என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    யார் ஒருவர் உணவு உட்கொள்ளமலும், மவுனமாகவும் ஏகாதசி விரதம் இருக்கிறாரோ அவர் பரந்தாமனின் பூரண அருளைப்பெறுவார். எந்தெந்த மாதங்களில் வரும் ஏகாதசிக்கு என்ன பெயர் என்று பார்க்கலாம்.
    வளர்பிறையிலும், தேய்பிறையிலும் தசமி திதிக்கு அடுத்த திதியாக வருவதே ஏகாதசி திதியாகும். இந்த ஏகாதசி விரதம் விஷ்ணுவை வணங்கி இருக்க வேண்டும். யார் ஒருவர் உணவு உட்கொள்ளமலும், மவுனமாகவும் ஏகாதசி விரதம் இருக்கிறாரோ அவர் பரந்தாமனின் பூரண அருளைப்பெறுவார். அவருக்கு வறுமை நீங்கி செல்வம் சேரும். சவுபாக்கியம் உண்டாகும்.

    லட்சுமிகடாட்சம் ஏற்படும். ஒரு வருடத்தில் 25 ஏகாதசி விரத நாட்கள் வருகின்றன. வளர்பிறை ஏகாதசி என்றும், தேய் பிறை ஏகாதசி என்றும் ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் உண்டு. நாழிகை வேறுபாட்டினால் கூடுதலாக ஒரு ஏகாதசி நாள் வரும். ஆக இருபத்தைந்து ஏகாதசியும் விரதம் கடைபிடித்தால் வாழ்வின் உயர்ந்த அந்தஸ்துகள் நம்மைத் தேடிவரும்.

    மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, வைகானஸர் மேற்கொண்ட விரதத்தின் பயனாக அவருடைய முன்னோர்கள் (முக்தி) வைகுண்ட பதம் அடைந்ததிலிருந்து, அந்த ஏகாதசி, எல்லா ஏகாதசிகளையும் விட மிக முக்கியமாகக் கருதப்பட்டு வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. மூன்று கோடி ஏகாதசி விரத பலனை அளிப்பதால் முக்கோடி ஏகாதசி என்றும் பெயர்.

    தை மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு சபலா. (விருப்பை நிறைவிப்பது) என்று பெயர். நாடு கடத்தப்பட்ட மகிஷ்மதராஜனின் மகன், எதுவும் கிடைக்காததாலேயே, உண்ணாமலும், பசி, தாகத்தினால் உறங்காமல் இருந்தாலும் கூட, திருமால் அருளால் மீண்டும் அரசாட்சி பெற்ற நாள்.

    தை மாதம், வளர்பிறை ஏகாதசிக்கு புத்ரதா (குலம் தழைக்க மகப்பேறு அருள்வது) என்று பெயர். பல வருடங்கள் புத்திரப்பேறு இன்றி வருந்திய சுகேதுமான் சம்பா என்ற அரச தம்பதியர்க்கு குழந்தை அருளிய பெருமையுடையது.

    மாசி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு ஷட்திலா (ஷட் = ஆறு; திலா = எள்) என்று பெயர். உடனடியாக பலனளிக்கும் மிகச் சக்தி வாய்ந்த தானங்களில், எள் தானம் மிக முக்கியமானது. அதனை ஆறு வகையில் (குடிநீரிலோ, ஸ்நான தீர்த்தத்திலோ, உணவிலோ, வேள்வியிலோ, திண்பண்ட உருண்டையிலோ அல்லது வெறுமனேயோ) தானம் செய்ய மிகவும் உகந்த நாள்.

    மாசி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு ஜயா (நினைத்ததை அடைவதில் வெற்றி கோருவது) என்று பெயர். மால்யவான் என்பவன் தெய்வ அபசாராத்தால் ஏற்பட்ட அல்லல் நீங்கிய நாள்.

    பங்குனி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா (இழந்த அரச பதவியை மீட்பது) என்று பெயர். விஷ்ணுவின் அவதாரமான இராமபிரானே, பகதாலப்ய முனிவரின் பரிந்துரைப்படி விரதமிருந்து அரச பதவியை மீளப்பெற்ற நாள்.

    பங்குனி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு ஆமலகி (அளப்பரிய திறன் வாய்ந்த நெல்லி) எனப் பெயர். ருத்ராட்ச மரம் சிவத் தோன்றல் போல, நெல்லி திருமாலின் தோன்றலாகும். எல்லா தெய்வ சக்திகளும் கோமாதா காமதேனுவுள் அடக்கம் போல, நலன் பயக்கும் சக்திகள் யாவும் நெல்லியுள் அடக்கம். ஆதிசங்கரருக்கு அளிக்கப்பட்ட ஒரு நெல்லி, அவரை கனகதாரா துதியை பாடச் செய்து தங்க மழையை கொட்டுவித்தது போல பெரும் பயன் அருளவல்லது.

    சித்திரை மாதம் தேய்பிறை ஏகாதசி பாபமோசினி (தீவினையால் விளைந்த இன்னலை அழிப்பது) எனப்படும். மேதாவி முனிவரை காமவயப்படுத்தியதால் மஞ்சுகோஷாவுக்கு விளைந்த அல்லலைப் போக்கிய நாள்.

    சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி காமதா எனப்படும். பிற கடமைகளை நிறைவேற்றாமல், மித மிஞ்சிய பாலுறவில் ஈடுபடுவதால் நேரும் இன்னலை நீக்கி அருளும் நாள்.

    வைகாசி மாதம் தேய்பிறை ஏகாதசி வரூதினி (இம்மையிலேயே நன்மை தருவது) எனப்படும். மாந்தாதாவை இம்மையிலும், மறுமையிலும் நன்மை அடையச் செய்த நாள். அன்னதானத்திற்கும் மேலான வித்யாதானத்தின் பலனை அருளும் நாள்.

    வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி மோகினி எனப்படும். மோகத்தில் ஆழ்ந்திருந்த அருணகிரியை முருகன் காத்தது போல. வாழ்வு போகங்களிலேயே ஆழ்ந்ததால் நேரிட்ட எல்லா துன்பங்களிலிருந்தும் த்ருஷ்டிமான் என்ற அரச குமாரன் கௌண்டின்ய முனிவரின் அறிவுரைப்படி, விரதமிருந்து மீண்ட நாள். அனைவரையும் மோகத்திலிருந்து விடுவிக்கும் நாள்.

    ஆனிமாதம் தேய்பிறை ஏகாதசி அபரா (மறுமைக்கு வழி காட்டும்) எனப்படும். தெரியாததை மறைத்து, அறிந்தவர் போல நடக்கின்ற தவற்றை நீக்கிடும் நாள். உதாரணமாக, மருத்துவம் அறியாதவர் மருத்துவராக உலவுவது போன்று, இன்னும் பலர் வெவ்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றதாக ஊரை ஏமாற்றுவதால் நேரும் அல்லலை தவிர்க்கும் நாள்.

    ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா (நீர் கூடப் பருகாமல் இருத்தல்) எனப்படும். சிலருக்கு அதிக நேரம் உண்ணாமை கஷ்டமாகத் தெரிவதில்லை. பலருக்கு என்றாவது உண்ணாமை சிரமமாக இருப்பதில்லை. இன்னும் சிலருக்கோ, இயற்கையாகவே, ஒரு வேளை கூட உண்ணாமல் இருக்க முடிவதில்லை. இந்த நிலைக்கு பீமன் ஒரு உதாரணம். அவனும் கூட, இந்நாளில் விரதமிருந்து, மறுநாள் துவாதசியிலேயே உணவு ஏற்றதால், நிர்ஜலா ஏகாதசிக்கு மறுநாள் பாண்டவ துவாதசி என்று பெயர்.

    ஆடிமாதம் தேய்பிறை ஏகாதசியை மோகினி என்பர். பொதுவாகவே, போகிகளாக இருக்கும் நமக்கு அதற்கு மேலான யோக நிலையை அடைந்திட அருளும் நாள்.
    ஆடி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு சயனி என்று பெயர். ஒவ்வொரு ஜீவராசியும் வெவ்வேறு காலங்களில் ஓய்வு எடுப்பது போல, மகாவிஷ்ணு ஓய்வாக சயனிக்கத் துவங்கும் நாள்.

    ஆவணி மாதம் தேய்பிறை ஏகாதசி காமிகா எனப்படும். நம்மை அத்தியாவசியத் தேவைகட்கு கஷ்டப்படாமல் காத்து அருளும் நன்னாள். ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு (தை வளர்பிறை ஏகாதசி போல) புத்ரதா என்று பெயர்.

    புரட்டாசி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு அஜா (வருத்தம் நீக்கும்) என்று பெயர். உண்மை பேசுவோரின் மேன்மையை உலகுக்கு உணர்த்துவதற்காக, சோதனைக்குள்ளாக்கப்பட்ட ஹரிச்சந்திர மகாராஜன் விரதமிருந்து, மீண்டும் நாடும் நலனும் பெறச் செய்த பெருமையுடையது.

    புரட்டாசி மாதம் வளர்பிறை ஏகாதசி பத்மா எனப்படும். நாராயணன் (நாரா = நீர், அயனன் = துயில்பவன்) அருளால் மழை பொழிவித்து எங்கும் வளமை கூட்டும் பெருமையுடையது.

    ஐப்பசி மாதம் தேய்பிறை ஏகாதசி இந்திரா எனப்படும். நற்செயல்கள் புரியாமையால் விளைந்த இன்னலைப் போக்குவது. ஐப்பசி மாதம் வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா (அல்லனவையில் ஈடுபட்டதால் ஏற்பட்ட துன்பத்தை துடைப்பது) எனப்படும். நம்மை மட்டுமின்றி, தந்தை வழி தாய் வழி, மனையாள் வழி முன்னோரையும் நரக துன்பத்திலிருந்து மீட்கும் நாள்.

    கார்த்திகை மாதம் தேய்பிறை ஏகாதசி ரமா (மகிழ்வு கூட்டுவது) எனப்படும். ஒருவர்க்கு மட்டுமின்றி, ஊருக்கே, உலகுக்கே வளமையருளும் நாள்.
    நமது வழிபாடுகளுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக வைரவர் விளங்குகிறார். அவருக்கு உகந்த விரத நாட்கள் எத்தனை என்பதை விரிவாக பார்க்கலாம்.
    பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார்.

    வைரவர் வழிபாட்டுக்கு விரத நாட்கள் மூன்று. அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம்.

    செவ்வாய்க்கிழமை விரதம்: தை மாதம், முதல் செவ்வாய்க் கிழமையன்று தொடங்கி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் வைரவரைக் குறித்து விரதம் இருக்க வேண்டும். அப்போது பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.

    சித்திரை பரணி விரதம்: சித்திரை மாதப் பரணி நாளன்று வைரவரைக் குறித்து விரதம் இருக்க வேண்டும். அன்று பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.

    ஐப்பசி பரணி விரதம்: ஐப்பசி மாதப் பரணி நாளன்று வைரவரைக் குறித்து விரதம் இருக்க வேண்டும். அன்று பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.
    பைரவருக்கு விரதமிருந்து ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.
    கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. விரதமிருந்து ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

    சொர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தரும். விரதமிருந்து வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும் தன விருத்தியையும் அடைவார்கள்.

    பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் 9 பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபட லாம். 9-வது பவுர்ணமி அன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.

    வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம் நைவேத்தியம் படைத்து வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.
    சொத்து, தொழில், கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அஷ்டமிக்கு விரதம் இருந்து பைரவரை வழிபாடு செய்யலாம். ஒவ்வொரு அஷ்டமிக்கும் உள்ள பெயர்களை பார்க்கலாம்.
    அஷ்டமி நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலன்களைத் தரும்.

    ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.

    * மார்கழி தேய்பிறை அஷ்டமி - சங்கராஷ்டமி
    * தை தேய்பிறை அஷ்டமி - தேவ தேவாஷ்டமி

    * மாசி தேய்பிறை அஷ்டமி - மகேஸ்வராஷ்டமி
    * பங்குனி தேய்பிறை அஷ்டமி - திரியம் பகாஷ்டமி

    * சித்திரை தேய்பிறை அஷ்டமி - ஸ்நாதனாஷ்டமி
    * வைகாசி தேய்பிறை அஷ்டமி - சதாசிவாஷ்டமி

    * ஆனி தேய்பிறை அஷ்டமி -  பகவதாஷ்டமி
    * ஆடி தேய்பிறை அஷ்டமி - நீலகண்டாஷ்டமி

    * ஆவணி தேய்பிறை அஷ்டமி - ஸ்தானுஷ்டாமி
    * புரட்டாசி தேய்பிறை அஷ்டமி - ஜம்புகாஷ்டமி

    * ஐப்பசி தேய்பிறை  அஷ்டமி -  ஈசான சிவாஷ்டமி
    * கார்த்திகை தேய்பிறை அஷ்டமி - ருத்ராஷ்டமி

    அஷ்டமி நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலன்களைத் தரும். அஷ்டமி விரதமிருப்பவர்கள் அழகிய உருவத்தைப் பெறுவார்கள். உடல் ஊனமில்லாமலும் செல்வச் செழிப்புடனும் இருப்பார்கள் என்றெல்லாம் சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வரலாம்.
    பெருமாள் வழிபாமு மிக, மிக சக்தி வாய்ந்ததாகும். விஷ்ணுக்குரிய விரதங்களையும், வழிபாட்டு முறைகளையும் விரிபாக கீழே பார்க்கலாம்.
    ஸ்ரீராம நவமி :

    ராமர் அவதரித்த தினம், ஒவ்வொரு ஆண்டின் சித்திரை மாதம் நவமியும் புனர்வசு நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளில் வரும். அதையே ஸ்ரீராம நவமி என்பார்கள். ராமபிரான் திருமாலின் அவதாரங்களில் ஒரு அவதாரத்தில் உதித்தவர். மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை அவர் உலகுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    ராமபிரானைத் திருமாலின் அவதாரமாகக் கருதாமல் முழு முதல் கடவுளின் அவதாரமாகவே எண்ணுகிறார்கள். இந்த எண்ணத்தோடு ஆழ்ந்த பக்தியில் ஈடுபட்டிருப்போர் பலர்.

    ஸ்ரீராம நவமியை வடநாட்டிலும் தென்னாட்டிலும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். கொண்டாட்டங்கள் பத்து நாட்கள் நடைபெறுவதுண்டு. பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்கள் முன் பத்து எனப்படும். பிறந்த தினத்திலிருந்து கொண்டாடப்படும் பத்து நாட்கள் பின் பத்து எனப்படும். இந்த நாட்களில் பஜனைகள், ராமாயணச் சொற்பொழிவுகள் நடைபெறும். ராமாயணம் படித்து பட்டாபிஷேக விழா நடத்துவார்கள். எல்லோருக்கும் பானகம், நீர், மோர், சந்தனம், சுண்டல் முதலியன வழங்கப்படும்.

    அனந்த பத்மநாப விரதம் :

    ஆவணி மாதம் சுக்கில பட்ச சதுர்த்தசியில் இந்த விரதம் வரும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு சகல பாவங்களும் நீங்கி, செல்வம் பெருகும் முறைப்படி விரதம் இருந்து, பூஜை செய்து, பதினான்கு முடி போட்ட மஞ்சள் கயிற்றை குங்குமத்தில் நனைத்து, பத்மநாப சுவாமியிடம் வைத்து, அதிரசம் வைத்துப் படைத்த பின், அந்தக் கயிற்றை இடது மணிக்கட்டில் கட்டிக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு தொடர்ந்து பதின்மூன்று ஆண்டுகள் செய்து பதினான்காம் ஆண்டில் அன்னதானம் செய்ய வேண்டும். பின்னர் ஆயுள் பூராவும் அனுஷ்டிக்கலாம். அனந்த பத்மநாபன் அருளால் ஆனந்தமான பாக்கியத்தைப் பெறலாம். பாண்டவர்கள் நாட்டையும் சகலத்தையும் துறந்து துன்பப்பட்ட போது, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, தர்ம புத்திரரிடம் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும்படி கூறினார். அவர்களும் அனுஷ்டித்து, மீண்டும் நாட்டையும் இதர பாக்கியத்தையும் அடைந்தார்கள்.

    மகா விஷ்ணுவுக்கு உகந்த சிரவண விரதம் :

    சிரவண நட்சத்திரம் மகா விஷ்ணுவுக்கு உகந்த நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை விஷ்ணு. துவாதசி தினமும் விஷ்ணுவுக்கு உகந்த தினம். இவை இரண்டும் கூடுவது சிரவண துவாதசி ஆகும். இத்தினத்தில் உபவாசம் இருந்து மகா விஷ்ணுவைப் பூஜித்தால் பாவங்கள் நீங்கி புண்ணியத்தை அடையலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.

    இதனால் ஒவ்வொரு ஏகாதசிக்கு அடுத்த நாள் வரும் துவாதசி அன்றும் திருவோணத்தன்றும் மகா விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும். பொதுவாக ஏகாதசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் துவாதசி அன்று பாரணம் செய்ய வேண்டியிருப்பதால் அன்று உபவாசம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் சிரவண துவாதசி அன்று விசேஷ விதியாக உபவாசம் இருக்க வேண்டும். இதனால், நம் பாவங்கள் விலகி நம் குழந்தைகள் வாழ்க்கையில் உயர்வு பெற்று நலமாக வாழலாம்.

    புரட்டாசி சனிக்கிழமை :

    புரட்டாசி சனிக்கிழமைகள் பெருமாள் வழிபாட்டில் மிக, மிக சக்தி வாய்ந்ததாகும். புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டால் அவர் மனதில் இடம் பிடிக்க முடியும். அன்றைய தினம் வீட்டில் பூஜை அறையில் கோலம் போட்டு, அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும்.

    இரு பக்கங்களிலும் குத்து விளக்கை ஐந்து முகம் ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரிய பொருட்களை சேகரித்து வைத்து ராகுகால, எமகண்ட நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கு ஏற்றி, பக்தியுடன் பூஜிக்க வேண்டும். நிவேதனம் - சர்க்கரை பொங்கல் வடை, எள் சாதம் ஆகும். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று, மாவிளக்கேற்றி விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும்.

    புரட்டாசி மாதம் முதல் வார சனி இரண்டாவது சனிவாரம், மூன்றாவது வாரம், ஐந்தாவது வாரம் இவைகளில் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் அனுஷ்டிக்க வேண்டும். திருமலையில் பகவானின் நவராத்திரி உற்சவம் நடக்கும்போது சனிக்கிழமை விரதம் அனுஷ்டிக்க கூடாதென்றும், எனவே மற்ற சனிக்கிழமை ஏதாவது ஒன்றில் நடத்த வேண்டும்.

    ஏகாதசிகளில் மார்கழி மாதம் வரும் இந்த ஏகாதசியைப் பெரிய ஏகாதசி என்றும் வைகுண்ட ஏகாதசி என்றும் கூறுவர். இந்த நாளில் விஷ்ணு ஆலயங்களில் சொர்க்க வாசல் திறப்பார்கள். அன்று ஆலயங்களுக்கு செல்வோர் இந்த சொர்க்க வாசல் வழியே உள்ளே செல்ல வேண்டும். இந்த வாயில் மூன்று நாட்களுக்குத் திறந்திருக்கும். அதன்பிறகு மூடிவிடுவார்கள்.

    அன்றைய தினம் உபவாசமிருந்து இரவு கண் விழித்து மறுநாள் விடியற்காலையில் பாரணை செய்து விரதம் முடித்தால் பரமபதம் செல்வர் என்று கூறுவர்.
    2016-ல் வைகுண்ட ஏகாதசி விரத நாள் இல்லை. ஏனெனில் 2015-ல் ஜனவரி 1-ந்தேதியும் டிசம்பர் 21-ந்தேதியும் என இரண்டு தடவை வைகுண்ட ஏகாதசி வந்துள்ளது. எனவே 2016-ல் வைகுண்ட ஏகாதசி விரதம் இல்லாமல் ஆகிவிட்டது. 2017-ம் ஆண்டும் ஜனவரி 9 மற்றும் டிசம்பர் 29-ந்தேதிகளில் 2 தடவை வைகுண்ட ஏகாதசி வர உள்ளது.
    வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர், ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.
    ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்ச நேயர். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர். சீதாதேவியால் ‘சிரஞ்சீவி’ பட்டம் பெற்றவர். அவரது பிறப்பு மகத்துவம் மிகுந்தது. அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது. வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர், ஆஞ்சநேயர்.

    திரேதாயுகத்தில் குஞ்சரன் என்ற சிவபக்தன் வெகுகாலமாக குழந்தை இல்லாமல் வருந்தினான். குழந்தைச் செல்வம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவம்புரிந்தான். அவன் முன் தோன்றிய ஈசன், ‘உனக்கொரு மகள் பிறப்பாள். அவளுக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் வலிமையும், வீரமும் பெற்று மரணம் இல்லாதவனாக வாழ்வான்’ என்று கூறி மறைந்தார்.

    அவ்வாறே குஞ்சரனுக்கு ஒரு மகள் பிறக்க, அஞ்சனை என்று பெயரிட்டு வளர்த்தனர். அவள் பருவம் எய்ததும், கேசரி என்னும் வானர வீரனுக்கு அவளை மணமுடித்துக் கொடுத்தார் குஞ்சரன்.

    ஒருநாள் அஞ்சனையின் முன்பு தர்மதேவதை தோன்றி, ‘பெண்ணே நீ வேங்கடமலைக்கு கணவனுடன் சென்று மகாதேவனை குறித்து தவம் செய். அவரருளால் விண்ணவர் போற்றும் மகன் பிறப்பான்’ என்றது.

    தேவதை கூறிய இடத்திற்குச் சென்ற அஞ்சனை, காற்றை மட்டும் உணவாகக் கொண்டு கடும் தவம் இருந்தாள். அவளது தவத்தைக் கண்டு வாயு தேவன் அதிசயித்தார். ஒரு முறை வாயு பகவான் சிவசக்தி வடிவான கனி ஒன்று, அஞ்சனையின் கைகளிலே வந்து தங்கும்படி செய்தார்.

    அந்தக் கனியை உண்ட சில தினங்களில் அவள் கருவுற்றாள். அப்போது ஒரு அசரீரி எழுந்தது. ‘அஞ்சனா தேவி! சிவனுக்கும், சக்திக்கும் ஏற்பட்ட சிவசக்தி வடிவமான அம்சத்தை சிவனின் ஆணைப்படி, வாயுதேவன் கனி உருவில் உன்னை உண்ணச் செய்தான். உனக்கு சிவசக்தி அம்சம் கொண்ட மகன் பிறப்பான். அவன் வாயுபுத்திரன் என்று அழைக்கப்படுவான். விண்ணும் மண்ணும் அவனைப் போற்றி புகழும்’ என்றது.

    அரண்மனைக்குத் திரும்பிய அஞ்சனை, நடந்தது பற்றி தனது கணவர் கேசரியிடம் கூறினாள். மாதங்கள் பல கடந்தன.

    ஒரு மார்கழி மாதம் மூல நட்சத்திரம் கூடிய நன்னாளில் அஞ்சனாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அஞ்சனாதேவியின் மகன் என்பதால், அவர் ஆஞ்சநேயர் என்று அழைக்கப்பட்டார்.

    வனவாசம் வந்த ஸ்ரீராமனுக்கு, எந்தவித பிரதிபலனையும் கருதாமல் தூய அன்புடனும், பக்தியுடனும் தொண்டு செய்தார். ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். சொல்லின் செல்வனான அனுமன் முதன் முதலாக ராமனைச் சந்தித்தபோது, ‘நீங்கள் யார்?’ என்று ராமன் கேட்டார்.

    அதற்கு, ‘காற்றின் வேந்தருக்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன். நான் அனுமன் என்று, தன் தந்தையின் பெயர், தாயாரின் பெயர், தன் பெயர் அனைத்தையும் அடக்கமாக கூறினார் அனுமன்.

    ஆஞ்சநேயருக்கு சுந்தரன் என்றும் ஒரு பெயர் உண்டு. ராமாயணத்தை எழுதிய வால்மீகி மகரிஷி அதை ஏழு காண்டங்களாக பிரித்தார். அனு மனுக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில் ஒரு காண்டத்தை சுந்தர காண்டம் என்று அவரது பெயரால் அழைத்து மகிழ்ந்தார்.

    விரதம் இருப்பது எப்படி?

    அனுமன் ஜெயந்தி, ஜெயந்திகளுக்கு எல்லாம் ஜெயந்தி. அன்றைய தினம் நாம் விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கை கூடும். துன்பம் விலகும். இன்பம் பெருகும். அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து உணவு உண்ணாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடை மாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணை சாத்தி வழிபட வேண்டும்.

    வாலில் குங்கும பொட்டு வைத்து வழிபடுவது விசேஷமானது. அவல், சர்க்கரை, தேன், பானகம், கடலை, இளநீர் முதலிய பொருட்கள் அனுமனுக்கு மிகவும் பிடிக்கும். அதை நைவேத்தியம் செய்வதனால் அனுமன் மிக மகிழ்வார்.

    அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால் தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். மார்கழி மாதம் வளர்பிறை திரயோதசியன்று 13 முடிச்சுகளோடு கூடிய மஞ்சள் கயிற்றை கலசத்திற்குள் வைத்து ஓம் நமோ பகவதே வாயு நந்தனாய என்ற மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து மஞ்சள், தனம், பூ மேலும் மற்ற பூஜை பொருட்களால் பூஜை செய்ய வேண்டும்.

    கோதுமை மாவினால் தயார் செய்யப்பட்ட 13 பூரி, வெற்றிலை பாக்கு, தட்சணையோடு ஒரு தட்டில் வைத்து அந்தணருக்கு கொடுக்கலாம். மேலும் அந்த அந்தணருக்கு சாப்பாடும் போடலாம். அனுமன் விரத தொடக்கத்தில் இவ்வாறு செய்வதால் சகல காரியங்களும் வெற்றி அடையும்.

    காலை உணவாக பொரியும், பழமும் சாப்பிட வேண்டும். இதை பிறருக்கும் வழங்கலாம். பகல் உணவாக கிழங்கு, காய்கறிகளை சாப்பிடலாம். இரவில் ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், சுலோகங்கள் கூறி வழிபட வேண்டும்.
    முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்கள் எத்தனை. அந்த விரதங்களை எப்படி விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.
    முருகப்பொருமானுக்கு உரிய விரதங்கள் மூன்று. அவை: வெள்ளிக்கிழமை, கார்த்திகை, வெள்ளிக்கிழமை விரதம், சஷ்டி ஆகியன.

    கார்த்திகை விரதம் :

    கார்த்திகை விரதத்தின் சிறப்பைச் சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு அருளினார். கார்த்திகைப் பெண்கள் குமரக்கடவுளை வளர்த்த காரணத்தால், அவர்களுடைய நாளான கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து, குமரப்பெருமானை வழிபடுவோர் கல்வி, செல்வம், ஆயுள், தர்மபத்தினி, நன்மக்கள், நிலபுலம் யாவும் பெற்று வாழ்வார்கள் என்று சிவபெருமான் அருள்புரிந்தார்.

    கார்த்திகை மாதம் பரணி நாளில் விரதம் தொடங்கி, வழிபாடு செய்து, அடுத்த நாள் கார்த்திகையில் விரதம் இருந்து முறைப்படி வழிபாடு செய்து, அடுத்த நாள் ரோகிணி காலையில் நீராடி, நித்திய வழிபாடு செய்து அடியார்களோடு கூடி உண்ண வேண்டும். பின்னர் மாதந்தோறும் கார்த்திகையில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.

    நாரதர், சப்தரிஷிகளிலும் மேன்மையுற விரும்பி, அதற்கான விரதத்தை அருளுமாறு விநாயக்கடவுளை வேண்டிக் கொண்டார். அவர் அருளியவாறு, பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்து மேன்மை அடைந்தார்.

    வெள்ளிக்கிழமை விரதம்:


    வெள்ளிக்கிழமை விரதம், ஐப்பசி மாதம் முதல் சுக்கிர வாரத்தில் தொடங்கி, முறைப்படி விரதம் அனுஷ்டித்து, பின்னர் வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை விரதத்தின் சிறப்பை வசிஷ்ட முனிவர், முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு எடுத்துக் கூறினார். அவர் அனுஷ்டித்து மேன்மையுற்றார்.
    பகீரதன் என்னும் மன்னன் வெள்ளிக்கிழமை விரதம் மேற்கொண்டு, கோரன் என்னும் அரக்கனை வென்று இழந்த தன்னுடைய அரசு உரிமையை மீண்டும் பெற்றுப் புகழ் பெற்றான்.

    கந்த சஷ்டி விரதம் :

    கந்தசஷ்டி என்ற பிரபலமான விரதம் ஐப்பசி மாதம் சுக்கில் பட்சத்தில் வரும். பிரதமை நாளில் தொடங்கி, சஷ்டி வரை ஆறு நாட்கள் முறைப்படி விரதம் இருக்க வேண்டும். அந்த நாட்களில் காலையில் நீராடி, வழிபாடு வீட்டிலும் கோயிலிலும் செய்து, முருகன் சரிதத்தைக் கேட்டு அல்லது படித்து, முருகன் நாமத்தை ஜெபித்து, ஏழாம் நாள் காலையில் வழக்கப்படி வழிபாடு செய்து, விரதத்தை நிறைவேற்ற வேண்டும். அதன் பின்னர் மாதந்தோறும் வளர்பிறை சஷ்டி விரதம் இருக்கலாம். சஷ்டி விரதம் இருப்பவர்களின் வினைகள் அகலும், எண்ணிய காரியங்கள் நிறைவேறி, புண்ணியமும் கிடைக்கும்.
    கந்த சஷ்டி விரதத்தை முறைப்படி அனுஷ்டித்த முசுகுந்தச் சக்கரவர்த்தி எல்லா நலன்களும் பெற்றுச் சிறப்புடையவரானார்.

    குமார சஷ்டி விரதம் :

    ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார சஷ்டி விரதம் எனப்படும்.  கார்த்திகை மாத வளர்பிறைக்கு குமார சஷ்டியைச் ‘சுப்பிரமணிய சஷ்டி’ என்றும், ‘அனந்த சுப்பிரமணிய பூஜை’ என்றும் கூறுவர். அனந்த சுப்பிரமணிய பூஜை: அனந்தன் = நாகம்.

    ‘சுப்புராயன்’ என்ற பெயர் முருகனையும், நாகப்பாம்பையும் ஒருங்கே குறிப்பிடுகிற பெயராம். திருமணமாகி நீண்ட காலம் மகப்பேறில்லாதவர்கள் அனந்த (நாக) சுப்பிரமணிய பூஜையை நிறைவேற்றினால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும். முருகனைப் பாம்பு வடிவத்தில் வழிபடலாம். அல்லது, இணைந்த இரு பாம்புகளுக்கிடையில் அமைந்த முருகனையோ, பாம்பின் முடிமீது அமைந்த முருகனையோ வழிபட்டால் நாக தோஷங்களும், பிற தோஷங்களும் விலகும். நாக சுப்பிரமணியர் வழிபாடு கர்நாடகத்தில் அதிகமாக உள்ளது.

    இத்தகைய வடிவம் எளிதில் கிடைக்காது. இதற்கு நிகராக இரு தேவியருக்கு இடையில் எழுந்தருளிய முருகனை வழிபடலாம். பக்தர்கள் மகப்பேற்றை வேண்டினால் முந்தி வந்து அருள் புரிபவன் முருகன். அவனே குழந்தையாக வடிவெடுத்து வருவான் என்றும் நம்புகின்றனர்.

    ஏழ்மை ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும். பிரதோஷத்தன்று சிவபெருமானை ஆராதிக்க வேண்டும்.
    ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பட்சத்திலும் துவாதசிக்கு மேல் திரயோதசி சேரும் நாள் பிரதோஷம் எனப்படும். அது பூத, பிரேத, பிசாச, ராட்சாதிகள் உலகத்தோரைப் பிடிக்கும் சமயமாகும். அப்பொழுது எந்த வேலையிலும் ஈடுபடாமல் மவுன விரதம் இருந்து, சிவபெருமானை ஆராதிக்க வேண்டும்.

    மேற்படி பிரதோஷம் சனிக்கிழமையுடன் சேர்ந்தால் மகா பிரதோஷம் எனப்படும். அப்பொழுது உலகுக்குத் தீமை நேரிடாமல் இறைவன் தாண்டவம் ஆடுகிறார். எல்லோரும் அங்கே கவனத்தைச் செலுத்துவதால் ஒருவருக்கும் தீமை நேரிடாது.

    செல்வம், மக்கட்பேறு, ஆரோக்கியம், துஷ்டக்கிரகம் விலகல், துக்க நிவர்த்தி இவற்றை நாடுவோர் பிரதோஷ விரதம் அவசியம் கடைபிடிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில், சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ அர்ச்சனை செய்து, பூஜிப்போர் சகல பாக்கியத்தையும் பெறுவார்கள்.

    சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவராத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். ஏழ்மை ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

    சிவபெருமானுக்கு உகந்த விரதங்களும் அந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டிய முறையையும் அதனால் கிடைக்கும் பயனையும் கீழே விரிவாக பார்க்கலாம்.
    உமா மகேஸ்வரர் விரதம் :

    மகேஸ்வர வடிவங்கள் இருபத்தைந்தில் உமா மகேஸ்வர வடிவமும் ஒன்றாகும். மகேஸ்வரரின் அருள் சக்தியே உமா. ஞானமே உமா, கருணையே உமா உமா மகேஸ்வரரைப் பார்த்துக்கொண்டிருக்கிற வடிவம் உமாமகேஸ்வரர் வடிவமாகும். இவர்களைத் தியானித்து கார்த்திகை பவுர்ணமியில் விரதமிருப்பது உமா மகேஸ்வரர் விரதமாகும். ஒருநாள் முழுவதும் விரதமிருக்க முடியாதவர்கள் பகலில் ஒரு பொழுது உண்ணலாம். அல்லது இரவில் எளிய சிற்றுண்டியையோ, சில பழத்துண்டு களையோ உண்ணலாம்.

    கல்யாண சுந்தரர் விரதம் :

    பரமசிவனுக்கும், பார்வதிக்கும் பங்குனி உத்திரத்தன்று திருக்கயிலையில் திருமணம் நடைபெற்றது. இத் திருமணக்கோலமே கல்யாணசுந்தரர் வடிவம். இது பல போகங்களை அருளும் போக வடிவம். மகேஸ்வர வடிவங்களில் இது ஒன்று. இல்லறம் நல்லறமாக விளங்க இந்த வடிவத்தைப் போற்றி வழிபட வேண்டும். கல்யாணசுந்தரரை விரதமிருந்து வழிபட ஏற்ற நாள் அவரது திருமண நாளான பங்குனி உத்திரமே. இது சிறந்த முகூர்த்த நாள். விரதமிருக்க முடியாதவர்கள் அன்று இரவு ஒரு பொழுது மட்டும் சிறிதளவு அன்னத்தையும் அல்லது சில பழத்துண்டுகளையும் உண்ணலாம்.

    சூலவிரதம் :

    சூல மேந்திய சூலபாணியை வழபடுவது சூல விரதம். சூலம் சிவபெருமா னின் ஓர் ஆயுதம். இதன் மும்முனைகள் இச்சை, ஞாக, கிரியை சக்திகளை உணர்த்துகின்றன. தை அமாவாசையன்று இந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். முழு விரதம் காக்க முடியாதவர்கள் பகலில் ஒரு பொழுது உண்ணலாம். இந்த விரதத்தைப் பாசுபத விரதம் என்றும் கூறுவார்கள்.

    இடப விரதம் :

    மகேஸ்வர வடிவங்கள் இருபத்தைந்தில் இடபாரூடர் - காளை வாகனர் வடிவமும் ஒன்றாகும். சிவபெருமானுக்கு காளைக் கொடியும், காளை வாகனமும் உரியன. சிவனும் சக்தியும் காளை வாகனத்தின்மேல் எழுந்தருளும் கோலத்தை இடபாரூடர் வடிவம் என்பர். சிவபெருமானுக்குப் பல வடிவங்கள் உள்ளன. ஆனால், காளை வாகனராகவே திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருளுகின்றார். ஆகவே இந்த வடிவம் உச்ச நிலை சிறப்புடையது. காளை வாகனரை வைகாசி, வளர்பிறை, அஷ்டமியன்று விரதமிருந்து வழிபட வேண்டும். இது இயலாதவர்கள் பகல் ஒரு பொழுது உண்ணலாம்.

    ஆருத்ரா தரிசனம் :

    ஆருத்ரா தரிசனம் என்றவுடன் சிதம்பரம் நடராஜப் பெருமானே எல்லோருடைய கவனத்தையும் ஈர்ப்பார். ஆருத்ரா என்னும் நட்சத்திரத்துக்கு ‘சிவனே அதி தேவதை’.  பதஞ்சலி முனிவருக்கும் வியாக்கிரபாதருக்கும் நடராஜப் பெருமான் தம்முடைய நடனத்தை ஆடிக்காட் டியதே இந்த திருவாதிரை நட்சத்திரத்தில் தான். அவருடைய ஆடல் உலகம் இயங்குவதைக் குறிக்கின்றது.

    தாருகா வனத்திலுள்ள முனிவர்கள், ‘‘கர்ம மார்க்கமே சிறந்தது; கர்மாவே மனிதர்களுக்குப் பலனை அளிப்பதால் ஈசுவரன் ஒருவன் தேவை இல்லை’’ என்ற நாஸ்திகவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பக்தி மார்க்கத்தை அறிவுறுத்த சிவபெருமான் பிட்சாண்டவராகவும் மகா விஷ்ணு மோகினியாகவும் வந்து பிச்சை கேட்டனர்.

    இறைவனுடைய சுந்தரக் கோலத்தில் மயங்கிய ரிஷிபத்தினிகள் அவர் பின்னே சென்றனர். கோபம் கொண்ட ரிஷிகள், அவரைக் கொல்ல யானையை அனுப்பினர். அதைக் கொன்றார். பிறகு பூதத்தை அனுப்பினர். அதைக் காலின் கீழே போட்டு மிதித்தார்; பிறகு உடுக்கை, மான், தீ, பாம்பு ஆகியவற்றை அனுப்பினர். அவற்றை ஆபரணங்களாகக் கொண்டு சிவபெருமான் நர்த்தனம் செய்தார். அதைக் கண்டு ஆனந்தம் அடைந்த ரிஷிகள் உண்மையை உணர்ந்து சிவபக்தர் ஆனார்கள்.

    அந்த நாளே ஆருத்ரா தரிசனம்! காலையில் அபிஷேகத்தையும், தரிசனத்தையும் கண்டவர்களுக்கு மறு பிறவி இல்லை. திருவாதிரை விரதம் இருப்போர் களியும், பருப்பு இல்லாத குழம்பையும் நிவேதனம் செய்வார்கள்.

    சோம வார விரதம் :

    சோமன் என்றால், பார்வதியுடன் கூடிய சிவ பெருமான் என்றும் சந்திரன் என்றும் பொருள். கார்த்திகை மாதம் (திங்கட்கிழமை) சோமவாரம் நான்கிலும் உபவாசம் இருந்து சிவபெருமானைப் பூஜிப்பது இந்த விரதம். அதன் பின் திங்கட்கிழமை தோறும் விரதம் இருக்கலாம். கார்த்திகை மாதம் சுக்கில பட்ச அஷ்டமியில் சந்திரன் தோன்றினான். தன்னுடைய கொடிய நோய் குணமாக சிவபெருமானை ஆராதித்து நவக்கிரகங்களில் ஒருவன் ஆனான். அவன் பெயரால் சோம வாரம் தோன்றியது. தன் பெயரால், தனது வாரத்தில் இந்த விரதம் பிரசித்தி ஆக வேண்டும் எனச் சிவபெருமானைப் பிரார்த்தனை செய்து கொண்டான். அதனால் சோம வார விரதம் மிகச் சிறப்புடையதாயிற்று.

    கிருதயுகம் தோன்றியதும், சந்திரன், சிவபெருமான் திருமுடியில் அமர்ந்ததும் இந்த கார்த்திகை மாதம் நான்கு சோம வாரங்களில்தான்! பதினான்கு ஆண்டுகள், சோம வாரம் தோறும் பூஜை செய்து இரவு கண் விழித்து, சிவபுராணம் படித்து, காலையில் ஹோமம் செய்து, கலச நீரால் அபிஷேகம் செய்து, கணவனும் மனைவியுமாக பூஜை செய்ய வேண்டும். இதற்கு இத்தகைய பலன்கள் வேண்டும் என சந்திரன் வேண்டிக் கொண்டான். அவனுடைய பாபங்களை நீக்கி, பகைவரின் பயத்தையும் அகற்றி, அவனுடைய நோயையும், அகற்றி, அவனை ஆபரணமாகக் கொண்டார் சிவபெருமான். இதனால் சந்திரசூடன், சந்திரமவுலி எனப் பெயர் பெற்றார். சோம வார விரதம் அனுஷ்டித்துப் பலன் பெற்றோர் கதைகள் புராணங்களில் நிறைய உள்ளன.

    கேதார கவுரி விரதம் :

    கணவனும் மனைவியும், குடும்பத் தில ஒருமித்த மன நிலையுடன் ஒன்று பட்டு செயல்பட்டு, இன்பமாக வாழ வேண்டும் என்பதே இந்த விரதத்தின் உட்கருத்து.
    ‘சக்தி இன்றி சிவன் இல்லை’, ‘சிவன் இல்லாமல் சக்தி இல்லை’, ‘‘நீ இன்றி நான் இல்லை, நான் இல்லாமல் நீ இல்லை’’ ‘ஆண் பாதி, பெண் பாதி’ என்பவை இதன் அடிப்படையில் பிறந்தவையே.

    ஐப்பசி மாதம், சுக்கில பட்ச அமாவாசை நாளில் இந்த விரதம் வரும். அதற்கு முன் தொடங்கி, 21 நாள் வரையில் பூஜை செய்ய வேண்டும். வசதியும் வாய்ப்பும் இல்லாதவர்கள் அந்த ஒரு தினத்தில் மட்டும் உபவாசத்துடன் பூஜை செய்யலாம். கேதாரம் என்றால் வயல் என்று பொருள். இமயமலையிலுள்ள வயலில் ஈசுவரன் சுயம்பு லிங்கமாகத் தோன்றினார். ஆகையால், அவருக்கு கேதாரநாதர், கேதாரீஸ்வரர் என்ற பெயர் உண்டாயிற்று. கவுரி என்பது பார்வதி தேவியின் பெயர்களில் ஒன்று.

    ஒரு சமயம், கைலாசத்தில் பரமசிவனும் பார்வதியும் கொலுவீற்றிருக்கையில் உலக நலனைக் கருதி, பிருங்கி மினிவர் ஆனந்த நர்த்தனம் ஆடினார். அதைக் கண்டு மகிழ்ந்த பரமசிவன், முனிவரை ஆசீர்வதித்தார். ஆசி பெற்ற முனிவர் பார்வதியை விலக்கி, பரமசிவனை மட்டும் வலம் வந்தார்.

    பார்வதிக்குத் தன்னை விலக்கியதால் கோபம் மேலிட்டு முனிவரின் உடலிருந்த சக்தியை நீக்கி விட்டாள். முனிவர் தடாலென்று கீழே விழ, பரமசிவன் அவருக்கு மூன்றாவது காலையும் தடியையும் அளித்தார். அவர் எழுந்து நடனமாடினார். அதன் பிறகும் முனிவர் பார்வதியை மதிக்கவில்லை. உடனே பார்வதிதேவி, சிவனிடம் கோபித்துக் கொண்டு கவுதம முனிவர் ஆசிரமத்துக்குச் சென்றாள்.

    அவருடைய உபதேசப்படி அவரையே குருவாகக் கொண்டாள். பிறகு கேதார ஈசுவரரை வழிபட்டு 21 நாள் விரதம் இருந்தாள். பரமசிவன் தமது உடலில் பாதியைப் பார்வதிக்கு அருளி, அர்த்த நாரீசுவரர் ஆனார். தேவி விரதம் இருக்கையில், பணிவிடை செய்த சித்ராங்கதன் என்னும் கந்தர்வன், இந்த விரதத்தின் பெருமையையும் நன்மையையும் உலகோருக்கும் அளிக்க வேண்டும் என அர்த்தநாரீசுவரை வேண்டிக் கொண்டு, அவர் அனுமதியோடு உலகுக்குத் தெரிவித்தான்.
    திருமணக்காலத்தை விரைவில் காண விரும்புபவர்கள் மஞ்சள் பிள்ளையாரை நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருந்து பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க வேண்டும்.
    முதன்மைக் கடவுள் விநாயகருக்கு செவ்வாய் மற்றும் சனிக்கிழமை மிகவும் உகந்த நாட்கள். மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்குதல் மிகவும் சிறந்தது. சதூர்த்தியன்று அருகம் புல்லை விநாயகருக்கு சாற்றி வழிபட்டால் வெற்றி என்பது உறுதி. அத்துடன் வலம்புரி விநாயகருடைய திருமேனியைச் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேக காலத்தில் வழிபட்டால். நல்லருள் கிடைக்கும். திருமணக்காலத்தை விரைவில் காண விரும்புபவர்கள் மஞ்சள் பிள்ளையாரை நாற்பத்தெட்டு நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க வேண்டும்.

    குடும்பத்தில் உள்ள வறுமையை அறவே அகற்ற வேண்டுமானால் வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றி வர வேண்டும். அதே நேரத்தில் பீடைகள்

    நவக்கிரக தோஷமுள்ளவர்கள் விநாயகருக்குப் பின்புறம் நெய் தீபம் ஏற்றி வர வேண்டும். சகல சதுர்த்தி தினத்தில் குழந்தைகள் பெயரில் விநாயகர் சந்நிதியில் அர்ச்சனை செய்து பென்சில், நோட்டுகள், உறவினர் அல்லாத குழந்தைகளுக்கு இனிப்பும் தானம் தந்தால் வீட்டு குழந்தைகளுக்கு கல்விச் செல்வம் மிகுந்து வரும். குழந்தை வரம் வேண்டுவோர் சதுர்த்தியன்று சாதத்தை பிள்ளையார் எறும்புப் புற்றில் பிள்ளையாக பாவித்து தூவினால் விநாயகரின் அருள் கிட்டும். நாக்கு பிறழாத குழந்தைகளுக்கு தமிழ் மாதத்தில் 3-வது செவ்வாயன்று விநாயகரை வழிபட்டு இனிப்பு, பழங்களை படைத்து தானமாகத் தந்தால் உடனே தகுந்த பலன் கிடைக்கும்.

    முக்கிய விநாயகர் விரதங்கள்

    வெள்ளிக்கிழமை விரதம்: வைகாசி மாதம் வளர்பிறை, முதல் வெள்ளிக்கிழமையன்று, அதாவது மே மாதம் 20-ந் தேதியன்று தொடங்கி, வாரம்தோறும் வரும் வெள்ளிக் கிழமை களில் விரதம் இருக்க வேண்டும். வினாயகரைத் தியானிக்க வேண்டும். இரவில் ஒரு பொழுது பழம் உண்ணலாம்.
    சிலர் வெள்ளிக்கிழமைகளுக்குப் பதிலாக வியாழக் கிழமைகளில் வினாயகரை சிறப்பாக வழிபடுகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி விரதம்: ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று (இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி திங்கட்கிழமை) வினாயகர் வழிபாட்டுடன் இந்த வழிபாட்டைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு மாத வளர்பிறைச் சதுர்த்தியன்றும் விரதம் இருக்க வேண்டும். விரதத்தின் போது பகலில் ஒருபொழுது உண்ணலாம். அல்லது இரவில் சிறிதளவு சிற்றுண்டியோ, சில பழத் துண்டுகளோ சாப்பிடலாம்.

    சங்கடஹர சதுர்த்தி விரதம்: திதி வரிசையில் நான்காவது வரும் திதி சதுர்த்தி திதியாகும். இதில் தேய்பிறையில் வரும் 4-வது திதியை சங்கட ஹர சதுர்த்தி திதி என்கிறோம். இந்த சதுர்த்தி விரதம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வேண்டி, இருக்கும் விரதம் ஆகும். அமைதியே வடிவான விநாயகப் பெருமானை வணங்கி எந்த காரியத்தையும் செய்தால் வெற்றியாக அமையும். சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தி என புகழ் பெற்ற திருவிழா நடைபெறுகிறது. முப்பது திதிக்கும் முப்பது விநாயகர்கள் உள்ளனர். என வரலாறுகள் கூறுகின்றன. ஒவ்வொருவரும் தங்களின் பிறந்த திதிக்கான விநாயகரை அறிந்து வணங்கி வர வெற்றி உண்டாகும் . ஞானம் பிறக்கும்.கல்வி மேன்மை உண் டாகும். ஒவ்வொருவரும் வீட்டில் கணபதி பூஜை செய்துகொள்ள வேண்டும். கணபதி ஹோமம் செய்தால் தீவினை விலகி, நன்மை உண்டாகும்.

    தேய்பிறைச் சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் துன்பத் தடைகளாகிய சங்கடங்கள் தாமே ஒழிந்து, விலகிப் போய்விடும். ஆகவே, இந்தச் சதுர்த்தியைச் சங்கடஹரசதுர்த்தி என்பர். ஹர என்றால் அறுத்துவிடு என்று அர்த்தம்.
    ஆவணி தேய்பிறைச் சங்கடஹர சதுர்த்தியன்று, அதாவது ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி அன்று விரதத்தைத் தொடங்கி ஒவ்வொரு மாதத் தேய்பிறை சதுர்த்தியிலும் விரதமிருக்க வேண்டும்.

    கார்த்திகை, சஷ்டி விரதம்: கார்த்திகை மாதம் தேய்பிறை, பிரதமை முதல் மார்கழி வளர்பிறை சஷ்டி வரை (இந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் மூன்றாம் வாரம் வரை) தொடர்ந்து இருபத்தொரு நாள்கள் விரதமிருக்க வேண்டும். முதல் இருபது நாள்கள் ஒரு பொழுது உண்ணலாம். இருபத்தியோராம் நாள் முழு விரதம் காக்கவேண்டும். இருபத்தோர் இழைகளைக் கொண்ட காப்பு நூலை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் அணிந்திருக்க வேண்டியது அவசியம். வினாயகரைத் தொடர்ந்து வழிபட்டு வரவேண்டும்.
    பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். இந்த விரதத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம்நாள் பஞ்சிமி திதி வரும். பஞ்ச என்றால் ஐந்து எனப் பொருள். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.

    பஞ்சமி திதி அன்று விரதமிருந்து ஐந்து எண்ணெய் கலந்து குத்து விளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும். தீபத்தின் ஓர் முகத்தை உற்றுப் பார்த்தபடி நம்முடைய வேண்டுதல்களை மனத்திற்குள் நினைத்துக் கொண்டே 108 முறை சொல்லி கற்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
    சொல்ல வேண்டிய மந்திரம் ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ.

    இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
    நினைத்த காரியம் நிறைவேறும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த சந்தோஷி மாதா விரதத்தை தொடர்ச்சியாக அனுஷ்டிப்பது சிறப்பு தரும்.
    இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் விரதத்தைத் தொடங்க வேண்டும். தொடர்ச்சியாக 11 வெள்ளிக்கிழமைகள் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் நினைத்த காரியம் நிறைவேறும். இல்லத்தில் மகிழ்ச்சி குடிகொள்ளும். விரதம் இருக்கும் நாளன்று, வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்ய வேண்டும்.

    பூஜை அறைக்குள் சுத்தமான பலகை வைத்து, அதன் மேல் கோலம் போட்டு, அதற்கு மேலே கும்பம் வைக்க வேண்டும். சந்தோஷி மாதா படத்தையும், சந்தனத்தில் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையாரையும் வைப்பதோடு, படத்துக்கும், கும்பத்துக்கும் மாலை போட்டு, அருகில் குத்துவிளக்கும் ஏற்றிவைக்க வேண்டும்.

    நைவேத்தியமாக சந்தோஷி மாதாவுக்கு பிடித்தமான கொண்டைக்கடலை, வெல்லம் வைத்து வழிபடலாம். விரதம் இருப்பவர்கள், விரத நாள் அன்று புளிப்பு சேர்க்கக்கூடாது. தொடர்ந்து நாம் நினைத்த காரியம் நடைபெற வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டு, விநாயகருக்கும், சந்தோஷி மாதாவுக்கும் பூஜை செய்து வணங்க வேண்டும். பின்னர் கும்பத்தில் உள்ள நீரைத் தீர்த்தமாகப் பயன்படுத்த வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த விரதத்தை தொடர்ச்சியாக அனுஷ்டிப்பது சிறப்பு தரும். விரதம் இருப்பவர்கள் யாருக்கும், தட்சணை கொடுக்கக்கூடாது.

    சென்னையில் ஆலயம் :

    சென்னை விருகம்பாக்கம் மார்க்கெட் அருகில், பரிபூரண விநாயகர் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் சந்தோஷி மாதாவிற்கு தனியாக சிறிய சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. விநாயகப்பெருமானின் புதல்வியாக சந்தோஷிமாதா வணங்கப்படுகிறாள். பத்மாசனத்தில் அமர்ந்து, மேல் இரு கரங்களில் கத்தியையும், சூலத்தையும் தாங்கியிருக்கிறார். கீழ் இரு கரங்களில் அபய முத்திரையையும், பொற்கிண்ணத்தையும் ஏந்தி தரிசனம் அளிக்கிறாள்.

    இந்த அன்னையிடம் நேர்ந்து கொண்டு வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து, புளி சேர்க்காமல் சமையல் செய்து எட்டு சிறுவர்களுக்கு உணவளித்தால், எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ரக்‌ஷாபந்தன் திருவிழா, லட்சார்ச்சனைப் பெருவிழா, விநாயக சதுர்த்தி, நவராத்திரி போன்ற நாட்களில், இந்த ஆலயத்தில் உள்ள சந்தோஷி மாதாவிற்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பெண்கள் தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து, சந்தோஷி மாதாவை வேண்டிக்கொண்டால் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்.

    சென்னை தவிர, கோயம்புத்தூர், திருச்சி போன்ற பகுதிகளிலும் சந்தோஷி மாதாவிற்கு ஆலயம் உள்ளது. இந்தியாவில் வட மாநிலங் களில் இந்த அன்னைக்கு புகழ்பெற்ற ஆலயங்கள் அமைந்துள்ளன.
    ×