என் மலர்tooltip icon

    கோவில்கள்

    கொட்டாரக்கரா திருத்தலத்தில் இருக்கும் மகாகணபதியை நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களுக்கு, அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்கின்றனர்.
    விநாயகர் என்றாலே ‘கொழுக்கட்டைப் பிரியர்’ என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், கேரள மாநிலம், கொட்டாரக்கராவிலிருக்கும் விநாயகருக்கு ‘நெய்யப்பம்’ தான் மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. இங்கிருக்கும் மகாகணபதியை நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களுக்கு, அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்கின்றனர்.

    தல வரலாறு :

    அரச குலத்தவர்கள் பலரையும் அழித்ததால் ஏற்பட்டப் பாவத்தைப் போக்குவதற்காக பரசுராமர், கேரளாவின் பல பகுதிகளில் சிவபெருமான் கோவில்களை நிறுவினார். அந்தக் கோவில்களில் கொட்டாரக்கராவில் உள்ள சிவன் கோவிலும் ஒன்று.

    கேரளாவின் புகழ்பெற்ற சிற்பியான பெருந்தச்சன் கொட்டாரக்கரா சிவனை வழிபட்ட பின்பு, அந்தப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு பலா மரத்தை பார்த்தார். அந்தப் பலா மரம் அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால், அந்த மரத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து, அதில் கணபதி திருமேனி ஒன்றைச் செய்தார்.

    கொட்டாரக்கராவில் இருக்கும் சிவன் கோவிலில், அந்தத் திருமேனியை நிறுவ நினைத்த அவர், அதற்காகக் கோவில் நிர்வாகத்தினரிடம் அனுமதி கேட்டார். அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், சிவன் கோவில் வளாகத்தில் கணபதியின் திருமேனி நிறுவப்பட்டுத் தனிக்கோவிலும் கட்டுமானம் செய்யப்பட்டது என்று இந்தக் கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும் மகாகணபதியின் சன்னிதி அமைந்ததற்கான வரலாறு சொல்லப்படுகிறது.

    இதுபோல், சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு, கொட்டாரக்கராவில் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கிய நாராயணன் எனும் வேதியர் ஒருவர், தினமும் கொட்டாரக்கராவிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வந்தார். ஒருநாள் அவர் அந்தக் கோவிலுக்குள் சென்று திரும்பிய போது, ஓரிடத்திலிருந்து ‘வேதியரே! இங்கிருக்கும் என்னையும் வணங்கிச் செல்லுங்கள்’ என்று குரல் கேட்டது.

    அந்தக் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த அவர், அங்கு ஒரு பலா மரம் சாய்ந்து கிடந்ததைக் கண்டார். அந்தப் பலாமரத்தின் வேர்ப்பகுதி இருந்த இடத்தில் ஏற்பட்ட பள்ளத்தில், பலா மரத்தினாலான விநாயகர் உருவத் திருமேனி ஒன்று இருந்தது.

    அந்தத் திருமேனியின் அழகைக் கண்டு வியந்த அவர், தன்னிடம் பேசியது அந்தப் பலா மரத்திலான விநாயகர்தான் என்பதைத் தெரிந்து கொண்டார். அவர், விநாயகரை அந்த இடத்திலேயே கோவில் கொண்டு, அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அவரின் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட விநாய கரும் அந்த இடத்திலேயே கோவில் கொண்டார். அதன் பிறகு, அங்கு விநாயகருக்குப் புதிதாகக் கோவில் கட்டப்பட்டது என்று மற்றொரு வரலாறும் சொல்லப்படுகிறது.

    மகாகணபதி :

    கொட்டாரக்கரா சிவன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய விநாயகரை வழிபட்ட அனைவருக்கும், அவர்கள் வேண்டியது அனைத்தும் கிடைத்தது. அந்தப் பகுதி முழுவதும் புதிதாகத் தோன்றிய விநாயகரின் சிறப்பு பற்றிய செய்தி பரவத் தொடங்கியது.

    அதனால், அந்தப் பகுதி மக்களிடம் பெரும் மதிப்பைப் பெற்ற புதிய விநாயகர் கோவில், பரசுராமரால் நிறுவப்பட்ட முதன்மைக் கோவிலான சிவன் கோவிலை விடப் பெருமையுடையதாக மாற்றம் பெற்றது. அங்கிருந்த விநாயகரும் ‘மகாகணபதி’ என்று புதிய பெயரை பெற்றார்.

    இங்குள்ள சிவன் கோவிலின் கருவறையில் பரசுராமரால் நிறுவப்பட்ட சிவலிங்கம் இருக்கிறது, கருவறையின் பின்புறம் பகவதி அம்மன் கோவில் இருக்கிறது. இங்கிருக்கும் அம்மன் மேற்குப் பார்த்த நிலையில் இருப்பதால், மேற்கு என்பதைக் குறிக்கும் மலையாளச் சொல்லான படிஞ்ஞாயிறு என்பதைச் சேர்த்து ‘படிஞ்ஞாயிறு பகவதி’ என்று அழைக்கப்படுகிறார்.

    புதிதாக அமைந்த மகாகணபதி கோவில் கருவறையில், பலா மரத்திலான மகாகணபதி அப்பம் ஒன்றைக் கையில் வைத்தபடி இருக்கிறார். கொழுக்கட்டைப் பிரியரான கணபதி, இந்தக் கோவிலில் நெய்யப்பப் பிரியராக இருப்பது தனிச்சிறப்பாகும்.

    இக்கோவில் வளாகத்தில், தர்மசாஸ்தா, சுப்பிரமணிய சுவாமி, நாகதேவதைகள் போன்றவர்களுக்கும் தனிச்சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    வழிபாடு :

    இக்கோவில் வளாகத்திலிருக்கும் அனைத்துச் சன்னிதிகளிலும் தினசரி வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி, திருவாதிரை, சிவராத்திரி, ஆயில்யம் மகம், நவராத்திரி, பிரதிஷ்டாதினம், தைப்பூசம், விசு, மண்டலச்சிறப்பு எனும் சிறப்பு விழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.

    மகாகணபதி கோவிலுக்கு வரும் பக்தர்கள், மகாகணபதிக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நெய்யப்பத்தைப் படைத்துத் தங்களின் வேண்டுதல்களை அவர் முன்பாகச் சொல்லி வழிபடுகின்றனர். நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறிவிடும் என்பது இங்கு வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக் கிறது.

    கேரள மாநிலத்தின் நடனங்களில் ஒன்றான கதகளியாட்டம் கொட்டாரக்காரா மகாகணபதி கோவிலில்தான் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. எனவே, கதகளியாட்டக் கலைஞர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது, இக்கோவிலுக்கு வந்து மகாகணபதிக்கு ’நெய்யப்ப வழிபாடு’ செய்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

    நெய்யப்ப வழிபாடு :

    மகாகணபதி கோவிலில் நெய்யப்ப வழிபாடு சிறப்பு வாய்ந்தது. இங்கு வரும் பக்தர்கள் கோவில் அலுவலகத்தில் தங்கள் வழிபாட்டுக்குத் தேவையான நெய்யப்பங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு, பணத்தைச் செலுத்தினால் அதற்கான ரசீது வழங்கப்படுகிறது. பக்தர்களிடம் ரசீதுகளைப் பெற்றுக் கொண்டு, பணியாளர்கள் அதற்கான நெய்யப்பங்களை வழங்குகின்றனர். கணபதி சன்னிதிக்கு எதிரில், கோவில் பணியாளர்கள் அதிகாலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நெய்யப்பத்தைச் செய்து கொண்டே இருக்கின்றனர்.

    கதகளியாட்டம் :

    கொட்டாரக்கரா பகுதியை ஆண்டு வந்த மன்னர் ஒருவர், மகாகணபதியை வழிபடும் பக்தராக இருந்தார். அவரது மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. தனது மகளின் திருமண நாளில் பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடத்த விரும்பிய அவர், வடக்கு மலபார் பகுதியில் புகழ் பெற்றிருந்த ஒரு களியாட்டக் குழுவினரை அழைத்து வந்து ‘கிருஷ்ணன் களியாட்டம்’ என்ற கலை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டார்.

    மன்னர் அந்தக் குழுவினரை அழைத்து வருவதற்கான ஏற் பாடுகளைச் செய்தார். அந்தக் குழுவினர், ‘கொட்டாரக்கராப் பகுதியில் இருக்கும் மக்களுக்குச் சிறிது கூட கலையுணர்வோ, அதை விரும்பும் தன்மையோ இருக்காது. எனவே, அங்கு நிகழ்ச்சி நடத்த எங்களால், வர இயலாது’ என்று சொல்லி மறுத்து விட்டனர்.

    இதனால் வருத்தமுற்ற மன்னர், கொட்டாரக்கரா மகாகணபதியிடம் இது குறித்து முறையிட்டார். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய விநாயகர், அவரை ‘ராமாயண காவியம்’ ஒன்றை எழுதச் சொன்னார். மன்னரும் ராமாயணத்தை எட்டுப் பகுதிகளாகப் பிரித்து எழுதி முடித்தார். அதற்கு ‘ராமனாட்டம்’ என்று பெயரிட்டு, அதை மகாகணபதி கோவிலில் வைத்து வழிபட்டார்.

    அன்றிரவு மன்னருக்கு மீண்டும் ஒரு கனவு தோன்றியது. அந்தக் கனவில், மகுடம், பச்சை, தாடி, மினுக்கு, கத்தி, கதை முதலிய பல உருவங்கள் தோன்றின. மன்னர் அந்த உருவங்கள் அனைத்தையும் கொண்டு, புதியதாக ஒரு களியாட்டத்தைத் தொடங்கினார். அந்தக் களியாட்டத்திற்குக் ‘கதகளியாட்டம்’ என்று பெயர் ஏற்பட்டது. மகாகணபதியின் அருளால்தான் இந்தக் ‘கதகளியாட்டம்’ என்ற அரியதொரு நடனக்கலை தோற்றுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், கொல்லம் எனும் ஊரில் இருந்து வடகிழக்கில் 27 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது கொட்டாரக்கரா என்ற திருத்தலம்.
    தொழுவன்கோடு சாமுண்டி தேவி கோவிலில் அன்னை சாமுண்டிதேவியானவர் பொன்னிற தகடுகளால் பொதியப்பட்ட கருவறைக்குள் வீற்றிருந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கி வருகிறார்.
    திருவனந்தபுரம் அருகே தொழுவன்கோடு என்ற இடத்தில் சாமுண்டிதேவி கோவில் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் அன்னை, மக்களுக்கு அருள்வழங்கி காத்து வருகிறார். இந்த தலத்தில் அந்தணர் அல்லாதவர்களும், அம்மனுக்கு பூஜை செய்யும் சிறப்பு மிக்க வழக்கம் உள்ளது. அன்னை சாமுண்டிதேவியானவர் பொன்னிற தகடுகளால் பொதியப்பட்ட கருவறைக்குள் வீற்றிருந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கி வருகிறார்.

    தல வரலாறு :

    தொழுவன்கோடு ஆலய வரலாறு பற்றி கூறும் முன்பு, அதோடு தொடர்புடைய பண்டைய கால திருவிதாங்கூர் மன்னர் குடும்ப வரலாற்றையும் குறிப்பிட வேண்டியதாக உள்ளது. அபூர்வ சக்திமிக்க சாமுண்டி தேவி ஆலயம் தோன்றிய முக்கிய காரணமாக திகழ்ந்தவர், மன்னர் மார்த்தாண்டவர்மா. அவர் வீர பராக்கிரமசாலியாகவும், திருவனந்தபுரத்தில் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரிந்து வரும் பத்மநாப சுவாமியின் பரம பக்தனாகவும் இருந்ததும், திருவிதாங்கூர் நாட்டை விரிவுபடுத்தி வலிமை மிக்கதாக மாற்றியமைத்தவர்.

    ஆதி காலம் முதல் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில், மருமக்கள் தாயகம் என்னும் வழக்கம் நிலை கொண்டிருந்தது. ஒரு மன்னர் ஆட்சி காலத்தின் பின்னர், மன்னரின் தங்கை மகன்தான் (மருமகன்) ஆட்சிக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் மார்த்தாண்டவர்மா ஆட்சிக்கு வரும் முன், அவரின் தாய்மாமன் ராமவர்மா மன்னராக இருந்தார்.

    ஒரு முறை மன்னர் ராமவர்மா, சுசீந்திரத்தில் நடைபெறும் தேரோட்டத்தைக் காணச் சென்றார். அப்போது கோவிலில் அழகே உருவான அபிராமி என்றப் பெண்ணைச் சந்தித்தார். அவள் மீது மையல் கொண்ட மன்னர், அவளைத் திருமணம் செய்ய நினைத்து, தனது மனதைத் திறந்து அபிராமியிடம் சொன்னார்.

    அபிராமி ஓர் நிபந்தனையை முன்வைத்தாள். ‘திருமணம் செய்திட எனக்கு சம்மதமே. ஆனால் என் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்குதான் அரசு உரிமை வழங்க வேண்டும். மக்கள் தாயத்தை நிலை நிறுத்த வேண்டும்’ என்றாள்.

    பரம்பரை வழக்கமான மருமக்கள் தாயக வழக்கத்தை மாற்றுவது கடினம். உரிமை மருமகனுக்கு என்ற வழக்கத்தை மீற முடியாது. வேறு எதுவாயினும் கேள்’ என்றார் மன்னர் ராமவர்மா.

    ஆனால் அபிராமி ஒத்துக்கொள்ளவில்லை. ‘மன்னா! எந்த நாட்டிலும் தந்தையின் சொத்துக்கு உரிமை பிள்ளை செல்வங்களுக்கல்லவா? வரலாறுகளிலும் புராணங்களிலும் அதுவே கூறப்பட்டிருக்கின்றன. தங்களுடைய நாட்டில் மட்டும் இதென்ன வழக்கம்?’ எனக்கூறி மருமக்கள் தாயகத்தை அபிராமி புறக்கணித்தாள். தன் கருத்தில் பிடிவாதமாக நின்றாள்.

    மன்னரும் வேறு வழியின்றி, அவள் மீது கொண்ட மையல் காரணமாக நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார். இருவரும் மணம் முடித்து வாழ்ந்து வந்தனர். ராமவர்மா- அபிராமி தம்பதியருக்கு பப்பு தம்பி, ராமன்தம்பி, உம்மணி தங்கை என்ற மூன்று குழந்தைகள் பிறந்து வளர்ந்தனர். அதே போல் ராமவர்மாவின் சகோதரி உமா தம்பதியருக்கு மார்த்தாண்டவர்மா பிறந்து வளர்ந்து வந்தார்.

    மருமக்கள் தாயகம் நிலை நாட்ட மன்னர் குடும்பத்தினர் முயன்றனர். மக்கள் தாயகத்தை நிலை நாட்ட அபிராமியும், அவரது குடும்பத்தினரும் முயற்சி செய்தனர். இந்த சூழ்நிலையில் மார்த்தாண்டவர்மா, தனது முறைப்பெண் உம்மணி தங்கையுடன் காதல் கொண்டிருந்தார். இதனை அவளது சகோதரர்கள் கண்டித்தனர். அவர்களின் காதலை பல வழிகளில் தடுத்தனர்.

    மக்கள் தாயகத்தை நிலை நாட்டும் பிரிவில் எட்டு வீட்டுப் பிள்ளைகள் என ஒரு குழு தீவிரமாக ஒத்துழைத்தது. எட்டு வீட்டு பிள்ளைகளில் வீரபராக்கிரமசாலியாகவும், சதி திட்டங்கள் வகுப்பதில் வல்லவராகவும் இருந்த கழக்கூட்டத்து பிள்ளை என்பவர் குறிப்பிடத்தக்கவர். ஒரு முறை மார்த்தாண்டவர்மா படைவீரர்கள், கழக்கூட்டத்தப் பிள்ளையைப் பிடிக்க முயன்றனர். ஆனால் கழக்கூட்டத்துப் பிள்ளை ஒரு காட்டில் சென்று மறைந்தார். மார்த்தாண்டவர்மா படையினரும் அவரை காட்டுக்குள் விரட்டிச் சென்றனர். பிள்ளையைக் காணவில்லை. அங்கு ஒரு பெரிய நாகப்பாம்பு படமெடுத்து, படைவீரர்களை தடுத்து நின்றது. இதனால் படைவீரர்கள் திரும்பி வந்து விட்டனர்.

    மற்றொரு முறை விரட்டி வரும் படைவீரர்களுக்கு பயந்து, மேனம் குளம் என்ற இடத்தில் உள்ள மீன குடிசைக்குள் புகுந்தார் கழக்கூட்டத்துப் பிள்ளை. வீரர்களும் அந்த குடிசைக்குள் புகுந்தனர். ஆனால் கழக்கூட்டத்துப் பிள்ளை அங்கு இல்லை. இதனால் படைவீரர்கள் குடிசையை உடைத்தெறிந்தனர். யாரும் இல்லாத வீட்டுக்குள் இருந்து வயதான மீனவப் பெண் ஒருத்தி, தலையில் கூடையை சுமந்தபடி வெளிப்பட்டாள். இதனைக் கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

    இந்தத் தகவலைக் கேட்டு வியப்படைந்த மார்த்தாண்டவர்மா, தன் பக்கம் துணைபுரியும் ராமைய்யன் என்பவரிடம் இதற்கு காரணம் கேட்டார்.

    அவரோ, ‘கழக்கூட்டத்துப் பிள்ளையின் களரியில் (சண்டை பயிற்சி வழங்கும் இடம்) ஓர் அரிய சக்தியாக ஆதிபராசக்தி குடியிருக்கிறாள். கழக்கூட்டத்துப் பிள்ளையின் களரியில் பயிற்சி ஆசானாக ‘பணிக்கர்’ என்னும் திறமைசாலி இருக்கிறார். அங்கே சாமுண்டி வடிவில் அன்னை புவனேஸ்வரியும் அமர்ந்திருக்கிறாள். தேவியையும், குருவான பணிக்கரையும் அங்கிருந்து வேறிடத்திற்கு மாற்ற வேண்டும். இல்லையெனில் கழக்கூட்டத்துப் பிள்ளையை வெற்றிபெற முடியாது’ என்றார்.

    இதனைக் கேட்ட மார்த்தாண்டவர்மா, அரண்மனை ஜோதிடரை வரவழைத்து ஜோதிடம் கணித்துப் பார்க்கச் சொன்னார்.

    ‘குருவையும், அம்மனையும் அங்கிருந்து அகற்ற, பத்மநாப சுவாமியின் அருளைத் தேடுங்கள்’ என்றார் ஜோதிடர்.

    அதன்படி மார்த்தாண்டவர்மா பத்மநாப சுவாமி கோவிலுக்குச் சென்று மனமுருக வேண்டினார்.

    மும்மூர்த்திகள் தரிசனம் :

    வழிபடுவோரை கைவிடாத பரந்தாமன், மார்த்தாண்டவர்மாவை காத்திட முன்வந்தார். தன் செயலுக்கு பிரம்மதேவனையும், சிவபெருமானையும் துணைக்கு சேர்த்துக்கொண்டார். மூவரும் இரவு நேரத்தில் பணிக்கர் நித்திரையில் இருக்கும் போது, சாமுண்டியைச் சந்தித்தனர். ‘தேவி இந்த வேணாட்டிற்காகவும், பக்தர்களின் நலன் காக்கவும் வேண்டி, இந்த களரியை விட்டு வேறிடம் சென்று குடியிருக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

    அன்னையும், ‘நல்லது. தங்கள் சித்தப்படியே ஆகட்டும். ஆனால் எனது அருள்வடிவம், இனி எங்கே பிரதிஷ்டை செய்யப்படுகிறதோ, அங்கு மும்மூர்த்திகளான நீங்கள் மூவரும் முன்னிலை வகிக்க வேண்டும். மேலும் பிரதிஷ்டை வருடாந்திர தினத்தில் மூவரும் வருகை தந்து அருள்பாலிக்க வேண்டும்’ என்றாள்.

    அதற்கு திருமூர்த்திகளும் ஒப்புதல் தெரிவித்து மறைந்தனர். இதையடுத்து சாமுண்டி தேவியான, புவனேஸ்வரி தனது பரம பக்தரான குரு பணிக்கருடன், கழக்கூட்டத்துப் பிள்ளையிடம் கூட தெரிவிக்காமல் அங்கிருந்து பயணமானாள். தேவியின் உபதேசப்படி, பணிக்கர் மேடு பள்ளங்களையும், நீர்நிலைகளையும் கடந்து, சாமுண்டி சிலையுடன் அடர்ந்த காட்டுக்குள் நுழைந்தார். மும்மூர்த்திகளும் அசரீரியாக குறிப்பிட்ட இடத்தில், சாமுண்டியை குடியிருத்தினார். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தொழுதபடி நிற்கும் இந்தக் காடு, காலப்போக்கில் தொழுவன்காடு என்று மாறி புனித தலமாக உருவெடுத்தது.

    பணிக்கர் வழக்கப்படி சாமுண்டி தேவியை பூஜித்து வந்தார். பொழுது புலரும் நேரத்தை காட்டிலிருந்த ஒரு கோழி உணர்த்தியது. அதனையே தேவிக்கு சமர்ப்பித்தார் பணிக்கர். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. பக்தர்கள் அன்னைக்கு கோழியை சமர்ப்பித்து வேண்டுதல் செய்கின்றனர்.

    கழக்கூட்டத்துப் பிள்ளையின் களரியில் இருந்து சாமுண்டிதேவி மாற்றிடம் சென்றதும், மார்த்தாண்டவர்மா எட்டு வீட்டு பிள்ளைகளையும் வென்று சிறந்த ஆட்சியை தொடர்ந்தார். தொழுவன்காடு என்பது தொழுவன்கோடு என்றானது. அந்த இடத்தில் இருந்து அன்னையானவள், மக்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

    இந்த ஆலயத்தில் உள்ள அன்னையை மனமுருக வேண்டினால், குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் தீராத நோய்கள் தீரும். ஏவல், பில்லி, சூனியம் விலகும். திருமணத்தடை அகலும். இந்த ஆலயத்தில் திருவிழாக்காலங் களின் போது ‘ஔடத கஞ்சி’ வழங்கப்படுகிறது. இது நோய் தீர்க்கும் பிரசாதமாக உள்ளது.

    இந்த ஆலயத் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும் இந்த விழாவில், இறுதிநாளான 12-ந் தேதி பொங்கல் விழா நடக்கிறது. அதிகாலை 5 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடைதிறந்திருக்கும்.

    நவக்கிரக சன்னிதி :

    தொழுவன்கோடு சாமுண்டி தேவி ஆலயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், கணபதி, கந்தர்வன், அனுமன், நாகராஜா, நாகயட்னி, துர்க்காதேவி ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. தேவியின் கருவறைக்கு அருகில் கருங்காளி தேவிக்கு தனிக் கோவில் இருக்கிறது. கணபதி மற்றும் நாகராஜா சிலைகள் பஞ்சலோகத்தால் ஆனவை என்பது தனிச்சிறப்பு. இந்த ஆலயத்தில் உள்ள நவக்கிரக சிலைகள் பெரிய உருவத்தில் தங்கள் வாகனங்களுடன் இருப்பதைக் காணலாம். இங்கு வந்து சனி தோஷத்திற்காக வழிபட்டு நிவாரணம் பெற்றுச் செல்பவர்கள் ஏராளம்.

    அமைவிடம் :

    திருவனந்தபுரம் கிழங்கு கோட்டையில் இருந்து வடகிழக்காக 7 கிலோமீட்டர் பயணித்தால் தொழுவன்கோடு சாமுண்டி தேவி கோவிலை அடையலாம்.
    முருகன் வீற்றிருக்கும் “தோரணமலை” முழுக்க முழுக்க வித்தியாசமானது. மிகுந்த தனித்துவம் கொண்டது. இந்த கோவிலின் வரலாற்றை விரிவாக பார்க்கலாம்.
    குன்று இருக்கும் இடங்கள் எல்லாம் குமரன் அருள் வீசும் இடங்கள்.முருகப் பெருமான் அருளாட்சி செய்யும் எத்தனையோ மலைதலங்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். பழனி, மருதமலை, திருத்தணி பழமுதிர்ச்சோலை என்று முருகன் வீற்றிருக்கும் மலை தலங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் இடம் பெற்றுள்ள “தோரணமலை” முழுக்க முழுக்க வித்தியாசமானது. மிகுந்த தனித்துவம் கொண்டது.

    முதலில் தோரணமலை எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நெல்லை மாவட்டத்தில் இப்புண்ணிய மலை அமைந்துள்ளது. தென்காசியில் இருந்து கடையம் செல்லும் வழித்தடத்தில் இத்தலம் உள்ளது. நெல்லையில் இருந்தும் மிக எளிதாக இத்தலத்துக்கு செல்ல முடியும். இந்த தோரணமலையின் உச்சியில் முருகன் குடி கொண்டிருக்கிறான். இந்த முருகப்பெருமானுக்கு உள்ள மிகப்பெரிய சிறப்பு என்ன தெரியுமா?

    தமிழ் வாழ வழி வகுத்த குறுமுனியான அகத்தியர், மருத்துவ உலகமே வியந்து பார்க்கும் தேரையர் சித்தர் இருவரும் பல நூறு ஆண்டுகளாக வழிபட்ட பெருமை, மகிமையும் இந்த முருகப் பெருமானுக்கு உண்டு. தமிழ்நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான முருகத் தலங்களில் அறுபடை வீடுகள் உள்பட எந்த ஒரு தலத்துக்கும் இல்லாத மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பாக இது கருதப்படுகிறது.

    பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் இருப்பதாலோ என்னவோ, இந்த முருகன் மிகச்சிறந்த வரப்பிரசாதமாகத் திகழ்கிறார். நீங்கள் என்ன ஆசைப்பட்டு கேட்டாலும் சரி... தொழில் விருத்தி ஆகவேண்டுமா? குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகளா? கடன் தொல்லையா? நல்ல வேலை வேண்டுமா? பதவி உயர்வு வேண்டுமா? திருமணம் நடக்க வேண்டுமா? புத்திரப் பாக்கியம் வேண்டுமா? இப்படி நீங்கள் என்ன கேட்டாலும் தோரண மலை முருகன் வாரி வழங்க தயங்குவதே இல்லை.

    அதுவும் இவரிடம் மலை ஏறி வந்து யார் ஒருவர் கண்ணீர் விட்டு தமது கோரிக்கைகளை வைக்கிறாரோ, அவரை தோரணமலை மேலும் அழவிடுவதில்லை.
    அகத்தியர், தேரையர் வழிபட்ட இந்த சிறப்பான முருகன் அறுபடை வீடுகளுக்கு இணையாக பக்தர்களிடம் பிரசித்தி பெற்றிருக்க வேண்டுமே... ஏன் பல நூறு ஆண்டு கழித்து இப்போது தெரியத் தொடங்கியுள்ளது? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு விடை காண நாம் வரலாற்று நிகழ்வுகளை பார்க்க வேண்டும்.

    உலகத்தை சமப்படுத்த தென்பகுதியில் உள்ள பொதிகை மலைக்கு செல் என்று சிவபெருமான், அகத்தியருக்கு உத்தரவிட்டு, அவர் வந்த கதை உங்களுக்கு தெரிந்ததுதான். அகத்திய முனிவர் பொதிகைக்கு வந்து கொண்டிருந்தபோது கடையம் அருகே உள்ள தோரணமலையை பார்த்து வியந்தார். யானை வடிவத்தில் இருந்த அந்த மலை வாரணமலை என்றழைத்தார். அதுதான் மருவி தோரணமலை ஆகிவிட்டது.

    தோரணமலை அவருக்கு மிகவும் பிடித்துபோனது. அதற்கு மிக முக்கிய காரணம் அந்த மலை அவருக்கு மனதை குளிரச் செய்து அமைதியை தந்தது. எனவே அந்த மலையில் சிறிது காலம் தூங்கி செல்லலாம் என்று அகத்தியர் மலை உச்சிக்கு சென்றார். தோரணமலையில் பச்சை பசேலன விளைந்து கிடந்த சுமார் 4 ஆயிரம் மூலிகை செடி வகைகளை பார்த்ததும் அகத்தியர் மேலும் மகிழ்ச்சி அடைந்தார். அந்த மூலிகைகள் என்னென்ன நோய் தீர்க்கும் என்பதை கண்டுபிடித்தார்.

    அந்த குறிப்புகளை எல்லாம் அவர் குறிப்புகளாக எழுதினார். அவைதான் இன்று அகத்தியர் மருத்துவ நூல்களாக உலகம் முழுவதும் பரவியுள்ளன. ஆக அகத்தியரின் மருத்துவ ஆய்வுக்கு வித்திடப்பட்ட இடம் இந்த தோரணமலை என்பது குறிப்பிடத்தக்கது. அகத்தியரின் சீடராக வந்து சேர்ந்த தேரையரும் மருத்துவத்தில் நிறைய புதுமைகளை செய்தார். அவர்கள் இருவராலும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோரணமலை மிகப்பெரும் மருத்துவ தொழிற்சாலை போல செயல்பட்டது.

    தோரணமலையின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே குழிகள் உள்ளன. மிக அழகாக வட்ட வடிவத்தில் இருக்கும் அந்த குழிகள் எல்லாம் அகத்தியர், தேரையர் கண்காணிப்பில் சித்தர்கள் மூலிகைகளை இடித்து மருந்து தயாரித்த இடங்கள் என்று சொல்கிறார்கள். அவர்கள் அந்த மலையில் இருந்த போது, தங்கள் இஷ்ட தெய்வமான இந்த முருகரை வழிபட்டனர். சில ஆண்டுகளுக்கு பிறகு அகத்தியர் தோரணமலையில் இருந்து பொதிகை மலைக்கு சென்று விட்டார். அவரது சீடர் தேரையரோ, அந்த தோரணமலையின் ஒரு பகுதியில் ஜீவசமாதி ஆகிப்போனார். இதனால் மற்ற மகரிஷிகள், முனிவர்கள், சித்தர்களும் தோரண மலையில் இருந்து இடம்பெயர்ந்தனர்.

    இதன் காரணமாக தோரணமலை அழகன் முருகன் ஆராதனை செய்யப்படாத நிலை ஏற்பட்டது. அகத்தியர், தேரையர்களின் மருத்துவ தயாரிப்பு இடங்களும் இருந்த இடம் தெரியாமல் தூர்ந்து போய்விட்டன. நாளடைவில் ஒட்டுமொத்த தோரணமலையும் மக்கள் கவனத்தில் இருந்து திசைமாறிப்போனது.

    மிகவும் சிறப்பாக வழிபடப்பட்ட முருகனும் கால ஓட்டத்தில் அருகில் உள்ள சுனைக்குள் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால் முருகன் எத்தனை நாட்களுக்குத்தான் அந்த சுனைக்குள் இருப்பார்? மீண்டும் மக்கள் வந்து தன்னை தரிசித்து பயன்பெறட்டும் என்று முருகப்பெருமான் திருவுளம் கொண்டான். தோரணமலை அருகில் உள்ள முத்துமாலைபுரம் என்ற ஊரை சேர்ந்த நா.பெருமாள் என்பவர் கனவில் தோன்றினார்.

    “நான் தோரணமலை உச்சியில் உள்ள சுனைக்குள் கிடக்கிறேன். என்னை வெளியில் எடுத்து வைத்து வணங்குங்கள்” என்றான். மறுநாள் விடிந்ததும் பெருமாள் ஆட்களை அழைத்து கொண்டு மலை உச்சிக்கு சென்றார். சுனையில் உள்ள தண்ணீரை இறைத்து வெளியேற்றினார்கள். சொன்னபடி தோரணமலைமுருகன் அங்கே இருந்தார்.

    அந்த சிலையை எடுத்து மலை அடி வார குகையில் வைத்து வழிபட்டனர். இன்றும் அந்த சிலையே தோரணமலை சன்னிதானத்தில் மூலவராக உள்ளார். பெருமாளின் மகனும் ஆசிரியருமான ஆதிநாராயணன், தோரணமலை முருகன் பற்றிய சிறப்புகளை பரப்பச் செய்தார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள சுமார் 150 சினிமா தியேட்டர்களில் சிலைடு மூலம் தோரணமலை முருகன் பற்றிய தகவலை பரப்பினார்.

    இதையடுத்து மக்கள் சாரை, சாரையாக தோரணமலைக்கு வரத்தொடங்கினார்கள். பக்தர்கள் வசதிக்காக அவர் தோரணமலை உச்சிக்கு செல்ல சுமார் 1000 படிகள் கொண்ட படியை ஏற்படுத்தினார். சுனைகளையும் மேம்படுத்தினார்.

    தற்போது அவரது குமாரர் செண்பகராமன், தோரணமலை சைன் சிறப்புகளை உலகம் முழுமைக்கும் பரவச்செய்யும் தச்லைமற்ற பணியில் “தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இதனால் தோரணமலை முருகனை வழிபட வருபவர்கள் எண்ணிக்கை உயர்ந்தபடி உள்ளது.

    இத்தலத்து முருகன் கிழக்கு நோக்கி திருச்செந்தூர் முருகனை பணித்தபடி உள்ளார். எனவே இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் திருச்செந்தூரில் வழிபட்ட அதே பலன்கள் கிடைக்கிறது.

    பொதுவாக இருநதிகளுக்கு இடையில் உள்ள தலம் சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும். தோரணமலையை சுற்றி ராமநதி, ஜம்புநதி ஒடுகின்றன. இதுதவிர இப்போதும் இந்த மலையில் தேரையரும், மற்ற சித்தர்களும் அபே நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் மலை ஏறும் போதே நம்மை அறியாமலே நம் உடல் சிலிப்பாறுவதை உணர முடியும். 1000 படிகள் என்பதால் மலை ஏற சிரமமாக இருக்குமோ என்று சிலர் நினைக்கலாம். நீங்கள் முதல் படியில் காலை எடுத்து வைத்தால் போதும், அதன்பிறகு அப்பன் முருகன் நம்மை மலை உச்சிவரை வரவழைத்து விடுவான். எப்படி ஏறினோம். எப்படி இறங்கினோம் என்பதே தெரியாது.

    அதிலும் மலையில் உள்ள சுனைத்தீர்த்தம் ஏதாவது ஒன்றில் சற்று நீராடினால் போதும், மலை ஏறி வந்த அலுப்பு தெரியவே தெரியாது. புனித நீராடி விட்டு முருகனை நெருங்கும் போது நிச்சயம் இரட்டிப்பு பலன்களைப் பெறலாம். கடையம், பாவூர்சத்திரம், ஆவுடையானூர் உள்பட சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பலர் தவறாமல் தினமும் மலை ஏறி முருகனை வழி படுவதை கடமையாக வைத்துள்ளனர். தோரணமலையில் உள்ள ஒவ்வொரு படிக்கட்டிலிலும் ஏற, ஏற முருகன் நூல்களை வாழ்வில் உயர்த்தி வருவதாக கூறினார்கள்.

    மலை உச்சியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தால், மனம் குளிர்ந்து வருகிறது. எந்த ஒரு மலையிலும் கிடைக்காத மனஅமைதியை அங்கு நீங்கள் பெற முடியும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் தேரையர் உள்ளிட்ட சித்தர்களின் ஆசியும் சேர்ந்து கிடைக்கும். முருகனின் அருளையும், சித்தர்களின் ஆசியையும் ஒருங்கேப் பெறவே முக்கிய நாட்களில் இங்கு விமரிசையாக விழா நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தைப்பூசம் இந்த புராணமலையில் சிறப்பாக நடைபெற உள்ளது.

    மலைஉச்சியில் மின்சாரம், குடிநீர், கழிவறை ஆகிய மூன்று முக்கியமான வசதிகள் இல்லாதது மிகப்பெரும் மனக்குறைவாக உள்ளது. முருகப்பக்தர்கள் நினைத்தால் மூன்று மாதத்தில் அந்தத்திருப்பணிகளை செய்து முடித்து விடமுடியும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோரணமலையில் இந்தத்திருப்பணிகள் செய்பவர்களின் குடும்பமும் நிச்சயம் வாழையடி வாழையாக தழைக்கும்.

    குகையில் முருகன் தரிசனம்

    தோரண மலையில் குகையில் முருகப்பெருமான் தரிசனம் தருகிறார். இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். இதனால் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் தோரண மலைக்கும் வந்து செல்கிறார்கள்.

    வழிபாட்டு நேரம்

    சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்கும் தோரணமலை முருகன் கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமை தோறும் உச்சிகால பூஜையின் போது (11 மணி முதல் 1.30 மணி வரை) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானமும் நடக்கின்றன. திருமணம், மகப்பேறு ஆகியவற்றுக்காகவும் நோய் குணமாகவும் சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர். மருத்துவ படிப்பு, விரும்பிய வேலை, தொழில் அமையவும் உயர்பதவி கிடைக்கவும் அருள்பாலிக்கிறான் முருகன். செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும். மலை அடிவாரத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    ‘குகைக்குள் வாழும் குகனே’

    பாரதியார் பெண் எடுத்த ஊர் கடையம். அவரது மனைவி செல்லம்மா பிறந்த ஊர் என்பதால் பாரதியார் கடையம் வரும்போதெல்லாம் தோரண மலை சென்றதாக கூறுகின்றனர். பாரதி ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று போற்றிப் பாடியதும் இந்த தோரணமலை முருகனைத்தான்.

    தோரணமலை முருகன் பற்றிய கூடுதல் தகவல்களை செண்பகராமனிடம் 9965762002 என்ற எண்ணில் பெறலாம்.
    திருச்சியில் உள்ள பூலோகநாத சுவாமி திருக்கோவிலில் அருள்பாலிக்கும் பூலோகநாத சுவாமிதான், வாஸ்து நாயகராகத் திகழ்கிறார். இந்த கோவில் பற்றிய வரலாற்றை பார்க்கலாம்.
    வீடு கட்டுதல், பழைய வீட்டின் அமைப்பு, வியாபார நிறுவனங்களின் அமைப்பு, நோக்கும் திசை, அறைகளின் நீளம், அகலம் என அனைத்திலும் வாஸ்து தோஷம் உள்ளதா? எனப் பார்ப்பது தற்போது அனைவரும் கடைப்பிடித்து வரும் பழக்கமாக இருந்து வருகிறது.

    இவை அனைத்திற்கும் காரணமான வாஸ்து பகவான் பெரும்பாலும் யோக நிலையிலேயே இருப்பார். அவர் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே விழித்திருப்பார் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அப்படி அவர் விழித்திருக்கும் நாட்கள் வாஸ்து நாட்கள் என அழைக்கப்படுகின்றன. அந்த நாட்களில் மனை, வீடு, பூமி சம்பந்தப்பட்ட அனைத்து நற்காரியங்களையும் தொடங்கினால் மங்களம் பெருகி நன்மை கிடைக்கும்.

    வாஸ்து ஆலயம் :

    இப்படிப்பட்ட வாஸ்து நாயகருக்கு திருச்சியில் ஓர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் பூலோகநாத சுவாமி திருக்கோவில் என்று அழைக்கப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் பூலோகநாத சுவாமிதான், வாஸ்து நாயகராகத் திகழ்கிறார். இவர் வாஸ்து தோஷங்களை நீக்கும் வல்லமை படைத்தவர். இவரிடம் வாஸ்து தொடர்பான குறைபாடுகளைக் கூறி பிரார்த்தனை செய்துக் கொண்டால் அவை அறவே தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் வாஸ்து நாட்களில், சிறப்பு வாஸ்து ஹோமம் நடத்தப்படுகிறது. புதிதாக வீடு கட்டுபவர்களும், பழைய, புதிய வீட்டில் தோஷம் இருப்பதாக கருதுபவர்களும், வாஸ்து நாட்களில் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால் வாஸ்து தோஷம் நீங்கும். மற்றவர்களுக்கு வீடு, மனை வாங்கும் யோகம் கிட்டும்.

    வாஸ்து ஹோமத்தன்று, பூமிக்கு அடியில் விளையும் பெரும்பாலான கிழங்குகளைக் கொண்டு, விசேஷ கதம்ப கிழங்குகள் சாதம் தயாரித்து வாஸ்து பகவானுக்கு படையல் இடப்படுகிறது. பின்னர் இதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்கின்றனர்.

    ஆலய அமைப்பு :

    இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைக் கடந்ததும் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுரத்தின் வெளியே இடது புறம் விநாயகர், வலது புறம் முருகன் மற்றும் கருப்பண்ணசாமி சன்னிதிகள் உள்ளன. கோபுரத்தை தாண்டியதும் அகன்ற பிரகாரமும், கொடிமரம், நந்தியும் உள்ளன. அடுத்துள்ள ஹோம மண்டபத்தின் வலது புறம் இறைவி ஜெகதாம்பிகையின் சன்னிதி உள்ளது.

    இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் கரங்களில் பத்மம் மற்றும் அல்லி மலரைத் தாங்கியுள்ள அன்னை, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள்.

    முன்புறம் இரு துவாரபாலகர்கள் கொலுவிருக்க, அடுத்துள்ளது மகா மண்டபம். மகாமண்டப நுழைவாயிலில் இடது புறம் விநாயகரும், வலது புறம் வள்ளி- தெய்வானையுடன், முருகனும் அருள்பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் பூலோகநாத சுவாமி லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    பரிவார தெய்வங்கள் :

    இறைவனின் தேவக் கோட்டத்தின் தெற்கில் விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் லிங்கோத்பவரும், வடக்கில் துர்க்கையும், பிரம்மாவும் அருள்பாலிக்கின்றனர்.

    ஆலய திருச்சுற்றில் மேற்கில் தல விருட்சமான வன்னிமரம், வன்னிமர விநாயகர், சப்த கன்னியர், நாகாபரண விநாயகர், காசி விசுவநாதர், ஆஞ்சநேயர், வள்ளி-தெய்வானை சமேத முருகன் ஆகியோரும், வடக்கில் சண்டீகேசுவரர் சன்னிதியும், வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களும், கால பைரவரும் வீற்றிருக்கின்றனர்.

    மூலவருக்கு வாஸ்து நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று நடைபெறும் அன்னதானத்தில் சுமார் 800 பேர் கலந்து கொள்கின்றனர். ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது உண்டு. சிவராத்திரி அன்று இறைவனுக்கும், இறைவிக்கும் விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அன்று நடைபெறும் அபிஷேகங்களை கண்டுகளிக்கின்றனர்.

    சித்திரை முதல் நாள் பொங்கல், கார்த்திகை, மார்கழி 30 நாட்கள் என அனைத்து விசேஷ நாட்களிலும் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த ஆலயத்திற்கு அத்தி, மகிழம், வன்னி, வில்வம், குருந்தை என ஐந்து தல விருட்சங்கள் உண்டு. தைப்பூசம், மாசிமகம், ஆருத்ரா தரிசனம் ஆகிய நாட்களில் இறைவன் இறைவி வீதியுலா வருவதுண்டு.

    பிரதோஷ காலத்தில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம் போன்ற பொருட்களை வழங்கி அருள் பெருகின்றனர்.

    தினசரி 4 கால ஆராதனை நடைபெறும் இந்த ஆலயம் காலை 7.30 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். வாஸ்து தலமான இந்த ஆலயத்திற்கு வந்து வாஸ்து நாயகனான ஸ்ரீ பூலோகநாத சுவாமியையும் ஸ்ரீ ஜெகதாம்பாளையும் வணங்குபவர்களுக்கு வாஸ்து தொடர்பான அனைத்து குறைபாடுகளும் நீங்கி அவர்கள் வாழ்வில் வளம் பெறுவார்கள் என்பது நிதர்சனமான உண்மையே!

    பக்தியின் பலன் :


    ஆலயத்தில் இருக்கும் தல விருட்சமான வன்னி மரத்தையும், அருகே இருக்கும் வன்னிமர விநாயகரையும் வலம் வந்து வேண்டிக்கொண்டு, அருகே இருக்கும் கன்னிமார் களையும் வேண்டிக் கொள்ளும் கன்னிப் பெண்களுக்கு விரைந்து திருமணம் நடந்தேறுவது கண்கூடான நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.

    கிழக்கு திருச்சுற்றில் இருக்கும் நாகாபரண விநாயகர் தனது இடுப்பில் நாகப்பாம்பினை சுற்றியபடி காட்சி தருகிறார். இவரை அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்வதால் நாக தோஷம் விலகும் என்பதும் நிஜமே!
    சிவபெருமான் தேவர்களுக்கு இத்தலத்தில் வைத்து வேதத்திற்கு பொருள் சொன்னார் என்பதால் இந்தத் தலம் திருவோத்தூர் என்று அழைக்கப்பட்டது என்கிறது தல வரலாறு
    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ளது வேதபுரீஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது ரத சப்தமி அன்று சூரியன் ஒளிக்கதிர்படும் அதிசய நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயம் உள்ள திருத்தலத்தின் புராணப் பெயர் திருவோத்தூர் என்பதாகும். இத்தலத்தில் தேவர்களுக்கு ஈசன் வேதங்களை உபதேசம் செய்ததாக தல வரலாறு தெரிவிக்கிறது. திருவோத்தூர் என்பது தற்போது திருவத்திபுரம் என்று அழைக்கப்படுகிறது.

    தல வரலாறு :

    பார்வதியின் தந்தையான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். ஆனால் அந்த யாகத்திற்கு உலகை காத்தருளும் சிவபெருமானை அழைக்கவில்லை. இதுபற்றி அறிந்ததும் பார்வதிதேவி வருத்தம் கொண்டாள். தன் கணவனை அழைக்காததற்கு காரணம் என்ன என்பது பற்றி அறிய அவர் தட்சனிடம் சென்றான். ஆனால் பார்வதி தேவி அங்கு செல்வதற்கு சிவபெருமான் சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அவரது சொல்லை மீறி பார்வதிதேவி யாகத்திற்குச் சென்றாள். அங்கு அன்னைக்கு அவமரியாதை ஏற்பட்டது. கணவனின் சொல்லை மீறிச் சென்று அவமானத்தை சந்தித்ததற்காக பாவம் நீங்க, பார்வதிதேவி இத்தலத்தில் வந்து தங்கி இறைவனை நினைத்து தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள்.

    தேவர்களுக்கு வேதத்தை இறைவன் ஓதிவித்தான். சிவபெருமான் தேவர்களுக்கு இத்தலத்தில் வைத்து வேதத்திற்கு பொருள் சொன்னார் என்பதால் இந்தத் தலம் திருவோத்தூர் என்று அழைக்கப்பட்டது என்கிறது தல வரலாறு.

    இந்த இறைவன் வேதபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சிவலிங்க வடிவில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் உள்ள இறைவனின் மீது தினமும் சூரிய ஒளிக்கதிர் விழுகிறது. இருப்பினும், ரத சப்தமி அன்று இறைவன் மீது சூரியக் கதிர் படுவது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. இறைவியின் திருநாமம் இளமுலையம்பிகை என்பதாகும். அன்னைக்கு பாலகுஜாம்பிகை என்ற பெயரும் உள்ளது. ஆலயத்தில் மகா மண்டபத்தில் நின்றபடி சுவாமி, அம்பாள், முருகப்பெருமான், விநாயகர், நவக்கிரகங்கள், தலமரம் என்று எல்லாவற்றையும் தரிசிக்க முடியும். ஒரே இடத்தில் நின்றபடி இவை அனைத்தையும் தரிசினம் செய்வது இந்த ஆலயத்தில் முக்கிய சிறப்பாக உள்ளது.

    சிவபெருமானைப் போற்றி பாடப்பட்ட தேவாரப் பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்களில் இது 240-வது தலமாக விளங்குகிறது. இத்தல இறைவனை திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிப் புகழ்ந்துள்ளனர். இங்குள்ள முருகப்பெருமானை அருண கிரிநாதர் பாடியுள்ளார். இத்தல இறைவனான வேதபுரீஸ்வரரை, விநாயகர், முருகப்பெருமான், பைரவர், திருமால், பிரம்மன், சூரியன், தொண்டைமான் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இங்குள்ள சேயாறு முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு, இத்தலத்தில் தீர்த்தமாக விளங்குகிறது. இதன் காரணமாக இந்த ஊர் ‘செய்யாறு’ என்று பெயர் பெற்றுள்ளது. இத்தல விநாயகர் ‘நர்த்தன விநாயகர்’ என்றும், முருகப்பெருமான் ‘சண்முகர்’ என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.

    இந்த ஆலயத்தில் 9 வாசல்களைக் கடந்து சென்றால்தான் மூலவரை தரிசிக்க முடியும். பஞ்ச பூதத் தலங்கள் அனைத்துக்கும் தனித்தனி சன்னிதிகள் இங்கு இருக்கின்றன. எனவே இங்கு பஞ்சபூத லிங்கங்களையும் தரிசிக்கலாம். ஒரே இடத்தில் நின்றபடி ஆலயத்தின் 8 கோபுரங்களை தரிசிக்க முடியும்.
     
    திருவிழாக்கள் :

    இந்த ஆலயத்தில் தை மாதம் 10 நாள் பிரமோற்சவ விழா நடைபெறுகிறது. தை அமாவாசைக்கு அடுத்த நாள் கொடியேற்றம் செய்யப்படும் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும். இது தவிர ஆடி மாதத்தில் லட்ச தீபம், பங்குனி உத்திரம், மாசி மகம், சிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி, ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும், தலமரமான பனை மரத்துக்கும், நாகலிங்கத்துக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 8.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    வாசலை பார்க்கும் நந்தி :

    பொதுவாக அனைத்து சிவாலயங் களிலும் நந்தியானது, இறைவனை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கும். இந்த ஆலயத்தில் உள்ள நந்தி வாசலை நோக்கியபடி அமைந்திருக்கிறது. இதற்கு ஒரு கதையும் கூறப்படுகிறது. அதாவது இத்தல ஈசன், தேவர்களுக்கு வேதம் ஓதிக் கொண்டிருந்தார். அப்போது பாடம் சொல்லிக் கொடுக்கும்போது இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக, யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று நந்தியை இறைவன் பணித்தார். அதன்காரணமாகவே நந்தி, ஆலய வாசலை நோக்கியபடி இருப்பதாக கூறப்படுகிறது.

    இது தவிர இந்தப் பகுதியை ஆண்ட தொண்டைமான் எதிரிகளுடன் போர் புரிய தயக்கம் காட்டி, இத்தல இறைவனை வேண்டினான். இதையடுத்து ஈசன் நந்தியை வாசலை நோக்கி காவல் காக்கும்படி சொன்னதால், நந்தி வாசலை நோக்கியபடி இருப்பதாகவும் இருவேறு காரணங்கள் கூறப்படுகிறது.

    காய்த்து குலுங்கிய பனைமரங்கள் :

    வேதபுரீஸ்வரர் ஆலயம் சேயாற்றின் கரையில் உள்ளது. ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட, அதனால் கோவில் சுவர்கள் பாழாகி வந்தன. இதனால் வருத்தம் கொண்ட சிவனடியார் ஒருவர், ஆற்றின் கரையை உயர்த்தி மண் கரைந்து போகாமல் தடுக்க பனங்கொட்டைகளை நட்டு பனை மரங்களை வளர்த்து வந்தார். வளர்ந்து வந்த பனை மரங்கள் அனைத்துமே ஆண் பனையாக இருந்தன. இதைப் பார்த்து சிலர், காய்க்காத ஆண் பனையை வைத்துக் கொண்டு என்ன செய்ய? என்று ஏளனம் செய்தனர்.

    ஒரு முறை இந்தப் பகுதிக்கு வந்த திருஞானசம்பந்தரிடம், தன்னுடைய வருத்தத்தை சிவனடியார் கூறினார். இதையடுத்து சம்பந்தர் இத்தல இறைவனின் மீதும், ஆண் பனை பெண் பனையாக மாற வேண்டியும் 11 பாசுரங்களை பாடினார். இதில் ஆண் பனை மரங்கள் அனைத்தும் பெண் பனைமரங்களாக மாறி காய்த்துக் குலுங்கின.

    நாகநாத லிங்கம் :

    இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்தார். அப்போது பிற மதத்தைச் சேர்ந்த சிலர், வேள்வி ஒன்றை நடத்தி சம்பந்தர் மீது கொடிய பாம்புகளை ஏவிவிட்டனர். சம்பந்தர் இத்தல ஈசனை நினைத்து வேண்டினார். உடனே சிவபெருமான், பாம்பாட்டியாக வந்து அந்த பாம்புகளை பிடித்துக் கொண்டு மறைந்துவிட்டார். 11 சர்ப்ப தலைகளுடன் இந்த நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த நாகநாத லிங்கத்தை சனிக் கிழமை தோறும் ராகுகாலத்தில் வழிபாடு செய்தால் சர்ப்ப தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இந்த நாகலிங்கத்தை அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.

    சென்னையில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலையில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது செய்யாறு வேதபுரீஸ்வரர் திருத்தலம்.
    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்தும், பழைய பஸ் நிலையத்தில் இருந்தும் நடந்து செல்லும் தொலைவில் வீரராகவபுரம் என்ற இடத்தில் மிகவும் கம்பீரமாக அமைந்து உள்ளது இந்தக் கோவில்.
    பொன் திணிந்த புனல் பெருகும் பொருநையாற்றங் கரையில் திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி திருநகரம் அமைந்துள்ளது. பண்டைக்காலத்தில் இந்தப் பகுதியை தலைநகராக கொண்டு, சந்திரவம்ச அரசரான கிருஷ்ண வர்மா என்ற மன்னன் செங்கோலோச்சி வந்தான். அவன் சமய பொதுவுடைமை கொண்ட பண்பாளன். ஆகையால் அந்த மன்னன், செந்நிற மேனியனான சிவபெருமானுக்கும், அருமறை முதல்வனாம் திருமாலுக்கும் பாரபட்சம் இன்றி திருக்கோவில்களை எழுப்பினான். ‘சிறப்பொடு பூசனை’ என்ற வான்புகழ் கொண்ட வள்ளுவ பெருந்தகையின் வாக்கிற் கிணங்க, தின வழிபாடு, சிறப்பு வழிபாடு (நித்ய, நைமித்ய வழிபாடு) முதலியவற்றை, ஏழிசை பாடல் ஆடலோடு சிறப்புற நடத்தி வந்தான்.

    அல்லும், பகலும் மன்னன் ஆலயத் திருப்பணியில் ஈடுபட்டு இருப்பதை கண்ட அண்டை நாட்டு மன்னன், இந்தத் தருணத்தை பயன்படுத்தி கிருஷ்ணவர்மா ஆண்ட நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அண்டை நாட்டு மன்னனின் யானைப் படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை அனைத்தும் தன் நாட்டை சூழ்ந்திருப்பதை அறிந்த மன்னன் அதிர்ச்சியுற்றான். ஆற்றல் மிக்க அந்தப் படையோடு போரிடுவதில் அர்த்தம் இல்லை என்று உணர்ந்தான். எனவே தனது அரண்மனையில் கோவில் கொண்டிருக்கும், தான் நித்தமும் வழிபடும் வரதராஜப் பெருமாளை வழிபட முன்வந்தான். ஆலயத்தின் உள்ளே இருந்தபடி இறைவனின் நாமத்தை இடைவிடாது ஜெபித்தபடி தியானத்தில் ஆழ்ந்தான்.

    தனது பக்தனின் வேண்டுதலுக்கு மனமிறங்கிய வரதராஜ பெருமாள், கிருஷ்ணவர்மாவுக்கு திருவருள் புரிய சித்தம் கொண்டார். பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமனே, கிருஷ்ணவர்மாவின் தோற்றத்திற்கு மாறினார். பின்னர் அமைச்சர்களையும், படைத் தளபதிகளையும் ஒன்று திரட்டி, பகையரனை எதிர்த்து போர் புரிந்தார். இறைவனின் படையை எதிர்த்து போரிட்டு வெற்றி கொள்வார் உண்டோ?.. அண்டை நாட்டு மன்னன் பெரும் படையுடன் வந்தும் தோல்வியைத் தழுவினான்.

    வாகை சூடிய வள்ளலான வரதராஜப்பெருமாள், கிருஷ்ணவர்மாவுக்கு அருளைப் பொழியும் “வீரராகவப் பெருமாளாகக்’ காட்சி கொடுத்தார். தனக்காக இறைவனே வந்து போரிட்டதை எண்ணி மன்னன் அகமகிழ்ந்தான். பின்னர் மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, திருமால் அர்ச்சாவதார மூர்த்தியாக இத்தலத்தில் எழுந்தருளினார் என்பது வரலாறு.

    மன்னன் கிருஷ்ணவர்மா தாமிரபரணி ஆற்றங்கரையில் கோபால தீர்த்த கட்டத்துக்கண்மையில் வீரராகவபுரம் என்ற தீர்த்த கட்டத்தையும், வீரராகவ புரம் என்ற சிற்றூரையும் உருவாக்கினான். அந்த ஊரின் நடுவே அருள்மிகு வீரராகவப்பெருமாளை பிரதிஷ்டை செய்தான். தனது அரண்மனையில் எழுந்தருளிய வரதராஜப் பெருமாளை உற்சவ மூர்த்தியாக எழுந்தருள செய்து, வழிபாடு நடத்தி வந்தான். அதன் பின் அவன் நாடு எல்லா பேறுகளையும் பெற்று சீரோடும், சிறப்போடும் விளங்கியது.

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்தும், பழைய பஸ் நிலையத்தில் இருந்தும் நடந்து செல்லும் தொலைவில் வீரராகவபுரம் என்ற இடத்தில் மிகவும் கம்பீரமாக அமைந்து உள்ளது இந்தக் கோவில். இத்தலத்து இறைவனின் பெயர் வீரராகவப்பெருமாள். இறைவியின் திருநாமம் வேதவள்ளி தாயார் என்பதாகும். பெருந்தேவி தாயார் என்ற பெயரில் மற்றொரு தாயாரும் உள்ளார். இருவருக்கும் தனித்தனியாக சன்னிதிகள் உள்ளன. இது தவிர சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர், இத்தலத்து இறைவன் மீது சாரங்கா ராகத்தில் அமைந்த “வரதராஜம் உபாஸ்மஹே’ என்கிற பாடலை இயற்றியுள்ளார்.

    இந்தக் கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் நடை பெறுகிறது. சித்திரை மாதம் பத்து நாட்கள் நடைபெறும் பிரமோற்சவம் இங்கு வெகுசிறப்பாக நடைபெறும். நெல்லை சந்திப்பில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன.

    சக்கரத்தாழ்வாருக்கு தங்க கவசம் :


    இந்தக் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருநாள் அன்று தங்க கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தினத்தன்று சுதர்சன ஜெயந்தி வருகிறது. அதாவது அன்றுதான் சக்கரத்தாழ்வாரின் பிறந்த நாள் ஆகும். எனவே அன்று ஒரு நாள் மட்டும் இங்குள்ள சக்கரத்தாழ்வாருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. அன்றைய தினம் சுதர்சன பெருமாளை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும். தமிழகத்திலேயே மூலவரான சக்கரத்தாழ்வாருக்கு தங்க கவசம் இருப்பது, இந்த கோவிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
    எல்லா சக்திகளுக்கும் ஆதாரமான ஆதிபராசக்தியாக இருக்கும் சமயபுரம் மாரியம்மனுக்கு, ‘மகமாயி’ என்ற இன்னொரு பெயரும் உண்டு. இந்த கோவிலின் வரலாற்றை பார்க்கலாம்.
    காளி தேவியின் அருள் பெற்ற விக்கிரமாதித்த மகாராஜா, ‘நாடாறு மாதம்.. காடாறு மாதம்..’ என்ற கோட்பாட்டின்படி நாட்டை ஆண்டதாக புராண வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. உஜ்ஜையினி பட்டணத்தை தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்த விக்கிரமாதித்தன், தனது புத்தி கூர்மையாலும், விவேகத்துடன் கூடிய வீரத்தாலும் பிரச்சினைகளை எப்படி சமாளித்து வெற்றி அடைந்தார் என்பதனை வேதாளம் கதை உள்பட பல்வேறு கதைகளின் மூலம் நாம் அறிய முடியும்.

    விக்கிரமாதித்தனால் உருவான கோவில் :

    இத்தகைய பெருமைக்குரிய விக்கிரமாதித்த மகாராஜா காலத்தில் இருந்துதான் தொடங்குகிறது, சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தல புராண வரலாறு. காடாறு மாதம் ஆண்ட கால கட்டத்தில் விக்கிரமாதித்தனால் உருவாக்கி வழிபாடு செய்யப்பட்ட கோவில் தான், திருச்சி மாவட்டம் கண்ணனூரில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில். இதுவே சமயபுரம் மாரியம்மனின் மூல கோவில் ஆகும். காலப்போக்கில் எடுத்து கட்டப்பட்டதே தற்போதுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் என்பது வரலாற்றுப் பதிவுகள். இப்போது நாம் வழிபட்டு வரும் சமயபுரம் மாரியம்மன் கோவில் 17-ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் காலத்தில், ஒரு போரில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

    தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது என்ற பெருமைக்குரியது இந்த ஆலயம். தமிழகத்தில் உள்ள கோவில்களில் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு அடுத்த படியாக, அதிக உண்டியல் வருமானம் வருகிற ஆலயமாகவும் சமயபுரம் மாரியம்மன் கோவில் திகழ்கிறது. இங்கு வீற்றிருந்து வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை கொடுத்து, உலக உயிரினங்களை காத்து அருள்பாலித்து வரும் அம்பாளின் அழகு தெய்வீகமானது. எட்டு கரங்களுடனும், கழுத்தில் தலை மாலை அணிந்து, சர்ப்பக்கொடியுடன், ஐந்து அசுரர்களின் தலைகளை தன் காலால் மிதித்தபடி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் சமய புரத்து அம்மனின் அழகைக் கண்டு தரிசித்தால் மன அமைதி உண்டாகும். மேலும் மனம் ஒருமுகப்பட்டு மனம் தூய்மை பெறும்.

    அசுரனை அழித்தவள்:

    எல்லா சக்திகளுக்கும் ஆதாரமான ஆதிபராசக்தியாக இருக்கும் சமயபுரம் மாரியம்மனுக்கு, ‘மகமாயி’ என்ற இன்னொரு பெயரும் உண்டு. முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற அசுரன், ஈஸ்வரனை நினைத்து கடுந்தவம் செய்தான். அதன் பலனாக அவனுக்கு சிவபெருமான் பல வரங்களை அளித்தார். அதனால் ஏற்பட்ட ஆணவத்தால் மகிஷாசூரன், தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். அவனது துன்பத்தை தாங்க முடியாத தேவர்களும், முனிவர்களும், அன்னை ஆதிபராசக்தியிடம் போய் முறையிட்டனர். அம்பாளும் அவர்களின் வேண்டுதலுக்கு மனமிரங்கி, அஷ்டபுஜத்துடன் துர்க்கை சொரூபமாக சிங்கத்தின் மீது அமர்ந்து சென்று சூரனை வதம் செய்தாள். அன்னை, அசுரனை வதம் செய்த திருநாளைத்தான் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழாவாக நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.

    மகிஷாசூரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் தணியவும் அன்னையானவள் தவம் செய்ய எண்ணினாள். அதன்படி சோழ வள நாட்டின் தலைநகர் திருச்சிக்கு நேர் வடக்கே காவிரி வடகரை (கொள்ளிடம்) பகுதிக்கு வந்தாள். அங்குள்ள வேம்பு காட்டில் ‘கவுமாரி’ என்று பெயர் பூண்டு, சிவந்த மேனியளாக மஞ்சள் ஆடை தரிசித்து, உடல் முழுவதும் வாசனை புஷ்பங்களால் மலை போல் குவித்தபடி உண்ணா நோன்பிருந்தாள். இவ்வாறு பல ஆண்டு காலம் செய்த தவத்தின் பயனாக அன்னை சாந்த சொரூபிணியாக, சர்வ ரட்சகியாக மாறி மாரியம்மன் என்ற பெயர் பெற்றாள். இதுவே சமயபுரம் மாரியம்மனின் வரலாறு.

    பச்சை பட்டினி விரதம் :

    இந்த புராண வரலாற்றின் அடிப்படையில் தான், சமய புரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்பாள் விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வரும் நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த 28 நாட்களும் அம்பாளுக்கு நைவேத்தியம் படைக்க மாட்டார்கள். இளநீர், பானகம், நீர் மோர், கரும்புச் சாறு உள்ளிட்ட பானங்களே அன்னையின் ஆகாரம். இதற்கு ‘பச்சை பட்டினி விரதம்’ எனப் பெயர். பச்சை பட்டினி விரதம் முடிந்ததும் அம்பாள் பூச்சொரிதல் கண்டருள்வார். இதனைத் தொடர்ந்து நடைபெறும் சித்திரை தேரோட்டம் மிகவும் பிரசித்திப் பெற்றது. தேர்த் திருவிழாவின்போது லட்சக் கணக்கான பக்தர்கள் கூடி, முடி காணிக்கை, ஆடு, மாடு, கோழி காணிக்கை செலுத்துதல், அக்னி சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். தைப்பூசத்தின்போது அம்பாள் வடகாவிரியில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருள்வதுடன், தனது அண்ணன் ரங்கநாதரிடம் சீர் பெறும் நிகழ்ச்சி கண்கொள்ளா காட்சியாகும்.

    திருப்பணி வேலைகள் :

    கிராமப்புற தோற்றத்தில் இருந்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருப்பணி வேலைகள் அரசு ஒதுக்கிய பல கோடி நிதி மற்றும் நன்கொடையாளர்கள் பங்களிப்புடன் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வந்தன. கோவிலின் அனைத்து பிரகாரங்கள் எல்லாம் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்கு வசதியாக புதுப்பிக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் இலவசமாக தங்குவதற்காக நவீன வசதிகளுடன் மண்டபங்கள், கட்டணம் செலுத்தி தங்குவதற்கான விடுதி அறைகள் கட்டப்பட்டு உள்ளன. முடி காணிக்கை மண்டபம் குளியல் அறை வசதியுடன் கட்டி முடிக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டுக்கு வந்து உள்ளது.

    கிழக்குவாசல் ஏழு நிலை ராஜகோபுரம் தவிர மற்ற 3 கோபுரங்களும் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அம்பாள் கர்ப்பக்கிரகத்தில் சுதை வேலைப்பாடுகள் அதன் பழமை மாறாமல் புனரமைப்பு செய்யப்பட்டு உள்ளன. மொத்தத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவில் பக்தர்களின் வசதிக்காக புதுப்பொலிவு பெற்று பிப்ரவரி 6-ந்தேதி காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் கும்பாபிஷேகம் காண இருக்கிறது. ஆயிரம் கண்ணுடையாள், சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற பெருமைகளுக்குரிய சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று அம்மன் அருள் பெறுவோம்.

    நோய் தீர்க்கும் அபிஷேக நீர் :

    அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோவில் வளாகத்தில், காலையில் புனித நீராடி அம்மனை வழிபட்டு சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். எனவே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தங்கி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில், அம்பாளுக்கு செய்யப்படும் அபிஷேக நீர் தெளிக்கப்பட்டால் அம்மை நோய் விரைவில் குணமடையும் என்பதும் பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது. வெளிமாநில பக்தர்கள் மட்டும் இன்றி, வெளிநாட்டு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளும் அம்பாளின் அருள்பெற இந்தக் கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.
    அக்னிபுரீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் மனதளவில் உள்ள பிரச்சினைகளும், குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகள் விலகும்.
    சென்னை அருகே உள்ள திருக்கழுக்குன்றம் திருத்தலத்திற்கும், மதுராந்தகத்திற்கும் இடையே உள்ளது வழுவதூர் என்ற ஊர். இங்கு சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ ஆலயம் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் இறைவன், ஒரு பெண் பக்தைக்காக வாதிட்டவர் என்பது இத்தலத்தின் சிறப்பை தூக்கிப் பிடிக்கிறது. இறைவனின் திரு நாமம் அக்னிபுரீஸ்வரர் என்பதாகும். இறைவியின் பெயர் சவுந்தரியநாயகி என்பதாகும். சகல செல்வங்களையும் வாரி வழங்கும் அன்னை என்பதால் இந்தப் பெயர் வந்துள்ளது. இருவரும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

    இந்த ஆலய திருப்பணிக்கு கேட்டயவர்மா சுந்தரபாண்டியன் நிதி ஒதுக்கியதாகவும், நந்தா விளக்கு (11 விளக்கு) எரிய ஒரு அமைப்பை ஏற்படுத்தியதாகவும், அதற்காக தனியாரிடம் இருந்து வசூல் செய்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த ஆலயத்தில் 18 சித்தர்களும் வழிபட்டதற்கான ஆதாரமும், அவர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் இங்கு தங்கியிருந்து இறைவனை வழிபட்டதாகவும் கல்வெட்டுகள் மூலமாக அறியப்படுகிறது.

    தல வரலாறு :

    ஒரு முறை திருக்கழுக்குன்றத்தில் வசித்த ஒரு பெண், சில வீடுகளில் வேலை பார்த்து வாழ்க்கை நடத்தி வந்தார். அவளது கணவன் அந்த ஊரைச் சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தான். ஆனால் அந்தத் தொகையைக் காட்டிலும் நான்கு மடங்கு பணம் கொடுத்த பின்னரும் கூட, வட்டி கொடுத்தவர்கள் அந்தப் பெண்ணின் கணவனை துன்புறுத்தி வந்தனர். இதனால் மனமுடைந்த அந்தப் பெண், அந்தப் பகுதியைச் சேர்ந்த வழக்காடு மன்றத்தில் புகார் அளித்தாள்.

    ஆனால் வழக்கை விசாரித்தவர்கள், பணம் இருந்தவர்களின் பக்கம் நின்றனர். இதனால் அந்தப் பெண்ணுக்கும், அவளது கணவனுக்கும் நீதி கிடைக்கவில்லை. திக்கற்று நிற்பவர்களுக்கு தெய்வத்தைத் தவிர வேறு என்ன துணை இருக்கிறது. அதனால் அந்தப் பெண் இங்குள்ள இறைவனை வந்து வழிபட்டாள். இறைவனிடம் தன்னுடைய நிலையை கூறி அழுது புலம்பினாள். அவள் இறைவனை சந்தித்து முறையிடுவது தினசரி வாடிக்கையாகிப் போனது. அவள் தொடர்ச்சியாக 5-வது திங்கட் கிழமையாக வந்து வழிபட்டுக் கொண்டிருந்தாள்.

    அன்றைய தினம் அந்தப் பெண்ணின் கனவில் தோன்றிய இறைவன், ‘கலங்காதே! நீ மீண்டும் அதே வழக்காடு மன்றத்தில் போய் புகார் கொடு. வெற்றி உன் பக்கம் வந்து சேரும். தைரியமாகப் போ’ என்று சொல்லி மறைந்தார்.

    வழக்காடிய இறைவன் :

    அதன்படியே அந்தப் பெண்ணும் மீண்டும் புகார் கொடுத்தாள். வழக்கை விசாரிப்பதற்காக அனைவரும் கூடியிருந்தனர். அப்போது இறைவன், வழக்காடுபவர் வடிவில் அந்த மன்றத்திற்குள் நுழைந்தார். அப்போது தவறு செய்தவர்களான, வட்டி வசூலிப்பாளர்களால் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை. அவர்கள் அனல் மேல் நிற்பது போல் துடிதுடித்தனர். அங்கிருந்து எழுந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து இறைவன் அந்த மன்றத்தில் தன்னுடைய தரப்பு வாதத்தை வைத்து அந்தப் பெண்ணுக்கு நீதி வாங்கிக் கொடுத்தார்.

    இதையடுத்து வழக்கை விசாரித்த ஊர் பெரியவர்கள், ‘உங்களை இதற்கு முன்பு நாங்கள் இங்கே பார்த்ததில்லையே.. நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டனர்.

    அதற்கு இறைவன், ‘நான் யார் என்று தெரிய வேண்டும் என்றால், இங்கிருந்து ஐந்து கல் தொலைவில் உள்ள ஆலயத்திற்கு வாருங்கள்’ என்று கூறினார்.

    ஊர் பெரியவர்களும், ஊர் மக்களும், புகார் கொடுத்த பெண் உள்ளிட்ட அனைவரும் வாதாட வந்தவருடன் சென்றனர். ஆலயம் வந்ததும் இறைவன் அக்னி பிழம்பாக மாறி நின்றார். இதையடுத்து வழக்காட வந்தவர் இறைவன் என்பதை உணர்ந்த அனைவரும் ஆச்சரியத்துடன், உள்ள மகிழ்வுடனும் இறைவனின் சன்னிதி முன்பாக விழுந்து வணங்கினர். ஆனாலும் அக்னி பிழம்பாய் நின்ற இறைவனின் வெப்பம் அனைவரையும் வாட்டியது. உடனடியாக அவற்றை தன் சக்தியால், இறைவன் குளிர்வித்தார். அக்னி பிழம்பாக இறைவன் நின்றதால், ‘அக்னிபுரீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.

    இந்த ஆலயத்தில் ராஜகோபுரத்துடன் 10 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சன்னிதி, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. இது தவிர பைரவர், சனீஸ்வரர் ஆகியோருக்கும் சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன. சூரியன், சந்திரன், நர்த்தன கணபதி, பால கணபதி, பாலமுருகன், பிரம்மா, துர்க்கை திருமேனிகளும் உள்ளன.

    இந்த ஆலயத்திற்கு வந்து, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் மனதளவில் உள்ள பிரச்சினைகளும், குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகள் விலகும். மேலும் நீதிமன்ற வழக்கு களில் இருந்தும் விடுபடலாம். வெப்ப நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய இத்தல இறைவன் அருள்புரிகிறார். இங்குள்ள இறைவனை 5 திங்கட்கிழமைகள் தொடர்ச்சியாக வழிபடுவதுடன், நெய் தீபம் ஏற்றி, வில்வ இலை அர்ச்சனை செய்தால் நற்பலன்கள் கிடைக்கப்பெறும். அம்பாளுக்கு பவுர்ணமியன்று மாலையில் தீபமிட்டு வழிபட்டால் மனம் போல் மண வாழ்க்கை அமையும்.

    சென்னை அடுத்த மதுராந்தகம்- திருக்கழுக்குன்றம் சாலையில் வழுவதூர் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு செல்ல பஸ் வசதிகளும், ஷேர் ஆட்டோ வசதிகளும் இருக்கின்றன.
    ஊரைக் காத்த காளியின் பெயரால் அழைக்கப்படும் தலம், பெண்களின் மாதவிலக்கு குறை நீக்கும் திருக்கோவில், என்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு விளங்குகிறது மந்தைக்கரை காளி கோவில்.
    ஊரைக் காத்த காளியின் பெயரால் அழைக்கப்படும் தலம், பெண்களின் மாதவிலக்கு குறை நீக்கும் திருக்கோவில், இரண்டாம் ராஜேந்திர சோழன் வணங்கிப் போற்றிய ஆலயம், அபிராமி, பாலசுகாம்பாள் என இரண்டு அம்மன்கள் குடிகொண்ட சிறப்புமிக்க தலம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு விளங்குகிறது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காளி என்னும் திருத்தலம். இந்தக் கோவில் சோழமன்னன் ராஜராஜதேவன் எனும் இரண்டாம் ராஜராஜ சோழனின் காலத்தில் சிறப்பு பெற்று இருந்தது. இவ்வாலயத்தின் தென்புற கருவறைச் சுற்றில் அமைந்துள்ள கல்வெட்டு இதற்கு சான்றாக அமைந்துள்ளது.

    புராண வரலாறு:

    பழங்காலத்தில் இவ்வூரில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாளின் பெயரால், இந்த ஊர் ஸ்ரீனிவாசபுரம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது. ஒரு சமயம் வரலாறு காணாத புயலும், வெள்ளமும் இந்த ஊர் மக்களை வாட்டியது. பலருக்கு கடுமையான காய்ச்சலும் தொற்றிக் கொண்டது. இதனால் மக்கள் செய்வதறியாது தவித்தனர். அப்போது அந்த ஊர் பெரியவர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள் ‘உங்களுக்கு உதவ, காளியின் திருவுருவம் ஊரின் ஆற்றோரம் உள்ள மந்தைக் கரையில் காத்திருக்கிறது. விடிந்ததும் அங்கு சென்று அந்தக் காளியை எடுத்து வந்து வழிபடுங்கள். உங்கள் குறைகள் அனைத்தும் தீரும்’ என்றார்.

    அதன்படியே விடிந்ததும் ஊர்மக்கள் மந்தைக்கரைக்குச் சென்றனர். அங்கே கனவில் கூறியபடியே, அழகிய காளியம்மன் சிலை ஒன்று இருந்தது. அதனை மகிழ்வுடன் ஊருக்குக் கொண்டு வந்து அபிஷேகம் செய்து ஆராதித்தனர். தங்கள் குறைதீர மனமுருகி வேண்டினர். வழிபாட்டைத் தொடர்ந்து புயலும், வெள்ளமும் விலகியது. காய்ச்சல் கட்டுக்குள் வந்தது. இதனால் மனம் மகிழ்ந்த ஊர்மக்கள் தங்கள் ஊருக்கு காளி என்றே பெயரிட்டு அழைக்கலாயினர்.

    இதற்கு மற்றொரு தல வரலாறும் கூறப்படுகிறது. சிவபெருமான், அன்னை பார்வதிதேவியை மணம் புரியும் வைபவம், இவ்வூருக்கு சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமணஞ்சேரியில் நடைபெற்றது. இதன் காரணமாக இன்றும் திருமண வரம் வேண்டுவோர் புகலிடமாக திருமணஞ்சேரி திகழ்கின்றது. இத்திருமண விழாவைக் காண, திருமணஞ்சேரி வந்த காளி, இந்தப் பகுதிக்கும் வந்ததாகவும், இந்த ஊரின் வளமையும், அழகும் காளியை அங்கேயே தங்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் ஊருக்கு காளி என்ற பெயர் வந்ததாக கூறுகிறார்கள். இந்த அற்புதத் தலத்தில்தான் பாலசுகாம்பிகை சமேத திருகாமேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    ஆலய அமைப்பு :

    காளி என்ற இவ்வூரின் நடுவில் பழமையான சிவாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. எதிரே பிரமாண்ட திருக்குளம் இருக்கிறது. மூன்று நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்க, கோபுரத்தின் வலதுபுறம் தனி விநாயகர் சன்னிதி உள்ளது. ஆலயத்தில் நுழைந்ததும், பலிபீடம், நந்திதேவர் காட்சி தருகின்றனர். ஆலயத்திற்கு கொடிமரம் இல்லை. கோவிலை வலம் வரும்போது, முதலில் அன்னை அபிராமி சன்னிதி, அடுத்து சுவாமியின் கருவறைச் சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேசுவரர் ஆகியோரது திருமேனிகள் உள்ளன.

    வெளிப்பிரகாரத்தில் விநாயகர், பழமையான சிவலிங்கத் திருமேனிகள், திருவிடந்தை ஐதீகத்தை நினைவுபடுத்தும் ஆதிவராக பூதேவி உடனாய நித்ய கல்யாணப் பெருமாள், கஜலட்சுமி, அஷ்டபுஜ மகாகாளி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், தல மரமான பவழமல்லி ஆகியவற்றை காணலாம். சுவாமி சன்னிதியின் எதிரே, தென்கிழக்கே சூரியன், பைரவர், நவக்கிரகங்கள் அமைந்துள்ளன.

    மகா மண்டபம், அர்த்த மண்டபத்தை கடந்து உள்ள கருவறையில், ஆலயத்தின் நடுநாயகமாக இறைவன் திருக்காமேசுவரர், கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். பெரிய வடிவிலான லிங்கத் திருமேனியில் வட்டவடிவ ஆவுடையாரில் இறைவன் விற்றிருக்கிறார். சோழமன்னனின் மனம் கவர்ந்த இறைவன், நம்மையும் கவர்கின்றார். சுவாமி சன்னிதியின் எதிரே இடதுபுறம் பாலசுகாம்பாள், வலதுபுறம் அபிராமி என இரண்டு அம்பிகைகள் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருந்து அருள் புரிகிறார்கள்.

    பாலசுகாம்பாள் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில், அபய, வரத முத்திரைகளுடன் எளிய வடிவில் அருளாசி வழங்குகின்றாள். பெயருக்கேற்ப இந்த அன்னை சுகமாக வாழ்வைத் தருபவளாக விளங்குகின்றாள். பெண்களின் மாதவிலக்கு குறை தீர்க்கும் தலைமை மருத்துவர் இவரே. இந்த குறையுள்ள பெண்கள், அன்னைக்கு ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரையைப் படைத்து, அர்ச்சனை செய்து மனமுருக வேண்டிக்கொள்ள வேண்டும். அந்த பிரசாதத்தை அர்ச்சகரிடமே தந்து விநியோகம் செய்ய வேண்டும். அதன்பின் விரைவில் மாதவிலக்கு குறை நீங்கும் என்பது ஐதீகம். குறை நீங்கிய பிறகு மீண்டும் ஒருமுறை வந்து நன்றி கூறிச் செல்ல வேண்டும்.

    மாதந்தோறும் பவுர்ணமியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர, ஐப்பசி அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம், ஆடிப்பூரம், நவராத்திரி விழாவும், விநாயகர் சதுர்த்தி விழாவும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

    இந்த ஆலயத்தைச் சுற்றிலும் திருமணஞ்சேரி, திருவேள்விக்குடி, அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றான கொற்கை, மூவலூர், கிடாத்தலைமேடு துர்க்கை, சித்தர்காடு போன்ற பழமையான தலங்கள் அமைந்துள்ளன.

    அன்னை அபிராமி :

    அன்னை பாலசுகாம்பாளை விட சற்று உயரமான உருவத்தில் அபிராமி அம்பாள் காட்சி அளிக்கின்றாள். அன்னை நின்ற கோலத்தில் அபய வரத முத்திரையுமாக நான்கு கரங்களுடன் அருள் வழங்குகின்றாள். ஒரு காலத்தில் இந்த ஆலயம் சிதிலமடைந்து விளக்கேற்றவே வழியில்லாத நிலையில் இருந்தபோது, ஒரு சிவனடியாரின் கனவில் தோன்றி திருப்பணிகள் செய்ய உத்தரவிட்டாள் என்பது செவிவழிச் செய்தியாகும். அதன்படி அந்த சிவனடியாரும் கோவிலுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தினார்.

    அபிராமி அன்னையினைப் பற்றி மற்றொரு கதையும் கூறப்படுகிறது. திருப் பணியின் போது அன்னையின் இடது மேல் கரம் சேதமடைந்து இருந்ததால், அதற்கு மாற்றாக வேறு திருவுருவை வைக்க முடிவு செய்திருந்தனர். அப்போது மீண்டும் சிவனடியார் கனவில் தோன்றிய அன்னை அபிராமி, ‘உங்களின் குழந்தைக்கு ஊனம் இருந்தால் வெளியில் வீசி விடுவீர்களா?’ எனக் கேட்டது. திடுக்கிட்டு எழுந்த சிவனடியார், அந்த கரத்திற்கு மட்டும் அளவெடுத்து கரம் பொருத்தி, அன்னை அபிராமியை நிறுவினார். மொத்தத்தில் இத்தல அம்பாள் உயிர்ப்புடன் இருப்பவர் என்பதற்கு இவையே சான்றுகளாக உள்ளன.

    அமைவிடம் :

    நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், காளி திருத்தலம் அமைந்துள்ளது. திருமணஞ்சேரிக்கு வடக்கே சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக் கிறது. சென்னையிலிருந்து தென்மேற்கே 260 கிலோமீட்டர் தூரத்திலும், மயிலாடுதுறைக்கு மேற்கே 12 கிலோமீட்டர் தூரத்தில் இந்த தலம் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து வசதி உள்ளது.
    தன்னை வழிபட்டு வந்த பக்தன் செய்த தவறையும் மன்னித்து, அவனையே குபேரனாக்கிப் பெருமை சேர்த்த திருவாப்புடையார் கோவில், மதுரை மாநகரின் செல்லூர் பகுதியில் அமைந்திருக்கிறது.
    தன்னை வழிபட்டு வந்த பக்தன் செய்த தவறையும் மன்னித்து, அவனையே குபேரனாக்கிப் பெருமை சேர்த்த திருவாப்புடையார் கோவில், மதுரை மாநகரின் செல்லூர் பகுதியில் அமைந்திருக்கிறது.

    தல வரலாறு :

    சோழாந்தக மன்னன் என்பவன் மிகச்சிறந்த சிவபக்தனாக இருந்தான். அவன் எப்போதும் சிவனை வழிபாடு செய்த பின்புதான் சாப்பிடுவான். ஒரு முறை அவன், தனது அமைச்சர் மற்றும் படைவீரர்களுடன் அருகிலிருந்த காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அப்போது, அழகிய மான் ஒன்று அவன் கண்ணில் பட்டது. உடனே அவன், அந்த மானை விரட்டிக் கொண்டு நடுக்காட்டிற்குள் சென்று விட்டான். அந்த மான் அவனது பிடியில் சிக்காமல் காட்டிற்குள் சென்று மறைந்து விட்டது.

    மானை விரட்டிச் சென்ற மன்னன் களைப்பால் அவதியுற்றான். அப்படியே அந்தக் காட்டிற்குள் சோர்ந்து போய் அமர்ந்து விட்டான். அவன் பின்னால் சென்ற பாதுகாப்பு வீரர்கள், மன்னனின் சோர்வு நீங்க ஏதாவது சாப்பிடும்படி சொன்னார்கள். ஆனால் மன்னன், ‘சிவனுக்கு வழிபாடு செய்த பின்பே சாப்பிடுவேன்’ என்று சொல்லி மறுத்து விட்டான்.

    நடுக்காட்டில் இறைவனை வழிபட வேண்டும் என்றால், சிவலிங்கத்திற்கு எங்கே போவது? மன்னனுடன் வந்த அமைச்சர், மன்னனை சாப்பிட வைப்பதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்தார். அந்தக் காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து, அதைத் தரையில் ஆப்பு போன்று அடித்து வைத்தார்.

    பின்னர் அவர் மன்னனிடம் அந்த மரத்துண்டைக் காட்டி, ‘அந்தச் சுயம்புலிங்கத்தை வழிபட்டுவிட்டுத் தாங்கள் சாப்பிடலாம்’ என்று சொல்ல, சோர்வுடன் இருந்த மன்னன், அந்த ஆப்பைச் சிவலிங்கம் என நினைத்து வணங்கி விட்டு சாப்பிட்டான். அவனுக்குச் சோர்வு நீங்கிய பிறகு, தான் வணங்கியது சிவலிங்கம் அல்ல, அது ஆப்பு என்று தெரிந்தது.

    அதை நினைத்து வருந்திய மன்னன், ‘இறைவா! நான் இதுவரை உன்னை வழிபட்டு வந்தது உண்மையானால், நான் வணங்கிய இந்த ஆப்பில் இறைவனாக இருந்து அருள் புரிய வேண்டும்’ என்று மனமுருக வேண்டினான். மன்னனின் பக்தியில் மகிழ்ந்த இறைவன், அந்த ஆப்பிலேயே இறைவனாகத் தோன்றினார். ஆப்பில் எழுந்தவர் என்பதால் அவருக்கு ‘ஆப்புடையார்’ எனும் பெயர் ஏற்பட்டது. அந்த ஊரும் ‘ஆப்பனூர்’ என்றானது.

    குபேரனான பக்தன் :

    பிரம்மனின் வழியில் வந்த புண்ணியசேனன் என்கிற சிவபக்தன், தான் பல கோடி செல்வத்திற்கு உரிய வராக வேண்டும் என்று நினைத்து, இந்தக் கோவிலுக்கு வந்து கடும் தவம் இருந்து வந்தான். அவனுடைய தவத்தில் மகிழ்ந்த ஆப்புடையார், சுகந்த குந்தளாம்பிகையுடன் அவன் முன்பாகத் தோன்றினார்.

    புண்ணியசேனன் தன் முன்பாகத் தோன்றிய இறைவனிடம், தன்னைப் பெரும் செல்வமுடையவராக்க வேண்டுமென்று வேண்டினான். இறைவனும் அவனைப் பெரும் செல்வமுடையவனாக ஆக்கினார். பெரும் செல்வம் கிடைத்தவுடன், அவனிடம் ‘தான்’ எனும் ஆணவமும் சேர்ந்து கொண்டது. அந்த ஆணவத்தின் காரணமாக அவன், இறைவனின் அருகிலிருந்த அம்பிகையின் அழகில் மயங்கினான்.

    அதனை அறிந்த அம்பிகை அவனுடைய உயிரைப் பறித்தார். தன்னுடைய பக்தன் தெரியாமல் செய்த தவறை மன்னித்து, அவனை மீண்டும் உயிர்ப்பிக்க உதவும்படி அம்பிகையிடம் சொன்னார். அம்பிகையும் அதற்குச் சம்மதிக்க, இறைவன் அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தருளினார். இறைவனின் கருணையால் உயிர் பெற்ற அவன், தனது தவறுக்கு இருவரிடமும் மன்னிப்பு வேண்டினான்.

    அவனை மன்னித்த ஆப்புடையார், அவனுக்குக் ‘குபேரன்’ என்று புதுப்பெயரிட்டுப் புதிய வாழ்வு தந்தார். மேலும் பெரும் செல்வத்துடன் வடக்கு திசையைக் காத்து வரும் பணியை அவனுக்கு வழங்கிப் பெருமை சேர்த்தார். தன்னுடைய பக்தன் தவறு செய்த போதும், அவனை மன்னித்து, அவனுக்குப் பெரும்பணி கொடுத்த பெருமை இறைவனுக்கும் கிடைத்தது.

    இந்தக் கோவிலில் மூலவரான ஆப்புடையார் சுயம்புலிங்கமாகக் கிழக்கு நோக்கிப் பார்த்த நிலையிலும், அம்மனான சுகந்த குந்தளாம்பிகை தெற்கு நோக்கிப் பார்த்த நிலையிலும் இருக்கின்றனர். ஆலய வளாகத்தில் விநாயகர், முருகன், நடராஜர், காசி விசுவநாதர், மீனாட்சி ஆகியோரது சிலைகளும், நவக்கிரக சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    வழிபாட்டுப் பலன்கள் :

    • இத்தலத்து இறைவனுக்கு ஒரு நெய்விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் அது ஆயிரம் பசுக்களைத் தானம் செய்ததால் கிடைக்கும் பலனுக்கு இணையானதாகும்.

    • இத்தலத்து இறைவனை இளநீர் கொண்டு நீராட்டி வழிபட்டால், அது நூறு அசுவமேத வேள்வி செய்வதால் கிடைக்கும் பலனைத் தரக்கூடியது.

    • தாங்கள் செய்த தவறுகளால் அனைத்தையும் இழந்து வறுமைக்குள்ளானவர்கள், தங்களது தவறுகளை உணர்ந்து, இங்கு வந்து இறைவனை வழிபட்டால், அவர்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவார்கள்.

    • இக்கோவிலில் இருக்கும் முருகப்பெருமானை செவ்வாய் தோஷமுடையவர்கள் வழிபட்டால், அவர்களுடைய தோஷம் நீங்கிச் சிறந்த பலன் கிடைக்கப் பெறுவார்கள்.

    • இக்கோவிலில் இருக்கும் இறைவியான சுகந்த குந்தளாம்பிகையை வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகும் பலனைப் பெறுவார்கள்.

    இறைவனின் சிறப்பு :

    இந்தக் கோவில் மூலவரான சுயம்புலிங்கம் சிறியதாக இருப்பினும், இவரது பெருமை உயர்ந்தது என்கின்றனர். மலைகளில் மேருவைப் போலவும், பசுக்களுள் காமதேனுவைப் போலவும், விண்மீன்களுக்கிடையே சந்திரனைப் போலவும், ஒளியுடைய பொருட்களுள் சூரியனைப் போலவும், கொடையாளிகளுள் மேகத்தைப் போலவும், புருஷர்களுள் விஷ்ணுவைப் போலவும், இது போன்று எவையெல்லாம் சிறப்புடையதோ, அதே போல் இங்குள்ள இறைவனான ஆப்புடையார் மற்ற சுயம்புலிங்கங்களை விடச் சிறப்பு மிக்கவர் என்றும், இவரை வணங்கினால், அனைத்துத் தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்று இக்கோவிலுக்கான தலபுராணம் கூறுகிறது.

    * சோழாந்தகனின் மரபு வழியில் வந்த சுகுணபாண்டியன் என்பவனது ஆட்சியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அப்போது இக்கோவில் அர்ச்சகர், நெல்லுக்குப் பதிலாக, வைகை ஆற்று மணலைக் கொண்டு சமைத்தார். அப்போது அந்த மணல் அன்னமாக மாறியது என்றும், அதனால் இத்தல இறைவனுக்கு ‘அன்னவிநோதன்’ என்கிற பெயர் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

    * தன்னை வணங்கி வந்த பக்தன் தவறு செய்த போதும், அவனைத் திருத்தி அவனுக்குக் குபேர வாழ்வு அளித்ததால் இத்தலத்து இறைவனைக் கருணை மிகுந்தவன் என்றும் சொல்கின்றனர்.

    அமைவிடம் :

    மதுரை மாநகரில் செல்லூர் பகுதியில் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்லூர் செல்லும் அனைத்து நகரப்பேருந்துகளிலும் செல்ல முடியும். கோரிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் சிறிது தூரம் நடந்தும் இத்தலத்திற்குச் செல்லலாம்.
    சோழ நாட்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் ஏராளம். சோழர்களால் அப்படி கட்டப்பட்ட ஆலயம்தான் நடனபுரி என்று அழைக்கப்பட்டு வரும், கூத்தூரில் உள்ள தர்மசாஸ்தா ஆலயம்.
    சோழ நாட்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் ஏராளம். சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள் தவிர கிராம தெய்வமாக கருதப்படும் அய்யனார் என்னும் தர்மசாஸ்தா ஆலயங்களும் சோழர்களால் கட்டப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு ஆலயம்தான் நடனபுரி என்று அழைக்கப்பட்டு வரும், கூத்தூரில் உள்ள தர்மசாஸ்தா ஆலயம்.

    ஆலய அமைப்பு :

    ஊரின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது இந்த ஆலயம். கோவிலின் முன்புறம் இரண்டு குதிரை, இரண்டு யானைகள், தர்ம சாஸ்தாவின் வாகனங்களாக விளங்குகின்றன. இடதுபுறம் காவல் தெய்வமான சங்கிலி கருப்பர் சன்னிதி உள்ளது. பலியிடுதல் இவருக்கு மட்டுமே இங்கு நடைபெறுகிறது. வடக்கு நோக்கி மதுரை வீரன் சன்னிதி இருக்கிறது. உள்ளே நுழைந்ததும் வாகன மண்டபம். அதில் யானை, பலிபீடம் உள்ளது. அடுத்ததாக ஸ்தபன மண்டபம். இந்த மண்டபத்தின் இடதுபுறம் ஆதி சித்தி விநாயகர் அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மகா மண்டபத்தில், தர்ம சாஸ்தாவின் உற்சவ மூர்த்தி சிலைகள் உள்ளன.

    அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில், தர்மசாஸ்தா கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தர்மசாஸ்தாவின் வலதுகால் தொங்கிய நிலையிலும், இடது கால் மடிந்து குறுக்காகவும் உள்ளது. இவரின் வலதுபுறம் பூர்ணாம்பிகை திருமண கோலத்தில் அமர்ந்துள்ளார். இடதுபுறம் புஷ்கலாம்பிகை இருக்கிறார்.

    தல வரலாறு :

    தர்மசாஸ்தா இந்த ஊருக்கு வந்து சேர்ந்தது ஒரு தனிக்கதை. கேரள வணிகர்கள் சிலர், வியாபாரம் செய்யும் பொருட்டு சோழ நாட்டுக்கு வருவது வழக்கம். அதேபோல் ஒரு முறை கேரள வணிகர்கள் வியாபாரம் செய்வதற்காக விலையுயர்ந்த பொருட்களை மாட்டு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வந்தனர். அவர்கள் தங்களுடன், தாங்கள் வழிபட தர்மசாஸ்தாவின் உற்சவர் சிலைகளையும் கொண்டு வந்தனர்.

    நடனபுரிக்கு அந்த வணிகர்கள் வந்தபோது, வானம் கறுத்து மழைவரும் போல் இருந்தது. உடனே வணிகர்கள் தங்கள் பொருட் களுடனும், தர்மசாஸ்தா சிலைகளுடனும் அருகே இருந்த விநாயகர் ஆலயத்தில் தங்கினர்.

    தர்மசாஸ்தா, விநாயகரிடம் தான் இரு மனைவிகளுடன் வந்திருப்பதால் தங்க வசதியான இடம் வேண்டுமென கேட்டார். உடனே விநாயகரும் தன் இடத்தை சாஸ்தாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு தள்ளி சென்று அமர்ந்தார். தள்ளிச்சென்று அமர்ந்த அந்த விநாயகரே, ‘ஆதி சித்தி விநாயகர்’ என்று போற்றப்படுகிறார்.

    மழை விட்டதும் வணிகர்கள் புறப்பட்டனர். அவர்கள் தங்களுடன் கொண்டு வந்த பொருட்களை மறவாது எடுத்துச் சென்றனர். ஆனால் தர்மசாஸ்தாவின் சிலைகளை மறந்து சென்று விட்டனர்.

    தஞ்சாவூர் வந்த வியாபாரிகள், தாங்கள் கொண்டு வந்த மிளகு மற்றும் ஏலக்காய் போன்ற மூட்டைகளை வியாபாரம் செய்ய பிரிந்த போது, அவர்கள் அதிர்ந்து போனார்கள். காரணம் அந்த மூட்டைகள் யாவும், உப்பு மூட்டைகளாக மாறி இருந்தன. தாங்கள் கொண்டு வந்த தர்ம சாஸ்தாவின் சிலையை நடனபுரியில் விட்டு வந்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டது என உணர்ந்த வணிகர்கள், உடனே புறப்பட்டு நடனபுரி வந்தனர்.

    தர்ம சாஸ்தா சிலைகளை எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘நான் இங்கேயே தங்கியிருக்க நினைக்கிறேன்’ என்றது அந்தக் குரல். இதையடுத்து வணிகர்கள் திரும்பிவிட்டனர். அதுமுதல் தர்மசாஸ்தாவின் உற்சவர் சிலைகள் தான் இந்த ஆலயத்தில் பூஜையில் இருந்து வந்தன.

    மூலவர் சிலைகள் :

    ஆலயத்தின் அருகே உள்ள திருக்குளத்தில் மூலவர் சிலைகள் இருப்பதாக, அந்த ஊர் பக்தர் ஒருவரின் கனவில் ஒரு காட்சி தென்பட்டது. உடனே ஊர் மக்கள் குளத்தை தோண்டிய போது மூலவர் சிலைகள் கிடைத்ததாம். அந்த சிலைகளையே கருவறையில் பிரதிஷ்டை செய்து விட்டனர். அவைகளே தற்போது மூலவராய் அருள்பாலிக்கும் தர்மசாஸ்தா மற்றும் பூரண-புஷ்கலா திருமேனிகள்.

    இந்த ஆலயத்தில் ஆகம விதிப்படி தினசரி ஒரு கால பூஜை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் இறைவன், இறைவிக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. அப்போது சிறப்பு யாகமும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். கார்த்திகை மாதம் 1008 தீபம் ஏற்றி அலங்கார தீபாராதனையும், அன்னதானமும் செய்யப்படும்.

    குழந்தை பேறு வேண்டி பிரார்த்தனை செய்யும் பெண்களுக்கு, அந்தப்பேறு நிச்சயம் கிடைப்பதாக நம்பிக்கை. அவ்வாறு குழந்தை வரம் பெறும் பெண்கள், தங்களது வளைகாப்பு முடிந்ததும், வளையல்களை கொண்டு வந்து இங்குள்ள அம்பிகைக்கு சாத்துகின்றனர். மேலும் குழந்தை பிறந்ததும், சிறிய அளவில் ஆலயமணியை வாங்கி கட்டி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கூத்தூர் திருத்தலம். கல்லணை மற்றும் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

    தாமிரபரணி ஆற்றின் கரையில் புராதன சின்னமாகவும், வரலாற்று சிறப்பு மிக்கதாகவும் அமைந்துள்ளது ‘தென்திருமாலிருஞ்சோலை’ என்னும் திருத்தலம்.
    புராதன சின்னமாகவும், வரலாற்று சிறப்பு மிக்கதாகவும் விளங்கும் ‘அழகர் கோவில்’, நெல்லை அருகே உள்ள சீவலப்பேரியில், தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் ‘தென்திருமாலிருஞ்சோலை’ என்றும் அழைக்கப்படுகிறது.

    சிவபெருமானின் கல்யாண கோலத்தை தரிசிக்க பொதிகை மலை வந்த அகத்திய முனிவர், பெருமாளை சிவனாக மாற்றி அமைத்த ‘குற்றாலநாதர் கோவிலைப்’ பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் அரியும், சிவனும் ஒன்று என்பதை வலியுறுத்தும் பொருட்டு, அகத்தியரால் இடமாற்றம் செய்யப்பட்ட பெருமாளும் இந்தப் பகுதியில்தான் இருக்கிறார்.

    அகத்தியரால் உருவான தலம் :

    பெருமாளை அவரது சித்தப்படி, அழகராக தாமிரபரணி ஆற்றங்கரையில் பிரதிஷ்டை செய்தார் அகத்திய முனிவர். மகாலட்சுமியும் அந்த இடத்தை வலம் வந்து பெருமாளுடன் சேர, அந்த இடம் ‘ஸ்ரீவலம்வந்த பேரி’ என்று அழைக்கப்பட்டது. தற்போது அந்தப் பெயரே மருவி ‘சீவலப்பேரி’ என்று நிலைத்திருக்கிறது. இரண்டாம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது இந்தக் கோவில் என்று கூறப்படுகிறது. அகத்தியர் பிரதிஷ்டை செய்த இறைவனுக்கு, கவுதம மகரிஷி கர்ப்பகிரகம் அமைத்து வழிபட்டு இருக்கிறார். ஸ்ரீ வல்லபபாண்டியன் கோவில் எழுப்பியிருக்கிறார். கோவில் கருவறையில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.

    தென் தமிழ்நாட்டில் தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராம நதி என்னும் மூன்று நதிகள் கலக்கும் இடத்தில், இந்த விஷ்ணு தலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊருக்கு முக்கூடல், திரிவேணி சங்கமம் என்ற பெயர்களும் உண்டு. மதுரையில் உள்ள அழகர் கோவிலை வடதிருமாலிருஞ்சோலை என்றும், சீவலப் பேரியில் உள்ள அழகர் கோவிலை, தென் திருமாலிருஞ்சோலை என்றும் சொல்வார்கள். இந்தக் கோவிலின் மூலவர் அலர்மேலுமங்கை சமேத அழகர். உற்சவர் மகாலட்சுமி பூமாதேவி சமேத சுந்தரராஜ பெருமாள்.

    இனி இந்த கோவில் வரலாற்றை பார்ப்போம்.

    பூமியை சமநிலைப்படுத்த அகத்தியர் தென்னாடு வந்தார். சிவபெருமானின் கல்யாண கோலத்தை பார்க்க திரிகூடமலையில் இருந்த அழகர் கோவிலின் உள்ளே செல்ல முயன்றார். அப்போது அங்கு இருந்தவர்கள், அகத்தியர் சைவர் என்பதால் அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். உடனே அகத்திய முனிவர் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்த திருமாலை வேண்டி அவரை சீவலப்பேரியில் எழுந்தருள செய்து, அழகர் இருந்த இடமான திரிகூடமலையில் சிவபெருமானை எழுந்தருளச் செய்தார். அழகருக்கு சீவலப்பேரியின் அழகு பிடித்துப்போக இங்கேயே இருந்து விட்டார். திரு மகளும் அழகரை வலம் வந்து அவர் மார்பில் சேர்ந்தாள். அகத்தியருடன் வந்த சிறு பெண்ணான தாம்பரையும் நதியாகி அழகருடன் வந்தாள். அதுவே தாமிரபரணி நதியாகும்.

    ஆலயச் சிறப்பு :

    திருப்பதி கோவிலுக்கு முன்பே ஏற்பட்டுள்ள இந்தக் கோவில், பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன் மாறவர்மன் ஸ்ரீ வல்லபனால் கட்டப்பட்டது. பாண்டிய மன்னர்கள் இந்தக் கோவிலுக்கு மானியங்கள் அளித்துள்ளதாக கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. ஸ்ரீ வல்லப பாண்டியனின் சிலையும் கோவிலில் உள்ளது.

    சுடலைமாடசாமி அழகருக்கு காவல் தெய்வமாக அண்ணன் முண்டசாமியுடன் அருகில் கோவில் கொண்டு இருக்கிறார். மற்ற மாடன் கோவில்கள் இங்கிருந்து பிடிமண் எடுத்து கட்டப்பட்டவையாகும். சுடலைமாட சாமியின் பிறப்பிடமும் இதுதான்.

    தங்கையாக துர்க்கை, விஷ்ணு துர்க்கையாக எதிரில் கோவில் கொண்டு இருக்கிறாள். கர்ப்பகிரஹத்தில் விஷ்ணுவும், துர்க்கையும் அருகருகே எழுந்தருளி இருக் கிறார்கள். வேறு எங்கும் இந்த அமைப்பை காண முடியாது.

    அகத்தியர் பூமியை சமன்செய்து திரும்பும்போது இங்கு வந்து அழகரை தரிசித்து விட்டு சிவனை மனதால் நினைக்க சிவனும், காசி விசுவநாதராக, விசாலாட்சியுடன் காட்சி அளித்தார். அந்த கோவிலும் அருகே உள்ளது.

    திருப்பதி வெங்கடாசலபதியும் ஸ்ரீனிவாசராக இங்கே எழுந்தருளி இருக்கிறார். ஆஞ்சநேயர் சிறுகுழந்தை வடிவில் கைகூப்பியபடி இருக் கிறார். அவருக்கு வெண்ணெய் காப்பு, வடமாலை சாத்தி சனிக்கிழமைதோறும் வழிபடு கிறார்கள். நல்ல காரியங்களுக்கு பூக்கட்டி பார்க்கும் பழக்கமும் இந்த சன்னிதியில் இருக்கிறது.

    இங்குள்ள லட்சுமணர் முன்பக்கம் மனித ரூபமாகவும், பின் பக்கம் சர்ப்ப ரூபமாகவும் இருக்கிறார். ராமர், சீதையை தேடி இங்கு வந்தபோது, பக்கத்தில் உள்ள மலைமேல் ஏறி தேடியதாக சொல்கிறார்கள். ராமருடைய பாதம் மலை அடிவாரத்தில் உள்ளது. நாலாயிர திவ்ய பந்தத்தில் பெரியாழ்வார் பாசுரங்களில் இந்த கோவில் குறித்த குறிப்புகள் உள்ளன. இந்த கோவிலின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை முதல் தேதி நடை பெறும்.

    முன்பு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 24-ந் தேதி இந்த கோவிலில் கொடியேற்றி பத்து நாட்கள் பிரமோற்சவம் நடந்து உள்ளது. 9-ம் நாள் சித்திரை விஷூ அன்று தேர்த்திருவிழா நடந்து உள்ளது. புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் கருட உற்சவம் இன்றும் நடக்கிறது. சித்திரை முதல் நாள் அன்று விசேஷ பூஜைகளும், ஆடி ஸ்வாதி அன்று கருட சேவையும், ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமைகளில் விசேஷ பூஜையும் நடக்கிறது.

    கும்பமேளா சமயங்களிலும், அமாவாசை, மாதப்பிறப்பு சமயங் களிலும் மக்கள் இந்த ஊர் ஆற்றில் நீராடி பித்ருக்களுக்கு சடங்குகள் செய்கிறார்கள். காசியில் உள்ள திரிகூட சங்கமத்திற்கு இணையாக இந்த முக்கூடலை கருதுகின்றனர்.

    முப்புரி வலம்புரி சங்கின் சிறப்பு :

    இந்த கோவிலில் ஒரு முப்புரி வலம்புரி சங்கு உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த சங்கு கடலில் தோன்றும். ஒரு முனிவரால் அத்தகைய சங்கு ஒன்று இந்த கோவிலுக்கு தரப்பட்டது. 41 நாட்கள் தொடர்ந்து இந்த சங்கு தீர்த்தத்தில் நீராடினால் தீராத நோய்களும் தீர்வதாக நம்பிக்கை உள்ளது. கவுதம மகரிஷி இந்த கோவிலில் தவம் புரிந்து உள்ளார். அவரது உருவம் இக்கோவிலில் உள்ள கல்தூணில் உள்ளது.

    மன்னனுக்கு பார்வை வழங்கிய கருடாழ்வார் :

    சுந்தரராஜ பாண்டிய மன்னன் மணப்படையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வருகையில் அவனுக்கு கண் தெரியாமல் போனது. அந்த சமயம் வேறொரு மன்னன் கருங்குளம் என்ற ஊருக்கு கருட வாகனம் செய்து சீவலப்பேரி வழியாக எடுத்து சென்றான். கருட வாகனத்தின் எடை தாங்காமல் தாமிர பரணி ஆற்றங்கரையிலேயே அந்த கருட வாகனத்தை வைத்து விட்டு சென்று விட்டனர்.

    அப்போது கூடலழகர், பாண்டிய மன்னனின் கனவில் தோன்றி அந்த கருட வாகனத்தை தனது கோவிலில் வைக்க உத்தரவிட்டார். மன்னனும் அவ்வாறே செய்தான். இவ்வாறு செய்ததும் கண் பார்வை இழந்த சுந்தரராஜ பாண்டியனுக்கு இழந்த கண்பார்வை மீண்டும் கிடைத்தது. இன்றும் அந்த கருட வாகனம் இந்த கோவிலில் உள்ளது. கண்நோய் தீர கருட சேவை செய்யும் பழக்கம் இந்த கோவிலில் உள்ளது.

    இங்குள்ள கருடாழ்வாரின் கண், மேல் நோக்கி அமைந்து உள்ளது. 4 கைகள் உள்ளன. சர்ப்ப ஆபரணமாக ஆறு இடங்களில் சர்ப்பங்களை அணிந்து இருக்கிறார். இந்த மாதிரியான கருட வாகனம் மதுரையில் உள்ள கள்ளழகர் கோவிலிலும், கூடலழகர் கோவிலிலும், இங்கும்தான் உள்ளது.

    க்கரத்தாழ்வாரின் மகிமை :

    ஒரு முறை விஷ்ணு பகவானின் கையில் உள்ள ஸ்ரீ சக்கரம், சுக்கிராச்சாரியாரின் தாயை சம்ஹாரம் செய்ததால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதற்காக விஷ்ணுவை பிரார்த்திக்க பகவானும், தாமிரபரணி முக்கூடலில் நீராடி தன்னை வழிபட்டு வந்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று அருளினார்.

    ஸ்ரீ சக்கரமும், சீவலப்பேரி வந்து முக்கூடலில் நீராடி பகவானை வழிபட ஸ்ரீ கள்ளழகராக காட்சியளித்து ஸ்ரீ சக்கரத்தை ஏற்றுக்கொண்டார். இங்குள்ள ஆறு அதனால் சக்கர தீர்த்தமாகவும் வழிபடப்படுகிறது. சித்திரை மாதம் பவுர்ணமி அன்று அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இங்கு கொண்டாடப்படுகிறது.

    ×