என் மலர்tooltip icon

    கோவில்கள்

    இந்திரன், புதன் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என்ற பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது, காஞ்சீபுரம் நகரில் அமைந்துள்ள கச்சி நெறிக்காரைக்காடு எனும் திருக்காலிமேடு திருக்கோவில்.
    காஞ்சீபுரத்தின் ஆதி கோவில், செம்மணலால் ஆன லிங்கத் திருமேனி கொண்ட இறைவன், இந்திரன், புதன் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது, காஞ்சீபுரம் நகரில் அமைந்துள்ள கச்சி நெறிக்காரைக்காடு எனும் திருக்காலிமேடு திருக்கோவில்.

    காஞ்சீபுரத்தில் எண்ணற்ற ஆலயங்கள் அமைந்துள்ளன. மன்னர் காலத்தில், சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, ஜைனகாஞ்சி என மூன்று பகுதிகளைக் கொண்டு காஞ்சீபுரம் நகரம் விளங்கியது.

    இதில் சைவ ஆலயங்களில் திருக்கச்சி ஏகம்பம், திருமேற்றளி, ஓணகாந்தன்தளி, திருக்கச்சி நெறிக்காரைக் காடு, திருக்கச்சி அநேகதங்காவதம் என ஐந்து தேவாரப் பாடல் பெற்ற தலங்களும், கச்சி மயானம், இடபேஸ்வரம் என இரு வைப்புத் தலங்களும் அமைந்துள்ளன. இதில் திருக்கச்சி நெறிக்காரைக்காடு என்ற தேவாரத்தலமே இன்று திருக்காலிமேடு என அழைக்கப்படுகிறது.

    தல வரலாறு :

    காஞ்சீபுரம் பழங்காலத்தில் தற்போதைய திருக்கோவில் இடத்திற்கும் மேற்கே பரந்து விரிந்து இருந்துள்ளது. அதற்குச் செல்லும் வழியில் காரைக் காடுகள் நிறைந் திருந்தன. அந்தக் காட்டுப் பகுதியில் இத்திருக்கோவில் அமைந்திருந்ததால், இத்தலத்தை காரைக்காடு என திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். அதையொட்டி திருக் கச்சி நெறிக்காரைக்காடு என்ற பெயர் வழங்கலானது.

    காஞ்சி புராணம், இத்தலத்தினை ‘சத்ய விரத நாதம்’ என அழைக்கின்றது. காஞ்சி மாநகரின் பன்னிரண்டு பெயர்களில் சத்யவிரதநாதமும் ஒன்றாகும். இங்கு எழுந்தருளிய இறைவன் சத்தியநாதர் என வழங்கப்படுகிறார். இவரே காஞ்சீபுரத்தின் ஆதி நாயகராவார். ஜோதிலிங்கத்தை விஷ்ணு வழிபடுவதற்கு முன்பாகவும், மண் லிங்கமான ஏகம்பனை, அம்பிகை வழிபடுவதற்கு முன்பாகவும் தோன்றியது இந்த ஆலயம் என்று கூறப்படு கிறது. அன்னை போக சக்தியாக (உலோகத் திருமேனியில்) கருவறைக்குள் எழுந்தருளி உள்ளார். அன்னையின் திருப்பெயர் பிரமராம்பிகை என்பதாகும். அன்னை வலது கரத்தில் மச்ச ரேகையும், தான்ய ரேகையும், மீனின் வடிவம் மற்றும் நெற்கதிர் வடிவம் அமைக்கப் பட்டுள்ளன.

    இறைவன் பெயர் சத்யநாதசுவாமி. செம்மணலால் உருவானவர். செம்மேனி கொண்ட இறைவன், மேற்கு முகமாய் காட்சி தருகிறார். இவரின் திருமேனி பார்ப்பதற்கு மிகவும் ஈர்ப்பு சக்தியுடன் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்கு முன்புறம் இந்திரன் அமைத்த இந்திர தீர்த்தம் உள்ளது. இதன் கிழக்குக் கரையில் இந்திரன் வழிபட்ட விநாயகர் அமர்ந்துள்ளார். தலமரம் காரைச் செடியாகும்.



    புராண வரலாறு :

    தனது தவ வலிமையால் விரும்பிய வடிவம் பெறும் வரம் பெற்றவன் இந்திரன். ஒரு முறை கவுதம மகரிஷியின் உருவம் தரித்து, அவரது மனைவி அகல்யாவை அடைந்தான். இதையறிந்த மகரிஷி, இந்திரனுக்கு சாபமிட்டார். அகல்யாவையும் கல்லாக மாற்றினார். அந்த சாபம் நீங்குவதற்காக அகல்யா வழிபட்ட தலம் இது என்று தல புராணம் தெரிவிக்கிறது.

    சந்திரனும், வியாழனின் பத்தினியான தாரைக்கும் பிறந்தவர் புதன். தன் பிறப்பின் ரகசியம் அறிந்து மனம் வருந்திய புதன், காரைக்காடு சத்திய விரத நாதரை வழிபட்டு நவக்கிரகங்களில் ஒன்றாகும் வரம் பெற்றார். எனவேதான் இந்த தலத்தில் சிவன் சன்னிதியை நோக்கி புதன் சன்னிதி அமைந்துள்ளது.

    ஆலய அமைப்பு :

    கோவிலில் எளிய நுழைவு வாசலில் நுழைந்ததும் பலிபீடம், கொடிமரம், நந்திதேவரை தரிசிக்கலாம். மூன்று நிலை ராஜகோபுரம் மேற்குநோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் உள்ளே சென்றால் அகன்ற வெளிப் பிரகாரம் உள்ளது. சங்கிலி மண்டபம், புதன் சன்னிதி, சனி பகவான் சன்னிதி இருக்கின்றன. உட்பிர காரத்தில் நாற்புறமும் திருமாளிகைப் பத்தி அமைக்கப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் தெற்கு நோக்கிய நடராஜர் சபை உள்ளது. அருகே நால்வர், புதன், இந்திரன், பைரவர் வீற்றிருக்கின்றனர்.

    கிழக்குப் பிரகாரத்தில் மேற்கு நோக்கிய படி விநாயகர், மூன்று லிங்கங்கள், ஆறுமுகன் சன்னிதி இருக்கிறது. இதையடுத்து இரண்டு சிறிய லிங்கங்கள் உள்ளன. தென்மேற்கு முனையில் பிரதோஷ நாயகரும், திருமாலும், திருமகளும் அருள்புரிகின்றனர். தென் மேற்கு முனையில் உலாத் திருமேனிகள், பஞ்சமூர்த்திகள் அமைந்துள்ளன.

    புதன்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, புதனுக்கு பச்சைத் துணி சாத்தி, பச்சைப் பயறு படைத்து வழிபட்டால் புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    காஞ்சீபுரம் பேருந்துநிலையத்தில் இருந்து வடகிழக்கே 3 கி.மீ. தொலைவில், இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
    தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும். ஆகாச நகரம், திருவிண்ணகர் என்ற பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு.
    தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும். ஆகாச நகரம், திருவிண்ணகர் என்ற பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு. பக்தர்கள் நினைத்ததை நடத்தி வைப்பவர் ஒப்பிலியப்பன். மார்க்கண்டேய முனிவரின் தவத்தின் பயனால் பெருமாளும், பூமாதேவியும் இங்கு அவதரித்து நித்யவாசம் செய்வதால், ‘மார்க்கண்டேய ஷேத்திரம்’ என்றும் வழங்கப்படுகிறது. திருத்துழாய்காட்டில் பூமாதேவி இங்கு அவதரித்ததால் துளசி வனம் என்ற பெயரும் உண்டு.

    நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும், நாச்சியார் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் எழுந்தருளியுள்ளனர். மார்க்கண்டேயர் தெற்கு நோக்கி அமர்ந்து கன்னிகா தானம் செய்யும் கோலத்தில் காட்சி தருகிறார். இத்தல பெருமாள், நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களுடன் காட்சியளித்துள்ளார்.

    இந்த ஆலயத்தில் உப்பு இல்லாமலேயே பெருமாளுக்கு சகல நைவேத்தியமும் செய்யப்படுகிறது. உப்பையோ, அது கலந்த பொருளையோ கருடன் சன்னிதிக்கு அப்புறம் ஒருவரும் கொண்டு செல்லக்கூடாது. அதனாலேயே இந்த பெருமாளுக்கு உப்பை விலக்கிய பெருமாள் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த கோவிலில் தனியாக தாயாருக்கு சன்னிதி கிடையாது. பெருமாளுக்கு பக்கத்தில் பூமி நாச்சியார் மட்டுமே இருக்கிறார். பூமி நாச்சியாரை பிரிந்து பெருமாள் மட்டும் தனியாக ஆஸ்தானத்தை விட்டு எழுந்தருளும் வழக்கம் கிடையாது.

    தல வரலாறு :

    மிருகண்டு முனிவரின் மகனான மார்க்கண்டேயர், துளசி வனமான இத்தலத்தில் வசித்து வந்தார். அவருக்கு லட்சுமி தேவியை தனது மகளாகவும், நாராயணரை மருமகனாகவும் அடைய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. இதற்காக அவர் இங்கு ஒரு திருத்துளாய் செடியின் அடியில் அமர்ந்து கடும் தவம் இருந்தார். அவரது தவத்தை கண்டு மனம் மகிழ்ந்த பெருமாள், பெரிய பிராட்டியை நோக்கி ‘தேவி! நீ சென்று மார்க்கண்டேயருக்கு மகளாக இரு.

    தக்க நேரத்தில் நான் வந்து உன்னுடன் உறைவேன்’ என்றார். அதன்படி லட்சுமி தேவி சிறு குழந்தையாக அவதரித்து துளசி வனத்தை அடைந்தாள். மார்க்கண்டேயர் மனம் மகிழ்ந்து அந்தக்குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார். குழந்தை வளர்ந்து பருவ வயதை அடைந்ததும், அவருக்கு திருமணம் செய்து வைக்க தக்க மணமகனைத் தேடினார். அவரிடம் நாராயணர் கொஞ்சம் விளையாடத் தீர்மானித்தார்.

    வயோதிக வடிவம் பூண்டு கந்தலான ஆடையை உடுத்திக்கொண்டு முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார் நாராயணர். அவரை வணங்கி வரவேற்ற முனிவர், ‘தாங்கள் விரும்புவது யாது?’ எனக் கேட்டார்.

    அதற்கு முதியவர், நான் உயர்ந்த குடியில் பிறந்தவன். வயதான காரணத்தால் தள்ளாமையால் வருந்துகிறேன். மனைவி இல்லாதவனுக்கு இல்லறமில்லை. தங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து தர வேண்டும்’ என்றார்.

    இதைக் கேட்டு திடுக்கிட்ட முனிவர் ‘இதற்கு நான் உடன்பட மாட்டேன்’ என்று உறுதியுடன் கூறி விட்டார்.

    ஆனால் முதியவரோ ‘தங்கள் மகளை திருமணம் செய்து தராவிட்டால் தங்கள் எதிரிலேயே உயிரை விடுவேன்’ என்றார்.

    செய்வதறியாது திகைத்த முனிவர் தனது மகளிடம் சென்று நடந்ததை விளக்கினார். அதற்கு அவள், ‘வயோதிகரை மணக்க சம்மதிக்கமாட்டேன். வற்புறுத்தினால் உயிரை விட்டு விடுவேன்’ என்றாள்.

    மன கலக்கமடைந்த மார்க்கண்டேயர், பகவானை சரண் அடைந்தார். பகவான் தனது நாடகத்தை முடித்து அவர் முன்பு மகாவிஷ்ணுவாக காட்சி அளித்தார். ‘முனிவரே! உமது ஆசையை நிறைவேற்றவே இங்கு வந்தேன். உமது மகள் பூமாதேவியை எனக்கு திருமணம் செய்து தரவேண்டும். உமது மகள் சிறு பெண்ணாதலால் உப்பை சரியான விகிதத்தில் சேர்க்க முடியாது என்று கூறினீர். ஆதலால் இந்த தலத்தில் யாம் உப்பை மறுத்தோம். உப்பில்லாமல் எனக்கு நைவேத்தியம் படைப்பவரும், உப்பற்ற பண்டங்களை உண்பவரும் எனது அருளை பரி பூரணமாக பெறுவர். உமது மகளை எனக்கு மணம் செய்து தருவீராக’ என்றார்.

    இதைகேட்டு மகிழ்ந்த முனிவர், ‘பரந்தாமனே! எனது புதல்வியை மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள். நீர் எந்நாளும் எனது புதல்வியுடன் இத்தலத்திலேயே இருக்க வேண்டும். இந்த தலம் எனது பெயரால் அழைக்கப்பட வேண்டும். உப்பற்ற உனது உணவு பக்தருக்கு, பெரும் சுவையுடன் இருக்க வேண்டும்’ என்ற வரங்களை கேட்டார். பெருமானும் அவர் கேட்ட வரங்களை வழங்கி அருளினார்.



    திருமால் பூமாதேவியை பிரம்மன் முன்னிலையில் தேவர்கள் அனைவரும் கூடி நிற்க இந்த துளசி வனத்தில் ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொண்டார். இத்தலத்திற்கு வந்து ஸ்ரீனிவாசனை சரணடைந்தோர் அவரது அருளை பரிபூரணமாய் பெறுவது திண்ணம். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    ஆலயத்தின் வடபுறம் அமைந்துள்ளது அஹோத்ர புஷ்கரணி என்ற பொய்கை. வத தேவ சர்மா என்ற அந்தணர், ஜைமினி முனிவரின் சாபம் பெற்று பறவையாக இங்குள்ள மரத்தில் தங்கி இருந்தார். ஒருநாள் புயல் காற்றில் மரக்கிளை முறிந்து, இந்த பொய்கையில் விழுந்ததில் அவரது சாபம் நீங்கியது. இந்த பொய்கையின் முற்புறத்தில் உள்ள துளசி செடியின் அடியில் அமர்ந்து பிறருக்கு அன்னமளிப்பவன் தனது சாபங்கள் அனைத்தும் நீங்கப்பெறுகிறான். செவ்வாய், வெள்ளி, சனிக் கிழமைகளில் திருவோண நட்சத்திரம் போன்ற நாட்களில் இந்த திருக்குளத்தில் நீராடி பெருமாளை தரிசிப்பவர் வைகுந்தம் செல்வதாக ஐதீகம். சாரங்க தீர்த்தம், சூரிய தீர்த்தம், இந்திர தீர்த்தம் என பல புண்ணிய தீர்த்தங்கள் கோவிலில் உள்ளன.

    ஒப்பிலியப்பனை துளசியால் அர்ச்சிப்பவர், ஒவ்வொரு இதழுக்கும் அசுவ மேத யாகம் செய்த பலனை அடைகிறார். சந்தனம், குங்குமம், பூ இவற்றை சமர்பிப்பதன் மூலம் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபடு கிறார்கள். ஆடை, அணிகலன்களை சமர்ப்பிப்பவர்கள் பாவ விமோசனம் பெறுகின்றனர். புரட்டாசி அல்லது பங்குனி சிரவனத்தன்று காலையில் புஷ்கரணியில் நீராடி, தானங்களை செய்பவர்கள் பாவங்கள் அகன்று போகும்.

    சிரவண விரதம் :

    ஒவ்வொரு மாதமும் சிரவணத் திருநாளில் பகல் 11 மணிக்கு சிரவண தீபம் தரிசனம் செய்யலாம். இத்திருநாளில் விரதம் இருந்து நீராடி, உப்பில்லாத உணவை இறைவனுக்கு படைத்த பின்னர், அதனை உண்டு விரதம் முடிப்பதே சிரவண விரதமாகும். பக்தர்கள் இந்த விரதத்தை தங்களது வீடுகளிலும் கடைப்பிடிக்கலாம். குருவாயூரைப் போன்று இங்கும் துலாபாரம் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உப்பு தவிர தங்கள் வேண்டுதலுக்கேற்ப அனைத்து பொருட்களையும் காணிக்கையாக செலுத்தலாம்.

    எம்பெருமான் ஒரு பங்குனி மாதத்தில் ஏகாதசி கூடிய திருவோணதினத்தன்று பகல் 12 மணிக்கு இத்தலத்தில் அவதரித்தார். இதனை ஒன்பது நாள் பிரம்மோற்சவமாக கொண்டாடுகிறார்கள். தவிர ராம நவமி உற்சவம் 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பெருமாள் பூமா தேவியை ஐப்பசி மாதம் திருவோண தினத்தன்று மணந்து கொண்டார். ஆண்டு தோறும் ஐப்பசி திருவோணத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது. வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆடியில் ஜேஸ்டாபிஷேகம், ஆவணி திருவோணத்தில் பவித்திர உற்சவம், புரட்டாசியில் பிரம்மோற்சவம், மார்கழியில் பகல் பத்து, இராப்பத்து உற்சவம், தை மாதம் தெப்போற்சவம் நடைபெறும்.

    கும்பகோணத்தில் இருந்து தெற்கில் 7 கிலோ மீட்டர் தூரத்திலும், காரைக்கால், திருநள்ளாறு செல்லும் சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திலும், ராகு தலமான திருநாகேஸ்வரம் கோவிலுக்கு மிக அருகிலும் ஒப்பிலியப்பன் கோவில் அமைந்துள்ளது.

    பிரம்மனுக்கு திருமால் அனுப்பிய திருமண பத்திரிகை :

    பூமாதேவியை திருமணம் செய்யமுடிவு செய்த ஒப்பிலியப்பன், அதற்கான திருமண பத்திரிகையை கருடனிடம் கொடுத்து, சத்திய லோகம் சென்று பிரம்மனிடம் கொடுத்துவிட்டு வரும்படி கூறினார். கருடனும், சத்தியலோகம் சென்று பிரம்மனை சந்தித்தார். எம் பெருமானுக்கும், பூமாதேவிக்கும் மார்க்கண்டேய ஷேத்திரத்தில் திருமணம் நடைபெற உள்ளது. நீங்கள், இந்திரன் முதலிய தேவர்கள் அனைவரும் வந்து திருமணத்தை சிறப்புற நடத்தி தர வேண்டும் எனக்கூறி திருமண பத்திரிகையை கொடுத்தார். இதைக்கேட்ட பிரம்மன் மகிழ்ச்சி பொங்க அதனை பணிவுடன் பெற்று தலையில் வைத்து தேவர்களுக்கு எதிரில் பத்திரிகையை படித்தார்.

    அதில் இடம் பெற்ற வாசகம் வருமாறு:-

    மங்களம்.. பிரம்மனே! தேவர்களுக்கு தலைவனாய், நாமகளுக்கு நாயகனான உனக்கு நாராயணன் எனப் பெயர் பூண்ட யான் மனமார வாழ்த்து கூறுகிறேன். யான் எப்பொழுதும் நலமுடன் இருக்கிறேன். நீயும் அங்ஙனமே இருப்பாயென நம்புகிறேன். திருமகள் பூமாதேவி என்ற பெயருடன் பூவுலகில் துளசி வனத்தில் மார்க்கண்டேய முனிவருக்கு பெண்ணாகப் பிறந்துள்ளார்.

    அம்முனிவர் என்னை மருமகனாகப் பெற வேண்டும் என்று கடும் தவம் புரிந்தார். யானும் அதற்கிணங்கி வருகிற ஐப்பசி மாதத்து திருவோண திரு நட்சத்திரத்தில் பூமாதேவியை மணம் புரிந்து கொள்ள நிச்சயித்திருக்கிறேன். நீ எல்லா தேவர்களுடனும் துளசி வனத்துக்கு வந்து திருமணத்தை நடத்தி மணமக்களைக் கண்டுகளித்து ஷேமமாய் உறைவிடம் சேர்வாயாக.

    நல்லவர்களை காக்கவும், தீயவர்களை அழிக்கவும், அடியார்களுக்கு அருளவும் யுகந்தோறும் இந் நிலவுலகில் அவதரிப்பேன்.

    இங்ஙனம்,

    உன்னிடம் அன்புள்ள

    திருமகள் நாயகன்,

    துளசி வனம்.
    தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்திற்கு கிழக்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருநல்லூர் கல்யாண சுந்தரர் கோவில் அமைந்துள்ளது.
    உமாதேவியார் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார். அன்று கடலில் நீராடுவது சிறந்த புண்ணியத்தை தரும் என்று புராணங்கள் கூறுகின்றன. நாடு முழுவதும் அருள் வழங்கும் ஆலயங்கள் நீக்கமற நிறைந்துள்ளன. எனினும் தேவார பாடல் பெற்ற 274 தலங்களே சைவத்தில் முதல் இடம் பெற்று திகழ்கின்றன.

    தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்திற்கு கிழக்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருநல்லூர் கல்யாண சுந்தரர் கோவில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவார பாடல் பெற்ற திருத்தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்பிலும் சிறந்து, சிவபெருமான் வசிக்கும் கயிலை மலைக்கு சமமாக இத்தலம் விளங்குகிறது என்பதை,

    ‘வடபாற் கயிலையும், தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே’ என்று திருநாவுக்கரசர் தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

    12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் இருந்து மக்கள் அனைவரும் திரண்டு வந்து நீராடி நலம் பெறும் கும்பகோணம் மகாமக குளத்துக்கு ஈடாக திருநல்லூரில் உள்ள சப்தசாகரம் என்னும் திருக்குளம் மிகவும் சிறப்புடையது.

    ஒவ்வொரு மாசி மாதத்தன்றும் இந்த தீர்த்தம் சிறப்பு பெற்று விளங்குவதை, ‘மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில்’ என்ற பழமொழியே உணர்த்தும்.

    இது ஒரு மாடக்கோவில். யானை ஒன்று பெருமான் (மூலலிங்கம்) இருப்பிடத்தைச் சென்று அடையாத வண்ணம் பல படிக்கட்டுகளுடன் கட்டப்பட்டு அமைந்துள்ளது.

    மூலவர் கல்யாண சுந்தரர் லிங்கத்திருமேனியாக 14 அடி உயர மேற்பரப்பில் அருள்பாலிக்கிறார். அம்பாள் திருநாமம் கிரி சுந்தரி. இந்த பெரிய மாடக்கோவிலை திருஞானசம்பந்தர் ‘மலை மல்கு கோவில் வானமருங்கோவில், வான் தேயும் கோவில் என பாடி உள்ளார். இரண்டு திருச்சுற்றுகளையுடைய இக்கோவில் 316 அடி நீளமும், 228 அடி அகலமும் கொண்டது.

    இக்கோவிலின் முன்கோபுரத்தில் ஒரு மாடத்தில் அதிகாரநந்தி, பிள்ளையார் கொடி மரம், பலிபீடம், இடபதேவர் முதலியனவும், சற்று தெற்கில் அமர்நீதி நாயனாரது வரலாற்றில் தொடர்புடைய நான்கு கால்களுடன் கூடிய அழகிய தராசுமண்டபமும் உள்ளன. தென் வெளிச்சுற்றில் அஷ்டபுஜமாகாளி தேவியின் சன்னிதி அமைந்துள்ளது. மாகாளி எட்டுக் கைகளுடன் சூலாயுதம் தாங்கி அமர்ந்துள்ள கோலம் தரிசிக்கத்தக்கது.

    இரண்டாவது கோபுர வாசலை கடந்து சென்றால் இத்தலத்து விநாயகர் காசிப் பிள்ளையார் உள்ளார். தென்பக்கம் மேற்கு பார்த்த திசையில் சோமாஸ்கந்த மூர்த்தியின் தனி சன்னிதி உள்ளது. தென்மேற்கு மூலையில் ஏழுமாதர்களாகிய அபிராமி, மகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி ஆகிய மூர்த்திகளுடன் விநாயகரும் அருள்பாலிக்கின்றார். மேல்புறம் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அடுத்து லட்சுமி தேவி சன்னிதி உள்ளது.

    உள்வடக்கு திருச்சுற்றில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மற்றும் பெருமானை வணங்கும் கோலத்தில் பாண்டவர்களின் தாய் குந்திதேவியும், அடுத்து இத்தலத்திற்கு வந்து முக்தி பெற்ற அமர்நீதியார் சிலைவடிவங்கள் இரண்டும் உள்ளன. இவர்களுக்கு எதிரில் சண்டேசுவரர், துர்க்கை அம்மன் சன்னிதிகள் உள்ளன. வடகிழக்கு மூலையில் நடராஜ பெருமானை அடுத்து சனீஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் மற்றும் அம்பிகையுடன் இரு சிவலிங்கத் திருமேனிகளும் இடம் பெற்றுள்ளன.



    மூலவர் சுயம்புலிங்கமாய் தாமிரநிறத்தில் காட்சியளிக்கிறார். இவர் தினமும் ஐந்து நிறங்களில் தோன்றுவதால் பஞ்சவர்ணேசுவரர் என்றும் அமர்நீதியார், அப்பர் ஆகியோருக்கு அருள்புரிந்ததால் ஆண்டார் எனவும், அகத்தியருக்கு தம் திருமணக் கோலத்தை காட்டி அருளியதால் கல்யாணசுந்தரர் எனவும், பேரழகுடன் விளங்குவதால் சுந்தரநாதன், சவுந்தரநாயகர் எனவும் போற்றப்படுகிறார். கருவறையில் சுதை வடிவில் அமர்ந்த நிலையில் கல்யாண கோலத்தில் இறைவனும், இறைவியும் இருக்க, இருபுறமும் திருமாலும், பிரம்மனும் நின்ற திருக்கோலத்தில் உள்ளனர்.

    நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களும், ஆண்களும், கோவிலுக்கு வந்து வாசனையுள்ள மலர் மாலைசூட்டி, பின் ஒரு மாலையை வாங்கி அணிந்து பிரகாரத்தை வலம்வந்து வழிபட்டுச்சென்றால் தடைப்பட்டிருந்த அவர்கள் திருமணம் விரைவில் நடைபெறும் என்று தலபுராணம் கூறுகிறது.

    ஏழு கடல் வந்த வரலாறு :

    ஒரு சமயம் பாண்டவர்களின் தாய் குந்திதேவி இந்த கோவிலுக்கு வந்து நாரதமுனிவரை சந்தித்தார். அன்று மாசிமக நன்னாள். கடலில் நீராடுவது சிறந்த புண்ணியம் என நாரதர் கூறினார். அதைக் கேட்ட குந்திதேவி பெருமானிடம் வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு பெருமான், குந்தி தேவிக்காக பிரம்ம தீர்த்தத்தில் உப்பு, கரும்பு, தேன், நெய், தயிர், பால், சுத்தநீர் ஆகிய ஏழு கடல்களையும் வருமாறு செய்தார். அதில் குந்திதேவி நீராடிப்பேறு பெற்றார். இந்த ஏழுகடல்களைக் குறிக்கும் ஏழுகிணறுகள் இக்குளத்துக்குள் உள்ளது. அன்று முதல் இது சப்தசாகரம் எனப் பெயர்பெற்றது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெருமானை வேண்டி இக்குளத்தின் பன்னிரு துறைகளிலும் நீராடி கோவிலை பன்னிருமுறை 48 நாட்கள் வலம் வந்தால் நோய் அகலும் என்ற நம்பிக்கை இன்றும் பக்தர்களிடம் உள்ளது.

    பிரம்மதேவன் இத்திருக்குளத்தின் கீழ்த்திசையில் ரிக் வேதத்தையும், தென்திசையில் யசூர் வேதத்தையும், மேற்குத்திசையில் சாம வேதத்தையும், வடதிசையில் அதர்வண வேதத்தையும், நடுவில் சப்தகோடி மகா மந்திரங்களையும் பதிணென் புராணங்களையும் வைத்து புனிதமாக்கினார் என்று தலபுராணம் கூறுகிறது.

    கல்யாண சுந்தரப்பெருமான் மாசிமகம், வைகாசி விசாகம், கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகள், மார்கழிதிருவாதிரை முதலிய நாட்களில் இதில் தீர்த்தவாரி அருள்கிறார்.

    நரசிம்ம வடிவம் :

    கொடிய அரக்கனாகிய இரணியனைக் கொல்ல நரசிம்ம வடிவம் வேண்டி திருமால் இத்தலத்திற்கு வந்து தவம் இருந்தார். அப்போது இத்தல இறைவன் தோன்றி நரசிம்ம வடிவத்தை திருமாலுக்கு அளித்து, இரணியன் மாய்ந்த பின் தன் கருவறை விமானத்தின் உச்சியில் மேற்கு முகமாய் இருக்கவேண்டும் என்று பணித்தார். அந்த வடிவத்தை இன்றும் இந்த விமானத்தில் காணலாம்.

    பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருமாலின் திருவடியை நினைவுகூரும் விதத்தில் (சடாரி) தலையில் சூட்டுவது வழக்கம். சிவாலயங்களில் இந்த வழக்கம் இல்லை என்றாலும் நல்லூரில் சிவபெருமானின் திருவடி பதிக்கப்பெற்ற சடாரியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சூட்டும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

    இத்திருக்கோவிலில் வைகாசி விசாக சப்தஸ்தான விழா, ஆனி மாதம் அமர்நீதியார் விழா, மார்கழிமாதம் 10 நாள் திருவெம்பாவை விழா, திருவாதிரை தரிசனம், மாசிமக விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படும். இக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானதாகும்.

    ஐந்து நிறங்களில் காட்சி தரும் கல்யாண சுந்தரர் :

    நல்லூர் கல்யாண சுந்தரர் தினமும் ஆறு நாழிகைக்கு ஒரு தடவை பல்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறார். முதல் ஆறு நாழிகையில் தாமிர நிறம், அடுத்த 6-12 நாழிகையில் இளம் சிவப்பு, அடுத்த 12-18 நாழிகையில் தங்கம், அடுத்த 18-24 நாழிகையில் நவரத்தின பச்சை, அடுத்த 24-30 நாழிகையில் இன்ன நிறமென்று கூற இயலாத தோற்றத்தில் நிறம் மாறி, மாறி பஞ்சவர்ணமாக காட்சி தருகிறார். இந்த அதிசய சம்பவம் இன்றும் நடைபெற்று வருகிறது.
    கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் மலைமுகடுகளுடன் இயற்கை எழில் சூழ்ந்த இடமாகவும், பக்தி மனம் கமழும் இடமாகவும் திகழும் பத்ராவதியில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
    கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் மலைமுகடுகளுடன் இயற்கை எழில் சூழ்ந்த இடமாகவும், பக்தி மனம் கமழும் இடமாகவும் பத்ராவதி திகழ்கிறது. பத்ராவதி பழைய நகரில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருவுருவ திருமேனி சதுர் புஜத்துடன் பத்மம், சங்கு, சக்கரம், கத ஆயுதங்கள் ஏந்தி அமிர்தவள்ளி தாயாரை தனது இடது மடியில் அமர்த்திய கோலத்தில் திருமுகத்துடன் காட்சி தருகிறார். தேவி அமிர்த கலசம் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூலவர் லட்சுமி நரசிம்மருடன் அமிர்தவள்ளி தாயார் சிலையை வங்கி மகரிஷி பிரதிஷ்டை செய்ததாக வரலாறு கூறுகிறது.

    மேலும் உட்பிரகாரத்தில் உபதெய்வங்களாக வேணுகோபால், புருஷோத்தமன், கணபதி, ஸ்ரீங்கேரி போன்ற தெய்வங்கள் எழுந்தருளியுள்ளனர். இந்த சிலைகளை வைசில மகாராஜா விஷ்ணுவரதனின் பேரன் வீரநரசிம்மன் ஆட்சியில் சிறந்த சிற்பியாக விளங்கிய சக்னாச்சாரியின் மகன் டக்னாச்சாரி செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த கோவில் உருவானதிற்கு வரலாறு உள்ளது. அதை காண்போம்..

    காட்டுப்பகுதியான பெங்கிப்புராவில் 24 மணி நேரமும் காட்டு தீ எரிந்த வண்ணம் இருந்தது. இதனால் வெப்பம் நிறைந்த பூமியாக இருந்த பெங்கிப்புராவின் மையப்பகுதியில் வற்றாத ஜீவ நதியாக விளங்கிய பத்ரா ஆறு மேற்கு நோக்கி பாய்ந்தோடி வருகிறது. இந்த பகுதியில் வங்கி மகரிஷி என்பவர் வாழ்ந்து வந்தார். இந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தினர்.

    காட்டுப் பகுதியில் பாளையக்காரர்கள் ஆயுதங்களை தயாரித்து வெளிநாட்டினருக்கு கொடுத்து பிழைப்பு நடத்தினர். இந்த சூழ்நிலையில் போதிய மழை இன்மையால் விவசாயம் செய்து வந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதைதொடர்ந்து தங்களது விவசாயம் செழிக்கவும், தொழில் பெருகவும், சுபிட்சமாக வாழவும் வகைசெய்யும்படி அந்தப் பகுதி மக்கள், வங்கி மகரிஷியிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து வங்கி மகரிஷி பத்ரா ஆற்றின் வலது கரையில் அமர்ந்து ஸ்ரீலட்சுமி நரசிம்மரை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார்.

    அவரது தவத்திற்கு மன மிறங்கி, ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அவர் முன்தோன்றி அருட்காட்சி புரிந்தார். அப்போது இந்த ஊர் மக்கள் சுபிட்சமாக வாழ அருள்புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் பெங்கிப்புரா பகுதி செழித்தோங்கவும், மக்கள் சுபிட்சம் பெறவும் செய்தார். அதன் பின்னர் பெங்கிப்புராவை லட்சுமிபுரா என மக்கள் அழைத்து வந்தனர். பின்னர் அந்த பெயர் மருவி, தற்போது பத்ராவதி பழைய நகர் என அழைக்கப்படுகிறது.



    அதன் பயனாக வங்கி மகரிஷி, கடந்த 1220-ம் ஆண்டு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் உடன் அமிர்தவள்ளி தாயார் சிலையை பிரதிஷ்டை செய்தார். இங்கு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருவுருவ திருமேனி சதுர்புஜத்துடன் அமிர்த வள்ளி தாயாரை தனது இடது மடியில் அமர்த்தி காட்சி தருகிறார். புன்னகை பூக்கும் திருமுகத்துடன் தேவி அமிர்த கலசம் ஏந்தி காட்சி தருகிறார்.

    கடந்த 13-ம் நூற்றாண்டில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு கோவில் கட்டும் திருப்பணிகளை பல்லவ மன்னர் தொடங்கினார். திருக்கோவில் நட்சத்திர வடிவில் 5 யானைகள் தாங்கிய நிலையில் 150 மிகச்சிறிய கோபுர அமைப்புகளுடன் கலைநயத்துடன் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் அதே கலைநயமிக்க சிற்ப கலைகளுடன் காட்சி அளிக்கிறது.

    இந்த கோவில் வளாகத்தில் புஷ்கர்னி தீர்த்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் உள்ள புனித தீர்த்தத்தில் நாம் குளித்து சென்றால், பாவ விமோசனம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதற்கு ஒரு வரலாறும் உள்ளது.

    அதாவது, ராமாயண யுத்தத்தில் வெற்றி கண்ட ஸ்ரீராமன், பாவ விமோசனம் பெற வேண்டுமென்றால் புண்ணிய நதியாக விளங்கும் பத்ரா ஆற்றின் கரையோரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லட்சுமி நரசிம்மரை வழிபடும்படி உபதேசம் பெற்றார். அதன்படி ஸ்ரீராமன் இந்த கோவில் உள்ள புஷ்கர்னி தீர்த்த கிணற்றில் புனித நீராடி, பின்னர் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்து சகல பாவங்களில் இருந்தும் விமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது.

    ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆயிரம் ஆண்டு பழமையான அரசமரம் தல விருட்சமாக விளங்குகிறது. இங்கு நாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வணங்கி வருகிறார்கள். இத்தகைய புகழ்பெற்ற இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜையும், மே மாதம் கோவிலின் பிரம்ம உற்சவ விழாவும், புத்த பூர்ணிமா அன்று தேரோட்டமும் நடக்கிறது. மேலும் தினமும் கோவிலில் 3 கால பூஜைகளும், சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜையும் நடக்கிறது.

    ஒரே கல்லில் ஆன புருஷோத்தமன் சிலை :

    இந்தக் கோவிலில் புருஷோத்தமனுக்கு தனி சன்னிதி உள்ளது. இங்கு புருஷோத்தமன் 4 திருக் கரங்களுடன் காட்சி தருகிறார். கைகளில் முறையே அங்குசம், பத்மம், சங்கு, கதாயுதம் ஏந்தி அருள்புரிகிறார். பொதுவாக சாமி சிலைகளில் கல்லில் கண்கள் வடிவமைப்பது இல்லை.

    மேலும் புருஷோத்தமன் சிலையை சுற்றி வளைவு அலங்கார சட்டமும் (பிரபாவதி) கல்லிலேயே செதுக்கப்பட்டுள்ளது. அதில் தசாவதார காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சிலை அமைப்பு தமிழ்நாட்டில் சீர்காழி, திருநாங்கூர் என்ற பகுதியில் உள்ள கோவிலில் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமிழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் 33 பாடல்கள் பாடப்பெற்ற மகத்துவம் மிக்கதாக விளங்குகிறது கோவிலடியில் உள்ள அப்பால ரெங்கநாதர் கோவில்.
    108 திவ்ய தேசங்களில் இந்தக் கோவிலும் ஒன்று என்பது மேலும் பெருமை சேர்க்கிறது. காவிரிக்கரையில் அமைந்துள்ள ஆதிரங்கர்(ஸ்ரீரங்கபட்டினம்), கஸ்தூரி ரங்கர்(ஸ்ரீரங்கம்), அப்பாலரெங்கநாதர் (கோவிலடி), சாரங்கர் (கும்பகோணம்), பரிமள ரெங்க நாதர் (மயிலாடுதுறை) ஆகிய 5 பெருமாள் கோவில்கள் பஞ்சரங்க தலங்களாகும்.

    இவற்றுள் நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமிழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் 33 பாடல்கள் பாடப்பெற்ற மகத்துவம் மிக்கதாக விளங்குகிறது கோவிலடியில் உள்ள அப்பால ரெங்கநாதர் கோவில்.

    ஒரு காலத்தில் இந்த ஊர் பலாச மரங்கள் நிறைந்த புரசமரக் காடாக இருந்தது. இதனால் இத்தலம் பலாச வன ஷேத்திரம் என அழைக்கப்பட்டது. ஒரு முறை இந்தப் பகுதியை ஆண்டு வந்த உபரி சர்வசு என்ற மன்னன், வேட்டையாட காட்டிற்குச் சென்றான். அப்போது யானை ஒன்றை அம்பு கொண்டு தாக்கினான். அந்த யானையோ பயத்தில் வேதம் ஓதும் அந்தணர் ஒருவரை மிதித்துக் கொன்றுவிட்டது. அதனால் மன்னனுக்கு, பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தோஷ நிவர்த்திக்காக பெற துர்வாச முனிவரிடம் சென்று வேண்டினான்.

    அவரோ, ‘பலாச வனத்தில் அமைந்துள்ள ரெங்கநாதர் கோவிலுக்குச் சென்று ‘ஓம் பத்மநாபாய நம’ என்ற மந்திரத்தை உச்சரித்து அன்னதானம் செய்தால் தோஷ நிவர்த்தியாகும்’ என்று அருளாசி கூறினார். அதன்படியே மன்னன் இந்த ஊரில் அரண்மனைக் கட்டி தினமும் அன்னதானம் செய்து வந்தான். அப்போது பெருமாள் அசரீரியாக, ‘மன்னா! நீ கார்த்திகை மாதம் துவாதசியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும்’ என்றார். உபரிசர்வசுவும் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தான்.

    அப்போது பெருமாள், வயதான அந்தணர் வேடத்தில் வந்து உணவுக்கேட்டார். சமைத்திருந்த உணவெல்லாம் தீர்ந்து விட்ட நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான் மன்னன். உடனடியாக உணவு தயார் செய்து தருவதாக கூறினான்.

    ஆனால் அந்தணர் உருவில் இருந்த பெருமாளோ, ‘சமையல் செய்ய அதிக நேரம் ஆகும். எனக்கு பசி அதிகமாக உள்ளது. எனவே உடனடியாக அப்பம் செய்து கொடு’ என்றார்.

    மன்னன் பக்தி சிரத்தையுடன் நெய்யினால் வெந்ததும், வெல்லம் கலந்ததும், அதிக ருசியுடன் தயாரித்த அப்பங்களை ஓர் குடம் நிறைய நிரப்பிக் கொண்டு அந்தணரிடம் கொடுத்தான். பேரானந்தம் அடைந்த பெருமாள், அப்பக் குடத்தில் வலது கரம் வைத்து ஆசி கூறிவிட்டு, மன்னனுக்கு திவ்ய தரிசனம் கொடுத்தார். இதையடுத்து மன்னனின் சாபமும் நீங்கியது.

    இந்த நிகழ்வின் காரணமாகவே இத்தல பெருமாளுக்கு ‘அப்பக் குடத்தான்’ என்ற சிறப்பு பெயரும் வந்தது. இத்தல இறைவனுக்கு அப்பமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பெருமாள் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் சன்னிதி கிழக்கு நோக்கி உள்ளது. திருக்கோவில் ஒரு மேட்டின் மீது உள்ளது. 20 படிகள் ஏறித்தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். படிகள் ஏறும் போதே நடுவில் கொடி மரம் உள்ளது. ஆலய விமானத்தின் பெயர் இந்திர விமானம். தீர்த்தம் இந்திர புஷ்கரணி. தாயாரின் பெயர் இந்திராதேவி எனும் ஸ்ரீகமல வல்லி.



    பெருமாளின் தலைமாட்டில் அப்பக்குடம் உள்ளது. இக்குடத்திற்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு அதன்மேல் தட்டில் வைத்து அப்பம் நிவேதனம் செய்யப்படுவது தற்போதைய வழக்கமாக உள்ளது. மேலும் இத்திருத்தலத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் தனது ஒரு கரத்தால் மார்க்கண்டேயருக்கு ஆசி கூறுகிறார். திருக்கடையூரில் சிவபெருமானால் என்றும் 16 வயதுடன் இருக்க வரம் பெற்ற மார்க்கண்டேயன் இந்த யுகம் முடிந்ததும் மீண்டும் பிறவாமல், மோட்சநிலை அடைய வேண்டி இக்கோவிலுக்கு வந்து தவம் இருந்தார்.

    பெருமாள் அவருக்கு மோட்ச நிலையை வழங்கினார். எனவே எமபயம் போக்கும் பெருமாளாகவும் இவர் விளங்குகிறார். கோவில் வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் தும்பிக்கை ஆழ்வார் என்னும் சிறிய பிள்ளையார் சன்னிதி உள்ளது. சாபம் நீங்க இந்திரனுக்கு வழிகாட்டியதால் இவரை வழிகாட்டி விநாயகர் என்றும் அழைக்கிறார்கள்.

    நம்மாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்த தலம் இது. அதன் பிறகு மோட்சம் பெற்றுவிட்டார். இத்தல அப்பக் குடத்தானை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும், சாபவிமோசனம் பெறலாம்.

    இந்த ஆலயத்தில் பங்குனிமாதம் 12 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும். மேலும் அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி போன்றவையும் சிறப்பாக நடக்கிறது.

    தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலுக்கு வந்து தங்கள் பெயரில், பெருமாளுக்கு அர்ச்சனை செய்து 10 அப்பம் வாங்கி அதை நைவேத்திய தானம் செய்தால் உரிய பலன் கிடைக்கும். தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.

    குழந்தை வரம் தரும் கோபாலகிருஷ்ணன் :

    குழந்தை இல்லாதவர்கள் கோவிலடி கோவிலுக்கு வந்து வணங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. ஆண்கள் வேஷ்டி சட்டை அணிந்தும், பெண்கள் புடவையும் கட்டிக் கொண்டு வர வேண்டும். தேங்காய், பழங்கள், துளசிமாலை வெண்ணைய், கற்கண்டு, விளக்குக்கு நெய் வாங்கி வந்து குருக்களிடம் கொடுத்து, தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். குருக்கள் மந்திரங்கள் சொல்லி கோபாலகிருஷ்ணன் சிலை விக்கிரகத்தை தம்பதியர்கள் கையில் கொடுத்து மந்திரங்களை கூறுகிறார். பின்னர் நைவேத்தியம் செய்த கற்கண்டுகளை 10 பேருக்கு தானமாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தையில்லாத தம்பதியர்களுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் என்கின்றனர்.

    நீங்காத செல்வம் தரும் மகாலட்சுமி :

    கோவிலடிக்கு திருப்பேர் நகர் என்ற பெயரும் உண்டு. ‘திரு’ என்பதற்கு செல்வம் என்று பொருள். செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி இக்கோவிலில் கனகவல்லி தாயார் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறார். மகாலட்சுமி இத்தலத்தை விட்டு பெயராமல் நிரந்தரமாக தங்கி இருப்பதால், இந்த திருத்தலத்திற்கு ‘திருப்பெயராத நகர்’ என்ற பெயர் வந்தது. காலப்போக்கில் இது மருவி ‘திருப்பேர் நகர்’ என்றானது. நான்கு திருக்கரங்களுடன் வீற்றிருக்கும் மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை குங்கும அர்ச்சனை செய்தால் நீங்காத செல்வமும், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைப்பதாக ஐதீகம்.

    தஞ்சாவூரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் கோவிலடி கிராமம் உள்ளது. திருக்காட்டுப்பள்ளி வழியாக செல்லவேண்டும். திருச்சியில் இருந்து 23 கி.மீட்டர் தூரம் பயணித்தால் கல்லணை வழியாக கோவிலடியை சென்றடையலாம்.
    கேரளாவில் உள்ள எல்லா அம்மன்களுமே பகவதி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார்கள். இவற்றில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மிகச் சிறந்த ஆலயமாக விளங்குகிறது.
    பரசுராமரால் உருவாக்கப்பட்ட பகுதியே இன்றைய கேரளம் என்கிறது புராணத் தகவல்கள். இதன் காரணமாகவும் கேரளத்தை இறைவனின் ஊர் என்று அழைக்கிறார்கள். கேரளத்தை உருவாக்கிய போது, பரசுராமர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக புராணக் கதை கூறுகிறது. கேரளாவில் உள்ள எல்லா அம்மன்களுமே பகவதி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார்கள்.

    இவற்றில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மிகச் சிறந்த ஆலயமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா உலக பிரசித்திப் பெற்றது. ஏனெனில் இந்தப் பொங்கல் திருவிழா கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. 1997-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். அது ‘கின்னஸ்’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. இதே போல் 2009-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதி நடந்த பொங்கல் விழாவின் போது 25 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்ததாக முந்தைய சாதனையை முறியடித்து மீண்டும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

    சிறுமியாக வந்த அம்மன் :

    கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரமே ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்படுகிறது. மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகி, அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலம் கொடுங்கல்லூர் செல்லும் வழியில் ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினாள். அதன் நினைவாகவே அங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திகழ்கிறது என்றும் கூறுகிறார்கள்.

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் தோன்றியதன் காரணமாக தெரிவிக்கப்படும் மற்றொரு தகவலை இங்கு காணலாம்.

    பராசக்தியின் பக்தர் ஒருவர், கிள்ளி என்ற ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய சிறுமி ஒருத்தி வந்தாள். அவளைப் பார்த்ததும் அந்த அன்னையே குழந்தை வடிவில் வந்திருப்பதாக எண்ணினார் அந்த பக்தர். கருணை மிகுந்த சிரிப்புடன் அம்மனின் பக்தரைப் பார்த்த சிறுமி, ‘என்னை ஆற்றின் மறுகரையில் கொண்டு விடமுடியுமா?’ என்று கேட்டாள்.

    ஆனால் சிறுமியை உடனே அனுப்ப பக்தரின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிக்க எண்ணினார். அதனை அந்த சிறுமியிடம் கூற எண்ணி திரும்பியபோது, அந்த இடத்தில் சிறுமி இல்லாதது கண்டு திகைத்தார். பின்னர் வந்தது அம்பிகை தான் என்பதை எண்ணி மகிழ்ந்தார்.

    அன்று இரவு அந்த பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, ‘தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் 3 கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து, என்னை குடியேற்றுங்கள்’ என்று கூறினாள். மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்கு சென்ற பெரியவர், அங்கு 3 கோடுகள் இருப்பதை கண்டு ஆனந்தம் கொண்டார். அங்கு சிறிய கோவிலை கட்டி அம்மனை வழிபட்டார். நாளடைவில் இந்த கோவிலே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக எழுச்சியுற்றது என்கிறது கோவில் வரலாறு.



    ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவிலில் ஸ்ரீ சக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவபார்வதியின் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

    கருவறையில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் போன்றவற்றை கரத்தில் தாங்கி, அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப் பட்டுள்ளது. மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரகம் உள்ளது. அம்மனின் கருவறை ஸ்ரீகோவில் என்று அழைக்கப்படுகிறது. கருவறையை சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் அமைந்துள்ளன.

    பொங்கல் திருநாள் :

    கேரளம் மட்டுமின்றி, தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து பெண்கள் இங்கு வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபடுகின்றனர். மாசி மாதம் பூர நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடும் நாளன்று இந்த பொங்கல் விழா நடைபெறுகிறது. பொங்கல் விழாவின் போது திருவனந்தபுரமே புகை மூட்டமாகத்தான் காட்சியளிக்கும். ஆண்கள் அனுமதிக்கப்படாத இந்த பொங்கல் விழாவில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள். பொங்கல் வைக்கும் பெண்களின் ஊடே, பகவதி அம்மனும் ஒரு பெண் வடிவில் பொங்கல் வைப்பதாக இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

    மாலையில் கோவில் பூசாரிகள் ஆங்காங்கே இருக்கும் அனைத்து பொங்கல் பானைகளிலும் தீர்த்தம் தெளிப்பார்கள். அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பூ தூவப்படும். இந்த நிகழ்ச்சியின் போது கோவில் உள்ளேயும் பகவதிக்கு பொங்கல் விடுகிறார்கள். அந்த அடுப்பிற்கு ‘பண்டார அடுப்பு’ என்று பெயர். கருவறையில் உள்ள விளக்கில் இருந்து தீ எடுத்து வந்தே, ‘பண்டார அடுப்பு’ பற்ற வைக்கிறார்கள். இந்த அடுப்பில் இருந்து செய்யப்பட்ட பொங்கலிலே அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.
    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் திருக்கோவில். இத்தலத்தின் வரலாற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் திருக்கோவில். இத்தலத்தில் உள்ள இறைவனின் பெயர் சொரிமுத்து அய்யனார். இறைவியர் புஷ்கலை, பூர்ணகலை. தல விருட்சம் இலுப்பை மரம் ஆகும். இங்கு பாண தீர்த்தம், சாயா தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் இருக்கின்றன.

    இந்த ஆலயமானது, களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள், பொதிகை மலையில் மரங்கள் சூழ, தென்றல் தாலாட்டு பாட, தாமிரபரணி சலசலத்து ஓட, ஒருமித்து மிளிரும் இயற்கையின் மையத்தே அமைந்துள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியான இந்த இடத்தில் கொடிய விலங்குகள் பல வசித்து வந்தாலும், இத்தலத்து பகவானின் அருளால் அவைகள் பக்தர்களுக்கு எந்த வித தொல்லையும் கொடுப்பதில்லை என்பது ஆச்சரியமான விஷயமாகும்.

    தல வரலாறு:

    இந்தக் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்வோம்...

    தென்னாட்டில் பண்டைய காலத்தில் பண்டமாற்று வணிகமுறை நடைமுறையில் இருந்தது. தற்போது சொரிமுத்து அய்யனார் சன்னிதி அமைந்து உள்ள இடத்திற்கு அருகில், பண்டமாற்று சந்தை நடைபெற்று வந்தது. அப்போது பொதி மாடுகளின் காலடி பட்டு ஓரிடத்தில் இருந்து ரத்தம் பெருகியது. இதைக் கண்ட வணிகர்கள் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டு அதிசயித்து பார்த்தனர்.

    அந்த சமயத்தில் ஒரு அசரீரி ஒலித்தது. ‘குருதி பெருகும் இடத்தில் இருப்பவர் மகாலிங்க சுவாமி. இனி வரும் காலங்களில் மகாலிங்க சுவாமியை, சொரிமுத்தைய்யன், சங்கிலிமாடன், பிரம்மரட்சகி போன்ற மூர்த்திகள் சூழ ஆலயம் எழுப்பி வழிபட்டு வாருங்கள்’ என்றது அந்தக் குரல். அதன்படியே வணிகர்களும், ஊர் மக்களும் சேர்ந்து கோவில் எழுப்பி, பல சன்னிதிகளை அமைத்து வழிபட்டு வந்தனர்.

    இமயமலையில் பரமேஸ்வரனுக்கும், பார்வதிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இந்த தெய்வீக காட்சியைக் காண்பதற்காக தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் வடதிசை நோக்கி பயணப்பட்டனர். இதனால் வடதிசை தாழ்ந்தும், தென்திசை உயர்ந்தும் காணப்பட்டது. உலகை சமநிலை அடையச் செய்வதற்காக, சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்தார். ‘அகத்தியனே! நீ தென்திசை நோக்கிச் செல். உன்னால் தான் இந்த உலகை சமநிலை பெறச் செய்ய முடியும்’ என்றார்.

    இறைவனின் ஆணைப்படி நடக்க சித்தம் கொண்ட அகத்தியர், தென்திசை நோக்கி பயணித்து பொதிகை மலையை வந்தடைந்தார். அங்கு தற்போது சொரிமுத்து அய்யனார் சன்னிதி அமைந்திருக்கும் இடத்தில் நீராடி, தனது நித்திய காரியங்களை முடித்துக் கொண்டு யோக நிஷ்டையில் அமர்ந்தார். அப்போது ஜோதி ஒன்று அவரது மனக்கண்ணில் தோன்றியது. அதைக் கண்டு அதிசயித்த அகத்தியர், அந்த ஜோதியை யார் என்று அறிய ஞான திருஷ்டியால் பார்த்தார்.

    அப்போது சாஸ்தாவானவர், சொரிமுத்து அய்யனாராக, மகாலிங்க பெருமானை பூஜிக்கும் காட்சி அவருக்கு தெரிந்தது. சொரிமுத்து அய்யனாருடன், பேச்சியம்மன், பிரம்மரட்சகி ஆகியோரும் மகாலிங்க சுவாமியை வழிபட்டனர்.

    இதுகண்டு அகத்திய முனிவர் ஆனந்தம் அடைந்தார். பின்னர் மலர் தூவி ‘இவ்விடத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளை தரிசித்து வழிபடுவோருக்கு எல்லா இன்னல்களும் நெருப்பிலிட்ட பஞ்சுபோல் ஆக வேண்டும்’ என்றும், ‘பக்தர்கள் தனது மக்களுடன் வழி, வழியாய் எல்லாப்பேறுகளும் பெற்று பெருவாழ்வு வாழ வரம் தர வேண்டும்’ என்றும் வேண்டிக்கொண்டார்.

    அப்போது சாஸ்தாவானவர் ‘மலர் சொரிமுத்தய்யனார்’ என்று பெயர் தாங்கி, மகாலிங்கேசுவரர், சங்கிலி பூதத்தார், காத்தவராயர், மேலவாசி பூதத்தார், மேலவாசல் விநாயகர், தட்சிணாமூர்த்தி, கும்பமாமுனி, பெரியசாமி, பேச்சியம்மன், தூண்டில் மாடன், ஜோதிருத்திரன், பட்டவராயர் போன்ற பல தெய்வங்களுடன் ஒருசேர காட்சி கொடுத்து மறைந்தார். அன்று தொடங்கி இத்தலத்தில் மேற்சொன்ன அனைத்து தெய்வங்களுக்கும் சன்னிதி ஏற்படுத்தி வழிபாடு நடைபெற்று வருகிறது.


    ஒரு சமயம் இப்பகுதியில் வற்கடம்(12 ஆண்டுகளுக்கு மழையின்மை) ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர் ‘ஆடி அமாவாசையன்று, இந்தத் திருத்தலத்தில் உள்ள சாஸ்தாவுக்கு புனித நீர் சொரிந்து அபிஷேகம் செய்தால், மாதம் மும்மாரி பொழியும்; வறட்சி நீங்கும்’ என்று கூறினார். அதன்படியே புனித நீரை பொற்குடங்களில் நிரப்பி, அபிஷேகம் செய்ய வறட்சி நீங்கியது. மழையை பொழிய வைத்த அய்யனார், ‘சொரிமுத்து அய்யனார்’ என அழைக்கப்பட்டதாகவும் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.

    முத்துப்பட்டன் என்ற பிராமண இளைஞன், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த பொம்மக்கா, திம்மக்கா ஆகிய சகோதரிகளை மணம் புரிந்து கொண்டு செருப்பு தைக்கும் தொழிலை செய்து வந்தான். ஒருசமயம் பசுக்களை பாதுகாக்க போரிடும்போது முத்துப்பட்டன் வீரமரணம் அடைந்தான். பட்டவராயன் என்றழைக்கப்பட்ட அவருக்கும், இத்தலத்தில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

    அய்யப்பனின் முதல் நிலையாக சொரிமுத்து அய்யனார் விளங்குவதால், கார்த்திகை மாதங் களில் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து மாலை அணிவிந்து சபரிமலைக்கு செல்கின்றனர். இக்கோவிலில் தினசரி காலை 6 மணி அளவிலும், மாலை 5.30 மணி அளவிலும் பூஜைகள் நடைபெறுகிறது.

    நெல்லைக்கு மேற்கே அம்பாசமுத்திரம், பாபநாசம் வழியாக செல்லும் பாதையில் நெல்லையில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். நெல்லை மற்றும் செங்கோட்டையில் இருந்து இக்கோவிலுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    ஆடி அமாவாசை திருவிழா :

    அகத்திய முனிவரின் யோக நித்திரையில் இறைவன் திருவருள் கூடி காட்சி தந்த நாள் ஆடி அமாவாசை ஆகும். எனவே இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தங்களது நேர்த்திக் கடன்களை பக்திப்பெருக்கோடு செலுத்தி வருகின்றனர். இத்திருத்தலத்தில் நடைபெறும் ஆடி அமாவாசை விழாவானது நெல்லை மாவட்டத்தில் குறிப்பிடப்பட்ட திருவிழா ஆகும். இதேபோல் தை, மாசி மாத அமாவாசை தினங்களும் விசேஷமான நாட்களாகும். இக்கோவிலுக்கு அருகில் உள்ள பாணதீர்த்த அருவிக்கு பக்தர்கள் சென்று புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு நீத்ததார் கடன் மேற்கொள்வார்கள். இந்த பாணதீர்த்தத்தில்தான் ராமர் தனது தந்தை தசரதனுக்கு திதி செய்தார் என்று ஒரு ஐதீகம் நிலவுகிறது.

    செருப்பு காணிக்கை:

    குல தெய்வம் தெரியாதவர்கள் இவரையே(சொரிமுத்து அய்யனார்) குலதெய்வமாக வழிபடலாம் என்ற சிறப்புடையது இக்கோவில். இத்திருத்தலத்தில் உள்ள பட்டவராயர் சன்னிதியில் பக்தர்கள் செருப்புகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். முதல் ஆண்டு இங்கு கட்டப்படும் செருப்புகளை மறு ஆண்டு இக்கோவிலுக்கு வந்து பார்த்தால் அந்த செருப்புகள் தேய்ந்திருப்பதை காணமுடியும். பக்தர்கள் இத்தலத்திற்கு காணிக்கையாக வழங்கும் செருப்புகளை பட்டவராயரே பயன்படுத்துவதாக பக்தர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை நிலவுகிறது.

    மணி விழுங்கி மரம் :

    இத்திருக்கோவில் வளாகத்தில் இலுப்பை மரம் ஒன்று உள்ளது. பக்தர்களின் வேண்டுதலின்படி இந்த மரத்தில் கட்டப்படும் மணிகள் மரத்தின் உள்ளே பதிந்து விடுவதால் இந்த மரம் மணி விழுங்கி மரம் என்று அழைக்கப்படுகிறது. பக்தர்களின் காணிக்கைகளை இறைவன் இதன் மூலம் ஏற்றுக்கொள்வதாக நம்பப்படுகிறது.
    உலகெங்கும் அமைந்துள்ள பச்சையம்மன் ஆலயங்களுக்கு பிரதான ஆலயம், சிவபெருமான் மனித வடிவம் கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குகிறது, முனுகப்பட்டு பச்சையம்மன் ஆலயம்.
    உலகெங்கும் அமைந்துள்ள பச்சையம்மன் ஆலயங்களுக்கு பிரதான ஆலயம், சிவபெருமான் மனித வடிவம் கொண்ட கோவில், அன்னை பார்வதி வாழைப்பந்தல் அமைத்து வரம் பெற்ற பூமி, சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்கும் அபூர்வக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குகிறது, முனுகப்பட்டு பச்சையம்மன் ஆலயம்.

    புராணக் கதை :


    சிவபெருமானின் தீவிர பக்தரான பிருங்கி முனிவர், சிவனைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் வணங்காதவர். ஒருசமயம் சிவனும், பார்வதியும் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் காட்சி தந்த வேளையில், அங்கு வந்த பிருங்கி முனிவர் வண்டு உருவம் கொண்டு, சிவபெருமானை மட்டும் வலம் வந்து வணங்கிச் சென்றார்.

    இதைக் கண்டு மனம் வருந்திய பார்வதி, ‘ஐயனே! முற்றும் அறிந்த முனிவரே இப்படிச் செய்வது எந்த வகையில் நியாயம்? இனியும் இப்படி நிகழாமல் இருக்க தங்களின் உடலில் சரி பாதியை எனக்குத் தந்தருளுங்கள்’, என்று ஈசனை வேண்டினார். அதற்குச் சிவபெருமான்உடனே செவிமடுக்கவில்லை.

    அன்னைக்கு ஒரு யோசனை தோன்றியது. கடும் தவம் இருந்தால், இவரிடம் வேண்டிய வரத்தினைப் பெறலாம் என்று முடிவு செய்து தவமிருக்கும் இடம் தேடி பூமிக்கு வந்தாள். அப்போது அன்னைக்குப் பிடித்த இடமாகத் தோன்றியது, வாழை மரங்கள் நிறைந்த இயற்கை எழில் சூழ்ந்த இன்றைய முனுகப்பட்டு.

    அன்னை அங்கேயே வாழை மரங்களால் பந்தல் அமைத்து தவமிருக்க முடிவு செய்தாள். லிங்கம் அமைக்க, தவமிருக்க தண்ணீர் தேவைப்பட்டது. உடனே தன் புதல்வர்களான விநாயகரையும், முருகனையும் தண்ணீர் கொண்டுவரப் பணித்தாள். அதன்படி விநாயகர் சற்றுத் தொலைவில் உள்ள மலையில் முனிவர் தவமிருப்பதையும், அவர் அருகே கமண்டலத்தில் நீர் இருப்பதையும் அறிந்து, அதனைத் தன் வாகனமான மூஞ்சுறுவின் உதவியால் கவிழ்த்தார். கமண்டல நீர், கமண்டல நாக நதியாகி, அன்னை தவம் இருந்த இடத்தை நோக்கிப் பாய்ந்தது.

    முருகப்பெருமான் தொலைவில் உள்ள மலை மீது தன் வேலைப் பாய்ச்சி நீர் வரச்செய்து ஆறாக்கியதால், அது சேயாறு ஆனது. இதற்குள் அன்னை தன் பிரம்பினை பூமியில் அடித்து நீர் வரச் செய்தாள். அது பிரம்பக நதி என்று பெயர் பெற்றது. இந்த மூன்று நதிகளும் ஒன்று சேரும் ஊரான முனுகப்பட்டில் அமைந்த இடத்தை முக்கூட்டு என்றும், இங்குள்ள சிவனை ‘முக்கூட்டு சிவன்’ என்றும் அழைக்கின்றனர்.

    அன்னையின் தவத்தினைக் கலைக்க அசுரர்கள் சிலர் முயன்றனர். இதனை முறியடிக்க சிவன் வாழ்முனியாகவும், விஷ்ணு செம்முனியாகவும் அவதாரம் எடுத்து அன்னையின் தவம் நிறைவுபெற உதவினர். இதன்பின் திருவண்ணாமலையில், அன்னை சிவபெருமானிடம் சரிபாதி உடலைப் பெற்றாள் என தலபுராணம் கூறுகிறது.

    ஆலய அமைப்பு :


    ஆரணி - செய்யாறு சாலையின் ஓரத்தில், கமண்டல நாகநதியின் தெற்கே, பச்சையம்மன் உடனுறை மன்னார்சாமி ஆலயம் அமைந்துள்ளது. சாலையின் கீழ்ப்புறம் வாழ்முனி, செம்முனி, குதிரை வடிவங்கள் பெரிய வடிவில் அமைந்துள்ளன. இங்கு பில்லி, சூனியம், கண் திருஷ்டி, சொத்துப் பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காலில் எலுமிச்சை பழத்தை நசுக்கி, எதிரில் உள்ள முனிகளுக்கு நடுவில் உள்ள கருங்கல்லில், தேங்காயை வீசி சிதறச் செய்கின்றனர். இதனால், அனைத்துப் பிரச்சினைகளும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    சாலையின் மேற்புறம் பச்சையம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சிறிய ராஜகோபுர வாசலில் அமைந்துள்ளது. இந்திரனும், எதிரே உள்ள பாறையில் இரட்டை தந்தங்கள் கொண்ட ஐராவதம், ஈசான்ய மூர்த்தி, நந்தி வடிவங்கள் பெரிய அளவில் அமைந்துள்ளன. அடிவாரத்தில் சிறிய விநாயகர் சன்னிதி தெற்கு முகமாய் உள்ளது.

    இடதுபுறமாக வலம் வந்தால் அக்னி மூலை எனும் தென்கிழக்கில் அக்னி முனியான அக்னி பகவானும், அதனையடுத்து நவக்கிரகங்களாக நவ முனிகளும், அஷ்டதிக்கு பாலகர்கள் எனும் அஷ்ட முனிகளும், சப்தரிஷிகள் எனும் சப்தமுனிகளும் மேற்கு, வடக்குமுகமாய் பிரம்மாண்ட வடிவில் கம்பீரமாய்க் காட்சி தருகின்றனர்.

    வலமாக வரும் போது மன்னார்சாமி சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன் சிவபெருமானை லிங்க வடிவிற்கு பதிலாக மனித வடிவில் சிலா ரூபத்தில் காண முடிவது சிறப்பானது. இறைவன் நான்கு கரங்களோடு, கீழ் வலது கரத்தில் சூலம், கீழ்இடது கரத்தில் கபாலம், மேல் வலது கரத்தில் மழு, மேல் இடது கரத்தில் மான் தாங்கியுள்ளார். இவரே மன்னார் ஈஸ்வரன் எனும் மன்னார்சாமி ஆவார்.

    இவரையடுத்து நடுநாயகமாக பச்சையம்மன் சன்னிதி இருக் கிறது. அன்னை பச்சையம்மன், கருவறை முன் மண்டபத்தில் சப்தமாதர்கள், விநாயகர், முருகனும் வாசலின் இருபுறமும் காட்சி தருகின்றனர். இந்த ஆலயத்தின் துவாரபாலகர்களாக, வலதுபுறம் சிவபெருமானும், இடதுபுறம் மகாவிஷ்ணுவும் காட்சி தருவது அபூர்வ அமைப்பாகும்.

    இதனைக் கடந்து கருவறையில் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் இரு பச்சையம்மன் காட்சி தருகின்றனர். நின்ற அம்மன் கற்சிலையாகவும், அமர்ந்த அம்மன் சுதைவடிவிலும் அமைந்துள்ளது. அன்னையின் கீழ் வலது கரம் பிரம்பையும், கீழ் இடது கரம் கபாலத்தையும், மேல் வலது கரம் அங்குசத்தையும், மேல் இடது கரம் பாசத்தையும் தாங்கி அருள்கின்றது. இரண்டு அம்மன்களுக்கும் அலங்காரம், தீபாராதனை நடத்தப்படுகிறது. ஆனால் நின்ற கோலத்தில் இருக்கும் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.

    இவ்வாலயத்தின் தலமரம் வெப்பாலை. தலத் தீர்த்தம் கோவிலுக்கு வடக்கே ஓடும் செய்யாறு ஆகும். இவ்வாலயம் இந்து சமய அறநிலையத் துறையை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.



    பச்சை நிறமாக மாறிய அன்னை :

    தவம் புரியவும், லிங்கம் வடிக்கவும் தண்ணீர் தேடினார் அன்னை பார்வதி தேவி. ஆனால் தண்ணீர் உடனடியாக கிடைக்கவில்லை. இதனால் தவித்துப் போன அன்னையின் உடல் கோபத்தால் சிவந்த மேனியாக மாறியது. பிறகு தன்னுடைய பிள்ளைகளின் முயற்சியாலும், தன்னுடைய முயற்சியாலும் மூன்று நதிகள் தோன்றியதில், அன்னையின் உள்ளம் குளிர்ந்தது. இதையடுத்து சாந்தமாக தவம் இயற்றத் தொடங்கிய அன்னையின் மேனி பச்சை நிறமாக மாறியதாக தல புராணம் தெரிவிக்கிறது. இதனால்தான் இத்தல தேவி பச்சையம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இத்தல இறைவன் மண்ணால் உருவானவர் என்பதால், ஈசனுக்கு ‘மண் லிங்கேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. இந்த பெயர் மருவி தற்போது ‘மன்னார்சாமி’ என்ற பெயர் நிலைத்து விட்டது.

    விழாக்கள் :

    பச்சை அம்மன் ஆலயம், அம்மன் ஆலயமாக இருந்தாலும், இங்குள்ள மன்னார்சாமியே பிரதானமாகத் திகழ்கிறார். இதனால் அம்மனுக்கு திங்கட்கிழமையே உகந்த நாளாக போற்றப்படுகிறது. இது தவிர ஞாயிற்றுக்கிழமையிலும் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

    பிரமோற்சவம் எனும் பெருந்திருவிழா ஆடி மற்றும் ஆவணியில் வரும் முதல் இருவார திங்கட்கிழமைகளைச் சேர்த்து ஆறு திங்கட்கிழமைகள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 7-வது திங்கட்கிழமையன்று அம்மன் திரு வீதியுலா நடை பெறும். பிரசாதமாக வேப்பிலையும், பச்சை நிற குங்குமமும் வழங்கப்படுகிறது.

    எண்ணற்ற குடும்பங்களுக்கு முனுகப்பட்டு பச்சையம்மன் குலதெய்வமாக விளங்குகின்றது. இந்த அம்மன், மணப்பேறு, மகப்பேறு வழங்கும் தெய்வமாக விளங்குவது தனிச்சிறப்பு. மகப்பேறு வேண்டுதல் நிறைவேறியவர்கள் 5 அல்லது 7-வது மாதத்தில் அம்மனுக்கு வளையல் சாத்தி வழிபட்டுச் செல்கின்றனர். உலகமெங்கும் அமைந்துள்ள பச்சையம்மன் ஆலயங்களுக்குப் பிரதான ஆலயம் மற்றும் ஆதி ஆலயம் முனுகப்பட்டு பச்சையம்மன் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

    தினமும் காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இடைப்பட்ட நேரங்களில் நடை அடைக்கப்படாது.

    அமைவிடம் :

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில், செய்யாறு, கமண்டலநதி, பிரம்பகநதி என மூன்றும் ஒன்றுசேரும் முக்கூடல் எனும் முக்கூட்டில் அமைந்த தலம் முனுகப்பட்டு. ஆரணியில் இருந்து கிழக்கே 11 கி.மீ., செய்யாறு நகரில் இருந்து மேற்கே 20 கி.மீ., ஆற்காட்டில் இருந்து தெற்கே 35 கி.மீ., சென்னையிலிருந்து தென்மேற்கே 140 கி.மீ., தொலைவில், ஆரணி - செய்யாறு வழித் தடத்தில், முனுகப்பட்டு அமைந்துள்ளது.
    திருவாளபுத்தூரில் உள்ள ரத்தினபுரீஸ்வர சுவாமி ஆலயம் தான் வாசுகி ஆராதனை செய்த ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் மாணிக்க வண்ண சுவாமி.
    தேவர்கள் அமுதம் எடுக்க மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற நாகத்தை கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலை கடைந்தனர். இதனால் வாசுகியின் உடல் நலிவுற்றது. தனது உடல் நலம் பெற மாணிக்க வண்ண சுவாமியை, தினமும் ஆராதனை செய்துவந்தது வாசுகி. இதையடுத்து அதன் உடல் வலிமை பெற்றது. அதன்பிறகு அனுதினமும் மாணிக்க வண்ண சுவாமியை வழிபட நினைத்த வாசுகி, அந்த தலத்தில் உள்ள தல விருட்சமாக வாகை மரத்தடியில் குடிகொண்டாள்.

    திருவாளபுத்தூரில் உள்ள ரத்தினபுரீஸ்வர சுவாமி ஆலயம் தான் வாசுகி ஆராதனை செய்த ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் மாணிக்க வண்ண சுவாமி. இறைவனின் இன்னொரு பெயர் ரத்தினபுரீஸ்வரர். இறைவி பெயர் வண்டமர் பூங்குழலம்மை நாயகி என்பதாகும். அன்னையின் இன்னொரு பெயர் ப்ரமர குந்தலாம்பாள்.

    ஆலய அமைப்பு :

    இந்தக் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ராஜகோபுரம் இல்லை. ஆனால், முன் முகப்பு அழகாக உள்ளது. உள்ளே நுழைந்ததும் பிரகாரம். அதை அடுத்து சிறப்பு மண்டபம் உள்ளது. மண்டபத்தின் வலது புறம் நடராசர், சிவகாம சுந்தரி சன்னிதி உள்ளது.

    அடுத்து உள்ளது மகாமண்டபம். இதன் வலதுபுறம் இறைவி வண்டமர் பூங்குழல் நாயகியின் சன்னிதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள்.

    இத்தலம் சமயக் குரவர்களான திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், அப்பர் ஆகியோரால் பாடப் பெற்றத் தலம். இதைக் குறிக்கும் வண்ணம் மகாமண்டபத்தின் தென் திசையில் மூவர் திருமேனிகளும் உள்ளன. மகா மண்டபத்தின் வடதிசையில் குருஸ்தான முடையார் சன்னிதி உள்ளது. இங்கு குரு ஸ்தான முடையார், குருமுக நாயகி, சட்டநாதர் ஆகியோர் திருமேனிகள் உள்ளன.

    அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலின் இடதுபுறம் நிருதி விநாயகரும், வலதுபுறம் திருப்பாற்கடல் கடைந்த வாசுகியின் திருமேனியும் உள்ளன. அடுத்ததாக அமைந்த கருவறையில் இறைவன் மாணிக்க வண்ண சுவாமி, லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.


    ரத்தினபுரீஸ்வரர், பூங்குழலம்மை

    பரிகார தெய்வங்கள் :

    இறைவனின் தேவக் கோட்டத்தின் தென்புறம் நடன விநாயகர் ரிஷப வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இது மிகவும் அபூர்வமான காட்சி என பக்தர்கள் கூறுகின்றனர். தேவ கோட்டத்தின் மேல்புறம் லிங்கோத்பவர். வடபுறம் பிரம்மா, அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை திருமேனிகள் உள்ளன.

    பிரகாரத்தின் தென்புறம் மெய்கண்டார், மேல்புறம் விநாயகர், வள்ளி, தேவசேனா, முருகன், கஜலட்சுமி, சரஸ்வதி ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. இங்கு வடக்குப் பிரகாரத்தில் இரண்டு சண்டீஸ்வரர் சன்னிதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒன்று இறைவனின் வடக்குப் பிரகாரத்திலும் இன்னொன்று இறைவிக்கு அருகேயும் உள்ளது. கிழக்குப் பிரகாரத்தில் இரட்டைப் பைரவர், சூரியன், சந்திரன், திருமேனிகள் உள்ளன. இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லை. பிரகாரத்தின் தெற்குப் பகுதியில் தலவிருட்சமான வாகை மரம் உள்ளது. அதன் மேடையில் வாசுகி, கணபதி, அஷ்ட நாகர்கள் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

    ஆராதனைகள் :

    தை, ஆடி வெள்ளிகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. தல விருட்சத்தின் அடியில் உள்ள வாசுகி நாகம் மார்கழி சஷ்டி அன்று இங்குள்ள இறைவனையும் இறைவியையும் வணங்கி நலம் பெற்றதாக ஐதீகம். அன்றைய தினத்தில் இறைவனுக்கும் இறைவிக்கும் நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தில் பங்கு பெற்றால் ராகு தோஷம் விலகும் என்பது உண்மை என்கின்றனர் பக்தர்கள்.

    சிவராத்திரி, நவராத்திரி, சோம வாரம், பிரதோஷம், சித்திரை முதல் நாள், தீபாவளி, பொங்கல், கார்த்திகை ஆகிய நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தைக் காண நூற்றுக் கணக்கில் பக்தர்கள் திரள்கின்றனர். தை மாத கடைசி வெள்ளியில் துர்க்கை வீதியுலா வருவதுண்டு. மார்கழி மாத திருவாதிரையில் நடராஜரும் சிவகாமியும் வீதி உலா வருவார்கள்.

    தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந் திருக்கும்.

    பில்லி சூன்யம் மற்றும் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலங்கள் நம் தமிழ்நாட்டில் அபூர்வம். அத்தகைய சக்தி படைத்த துர்க்கை அருள்பாலிக்கும் இத்தலத்திற்கு நாமும் ஒரு முறை பயணம் மேற்கொண்டு பயன் பெறலாமே.

    நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் - பந்தநல்லூர் பேருந்து தடத்தில் உள்ள, மணல்மேட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது திருவாளப்புத்தூர் என்ற இந்த தலம்.

    தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள 108 சிவாலயம் ராமலிங்க சுவாமி திருக்கோவில், ‘கீழை ராமேஸ்வரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள 108 சிவாலயம் ராமலிங்க சுவாமி திருக்கோவில், ‘கீழை ராமேஸ்வரம்’ என்று அழைக்கப்படுகிறது. 108 சிவலிங்கங்கள் ஒரே இடத்தில் பிரமாண்டமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதால், இத்தலம் சிறப்பு பெற்று விளங்குகிறது. மூலவர் ராமலிங்கசுவாமி. 106 சிவலிங்கங்கள் பக்தி பரவசமூட்டும் வகையில் மூன்று வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் தென்புறம் அனுமன் காசியில் இருந்து கொண்டு வந்த, அனுமந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாள் நாமம் பர்வத வர்த்தினி. தென்னகத்தில் மிகப்பெரிய (6 அடி உயரம்) சூரிய பகவான் சிலையும் கோவிலின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ளது.

    தல வரலாறு :

    இதிகாச காப்பியங்களில் ஒன்றான ராமாயணத்துக்கும் பாபநாசத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு. இலங்கையில் ராவணனை சம்ஹாரம் செய்த தோஷம் அகல ராமபிரான் ராமேசுவரத்தில் சிவபூஜை செய்து, தீர்த்தத்தில் நீராடிவிட்டு மனைவி சீதை, தம்பி லட்சுமணன், அனுமன் ஆகியோருடன் அயோத்திக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் மணற்பாங்கான குடமுருட்டி ஆற்றின் அருகே பாபநாசத்துக்கு வந்தனர். அப்போது தங்களை ஏதோ தோஷம் பின் தொடர்வதை உணர்ந்த சீதை அதை ராமனிடம் கூறினார். அதை கேட்ட ராமன், ராவணனின் தங்கை சூர்ப்பனகை, அரக்கர்கள் ஹரன், தூஷன் ஆகியோரை சம்ஹாரம் செய்த தோஷமே தங்களை பின்தொடர்ந்து வருகிறது என்று கூறினார். தோஷம் அகல சிவலிங்கபூஜை செய்வது தான் உத்தமம் என்று தீர்மானித்தனர். அங்கே வில்வமரம் இருந்தது. அதன் அருகே குடமுருட்டி ஆறும் ஓடுவதைக்கண்டனர்.

    உடனே சீதை அனுமனை அழைத்து, நீ காசிக்கு சென்று விரைவாக சிவலிங்கம் ஒன்றை கொண்டு வருவாயாக என்று கூறினார். காசிக்கு சென்ற அனுமன் திரும்பி வரும் வரை சீதை குடமுருட்டி ஆற்றில் மூழ்கி ஈர மணலை எடுத்து வரிசையாக சிவலிங்கங் களை உருவாக்கினார்.

    ராமன், லட்சுமணன் ஆகியோரின் உதவியுடன் சீதை தனது கரங்களாலேயே 100-க்கும் மேற்பட்ட லிங்கங்களை உருவாக்கினார். அனுமன் காசியில் இருந்து திரும்பும் முன்னதாகவே பக்தி பரவசத்துடன், வில்வ மரத்தடியில் சிவலிங்க பூஜையை தொடங்கிவிட்டனர். காசியில் இருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்த அனுமன் அதை வெளிப்பிரகாரத்தில் வைத்து விட்டார்.

    காசியில் இருந்து திரும்பும் முன்பே சிவலிங்க பூஜையை தொடங்கி அது பூர்த்தியடையும் நிலையில் இருப்பதை பார்த்த அனுமன் தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய நினைத்து ராம லிங்கத்தை தன் வாலால் கட்டி இழுத்தார். அப்போது வால் அறுந்து வடக்கே சென்று விழுந்தார். வால் அறுந்து விழுந்த இடம் இன்று அனுமன் நல்லூர் என்று வழங்கப்படுகிறது.

    அனுமனின் கோபத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்த ராமன், ‘என் பிரியமானவனே! இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 107 சிவலிங் கங்களை பக்தர்கள் வழிபட்டாலும், 108-வது சிவலிங்கமான அனுமந்த லிங்கத்தையும் வழிபட்டு, பின்னர் அம்பாளை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும். தோஷம் நீங்கப்பெறும்’ என்றார். தோஷம் அகல காரணமான இத்தலம் பாபநாசம் என்று அழைக்கப்படும் என்று அருளினார்.

    ராமபிரானின் தோஷம் நீங்கப்பெற்ற இத்திருத் தலத்துக்கு வந்து இங்குள்ள ராமலிங்கத்தையும், சனி பகவானையும் வழிபட்டால் அனைவரின் தோஷம் விலகி வாழ்வில் வளம் பெறலாம் என்று தலபுராணம் கூறுகிறது.


    ராமலிங்க சுவாமி, பர்வதவர்த்தினி

    விழாக்கள் :

    மகாசிவராத்திரி இந்த கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும். அன்று இரவு 4 கால பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.

    ஆடிப்பூரம், நவராத்திரி, கார்த்திகை தீபம், திருவாதிரை உற்சவம், சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகியவை இங்கு விமரிசையாக கொண்டாடப்படும் விழாக்களாகும்.

    இத்தலத்தின் தல விருட்சம் வில்வமரம். தீர்த்தம் சூரியதீர்த்தம். தை மாதம் முதல் தேதி பொங்கல்அன்று சுவாமி தீர்த்தவாரி நடைபெறுகிறது. மேலும் மார்கழியில் திருவாதிரையில் நடராஜப்பெருமான், சிவகாமி அம்மையாருடன் வந்து தீர்த்தம் அருளுகிறார். பிரசித்திப்பெற்ற இந்தகோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சூரியன், சனி சாபம் நீக்கிய தலம் :

    அனுமன் காசியில் இருந்து எடுத்து வந்த சிவலிங்கம் கோவிலின் தென்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வசிஷ்ட முனிவர் காசியில் இருந்த லிங்கம் ஒன்றை காணவில்லை என்பதை அறிந்து சூரிய பகவானிடம் கேட்டார். அதற்கு அவர், தான் பார்க்கவில்லை என்று கூறினார். அதை நம்ப மறுத்த முனிவர் சூரியனுக்கு சாபமிட்டார். சாபம் நீங்குவதற்கு சூரியன் கண்டியூரிலுள்ள அரசாப விமோசன பெருமாள் கோவிலுக்கு வந்து வழிபட பாதி சாபம் நீங்கப் பெற்றது. பின்னர் ஐயாறப்பர் சுவாமியின் வழிகாட்டுதலால் பாபநாசத்துக்கு வந்து வழிபட சூரிய பகவானின் முழு சாபமும் நீங்கியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    சூரியனுக்கு சாபமிட்டு கோபத்துடன் வசிஷ்ட முனிவர் வரும் போது, அங்கிருந்த அரசமரத்தில் காக உருவில் இருந்த சனீஸ்வர பகவான் சிரித்தார். முனிவர் அவரிடம் ‘எதற்காக சிரித்தாய்?’ என்று கேட்க, அதற்கு சனீஸ்வரன், ‘ஒரு குரங்கு லிங்கத்தை பெயர்த்து எடுத்து சென்றது’ என்று கூறினார். இதனால் கோபம் அடைந்த முனிவர், இதுவரை உண்மையைக் கூறாமல் மறைத்த காரணத்தால் சனி பகவானுக்கும் சாபம் கொடுத்தார்.

    சனி பகவானும் தன்னுடைய சாபம் தீர கண்டியூர் அரசாப விமோசன பெருமாள் ஆலயத்துக்கு வந்து தரிசித்து பாதி சாபம் நீங்கப்பெற்றார். பின்னர் ஐயாறப்பர் வழிகாட்டுதலின் பேரில் பாபநாசத்துக்கு வந்து வழிபட்டதும், முழு சாபமும் நீங்கியது. ராமபிரானின் உத்தரவுபடி இக்கோவிலின் கிழக்குபகுதியில் சூரியபகவான் அருகே சனீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    அமைவிடம் :

    கும்பகோணத்தில் இருந்து மேற்கே 15 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
    கர்நாடக மாநிலத்தில் உள்ள கோடிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கோடிக்கும் அதிகமாக லிங்கங்கள் இருப்பது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கிறது.
    பொதுவாக சிவன் கோவில்களில் மூலவர் சிவலிங்கம் தவிர்த்து ஆலயத்தைச் சுற்றிலும் ஒன்றிரண்டு சிவலிங்கங்கள் இருக்கக்கூடும். ஒரு சில ஆலயங்களில் மூலவர் லிங்கத்தைத் தவிர்த்து பஞ்ச லிங்க சன்னிதி என்ற வகையில் ஐந்து லிங்கங்கள் அமைந்திருக்கலாம். ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் கோடிக்கும் அதிகமாக லிங்கங்கள் இருப்பது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கிறது. ஆலயத்திற்குள் நுழைந்ததாலே எந்தப் பக்கம் திரும்பினாலும் சிவலிங்கங்கள்தான் காணப்படுகின்றன. ஆலயத்தின் பெயரே ‘கோடிலிங்கேஸ்வரர்’ கோவில் தான்.

    கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள கம்மசந்திரா என்ற இடத்தில் அமைந்திருக்கிறது கோடிலிங்கேஸ்வரர் திருக்கோவில். இங்கு உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் என்னும் வகையில், 108 அடி உயரத்தில் பிரமாண்ட சிவலிங்கம் ஒன்று அமைந்துள்ளது. இதைத் தவிர்த்து, கோவில் முழுவதும் பல்வேறு அளவுகளில் சிறியதும், பெரியதுமாக, ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமாக சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இங்கு தான் 108அடி உயரமான உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் இருக்கிறது. இதன் காரணமாக ஆலயத்திற்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் சாம்பசிவமூர்த்தி என்பவரால் முதல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு தொடங்கப்பட்டது. அதன் பின்னர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடும் மக்கள் அனைவரும், ஒவ்வொரு சிவலிங்கத்தை ஆங்காங்கே பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கி விட்டனர். இவ்வாறு பல்கிப் பெருகியதன் காரணமாக இப்போது ஒரு கோடிக்கும் அதிகமான சிவலிங்கங்கள் இங்கு இருப்பதாக அறியப்படுகிறது. இப்போதும் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் அனைவரும் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்துதான் இறைவனை வழிபட்டுச் செல்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் 108 அடி உயரத்தில் மிகப்பெரிய சிவலிங்கமும், அதற்கு நேர் எதிரில் 35 அடி உயரம் கொண்ட நந்தி சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோவில் வளாகத்தில் பிரம்மதேவர், மகாவிஷ்ணு, மகேஸ்வரர், வெங்கடரமணி சுவாமி, அன்னபூரணி, பாண்டுரங்க சுவாமி, சீதாதேவி சமேத ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், கன்னிகா பரமேஸ்வரி அம்மன், கருமாரியம்மன் போன்ற தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளன.



    இதில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சன்னிதிக்குள் ‘சிவ பஞ்சயாதி’ என்னும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தைச் சுற்றிலும் விநாயகப் பெருமான், முருகப்பெருமான், பார்வதி மற்றும் நந்தி ஆகியோர் நின்று வணங்குவது போன்ற அமைப்பு உள்ளது.

    கோடி லிங்கேஸ்வரர் கோவிலில் இரண்டு நாகலிங்க மரங்கள் இருக்கின்றன. திருமணமாகாதவர்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், மணமானவர்கள் மணவாழ்க்கை இடையூறு இன்றி இன்பமாக அமைய வேண்டியும் சிவபெருமானை வேண்டிக்கொண்டு, இந்த நாகலிங்க மரங்களில் மஞ்சள் கயிறு கட்டி வழிபாடு செய்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் இருக்கும் அனைத்து லிங்கங் களுக்கும் காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இரண்டு வேளைகளில், 10 அர்ச்சகர்களால் மேளதாளங்கள் முழங்க பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கிருக்கும் அனைத்து லிங்கங் களுக்கும், நாள் தவறாமல் பூஜைகள் நடைபெறுவது சிறப்புக்குரிய விஷயமாகும்.

    இந்தக் கோவிலில் வித்தியாசமான வழிபாட்டு முறை ஒன்றை வழக்கத்தில் இருக்கிறது. அது சிவலிங்க பிரதிஷ்டை வழிபாடு ஆகும். தங்கள் வேண்டுதல் நிறைவேற நினைக்கும் பக்தர்கள், தங்களால் முடிந்த அளவில் வெவ்வேறு அளவுகளில் சிவலிங்கத்தை செய்து கொண்டு வந்து, இந்தக் கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். இங்கு பிரதிஷ்டை செய்யப்படும் சிவலிங்கங்கள், அந்தந்த பக்தர்களின் பெயரிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.

    இந்தக் கோவிலில் மகா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெறு கிறது. 108 அடி உயர சிவலிங்கத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. அன்றைய தினம் முழுவதும் இறைவனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

    கோலார் தங்கச்சுரங்கத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் கோடிலிங்கேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. பெங்களூருவில் இருந்து கோலார்பங்கார்பெட்டை வழியாக இந்தக் கோவிலை அடையலாம்.
    ஸ்ரீரங்கம், திருப்பதி, சோளிங்கர், காஞ்சீபுரம் இவற்றுடன் ஆவணியாபுரமும் சேர்ந்து பஞ்சஷேத்திர தலமாகவும் லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் விளங்குகின்றது.
    தட்சிண அகோபிலம், தேவர்கள் மரங்களாக தவமிருக்கும் மலை, பஞ்ச திருப்பதி தலம், திருமணப்பேறு, குழந்தைப்பேறு அருளும் தலம், எம பயம் நீக்கும் நரசிம்மர் வாழும் ஆலயம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட கோவிலாகத் திகழ்கிறது, திருவண்ணாமலை மாவட்டம் ஆவணியாபுரத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலாகும்.

    இவ்வுலகையும், உலகில் வாழும் உயிர்களைக் காக்கவும் மகாவிஷ்ணு ஏற்றுக்கொண்ட திரு அவதாரங்கள் பத்து ஆகும். இந்த அவதாரங்களில் குறிப்பிடத்தக்கது நரசிம்ம அவதாரம். இந்த அவதாரம் தோன்றிய தலம், ஆந்திர பிரதேசத்தில் உள்ள அகோபிலம். இதே போன்று தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் தலமாக ஆவணியாபுரம் நரசிம்மர் ஆலயம் விளங்குகிறது.

    ஆவணி என்பது மாதம் மட்டுமல்ல; இதற்கு சிங்கம் என்ற பொருளும் உள்ளது. இத்தலத்தில் உற்சவர் திருமால், லட்சுமி, கருடன், மலையின் பாறை கூட சிங்கமுகத்தில் தான் காட்சி தருகின்றன. இதன் காரணமாகவே இத்தலம் ஆவணியாபுரம் என்ற பெயரால் வழங்கப்பட்டு வருகின்றது. மலைக் குன்றை, ஒரு நிலையில் நின்று பார்த்தால் சிங்கமுகம் தெரிவது இயற்கையின் அதிசயமா? இறைவனின் அதிசயமா? தெரியவில்லை. இங்குள்ள உற்சவ நரசிம்மர், மூன்று கண்களுடன் காட்சி தருகின்றார்.

    தல வரலாறு :

    புராண காலத்தில் இரண்யகசிபு என்ற மன்னன் கடுந்தவம் புரிந்தான். தேவர்களாலும், மனிதர் களாலும், மிருகங்களாலும், இரவிலோ, பகலிலோ, உள்ளேயோ, வெளியேயோ மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தை பிரம்மனிடம் இருந்து பெற்றான். வரத்தின் பலன் காரணமாக, தேவர்கள் உள்ளிட்ட உலக மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். அனைவரும், தன்னையே தெய்வமாக வழிபடவேண்டும் என்று அகந்தையோடு வலியுறுத்தி வந்தான்.

    இந்தநிலையில் இரண்யகசிபுவுக்கு நாரத முனிவரிடம் மந்திர உபதேசம் பெற்ற ஆண் குழந்தை பிறந்தது. பிரகலாதன் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, நாராயணன் மீது அளவற்ற பக்தி கொண்டு விளங்கினான். இதனால் தன் மகன் என்றும் பாராமல் பிரகலாதனைக் கொல்லும் முயற்சியில் பலவிதங்களில் முயன்றான் இரண்யகசிபு. ஒருநிலையில் தூணிலிருந்து மனிதனும், மிருகமும் உருவம் கொண்ட நரசிம்மராக வெளிப்பட்ட நாராயணன், இரண்யகசிபுவை, அந்திசாயும் வேளையில், வாயிற்படியில் வைத்து வதம் செய்து அழித்தார். இந்த இடம் ஆந்திராவில் உள்ள அகோபிலமடம் ஆகும்.

    இந்த நரசிம்மர் கோலத்தை, பிருகு முனிவருக்காக மீண்டும் காட்டியருளிய தலமே ஆவணியாபுரம் என்னும் தட்சிண அகோபிலம் என்று தல வரலாறு தெரிவிக்கிறது.

    பிரகலாதனுக்கு அருள்செய்த நரசிம்மனை, தேவர்களும், முனிவர்களும் போற்றி வணங்கினர். இந்தத் திருக்கோலத்தை ஈரேழு உலகத்திற்கும் காட்டி காத்தருள வேண்டும் என வேண்டி நின்றனர்.

    அதற்கு செவிமடுத்த நரசிம்மர், ‘தேவர்களே! நீங்கள் ஒரு உத்தமமான இடத்தில், குளிர்ச்சிதரும் வெப்பாலை மரங்களாய் நின்று தவம் செய்து வாருங்கள். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்’ என்றார்.

    அதன்படியே பூலோகம் வந்த அனைவரும், எழிலான சிறுகுன்றில் வெப்பாலை மரங்களாக தோன்றி தவமிருந்தனர். அங்குவந்த பிருகு முனிவர் அம்மரத்தின் அடியில் தவமிருந்தார்.

    சுவாதித் திருநாளன்று, பிருகு முனிவருக்கு ஓராயிரம் சூரியன் சுடரொளியாய் லட்சுமி நரசிம்மர் காட்சி தந்தார். இதனால் மனம் மகிழ்ந்த பிருகு முனிவர், ‘இத்தலத்தில் நின்ற, கிடந்த கோலத்தையும் காட்டியருள வேண்டும்’ என்று நரசிம்மரை வேண்டினார். அதன் பொருட்டு மலையுச்சியில் திருப்பதி வெங்கடேசப் பெருமாளாக, காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாளாக, திருவரங்கம் ரங்கநாதராக, சோளிங்கர் யோகநரசிம்மராக திருக்காட்சி நல்கினார். இதன்மூலம் பஞ்ச திருத்தலம் ஒரு சேர உருவானது.

    மேலும், பிருகு முனிவரின் விருப்பத்திற்கு இணங்க, லட்சுமி நரசிம்மர் தமது வலக்கரத்தால் ஒரு தீர்த்தத்தினை உருவாக்கினார். அதன்பெயர் ‘பாகூ நதி’ என்பதாகும். இது சேயாற்றோடு கலக்கின்றது. இத்திருக்கோவில் தட்சிணா சிம்மாசலம், தட்சண சிம்மகிரி, பஞ்சதிருப்பதி, ஆவணி நாராயணபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

    பவுர்ணமி சிறப்பு :

    வெப்பாலை மரங்களாக தவமிருந்த தேவர்கள், பவுர்ணமி தோறும் சுயவடிவம் பெற்று, லட்சுமி நரசிம்மரைப் பூசித்து வந்தனர். இதனால், பவுர்ணமி அன்றும், சுவாதி நட்சத்திரத்தன்றும், சனிக்கிழமைகளிலும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறு கின்றன. அந்த நாட்களில் இங்கு வரும் பக்தர்களின் கூட்டம் ஏராளம்.

    எந்தத் திருக்கோவிலிலும் இல்லாத சிறப்பாக, இத்தலத்தில் உள்ள லட்சுமியின் முகம், வழக்கத்திற்கு மாறாக, சிங்க முகத்தில் அமைந்துள்ளது. நரசிம்மருக்கு சிம்ம முகம் இல்லாததால், பிரம்மனின் தவத்தின் போது, நரசிம்மன் முகத்தை லட்சுமியே பெற்று, இக்கோலம் ஏற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், கருடன் நரசிம்மரின் முகத்தை பிரதி பலிக்கும் விதமான கண்ணாடியாக சிங்க முகம் கொண்டு காட்சி தருகின்றார்.

    இத்தலத்தில் கீழே மூலவர், உற்சவர், சிறிய உற்சவர், தெற்கு நோக்கிய ஐந்து நரசிம்மர் மற்றும் மலைமீது ஒரு நரசிம்மர் என ஒன்பது நரசிம்மர் வடிவங்கள் அமைந்துள்ளன. இது அகோபில ஐதீகத்தைக் கொண்டு விளங்குவதால், அகோபிலத்து தரிசன பலன் இங்கும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஐந்து நரசிம்மர்கள் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ளதால், இத்தலம் எம பயம் நீக்கும் தலமாக விளங்குகின்றது. இக்கோலம் வேறெங்கும் காணப்படாத அரிய கோலமாகும்.

    இதே போல, ஸ்ரீரங்கம், திருப்பதி, சோளிங்கர், காஞ்சீபுரம் இவற்றுடன் ஆவணியாபுரமும் சேர்ந்து பஞ்சஷேத்திர தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகின்றது. இதனால், சனிக்கிழமையும் உகந்த நாளாகப் போற்றப்படுகின்றது.



    ஆலய அமைப்பு :


    இவ்வாலயம் ஊரின் நடுவே உள்ள சிறிய குன்றின் மத்தியில் லட்சுமி நரசிம்மர், உச்சியில் வெங்கடேசப்பெருமாள் மற்றும் நான்கு திவ்ய தேச ஆலயங்களின் வடிவங்கள் கொண்ட சன்னிதிகள் அமைந்துள்ளன. தற்பொழுது 190 படிக்கட்டுகள் கொண்டு எளிதாக ஏறும் வகையில் இக்கோவில் அமைந்துள்ளது.

    முதல்நிலை 60 படிகள் ஏறியதும், பலி பீடம், கொடிமரம் நம்மை வரவேற்கிறது. உள்ளே சென்றதும், இரண்டு கருடாழ்வார்கள், லட்சுமி நரசிம்மரை வணங்கி நிற்க, அவர்களில் ஒருவரின் முகம் சிங்க முகம் கொண்டு அபூர்வ கோலத்தில் காட்சி தருகின்றது. கருவறையின் வெளியே வலதுபுறம் ஐந்து நரசிம்ம வடிவங்கள், அதன் மேல்புறம் இரு நாக வடிவில் சிலைகளும், அலர்மேல்மங்கைத் தாயார் சன்னிதி, கீழ்ப்புறம் உற்சவ மூர்த்திகள் காட்சிதருகின்றனர்.

    வெங்கடேசப் பெருமாள் :

    மலை உச்சி செல்ல 130 படிகள் வசதியாக அமைந்துள்ளன. உச்சியில் வெங்கடேசப் பெருமாள் நின்ற கோலத்தில் எளிய வடிவில் கிழக்கு முகமாய் அருள் வழங்குகின்றார். இந்தச் சன்னிதியின் வலதுபுறம் முறையே சோளிங்கர் யோக நரசிம்மர், அமிர்தவல்லித் தாயார், திருவரங்கம் ரங்கநாதர், ரங்கநாயகி தாயார், காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், பெருந்தேவித் தாயார் என மூன்று சன்னிதிகள் கிழக்கு முகமாய் ஒருங்கே அமைந்துள்ளன. வெப்பத்தைத் தணிக்கும் குணம் கொண்ட வெப்பாலை மரம் தல மரமாகும். நரசிம்மரால் உருவாக்கப்பட்ட பாகூ நதி தலத் தீர்த்தமாகும்.

    பிரார்த்தனைத் தலம் :

    நல்ல விளைச்சலுக்காக வேண்டிக் கொண்ட விவசாயிகள், தங்களின் நில விளைச்சலின் ஒரு பகுதியை நேர்த்திக் கடனாகச் செலுத்துகின்றனர். குழந்தைப் பேறு வேண்டுவோர், சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்தும், தலத்தில் தங்கியிருந்தும் வரம் பெறுகின்றனர். குழந்தை வரம் கிடைத்தபின் துலாபாரம் மூலம் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். கடன் தொல்லைக்கு மலையுச்சியில் உள்ள வெங்கடேசப் பெருமாளை சரணடைகின்றனர். பகை, பில்லி, சூன்யம் போன்றவை நீங்க லட்சுமிநரசிம்மரை சரணடைகிறார்கள்.

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். சனிக் கிழமை தோறும் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையும் கோவில் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    விழாக்கள் :


    வைகானச ஆகமத்தில் அமைந்துள்ள வடகலை கோவில் இது. சித்திரைப் பவுர்ணமியில் கொடியேற்றம். தொடர்ந்து பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. சித்திரை சுவாதியில் நரசிம்மர் ஜெயந்தி, ஆவணியில் கிருஷ்ணஜெயந்தி, புரட்டாசி மூன்றாம் சனியன்று பெருமாள் கருடசேவை, ஐப்பசியில் தீபாவளி திருமஞ்சனம், கார்த்திகை தீபம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, தையில் காணும் பொங்கல், மாசி மகம், பங்குனி உத்திரம் என விழாக்களுக்குக் குறையில்லை. மாத சுவாதி நரசிம்மருக்கும், திருவோணம் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கும் உகந்த நாளாகும்.

    அமைவிடம் :

    திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டத்தில், ஆவணியாபுரம் அமைந்துள்ளது. ஆரணி - வந்தவாசி சாலையில், ஆரணியில் இருந்து கிழக்கே 15 கி.மீ., வந்தவாசியில் இருந்து மேற்கே 26 கி.மீ., செய்யாறுக்கு தென்மேற்கே 18 கி.மீ., சென்னைக்குத் தென்மேற்கே 130 கி.மீ. தொலைவில் இருக்கிறது ஆவணியாபுரம்.
    ×