என் மலர்tooltip icon

    கோவில்கள்

    சீமைத்துரை ஜட்ஜ் நாவலடி கருப்பண்ணசாமி என்றழைக்கப்படும் அந்த சாமி வீற்றிருக்கும் கோவில், நாமக்கல் மாவட்டம், மோகனூருக்கு அருகே ஒரு கிலோமீட்டர் தொலைவில் குமரிபாளையம் கிராமத்தில் இருக்கிறது.
    கடந்த காலங்களில் நீதிபதிகளை, சீமைத்துரை, ஜட்ஜ் சாமி என்று கிராம மக்கள் மரியாதையுடன் அழைப்பது வழக்கம். அவ்வாறு மரியாதைமிக்க நீதிபதிகளிடம் தங்கள் நிலப்பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு மனு கொடுத்து வழக்குகள் மூலம் தீர்வு காண்பது தொன்று தொட்டு நடைபெறும் நிகழ்வுகளாகும். ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கடவுளையே ‘ஜட்ஜ்’ சாமி என்று பக்தர்கள் மனு கொடுத்து வழிபாடு செய்கிறார்கள் என்றால் வியப்பாக இருக்கிறதா?.

    ஆம்! சீமைத்துரை ஜட்ஜ் நாவலடி கருப்பண்ணசாமி என்றழைக்கப்படும் அந்த சாமி வீற்றிருக்கும் கோவில், நாமக்கல் மாவட்டம், மோகனூருக்கு அருகே ஒரு கிலோமீட்டர் தொலைவில் குமரிபாளையம் கிராமத்தில் இருக்கிறது. இந்தக் கோவிலின் முன்பகுதியில் அழகிய பிரமாண்டமான இரண்டு குதிரை வாகனங்கள் உள்ளன. உள்புறத்தில் மேற்கு முகமாக பட்டமரத்தான் என்றழைக்கப்படும் நாவலடி கருப்பண்ணசாமி மூலஸ்தானம் பட்ட நாவல் மரத்தின் அடியில் ஒரு வடிவம் இல்லாத உருவாக சிறிய குழியில் உள்ளது.

    முற்காலத்தில் சிறிய பனை ஓலையால் வேய்ந்த குடிசையில் இருந்தது. தற்போது கட்டிடம் கட்டப்பட்டு புனரமைக்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இந்த சாமியின் அருகில் பட்டுப்போன வேம்பு மரம் இன்றும் காட்சி தருகிறது. நாவல் மரத்தடியில் அவதரித்த தெய்வம் என்பதால் நாவலடியான் என்ற பெயரில் இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். இதன் மேற்புறம் கிழக்கு முகமாக நாவலடியான் உற்சவர் மரத்தால் செய்யப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது.

    இந்த இரண்டிற்கும் மத்தியில் வடக்கு பார்த்த செல்லாண்டியம்மன் உருவச்சிலை உள்ளது. நாவலடியான் கோவிலில் கற்களால் உருவாக்கப்பட்ட நாய்கள் சிலைகளும் உள்ளன. சீமைத்துரை ஜட்ஜ் நாவலடியான், தமது வெண்குதிரை மீது ஏறி தம்மிடம் வந்து தமது குறைகளை கூறியும், கடிதங்கள் மூலம் புகார் கொடுத்துள்ள பக்தர்களின் குறையை தீர்க்கவும் அவர் வெளியே செல்லும் போது அவருடன் இந்த நாய்கள் உடன் செல்லும் என்றும் கூறுகிறார்கள். இந்த சீமைத்துரை ஜட்ஜின் கோவிலில் தலைவாசல் கோபுரம் அமைக்கும் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    தல வரலாறு :


    குறுநில மன்னர்கள் காலத்தில் மோகூர் என்றழைக்கப்பட்ட மோகனூர் குமரிபாளையத்தில், நாவலடியான் சுயம்புவாக தோன்றி உள்ளார். அந்த காலத்தில் விறலியர், கூத்தர், பாணர் என்று பலர் ஊரின் ஒதுக்கு புறமாக தங்கி தங்கள் திறமைகளை காட்டி மக்களிடம் பொருள் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். இவ்வாறு வந்த நாடோடிகள் இந்த பகுதியில் பசுவுடன் கட்டை வண்டியில் அங்கு வந்தனர். ஒரு நாள் காலையில் அவர்கள் அழைத்து வந்த பசுவை காணவில்லை. எனவே அந்த பசுவைத் தேடத் தொடங்கினர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள மணல் மேட்டை அடுத்துள்ள பள்ளமான இடத்தில், பசு நிற்பதைக் கண்டனர். அருகில் சென்று பார்த்த போது, பசுவின் மடியில் இருந்து தானாகவே பால் சொரிந்து கொண்டிருந்தது. பால் சுரக்கப்பட்ட பகுதியில் அரை அடி உயரம் கொண்ட வெண்ணிற பளிங்குக்கல் போல் ஒளி உமிழும் சுய உருவம் தோன்றியது. அந்த உருவத்திற்கு கீழ்புறம் நாவல் மரம் பெரியதாக காட்சியளித்தது. எனவே சுயம்புவாக தோன்றிய இறைவனை நாவலடியான் என்று அழைத்து வழிபட மக்கள் எண்ணினர்.



    அந்த பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் செல்லியம்மன் சிலை ஒன்றை கண்டெடுக்கப்பட்டது. அந்த சிலையும் இந்த ஆலயத்திலேயே வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. கருப்பண்ணசாமிக்கு அசைவ படையல் இருந்தாலும், அம்மனுக்கு சைவ படையல் என்ற அளவில் தனி சன்னிதியாக தான் பக்தர்களுக்கு அருள்பாலிக் கிறார். இந்த அம்மன் சன்னிதியில், கன்னிமார் எழுவர் சிலையும், ஒரே கல்லில் வரிசையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நீங்களும் ஜட்ஜ் சாமியிடம் மனு கொடுத்து உங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண இந்த கோவிலுக்கு வந்து சாமியின் அருளை பெற்று செல்லலாம்.

    மனு எழுதி வழிபாடு:

    நாவலடி கருப்பண்ணசாமி நீதிமான். எனவே இவரை ஜட்ஜ் என்று அழைப்பது பழைய கால வரலாறு. இதன் அடிப் படையில் பக்தர்கள் பிராது என்ற கோரிக்கை மனுவை எழுதி பூசாரிகள் மூலமாக நாவலடியான் பாதத்தில் வைத்து அதற்கான இடத்தில் கட்டுவது ஐதீகம். இந்த வழிபாட்டு முறை பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது.

    பக்தர்கள், தங்களது பிணி நீங்கவும், விவசாயம் செழிக்கவும், குழந்தை வரம், வராக்கடன் கிடைக்கவும் இத்தல இறைவனை வேண்டிக்கொள்கின்றனர். மேலும் முற்றுப்பெறாத நிலப்பிரச்சினை, நிலம், வீடு வாங்குவது, விற்பது தொடர்பான பிரச்சினைகள், வேலையின்மை, படிப்பு, திருமணம் என தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி சமர்ப்பிக்கின்றனர்.

    பக்தர்கள் இவ்வாறு சமர்ப்பித்த மனுக்கள், நாவல் மற்றும் வேப்ப மரத்தில் மலைபோல குவிந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலில் பூஜைகள் நடைபெறும். சிறப்பு பூஜையாக இரவு 12 மணிக்கு மேல் நாவலடியானுக்கு சத்திய பூஜை நடைபெறும். சத்திய பூஜைக்கு மல்லிகை, சம்பங்கி மலர்கள் பயன்படுத்தப்படும். சாமிக்கு செவ்வரளி, மல்லிகை, சம்பங்கி, செவ்வந்தி, ரோஜா போன்ற பூக்களால் மலர் பந்தலிட்டு வழிபாடு நடைபெறும்.

    மனு எழுதும் முறை :

    நாவலடியானிடம் தங்கள் குறைகளை கூறி மனு எழுதி கொடுக்க வருபவர்களும், களவுப்போன பொருட்கள் திரும்ப கிடைப்பதற்கும் இங்கு அது தொடர்பாக கோரிக்கைகளை மனுவாக எழுதி வைக்கிறார்கள்.

    கோவில் வளாகத்தில் மனுக்களை எழுதிட கோவில் லெட்டர் பேடில் வெள்ளைத்தாள்கள் மற்றும் மனு எழுத அட்டை மற்றும் அமர்ந்து எழுத இருக்கை வசதிகளும் உள்ளன. இந்த மனுவின் முடிவில், நீங்கள் நினைக்கும் காரியம் ஒரு மாதம் முதல் அல்லது 3 மாதத்திற்குள் கைகூடினால் சாமிக்கு என்ன காணிக்கை கொடுப்பீர்கள் என்பதை எழுத ஒரு வரி இடம் பெற்றுள்ளது.

    அதில், பெரும்பாலான பக்தர்கள் தங்கள் சக்திக்கு உட்பட்டு இயன்றதை தருவோம் என்று எழுதுகிறார்கள். சிலர் பணம், பொருளை குறிப்பிட்டும் எழுதுகிறார்கள். பின்னர் கோவில் முத்திரை குத்தப்பட்டு பக்தர்கள் அதை சாமி பாதத்தில் வைத்து வழிபட்டு மரத்தில் கட்டுகிறார்கள். அதேபோல் காரியம் கைகூடியவுடன் அவர்கள் காணிக்கை செலுத்த வருவதும் தொடர்கிறது என்பதை காணும் போது நாவலடியானின் மகிமை கண்கூடாக தெரிகிறது.
    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரில் பாமணி ஆற்றின் வடக்கு திசையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாமணி கிராமத்தில் அமிர்தநாயகி சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது
    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரில் பாமணி ஆற்றின் வடக்கு திசையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாமணி கிராமத்தில் அமிர்தநாயகி சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பினை உடையது. இந்தக் கோவில் ராகு, கேது தோஷ பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.

    காவிரியின் தென்கரை தலங்களில் 104-வது தலம். சுவாமி பாதாளத்தில் இருந்து சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருப்பதால் பாதாளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். நாகநாதசுவாமி, பாம்பணிநாதர், திருப்பாதாளேஸ்வரர், ஸ்ரீபதி விண்ணகர ஆழ்வார் என்ற சிறப்பு பெயர்களும் உண்டு. பொதுவாக சிவாலயங்களில் சுயம்பு லிங்கத்துக்கு வெள்ளிக்கவசம் சாற்றியே அபிஷேகம் நடக்கும். ஆனால் புற்று மண்ணால் ஆன நாகநாத சுவாமிக்கு நேரிடையாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தினமும் இருவேளை அபிஷேகம் நடைபெற்று வருவது இத்தலத்தின் தனிப்பெரும் மகிமையாகும். அம்பாள் திருநாமம் அமிர்தநாயகி.

    தல அமைப்பு :

    நாகநாதசுவாமி தனி சன்னிதியில் கிழக்கு நோக்கி பக்தர் களுக்கு தரிசனம் தருகிறார். வாசலில் வலதுபுறம் சுவாமியை வணங்கிய நிலையில் மனித முகமும், சர்ப்ப உடலுமாய் தனஞ்செய முனிவராக ஆதிசேஷன் காட்சியளிக்கிறார். கோஷ்டத்தில் சிறப்பு வாய்ந்த நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவராக அண்ணாமலையார், பிரம்மா, சண்டிகேஸ்வரர், விஷ்ணு, துர்க்கை, மும்மூர்த்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, கஜலட்சுமி, ஞானசரஸ்வதி, மேற்கு நோக்கிய சனீஸ்வரருடன் கூடிய காலபைரவர், நவக்கிரகங்கள், நால்வர் உள்ளனர்.

    இக்கோவில் விசேஷ அமைப்பின்படி சுவாமியை தரிசனம் செய்து நவக்கிரகங்களை வலம் வந்தால் ‘ஓம்’ என்ற ஓங்கார வடிவில் பக்தர்களின் தரிசன சுற்று முடிவடையும். பொதுவாக சிவாலயங்களில் அம்பாள் சன்னிதியை தாண்டிய பிறகே நவக்கிரகங்கள் அமைந்திருக்கும். இக்கோவிலின் விசேஷ அமைப்பின்படி இத்தலத்தில் அம்பாள் சன்னிதி தனியாக பலிபீடம் கொடி மரத்தின் அருகில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    தல வரலாறு :

    ஒரு காலத்தில் சுகல முனிவர் தன் தாயாரின் அஸ்தியை கரைப்பதற்காக காசியை நோக்கி தன் சீடனுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது மாலை நேரத்தில் முனிவர் இளைப்பாறும் பொருட்டு சீடனிடம் அஸ்தி கலசத்தை கொடுத்து விட்டு சென்றார். சீடன் அதை திறந்து பார்த்தபோது அஸ்தி கலசத்தில் தங்க பூக்களாக இருந்தது. உடனே பயந்து அதை மூடி வைத்து விட்டான். சுகல முனிவர் வந்து மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்து காசிக்கு சென்றார்.

    அங்கு கலசத்தில் அஸ்தியின் சாம்பலை பார்த்த சீடன் முன்பு நீங்கள் இளைப்பாறிய இடத்தில் கலசத்தில் தங்க பூக்கள்இருந்த விவரத்தை கூறினான். உடனே அவர் அதுவே காசியை விட புனிதமான இடம் என்று கூறி மீண்டும் அங்கு வந்து ருத்ர தீர்த்தம் என்று அழைக்கப்பட்ட தற்போது வெட்டு குளம் என்று அழைக்கப்படுகிற குளத்தின் கரையில் காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி ஆலயம் அமைத்து அக்குளத்திலேயே தனது தாயாரின் அஸ்தியையும் கரைத்து இங்கேயே தங்கி விட்டார்.

    அப்போது அவர் தனது குடிலில் ஒரு பசுவை வளர்த்து வந்தார். ஒரு நாள் மேயச் சென்ற பசு தன்னை அறியாமலேயே புற்றின் மீது பாலை சுரந்தது. தினமும் அவ்வாறே செய்து வந்தது. மேயச் சென்ற பசு ஏன் பாலை கொடுக்கவில்லை என்று எண்ணி ஒன்றும் புரியாமல் திகைத்தார். முனிவர் ஒருநாள் மேய்ச்சலுக்கு சென்ற பசுவை பின் தொடர்ந்து சென்றார். பசு புற்றின் மீது பால் சுரப்பதை கண்ட அவர், ஒரு தடியால் பசுவை அடித்தார்.

    பசு உடனே கோபமுற்று புற்றை முட்டியது. புற்று மூன்று பிளவாக பிளந்து உள்ளே இருந்த லிங்கம் வெளிப்பட்டது. பின்னர் பசு ஓடிச்சென்று தெற்கு திசையில் இருந்த குளத்தில் விழுந்து இறந்தது. உடனே சிவ பெருமான் ரிஷப வாகனத்தில் கயிலாய காட்சி கொடுத்து பசுவை உயிர்த்தெழ செய்தார். பின்னர் பசுவின் பால் அபிஷேகத்தால் நான் மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.

    உனக்கு என்ன வரம் வேண்டும் என்று பசுவிடம் கேட்டார். அதற்கு பசு, தன்னிடம் இருந்து கிடைக்கும் பொருட்கள் எல்லாம் சிவனுக்கே அர்ப்பணம் ஆக வேண்டும் என்று கேட்டது. பரமேஸ்வரனும் மிகவும் மகிழ்ந்து பசு கேட்ட வரத்தை கொடுத்தார். அன்று முதல் பசுவிடம் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவை பஞ்ச கவ்யம் என்றழைக்கப்பட்டு புனிதமான பொருட்களாக ஈசனுக்கு இன்றும் அபிஷேகத்துக்கு உகந்ததாக ஆனது. சுகல முனிவரும் தன் தவறை உணர்ந்து ஈசனை வணங்கி பெரும்பேறு பெற்றார்.



    ஆதிசேஷன் வழிபாடு :

    மகாவிஷ்ணு துயில் கொள்ளும் அஷ்ட நாகங்களான வாசுகி, கார்க்கோடகன், பத்மன், மகாபத்மன், சங்கன், சங்கபாலன், குளிகன், அனந்தன் ஆகிய அனைவருக்கும் தலைவரான ஆதிசேஷன் திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது உண்டான விஷத்தை ஈசன் உண்டதால் தனக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க வழி தேடினார். அப்போது பாதாளத்தில் இருந்து தோன்றிய பாதாளேஸ்வரரை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்று அசரீரி கேட்டது.

    ஆதிசேஷன் தனஞ்செய முனிவராக மனித முகம், சர்ப்ப உடலுடன் தோன்றி இத்தலத்திற்கு வந்து பசு முட்டியதால் உடைந்த இந்த லிங்கத்தை சேர்த்து வழிபட்டு தன் தோஷம் நீங்கப் பெற்றார். ஆதிசேஷனும், தனஞ்செய முனிவராக சுவாமியை வணங்கிய நிலையில் தனி சன்னிதியில் வீற்றிருந்து ராகு-கேது தோஷ நிவர்த்தி வழங்கு கிறார். இந்த விவரங்கள் தருவநாடி, சப்தரிஷி நாடி என்றழைக்கப்படும் நாடி ஜோதிட ஓலைச் சுவடிகளில் குறிப்பிட்டு தோஷ பரிகாரங்கள் செய்ய வழிபடச் சொல்கிறது.

    பாதாளத்தில் இருந்து சுயம்பு லிங்கமாக புற்று மண்ணால் ஆன சர்ப்ப புரீஸ்வரர் என்றழைக்கப்படும் நாகநாத சுவாமிக்கும், அம்பாள் அமிர்த நாயகிக்கும் அபிஷேக, ஆராதனை, பூஜைகள் செய்து வழிபட்டால் பூமியின் புதல்வனான செவ்வாயின் தோஷம் நீங்கும். முன் ஜென்ம வினையால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும் என தலபுராணம் கூறுகிறது.

    குழந்தை பாக்கியம் :

    சிவபெருமான் பார்வதி தேவியுடனும், குழந்தையான சுப்பிர மணியருடன் காட்சி தரும் கோலம் தான் சோமாஸ் கந்தர். இவர் தைப்பூச தினத்தன்று பாமணி ஆற்றில் தீர்த்தம் கொடுப்பார். இவருக்கு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அபிஷேகம், பூஜைகள் செய்து வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வரச் செய்து தரிசனம் செய்து நைவேத்திய பிரசாதத்தை வினியோகம் செய்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    திருவிழாக்கள் :

    இக்கோவிலில் வைகாசி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த விழாவில் 9 நாட்களும் சுவாமி, அம்பாள், சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். கடைசி நாள் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறும். தமிழ்ப்புத்தாண்டு, சித்ராபவுர்ணமி, ஆடிப்பூரம், ஆவணி மூலம், புரட்டாசி நவராத்திரி, மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மாசி மகம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் நடைபெறும். சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் அடுத்த மாதம் ( ஏப்ரல்) 2-ந் தேதி நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து வடக்கே 2 கிலோ மீட்டர் தூரத்தில் பாமணி ஆற்றின் வடபுறம் கோவில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் பஸ், ரெயிலில் சென்றால் 1 மணி நேரத்தில் கோவிலை அடையலாம்.

    பச்சை திராட்சை நிவேதனம்:

    தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற போரில் முசுகுந்த சக்கரவர்த்தி தேவர்களுக்கு ஆதரவாக சென்று அசுரர்களை போரிட்டு வென்றார். அதற்கு இந்திரன் தான் தினமும் பூஜித்து வந்த மரகத லிங்கத்தையும், கொடி முந்திரியையும் (திராட்சை) அவருக்கு பரிசாக வழங்கினான். அவர் அந்த லிங்கத்துடனும், திராட்சையுடனும் திருவாரூர் தியாகேசர் சன்னிதிக்கு வந்தார்.

    அப்போது திருப்பாதாளேசுவரத்தில் பிரம்மோற்சவம் நடப்பதால் அங்கு சென்று நிவேதனம் செய்வாயாக என்று அசரீரி கேட்டது. இதையடுத்து அவர் இங்கு வந்து திருப்பாதாளேஸ்வரரை பணிந்து திராட்சையை நிவேதனம் செய்தார். அதுமுதல் இங்கு கொடி முந்திரி எனப்படும் பச்சை திராட்சை சிறப்பு நிவேதனம் செய்யப்படுகிறது.

    மாம்பழச்சாறு அபிஷேகம் :

    திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது 4 மாங்கனிகள் தோன்றின. அதை எடுத்த பிரம்மன் ஒன்றை விநாயகருக்கும், மற்றொன்றை ஆறுமுகனுக்கும் கொடுத்தார். மூன்றாவது கனியை காஞ்சியில் முளைக்கும்படி ஊன்றிவிட்டு, நான்காவது கனியை இத்தலத்திற்கு கொண்டு வந்து நாகநாதசுவாமிக்கு சாறு பிழிந்து அபிஷேகம் செய்தார். பிறகு அதன் விதையை பிரம்ம தீர்த்தத்தின் வட கரையில் ஊன்றினார். இதனால் மாமரம் இத்தல விருட்சமாகிறது. இன்றும் நாகநாதருக்கு மாம்பழச்சாறு அபிஷேகம் நடப்பது விசேஷம். மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், நதி என ஐந்து வகையாலும் சிறப்பு பெற்றது இத்தலம் ஆகும்.
    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே ஆக்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த தாந்தோன்றியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே ஆக்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த தாந்தோன்றியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள அம்மனை வழிபட்டால், கேட்ட வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தன்னுடைய நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது கலப்பையில் ரத்தம் படர்ந்து வழிந்தது. இதனைக் கண்ட அந்த விவசாயி, அலறியபடி அங்கிருந்து ஊருக்குள் ஓடினார். பின்னர் ஊர் மக்களிடம் நடந்ததைக் கூறியதைத் தொடர்ந்து அனைவரும் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஓரிடத்தில் இருந்து ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. ரத்தம் வர என்னக் காரணம்? என்று நினைத்த மக்கள் அந்த இடத்தை தோண்டிப் பார்க்க முடிவு செய்தனர்.

    அந்த இடத்தை தோண்டி பார்த்த போது, அங்கு ஒரு அம்மன் கல் சிலை இருந்தது. அதில் இருந்து தான் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் செய்வதறியாது திகைத்தனர். அப்போது ஒரு பெண் அருள்வாக்கு கூறினாள். அவர், ‘இது சாதாரண கல் சிலை இல்லை. தெய்வ சக்தி படைத்த சிலை. நான் மக்களுக்காகவே, அவர்களின் குறைகளை தீர்ப்பதற்காகவே இங்கு தோன்றியிருக்கிறேன். என்னை வழிபடும் அனைவருக்கும் நான் நினைத்த காரியங்களை முடித்துக் கொடுப்பேன்’ என்றார்.



    இதையடுத்து அந்த அம்மன் சிலையை ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்தனர். பக்தர்களின் குறை தீர்ப்பதற்காக தானாகவே தோன்றியதால், அந்த அம்மனுக்கு ‘தான்தோன்றி அம்மன்’ என்று பெயர் வைத்து வழிபட்டனர். முதலில் சிறிய ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் மண்டபம், கோபுரம், மதில் சுவர் அமைத்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஆக்கூரில் தானாக தோன்றிய தாந்தோணி அம்மன், தோன்றிய நாள் முதல் மக்களுக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார். அம்மனிடம் வந்து பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், பக்தர்களின் குறைகள் தீர்வதுடன், அவர்களின் வாழ்க்கையில் சுகம், வசதி, மகிழ்ச்சி போன்றவை வந்தமைவதாக பக்தர்கள் பலரும் கூறுகின்றனர். இதனால் இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    பக்தர்கள் பலரும் தங்கள் வேண்டுதல் நிறைவேறிவிட்டால், இத்தல அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மக்கள் பலருக்கு இந்த அம்மன் குல தெய்வமாக உள்ளது. இதனால் பலரும் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை இந்த ஆலயத்தில் வைத்தே நடத்துகின்றனர். குறிப்பாக திருமண நிச்சயதார்த்தம், திருமணம் உள்ளிட்ட வைபவங்கள் ஏராளமாக நடைபெறுகின்றன. ஆரம்ப காலத்தில் தான்தோன்றி அம்மன் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த அம்மன், இப்போது தாந்தோணி அம்மன் என்று அழைக்கப்படுகிறார்.

    தற்போது இத்தல அம்மனுக்கு கோவில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. வருடந்தோறும் காணும் பொங்கல் அன்று, இத்தல அம்மனுக்கு பொங்கல் வைத்து பூஜை செய்வார்கள். அன்றைய தினம் தாந்தோணி அம்மன் சிறப்பான அலங்காரத்துடன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், செய்யாறில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
    கர்நாடக மாநிலம் வட கன்னட மாவட்டத்தில் உள்ள அரபிக் கடலை ஒட்டியே அமைந்திருக்கிறது முருதீசுவரர் திருக்கோவில். இந்த கோவிலின் வரலாற்றை பார்க்கலாம்.
    கர்நாடக மாநிலம் வட கன்னட மாவட்டத்தில் உள்ள பாத்கல் என்ற இடம் உள்ளது. இந்த நகரம் அரபிக் கடலோரத்தில் அமைந்திருக்கிறது. அந்த அரபிக் கடலை ஒட்டியே அமைந்திருக்கிறது முருதீசுவரர் திருக்கோவில். இந்த ஆலயம் பிரசித்தி பெற்ற ஆலயமாக திகழ்கிறது. இது ராமாயண காலத்து ஆலயம் என்று கூறப்படுகிறது. ராவணன் ஒருமுறை கயிலாயத்தில் இருந்து ஒரு சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு இலங்கை நோக்கிச் சென்றான்.

    வழியில் அவன் நீராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்போது அவன் கொண்டு சென்ற சிவலிங்கத்தை கீழே வைக்க விரும்பாமல், அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் கீழே வைக்காமல் பார்த்துக் கொள்ளும்படி கூறிச் சென்றான். அப்போது அந்தச் சிறுவன், ‘நான் மூன்று முறை உங்களை அழைப்பேன். அதற்குள் வரவில்லை என்றால், கீழே வைத்துவிடுவேன்’ என்று நிபந்தனை விதித்தான். அதை ஏற்றுக்கொண்ட ராவணன் நீராடச் சென்றான்.

    அந்தச் சிறுவன் வேண்டுமென்றே வேகமாக மூன்று முறை ராவணனை அழைத்து விட்டு, சிவலிங்கத்தை கீழே வைத்துவிட்டான். சத்தம் கேட்டு ஓடோடி வந்த ராவணன், சிவலிங்கம் கீழே இருப்பதைக் கண்டான். அதை தூக்க முயன்றபோது அவனால் இயலவில்லை.


    123 அடி உயரம் கொண்ட சிவபெருமானின் சிலை

    அவன் பலம் அனைத்தையும் திரட்டியும் சிவலிங்கத்தை அங்கிருந்து தூக்க முடியவில்லை. இதனால் வெகுண்ட ராவணன், அந்தச் சிறுவனை தண்டிக்க முயல, சிறுவன் முருகப்பெருமானாக மாறி காட்சியளித்து மறைந்தார். முருகப்பெருமானால் கீழே வைக்கப்பட்ட சிவலிங்கம் உள்ள தலமே இது என்று கூறப்படுகிறது.

    இந்தக் கோவில் கன்டுக்க மலையின் மீது, மூன்று புறமும் அரபிக்கடலின் நீர் சூழ அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் 237.5 அடி உயரம் கொண்டதாகும். சுமார் 20 மாடிகளை உடையது. கோபுரத்தின் உச்சிக்குச் செல்ல மின்தூக்கி உள்ளது. இது மிக உயரமான கோபுரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  

    கோவிலின் வெளியே 123 அடி உயரம் கொண்ட சிவபெருமானின் சிலை அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிவன் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். உலகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய சிலை இது என்று கூறப்படுகிறது. சிவனுக்கு எதிரில் நந்தி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஊரில் எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும், இந்தச் சிலை தெரிவது குறிப்பிடத்தக்கது. மலையின் அடிவாரத்தில் ராமேஸ்வரர் லிங்கம் இருக்கிறது. இதற்கு பக்தர்களே அபிஷேகம் செய்து வழிபடலாம். சிவன் சிலைக்கு அருகில் சனீசுவரன் கோவில் உள்ளது.

    மங்களூர் - கொங்கன் ரெயில் பாதையில், முருதீசுவரர் என்ற பெயரில் ரெயில் நிலையம் இருக்கிறது. இதில் இறங்கினால் முருதீசுவரர் கோவிலை அடையலாம்.
    நெல்லை மாவட்டத்தில் பொதிகை மலைச்சாரலை அடுத்துள்ள அம்பாசமுத்திரத்தில் இருந்து வடமேற்கில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிரம்மதேசம் என்ற ஊரில் அமைந்துள்ளது கயிலாசநாத சுவாமி கோவில்.
    நெல்லை மாவட்டத்தில் பொதிகை மலைச்சாரலை அடுத்துள்ள அம்பாசமுத்திரத்தில் இருந்து வடமேற்கில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பிரம்மதேசம் என்ற ஊர். இந்த ஊரின் நடுவில் அமைந்துள்ள கயிலாசநாத சுவாமி கோவில், சிற்பக்கலைகளை உலகிற்கு பறைசாற்றும் விதமாக திகழ்கிறது.

    பெயர்க் காரணம்:

    பிரம்மாவின் பேரனாகிய ரோமச முனிவர், இலந்தையடிநாதர் எனும் சிவ சுயம்புலிங்கத்தை இங்கு கண்டுபிடித்து முதன் முதலில் பூஜை செய்து வழிபட்டார். இதனால் பிரம்மனின் நினைவாக இந்த ஊருக்கு பிரம்மதேசம் என்ற பெயர் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    மற்றொன்று தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அப்போது அவன் இந்த பகுதிகளை கைப்பற்றி சோழ நாட்டோடு இணைய வைத்தான். இவ்வூர் அருகில் உள்ள திருவாலிநாதர் சுவாமி கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு இந்த ஊரில் கொலுவீற்றிருக்கும் கயிலாசநாதர், பிரஹந்நாயகி ஆகியோரின் அருளால் செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி கிடைத்தது. இதனால் மனம் மகிழ்ந்த மன்னன், இந்த ஊரை அந்தணர்களுக்கு காணிக்கையாக கொடுத்தான். நான்மறைகள் ஓதிய அந்தணர்களுக்கு மன்னர், மானியமாக வழங்கியதால் ‘ராஜராஜ சதுர்வேதி மங்கலம்’ அல்லது ‘பிரம்மதாயம்’ என பெயர் கொண்டு பின்னர் பிரம்மதாயம் என்பது ‘பிரம்மதேசம்’ என்று திரிவடைந்ததாக கூறப்படுகிறது.

    ஆலய அமைப்பு :


    ஏழு நிலை ராஜ கோபுரத்துடன் கயிலாயநாதர் கோவில் கம்பீரமாக நிற் கிறது. ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தால் வசந்த மண்டபம், நெல் குத்தும் பிறை என்ற ஒரு மிகப்பெரிய அறை ஆகியவற்றை காணலாம். அக்காலத்தில் ஊரில் உள்ள வயல்களில் விளையும் நெல் மூட்டைகள் அனைத்தும் கோவிலுக்கு சேகரிக்கப்படுமாம். கோவிலின் தினசரி நிவேதனங்களுக்கும், விழாக்காலங்களுக்கும், பஞ்ச காலத்திற்கும், போர்க் காலங்களிலும் மக்களுக்கு உணவளிக்க தேவைப்படும் அரிசி இந்த நெல்குத்தும் பிறையிலேயே கைக்குத்தலாக குத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    கோவிலின் உள்ளே நுழைந்ததும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி சிலை அனைவரையும் கவர்வதாக உள்ளது. இதனை அடுத்துள்ளது முகப்பு மண்டபம். மரத்தினால் செய்யப்பட்ட இந்த மண்டபத்தின் மேற்கூரை அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் கலையம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    இங்கிருந்து சில அடி தூரத்தில் திருவாதிரை மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் ஒரு தூணில் ராமர் அம்போடு மறைந்திருக்கும் காட்சியும், மற்றொரு தூணில் வாலியும், சுக்ரீவனும் சண்டையிடும் காட்சியும் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ராமர் சிலை செதுக்கப்பட்டுள்ள தூணில் இருந்து பார்த்தால் வாலி-சுக்ரீவன் செதுக்கப்பட்ட தூணும், அவர்களது உருவமும் நன்கு புலப்படும். அதே நேரம் வாலி-சுக்ரீவன் உருவம் பொறித்த தூணில் இருந்து பார்த்தால் ராமர் இருக்கும் தூண் தெரியாது.

    திருவாதிரை மண்டபத்தை அடுத்து புணுகு நடராஜர் சன்னிதி உள்ளது. வழக்கமாக நடராஜர் சிலை ஒரு சக்கர வட்டத்துக்குள்தான் செதுக்கப்படும். ஆனால் இங்கு ‘ஓம்’ என்ற பிரணவத்துக்குள் நடராஜர் வீற்றிருக்கிறார். மார்கழி மாதம் திருவாதிரை அன்று மட்டும்தான் இவருக்கு அபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் இவருக்கு வெறும் புணுகு காப்புதான்.

    தொடர்ந்து கருவறையில் மூலவரான கயிலாசநாதர் சன்னிதி இருக்கிறது. அதையடுத்து பிரஹந்நாயகி அம்பாள் சன்னிதி உள்ளது. இந்த அம்மனுக்கு புடவை சாத்துவதாக வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு விரைவில் நோய் நீங்கி விடுவதாக நம்பிக்கை. நோய் நீங்கி இந்த அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக சாத்திய புடவைகள் மலைபோல் குவிந்து கிடப்பதை காணலாம்.


    கயிலாச நாதர், பிரஹந்நாயகி

    இது தவிர முருகனுக்கு, சப்தமாதர்களுக்கு, வல்லப கணபதிக்கு என தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளன. இங்குள்ள தட்சிணாமூர்த்தி சற்றே வித்தியாசமானவராக காணப்படுகிறார். மற்ற கோவில்களில் உள்ள தட்சிணாமூர்த்தி, சின்முத்திரை காட்டியபடி அருள்பாலிப்பார். இங்குள்ள தட்சிணாமூர்த்தியோ, ஆத்ம வியாக்யமூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

    பத்ரவனேஸ்வரர் என்று அழைக்கப்படும் இலந்தையடிநாதருக்கு தனிச்சன்னிதி உள்ளது. இவர், பிள்ளைப்பேறு இல்லாத தம்பதிகள் வணங்கும் இஷ்ட தெய்வமாக விளங்குகிறார். இத்தலம் நவக்கிரகங்களில் சூரியனுக்கு உரிய தலமாகவும் விளங்குகிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இக்கோவிலில் நவக்கிரக சன்னிதியே கிடையாது என்பது தான்.

    சூரியன் வழிபடும் தலம் :


    தட்சிணாயனம், உத்தராயணம் என சூரியனின் பாதையை வைத்து இரு காலங்களாக பிரித்தார்கள். அதாவது உத்தராயணத்தில் வடமேற்கு திசையிலும், தட்சிணாயனத்தில் தென் மேற்கு திசையிலும் சூரிய பகவான் சஞ்சரிக்கிறார். இரு வேறு எதிர், எதிரான பாதைகள். ஆனால் இக்கோவிலில் இரு காலங்களிலும்(தட்சிணாயனம், உத்தராயணம்) சூரியன், கயிலாசநாதர் கருவறை வந்து தனது வெம்மையான கரங்களால் இறைவனை தழுவுகிறார். அந்த நேரத்தில் இத்தல இறைவனை வழிபட்டால் வேண்டியது அனைத்தும் நினைத்தபடி கிடைக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும்.

    இத்தலத்தில் சரஸ்வதிக்கும் தனி சன்னிதி இருக்கிறது. இங்கு தாமிரபரணி உத்தரவாகினியாக ஓடுகிறாள். அதாவது தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கோவிலை வலம் வந்து வணங்குகிறாள். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நதியில் தங்களது கால்களை நனைத்த பின்னரே கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். குழந்தைப்பேறு விரும்பி வரும் தம்பதியினர், இந்த ஆற்றில் குளித்த பின்னரே இலந்தையடிநாதரை தரிசிக்கச் செல்கிறார்கள்.

    ஆதி கயிலாயங்களில் முதன்மையானதாகவும், தென்மாவட்ட நவக்கிரக ஸ்தலங்களில் சூரியன் ஸ்தலமாகவும், பஞ்ச பீட ஸ்தலங்களில் கூர்ம பீடமாகவும் உள்ளது இக்கோவில். பிரம்ம தேசத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கடனா நதியானது தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கயிலாசநாதரை வலம் வருவதால் காசிக்கு சென்று சிவதரிசனம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் இங்கும் கிடைக்கும்.

    நாலாயிரத்தம்மன் :

    சோழர்கள் காலத்தில் இந்த ஊர் மிகப்புகழ் பெற்று விளங்கியது. மிகவும் வளமான ஊர் என்பதால் அடிக்கடி படையெடுப்புகளும், கள்வர்களின் தொந்தரவும் அதிகமாக இருந்தது. இதனால் இவ்வூர் மக்களின் பாதுகாப்புக்கென ராஜராஜ சோழன் தன்னுடைய படைவீரர்கள் நாலாயிரம் பேரை, இங்கு காவல் வைத்திருந்தான். இந்த காவல் வீரர்கள் வழிபட்ட துர்க்கைக்கு, நாலாயிரத்தம்மன் என்று பெயர். இன்றும்கூட நாலாயிரத்தம்மன் கோவில் கயிலாசநாதர் கோவிலை ஒட்டியே காணப்படுகிறது. ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் நாலாயிரத்தம்மன், பஞ்சம், நோய், திருடர் பயம் போன்றவற்றில் இருந்து தங்களைக் காப்பதாக இந்த ஊர் மக்கள் நம்புகின்றனர்.

    திருவிழாக்கள் :

    இக்கோவிலில் பங்குனி உத்திர திரு விழாவும், ஐப்பசி திருக்கல்யாண விழாவும், பவித்ரோத்சவம், வசந்த திருவிழா ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சிவராத்திரி போன்ற விழாக்களும், தினசரி பூஜைகளும் நடந்து வருகிறது.

    இக்கோவிலில் மார்ச் மாதம் 25-ந் தேதி (சனிக்கிழமை) லட்சத்து எட்டு தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், 2017-ம் ஆண்டின் முதல் மகாபிரதோஷ வழிபாடும் நடக்கிறது. அன்று 1008 செவ்விள நீரால் சுவாமி, அம்பாள் மற்றும் நந்திகேஸ்வரருக்கு அபிஷேகமும், ஆயிரக்கணக்கான தாமரை, செண்பகம், மனோரஞ்சித மலர்களால் மட்டும் அலங்காரமும் செய்யப்பட உள்ளது. இந்த நாளில் அனைவரும் இவ்வாலயத்திற்கு சென்று பிரஹந்நாயகி அம்பாள் சமேத கயிலாச நாதரை வழிபட்டு அவர்களின் அருளை பெறுவோமாக!

    திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் வந்து அங்கிருந்து மினி பஸ் மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

    திருமால் வாமன அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்த போது தனது திருவடி சதங்கையில் இருந்து உருவாக்கிய சிலம்பாறு இங்கு உண்டானதாக புராணம் கூறுகிறது.
    மூலவர்  -  வைஷ்ணவ நம்பி
    தாயார்  -  குறுங்குடிவல்லி நாச்சியார்
    தீர்த்தம்  -  திருப்பாற்கடல், பஞ்சதுறை
    பழமை  -  1000-2000 வருடங்களுக்கு முன்
    ஊர்  -  திருக்குறுங்குடி
    மாவட்டம்  -  திருநெல்வேலி
    மாநிலம்  -  தமிழ்நாடு

    கோவில் வரலாறு :

    ஒரு சமயம் இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல முயல்கிறான். அப்போது விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்கிறார். அப்போது பூமித்தாய் இந்த பூமியிலுள்ள ஜீவராசிகள் பகவானை அடைய வழி கூறுங்கள் என வராகமூர்த்தியிடம் கேட்க, இசையால் இறைவனை அடையலாம் என்கிறார். ஒரு முறை பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மனிதனுக்கும், பூதம் ஒன்றிற்கும் பிரச்சனை ஏற்படுகிறது.

    பிரச்சனை முற்றி மனிதனைச் சாப்பிட பூதம் விரும்புகிறது. அதற்கு அந்த மனிதன் பூதத்திடம், இன்று ஏகாதசி. எனவே கைசிகம் என்ற விருத்தத்தில் பகவானை பாடிவிட்டு வருகிறேன். அதன்பின் நீ என்னை உண்ணலாம் என்று கூறுகிறான். ஏகாதசி தினத்தில் இத்தலத்தில் பாடியதால் அந்த மனிதனுக்கும், பாடலை கேட்டதால் பூதத்திற்கும் மோட்சம் கிடைத்தது.

    திருக்குறுங்குடியின் அருகே உள்ள மகேந்திரகிரி மலையடிவாரத்தில் வசித்து வந்த தாழ்ந்த வகுப்பை சேர்ந்தவர் நம்பாடுவான். கோயில் மூலவரான அழகிய நம்பியைப் பார்க்க முடியாததற்காக மிகவும் வருத்தப்பட்டார். அப்போது பெருமாள் கொடிமரத்தை விலகி இருக்க சொல்லி நம்பாடுவானுக்குத் தாமே தரிசனம் தந்தார். இங்கு மற்ற கோயில்களைப் போலல்லாமல் கொடிமரம் விலகி இருப்பதை நாம் இப்போதும் காணலாம்.

    சைவ கோயில்களில் பெருமாள் எழுந்தருளி இருப்பதும், வைணவ கோயில்களில் சிவன் எழுந்தருளி இருப்பதும் சைவ-வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும். அதே போல் வைணவக் கோயிலான இங்கு கோயிலின் உள்ளேயே சிவன் கோயிலும், பைரவர் சன்னதியும் அமைந்துள்ளது.

    கோயில் மூலவரான அழகிய நம்பிக்குப் பூஜை நடக்கும் போது, இங்குள்ள சிவனுக்கும் பூஜை நடந்து விட்டதா என்பதை அறிய,”சுவாமியின் பக்கத்தில் நிற்கும் அன்பர்க்கு குறையேதும் உண்டா” என்று பட்டர் கேட்பார். அதற்கு “குறை ஒன்றும் இல்லை” என பட்டர்கள் பதில் அளிப்பார்கள். இது இன்றும் நடைமுறையில் உள்ளது. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார் என நான்கு நாயன்மார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.



    நம்மாழ்வாராக அவதரித்ததும் இந்த அழகிய நம்பி தான். திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கப் பெருமாளிடம் மோட்சம் கேட்டபோது,”திருக்குறுங்குடி போ. அங்கு மோட்சம் கிடைக்கும்” என்றார். திருமங்கையாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்தது இத்தலம் தான். நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் காட்சி தருகிறார். குரங்கம் என்றால் பூமாதேவி. பூமாதேவி இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு குரங்கச் க்ஷேத்திரம் என்ற பெயர் உண்டு.

    நம்பியாற்றின் கரையில் அமைந்திருக்கும் இத்தலத்தின் தீர்த்தம் திருப்பாற்கடல். வராக அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது பயங்கர வராக ரூபத்தைக் குறுங்கச் செய்தமையால் இத்தலம் “குறுங்குடி” ஆனது. அதேபோல் திருமால் வாமன அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்த போது தனது திருவடி சதங்கையில் இருந்து உருவாக்கிய சிலம்பாறு இங்கு உண்டானதாக புராணம் கூறுகிறது.

    பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று.

    இங்கு மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் பஞ்சகேத விமானம்.

    திருவிழா :

    சித்திரை வசந்தோற்சவம், வைகாசி ஜேஷ்டாபிஷேகம், ஆவணி பவித்ர உற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி ஊஞ்சல் உற்சவம், தை தெப்ப உற்சவம். பங்குனி பிரம்மோத்சவம்.

    பிரார்த்தனை :

    மோட்சம் வேண்டி இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

    நேர்த்திக்கடன் :

    தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்படுகிறது.

    போக்குவரத்து வசதி :

    திருநெல்வேலியிலிருந்து மேற்கு திசையில் 42 கி.மீ தூரத்தில் உள்ளது திருக்குறுங்குடி. திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்சில் வள்ளியூர் சென்று, அங்கிருந்து திருக்குறுங்குடி செல்லலாம்.

    அருகிலுள்ள ரெயில் நிலையம் : வள்ளியூர்

    அருகிலுள்ள விமான நிலையம்: தூத்துக்குடி
    கோவை மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில்... மேற்கே பதினெட்டு கி.மீ. தூரத்தில் செஞ்சேரி மலை அமைந்துள்ளது.
    முருகக்கடவுளை நினைத்து... மனமுருகப் பிரார்த்திக்கும்போது... உதடுகள் உச்சரிக்கிற எளிய சொற்களுக்கு கூட மந்திரசக்தி உண்டாகி விடும்! அதற்கு முழு முதற் காரணமாக இருப்பது அந்த இறைவனின் திருநாமத்தில் நிறைந்திருக்கிற மகிமையும், அருளுமேயாகும்! தனது பெயரையே மந்திரசால மூர்த்தியாக கொண்டு முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள செஞ்சேரி மலைக்கு நாம் சென்று வரலாமா...!

    கோவை மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில்... மேற்கே பதினெட்டு கி.மீ. தூரத்தில் செஞ்சேரி மலை அமைந்துள்ளது. சூலூரில் இருந்து சுல்தான்பேட்டை வழியாகவும் இந்த மலைக்கு செல்ல பாதை வசதி உண்டு.

    ‘தென்சேரி கிரி’ என்று பழம்பெயர் கொண்ட இத்திருத்தலமானது முருகக்கடவுள் அருள் புரியும் தலங்களில் முக்கியமானது. ‘மந்திரகிரி’ எனவும் இம்மலைக்கு சிறப்பு பெயர் குறிக்கப்படுகிறது. இங்கு கோயில் கொண்டிருக்கிற ஆறுமுகப்பெருமான் ‘மந்திராசல வேலாயுதமூர்த்தி’யாக விளங்குகிறார். தன்னை நினைப்பவரை காப்பாற்றும் மலை (மந்+திர+கிரி=மந்திரகிரி) என்றும் மூலவரான இறைவனுக்கு மந்திராசல மூர்த்தி என்றும் திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன.

    அடிவாரத்தில் மலைப்பாளையம் என்னும் ஊர் உள்ளது. இங்கிருந்து நூற்று ஐம்பது அடி உயரத்தில்தான் கோயில் அமைந்துள்ளது என்பதால் மிக எளிதில் சென்று விடலாம்.

    அடிவாரத்திற்கு சற்று மேலே... சந்தன வினாயகர் காட்சி தருகிறார். தனது தோற்றத்தினாலேயே உள்ளங்களில் குளிர்ச்சியை உண்டுபண்ணக்கூடிய இவர், சந்தனக் குளுமையாய்... இங்கே மணம் நிறைய வீற்றிருக்கிறார். அதிலிருந்து இன்னும் கொஞ்சம் சென்றதும்... இடும்பனைத் தரிசிக்கிறோம்.

    உச்சியில் கிழக்கு நோக்கி மந்திரகிரி வேலாயுத சுவாமியின் திருக்கோயில் துலங்குகிறது. கோவிலின் உள்ளே மூலவர் அழகுத் திருக்கோலமாய் விளங்ககிறார். ஆறுமுகத்துடன் வள்ளி தெய்வானை சமேதராய்க் காட்சி அளிக்கும்... அந்த அருட்பிரவாகத்தை மனமார வழிபடுகிறோம். இங்கேயுள்ள தனிச்சிறப்பு இவரின் ஆறுமுகங்களையும் ஒருசேர நாம் காணமுடிகின்ற ஒன்றாகும். மேலும் மயில் வாகனமானது இடதுபக்கம் தலையை வைத்திருக்கிற காட்சியையும் பார்க்க முடிகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள முருகப் பெருமான் திருத்தலங்களில் சிலவற்றில் மட்டுமே இந்த தனித்துவத்தை நாம் காண இயலும்! விண்ணில் மேகங்கள் குவிந்தால்... விரிந்தாடுகிற தோகையென எண்ணமெல்லாம்... இந்த இறைஇவனின் திருமேனியில் குவிந்து விடுகிறது...! உள்ளமோ -  வண்ண மயிலாக எழுந்து ஆடுகிறது.
    இடது பக்கத்து கரத்தில் சேவற்கொடிக்கு பதிலாக, சேவலையே கொண்டுள்ளவர் இந்த செஞ்சேரி மலை இறைவன், அருணகிரிநாதரின் பக்தியுள்ளம் இந்த எழிற்கோலத்தை கண்டு பரவசமடைந்திருக்கிறது.

    அருணகிரியார் தனது பயணத்தின்பாது இங்கு வழிபாட்டை முடித்த பின்னர் மேற்குத்திசையிலுள்ள பொன்மலைக்கு சென்றிருக்கிறார் என்றும் அறியப்படுகிறது.

    கர்ப்பக்கிரக முன்வாசல் மண்டபத்தின் இருபுறமும் கல்வெட்டுக்கள் சில உள்ளன. தலவிரு)ட்சமாக ‘கருநொச்சி’ உள்ளது. கர்ப்பக் கிரகத்தின் வெளியே உள்ள அர்த்த மண்டபத்தில் கிழக்கு நோக்கி வலதுபுறத்தில் வினாயகரும், பிரகநாயகியம்மையும், இடது புறத்தில்... கைலாயநாதரும் காட்சி அளிக்கின்றனர்.



    சுற்று வட்டாரத்து மக்கள் தங்களின் எதிர்காலப் பலன்கள் குறித்தும், துவங்கவிருக்கும் காரியங்கள் செவ்வனே நிறைவேற வேண்டும் என்பது குறித்தும் இந்த செவ்வேள் கந்தனின் கோயிலில் ‘பூக்கேட்டல்’ என்னும்ட வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

    ஆறுமுகப் பெருமானின் திருக்கரங்களில் வலக்கையில் ஒன்றும், இடக்கையில் ஒன்றும் என பூக்களை வைக்கின்றனர். ஐந்து நிமிடங்களுக்குள் வலக்கையில் இருந்து பூ விழுமாயின், எண்ணி வந்த காரியம் ஜெயமாகும் எனவும்... இடக்கையில் இருந்து பூவிழுமாயின் அந்த காரியத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் நேரம் கடந்தும் பூ விழவில்லை என்றால் காலதாமதமாகும் எனவும் அர்த்தங்கள் இதற்கு இருக்கின்றன.

    திருக்கோவிலின் வடபக்கத்தில் ‘சயிலோதகம்’ எனப்படும் ஞானதீர்த்தம், சுனை வடிவத்தில் காணப்படுகிறது. எந்த சூழலிலும் இந்த சுனை வற்றாமலிருப்பது சிறப்புக்குரியது. அபிஷேகத்திற்கும், பூஜைக்கும் இந்த நீரையே பயன்படுத்துகின்றனர்.

    தினமும் நான்கு காலப் பூஜைகளும், வைகாசி விசாகம், ஐப்பசி கந்தர்சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற சமயங்களில் சிறப்பு பூஜைகளும், விழாக்களுமாக இங்கு நிகழ்கின்றன. தையில் நடக்ஙகும் பிரம்மோற்சவமும், தேர்த் திருவிழாவும் மிகுதியான பக்தர்களை இங்கு வரவழைக்கின்றன. செஞ்சேரி மலைக்கு மேற்கே ஒரு கி.மீ. தூரத்தில் விண்டுமலை உள்ளது. இதனை சக்தியின் வடிவமாகக்கருதி ‘சக்திகிரி’ என்று அழைக்கின்றனர். திருமால் நினற திருக்கோளத்தில் இங்கு விளங்குகிறார்.

    தேவர்களைக் காப்பதற்காக, சூரபத்மனையும், அவனைத் தலைவனாகக் கொண்டிருக்கும் அசுரர்களையும் அழிக்க வேண்டிய சூழல் உருவானது. இதற்காகவே முருகக்கடவுள் தோன்றினார் என்பது பரவலாக அறியப்பட்டிருக்கும் வரலாறு. இந்த முருகனுக்குத் துணையாக பரமசிவன்... வீரபாகுவை அனுப்பினார். பார்வதியோ சக்திவேலினைத் தந்தார்.

    ஒரு கைக்கு சக்திவேலும், மீதமுள்ள பதினோரு கைகளுக்குப் பதினோரு ஆயுதங்களும் முருகப் பெருமானுக்கு தன் தாயாரால் இவ்விதம் வழங்கப்பட்ட பிறகு சூரபத்மனின் மாயச் சக்திகளில் இருந்து மீண்டு வர மந்திர உபதேசமும் செய்து வைக்கப்பட்டது. பார்வதிதேவியின் வேண்டுகோளுக்கேற்ப, பரமசிவனார்... முருகப் பெருமானை நோக்கி ‘‘நீ போகிற வழியில் பேரருளால்... மலையின் வடிவமாக யாம் உள்ளோம். உன் தாயின் வடிவமாக சக்திகிரி அங்கே தென்படும்.

    அந்தக் கிரியில் சென்று ஒரு தினம் சிவந்தனையோடு தவம் செய்வாயா! அங்கே வந்து மந்திர உபதேசத்தை உனக்குப் செய்தருளுகிறோம்’’ எனக் கூறினார்.
    அதன்படியே தவத்தை மேற்கொண்ட முருகனின் திருச்செவிகளில் மூந்திரத்தை உரைத்து சூரபத்மனை வென்றுவர தந்தையார் கட்டளையிட்டார். அப்படி அவர் கட்டளையிட்டது இந்த மலையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பொருட்டே இந்த மலை ‘மந்திராசலம்’ எனப் பெயர் பெற்றது.

    இந்த மலையின் குகையன்றில் யோக நிலையில் போகர் சிலகாலம் இருந்தார். அகத்தியர், வாமதேவர் முதலானோர் ஆசிரமம் அமைத்து அடிவாரத்தில் தங்கியிருந்தனர். பிரம்மன் தனது பாவம் நீங்க இங்கே நோன்பு மேற்கொண்டிருந்தான். போர் முடிந்து சூரனை வெற்றி கொண்ட நிலையில் திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை மணம் முடித்துக் கொண்டு திரும்பி வரும்பொழுது முருகப் பெருமான் இங்கே தங்கினார் என்பவனை எல்லாம் தலபுராணத்திலிருந்து நமக்கு அறியக் கிடைக்கின்றன.
    திருமண விழாக்கள் நடத்த உகந்த இடம், சகல தோஷங்களையும் போக்கியருளும் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, சென்னை வேளச்சேரி தண்டீசுவரர் திருக்கோவில்.
    தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
    வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
    இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
    அம்மையினும் துணை அஞ்சுஎழுத்துமே

    - பஞ்சாக்கரத் திருப்பதிகம்

    வேதங்கள் வழிபட்டு புனிதம் அடைந்த தலம், எமதர்மன் பேறு பெற்ற கோவில், பல்லவர்கள், சோழர்கள் திருப்பணி செய்த ஆலயம், மணி விழா உள்ளிட்ட திருமண விழாக்கள் நடத்த உகந்த இடம், சகல தோஷங்களையும் போக்கியருளும் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, சென்னை வேளச்சேரி தண்டீசுவரர் திருக்கோவில்.

    புராண வரலாறு :

    சோமுகன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து பல அரிய வரங்களைப் பெற்றான். அதனால் ஏற்பட்ட அகந்தையால், அவன் பிரம்மாவின் சத்தியலோகம் சென்று, நான்கு வேதங்களையும் கவர்ந்துசென்றான். அந்த வேதங்களை ஆழ்கடலுக்குள் ஒளித்து வைத்தான். இதனால் வேள்விகள் நின்று போனது. கவலையடைந்த தேவர்கள், திருமாலிடம் சென்று முறையிட்டனர். வேதங்களை மீட்பதற்காக திருமால், மச்ச (மீன்) அவதாரம் எடுத்து காஞ்சீபுரம் வந்தார்.

    அங்கே தீர்த்தக்கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்னர் மச்ச அவதாரத்திலேயே கடலுக்குள் சென்று, சோமுகாசுரனையும், அவன் ஒளிந்து கொள்ள இடம் அளித்த சங்கு உருவம் கொண்டிருந்த பாஞ்சசனையும் கொன்றார். பின்னர் பாஞ்சசன் எலும்பை தனதாக்கிக்கொண்டார். வேதங்களை மீண்டு தேவர்களிடம் கொடுத்தார். காஞ்சியில் திருமால் வழிபட்ட தலம் ‘மச்சேசர் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.

    புனிதம் பெற்ற வேதங்கள் :

    அசுரனிடம் இருந்ததால் மாசுபட்டதாக கருதப்பட்ட வேதங்கள், தங்களைப் புனிதப்படுத்திக்கொள்வதற்காக பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மாவின் ஆலோசனைப்படி இன்றைய சென்னை திருவான்மியூர் அருகே சோலைகளில் நிறைந்த இடத்தில் தவக்குடில் ஒன்று அமைத்து சிவலிங்கம் நிறுவி வேதங்கள் வழிபட்டு வந்தன. மேலும் திருவான்மியூரில் அமர்ந்துள்ள மருந்தீசுவரரையும் வழிபட்டு வந்தன. வேதங்களின் வழிபாட்டில் மகிழ்வுற்ற சிவபெருமான், அவர்கள் முன்பாக தோன்றி வேதங்களுக்கு அருளாசி வழங்கினார். இதனால் வேதங்கள் மீண்டும் புனிதமாயின. வேதங்கள் தவக்குடில் அமைத்து வழிபட்ட இடம் ‘வேதஸ்சிரேணி. இதுவே நாளடைவில் மருவி வேளச்சேரி என்றானதாக கூறப்படுகிறது.

    எமனுக்கு அருளல் :

    துவாபர யுகத்தில் தோன்றிய மார்க்கண்டேயனுக்குப் பதினாறு வயதில் ஆயுள் முடியும் என்று விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தருணத்தில் மார்க்கண்டேயன், திருக்கடவூர் இறைவனை கட்டித் தழுவியபடி இருந்தான். அவனது உயிரை பறிக்க வந்த எமன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. இதனால் கோபம் கொண்ட இறைவன், தன் காலால் எமனை எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தார்.

    எமன் இல்லாமல் பூமியின் பாரம் அதிகரித்தது. இதனால் பூமாதேவி கலக்கமுற்றாள். இதனையறிந்த இறைவன் எமனை உயிர்ப்பித்தார். மீண்டும் உயிர்பெற்ற எமதர்மன், நாரதரின் ஆலோசனைப்படி இத்தலத்தில் (வேளச்சேரி) சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டான். பிறகு ஆலயத்திருப்பணி, திருவிழாக்கள் நடத்தினான். அதன் பலனால், தன் இயல்புநிலையைத் திரும்பப் பெற்றான் என்று தலபுராணம் கூறுகிறது.

    ஆலய அமைப்பு :

    இந்த ஆலயம் கிழக்கு, மேற்கு, தெற்கு என மூன்று வாசல்கள் உள்ளன. என்றாலும், தெற்கு வாசலே புழக்கத்தில் உள்ளது. எளிய ஐந்துநிலை ராஜகோபுரம் தெற்கு வாசலில் அமைந்துள்ளது. நேரே அன்னை கருணாம்பிகை நம்மை வரவேற்க, அருகே கிழக்கு முகமாய் மூலவர் தண்டீசுவரர் காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் நர்த்தன விநாயகர், உற்குடியாசன தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவரர் வீற்றிருக்கின்றனர். இதே சுற்றில் கணபதி, வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணியர், லட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி சன்னிதிகள் உள்ளன.

    வெளிப்பிரகாரத்தில் அறுபத்துமூவர், வைத்தீசுவரர், சொக்கநாதர், மீனாட்சி, நவக்கிரகம், நாகர், தலமரமான வில்வம், கொடிமரம், பலிபீடம், நந்தி அருகே விநாயகர், முருகன் ஆகியோர் அமைந்துள்ளனர். இந்து சமய அறநிலையத் துறையினால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.



    இறைவன் தண்டீசுவரன் :

    கிழக்கு முகமாய் எளிய வடிவில்அருளாசி வழங்கும் மூலவர், தண்டீசுவரர் என அழைக்கப்படுகின்றார். இவரே கல்வெட்டுகளில் திருத்தண்டீஸ்வரமுடைய மகாதேவர் என வழங்கப்படுகிறார். இவரின் பழமையான பெயர் தண்டபாணீஸ்வரர் என்பதாகும்.

    எமன் சிவபூஜை செய்ய, தனது தண்டத்தை இங்கு ஊன்றி பூஜை செய்ததாகவும், பூஜை முடித்து, தண்டத்தை எடுக்க இயலாததால், அங்கேயே விட்டு விட்டதன் காரணமாக, இறைவன் தண்டீசுவரரானதாகத் தலபுராணம் கூறுகிறது. வேதங்கள் நிறுவி வழிபட்ட சிவனும் இவரே ஆவார். இவரே நமது தோஷங்களையும் நீங்கி நிம்மதி தருபவர். இறப்பின் பயம் நீங்கி இன்பம் அளிப்பவர். தண்டபாணி ஈஸ்வரர் என பழங் காலத்தில் அழைக்கப்பட்ட இவர் இப்போது தண்டீசுவரர் என மருவி வழங்கப்படுகிறார்.

    இறைவி கருணாம்பிகை :

    தெற்கு நோக்கிய நின்ற கோல அம்மனாக நான்கு கரங் களுடன் அருளாசி வழங்குபவள் அன்னை கருணாம்பிகை. திருவான்மியூர் மருந்தீசுவரருக்குத் துணையாகத் திரிபுரசுந்தரி இருப்பதைப் போல, தண்டீசுவரருக்கு ஒரு துணையை உருவாக்க விரும்பிய அப்பைய தீட்சிதர், ஸ்ரீசக்கரத்துடன் நிறுவிய தெய்வமே, கருணாம்பிகை என தலவரலாறு கூறுகிறது.

    அப்பைய தீட்சிதர் :

    வேலூர் மாவட்டம், ஆரணி அருகே, அடையபலம் என்ற தலத்தில் தோன்றியவர் அப்பைய தீட்சிதர். வேலூரை ஆட்சி செய்த விஜயநகர மன்னன் காலத்தில் புகழ்பெற்ற அறிஞராகப் போற்றப்பட்டவர். வேளச்சேரியில் தங்கியிருந்து, நாள்தோறும் திருவான்மியூர் இறைவனையும் ஒரு சேர வணங்கி வழிபட்டவர். இவரின் வழிபாட்டில் மயங்கி மருந்தீசன், கிழக்குநோக்கிய தன் திசையை மாற்றி, மேற்கு முகமாய் காட்சி தந்து அருளினார்.

    ஆலயச் சிறப்புகள் :

    வேதங்களுக்கு தோஷங்கள் நீக்கி பரிசுத்தம் அளித்தது போல, அடியார்களுக்கும் சகல தோஷங்கள் நீக்கும் தலமாக இது விளங்குகிறது. எமனுக்கு அருள் வழங்கியதால், இங்கு வந்து வழிபடுவோர் இறப்பு குறித்த பயம் நீங்கப்பெறுவர். சரஸ்வதிக்குத் தனிச் சன்னிதி கொண்டதும், தட்சிணாமூர்த்தி உற்குடியாசனத்தில் காட்சி தருவதும், இறைவனும், கொடிமர நந்தீசுவரரும் தலை சாய்த்து அமைந்திருப்பதும் இந்த ஆலயத்தின் தனிச் சிறப்புகளாகும். புராண வரலாற்றின்படி வேளச்சேரி, திருவான்மியூர் தலத்தை ஒரு சேர வழிபட்டால் பூரண பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

    இவ்வாலயத்தின் தலமரம் வில்வம். தலத்தீர்த்தம், ஆலயத்திற்கு மேற்கே அமைந்துள்ள எமன் உருவாக்கிய திருக்குளம். இது எம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு சிவகங்கை திருக்குளம் என்ற பெயரும் உண்டு.

    விழாக்கள் :

    தமிழ்ப் புத்தாண்டு, சித்திராப் பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், பங்குனி உத்திரம் மற்றும் மாதக் கிருத்திகை, பிரதோஷங்களும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி, (வெள்ளிக் கிழமை நண்பகல் 12 மணி வரை), மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை சுவாமியை தரிசனம் செய்யலாம்.

    அமைவிடம் :

    சென்னை மாநகரில், சைதாப்பேட்டைக்குத் தெற்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. தென்சென்னையின் முக்கியப் பகுதியான வேளச்சேரிக்கு, ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. சென்னை கடற்கரை - வேளச்சேரி மெட்ரோ ரெயில் வசதியும் உள்ளது.
    திருமணமாகாத பெண்கள் ஆளுடையார் திருக்கோவிலுக்கு வந்து இறைவனை வேண்டி அபிஷேகம் செய்தால், அவர்கள் விருப்பம் நிறைவேறி அவர்களுக்கு நல்ல கணவன் அமைவதாக நம்பிக்கை நிலவுகிறது.
    ராவணனின் சகோதர முறையான கரன் என்பவன், தவம் செய்வதற்காக ஒரு சிவன் கோவிலைக் கட்ட திட்டமிட்டான். விச்சிரவசுவுக்கு, சாகையிடத்துப் பிறந்த மூன்று புதல்வர்களுள் மூத்தவன் இவன். இவனது சகோதரர்கள் தூஷணன், திரிசரன். கரன் ஜனஸ்தானத்தில் சேனாதிபதியாய் இருந்தான். திரிசரன் திருச்சியை அரசாண்ட போது, கரன் ஒரு சிவன் கோவிலைக் கட்டி முடித்தான். அதுவே திருச்சி உய்கொண்டான் திருமலையில் உள்ள ஆளுடையார் திருக்கோவில் என்கிறது, தல வரலாறு.

    ஆலய அமைப்பு :

    இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உயரமான மலையின் மேல் அமைந்துள்ளது இந்த ஆலயம். முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம் உள்ளது. நடுவே பிரமாண்டமான நந்தி மண்டபமும், இடது புறம் ஆஞ்சநேயர் சன்னிதியும் காணப்படுகின்றன. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறை நுழைவாயிலின் இடதுபுறம் விநாயகர் அருள்பாலிக்கிறார். உள்ளே கருவறையில் இறைவன் ஆளுடையார் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி வீற்றிருக்கிறார். இறைவனின் திருமேனி பிரமாண்டமாக, மிகப் பெரிய அளவில் 8½ அடி உயரத்தில், அழகிய திருக்கோலத்துடன் அமைந்துள்ளதைக் காணும் போது நம் மேனி சிலிர்ப்பதை தவிர்க்க இயலாது.

    இறைவனின் தேவக் கோட்டத்தின் தெற்கில் தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் பெரு மாளும் தெற்கில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். விஷ்ணு துர்க்கையின் எதிரே சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது.

    முன்பு இந்தப் பகுதி வனமாக, குடியிருப்புகள் அதிக இல்லாத இடமாக இருந்துள்ளது. அப்போது கோவில் கருவறைக்குள் பாம்புகள் கூட்டமாக வந்து லிங்கத் திருமேனியின் மீது ஏறும் நிகழ்வுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பாவங்களில் இருந்து மீள்வதற்காக நாகர்கள் நடத்தும் வழிபாடு இது என்று கூறுகிறார்கள். இப்போது பாம்புக் கூட்டம் வருவதில்லை என்றாலும், அர்ச்ச கரின் வருகையை, ஆட்கள் வரும் ஓசையை கேட்டதும், பாம்பு வெளியேறுவதை பார்த்திருப்பதாக பக்தர்கள் தெரிவிக் கின்றனர்.

    ராஜராஜனின் மனைவி :

    இந்த ஆலயத்தின் அருகே, உய்யகொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் ஆலயம் உள்ளது. ராஜராஜசோழனின் மனைவி தினசரி அபிஷேக ஆராதனைகளை கண்டு தரிசிக்க உஜ்ஜீவநாதர் ஆலயத்திற்கு வருவதுண்டு. அப்படியே சோழ மன்னனின் துணைவி இந்த ஆளுடையார் ஆலயத்திற்கும் தினசரி பூஜைக்கு வரும் பழக்கம் உள்ளவராக இருந்ததாக பக்தர்கள் கூறுகிறார்கள்.



    கரன், தான் தியானம் செய்வதற்காகவே இந்த தியான லிங்கமான ஆளுடையாரை இங்கு பிரதிஷ்டை செய்தான். எனவே இங்கு அம்மனுக்கு சன்னிதி இல்லை. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான ஆலயம் இது. இங்கு தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 9 மணி வரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.

    திருமணமாகாத பெண்கள் இங்கு வந்து இறைவனை வேண்டி அபிஷேகம் செய்தால், அவர்கள் விருப்பம் நிறைவேறி அவர்களுக்கு நல்ல கணவன் அமைவதாக நம்பிக்கை நிலவுகிறது. குழந்தை வரம் வேண்டி இங்கு வரும் பெண்கள், இறைவனையும் இங்குள்ள நந்தியம் பெருமானையும் மனமுருக வேண்டிக்கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. தங்கள் பிரார்த்தனை பலித்ததும் அந்தப் பெண்கள், நந்தியம் பெருமானின் அருகே தொட்டிலையோ, மணியையோ கட்டி தங்கள் நன்றிக்கடனைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

    சரியாகப் பேச்சு வராத குழந்தைகளை இங்கு கூட்டி வந்து, நந்தியம் பெருமானுக்கு படையல் போட்டு வேண்டிக் கொள்ள அந்தக் குழந்தை விரைவில் பேசத் தொடங்குவதாகவும் பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகிறார்கள்.

    இத்தலத்தில் உள்ள பிரமாண்டமான ஆளுடையாரை நாம் தரிசிக்கும் போது, நம் மனதில் மகிழ்வும் நிதர்சனமான அமைதியும் உலா வருவதை நாம் உணர்வது உண்மையே!

    திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஆலயம். நகரப் பேருந்துகள் மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.

    வீதி உலா காணாத இறைவன் :

    விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கும், அனுமன் ஜெயந்தி அன்று அனுமனுக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்கு பிரதோஷம் மிகவும் விமரிசையாக நடத்தப்படு கிறது. சோம வாரங்கள், சிவராத்திரி, மார்கழியின் 30 நாட்கள் என இறைவனுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன. கடைசி சோம வாரத்தின் போது இறைவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படுவது முக்கிய அம்சமாக உள்ளது. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசித்து பயன் பெறுகின்றனர்.

    இந்த ஆலயத்தில் உற்சவர் சிலை கிடையாது. எனவே இறைவன் வீதியுலா வருவதும் இல்லை. ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவமும் இங்கு நடைபெறுவதில்லை.
    நாமக்கல் மாவட்டம், மோகனூரில் அமைந்துள்ள அசல தீபேஸ்வரர் கோவிலில் சிவனுக்கும், அம்மனுக்கும் நடுவில் வள்ளி-தெய்வானை சமேதராக முருகன் அருள்பாலிக்கிறார்.
    சிவதலங்களில் பெரும்பாலும் சிவன் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலங்களே அதிகம். ஆனால் சிவன் மேற்கு நோக்கியும், அன்னை கிழக்கு நோக்கியும் வீற்றிருக்கும் தலம் நாமக்கல் மாவட்டம், மோகனூரில் அமைந்துள்ளது. அந்த ஆலயம் அசல தீபேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலில் சிவனுக்கும், அம்மனுக்கும் நடுவில் வள்ளி-தெய்வானை சமேதராக முருகன் அருள்பாலிக்கிறார். எனவே இந்தத் தலம் சோமாஸ்கந்தர் திருத்தலமாகவும் விளங்குகிறது.

    தல வரலாறு :


    ஒரு சமயம் தேவர்கள் சிவபெருமானை தரிசிக்கும் ஆவலுடன் கயிலாய மலைக்குச் சென்றனர். அங்கு சிவபெருமான், கங்காதேவியை விட்டு விட்டு தனித்து தியானத்தில் ஈடுபட்டிருந்தார். கங்காதேவியை வழிபட நினைத்த தேவர்கள், தேவியை தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கும் காணவில்லை. அப்போது தேவர்களின் முன்பு முருகப்பெருமான் தோன்றினார்.

    தேவர்கள், அவரிடம் கங்காதேவி குறித்து கேட்டனர். அதற்கு முருகப்பெருமான், கங்கயை கண்டுபிடித்து அழைத்து வருவதாக கூறி புறப்பட்டார். பல இடங்களிலும் தேடியபடி மதுரையை அடைந்தார். மதுரையில் இருக்கும் மீனாட்சி, காவிரிக்கரையில் வில்வ மரங்கள் சூழ்ந்த பகுதியில் கங்கா தேவி இருப்பதாக முருகனுக்கு தெரிவித்தார். முருகப்பெருமான் அங்கும் சென்று கங்கையை தேடினார். ஆனால் கங்கை காட்சியளிக்கவில்லை. இதனால் வருத்தமடைந்த முருகப்பெருமான், கங்காதேவியை நினைத்து கடும் தவம் புரிந்தார். இதையடுத்து முருகனின் முன்பாக கங்கை தோன்றினாள்.

    மகனைக் கண்ட தாயின் உள்ளம் மகிழ்ந்தது. ‘முருகா! நீ என்னை நினைத்து தவம் புரிந்த இந்த வில்வ மரங்கள் அடர்ந்த தவச்சாலை, புண்ணியத் தலமாக மாறும்’ என்று அருளினார்.

    அப்போது சிவனும், சக்தியும் அங்கு தோன்றினர். சிவன், பார்வதி, கங்கை மூவரும் முருகப்பெருமானுக்கு காட்சியளித்த இடமே, வில்வகிரி சேத்திரம் எனப்படும் மோகனூர்.

    திருவிளையாடல் புராணத்தில் இன்னொரு செய்தியும் உண்டு. உலகை சுற்றி வலம் வந்த முருகன், தனக்கு ஞானக் கனி கிடைக்காத காரணத்தால் சக்தியுடனும், சிவனுடனும் கோபித்து கொண்டு பழனி சென்றார். வழியில் மோகனூரில் தங்கினார். கோபித்துச் சென்ற முருகனை தேடினார் சக்தி. அவர் தன் மகனை முதன் முதலாக இந்த தலத்தில் கண்டதால், இவ்வூர் ‘மகனூர்’ என்று அழைக்கப்பட்டதாகவும், அதுவே மருவி ‘மோகனூர்’ என்று மாறியதாகவும் கூறப்படுகிறது.

    கங்கா தேவி முருகனை கண்டதும், தாயன்பு வெளிப்பட்டதால், பால் சுரந்து காவிரியில் கலந்தது. எனவே அந்த தீர்த்தத்திற்கு ‘குமரி தீர்த்தம்’ என்றே பெயர் வந்தது. பழைய தமிழ் நூல்களில் காணப்படும் கொங்குகுமரி என்னும் இடமும் இதுவே.

    இந்தக் கோவில் சிவன் சன்னிதியில் சிறப்பு கருவறை முன்பு உள்ள அசல தீபம் எப்போதும் ஆடாது, அசையாது இருக்கும். எனவே அசையாத தீபம் கொண்ட சிவன், ‘அசல தீபேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு தரிசனம் செய்வது மிகச்சிறப்பாகும். திருவண்ணாமலை பரணி தீபத்திற்கு வித்திட்ட திருத்தலம் என்றும் கருதப்படுகிறது.

    இத்தலத்தில் மேற்கு பார்த்தபடி சிவன் சன்னிதி அமைந்திருப்பது மிகச்சிறப்பாகும். சிவபெருமான் சன்னிதிக்கு நேர் வடக்கு, தெற்காக ஓடும் காவிரி நதியின் கரையில் உள்ள சிவாலயத்தில், காவிரி நதியின் நேர்முகமாக உள்ள சிவனையும், நந்தியையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம்.



    கிரி, தீர்த்தம், தலம் என்ற அமைப்பில் இங்கு சிவன், தீர்த்தம், தலம் அமையப்பெற்றிருக்கிறது. பக்தர்கள் நினைத்ததை வழங்கி வெற்றியைத் தருபவர் இத்தல இறைவன். இந்தக் கோவிலில் உள்ள சனி பகவானை, சூரிய பகவான் வழிபட்டு பேறு பெற்றுள்ளார். எனவே இங்கு நவக்கிரக சன்னிதி தவிர்த்து, சனி பகவானுக்கு தனி சன்னிதியும் உள்ளது.

    இந்த தலத்தில் சிவபெருமானுக்கு வலது பக்கம், மதுகர வேணி அம்பாள் சன்னிதியும், அம்பாள் சன்னிதிக்கு வலது பக்கம் சிவபெருமான் சன்னிதியும் அமைந்துள்ளது. இந்த இருவர் சன்னிதிக்கும் இடையில் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானை சமேதராக சோமாஸ்கந்தர் ரூபத்தில் வீற்றிருக்கிறார்.

    இங்குள்ள காலபைரவர் சன்னிதியில் எலுமிச்சம் பழ மாலை, நீர்ப்பூசணிக்காய் தீபம், மிளகு தீபம் போன்ற வழிபாட்டு பிரார்த்தனை செய்வது விசேஷம். மேலும் ஹோமம், அபிஷேகம் செய்வது நன்மை பயக்கும். இந்த கோவிலின் தல விருட்சம் வில்வ மரமாகும்.

    துன்பங்கள் அகற்றும் சரபேஸ்வரர்:

    அசல தீபேஸ்வரர் கோவிலில், சரபேஸ்வரர் சன்னிதி வடக்கு வாசலில் அமைந்துள்ளது. இந்த சன்னிதியில் ஞாயிற்றுக்கிழமை ராகுகால பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ராகு காலத்தில் 11 வாரம் தவறாமல் தொடர்ந்து வழிபட்டால் தங்கள் மனதில் ஏற்படக்கூடிய பயம், உடல் பிணி, எதிரிகள் தொல்லை நீங்கும். வியாபார விருத்தி, உயர்பதவி, தொழில் மேன்மை, கல்வி அறிவு, வீடு யோகம், காரிய வெற்றி, குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராகு காலத்தில் எலுமிச்சம் பழ மாலை, செவ்வரளி பூ, வடை மாலை சாத்துதல், அன்னதானம் செய்தல், பால், தயிர், இளநீர் போன்ற பூஜைகள் மற்றும் ஹோமம் செய்வது சிறப்பானது.

    நரசிம்ம அவதாரத்தில், விஷ்ணு ஆக்ரோஷமாக இருந்த போது அவரை அமைதிப்படுத்த வீரபத்திரரை பரமேஸ்வரன் அனுப்பினார். ஆனால் அவரால் சமாதானப்படுத்த முடியவில்லை. இதைத்தொடர்ந்து சிவபெருமான் சரபராக தோன்றினார். சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் சரபர் 30-வது மூர்த்தம் ஆகும். இவரது பாதி சரீரம் விலங்கினங்களிலேயே பயங்கர சக்தி படைத்த யாளியாகவும், பாதி சரீரம் பறவைகளிலேயே மிக சக்தி படைத்த சரபட்சியாகவும் அமைந்திருக்கும்.

    இவருக்கு அதிரசம் படைத்து தானம் செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, நல்ல நட்பு, நல்ல குணங்கள் வளர்வதுடன், இழந்த சொத்துகள் மீண்டும் கிடைக்கும். ஞாயிறு சந்திர ஓரை பூஜையில் 4.30 மணி முதல் 6 மணி வரை பசும்பால் அபிஷேகம் செய்து வெண்ணெய் உருண்டைகளால் அர்ச்சிக்கலாம். உடையாத அரிசி மணிகளை சந்தன காப்பில் பதித்து வழிபடலாம். வெண் பட்டு சாத்தி, தேங்காய் சாதம் நைவேத்தியமாக படைக்கலாம். இவ்வாறு செய்தால் மனதில் நிம்மதி உண்டாகும். வெண் குஷ்டம் குணமாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    ஞாயிறு ராகு காலத்தில் சனி ஓரை சேருகின்ற போது, மாலை 5 மணி முதல் 6 மணி வரை சந்தன காப்பு அலங்காரத்தில், சந்தனத்தில் புணுகு, பன்னீர் கலந்த அபிஷேகம் செய்து வழிபட்டால், நம் மீதான வீண் பழிகள், இடையூறுகள் அகலும். மேலும், சரபேஸ்வரர், பிரத்யங்கிரா தேவி, துர்க்கா தேவி, நரசிம்மர் ஆகிய 4 பேரும் ஒருசேர சரபேஸ்வரர் உருவத்தில் அருள்பாலிப்பதால் இவருக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜை பிரசித்தி பெற்றதாகும்.

    அமைவிடம்:

    நாமக்கல் நகரில் இருந்து தெற்கில் 18 கிலோமீட்டர் தொலைவிலும், பரமத்திவேலூரில் இருந்து கிழக்கில் 17 கிலோமீட்டர் தொலைவிலும், காட்டுப்புத்தூரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், கரூர் மாவட்டம், வாங்கலில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோகனூரில் இந்த தலம் அமைந்துள்ளது.
    தாமிர பரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது அம்மைநாதர் சுவாமி திருக்கோவிலில் இறைவன், அம்மைநாதர் சுவாமி என்ற கயிலாயநாத சுவாமியாகவும், இறைவி ஆவுடையம்மனாகவும் அருள்பாலித்து வருகின்றனர்.
    திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சேரன்மகாதேவி. இங்கு தாமிர பரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது அம்மைநாதர் சுவாமி திருக்கோவில். சந்திரன் ஆட்சி பெற்று விளங்கும் இக்கோவில் நவ கயிலாயத்தில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. இங்குள்ள இறைவன், அம்மைநாதர் சுவாமி என்ற கயிலாயநாத சுவாமியாகவும், இறைவி ஆவுடையம்மனாகவும் அருள்பாலித்து வருகின்றனர்.

    இந்த ஆலயத்திற்கு தெற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் இரண்டு வாசல்கள் உள்ளன. கிழக்கு முக வாசலோடு அழகிய சிறிய ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோவிலின் வடக்குப் பகுதியில் அம்மைநாதர் சுவாமியும், தெற்கு பகுதியில் ஆவுடையம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளனர். இங்குள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். தெற்கு நோக்கிய பகுதியில் நடராஜர், சிவகாமி அம்மையுடனும், காரைக்கால் அம்மையுடனும் உள்ளார். சூரியன், சந்திரன் ஆகியோர் மேற்கு நோக்கி உள்ளனர்.

    கோவிலின் மேற்குப் பகுதியில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சி அம்மனும், வடமேற்கில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையும், கஜலட்சுமியும், சனீஸ்வரரும், சண்டிகேஸ்வரரும் வீற்றிருக்கின்றனர். தலவிருட்சம் ஆலமரம்.

    தல வரலாறு :

    ஆலயத்தின் உள் பகுதியில் அமைந்த தூண் ஒன்றில், இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்ட உரோமச முனிவரின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

    ஒரு முறை உரோமச முனிவர், கயிலாய மலையை அடைந்து, நித்தியத்துவம் வேண்டுமென்று கேட்டு ஆலமரத்தின் அடியில் சிவலிங்கம் அமைத்து பூஜை செய்து வந்தார். இதையடுத்து உரோமச முனிவரின் முன்பு எழுந்தருளிய சிவபெருமான், முனிவர் கேட்ட வரத்தை வழங்கினார்.



    இத்தலத்தின் மூலஸ்தானத்தை இரண்டு பெண்கள் சேர்ந்து கட்டியதாக வரலாறு உள்ளது. அந்த பெண்கள் இருவரும் சகோதரிகள். ஈசனின் மீது மாறாத பக்தி கொண்டவர்கள். அவர்கள் நெல் குத்தும் தொழில் செய்து பணம் ஈட்டி வந்தனர். அவ்வாறு சம்பாதித்து சேமித்த பணத்தைக் கொண்டு, இறைவனின் கோவிலுக்கு மூலஸ்தானம் கட்டும் பணியைத் தொடங்கினர். அவர்களிடம் இருந்த பணம் விரைவிலேயே கரைந்து போனது. இருப்பினும் எப்பாடுபட்டாவது மூலஸ்தானத்தை கட்டி முடிக்க வேண்டும் என்று எண்ணினர். ஆனால் வழிதான் தெரியவில்லை.

    இந்த நிலையில் அந்த சகோதரிகளின் பக்தியை நினைத்து மகிழ்ந்த ஈசன், ஒரு முதியவர் வேடத்தில் அவர்கள் இருப்பிடம் வந்தார். அவருக்கு சகோதரிகள் இருவரும் உணவளித்து மரியாதை செலுத்தினர். ஈசன் அவர்களை ஆசீர்வதித்து மறைந்தார். அவர்கள் இல்லமெல்லாம் செல்வம் கொழித்தது. அதைக் கொண்டு சகோதரிகள் இருவரும், கோவிலின் மூலஸ்தானத்தை கட்டியதாக வரலாறு தெரிவிக்கிறது. இதற்கு சான்றாகவே ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள தூணில் இரண்டு பெண்கள் நெல் குத்துவது போன்று சிற்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    ஆலயத்தின் அருகில் பக்தவச்சலார் கோவில் உள்ளது. யாசமா முனிவருக்கு முக்தி கொடுத்தவர் பக்தவச்சலார். இந்தக் கோவில் அருகில் யாக தீர்த்தம் இருக்கிறது. அம்மைநாதர் கோவிலுக்கும், யாக தீர்த்தத்திற்கும் இடையே ரணவிமோசன பாறை ஒன்று உள்ளது. இங்கு தொடர்ந்து 41 நாட்கள் விடாமல் ஸ்நானம் செய்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

    இத்தலத்தில் மார்கழி மாதத்தில் மகாவிதிபாகம் என்ற திருவிழா நடக்கும். இந்த திருவிழா அன்று அனைத்து நதிகளும் மூன்று நாட்கள் இந்தப் பகுதியில் சங்கமிக்கும் என்பது புராணம் கூறும் வரலாறு. இந்த ஆலயமானது தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும். ஐப்பசி திருக்கல்யாணம், மகா சிவராத்திரி, திருவாதிரை, கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் ஆகிய முக்கிய திருவிழாக்கள் இங்கு சிறப்பாக நடை பெறுகிறது. இத்தலத்து இறைவனை வழிபடுதல், தஞ்சை அருகே உள்ள திங்களூர் சிவபெருமானை வழிபடுதலுக்கு சமமானதாகும்.

    அரிசி தானம் :

    இந்தக் கோவிலில் சிவபெருமான், சந்திர அம்சத்துடன் காட்சி தருகிறார். அரிசி வியாபாரிகள், தங்களது வியாபாரம் செழிக்க இந்தக் கோவிலுக்கு வந்து அரிசி தானம், அன்னதானம் செய்து வருகின்றனர். திருமண தோஷம் உள்ளவர்கள் மாதுளம் பழச்சாறு அபிஷேகம் செய்கிறார்கள். மேலும் அம்பாள் சன்னிதி முன்பு தட்டில் அரிசியை பரப்பி, அதன் மத்தியில் உடைத்த தேங்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றுவதும் பிரார்த்தனையாக உள்ளது.

    திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பஸ் வசதியும், ரெயில் வசதியும் உள்ளன. சேரன்மாதேவி பஸ் நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு நாமும் செல்வோம். சிவனருள் பெறுவோம்!.
    இந்தியாவின் கிழக்குப்பகுதியில் வங்காள விரிகுடா கடல் அருகில் அமைத்துள்ள ஒரிசா மாநிலத்தின் பூரி நகரில் புனித யாத்திரையாக விளங்கும் ஜெந்தாதர் ஆலயம் அமைந்துள்ளது.
    இந்தியாவின் கிழக்குப்பகுதியில் வங்காள விரிகுடா கடல் அருகில் அமைத்துள்ள ஒரிசா மாநிலத்தின் பூரி நகரில் புனித யாத்திரையாக விளங்கும் ஜெகந்தாதர் ஆலயம் அமைந்துள்ளது.

    இந்துசமய மக்களின் தலைசிறந்த புனித இடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இதில் ஜெகந்நாதர் அழகு மேனியுடன் வீற்றிருக்கிறார். கடற்கரை நகரமான இங்கு திருவிழா நேரத்தின்போது பல்வேறு நிகழ்ச்சிகளும், ஒரிசாவின் பாரம்பரிய நடனமும் நடைபெறுகிறது.இது ஒரிசா மாநிலத்தின் கலாச்சாரத்தை எடுத்துரைக்கிறது.

    யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்களின் வழிபாட்டு யாத்திரையை இக்கோவிலில் தான் நிறைவு செய்கின்றனர். இதனால் ஆண்டு தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக சென்று வரக்கூடிய ஒரு சிறந்த வழிபாட்டுத்தலமாகும்.



    இந்தியாவின் புனிதமான தலமாக விளங்கும் இந்நகரம் ஒரிசா கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் திருவிழாவின் போது ரதயாத்திரை மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இத்தேர் திருவிழாவின்போது இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பல்வேறு தரப்பட்ட பக்தர்களும் கலந்து கொள்கிறார்கள். ரத யாத்திரையின்போது ரதத்தில் இறைவன் பாலபத்ரா மற்றும் தேவிசுபத்ரா உன்னதமாக அலங்கரிக்கப்பட்டு வீதி உலா அழைத்து வருகின்றனர்.

    பக்தர்கள் அனைவரும் ஒரு முறையேனும் இத்தலத்திற்கு சென்று வர வேண்டும். அப்படி வந்தால் தங்களது கஷ்டம், தொல்லைகள் நீங்கி இன்பமுடன் வாழும் நிலையை அடையலாம்.
    ×