என் மலர்
புதுச்சேரி

கட்சியை வலுப்படுத்த புதுவை காங்கிரசில் புதிய கமிட்டிகள் அமைப்பு
- மீண்டும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக நிர்வாகிகளிடம் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது.
- கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பெரும்பாலானவர்கள் புகார் தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமை புதுவை மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தோல்வி குறித்தும், மீண்டும் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் தனித்தனியாக கருத்து கேட்டது.
அதில், நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைந்து ஆலோசனை நடத்துவது இல்லை எனவும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பெரும்பாலானவர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் விதமாக, அரசியல் விவகார கமிட்டி மற்றும் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி என 2 புதிய கமிட்டிகளை, அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் வேணுகோபால் எம்.பி. அமைத்துள்ளார்.
அதன்படி, அரசியல் விவகாரக் கமிட்டியில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. சீனியர் துணைத்தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான தேவதாஸ் உள்ளிட்ட 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல், ஒழுங்கு நடவடிக்கை குழு சேர்மனாக முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், உறுப்பினர்களாக நீல.கங்காதரன், மணவாளன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.






