என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் அம்பாள் விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வரும் நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த விரதம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்பாள் விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வரும் நிகழ்வு நடத்தப்படுகிறது.

    இந்த 28 நாட்களும் அம்பாளுக்கு நைவேத்தியம் படைக்க மாட்டார்கள். இளநீர், பானகம், நீர் மோர், கரும்புச் சாறு உள்ளிட்ட பானங்களே அன்னையின் ஆகாரம். இதற்கு ‘பச்சை பட்டினி விரதம்’ எனப் பெயர்.

    பச்சை பட்டினி விரதம் முடிந்ததும் அம்பாள் பூச்சொரிதல் கண்டருள்வார். இதனைத் தொடர்ந்து நடைபெறும் சித்திரை தேரோட்டம் மிகவும் பிரசித்திப் பெற்றது. தேர்த் திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி, முடி காணிக்கை, ஆடு, மாடு, கோழி காணிக்கை செலுத்துதல், அக்னி சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.

    தைப்பூசத்தின்போது அம்பாள் வடகாவிரியில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருள்வதுடன், தனது அண்ணன் ரங்கநாதரிடம் சீர் பெறும் நிகழ்ச்சி கண்கொள்ளா காட்சியாகும்.
    வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி வழிபாடு நடைபெற்றதாக வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த விரத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    தமிழகத்தைப் பொறுத்தவரையில் சரத் நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நவமியன்று சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் மாகமாதத்தில் (ஜனவரி- பிப்ரவரி) வருகின்ற சுக்ல பட்ச (வளர்பிறை) பஞ்சமி திதி பசந்த் (வசந்த) பஞ்சமி என்ற பெயரில் சரஸ்வதி தேவிக்குரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்த வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி வழிபாடு நடைபெற்றதாக வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. உலகத்தில் உயிர்களைப் படைத்த பிரம்ம தேவன், தன் படைப்புத் தொழிலில் சோர்வு ஏற்பட, அதை நீக்கிக் கொள்ளும் வகையில் வசந்த பஞ்சமி நாளன்றுதான் சரஸ்வதிதேவியைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி தேவியின் கையில் வீணையைக் கொடுத்து அதன்மூலம் உலக மக்களுக்குப் பேசும் சக்தியை பிரம்மா அளித்ததாகப் புராணம் கூறுகிறது.  

    வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணா வாதினி, வாணி தையானி என்றும் போற்றப்படுகிறாள் சரஸ்வதிதேவி. நல்லொழுக்கம், அறிவு, ஞானம், இசை, அறிவு, வாக்கு வன்மை, கவித்திறன் போன்ற குணநலன்கள் மக்களுக்குக் கிட்ட இந்த நாளில் வட மாநிலத்தவர் சரஸ்வதிதேவியை வழிபடுகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர்கூட இந்த வசந்த பஞ்சமி நாளில்தான் சாந்தீபனி குருகுலத்தில் சேர்ந்து பதினாறு கலைகளைக் கற்றதாகக் கூறப்படுகிறது.

    தென்மாநிலங்களில் விஜயதசமி நாளன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் துவக்குவது போன்று, மேற்கு வங்கத்தில் இந்த வசந்த பஞ்சமி நாளன்றுதான் வித்யாரம்பம் துவக்கப்படுகிறது. இந்நாளில் கல்வியைத் துவக்கவுள்ள குழந்தைகள் முன்பாக, பென்சில், பேனா, சிறிய இசைக் கருவிகள், தொழிற் கருவிகள் போன்றவற்றை வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வர்.

    குழந்தை எடுக்கும் பொருளின் அடிப்படையில் அதன் எதிர்காலம் அமையும் என்று நம்பிக்கை. உதாரணமாக பேனாவை எடுத்தால் பெரிய அறிவாளியாக ஆவர் என்றும், சங்கீத உபகரணங்களை எடுத்தால் சங்கீத மேதையாவான் என்றும், தொழிற் கருவியினை எடுத்தால் தொழில் முனைவராக ஆவான் என்றும் நம்பப்படுகிறது.
     
    இந்த வசந்த பஞ்சமி நாளன்று பூஜை அறையில் சரஸ்வதி தேவியின் சிலை அல்லது படம் மஞ்சள் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. மஞ்சள் சாமந்தி மலர்கள் வட மாநிலங்களில் பூஜைக்கும், மலர் மாலைகளுக்கும் உரிய முக்கிய மலராகத் திகழ்கிறது. சரஸ்வதிதேவி சிலைக்கும் மஞ்சள் ஆடை அணிவிக்கப்படுகிறது. வீடுகளில் மக்களும் அன்று மஞ்சள் ஆடைகள் அணிகின்றனர். பூஜையில் வைக்கும் விநாயகர் கூட மஞ்சள் பிள்ளையார்தான்! மஞ்சள் நிறச் சேலைகள், சல்வார் கமீஸ், துப்பட்டாக்கள், ஜரிகை மற்றும் கோட்டாவினால் அலங்கரிக்கப்பட்டு, பளிச்சென்று எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிறம் கண்களைப் பறிக்கிறது.

    பஞ்சாப் மாநிலத்தில் மிகச்சிறப்பாக வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது. இந்தப் பருவத்தில் எங்கு பார்த்தாலும் கடுகுச் செடிகள் மஞ்சள் நிற மலர்களைப் பூத்துச் சொரிய, அதற்குப் பொருத்தமாக மக்கள் மஞ்சள் வண்ண ஆடைகளை அணிந்து பாங்க்ரா நடனம் ஆடுகின்றனர்.

    பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி சரஸ்வதிதேவிக்குப் பூஜை செய்து வணங்குகின்றனர்.

    "வசந்த பஞ்சமி' என்றாலே வட மாநிலங்களில் இது சரஸ்வதிதேவியை வழிபடும் நாள் என்பதோடு பங்குனி உத்திர நாளில் வட மாநிலங்களில் கொண்டாடப்படுகின்ற வண்ணமயமான ஹோலிப் பண்டிகைக்குக் கட்டியம் கூறும் ஒரு இனிய விழாவாக இந்த பஞ்சமி விளங்குகிறது.
    பைரவ விரத வழிபாட்டை முதன் முதலாக தொடங்குபவர்கள், தை மாதம் வரும் ஒரு செவ்வாய்க் கிழமையில் வழிபாட்டை தொடங்க வேண்டும். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.
    சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷத்தில் இருந்து ஜோதியாக வெளிப்பட்டவர் பைரவர். காவல் தெய்வமாக கருதப்படும் இவரும், ஈசனின் முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்து வருகிறார். அனைத்து சிவாலயங்களிலும் வடகிழக்கு திசையில் இவருக்கு தனியாக சன்னிதி இருக்கும். திரிசூலத்தை கையில் ஏந்திய படியும், நாய் வாகனத்துடனும் காணப்படுபவர் இவர். பைரவர் என்பதற்கு பயத்தை நீக்குபவர், பக்தர்களின் பாவத்தைப் போக்குபவர் என்று பொருள்.

    சிவனுக்கு இருக்கும் ஐந்து தலைகளைப் போன்றே, ஒரு காலத்தில் பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் இருந்தன. இதனால் சிவனை விட தானே சிறந்தவர் என்ற எண்ணம் பிரம்மனுக்கு ஏற்பட்டது. இதனால் பிரம்மா, ‘தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் என்னையே வணங்க வேண்டும்’ என்று கட்டளை விதித்தார்.

    இதையடுத்து தேவர்கள் அனைவரும், சிவபெருமானை சந்தித்து முறையிட்டனர். பிரம்மனின் ஆணவத்தை அடக்க எண்ணிய ஈசன், பைரவரைத் தோற்றுவித்தார். ஈசனிடம் இருந்து வெளிப்பட்ட பைரவர் கோபத்துடன் சென்று, பிரம்மனின் ஒரு தலையை நகத்தினால் கிள்ளி தன் கைகளில் ஏந்திக்கொண்டார். பிரம்மனின் தலையை துண்டித்ததால், பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. அந்த தோஷம் விலகுவதற்காக கபால ஓட்டையும், பிரம்மாவின் தலையையும் கையில் ஏந்தியபடி, பிச்சை எடுத்த வண்ணம் உலகம் முழுவதும் வலம் வந்தார். காசியில் அவர் நுழைந்ததும் அவர் கையில் இருந்த கபாலம் உடைந்தது. அன்று முதல் அவர் காசியை பாதுகாக்கும் காவலராக இருந்து அருளாசி புரிந்து வருகிறார்.

    அந்தகாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக, பைரவரை ஈசன் தோற்றுவித்தார் என்றும் கூறப்படுகிறது. பைரவர் 64 வடிவங்களில் உருவமெடுத்து அரக்கர்களை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன. தற்போது அவற்றுள் எட்டு பைரவர்களை மட்டுமே வழிபடும் முறை உள்ளது. அந்த அஷ்ட பைரவர்களின் பெயர் மற்றும் அவர்கள் சக்தி பெயர்கள்:-

    அசிதாங்கபைரவர் (பிராம்ஹி), குரு பைரவர் (மகேஸ்வரி), சண்டபைரவர் (கவுமாரி), குரோதான பைரவர் (வைஷ்ணவி), உன்மத்தபைரவர் (வராகி), கபாலபைரவர் (மகேந்திரி), பீஷணபைரவர் (சாமுண்டி), சம்ஹாரபைரவர் (சண்டிகாதேவி).

    பல வரங்களைத் தரும் பைரவரை விரதமிருந்து வழிபடுவதற்கு சாலச் சிறந்த தினமாக அஷ்டமி திதி உள்ளது. அன்றைய தினம் அஷ்ட லட்சுமிகளும், பைரவரை விரதமிருந்து வழிபடுவதாக ஐதீகம். அதே நாளில் நாமும் பைரவரை விரதமிருந்து வழிபாடு செய்தால் பொன், பொருள், ஐஸ்வரியத்துடன் சகல சவுபாக்கியங் களும் கிடைக்கும்.

    பைரவ விரத வழிபாட்டை முதன் முதலாக தொடங்குபவர்கள், தை மாதம் வரும் ஒரு செவ்வாய்க் கிழமையில் வழிபாட்டை தொடங்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை விரதமிருந்து வணங்கி வருவதுடன், காலபைரவ அஷ்டக துதியை பாராயணம் செய்து வந்தால், எதிரிகளின் தொல்லை அகலும். எம பயம் நீங்கும். கடன் தொல்லை விலகும்.
    கேதாரீஸ்வர விரதம் கடைப்பிடித்து உமா மகேஸ்வரரை வழிபட தாம்பத்திய ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.
    பிருங்கி என்றொரு முனிவர், தீவிரமான சிவபக்தர். ஒருமுறை, திருக்கயிலையில் அம்மையும் அப்பனும் அமர்ந்திருக்க, பிருங்கி முனிவரோ வண்டாக வடிவெடுத்து, ஸ்வாமியை மட்டும் வலம் வந்து வணங்கிச் சென்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை, பிருங்கி முனிவரின் தேக ஆற்றலை நீங்கச் செய்தாள். அவருக்கு சிவனார் ஊன்றுகோல் கொடுத்து திருவருள் புரிந்தார்.

    இதையடுத்து, தான் வேறு சிவன் வேறு அல்ல என்பதை உலகத்தவருக்கு உணர்த்த விரும்பிய அம்பிகை, அதன் பொருட்டு பெரும் தவம் செய்ய முடிவெடுத்து பூமிக்கு வந்தாள். வனம் ஒன்றில் கெளதம மஹரிஷியைச் சந்தித்தாள். அவரிடம் நடந்த யாவற்றையும், தனது விருப்பத்தையும் விவரித்து, விருப்பம் நிறைவேற வழிகேட்டாள். அவளுக்கு கேதாரீஸ்வர விரத மகிமையை எடுத்துக் கூறிய கெளதமர், அந்த விரதத்தைக் கடைப்பிடித்து சிவனாரை வழிபடும்படி கூறினார். அம்பிகையும் அதன்படியே விரதம் இருந்து, சிவனாரின் தேகத்தில் இடபாகத்தை பெற்றாள்.

    அவள் வழியில் நாமும் கேதாரீஸ்வர விரதம் கடைப்பிடித்து உமா மகேஸ்வரரை வழிபட தாம்பத்திய ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் சுபிட்சம் மேலோங்கும். சரி! இந்த விரதத்தை எப்போது கடைப்பிடிப்பது?

    இதுகுறித்து கெளதமுனிவர் உமையவளுக்குக் கூறிய விவரம்: ‘‘புரட்டாசி மாத வளர் பிறை தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாத தேய்பிறைச் சதுர்த்தசி அல்லது அமாவாசை வரை 21 நாட்கள் இந்த விரதத்தை நடத்த வேண்டும். சிவபெருமானைக் குறித்துச் செய்யப்படும் இந்த விரதத்தை பக்தியுடன் செய்தால், ரிஷப வாகனனான ஸ்வாமி காட்சி தருவார். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்!” என்றார்.

    வழிமுறை: பூஜை செய்ய வேண்டிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு, தலை வாழையிலையில் அட்சதையைக் கொட்டிப் பரப்பி, அதன் மேல் பூரண கும்பத்தை வைத்து அலங்கரிக்க வேண்டும். கும்பத்தில் கேதாரீஸ் வரரை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

    21 இழைகள் - 31 முடிச்சுகள் கொண்ட நோன்புக் கயிறை, அந்தக் கும்பத்தின் மேல் சார்த்தி 21 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். பூ, பழம் முதலான பூஜைப் பொருட்கள் 21 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். வேத வல்லுநர்கள் 21 பேரை வரவழைத்து, அவர்களைக் கொண்டு பூஜை செய்து வழிபட வேண்டும். மனதில் உள்ள விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் விரதம் இது.
    பைரவருக்கு வாரம் வரும் ஒவ்வொரு நாட்களும் சிறப்பு வாய்ந்தவை. ஒவ்வொரு நாளும் பைவரருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
    ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாத்தி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். கடன் வாங்கி வட்டி கட்டி கஷ்டப்படுபவர்கள் ராகுகாலத்தில் காலபைரவருக்கு முந்திரிபருப்பு மாலைகட்டி, புனுகுசாற்றி, வெண்பொங்கல் நைவேத்தியம் செய்தால் நலம் பெறலாம். சிம்மராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பானது.

    திங்கட்கிழமை சிவனுக்கு பிரியமான வில்வத்தால் அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டால், சிவனருள் கிடைக்கும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹரசதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர்அபிஷேகம் செய்து சந்தனக்காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டைமலர் சாற்றி வழிபட கண்நோய்கள் அகலும். கடக ராசிக்காரர்கள் இந்தக் கிழமைகளில் வழிபடலாம்.

    எதிர்பாராதவிதமாக இழந்து விட்ட பொருளை திரும்ப பெற பைரவர் வழிபாடு பலன் தரும். செவ்வாய்க்கிழமை மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் இழந்த பொருள் திரும்ப கிடைக்கும். செவ்வாய்க்கிழமை மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் பைரவரை வழிபட சிறந்த நாளாகும். எல்லா அஷ்டமி திதிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி திதி இணைந்து வந்தால் சிறப்பு. குறைந்தது 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். ஆறு தேய்ப்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப் பூவால் வழிபட்டால் நற்பலன்கள் வந்து சேரும்.

    புதன்கிழமை நெய் தீபம் ஏற்றிவழிபட வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்கும். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய நாள் இது.

    வியாழக்கிழமை பைரவருக்கு விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி, சூனியம், காத்து, கருப்பு விலகி நலம் கிடைக்கும். தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட இந்தக்கிழமை சிறந்தது.

    வெள்ளிக்கிழமை மாலையில் பைரவ மூர்த்திக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய நீங்காத செல்வம் வந்து நிறையும். ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் வழிபட ஏற்றநாளாகும்.

    சனிபகவானுக்கு குரு, பைரவர். ஆகவே சனிக்கிழமையன்று இவரை வழிபடுவதால் சனி தோஷம் விலகி நன்மை கிடைக்கும். மகரம், கும்ப ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய நாள்.
    பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து, தினந்தோறும் தூபதீபம்காட்டி வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வச்செழிப்பு ஏற்படும்.
    ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வறுமை அகலவும், செல்வம் சேரவும் சொர்ணாகர்ஷண பைரவர் அருள்புரிகிறார். இவர் அமர்ந்த நிலையில் தன்மடியில் பைரவியை அமர்த்திக்கொண்டு, ஒரு கையில் அமுத கலசமும், இன்னொரு கையில் சூலமும் ஏந்தியிருப்பார்.

    தலையில் வைர கிரீடம், பட்டு வஸ்திரம் அணிந்து தம்பதி சமேதராக காட்சி தருவார். இவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.

    இந்த பைரவரை, வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வரும் அஷ்டமி அல்லது பவுர்ணமி நாளில் விரதமிருந்து வழிபாடு செய்தால் சகல சவுபாக்கியங்களும், பொன், பொருளும் கிடைக்கும். அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி விரதமிருந்து வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.

    பைரவர் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய் இவற்றினை தனித்தனி தீபமாக ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும். பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து, தினந்தோறும் தூபதீபம்காட்டி வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வச்செழிப்பு ஏற்படும்.
    அமாவாசை தினங்களில் தை அமாவாசை சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது. இந்த நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும்.
    அமாவாசை தினங்கள் என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினமாகவே கருதப்படுகிறது. அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் அவர்களின் பசி அடங்கி, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். சூரியனும், சந்திரனும் இணையும் தினமே அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.

    அமாவாசை தினங்களில் தை அமாவாசை சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது. இந்த நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும். அன்றைய தினம் கடல், ஆறு மற்றும் புண்ணிய நதிகளின் ஓரங்களில், இறந்த நம்முடைய முன்னோர்களுக்கு, தாய், தந்தையர்களுக்கு திதி கொடுக்கலாம்.

    அவ்வாறு திதி கொடுப்பதற்கு, தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு போன்ற தலங்களும், வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் சிறந்த இடங்களாக குறிப்பிடப்படுகின்றன. திதி கொடுக்கும் அன்றைய தினம், சூரிய வழிபாடு செய்வது அவசியமான ஒன்றாகும். இறந்தவர்களின் நாள்,தேதி தெரியாதவர்களும், 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி மகாளய அமாவாசை திதிகளில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலன் கிடைப்பதாக ஐதீகம்.

    நமது முன்னோர்களின் திசையாக தெற்கு உள்ளது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது. அந்த மாதத்தில் பெருமாள், பித்ரு லோகம் செல்வார். அங்குள்ளவர்கள் அனைவரும், பெருமாளுக்கு பாதபூஜை செய்துவழிபடுவார்கள். இந்தப் பூஜையின் போது மகாவிஷ்ணு உடல்முழுவதும் எள் தானியம் நிறைந்து காட்சியளிப்பார். முன்னோர்களின் ஆராதனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் பெருமாள், அவர்களுக்கு பூஜை செய்ததற்கான பலன்களை வழங்குவார். இந்த பலன்களை பித்ருக்கள் மூலம் பூமியில் வாழும் அவர்களது உறவினர்களும் பெறுவார்கள்.

    பின்னர் பித்ருக்களை 15 நாட்கள் பூலோகத்துக்கு சென்று உங்கள் குடும்பத்தினருக்கு பலன்கள் கொடுத்து வாருங்கள் என்று கூறி அனுப்பி வைப்பார். இதைத்தொடர்ந்து நமது முன்னோர்கள் அவர்கள் உறவினர் குடுபத்தைக்காண ஆசையுடனும் மகிழ்ச்சியுடனும் பூமியை நோக்கி புறப்படுவார்கள். மகாளய அமாவசையன்று அனைவரும் கூடுகின்றனர். அந்த நேரத்தில் நாம் அவர்களை வணங்கி முனோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்வது அவசியம். ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று விடைகொடுத்து அனுப்புகிறோம்.

    இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர் களுக்கு முக்திபேறு கிடைக்கும். மேலும் அன்றைய தினம் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்யவேண்டும். மறைந்த தாய், தந்தை படங்களுக்கு வீட்டில் மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வணங்க வேண்டும்.

    நம் முன்னோர்கள், காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பது முக்கியம். அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது.

    தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்தபின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும்.

    முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.

    அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டிருப்பார்கள். அவர் களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மன்மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டல் ஒருசில பித்ருக்கள் கோபத்துடன் சாபம் தந்துவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆகவே தவறாது சிரார்த்தம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்க வேண்டும். நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும்.

    அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது.

    நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக் கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.
    தை அமாவாசையான நாளை பித்ருகளுக்கு தர்பணம் கொடுத்தால், ஸ்ரீ மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.
    தை அமாவாசை அன்று பித்ருகளுக்கு தர்பணம் கொடுத்தால், ஸ்ரீ மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். பித்ரு கடனை சரியாக நிறைவேற்றினால் பல நன்மைகள் உண்டாகும்.

    ராமபிரான் தசரத சக்கர வர்த்திக்கும், ஜடாயுவுக்கும் எள் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார். அப்போது, சிவபெருமான் ராமரின் முன் தோன்றி, “முன்னோருக்கு பிதுர் கடன் செய்து தர்பணம் செய்தால் அனைத்து பாவங்களும் நீங்கி, எல்லா நன்மைகளும் உன்னை தேடி வரும்” என்றார். இரவு- பகல் பாராமல், பசியோடும் பாசத்தோடும் தன் வம்சத்தை காண வரும் பித்ருக்கள் அமாவாசைகளில் மிக விசேஷமானது தை அமாவாசையாகும். அன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜா அனுமதி தருவார்.

    அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்கள். நம் வம்சத்தினர் நமக்கு உணவு தருவார்களா என்று காத்திருப்பார்கள். அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு நிச்சயம் தர்பணம் தர வேண்டும். நாம் தரும் பிண்டமும், தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவு.

    பித்ருக்களின் சாபம்பட்ட குடும்பத்தில்தான் துர் சம்பவங்கள் நடக்கும். தெய்வம் கூட கருனை காட்டாது, உதவி செய்யாது என்கிறது கருட புராணம். கோடி புண்ணியம் தரும் எள் தானம் எள், ஸ்ரீவிஷ்ணு பகவானின் வியர்வையில் இருந்து உருவானது. எள் தானம் செய்தால் பல புண்ணியங்கள் கிட்டும். அதனால்தான், பித்ருக்களுக்கு பிண்டம் கொடுக்கும் போது எள்ளையும் கலந்தே தருகிறோம். தர்பைப் புல் ஆதியில் ஆகாயத்தில் உருவானது என்கிறது கருட புராணம்.

    பல தேவர்களின் அருளாசியும், தெய்வங்களின் அருளாசியும் தர்பைக்கு இருக்கிறது. டி.வி. சானல் சிக்னல்களைப் பெற ஆண்டனா உதவுவதை போல, நாம் சொல்லும் மந்திரங்கள், மிக வேகமாக அந்தந்த தெய்வங்களை சென்றடைய தர்ப்பை உதவுகிறது. இப்படி சக்தி வாய்ந்த தர்ப்பையை கையில் வைத்துக்கொண்டு பித்ருக்களுக்கு பிண்டம் படைத்தால் அவை பித்ருகளை எளிதாக சென் றடைந்து அதன் பலனாக பல தோஷங்கள் நீங்கும்.

    கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து, பித்ருக்களின் படங்கள் இருந்தால், அதில் துளசி மாலையோ அல்லது துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும். முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும்.
    இன்று அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
    இன்று பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.

    மாதந்தோறும் வரும் பிரதோஷ நாட்களில் சிவன் கோவில்களில் நந்திக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டால் துன்பம் விலகி நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அனைத்து சிவன் கோவில்களிலும் மாலை 4.30 மணி முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதையொட்டி நந்திக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். பின்னர் ரிஷப வாகனத்தில் சிவன் - பார்வதி எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டவர்களுக்கு மறுபிறவி இல்லை முக்தியே இறைவன் சிவபெருமானின் திருவடி.

    பிரதோச வழிபாட்டினைக் கடைப்பிடித்து சகல நலனும் பெறுவோமாக.

    எல்லாம் வல்ல இறைவனே போற்றும் இரண்டாவது சிவனாகிய நந்தி எம்பெருமானை மண்ணுலகில் அவர் அவதரித்த தலம் திருவையாற்றில் பிரதோஷ வேளையில் வணங்கி அவரின் அருளைப் பெறுவது வாழ்க்கையில் மிகவும் சிறப்புடையது.
    ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால் இந்த நோன்பிற்கு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் ஏற்பட்டது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    கணவன் - மனைவியை ஒன்று சேர்த்து வைக்கும் வல்லமை காரடையான் நோன்பிற்கு உண்டு. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. தெய்வங்களுக்கும் கூட பொருந்தும். ஒரு முறை கயிலாயத்தில் அம்பாள் சிவபெருமானின் திருக்கண்களை விளையாட்டாக மூடினாள்.

    ஆதியும் அந்தமுமான அருட்பெருட்ஜோதியான பரமேஸ்வரனின் கண்கள் மூடப்பட்டதால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. இந்த பாவம் உமாதேவியை அடைய அவள் உருவம் மாறியது. பாவ விமோசனத்துக்காக அன்னை காஞ்சீபுரம் வந்து ஆற்றங்கரையில் மண்ணினால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார்.

    சிவபெருமான் திரு விளையாடலால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அருந்துணைவரான சிவலிங்கம் கரைந்து போகாமல் காக்க காமாட்சி அம்மன் காரடையான் விரதத்தை மேற்கொண்டாள்.

    இந்த விரதத்தை கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான் அன்னைக்கு தரிசனம் கொடுத்து காமாட்சியை மணந்து கொண்டார். ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால் இந்த நோன்பிற்கு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் ஏற்பட்டது.
    சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார்.
    பெருமாளுக்குரிய கிரகமான புதன் கன்னி ராசியில் புகுவதும், உச்சம் பெறுவதும் புரட்டாசியில்தான் நிகழ்கிறது. அதே நேரம் புரட்டாசி மாதத்தில்தான் சூரியனும் கன்னி ராசியில் புகுகிறது.

    புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகம். அதனால் சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார்.

    ஆகவேதான் புரட்டாசி சனிக் கிழமைகள் அன்று விரதம் மேற்கொள்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

    புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவத்தை விலக்குவது நல்லது. இயலாதவர்கள் சனிக்கிழமை அன்று மட்டுமாவது அசைவம் சாப்பிடாமல் இருக்கலாம்.
    சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் சாத்வீகமான எளிய உணவாக இருத்தல் வேண்டும்.

    மாலையிலும் நீராடி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் வேண்டும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே நீராடி புருஷோத்தமனை வணங்கிய பின்பு சாதாரணமான உணவுகளை உண்ணலாம். அன்றும் அசைவத்தைத் தவிர்க்க வேண்டும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் சனிக் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதியாகவம், லக்னங்களில் ரிஷபம், கன்னி, துலாம், கும்பத்திற்கு யோகாதிபதி ஆகவும் விளங்குகிறார். இவர்கள் தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் அவரால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ளவும். தவறாமல் சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.

    லட்சுமி அருள்பெற நாம் மேற்கொள்ளும் விரதங்களில் முதன்மை பெற்றது வரலட்சுமி விரதம். ஆடி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள்.
    லட்சுமி அருள்பெற நாம் மேற்கொள்ளும் விரதங்களில் முதன்மை பெற்றது வரலட்சுமி விரதம். ஆடி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள்.

    ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும், லட்சுமி விரத நாளாகும்.

    ஆவணி வளர்பிறை பஞ்சமியை “மகாலட்சுமி பஞ்சமி” என்று அழைக்கின்றனர். அன்று தொடங்கி அஷ்டமி வரை, நான்கு நாட்கள் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும். இதற்கு, “மகாலட்சுமி நோன்பு” என்று பெயர்.

    கார்த்திகை மாத பஞ்சமியை “ஸ்ரீபஞ்சமி” என்று அழைத்து, அன்று லட்சுமி பூஜை செய்கின்றனர்.

    ஐப்பசி மாத பவுர்ணமியன்று மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும். ஐப்பசி அமாவாசையன்று அல்லது தீபாவளிக்கு அடுத்த நாள் மகாலட்சுமி பூஜை செய்வது குடும்பத்தில் செல்வத்தையும், மகிழ்ச்சியையும் ஒருங்கிணைத்து நமக்கு மேலும், மேலும் சிறப்பைத் தரும்.

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை 16 நாட்கள் விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபடுவது அஷ்டலட்சுமி விரதம் ஆகும். இந்த விரதத்தை கடைபிடிப்பவர்கள் 16 செல்வங்களையும் நிறைவாகப் பெற்று வாழலாம்.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திரிதியை திதிகளில் லட்சுமி பூஜை செய்வது, செல்வத்தைப் பெருக்கும். குறிப்பாக, அட்சய திரிதியை அன்று லட்சுமி வழிபாடு செய்வது பொன், பொருள் சேர்க்கையை விருத்தி அடையச்செய்யும்.
    ×