search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தமிழக வளர்ச்சிக்கு கவர்னர் ரவி குந்தகம் விளைவிக்கிறார்: நாராயணசாமி குற்றச்சாட்டு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழக வளர்ச்சிக்கு கவர்னர் ரவி குந்தகம் விளைவிக்கிறார்: நாராயணசாமி குற்றச்சாட்டு

    • மாநில கவர்னர்களுக்கு தனிப்பட்ட எந்த அதிகாரமும் இல்லை
    • கவர்னராக கிரண்பேடி காங்கிரஸ் அரசுக்கு கொடுத்த தொல்லையை தற்போது தமிழக அரசுக்கு கவர்னர் ரவி கொடுத்து வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு எதிர்கட்சி தலைவர்களை பழிவாங்குகிறது. அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதும், வருமான வரித்துறை, சி.பி.ஐ, அமலாக்கத்துறையை வைத்து மிரட்டுவதும் தொடர்கிறது.

    தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பொய் வழக்கு போட்டனர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை விசாரித்து 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

    டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்கள், ஒரு எம்.பி. மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர்கள் மீதும் 12 ஆண்டுக்கு முன் நடந்ததாகக்கூறி ராஜஸ்தான் முதல்-மந்திரி மகன் மீது அமலாக்கத்துறை விசாரணை நடக்கிறது.

    ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் வீட்டில் சோதனை நடக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு எதிர்கட்சி தலைவர்கள் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

    உச்சகட்டமாக புதுடெல்லி முதல்-மந்திரி அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

    ஆனால் ஊழலில் சிக்கியுள்ள பா.ஜனதா முதல்-அமைச்சராக இருந்த பொம்மை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    வியாபம் ஊழலில் சிக்கிய மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசாம் முதல்-மந்திரி மீது சி.பி.ஐ. வழக்கு தாக்கல் செய்தது.

    அவர் பா.ஜனதாவில் சேர்ந்ததும் வழக்கு மூடி மறைக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் 750 சி.பி.ஐ. வழக்குகள்தான் இருந்தது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் 5 ஆயிரத்து 900-க்கும் மேற்பட்ட வழக்குகள் எதிர்கட்சி தலைவர்கள் மீது போடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் முடிவுக்கு வந்தது 6 வழக்குகள் மட்டும்தான்.

    இதன்மூலம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெறலாம் என பிரதமர் மோடி நினைக்கிறார். அவரின் வேஷம் கலைந்துவிட்டது. பிரதமர் மோடி, அமித்ஷா எப்படி வழக்கு போட்டார்களா?

    அவை அனைத்தும் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் அம்பலத்துக்கு வருகிற 2024-ல் இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அப்போது மோடி ஆட்சியில் நடந்த ஊழல்கள் பட்டியலிடப்பட்டு அதானி, பிரதமர் மோடி, புதுவையில் உள்ள அமைச்சர்கள் வரை விசாரணை நடத்தப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள்.

    தமிழக கவர்னர் ரவி அதிகார துஷ்பிரயோகம் செய்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வேலையை செய்து வருகிறார்.

    மாநில கவர்னர்களுக்கு தனிப்பட்ட எந்த அதிகாரமும் இல்லை. அமைச்சரவை எடுக்கும் முடிவை ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    கவர்னராக கிரண்பேடி காங்கிரஸ் அரசுக்கு கொடுத்த தொல்லையை தற்போது தமிழக அரசுக்கு கவர்னர் ரவி கொடுத்து வருகிறார்.

    தமிழக அரசு அனுப்பிய 12 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டுள்ளார். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும், ஜனநாயக மரபுக்கும் எதிரானது. தமிழக தி.மு.க. கூட்டணி ஆட்சியை பலவீனப்படுத்தும் வகையில் செயல்படும் கவர்னரின் செயல்பாடு மக்களிடம் எடுபடாது.

    கவர்னர் ரவியின் செயல்பாடு தமிழ்நாடு வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறது. இதனால் பாதிக்கப்போவது பா.ஜனதாவும், கவர்னர் ரவியும்தான். இண்டியா கூட்டணிக்கோ, தமிழக முதலமைச்சருக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

    2024 தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகம், புதுவை உட்பட 40 தொகுதியிலும் அமோக வெற்றி பெறுவோம்.

    மோடிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால் கவர்னர் ரவியை திரும்பப்பெற வேண்டும். தமிழக அரசுக்கு தொல்லை கொடுக்கவே கவர்னர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×