search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    படிப்பில் ஏற்பட்ட போட்டியால் மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற சக மாணவியின் தாய் கைது
    X

    காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி முன்பு மாணவனின் உறவினர்கள் மறியல் செய்த காட்சி.


    படிப்பில் ஏற்பட்ட போட்டியால் மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற சக மாணவியின் தாய் கைது

    • படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக மாணவனை சக மாணவியின் தாய் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்துக்கு உரிய நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரி சிகிச்சையை தரமாக்க வேண்டும் என்று கூறி உறவினர்கள் காமராஜர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்கால் நேருநகர் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). காரைக்காலில் உள்ள ரேசன்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி மாலதி. இவர்களது 2-வது மகன் பாலமணிகண்டன் (13). இவர் கோட்டுச்சேரி பாரதி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் பாலமணிகண்டன் படிப்பில் முதல் மாணவனாகவும், விளையாட்டு, கலைநிகழ்ச்சியில் ஆர்வம் உள்ள துடிப்பானவராகவும் இருந்தார்.

    தற்போது பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற உள்ளது. இதற்காக ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் ஒத்திகை நிகழ்ச்சியில் பாலமணிகண்டன் கலந்து கொண்டுவிட்டு மதியம் வீட்டுக்கு சென்றார். அப்போது தனது தாய் மாலதியிடம் பாலமணிகண்டன் எனக்கு பள்ளியில் குளிர்பானம் கொடுத்து அனுப்பியது யார் என கேட்டார். அப்போது பேசிக்கொண்டிருக்கும் போதே பாலமணிகண்டன் வாந்தி எடுத்து திடீரென மயங்கி விழுந்தார்.

    அதிர்ச்சியடைந்த தாய் மாலதி கூச்சல்போட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உடனடியாக மாணவன் பாலமணிகண்டனை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமணிகண்டன் இன்று காலை இறந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேரடியாக பாலமணிகண்டன் படித்த பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.

    அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. பாலமணிகண்டனுடன் வகுப்பில் மாணவி அருள்மேரி என்பவர் படித்து வருகிறார். இவருக்கும் பாலமணிகண்டனுக்கும் இடையே படிப்பில் கடும் போட்டி நிலவி உள்ளது. இந்த விபரத்தை அருள்மேரி தனது தாய் சகாயமேரி விக்டோரியாவிடம் தெரிவித்தார். இவர் காரைக்கால் வேட்டைக்காரன் தெருவில் வசித்து வருகிறார்.

    மகள் தன்னிடம் தெரிவித்ததை சகாயமேரி விக்டோரியா ஆத்திரம் அடைந்தார். எனவே மாணவன் பாலமணிகண்டனை பழி தீர்க்க திட்டம்போட்டார். அதன்படி குளிர்பானத்தில் விஷம் கலந்து சகாயமேரி விக்டோரியா கலைநிகழ்ச்சி ஒத்திகை நடக்கும் பள்ளிக்கு சென்று விஷம் கலந்த குளிர்பானத்தை பள்ளி காவலாளி தேவதாஸ் என்பவரிடம் மாணவன் பாலமணிகண்டனின் அவனது பெற்றோர் கொடுத்ததாக கொடுக்குமாறு கூறி விட்டு சென்று விட்டார்.

    இந்த விஷம் கலந்த குளிர்பானத்தை மாணவன் பாலமணிகண்டன் குடித்ததால் இறந்துள்ளார். மேற்கண்டவை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து காரைக்கால் டவுன் போலீசில் மாணவனின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்கு பதிந்து சகாயராணி விக்டோரியாவை கைது செய்தனர். இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனை அறிந்த மாணவனின் உறவினர்கள் மற்றும் இந்து முன்னணியினர் ஒன்று திரண்டனர். அவர்கள் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியை சூறையாடினர்.

    கொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்துக்கு உரிய நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரி சிகிச்சையை தரமாக்க வேண்டும் என்று கூறி காமராஜர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சமரசபடுத்தினர்.

    படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக மாணவனை சக மாணவியின் தாய் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×