம் அபிஷேகங்கள் செய்யப்படுவதுண்டு. கோடைக்காலத்தின் வெப்பமோ, மூலவருக்குக் காட்டப்படும் தீப ஆராதனையில் இருந்து வரும் வெப்பமோ இந்த நெய்யை உருகச் செய்வதில்லை. இருப்பினும், இந்த நெய் லிங்கத்தைப் பாதுகாப்பதற்காகப் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது. பரசுராமரால் உருவாக்கப்பட்ட புதிய நிலப்பரப்பில் வடக்கிலிருந்த குன்றில் இறைவன் இருந்ததால், இத்தல இறைவன் வடக்குநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

    கோவில் அமைப்பு :
     
    திருச்சூர் வடக்குநாதர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் போன்றே நான்கு புறமும் பெரிய கோபுரத்துடனான வாசல்களைக் கொண்டிருக்கிறது. வட்ட வடிவத்திலான கருவறையில், சிவபெருமான் மேற்கு நோக்கிய நிலையில் இருக்கிறார். பின்புறம் அமைந்திருக்கும் சன்னிதியில் பார்வதிதேவி கிழக்கு நோக்கியபடி வீற்றிருக்கிறார். கோவில் வளாகத்தில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ராமர், சங்கரநாராயணர், கணபதி ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. இந்த ஐந்து தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக வழிபாடு நடத்தப்படுகிறது என்பது தனிச்சிறப்பாகும். ஆலயத்தில் சிம்மோதரனுக்கும், கோவிலை நிறுவிய பரசுராமருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் சங்கு, சக்கரத்துடன் ஆதிசங்கரருக்கான சமாதியும் இடம் பெற்றிருக்கிறது.

    வழிபாட்டுப் பலன்கள் :

    இங்கு மூலவராக இருக்கும் லிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை வாங்கிச் சாப்பிட்டால், நாள்பட்ட நோய்கள் தீரும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும்.

    மூலவருக்கு, இரவு எட்டு மணிக்கு மேல் நடைபெறும் ‘திருப்புகா வழிபாடு’ எனும் வழிபாட்டைத் தொடர்ந்து, 41 நாட்கள் பார்த்து வந்தால், வழிபடுபவர்கள் நினைக்கும் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும். இந்த இரவு நேர வழிபாட்டிற்குத் தேவலோகத்தினர் பலரும் வருவதாகவும், அவர்கள் வருகைக்கு இடையூறு எதுவும் செய்து விடக்கூடாது என்பதற்காக, இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் வழிபாட்டிற்கு இடையில் கோவிலுக்கு வெளியேச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இரவு வழிபாடு முடிவடைந்த பின்னரே கோவிலை விட்டு வெளியேற முடியும்.

    இக்கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு, அவர் களின் மகிழ்ச்சிக்குத் தேவையான அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், திருச்சூர் மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் தேக்கின்காடு எனப்படும் சிறிய குன்றுப்பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து பல நகரப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    விலகி இருக்கும் நந்தி :

    சிவபெருமான் கோவில்களில் பொதுவாக நந்தி எதிர்புறம் மூலவரை நோக்கியபடி அமைந்திருக்கும். ஆனால், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் நந்தி எதிர்புறம் இல்லாமல், விலகி தனி மண்டபத்தில் இருக்கிறது. பிரதோஷக் காலங்களில் மட்டும் சிவபெருமான் இந்த மண்டபத்தில் எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருளும் நிகழ்வுகள் நடத்தப்பெறுகின்றன.

    அமிர்தம் கிடைக்க தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள். அந்த பாம்பு கோவில் கருவறை முன்பிருக்கும் வாசலில், மணியாக இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. இதனால், பிரதோஷக் காலங்களில் இந்த மணியைத் தலைமை அர்ச்சகர் மட்டும் அடித்து ஒலி எழுப்புவார்.

    திருவிழா இல்லை :

    திருச்சூர் வடக்குநாதர் கோவில் ‘பெருந்தச்சன்’ என்பவரது காலத்தில் கட்டுமானம் செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. அவரது காலத்திற்குப் பின் நம்பூதிரிகளின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. இந்த நம்பூதிரிகளில் இருந்து ஒருவர் ‘யோகதிரிப்பாடு’ எனும் பெயரில் நிர்வாகத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, நிர்வாகம் நடைபெற்றது. அதன் பிறகு, கொல்லம் ஆண்டு 981-க்குப் பின் கொச்சியை ஆண்ட மன்னன், ராஜா சக்தன் தம்புரான் என்பவரது காலத்தில், இந்த நடைமுறை மாற்றப்பட்டுக் கோவிலைப் பொதுமக்களே நிர்வகிக்கத் தொடங் கினர்.

    மன்னரின் காலத்தில், கோவிலைச் சுற்றிலும் அமைந்திருந்த தேக்கு மரக்காட்டை அழிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அப்பகுதி மக்கள், அங்கிருந்த மரங்களெல்லாம் சிவபெருமானின் சடைமுடியாகத்தான் இருக்கும். அதை அழிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவர்களின் எதிர்ப்புகளை மீறி அங்கிருந்த காடு அழிக்கப்பட்டது. அதன் பிறகு இந்தக் கோவிலில் நாற்பத்தியொரு நாட்கள் வரை நடத்தப்பட்டு வந்த திருவிழா நடத்த முடியாமல் போய்விட்டது என்கின்றனர்.

    திருச்சூர் பூரம் திருவிழா:

    கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோவில் அமைந்திருக்கும் தேக்கின்காடு பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளில் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ நடத்தப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு எதிரில் உள்ள பாரமேட்டுகாவு பகவதி, திருவெம்பாடி பகவதி ஆகியோர் வடக்குநாதரைப் பார்க்கும் பூரம் நாள் தான் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ என்கின்றனர். இந்தத் திருவிழா வடக்குநாதருக்கு மட்டும் நடத்தப்படுவதில்லை.

    இந்தத் திருவிழாவின் போது, இந்த ஊரிலுள்ள நான்கு அம்மன் கோவில்களில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும் யானைகள், அணிவகுத்து நிற்பது சிறப்பாக இருக்கும். இவ் விழாவில் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் எதிர் எதிர் திசைகளில் நின்று முத்துக்குடை பரிமாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இந்தத் திருவிழாவில் யானைகள் அலங்காரம் மற்றும் வண்ணமயமான முத்துக்குடைகள் ஆகியவற்றைக் காண்பதற்காக கேரளா, தமிழகம் மட்டுமில்லாமல், கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவில் சிறப்புகள் :

    * இந்தக் கோவிலுக்கு முதன் முதலாக வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள், இங்குள்ள வியாசமலையில் ‘ஹரி ஸ்ரீகணபதியே நமஹ’ என்று தங்களது கைகளால் எழுதி வேண்டிக்கொள் கிறார்கள். இவ்வாறு வேண்டிக்கொண்டால் அடுத்த முறை இந்த ஆலயத்திற்கு வரும்போது, தன்னுடைய வாழ்வில் உயர்ந்த நிலையை பெற்றிருப்பார் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    * குழந்தைப்பேறு இல்லாமலிருந்த சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதியர் இங்கிருக்கும் இறைவனை வேண்டித்தான், ஆதிசங்கரரைத் தங்களது மகனாகப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    * ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் முதல் நாளில் இந்தக் கோவிலில் ‘யானையூட்டு விழா’ நடத்தப்படுகிறது. இவ்விழாவின் போது, இக்கோவிலின் தெற்குக் கோபுர வாசலில் அணிவகுத்து நிற்கும் யானைகளுக்குக் கஜவழிபாடு செய்யப்படும். இதில் கலந்துகொள்ளும் பக்தர்கள், யானைகளுக்கு உணவளித்து மகிழ்ச்சியடைகின்றனர்.

    * இந்தக் கோவிலில் சிவராத்திரி நாட்களில் கோவிலைச் சுற்றிலும் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
    சென்னை, வண்டலூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கொளப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது ஆனந்தவல்லி அம்மை உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம்.
    சென்னை, வண்டலூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கொளப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது ஆனந்தவல்லி அம்மை உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம்.

    இங்குள்ள இறைவன் அகத்தீஸ்வரர் என்றும் தாயார் ஆனந்தவல்லி என்றும் அழைக்கப்படுகின்றன. இது சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் முதன்மையான தலமாக கருதப்படுகிறது.

    இது தொண்டை மண்டலத்தின் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு அகத்தியரும் வாகீச முனிவரும் வந்து வழிபட்டிருக்கின்றனர்.

    இது 1300 ஆண்டுகளுக்கும் பழமையான திருத்தலமாகும். இந்த கோவிலில் சிவபெருமானை பார்த்தப்படி மேற்கு நோக்கிய திசையில் சூரிய பகாவனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சூரியன் சிவனை வணங்குவதாக ஐதீகம். எனவே இக்கோவிலில் சூரியனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    சூரிய பகவானுக்கு ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்படுகிறது. தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குவதால் பக்தர்கள் இங்கு வந்து தோஷ நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.

    மூலச் சந்நிதியின் பின்புறம், தென்கிழக்கில் ராஜகணபதி அமர்ந்து காட்சி தருகிறார். அதன் பக்கத்தில் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மையாரும் அருள் பாலிக்கிறார்கள். அதன் பக்கத்தில் ருனஹர ஈஸ்வரர் அருள்பாலிக்கிறார். மனதில் ஏற்படும் ரணங்களை தீர்க்கவல்லர் என்பது ஐதீகம்.

    வடமேற்கு மூலையில் முருகன் வள்ளி தெய்வாயானையுடன் காட்சி தருகிறார். முருக வாகனமான மயில் மரக பச்சை கல்லால் செய்யப்பட்டது என்பது ஒரு சிறப்பு. வடக்கிழக்கு மூலையில் பைரவருக்கான தனி சந்நிதி உண்டு.

    சூரியனார் கோவிலுக்கு இணையான தலம் என்பதால், அங்கு செல்ல இயலாதவர்கள் இத்தலத்திற்கு வந்து சூரியனுக்குரிய பரிகார பூஜைகளை செய்யலாம். சென்னையில் அமைந்துள்ள அற்புதமான சூரியன் தலம் அனைவரும் சென்று காண வேண்டிய திருத்தலம்.
    கோள்களின் நாயகனான சூரியன், இத்தல மூர்த்தியிடம் சரணடைந்து, பலன்பெற்றதால் நவகோள்களால் ஏற்படும் இன்னல்கள், தோஷங்கள் இத்தல சக்கரபாணி சுவாமியை வழிபட விலகும்.
    சிவபெருமானுக்கு உகந்தது வில்வ இலை. பொதுவாக சிவன் கோவில்களில்தான் வில்வ இலையால் அர்ச்சனை நடைபெறும். அதே நேரத்தில் பெருமாளுக்கு உகந்தது துளசி இலை. ஆனால் கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவிலில் பெருமாளுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

    ஜலந்தராசுரன் என்ற அசுரனை அழித்து வருமாறு, திருமால் தனது சக்கராயுதத்தை அனுப்பினார். அதன்படி பாதாள உலகத்தில் இருந்த அசுரனை அழித்த சக்கராயுதம், கும்பகோணம் திருத்தலத்தில் பொன்னி நதியில் நடுவில் பூமியை பிளந்து கொண்டு மேலெழுந்து வந்தது. அப்பொழுது புண்ணிய நதியில் நீராட வந்த பிரம்மதேவன், திருமாலின் அம்சமான ஸ்ரீசக்கரத்தை, காவிரிக்கரையில் பிரதிஷ்டை செய்து, சக்கரபாணி சுவாமியாக நினைத்து வழிபட்டு வந்தார்.

    சக்கரபாணி சுவாமியின் பேரொளியைக் கண்ட சூரியன், பிரம்மதேவர் எச்சரித்தும் கேட்காமல், தன் ஒளியைக் கூட்டி வெப்பத்தால் உலகைச் சுட்டெரிக்க முற்பட்டார். ஆனால் சக்கரபாணி சுவாமி, சூரியனின் ஒளி முழுவதையும் கிரகித்து சூரியனை வலுவிழக்கச் செய்து விட்டார். தன் தவறை உணர்ந்த சூரியன், சக்கரபாணி சுவாமியைப் பணிந்து வழிபட்டு தன் சக்தியை மீண்டும் பெற்றார். இதனால் கும்பகோணத்திற்கு ‘பாஸ்கர ஷேத்திரம்’ என்ற பெயர் ஏற்பட்டது.

    காவிரியில் ஸ்ரீசக்கரம் தோன்றிய துறை, இப்பொழுதும் ‘சக்கர படித்துறை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்கரப் படித்துறையில் நீராடுவது, காசியில் கங்கை நதியில் நீராடுவதற்கு ஒப்பானது.

    இந்தத் திருத்தலத்தில் சக்கரபாணி சுவாமியின் சன்னிதி கட்டுமலை மேல் அமைந்துள்ளது. மேலே படி ஏறிச் செல்ல வடக்கிலும், தெற்கிலும் உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரையான உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையான தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் பயன்படுத்தப்படுகின்றன.

    படி ஏறி மேலே சென்றதும் முன் மண்டபத்தில் கருவறைக்கு எதிரில், கைகூப்பி சுவாமியை தொழுதவாறு நிற்கும், செப்பினால் செய்யப்பட்ட சரபோஜி மன்னர் மற்றும் அவருடைய மகள் உருவச் சிலைகளைப் பார்க்கலாம். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் மகளுக்கு ஏற்பட்ட தீராத நோய், சக்கரபாணி சுவாமியை வழிபட்டதால் குணமானதாக கூறப்படுகிறது.

    கருவறையில் வட்டமான சக்கரத்தின் நடுவில், அறுகோணத்தில் சாய்ந்து கொண்டு, பதும பீடத்தின் மேல் எட்டுத் திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார் சக்கரபாணி சுவாமி. எட்டு கரங்களிலும் திகிரி, உலக்கை, அங்குசம், தாமரை, சங்கு, வில் அம்பு, பாசம், கதை ஆகியவற்றை ஏற்றிக்கொண்டிருக்கிறார். ஜூவாலை வீசும் திருமுடியும், மூன்று கண்களுமாக காணப் படும் சக்கரபாணி சுவாமியின் அருகில், அபய, வரத முத்திரைகளுடன் சுதர்சனவல்லி தாயார் காட்சியளிக்கிறார்.

    ஸ்ரீ சக்கர பாணி சுவாமி சன்னிதிக்கு வடக்கில், விஜயவல்லி தாயார் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். உட்பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் அறிவும், ஆற்றலும் பெருகும் என்பது நம்பிக்கை.

    கோள்களின் நாயகனான சூரியன், இத்தல மூர்த்தியிடம் சரணடைந்து, பலன்பெற்றதால் நவகோள்களால் ஏற்படும் இன்னல்கள், தோஷங்கள் இத்தல சக்கரபாணி சுவாமியை வழிபட விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, ராகு திசை, கேது புத்தி, சர்ப்ப தோஷங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சக்கரபாணி சுவாமியை வழிபட இன்னல்கள் மறையும்.
    காசி விசுவநாதர் சுயம்புவாய் தோன்றிய தலங்களும் உண்டு. இப்படிப்பட்ட தலங்களில் ஒன்று வாளாடி. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் விசுவநாதர்.
    காசியில் மரிப்போருக்கு, அவர்களது செவிகளில் சிவபெருமானே ‘ராமநாம’த்தை ஓதுகிறார் என்பது புராண வழி வந்த நம்பிக்கை. ஆனால், அனைவரும் காசிக்கு சென்று இறைவனை தரிசிக்க முடிவதில்லை என்பதே நிதர்சனம்.

    அன்னையின் தவம் :

    எனவே காசிக்குச் சென்று இறைவனை தரிசிக்க இயலாதவர்களுக்காகவும், அவர்கள் காசியில் இறைவனை தரிசித்த பலனைப் பெற வேண்டியும் அன்னை விசாலாட்சி இறைவனை நோக்கி தவமிருந்தாள். அன்னையின் தவத்தால் இறைவன் மகிழ்ந்தார்.

    அவர் பார்வதியின் முன்பாக தோன்றி, ‘பார்வதி! காசியின் சக்திகளைக் கிரகித்து, பல தலங்களில் நிரவுதல் வேண்டும் என்பது தானே உன் ஆசை? கவலை வேண்டாம். வாரணாசியில் உள்ள சுயம்பு லிங்க ரூபங்களை வழியில் கீழே வைக்காமல், தலையில் சுமந்து சென்று பிரதிஷ்டை செய்யும் தலங்களிலும் எல்லாம் நான் அருள்பாலிப்பேன்’ என்று அருள் செய்தார்.

    இதன்படி பலரும் காசியில் இருந்து தலையில் சுமந்து வந்து உருவாக்கிய லிங்க பிரதிஷ்டை தலங்களில், காசி விசுவநாதர் சன்னிதிகள் தோன்றின. காசி விசுவநாதர் சுயம்புவாய் தோன்றிய தலங்களும் உண்டு. இப்படிப்பட்ட தலங்களில் ஒன்று வாளாடி. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் விசுவநாதர். இறைவி விசாலாட்சி அம்மன்.

    ஆலய அமைப்பு :

    இந்தத் திருத்தலம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலய முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரம். எதிரே கோபுர பிள்ளையார் அருள்பாலிக்கிறார். தெற்கு பிரகாரத்தில் திரும்பி வலது புறம் சென்றால், மகா மண்டபம். அந்த மண்டப வாசலின் எதிரே அன்னை விசாலாட்சி சன்னிதி உள்ளது. அம்மன் சன்னிதியின் அர்த்த மண்டப நுழை வாயிலின் இடது புறம், தட்சிண துர்க்கை நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இந்த துர்க்கையின் உருவம் மிகவும் பெரியது. அர்த்த மண்டபத்தைக் கடந்ததும் இறைவனின் கருவறையை தரிசிக்கலாம். இங்கு லிங்கத் திருமேனியுடன் விசுவநாதர் மேற்கு திசை நோக்கி வீற்றிருக்கிறார். இறைவனுக்கு மாத்ரு பூதேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

    தேவகோட்டத்தில் தெற்கில் தட்சிணாமூர்த்தி, நடராஜரும், வடக்கில் துர்க்கையும், வடகிழக்கில் நவக் கிரக நாயகர்களும், கிழக்கில் சூரியன் மற்றும் பைரவரும் இருக்கின்றனர். திருச்சுற்றின் மேற்கு திசையில் பிள்ளையாரும், சுப்பிரமணியரும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. சுப்பிரமணியர் சன்னிதிக்கு நேர் எதிர் சுவற்றில், ஒரு சாளரம் பொருத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள துவாரம் வழியாக பார்த்தால் கருவறை மூலவரின் தரிசனம் தெளிவாகக் கிடைக்கும்.

    துர்க்கை கதை :

    இங்குள்ள தட்சிண துர்க்கைக்கு தனிக் கதை ஒன்று உள்ளது. என்ன கதை அது?

    திருக்கயிலாயத்தில் பார்வதிதேவி, சர்வேஸ்வரனுக்கு தினசரி பூஜை செய்வார். அத்துடன் நைவேத்தியமாக இறைவனுக்கு பிரசாதம் வைப்பார். அதை உண்பதன் மூலம் இறைவன் உலக உயிர்களுக்கு படியளப்பார். சிவபெருமான் எப்பொழுதும் கண்களை மூடியபடி யோகநிலையில் இருப்பார். இருப்பினும் பூஜையின் போது சில நேரங்களில் கண் களைத் திறந்து பிரசாதத்தை ஏற்றுக்கொண்டு, மீண்டும் யோக நிலையைத் தொடர்வார்.

    ஒரு முறை சிவபெருமான், கண்களைத் திறக்காமலேயே, பார்வதி படைத்த நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்டார். அதற்கான காரணம் அம்பாளுக்கு புரியவில்லை. இதைக் கண்ட அம்பிகை கவலை கொண்டாள். அப்பொழுது நாரதர் அங்கு வந்தார்.

    ‘தேவி! சர்வேஸ்வரனின் ஒவ்வொரு செய்கைக்கும், கோடிக்கணக்கான காரணங்கள் இருக்கும். எனவே தாங்கள் தெளிவு பெற வேண்டு மானால், மானுட வடிவில் பூலோகம் சென்று வழிபடுங்கள்’ என்று நாரதர் கூறினார்.

    அதன்படியே பார்வதிதேவியும் மானிட பெண்ணின் உருவம் கொண்டு பூலோகம் வந்தாள். அம்பிகை ஒவ்வொரு வீடாகச் சென்று தன் வினாவிற்கு விடை கேட்டாள். எவராலும் விடை தர முடியவில்லை. வழியில் ஒன்பது வயது சிறுமி ஒருத்தி எதிர்பட்டாள். அம்பிகையின் வாட்டமான முகத்தைப் பார்த்து காரணத்தை வினவினாள். அம்பிகை நடந்ததைக் கூறினாள்.

    ‘எனது சங்கு ஒலியைக் கேட்டபடி என் பின்னால் நடந்து வாருங்கள். சங்கொலி நிற்கும் இடத்தில் பதிலும், பதிலளிக்கும் தலமும் கிடைக்கும்’ எனக் கூறிவிட்டு, சங்கை ஊதியபடி அந்தச் சிறுமி முன்னே நடந்தாள். அவளை பின் தொடர்ந்தார் அம்பாள்.

    ஓரிடத்தில் சங்கொலி நிற்க சிறுமி மறைந்தாள். அந்த இடத்தில் தெற்கு நோக்கி அருளும் கோலத்தில் துர்க்கை வீற்றிருந்தாள். இதைக் கண்டு பரவசமான அம்பிகை, துர்க்கையை வேண்டினாள்.

    ‘சர்வேஸ்வரன் ஞானயோக சயனம் பூண்டிருப்பதால், ஜீவ பரிபாலன சக்திகளை அவரிடமிருந்து பெற்றிட வெள்ளை கொண்டைக் கடலை மாலை அணிவித்து, செவ்வாய் மற்றும் வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். இறைவனின் யோக சயன நிலை அருட்பிரவாகமாக மாறும். கண்களைத் திறந்து இறைவன் அருள்பாலிப்பார்’ என்றாள் துர்க்கை.

    இவ்வாறு அன்னை வழிபட்ட தெற்கு நோக்கிய துர்க்கை சன்னிதி தலங் களில் ஒன்றே வாளாடி தலமாகும். அன்னைக்கு வழிகாட்டும் சிறுமியாக வந்தவள் லட்சுமிதேவி.

    பூஜைகளும்.. விழாக்களும்..

    மாதப்பிறப்புகள், கிருத்திகை, சிவராத்திரி, பிரதோஷம் போன்ற நாட்களில் இத்தல இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. திருவாதிரையில் நடராஜர் வீதியுலா நடைபெறும். கந்த சஷ்டி விழா இங்கு சிறப்பானதாகும். வைகாசி விசாகத்தில் இந்த ஆலயம் திருவிழா கோலம் பூண்டிருக்கும். அப்பொழுது முருகபெருமானுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி, பால் குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். தினசரி இரண்டு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம், தினமும் காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை திறந்திருக்கும்.

    திருச்சியில் இருந்து அன்பில் செல்லும் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது வாளாடி திருத்தலம்.
    தீவினை அகற்றும் காரைமடை அரங்கநாதர் தலவரலாறு, கோவில் அமைவிடம் குறித்து விரிவாக கீழே பார்க்கலாம்.
    காரை மரம் - தலவிருட்சம்

    திருமாலின் திருக்கோவில்களில் அரங்கநாதப் பெருமாள் என்றவுடன், ஐந்து தலை நாகம் குடைபிடிக்க, பாம்பு மெத்தையில் பள்ளிகொண்ட திருக் கோலமாய் வீற்றிருப்பவரே நம் அனைவருடைய கண் முன்பும் தோன்றும் காட்சிக்குரியவர்.

    இந்த அரங்கநாதப் பெருமாளைத் தான் தொண்டரடிப் பொடியாழ்வார்,

    ‘குடதிசை முடியை வைத்து
    குணதிசை பாதம் நீட்டி
    வடதிசை பின்பு காட்டித்
    தென்திசை இலங்கை நோக்கித்
    கடல்நிறக் கடவுள் எந்தை
    அரவணைத் துயிலு மாகண்டு...’

    என்று போற்றிப் புகழ்கிறார்.

    இத்தகைய சிறப்பு கொண்ட அரங்கநாதபெருமாள் வீற்றிருக்கும் ஸ்ரீரங்கம், உத்தமர் கோவில், திருக் குடந்தை, இந்தளூர் சிறுபுலியூர், ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சி, திருவெஃகா போன்ற திவ்ய தேசங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

    சுயம்பு மூர்த்தி

    ஆனால் தான்தோன்றி என்று வர்ணிக்கப்படும் சுயம்பு வடிவாய், சதுர வடிவில் திரு முகத்தை மட்டும் காட்டி, மூலவராக எழுந்த ருளியிருக்கும் அரங்கநாதரை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம்! அப்படியொரு அரங்கநாத பெருமாள் வீற்றிருந்து அருள் மழை தூவும் திருத்தலம் ஒன்று தமிழகத்தில் உள்ளது என்றால், பலரும் வியப்பால் விழிகளை விரிப்பார்கள்.

    கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம் காரைமடை என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கிறார், இந்த அரங்கநாதப் பெருமாள். இந்த ஆலயம் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் கண்டு வண்ணங்களால் மின்னும் ஆலயமாக மாறியிருக்கிறது. இந்தத் திருக்கோவில் 7 கலசங்களுடன் கூடிய 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக நிற்கிறது.

    இந்த ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், பெரிய திருவடியாகிய கருட பகவானைத் தரிசிக்கலாம். கருடனின் சன்னிதிக்கு எதிரே வெங்கடேச அச்சுதப் பெருமாள் சன்னிதி உள்ளது. இந்த சன்னிதியில் வெங்கடேச அச்சுதப் பெருமாளுடன், ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் மூலவரான அரங்க நாதர், சிறிய திருமுகம் மட்டும் காட்டி, பக்தர்களைக் காக்கும் கடவுளாக அருளாட்சி செய்து வருகிறார். இந்த ஆலயத்தை கொங்கு திருவரங்கம் என்று அழைக்கிறார்கள்.

    தலவரலாறு

    முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியில் தாசர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பக்தர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் ஒரு சமயம் தீபந்தம் ஏந்தியபடி காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். காட்டிற் குள் ஒரு இடத்தில் புற்று ஒன்று தென்பட்டது. அந்தப் புற்றில் இருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பக்தர்கள் பதறிப்போனார்கள். இதையடுத்து அவர்கள் தங்கள் குருவான பட்டாச்சாரியாரை அழைத்து வந்து குறிப்பிட்ட இடத்தைக் காட்டினர்.

    அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. ‘இங்கிருப்பது பெருமாள்தான்’ என்றது அந்தக் குரல். அவர்கள் சந்தனக் காப்பீடு செய்து பார்த்தபோது, அந்த இடத்தில் சுயம்பு வடிவில் சங்கு சக்கரமேந்திய கரங்களுடன் திருமால் அருட்காட்சி தந்ததாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    இந்த ஆலயத்தை நாம் வலம் வரும்போது, அரங்கநாயகி தாயார் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சுவாமிக்கு இடதுபுறம், தனிக்கோவிலில் சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமல், பாவை பாடிய ஆண்டாள் நாச்சியார் நின்ற கோலத்தில் அருள்கிறார். இதுதவிர திருச்சுற்றுகளில் பன்னிரு ஆழ்வார்களும், ராமானுஜரும் பக்தி பரவசத்துடன் காட்சி தருகின்றனர்.

    காரை மரம் - தலவிருட்சம்



    திருக்கோவிலின் வடமேற்கு மூலையில் காரை மரம் பசுமை பரப்பி நிற்கிறது. அது தான் இந்த ஆலயத்தின் தலவிருட்சம். இந்த தல விருட்ச மரத்தின் பெயரால்தான் இந்த ஊர் காரைமடை என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் நீர் நிறைந்த மடைகளில், காரை மரங்கள் முளைத்து இந்தப் பகுதியே காரை மரங்கள் அடர்ந்த வனமாக இருந்துள்ளது. இந்த காரை மரங்கள், நோய் தீர்க்கும் மூலிகை மரம் என்பது முக்கிய அம்சம்.

    கி.பி. 16-ம் நூற்றாண்டில் நாயக்க வம்சஅரசரான திருமலை நாயக்கர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஒரு முறை அவருக்கு முதுகில் ராஜபிளவு என்ற நோய் ஏற்பட்டது. எவ்வளவு மருத்துவம் செய்தும், மன்னன் தீராத வலியால் துடித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது கனவில் தோன்றிய அரங்கன், இத்தலம் சென்று அங்குள்ள காரை மர இலைகளை உட்கொண்டு வரும்படி பணித்தார். அப்படிச் செய்தால் நோய் தீரும் என்றும் அருள்வாக்கு கூறினார். இதையடுத்து கனவில் இறைவன் கூறிய இடத்திற்குச் சென்று, காரை மர இலைகளை உண்டு நோய் நீங்கப்பெற்றான்.

    குழந்தைப் பேறு வேண்டி இங்குள்ள தல விருட்சமான காரை மரத்தில் தொட்டில் கட்டி வழிபடுவது பக்தர்களின் நம்பிக்கையாகும். இதுதவிர திருமணத்தடை நீங்க பிரார்த்தித்துக் கொண்டு, மாங்கல்யச் சரகு கட்டி வழிபடும் வழக்கமும் உள்ளது.

    அமைவிடம்

    கொங்கு திருவரங்கம் என்று அழைக்கப்படும் காரைமடை அரங்க நாதர் கோவில், அருகில் உள்ள கற்பக விநாயகர் கோவில், அதையொட்டி உள்ள நஞ்சுண்டேசுவரர் என்ற சிவாலயம் ஆகிய மூன்று ஆலயங்களும் ஒரே வரிசையில் அமைந்திருக்கின்றன. கொங்கு மக்கள் மட்டுமல்லாது, மற்றவர்களும் இந்த ஆலயத்திற்கு ஒருமுறை சென்று தரிசித்து வரலாம்.

    கோவையில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்திலும் காரைமடை திருத்தலம் அமைந்துள்ளது.

    ஸ்ரீரங்கத்திற்கும் முந்தைய ஆலயம், சயனக் கோலத்தில் முதன்மை பெற்ற திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, விழுப்புரத்தில் அமைந்துள்ள திருவரங்கம் ரங்கநாதர் திருக்கோவில்.
    பிரம்மனுக்கு உபதேசம் தந்து, வேதங்களை மீட்டுத் தந்த தலம், சந்திரன் தன் தொழில் வலிமையை திரும்பப் பெற்ற கோவில், ஸ்ரீரங்கத்திற்கும் முந்தைய ஆலயம், சயனக் கோலத்தில் முதன்மை பெற்ற திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் அமைந்துள்ள திருவரங்கம் ரங்கநாதர் திருக்கோவில்.

    தல வரலாறு :

    அசுர குலத்தில் தோன்றிய சோமுகன் என்ற அசுரன், கடுமையான தவங்களை மேற்கொண்டு பல்வேறு வரங்களை பெற்றான். அதனால் தோன்றிய ஆணவத்தால் பூவுலகையும், தேவலோகத்தையும் தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவர விரும்பினான். முனிவர்களும் தேவர்களும், தனக்கு அடிமையாக இருந்து சேவை செய்ய வேண்டும் என ஆசைப்பட்டான்.

    அதன்படியே பூலோகத்தையும், தேவலோகத்தையும் தன் வசப்படுத்தி, மக்களையும், தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான். படைக்கும் தெய்வமான பிரம்மனையும் சிறைபிடித்து, அவரிடம் இருந்த வேதங்களைப் பறித்துக்கொண்டான்.

    இதையடுத்து தேவர்கள், முனிவர்கள் அனைவரும் திருமாலை சரணடைந்தனர். அவர் அசுரனுடன் போரிட்டார். போரில் தோல்வியை தழுவும் நிலைக்குச் சென்ற அசுரன், திருமாலுக்கு பயந்து, கடலுக்குள் புகுந்து பதுங்கினான். இதனால் திருமால் மச்ச அவதாரம் எடுத்து, சோமுக அசுரனை வதம் செய்து கொன்றார். பின்னர் வேதங்கள் அனைத்தையும் மீட்டார்.

    பூமிக்கு மேலே வெளிப்பட்ட திருமால், பிரம்மனிடம் வேதங்களை ஒப்படைத்து உபதேசமும் அருளினார். அந்த இடத்தில் இருந்த அழகிய சோலையும், வற்றாத நதியும் திருமாலின் மனதை லயிக்கச் செய்தது. அங்கேயே தங்க திருமால் விருப்பம் கொண்டார். ஆனால், திருப்பாற்கடலுக்குத் திரும்ப வேண்டும் என பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் வேண்டினர். முனிவர்களும், மற்றவர்களும் இதே இடத்தில் இருக்க வலியுறுத்தினர். உடனே திருமால் தேவதச்சனான விஸ்வகர்மாவை அழைத்து, தம்மைப்போன்ற உருவத்தினை பள்ளிகொண்ட கோலத்தில் உருவாக்கிட பணித்தார். அதன்பின் தேவர்களும், முனிவர்களும் ஒன்று சேர்ந்து பிரம்மோற்சவத்தை நடத்தினர் என்கிறது தல புராணம்.

    ஆலய அமைப்பு :

    இந்தக் கோவில் கிழக்கு முகமாக காட்சியளிக்கிறது. ராஜகோபுரம் இல்லாத எளிய நுழைவு வாசல் இங்கு இருக்கிறது. மூன்று பிரகாரங்களோடு அமைந்திருக்கிறது ஆலயம். மூன்றாவது பிரகாரத்தின் ஈசான்ய பகுதியில் மிகப்பெரிய நெற்களஞ்சியம் இருக்கிறது. அதற்கு நேரில் வடமேற்கு மூலையில், சீதை, லட்சுமணரோடு, கோதண்டராமர் எளிமையாகக் காட்சி தருகிறார்.

    இரண்டாவது நுழைவு வாசல் எதிரே, பலிபீடம், செப்புத் தகடு போர்த்திய கொடிமரம் அமைந்துள்ளன. இந்தப் பிரகாரத்தின் தென்கிழக்கே, வரதராஜப் பெருமாள் சன்னிதியும், மடப்பள்ளியும், அருகே வற்றாத கிணறும் உள்ளன. பிரகார மண்டபத்தில் தென்கிழக்கே துர்க்கை, வடக்கே சக்கரத்தாழ்வார் அமைந்துள்ளனர்.

    மூலவர் ரங்கநாத சுவாமி:


    கருவறைக்கு வெளியே துவாரபாலகர்களாக மணியன், மணிகர்ணன் காவல் நிற்க, கருவறைக்குள்ளே பார்த்தால் நாம் திருப்பாற்கடலுக்குள் சென்ற நினைவு வந்து விடுகிறது. கருவறைக்குள் நீர்த்தேங்கும் அமைப்பு இருப்பதால் இந்த எண்ணம் நமக்கு எளிதாக வந்து விடுகிறது. கருவறைக்குள் ஆதிசேஷ சயனத்தில் ரங்கநாதர், பள்ளிகொண்ட திருக்கோலம் மிகப் பிரமாண்டமாய் காட்சி தருகிறது. இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரிய வடிவிலானவர். அவருக்கு முந்தையவர் என்பதால், இத்தலம் ஆதி திருவரங்கம் எனப் பெயர் பெற்றது.

    தெற்கே தலை வைத்து, கிழக்கு முகமாய் புன்னகை பூத்து, வலது கையைத் தலையணையாய் வைத்து, இடது கையால் தன் நாபிக் கமலத்தில் தோன்றிய பிரம்மனுக்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும் உபதேசம் செய்யும் கோலம் நம்மைப் பரவசப்படுத்துகிறது. ஸ்ரீதேவி மடி மீது சயனித்திருக்க, வடக்கே நீட்டியுள்ள ஒரு திருவடியை பூதேவி தன் மடிமீது வைத்துள்ளாள். மற்றொரு திருவடி ஆதிசேஷனின் வால் நுனி வளைவு சயனத்தில் வைத்தபடி ரங்கநாதர் காட்சி தருகிறார். வலது கையை தாங்கி மண்டியிட்ட பெரிய திருவடியான கருடாழ்வார் தன் பணிக்காக காத்திருக்கிறார். மூலவரான ரங்கநாதருக்கு தைலக் காப்பு மட்டுமே செய்யப்படுகிறது. உற்சவ மூர்த்திக்கு நாள்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடக் கிறது.

    ஜெயஸ்ரீ, விஜயஸ்ரீ துவாரக பாலகிகள் காவல் நிற்க, கருணை வடிவிலான ரங்க நாயகித் தாயார் அமர்ந்த கோலத்தில் அபய, வரத முத்திரையோடு அருளாசி வழங்குகிறார். அன்னையை வழிபடுவோர் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள் என்பது ஐதீகம். ஆண்டாள் சன்னிதி இரண்டாவது வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கே அமைந்துள்ளது. அனுமன் சன்னிதி, ஆலயத்தின் வெளியே எதிர்ப்புறத்தில் அமைந்துள்ளது.

    விழாக்கள் :

    சித்திரையில் பத்துநாட்கள் வசந்த உற்சவம், வைகாசியில் உற்சவம், ஆனித் திருமஞ்சனம், ரங்கநாதருக்கு தைலக்காப்பு, ஆடிப்பெருக்கு, ஆவணியில் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் தீபாவளி, கார்த்திகையில் தீபம், சொக்கப்பனை கொளுத்துதல் மற்றும் பகல்பத்து, இராப்பத்து, வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், மாசி மகம், பங்குனியில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் என அனைத்தும் சிறப்புடன் நடத்தப்படுகின்றன.

    மாசி மகத்தன்று 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மையனூர் என்ற கிராமம் சென்று, அவ்வூரில் உள்ள மலையில், ரங்கநாதர் அமர்ந்து காட்சி தருவார். அந்த மலையில் உள்ள சுனையை, கருடாழ்வார் தன் மூக்கினால் கீறி விட்டதால், அது கெடிலம் நதி என்று ஓடுவதாக வரலாறு கூறுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    வழிபட்டு பேறுபெற்றவர்கள் :

    சந்திரன் தன் பத்தினியின் சாபத்தால் ஒளி மங்கி பொலிவிழந்தான். பின்னர் நாரதரின் ஆலோசனைப்படி, உத்திரங்கம் எனும் இந்த திருத்தலத்தில் வாழும் ரங்க நாதரை, நாள்தோறும் புஷ்கரணியில் நீராடி வணங்கினான். இதையடுத்து அவன் மீண்டும் தன்னுடைய ஒளியைப் பெற்றான். சந்திரன் நீராடிய புஷ்கரணியே, சந்திர புஷ்கரணி என்றும், தென் பெண்ணையாறு என்றும் வழங்கப்படுகிறது.

    கிருதாயுகத்தில் சுருதகீர்த்தி என்ற மன்னன் வாழ்ந்தான். அவனுக்கு குழந்தைப்பேறு இல்லாததால் மிகவும் வருந்தினான். வழிபாடு நடத்தியும், யாகங்கள் செய்தும் பலன் இல்லை. பின்னர் இந்த ஆலயத்தில் உள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி, அபிஷேக நீர் கொண்டு சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். இதையடுத்து அவனுக்கு புத்திரப் பேறு கிடைத்தது.

    ரங்க விமானம் :

    திருவரங்கத்தில் இருக்கும் ‘ரங்க விமானம்’ ஆதியில் தானாகவே உருவானதாக கூறப்படுகிறது. இதைச் சுற்றி 24 கிலோமீட்டர் தூரத்துக்குள் எங்கே இருந்தாலும் முக்தி நிச்சயம் என்கிறார்கள். இந்த விமானம் பொன்னால் வேயப்பட்டு ‘ஓம்’ என்கிற பிரணவ வடிவில் அமைந்துள்ளது. பிரம்ம தேவன், பல ஆயிரம் ஆண்டுகள் மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததன் பலனாக, பாற்கடலில் இருந்து பெறப்பட்டது ரங்க விமானம்.

    நான்கு வேதங்களையும் பிரம்மா இந்த விமானத்தின் முன் ஓதியிருக்கிறார். ரங்க விமானத்தில் அர்ச்சா ரூபமாக அவதரித்த ரங்க நாதரை, இசவாகு மன்னர் தன் குல தெய்வமாக அயோத்தியில் வைத்து பூஜை செய்து வந்தார். இசவாகு வம்ச குலத் தோன்றலான ராமபிரான், சீதையை மீட்க உதவிய விபீஷணனுக்கு ரங்கநாதர் விக்கிரகத்தை பரிசாக அளித்தார். விபீஷணன் இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில், அந்த மூர்த்தத்தை காவிரி நதியின் கரையில், தன் அரசான இலங்கையை நோக்கி அருள் தரும் முகமாக பிரதிஷ்டை செய்தான்.

    மைவிடம் :

    விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் திருவரங்கம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து தென்மேற்கே 225 கிலோமீட்டர் தூரத்திலும், திருக்கோயிலூரில் இருந்து மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலையில் இருந்து தெற்கே மணலூர்ப்பேட்டை வழியாக 30 கிலோமீட்டர் தூரத்திலும், சங்கராபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

    திருவண்ணாமலை மற்றும் திருக்கோயிலூரில் இருந்து மணலூர்ப்பேட்டை வந்து அங்கிருந்து மினி பஸ், ஆட்டோ மூலம் திருவரங்கம் வரலாம்.
    நவக்கிரகங்களை வழிபாட்டு தலங்கள் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளது. சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    வாழ்க்கையில் வரக்கூடிய இன்ப துன்பங்கள் அனைத்தும், நவக்கிரக அமைப்பால் நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது பரவலான ஆன்மிக நம்பிக்கையாக இருந்து வருகிறது. நவக்கிரகங்களை வழிபாட்டு தலங்கள் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளது. அந்தத் தலங்களில் எல்லாம் இறைவனைக் காட்டிலும் நவக்கிரகங்களுக்கே அதிக சிறப்பு வழங்குவதைக் காணலாம்.

    சூரியனுக்குரிய சூரியனார் கோவில், சந்திரனுக்குரிய திங்களூர் கோவில், குருவிற்குரிய ஆலங்குடி, திருநள்ளாறு சனீஸ்வரன், செவ்வாய்க்குரிய வைத்தீஸ்வரன் கோவில், புதனுக்குரிய திருவெண்காடு, சுக்ரனுக்குரிய கஞ்சனூர், ராகுவுக்குரிய திருநாகேஸ்வரம், கேதுவுக்குரிய கீழ்பெரும்பள்ளம் ஆகியவை சிறப்புக்குரியவையாகும். ஆனால் சென்னையில் உள்ளவர்களுக்கு சென்னையைச் சுற்றிலுமே நவக் கிரகங்களுக்கான 9 பரிகாரத் தலங்களும் உள்ளன. நவக்கிரக பரிகாரத்திற்கு இந்தத் தலங்களை வழிபட்டாலே போதுமானது. சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    கேது பரிகார தலம் :

    போரூர் அருகில் உள்ள கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர் ஆலயம், கேதுவுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. இதனை வட கீழ்பெரும்பள்ளம் என்றும் அழைக்கிறார்கள். மூலவர் பெயர் நீலகண்டேஸ்வரர். அம்பிகையின் பெயர் ஆதி காமாட்சி. ஜாதக ரீதியாக உள்ள நாகதோஷத்தை போக்கக்கூடிய சக்தி வாய்ந்த தலமாக இது கருதப்படுகிறது. இத்தலத்தில் கேது பகவானை தனிச் சன்னிதியில் தரிசனம் செய்யலாம். ஆலயத்தின் பழைய பெயர், ‘அழகிய சோழ நல்லூர்’ என்பதாகும். கேதுவால் வழிபடப்பட்ட பெருமை கொண்ட ஆலயம் என்பதால், அவரால் ஏற்படும் தோஷங்கள் இங்கு நிவர்த்தியாகின்றன.

    ஒவ்வொரு நாளும் வரக்கூடிய எமகண்ட வேளை என்பது கேதுவிற்கு உரிய தாகும். இங்கே செய்யப்படும் எமகண்ட வேளை பூஜைகள் விசேஷமானது. நீலகண்டேஸ்வரருக்கும், நந்திக்கும் இடையே இருக்கும் மேல் விதானத்தில், சூரியனை கேது விழுங்குவது போன்ற ஒரு சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழாக நின்றபடி நீலகண்டேஸ்வரரையும், அம்பிகையையும் பிரார்த்தனை செய்தால் கேது தோஷம் நீங்கும்.

    செவ்வாய் பரிகார தலம் :

    சென்னைக்கு தெற்கே இருக்கும் பூந்தமல்லியில் உள்ளது வைத்தீஸ்வரன் கோவில். இந்த ஆலயம்தான் செவ்வாய் பரிகார தலமாக கருதப்படுகிறது. காரணம் செவ்வாயும், தேவர்களின் அதிபதியான இந்திரனும் இத்தலத்தில் உள்ள வைத்தீஸ்வர சுவாமியை வணங்கி, தங்களது சிரமங்கள் நீங்க பெற்றிருக்கின்றனர். 1,300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் சோழர் களால் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இக்கோவிலின் மூலவர் பெயர் வைத்தியநாத சுவாமி. அம்பிகையின் பெயர் தையல் நாயகி அம்மன். நவக்கிரகங்களில் அங்காரகன் எனப்படும் செவ்வாய்க்குரிய தலமாக இத்தலம் விளங்குகிறது. செவ்வாய்க்கிழமை அன்று வரும் ராகுகால நேரத்தில் இத்தலத்தில் உள்ள அங்காரகனுக்கும், விஷ்ணு துர்கைக்கும் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அதன் மூலம் செவ்வாய் பரிகாரமும், தீராத நோய்கள், பகை மற்றும் தோல் நோய்கள் நீங்குவதாக பக்தர்களின் நம்பிக்கை நிலவுகிறது.

    குரு பரிகார தலம் :

    போரூரில் வீற்றிருக்கும் ராம நாதேஸ் வரர் கோவில், குருவுக்குரிய பரிகார தலமாக கருதப்படுகிறது. மூலவர் பெயரானது ராமநாதேஸ்வரர் என்பதாகும். அம்பிகையின் பெயரானது சிவகாம சுந்தரி. சிவபெருமானை குருவாக பாவித்து, ராமபிரான் வழிபட்ட தலம் என்பதால், குரு தலமாக விளங்குகிறது. இந்த ஆலயம் ஆதி ராமேஸ்வரம் என்றும் வழங்கப்படுகிறது.

    சுப காரியங்களை நடத்துவதற்கு முன்பாக இத்தலம் வந்து தரிசனம் செய்வது விசேஷம். குறிப்பாக வியாழன் தோறும் விரதம் இருந்து, குரு ஸ்துதியை மனதால் ஜெபித்து, வழிபாடுகள் நடத்துவதால் குருவின் பலமானது விரும்பியபடி கிடைக்கும்.

    சந்திரன் பரிகார தலம் :

    குன்றத்தூருக்கு அருகில் உள்ள சதுர்வேதிமங்கலம் எனப்படும் சோமங்களம் சோமநாதீஸ்வரர் கோவில், சந்திரனுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. மூலவர் சோமநாதேஸ்வரர். அம்பிகையின் பெயர் காமாட்சி. சந்திரன் வழிபட்டு பேறு பெற்றதால் சோமங்களம் என்ற பெயர் வழங்கப் படுகிறது. சோமன் என்றால் சந்திரன் என்று பொருள். கோவில் கோபுரமானது கஜப் பிருஷ்ட அமைப்பில் இருப்பதும், சதுர தாண்டவ மூர்த்தியாக நடராஜர் விளங்குவதும் இங்குள்ள சிறப்பு களாகும். இத்தல இறைவனை வழிபட்டால் சந்திர தோஷம் நீங்கும்.

    சூரியன் பரிகார தலம் :

    சென்னை போரூருக்கு அருகில் உள்ள கொளப்பாக்கம் அகத்தீஸ்வரர் ஆலயம், சூரிய பரிகார தலமாக விளங்குகிறது. 1,300 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். இத் தலத்தின் இறைவன் அகத்தீஸ்வரர். அவருக்கு வாகீச மகாதேவர் என்ற பெயரும் உண்டு. இறைவியின் திரு நாமம் ஆனந்தவல்லி. தெற்கு நோக்கி அருளும் அம்பிகையின் கருவறை கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், துர்க்கை, பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்கின்றனர். இங்கே தனி சன்னிதியில் சூரிய பகவான் ஈஸ்வரனை நோக்கிய வண்ணம் விசேஷமாக உள்ளார்.

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும், சூரியபகவானுக்கு சிவப்பு நிற உடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். மேலும் சூரியனுக்குரிய தானியமான கோதுமையை, அவர் காலடி களில் வைத்து மனமுருக வேண்டினால் சூரிய தோஷங்கள் நீங்குகின்றன. சூரிய பகவான் இத்தல மூலவரை வழிபட்டதால் சூரிய பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    ராகு பரிகார தலம் :

    பெரிய புராணத்தை இயற்றிய சேக் கிழாரின் அவதாரத் தலமான, குன்றத் தூரில் இருக்கும் திரு நாகேஸ்வரர் கோவில் ராகு பரிகாரத் தலமாக விளங்குகிறது. ராகுவால் வழிபடப்பட்டதால் இத்தலத்து ஈஸ்வரருக்கு ‘திருநாகேஸ்வரர்’ என்பது பெயராகும். இந்த ஆலயத்தில் ராகுவுக்குரிய வழிபாடுகள் விசேஷமாக செய்யப்படுகிறது. அம்பிகைக்கு காமாட்சி என்று பெயர். மூலவருக்கு வழங்கப்பட்ட பழைய பெயர் ‘சடையாண்டீஸ்வரர்’ என்பதாகும்.

    ராகு பாதிப்பு உள்ளவர்கள், ராகு திசை அல்லது புத்தி நடப்பில் இருப்பவர்கள், இத்தலத்து சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபடுவது வழக்கம். சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப சாபம் போன்றவற்றால், திருமணத்தடை மற்றும் ஆயுள் பாதிப்பு உண்டாகலாம். அதற்கு ராகு கால வழிபாடு செய்வது அவசியம். சர்ப்ப சாந்தி பரிகாரமாக ஹோமமும் செய்து நல்ல பலன்களை பெறலாம்.

    புதன் பரிகார தலம் :

    சென்னை போரூருக்கு அருகில் உள்ளது கோவூர் என்ற திருத்தலம். இங்கு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இறைவனின் திருநாமம் சுந்தரேஸ்வரர், அம்பாளின் திருநாமம் சவுந்தராம்பிகை. கி.பி. 965-ம் ஆண்டில் சுந்தர சோழன் என்பவனால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. இங்குள்ள இறைவனை காமதேனு வழிபட்டதால், இத்தலம் ‘கோவூர்’ என்று வழங்கப்படுகிறது. இத்தலமே சென்னையில் இருக்கும் புதனுக் குரிய பரிகார தலமாகும்.

    பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடல் பெற்ற தலங்களில் இத்தலமும் ஒன்று. இங்கு ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும், மகாவில்வ இலை பூஜை விசேஷமானதாகும். சீதையை தேடி வந்த ராமன், இத்தல இறைவனை 48 நாள் விரதம் இருந்து வழிபட்ட பிறகே ராமேஸ்வரம் புறப்பட்டதாக தல புராணம் தெரிவிக்கிறது. ஜாதகரீதியாக புதன் நீச்சமாக இருப்பவர்கள், இங்கே வழிபாடு செய்து புதனின் அருளை பெற்று மகிழலாம். இத்தலத்தில் மகாவில்வ மரமானது ஸ்தல விருட்சமாக உள்ளது.

    சுக்ரன் பரிகார தலம் :

    சென்னைக்கு தெற்கே இருக்கும் மாங்காட்டில் உள்ள மிகவும் பழமையான கோவில் திருவல்லீஸ்வரர் (வெள்ளஸ்வரர்) ஆலயம். நவக்கிரக தலங்களில் சுக்ரனுக்குரியதாக இத்தலம் விளங்குகிறது. சுக்ராச்சாரியாரால் பூஜிக்கப்பட்ட இத்தல இறைவனை, தமிழில் வெள்ளஸ்வரர் என்றும், சமஸ்கிருதத்தில் பார்க்கவேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். இத்தலத்து வில்வ மரத்தடியில் பெரிய அளவிலான பாண லிங்கம் உள்ளது. இத்தலத்தின் தல விருட்சம் மகா வில்வம். கண் சார்ந்த குறைபாடுகள் உடையவர்கள் வெள்ளஸ்வரரை, வெள்ளிக்கிழமைகளில் தரிசித்து வழிபட்டு வந்தால், அவர்களது குறைகள் நீங்கப்பெறுவதாக ஐதீகம். சுக்ரனின் சாரம் பெற்ற பரணி, பூரம், பூராடம் நட்சத்திர நாட்களில் சுக்ரனுக்கு பரிகார பூஜைகள் செய்தும் மகிழ்ச்சியான வாழ்வை அடையலாம்.

    சென்னைக்கு தெற்கே இருக்கும் மாங்காட்டில் உள்ள மிகவும் பழமையான கோவில் திருவல்லீஸ்வரர் (வெள்ளஸ்வரர்) ஆலயம். நவக்கிரக தலங்களில் சுக்ரனுக்குரியதாக இத்தலம் விளங்குகிறது. சுக்ராச்சாரியாரால் பூஜிக்கப்பட்ட இத்தல இறைவனை, தமிழில் வெள்ளஸ்வரர் என்றும், சமஸ்கிருதத்தில் பார்க்கவேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள்.

    இத்தலத்து வில்வ மரத்தடியில் பெரிய அளவிலான பாண லிங்கம் உள்ளது. இத்தலத்தின் தல விருட்சம் மகா வில்வம். கண் சார்ந்த குறைபாடுகள் உடையவர்கள் வெள்ளஸ்வரரை, வெள்ளிக்கிழமைகளில் தரிசித்து வழிபட்டு வந்தால், அவர்களது குறைகள் நீங்கப்பெறுவதாக ஐதீகம். சுக்ரனின் சாரம் பெற்ற பரணி, பூரம், பூராடம் நட்சத்திர நாட்களில் சுக்ரனுக்கு பரிகார பூஜைகள் செய்தும் மகிழ்ச்சியான வாழ்வை அடையலாம்.

    சனி பரிகார தலம் :

    சனிக்குரிய திருத்தலமானது திருநள்ளாறு. அதேபோல சென்னையில் இருப்பது வடநள்ளாறு என்று அழைக்கப்படுகிறது. இந்த தலம், பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் இருக் கிறது. மூலவர் பெயர் அகஸ்தீஸ்வரர். அம்பிகையின் பெயர் ஆனந்தவல்லி.

    சிவபெருமானின் திருக்கோலங்களில் ஒன்றான பைரவமூர்த்தி, இத்தலத்தில் காவல் தெய்வ மாக ஆக்ரோஷம் பெற்ற சம்ஹார கால பைரவராக வீற்றிருக்கிறார். சனியின் தொல்லைகளை களைவதில் பைரவமூர்த்திக்கு இருக்கும் முக்கியத்துவத்தை அவரது அருளை பெற்றவர்களே அறிவார்கள். இத்தலத்தில் சனிக்கு தனி சன்னிதியும், நள தீர்த்தமும் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.
    கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும், ஒரே நேர் கோட்டுப் பார்வையில் அமைந்துள்ள புண்ணியத் தலம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்.
    முன்னொரு காலத்தில் உவரி, மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கடம்பக் கொடிகள் அதிகமாக வளர்ந்து இருந்ததால், கடம்பவனம் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் வாழ்ந்த ஆயர்குல பெண் ஒருவர், பால் வியாபாரத்திற்காக சென்ற போது கடம்பக் கொடி காலில் பட்டு பால் சிந்தியது. இவ்வாறு பல நாட்கள் ஒரே இடத்தில் பால் சிந்தியது.

    இதையறிந்த அந்தப்பெண்ணின் கணவர் ஆவேசப்பட்டு கடம்பக்கொடியை புதர் என நினைத்து வெட்டினார். அப்போது கடம்பக் கொடியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த அவர், இதுபற்றி ஊர் பெரியவரிடம் கூறினார். மக்கள் கூட்டம், கூட்டமாக அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர். அப்போது ஊர் பெரியவர், சுவாமியின் அருளால் அருள்வாக்கு கூறினார்.

    ‘ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை அரைத்துப் பூசினால், ரத்தம் வடிவது நின்று விடும்’ என்றார். மேலும் அந்த வனப் பகுதியில் சந்தன மரம் இருக்கும் இடத்தையும் அடையாளம் காட்டினார். அவர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற மக்கள் அங்கு சந்தன மரம் இருப்பதை பார்த்து வியப்படைந்தனர். பின்னர் சந்தன மரத்தின் கொம்பை எடுத்து அரைத்து ரத்தம் வந்த இடத்தில் பூசினார்கள். இதையடுத்து ரத்தம் வழிவது நின்றது.

    உலகை காக்கும் பரம்பொருளான பரமேஸ்வரன், இந்த ஆலயத்தில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். மக்கள் ஓலையால் கூரை வேய்ந்து கோவில் எழுப்பினார்கள். சுயம்புலிங்க சுவாமிக்கு பால் அபிஷேகமும், நான்கு வேளை பூஜையும் செய்து வணங்கினர். உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சந்தனத்தை பூசி ரத்தத்தை நிறுத்திய காரணத்தால் அவரை வழிபட வரும் பக்தர்களுக்கும் சந்தனத்தை மேனி எங்கும் பூசுவதற்கு கொடுக்கின்றனர். சுவாமியின் திருமேனியில் தினமும் சந்தனத்தை அரைத்து பூசுகின்றனர். தீராத நோய் உள்ளவர்களும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் களும் சந்தனத்தை மருந்தாக்கி நலம் பெறுகின்றனர். சந்தனம் மற்றும் விபூதியை தண்ணீரில் கலந்து அருந்துகிறார்கள்.

    திருவிழா :

    இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. இதில் தைப்பூசம் அன்று கொடியேற்றப்பட்டு 10 நாள் பிரமோற்சவம் நடைபெறும். வைகாசி விசாக திருவிழாவின் போது சுவாமி அன்பே சிவமாக, சிவமே முருகப்பெருமானாக மகர மீனுக்கு காட்சி கொடுப்பார். இங்கு இந்த விழா விமரிசையாக கொண்டாடப்படும்.

    தை அமாவாசை, மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரைவிசு, வருஷாபிஷேகம், ஆடி அமாவாசை, தீர்த்தவாரி, நவராத்திரி கொலு, விஜயதசமி, ஐப்பசிவிசு, திருக்கார்த்திகை தீபம் போன்ற விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும். சுவாமியின் உடனுறை சக்தி பிரம்மசக்தி ஆவார். கோவில் வளாகத்தில் பரிவார தேவதைகளான முன்னோடி சுவாமி, இசக்கி அம்மன், பேச்சி அம்மன், மாடசாமி ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. விநாயகர் கோவிலுக்கு மேற்கு பகுதியில் பிரசித்திப் பெற்ற வன்னிய சாஸ்தா கோவில் உள்ளது.

    உவரி கோவிலில் காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்டம், பகல் 11.30 மணிக்கு உச்சிக்காலம், இரவு 7 மணிக்கு சாயரட்சை, 8.30 மணிக்கு அர்த்தஜாமபூஜை நடைபெறும். மார்கழி மாதம் நடை திறக்கும் நேரம் அதிகாலை 3.30 மணி.

    மண் சுமக்கும் பக்தர்கள் :

    சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்று பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட படலம். இதை நினைவு கூரும் வகையில் பக்தர்கள் உவரியில், கடல் மண் சுமக்கிறார்கள்.

    மண் சுமப்பதாக நேர்ந்து கொள்ளும் பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக உவரி வந்து, கடலில் நீராடி கடல் அலையில் இருந்து ஓலைப்பெட்டியில் கடல் மண்ணை நிரப்பி அதை தலையில் சுமந்து கோவில் அருகே சேர்த்து நேர்த்திக் கடன் வழிபாட்டை நிறைவு செய்கின்றனர்.

    வியாதிகளில் இருந்து குணமடைய வேண்டியும், குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, கல்வி ஞானம், மாங்கல்ய பாக் கியம், வேலை வாய்ப்பு பெற வேண்டியும் பக்தர்கள் 5,11, 21, 101 என்ற எண்ணிக்கையில் ஓலைப்பெட்டிகளில் மண்ணை நிரப்பி அதை தலையில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    அமைவிடம் :

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 35 கிலோமீட்டர் தூரத்திலும் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.
    ராமாயண காலத்தில் ராமபிரானுக்கு உதவி புரிந்த சுக்ரீவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழங்கப்பட்டவர் இத்தல இறைவன். இந்த கோவிலின் வரலாற்றை பார்க்கலாம்.
    திருப்பூர் மாவட்டத்தில் சர்க்கார் பெரியபாளையம் என்ற இடத்தில் உள்ளது சுக்ரீஸ்வரர் திருக்கோவில். ராமாயண காலத்தில் ராமபிரானுக்கு உதவி புரிந்த சுக்ரீவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழங்கப்பட்டவர் இத்தல இறைவன். இதன் காரணமாகவே மூலவர் சுக்ரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இதனை மெய்ப்பிக்கும் விதமாக ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் சுக்ரீவன், சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.

    இந்த ஆலயம் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். எனவே இந்தத் தலம் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இத்தல மூலவர் சுக்ரீஸ்வரர் என்னும், குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் கருவறைக்கு வலது புறம் ஆவுடைநாயகி என்ற பெயரில் அம்பாள், தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, இந்த ஆலய மூலவரின் கருவறைக்கு நேர் எதிரில் பத்ரகாளி அம்மன் சன்னிதி இடம்பெற்றுள்ளது. ஆலய சுற்றுப் பிரகாரங்களில் கன்னி மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவா ஆகியோரது சன்னிதிகள் உள்ளன.

    இந்தக் கோவிலில் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில், பஞ்ச லிங்கங்கள் இருக்கின்றன. மூலவரே அக்னி லிங்கமாக பார்க்கப்படுகிறார். சிவனுக்கு பிடித்த வில்வ மரத்தின் கீழ், ஆகாச லிங்கம் அமைந்துள்ளது. மற்ற மூன்று லிங்கங்களும் கோவிலைச் சுற்றி அமைந்திருக்கின்றன.

    யிறாக மாறிய மிளகு :

    முன்னொரு காலத்தில் ஒரு வியாபாரி, இந்த ஆலயத்தின் வழியாக மாடுகள் மீது மிளகு மூட்டைகளை ஏற்றி சென்றார். அங்கு வந்த ஒருவர், ‘மூட்டையில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டுள்ளார்.

    மிளகுக்கு இருந்த விலைமதிப்பு காரணமாக, வியாபாரி பாசிப்பயிறு இருப்பதாக பொய்யுரைத்தார். பின்னர் அங்கிருந்து சந்தைக்குச் சென்று, மூட்டைகளைத் திறந்து பார்த்தபோது, அதில் பாசிப்பயிறுதான் இருந்துள்ளன. ஆலயத்தின் முன்பாக வைத்து பொய்யுரைத்ததற்கு இறைவன் அளித்த தண்டனையை எண்ணி, அந்த வியாபாரி கதறி அழுதார். இறைவனை மனமுருக வேண்டினார். அப்போது அவருக்கு ஒரு அசரீரி ஒலி கேட்டது. ‘உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து என்னை வணங்கு. உன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்’ என்றது குரல்.

    வியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கினார். இதையடுத்து பாசிப்பயிராக இருந்த மூட்டைகள், மிளகு மூட்டைகளாக மாறின. இப்பகுதி மக்கள், இத்தல இறைவனை ‘மிளகு ஈஸ்வரர்’ என்றே அழைக்கிறார்கள். அதனால் இங்கு வந்து மிளகு பூஜை செய்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இத்துடன் கடந்த 14 வருடங்களாக அஷ்டமி தேய்பிறையில் கால பைரவர் பூஜை விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    ஆலய அமைப்பு :

    1952-ம் ஆண்டு கோவிலை புனரமைக்க முடிவு செய்து, கோவில் அஸ்திவாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவில் கற்களை பிரித்து பார்த்தபோது, தற்போதுள்ள கோவிலை போலவே பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் இருந்தது தெரியவந்தது. கற்கோவிலுக்கு மேல் மற்றொரு கோவில் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அமைப்பு வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    இரண்டு நந்தி :

    இந்தக் கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இல்லை. இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும், கொம்பையும் வெட்டினார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என்பதை அறிந்து இறைவனை வேண்டி மன்னிப்பு கேட்டார்.

    பின்னர் தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து அதனை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் போனதால், அந்தப் பணியை கைவிட்டு விட்டனர். மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. ஆகவேதான் இந்த ஆலயத்தில் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு நந்தி சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.

    தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம், திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 
    தொண்டை நாட்டின் 32 தேவாரத் தலங்களுள் ஒன்றான இத்திருக்கோவில், கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அழகுற காட்சியளிக்கிறது.
    பிரம்மனின் விருப்பத்திற்கேற்ப, இறைவன் பூமியில் சுயம்புவாக முதன்முதலில் தோன்றிய தலம், திருவொற்றியூர். ஒற்றியூர், ஆதிபுரி என்ற பெயர்கள், இதனை உறுதி செய்கின்றன. இங்குள்ள இறைவனின் பெயர் ‘ஆதிபுரீஸ்வரர்’ என்பதாகும். பல்லவர் காலத்தில் செங்கற்தளியாக இருந்து, முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தில் கற்றளியாக எழுப்பப்பட்டது. இறைவனின் கருவறை, கஜபிருஷ்ட வடிவில் இருப்பது, பல்லவர் காலம் என்பதை உறுதி செய்கிறது.

    சிவபெருமானை வழிபட பிரம்மன், விஷ்ணு, வாசுகி மூவரும் கடுந்தவம் இருந்து வரம் பெற்றனர். அதன் பயனால் ஆண்டுதோறும், மூவரும் கார்த்திகை பவுர்ணமி தொடங்கி மூன்று நாட்கள் இத்தல இறைவனை பூஜிப்பதாக ஐதீகம். ‘வாவியெல்லாம் தீர்த்தம், மணலெல்லாம் சிவலிங்கம்’ என பட்டினத்தார் இந்த தலத்தைப் புகழ்கின்றார்.

    ஆலய அமைப்பு :

    தொண்டை நாட்டின் 32 தேவாரத் தலங்களுள் ஒன்றான இத்திருக்கோவில், கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அழகுற காட்சியளிக்கிறது. கோபுரத்தின் எதிரே பிரமாண்ட திருக்குளம், ‘பிரம்ம தீர்த்தம்’ என்ற பெயரில் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தினுள் நுழைந்ததும், வலதுபுறம் தெற்கு நோக்கிய வடிவுடையம்மன் சன்னிதி உள்ளது. தொடர்ந்து மகிழமரம், அதன் அருகே விநாயகர், முருகன், குழந்தையீசர் ஆகியோரது சன்னிதிகள் இருக்கின்றன.

    இடதுபுறம் கொடிமரம், பலிபீடம், அதனருகே நந்திதேவர் காட்சி தருகிறார். அருகே ஜகந்நாதர் சன்னிதி, எதிரே சூரியன், நால்வர், சகஸ்ர லிங்கம், ராமநாதர், அமிர்தகண்டேஸ் வரர் ஆகியோரது சன்னிதிகள் அமைந்துள்ளன. வலச்சுற்றில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள், காளி சன்னிதி, ஆகாய லிங்கம், ஜம்புகேஸ்வரர், நாகலிங்கேஸ்வரர், காளத்தீஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஒற்றியூர் ஈசர் கோவில், நந்தவனத்தீசர், நந்தவனம், சொர்ண பைரவர் சன்னிதிகள் இடம்பெற்றுள்ளன.

    கொடிமரத்தின் மேற்கே மாணிக்க தியாகராஜர் சன்னிதி, மூலவர் சன்னிதி, நடராஜர் சன்னிதி உள்ளன. சப்தவிடங்கத் தலங்களின் கணக்கில் வராத தியாகராஜரான இவர், ஏலேலருக்கு மாணிக்கங்கள் கொடுத்து உதவியதால், இவர் மாணிக்க தியாகராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு மார்கழி பவுர்ணமி இரவில் 18 திருநடனம் உண்டு.

    ஆதிபுரீஸ்வரர் :

    மூலவரான சுயம்பு ஆதிபுரீஸ்வரர் கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இவர் கவசம் சார்த்தப்பட்டு நாக வடிவில் சிவலிங்கத் திருமேனியில் சதுரவடிவ ஆவுடையாரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவர் கார்த்திகை பவுர்ணமி தொடங்கி, மூன்று நாட்கள் கவசம் நீக்கப்பட்டு, நிஜ லிங்க தரிசனம் தருவது கண்கொள்ளாக் காட்சியாகும். மூன்று நாட்களும் புணுகு சட்டம், ஜவ்வாது, சாம்பிராணி தைலம் சார்த்தப்படுகிறது. ஆவுடையாரின் மீது வழக்கமான லிங்கத் திருமேனிக்கு பதிலாக, படம் எடுத்த நாக வடிவில் இறைவன் காட்சி தருவது அபூர்வக் கோலமாகும். தன்னை வழிபட்ட வாசுகி பாம்பை, தனக்கு ஐக்கியப் படுத்தியதால், இத்தல இறைவன் இப்படி காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.

    இத்தல இறைவன் ‘படம்பக்க நாதர்’, ‘புற்றிடங்கொண்டார்’, ‘எழுத்தறியும் பெருமான்’ எனப் பலவாறு அழைக்கப்படுகிறார். இந்தப் பகுதியில் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில், சோழமன்னன் அனைத்து கோவில்களின் படித்தரத்தையும் குறைத்து கட்டளை ஓலை அனுப்பினான். அந்த ஓலையை இத்தல இறைவனே திருத்தி, ‘ஒற்றியூர் நீங்கலாகக் கொள்க’ என எழுதியதால், இறைவனுக்கு ‘எழுத்தறியும் பெருமான்’ என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    வடிவுடையம்மன் :

    ஞான சக்தியாய் விளங்கும் இத்தல அம்பாளின் திருநாமம் ‘வடிவுடையம்மன்’ என்பதாகும். தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் வீற்றிருக்கும் இந்த அன்னைக்கு, திரிபுரசுந்தரி, வடிவுடை மாணிக்கம் என்ற பெயர்களும் உண்டு. நான்கு கரங்களுடன் அபய வரத முத்திரையுடன் பக்தர்களின் குறை கேட்கும் விதமாக, வலதுபுறம் தலை சாய்ந்தபடி அம்பாள் காட்சி தருகிறாள்.

    பவுர்ணமி தோறும் காலையில் இச்சா சக்தியான மேலூர் திருவுடையம்மனையும், நண்பகலில் ஞானசக்தியான திருவொற்றியூர் வடிவுடையம்மனையும், மாலையில் கிரியாசக்தியான திருமுல்லைவாயில் கொடியிடையம்மனையும் வணங்குவது, பல்வேறு நன்மைகளை அருளும் என்பது ஐதீகம். இம்மூன்று திருவுருவங் களையும், ஒரே சிற்பிதான் வடிவமைத்தார் என்று கூறப்படுகிறது.

    பிரம்மா, விஷ்ணு, வாசுகி என்ற நாகம், ஐயடிகள் காடவர்கோன், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், சங்கிலி நாச்சியார், கலிய நாயனார், ஆதிசங்கரர், பட்டினத்தார், கம்பர், கவி காளமேகம், இரட்டைபுலவர் கள், அருணகிரிநாதர், ஒற்றி ஞானப்பிரகாசர், தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், வீணை குப்பையர், வள்ளலார், மறைமலை அடிகள், சிதம்பர முனிவர், திருவொற்றியூரான் அடிமை, கபாலி சாஸ்திரிகள் என பலரும் வணங்கிப் பேறு பெற்ற தலம் இது.

    விழாக்கள் :

    சித்திரையில் வட்டப்பாறை அம்மன் உற்சவம், வைகாசியில் 15 நாள் வசந்த உற்சவம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், கலிய நாயனார் வீதியுலா, ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, கார்த்திகையில் தீபம், பவுர்ணமியில் மூலவர் கவசம் திறப்பு, மார்கழியில் ஆருத்ரா, 18 திருநடனம், பங்குனியில் பசுந்தயிர் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன.

    இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். வெள்ளிக்கிழமையில் மட்டும் காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தொடர்ச்சியாக சுவாமி தரிசனம் செய்யலாம்.

    தொன்மையான மகிழ மரம் :

    கயிலாயத்தில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராக இருந்தவர் ஆலால சுந்தரர். இவர் உமாதேவியின் தோழிகளான அநிந்திகை, கமலினி இருவரையும் விரும்பினார். இதையறிந்த சிவபெருமான், மூவரையும் மண்ணுலகில் பிறந்து இன்பம் துய்த்து மீள அருள்புரிந்தார்.

    அதன்படி திருநாவலூரில் அவதரித்த சுந்தரர், திருவெண்ணை நல்லூரில் தடுத்தாட் கொள்ளப்பட்டார். பிறகு திருவாரூரில் பரவையாரை மணம் புரிந்து இல்லறம் புரிந்துவந்தார். தல யாத்திரையில் திருவொற்றியூர் வந்த போது, அங்கே ஞாயிறு தலத்தில் தோன்றிய மற்றொரு தோழியான சங்கிலி, திருவொற்றியூர் இறைவனுக்குத் தொண்டு செய்துவர, அவரை மணம் முடிக்க ஆசைப்பட்டார். மகிழ மரத்தின் அடியில் இறைவன் முன்பாக இரண்டாவதாக மணம் புரி கிறார், சுந்தரர். எல்லை தாண்ட மாட்டேன் என்ற சத்தியத்தையும் சங்கிலியாருக்குச் செய்து கொடுத்தார். விதி யாரை விட்டது?. திருவாரூர் திருவிழாவை காணும் பேராவலில் சத்தியத்தை மீறிப் பயணமான சுந்தரருக்குப் பார்வை பறிபோனது. ஆயினும் பயணத்தைத் தொடர்ந்த சுந்தரர், மனம் வருந்தி இறைவனை வேண்டினார். பூண்டியில் ஊன்றுகோல் கிடைத்தது, திருவேகம்பத்தில் ஒரு கண் பார்வையும், திருவாரூரில் மற்றொரு கண் பார்வையும் கிடைத்தது என்பது வரலாறு.

    இங்குள்ள தல விருட்சமாக மகிழமரம் மிகவும் தொன்மையானது. சுந்தரர்- சங்கிலி நாச்சியார் திருமணத்திற்கு சாட்சியாக விளங்கிய இந்த மரம் இன்றும் பசுமையாக காட்சி தருகிறது. இதன் பின்புறம் இருவரின் திருமணத்திற்கு சாட்சியாக நின்ற சிவபெருமானின் திருவடிகள் தனிச் சன்னிதியில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மாசிமாதம் இத்தலத்தில், மகிழடி திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இங்கு சுந்தரமூர்த்தியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இதில் சுந்தரர் - சங்கிலி நாச்சியார் திருமணக் காட்சியைக் காணலாம்.

    காளாமுகம் கவுலீசர் :

    கி.பி. 11-ம் நூற்றாண்டில் சைவ சமய பிரிவுகளில் ஒன்றான, காளாமுக பிரிவின் இருப்பிடமாகத் திருவொற்றியூர் திகழ்ந்ததை வரலாறு கூறுகிறது. சர்வ சித்தாந்த விவேகம் எனும் வடமொழி நூல் இவர்களைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளது. காளாமுகம் என்பது சோமசித்தாந்த ஆகமம். இதைப் பின்பற்றுவோர் வணங்கிய தட்சிணாமூர்த்தியின் வடிவமே ‘கவுலீசர்’ ஆவார்.

    இத்தல தியாகராஜர் சன்னிதியின் பின்புறம் தனிச்சன்னிதியில் கவுலீசர் வீற்றிருக்கிறார். முதலாம் ராஜேந்திர சோழன் காலத்திய கலைநயம் மிக்க சிற்பமாக இது விளங்குகிறது. நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் தலையில் ஜடாமகுடம், காதுகளில் ஸ்படிக குண்டலங்கள், வலது கரம் அருள்வழங்க, இடக்கரம் மார்பின் மீது உள்ளது. மேல் இடக்கரம் கபாலத்தையும், மேல் வலக்கரம் திரிசூலத் தண்டைத் தாங்கிபடி காட்சி தருகின்றன. கவுலீசர் அடியில், ஆதிசங்கரர் வடிவம் அமைந்துள்ளது.

    பசிப்பிணியைப் போக்கிய அம்மன் :

    வடலூர் ராமலிங்க சுவாமிகள் எனும் அருட்பிரகாச வள்ளலார், இந்த ஆலயத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். ஏழுகிணறு பகுதியில் உள்ள வீராச்சாமி தெருவில் தனது அண்ணனோடு தங்கி வாழ்ந்து வந்த வள்ளலார், நாள்தோறும் இத்தலம் வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். ஒருநாள் தரிசனம் முடித்து வீடு திரும்ப நேரமாகிவிட்டது. வீட்டுக்கதவு சாத்தியிருந்ததால், அண்ணியை எழுப்ப விரும்பாத வள்ளலார், வெளியில் இருந்த திண்ணையில் பசியோடு படுத்து உறங்கினார்.

    அப்போது அவரை எழுப்பிய அண்ணியார், வள்ளலாருக்கு உணவு படைத்துப் பசியாற்றினார். காலையில், இவரை மீண்டும் எழுப்பிய அண்ணியார், ‘ஏன் சாப்பிடாமலேயே உறங்கிவிட்டாய்? என்னை எழுப்பக் கூடாதா?’ என்று கேட்க, அவர் முன் இரவில் நடந்ததைக் கூற, அனைவருக்கும் வியப்பு. அப்போதுதான் வடிவுடையம்மனே, அண்ணியார் வடிவில் வந்து பசியைப் போக்கியது தெரியவந்தது.

    அமைவிடம் :

    சென்னையின் வடகோடியில் வங்கக் கடலோரம் அமைந்துள்ளது, இந்த ஆலயம். சென்னை பாரிமுனையில் இருந்து வடக்கே சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் திருவொற்றியூர் இருக்கிறது. ஏராள மான பேருந்து வசதிகள் உண்டு. சென்ட்ரலில் இருந்து புறநகர் ரெயில் மூலம் திருவொற்றியூர் வரலாம்.
    ×