என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையில் விரதமிருந்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    புரட்டாசி மாதம் என்றாலே கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி பாடல் பரவச ஒலி தான் பெருமாள் பக்தர்களின் வீடெங்கிலும் தேவகானமாக பரவும். சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் ஆடை உடுத்தி, திருநாமம் தரித்துக்கொண்டு பெருமாளை மனதிலே நினைத்து வழிபடுவார்கள்.

    சிலர் தான் நினைக்கும் காரியம் நல்லபடியாக நிறைவேறி விட்டால் திருப்பதிக்கு வருகிறேன் என்றும், இன்னும் சிலர் திருப்பதிக்கு வந்து மொட்டை போடுகிறேன் என்றும் அவர்களால் இயன்ற வேண்டுதல்களை நினைத்து காசை மஞ்சள் துணியில் முடிந்து வைப்பர். சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள். புரட்டாசி மாதத்தில் தான் திருவேங்கடமுடையானுக்கு பிரமோத்சவமும் நடைபெறுகிறது. 

    மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில். ஆனால் ஸ்ரீபாலாஜியோ, எனக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம் தான். அதிலும், சனிக்கிழமை தான் தனக்கு உகந்த நாள் என்கிறார் தம் பக்தன் ஒருவனுக்கு அருள் புரிந்த கதையின் மூலமாக அந்த கதை வருமாறு:- 

    மன்னன் தொண்டைமானுக்கு மலையப்பன் மீது மாசிலா காதல். எனவே திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன் மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். அதன்படியே பூஜையும் செய்து வந்தான்.

    இவ்விதம் பூஜை செய்து வரும் வேளையில் ஒரு நாள் பொன்மலர்களுக்கு இடையே மண் மலர்களும் வந்து விழுவதை கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண் மலர்கள் தானா என கூர்ந்து நோக்கினான். அவை மண் மலர்களால் தான் என்பதை மீண்டும், மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன.

    கதவுகள் அனைத்தும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையை தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது. மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான். குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.

    பிறவிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் கடவுள் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும், அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார். பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம்.

    பீமய்யாவும், தனக்கு கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் மாலவனின் உருவத்தை வடித்து மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். பிரதி வாரம் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யா, பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான்.

    இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும்போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயங்களில் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களிமண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான். காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகிவிட்டது.

    இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒரு நாள் அபூர்வ கனவொன்றை கண்டான். அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி, தமது பக்தன் பீமய்யா செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்த பூஜையை நீயும் சென்று பார், அப்போது உண்மை விளங்கும் என்று கூறி மறைந்தார்.

    தொண்டை மானும், திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யா செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனிக்கலானான். அனுதினமும் செய்வது போலவே பீமய்யா தான் வடிவமைத்திருந்த வேங்கடவனின் சிலையருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களை தூவி இறைவனை வழிபடுவதை கண்டான் தொண்டை மன்னன்.

    உடன் பீமய்யாவை சென்று கட்டித்தழுவிய தொண்டை மான் அவனிடம் உன் பக்தி உயர்வான பக்தி, உனது வழிபாட்டை திருமால் ஏற்றுக்கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றான். இதற்கிடையில் அந்த பரந்தாமன் பீமய்யாவின் கனவில் தோன்றி உன் பக்தியின் பெருமையை என்று பிறர் கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்து கொள்வேன் என கூறியிருந்தார்.

    அதன்படியே தொண்டை மான், பீமய்யாவின்  பக்தியை பாராட்டியதை கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது. புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது. பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.

    அஷ்டமி விரதத்தை எந்த நாளில் முதன் முதலில் தொடங்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    அஷ்டமி என்பது எட்டாவது திதி நாள். தேய்பிறையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. அஷ்டமி விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் தேய்பிறையில் வரும் அஷ்டமியில் ஆரம்பிக்க வேண்டும்.

    ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. ஆவணி தேய்பிறை அஷ்டமி ஸ்தானுஷ்டமி ஆகும். இந்த நாளில் தான் மதுரா சிறைச்சாலையில் வசுதேவர்-தேவகி தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக கிருஷ்ணன் அவதரித்தார். இத்திருநாள் கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது.

    வடமாநிலங்களில் இத்திருநாளை ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்ற பெயரில் விரதமிருந்து கொண்டாடுகிறார்கள். வீடுகளிலும் பகவான் கிருஷ்ணன் பிறந்த நாளை கோலாகமாக கொண்டாடுவார்கள்.
    தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களையும் கீழே படித்து தெரிந்து கொள்ளலாம்.
    இந்து சமயத்திலும், அதன் பிரிவுகளான சைவ வைணவ சமயங்களிலும் பௌர்ணமி பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. சில தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன.

    சித்ரா பவுர்ணமி - சித்ரகுப்தனின் பிறந்தநாள்.
    வைகாசி பவுர்ணமி - முருகனின் பிறந்தநாள்.
    ஆனிப் பவுர்ணமி - இறைவனுக்கு கனிகளை படைக்கும்நாள்.
    ஆடிப் பவுர்ணமி - திருமால் வழிபாடு
    ஆவணிப் பவுர்ணமி - ஓணம், ரக்சாபந்தனம்
    புரட்டாசி பவுர்ணமி - உமாமகேசுவர பூசை
    ஐப்பசி பவுர்ணமி - சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்
    கார்த்திகைப் பவுர்ணமி - திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு
    மார்கழிப் பவுர்ணமி - சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்
    தைப் பவுர்ணமி - சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்
    மாசிப் பவுர்ணமி - பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்
    பங்குனிப் பவுர்ணமி - சிவபெருமான் உமையம்மை திருமண நாள்

    திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று. இந்துக்களால் பூரணை சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது. அம்பிகை வழிபாடு பூரணை தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. சித்திரை மாதத்தில் வரும் பூரணை சித்திராபௌர்ணமி என அழைக்கப்படும். தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து தான தருமம் செய்வது முக்கியமானதாக விளங்குகின்றது.

    மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்து யமதர்மனிடம் கொடுக்கும் பணியைச் செய்யும் சித்திரகுப்தர் அவதரித்த தினம் சித்திராபௌர்ணமி ஆகும். இத்தினத்தில் அவரை வழிபடுவதும் முக்கியமானதாக விளங்குகின்றது. அறியாமையால் மனிதர்கள் செய்யும் தவறுகள் சித்திரா பௌர்ணமி விரதத்தினால் நீங்குகின்றன என்பது நம்பிக்கை.
    செப்டம்பர் (புரட்டாசி) மாதங்களில் வரும் விரதங்களும் அதனை எப்படி அனுஷ்டிப்பது என்பதையும் பார்க்கலாம்.
    புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது. இந்த மாத பவுர்ணமியில் சிவன் கோவில்களில் சிவனுக்கு கோதுமையும் வெல்லமும் கலந்த அப்பத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த மாத பவுர்ணமி அன்று தான் உமா மகேஸ்வர விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

    செப்டம்பர் - 17, 24, அக்டோபர் 1, 8, 15 புரட்டாசி சனிக்கிழமை : இம்மாதங்களில் வரும் சனிக்கிழமைகள் வெங்கடசப் பெருமானுக்கு உகந்த நாட்கள். இந்த சனிக்கிழமைகளில் விரதமிருந்து வெங்கடேசப் பெருமாளை வழிபாடு செய்து துளசி தீர்த்தம் அருந்தி, அதன் பின்னர் உணவு உட்கொள்வது சிறப்பைத் தரும். இந்த சனிக்கிழமைகளில் ஒருநாள் வெங்கடேசப் பெருமானுக்கு நிவேதனமாக புளியோதரை, பொங்கல், சர்க்கரைப் பொங்கல் முதலியவைகளை நிவேதித்து வழிபாடு செய்வது நல்லது.

    செப்டம்பர் - 30 (வெள்ளி) மாகாளய அமாவாசை : பித்ருக்களின் இறந்த திதி தெரியாதவர்கள் இன்றையத்தினம் பிண்ட தர்ப்பணம் செய்தல் வேண்டும். இன்று ஒரு வேளை உணவுண்டு ஒரு வேளை உபவாசமிருப்பது சிறப்பு.
    புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
    சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். 

    அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, "மகாளய பட்சம்` என்பர்; "பட்சம்` என்றால், "15 நாட்கள்' எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். 

    புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு. 

    பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். எனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம். 
    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
    தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பெரும் திருவிழா வருகின்ற அக் 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 12-ந் தேதி நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.

    இத்திருவிழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இத்திருவிழாவையொட்டி பக்தர்கள் முன்னதாக விரதம் இருப்பார்கள் கோவிலில் கொடியேறியதும் கோவிலுக்கு வந்து வலது கையில் காப்பு கட்டி பின்பு தனக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து கோவில் சேர்ப்பதே இதன் சிறப்பாகும். 

    இதனையொட்டி 21 நாள் விரதம் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் கோவிலில் நீண்ட கீயூவில் நின்று பூசாரி கையினால் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். தினசரி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர். தசரா திருவிழா இப்போதே களைகட்ட தொடங்கி விட்டது.
    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்தால் அனைத்து விதமான தோஷங்களும் விலகும்.
    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது. கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார். இதற்குப் புராணத்தில் ஒரு கதை உண்டு.

    ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார். சனியின் நச்சரிப்புத் தாங்காமல் ஆஞ்சநேயர், என் தலைமீது அமர்ந்து கொள் என்று சொன்னதும், ஆஞ்சநேயர் தலையில், சனி அமர்ந்தார். 

    இதுதான் சமயம் என்று அங்கிருந்த பெரிய பாறாங்கல்லை தன் வாலில் எடுத்துத் தன் தலை மீது அமர்ந்திருக்கும் சனியின் தலைமீது வைத்தார். பாறாங்கல்லின் பாரம் தாங்காமல் மூச்சு வாங்கிய சனி, தன்னை விடுவிக்கும்படி ஆஞ்சநேயரிடம் மன்றாடவே, என்னையும் என்னை வணங்கும் பக்தர்களுக்கும் இனி தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடு என்று சொல்லவே, ஆஞ்சநேயரின் கட்டளைக்கு அடிபணிந்தார் சனி.

    அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். 

    காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.
    புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை விரதமிருந்து வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.
    பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது சிறப்பு. அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை விரதமிருந்து வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.

    ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி மாதம் திகழ்கிறது. 
    புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குதல் வேண்டும். 

    ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி விளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
    ஓணம் பண்டிகை அன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.
    ஓணம் பண்டிகையின் போது மகா விஷ்ணுவை வணங்கி துதிப்பாடல்கள் பாட வேண்டும். விஷ்ணு புராணங்களை படிக்கலாம். சுவாமிக்கு நிவேதித்தப் பொருட்களை ஒரு பொழுது சாப்பிடலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். அன்று வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு பலன்களை தரும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருவோணத்தன்று தீபம் ஏற்றப்படும். இதை சாஸ்ரதீப அலங்கார சேவை என்பர். அன்று ஏழுமலையானின் உற்சவரான மலையப்பசாமி ஊர்வலமாக 4 மாடங்கள் வழியாக ஊஞ்சல் மண்படத்துக்கு எழுந்தருள்வார். அங்கு ஆயிரத்தெட்டு திரிகளை கொண்ட நெய் விளக்கு ஏற்றப்படும். அப்போது திருமலையே ஜோதி மயமாக காட்சி தரும்.

    திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும். 
    சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் பிறவியில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
    சிவாய நம என சிந்தித்து இருப்போருக்கு ஒரு நாளும் அபாயம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.

    சிவராத்திரி தினத்தில் இரவில் சிவபெருமானை வேண்டி 4 ஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது. மாலை 6.30 மணி, இரவு 9.30 மணி, நள்ளிரவு 12.30 மணி, அதிகாலை 3 மணி ஆகிய நேரங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்வது நன்மை பயக்கும்.

    முதல் காலத்தில் சிவனுக்கு பிரம்மா பூஜை செய்வதாக ஐதீகம். இந்த காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் பிறவியில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.

    மகாவிஷ்ணு 2-வது கால பூஜையை செய்கிறார். இந்தக் காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் தன, தானிய சம்பத்துகள் சேரும்.

    மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவாக அம்பாள் செய்வதாக ஐதீகம். இதை லிங்கோத்பவ காலம் என்பர். சிவபெருமானின் அடி, முடியை காண வேண்டி பிரம்மா அன்ன பறவை வடிவில் மேலேயும், மகா விஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேவ சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் எந்த வித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.

    முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறுது. அப்போது விரதம் இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். இல்லறம் இன்பமாக திகழும். நினைக்கின்ற காரியம் நிறைவேறும். 
    எல்லா சனிக்கிழமைகளிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை சிறப்பு வாய்ந்த கிழமையாகக் கருதப்படுகிறது.
    ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை வருகின்றது. அந்த நாளில் சிவாலயத்திற்குச் சென்று எள் தீபத்தை சனீஸ்வரர் சன்னிதியில் ஏற்றி வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்வோம். அதுமட்டுமில்லாத ‘சனி பிடிக்காத தெய்வம்’ என்று வர்ணிக்கப்படும் விநாயகப் பெருமானையும், அனுமனையும் விடாது வழிபட்டு வருவோம். எல்லா சனிக்கிழமைகளிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை சிறப்பு வாய்ந்த கிழமையாகக் கருதப்படுகிறது.

    அன்றைய தினங்களில் விரதம்இருந்து விஷ்ணுவை வழிபட்டால் வெற்றி மீது வெற்றி வந்து குவியும். ‘புருஷர்களில் உத்தமமானவன்’ என்பதால்விஷ்ணுவை ‘புருஷோத்தமன்’ என்றுஅழைக்கிறார்கள். அவனது அவதாரத்தில் ராமாவதாரம் முக்கியமாகக் கருதப்படுகின்றது. காரணம் ஒரு இல், ஒருசொல், ஒரு வில் என்று வாழ்ந்ததுதான். அந்த ராமாயணத்தை புரட்டாசி மாதத்தில் படிப்பது வழக்கம். ராமர் பட்டாபிஷேக படம் வைத்து அதன் முன்னிலையில் இன்றும் கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் அங்குள்ள சிவன் கோவிலில் ராமாயணம் படிக்கின்றார்கள்.

    ராமாயணம் படிப்பவர்கள், படித்ததைக் கேட்டவர்களுக்கு எல்லாம் ராமபிரானின் அருளும் கிடைக்கின்றது. வாழ்க்கைக்குத் தேவையான பொருளும் கிடைக்கின்றது. பூமகளின் அருகிருக்கும் விஷ்ணுவை நோக்கி புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து ஆலயம் சென்று வழிபட்டு வந்தால் நாளும் பொழுதும் நல்லதே நடக்கும்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கொங்கரத்தி, வன்புகழ் நாராயண சுவாமி, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், அரியக்குடி- ஸ்ரீனிவாசப் பெருமாள், கீழச்சிவல்பட்டி கூடலழகிய சுந்தரராஜப் பெருமாள், செவ்வூர் ரோட்டுப் பெருமாள், கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் மற்றும் தமிழகமெங்கும் உள்ள விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று விஷ்ணுவையும், லட்சுமியையும் வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
    மாதம் தோறும் வரும் சதுர்த்தி விரத நடைமுறைகள் என்னவென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
    அன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

    பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.

    பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.

    இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் விநயாகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

    மாதந்தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது.

    இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் பட்டினி இருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம்.

    இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.
    ×