search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சோதனை நடத்துவதாக கூறி புதுவை எம்.எல்.ஏ.க்களிடம் பணம் பறிக்க முயன்ற சென்னை முறுக்கு வியாபாரி
    X

    வரதராஜன் ஆழ்வாரிடம் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் விசாரணை நடத்திய காட்சி.

    சோதனை நடத்துவதாக கூறி புதுவை எம்.எல்.ஏ.க்களிடம் பணம் பறிக்க முயன்ற சென்னை முறுக்கு வியாபாரி

    • சிவசங்கரன் எம்.எல்.ஏ. வீட்டிற்கு டிப்-டாப் உடையில் கம்பீரமான தோற்றத்தில் ஒருவர் வந்துள்ளார்.
    • அபார்ட்மென்ட்டில் வாடகைக்கு தங்கி இந்த மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை உழவர்கரை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக உள்ளவர் சிவசங்கரன்.

    இவரது வீடு ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகர் முதல் குறுக்கு தெருவில் உள்ளது. சிவசங்கரன் எம்.எல்.ஏ.வை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன்னை அமலாக்கதுறை அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டு, நீங்கள் கடந்த 2 ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார் வந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.

    அதற்கு சிவசங்கரன் எம்.எல்.ஏ. தாராளமாக விசாரித்துக் கொள்ளுங்கள் என கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

    அடுத்த சில நிமிடங்களில் சிவசங்கரன் எம்.எல்.ஏ. வீட்டிற்கு டிப்-டாப் உடையில் கம்பீரமான தோற்றத்தில் ஒருவர் வந்துள்ளார்.

    அந்த நபர் சிவசங்கரனிடம், போனில் பேசிய அமலாக்கதுறை அதிகாரி நான் தான் என கூறி வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு சிவசங்கரன், அவரிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளார். அந்த நபர் அடையாள அட்டையை கையில் கொண்டு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து சிவசங்கரன் எம்.எல்.ஏ., உங்களின் உயர் அதிகாரிகளிடம் பேச வேண்டும் என கூறியுள்ளார்.

    அதற்கு அவர், உயர் அதிகாரிகள் பேசமாட்டார்கள் என தெரிவித்தார். இதனால் அந்த ஆசாமி மீது சிவசங்கரன் எம்.எல்.ஏ.வுக்கு சந்தேகம் எழுந்தது உடனே ரெட்டியார்பாளையம் போலீசுக்கும், அவரின் அலுவலக ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.

    அடுத்த சில நிமிடங்களில் போலீசாரும், சிவசங்கரன் எம்.எல்.ஏ.வின் அலுவலக ஊழியர்களும் வீட்டிற்கு வந்தனர். அதையடுத்து அந்த நபரிடம், போலீசாரும், ஊழியர்களும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

    அதையடுத்து அவர்கள் தர்மஅடி கொடுத்து விசாரித்தனர். இதில் பயந்து போன அந்த நபர் தான் அமலாக்கத்துறை அதிகாரி இல்லை என்பதை ஒப்புக் கொண்டார்.

    பின்னர் அவர் ரெட்டியார்பாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவரிடம் வடக்குப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த நபர், சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரை சேர்ந்த வரதராஜன் ஆழ்வார் (வயது 35) என்பது தெரியவந்தது. வரதராஜன் ஆழ்வாரும், அவரது மனைவியும் வீட்டில் முறுக்கு, சோமாஸ் செய்து கடைகளுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர்.

    மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் தெரியவந்தது.

    அதாவது சிவசங்கர் எம்.எல்.ஏ. வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக கருவடிக்குப்பம் மகாவீர் நகரில் உள்ள காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரத்திடம் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், லாஸ்பேட்டை சாந்தி நகரை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வைத்திய நாதனிடம் பணபரி வர்த்தனை மோசடி (மணி லாண்டரி) புகார் வந்ததாகவும் கூறி, அதனை மறைக்கவும் உயர் அதிகாரிகளை சரிகட்டவும் 2 எம்.எல்.ஏ.க்களிடம் தலா ரூ.1 லட்சம் லஞ்சம் தர பேரம் பேசியது விசாரணையில் தெரியவந்தது.

    ஆனால் எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் ஆகியோர் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எனக்கூறி பணம் தர மறுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேருவை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை அமலாக்கதுறை அதிகாரி என கூறி பேசியதும் தெரியவந்தது.

    போலீசின் பிடியில் சிக்கியுள்ள திருவொற்றியூரை சேர்ந்த வரதராஜன் ஆழ்வார் கூகுலில் எம்.எல்.ஏ., எம்.பி.களின் செல் நெம்பரை எடுத்து தொடர்பு கொண்டு அமலாக்கத்துறை அதிகாரி என மிரட்டி வந்ததும் தெரியவந்தது.

    இதுபோல் திருமாவளவன் எம்.பி. உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ., எம்.பி.க்களை செல்போனில் தொடர்பு கொண்டு அமலாக்கத்துறை அதிகாரி என்று பேசியதும் தெரிய வந்தது.

    அதோடு வரதராஜன் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் தமிழக அமைச்சர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட ஏராளமான போட்டோக்கள் இருந்தது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வரதராஜன் ஆழ்வார் 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் புதுவைக்கு வந்து, உருளையன்பேட்டையில் ஒரு அபார்ட்மென்ட்டில் வாடகைக்கு தங்கி இந்த மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

    புதுவையில் இதுபோல் வேறு யாரிடமும் அமலாக்கதுறை அதிகாரி எனக்கூறி பணம் பறித்துள்ளாரா? இதில் அவரை தவிர வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவசங்கர் எம்.எல்.ஏ. அளித்த புகாரின்பேரில் வரதராஜன் ஆழ்வார் மீது அரசு ஊழியர் போன்று ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×