என் மலர்
மற்றவை
- ஒவ்வொரு மனிதனை சுற்றியும் ஆரா என்ற சூட்சும பகுதி இருக்கிறது.
- எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே.
ஆரத்தி எடுப்பது ஏன்? பழக்கமா? பண்பாடா? மூடநம்பிக்கையா?
ஆரோக்கியம் கிடைக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.
ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாள தட்டில் மஞ்சள் அரைத்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீர் சிவப்பாக மாறும். அதில் கற்பூரம் ஏற்றி சம்பந்த பட்டவரின் இடம் வலம் மூன்று சுற்று சுற்றி விடுவதையே ஆரத்தி என்கிறோம்.
இது ஏன் செய்யப்படுகிறது?
ஒவ்வொரு மனிதனை சுற்றியும் ஆரா என்ற சூட்சும பகுதி இருக்கிறது. மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் கிருமி தொற்று முதலியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்த பின்னர்தான் உடலில் புகுகிறது.
புதிதாக திருமணம் முடிந்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடிந்து வரும் இளம் தாய், நீண்ட தூரத்து ஆன்மீக பயணம் முடித்து வருபவர்கள், வெற்றி பெற்ற பின் வீடு திரும்புபவர்களுக்கு ஆரத்தி எடுக்கும் பழக்கம் தமிழர்களிடம் உண்டு.
இவர்கள்மேல் தான் பலரின் திருஷ்டி விழ வாய்ப்பிருக்கிறது. மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு.
ஆரத்தி எடுக்கப்படும் நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.
ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேர வரும் விஷ அணுக்களை அழித்து நம் நலனை பேணுவதோடு மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்கப்படுகிறது,
வீட்டினுள் நுழையும் முன்னரே ஆரா சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் விஷ அணுக்களை அகற்றி தூய்மை படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டிற்குள் அழைத்து செல்வது தமிழர் பழக்கம்.
எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே.
-சுந்தர்ஜி
- ஒரு குடும்பத்தில் சகஜமாக எட்டு, பத்து பிள்ளைகள் பெற்றெடுத்த காலம்.
- பட்டம் செய்து .. நூலில் மாஞ்சா தடவி .. டீல் விட்ட காலம்.
1950... 60களில் ...
மணிக்கூண்டு கடிகாரத்தை பார்த்து நேரம்.. காலம்.. தெரிந்து கொண்ட காலம் ..
6 மணி சங்கு .. 10 மணி சங்கு ... 1 மணி சங்கு... 5 மணி சங்கு .. 8 மணி சங்கு... .. சங்கு ஊதலை கேட்டு நேரம் தெரிந்துகொண்ட காலம்..
கைக்கடிகாரம் அரிதாக இருந்த காலம்... கைக்கடிகாரம் கட்டியவர்களை வசதி படைத்தவர்களாக பார்த்த காலம்...
பெரிய கூட்டுக் குடும்பங்கள்..ஓயாத பிள்ளைகள் சத்தம்.
பிள்ளைகளெல்லாம் வீட்டின் நடு கூடத்தில்... ஒன்றாக விளையாடி.. கதை பேசி.. பாய் விரித்து.. ஏழரை மணிக்கெல்லாம் தூங்கி ..காலை ஆறு மணிக்கு முன் எழுந்த காலம்.
வீட்டுக்கு ஒரு மாடு ... மாட்டு கொட்டகை ... கோனார் கறந்த பாலில் தயிர் உரைக்கு ஊற்றி காலையில் மத்தை வைத்து மோர் கடைந்து... திரண்ட வெண்ணையில் நெய் உருக்கிய காலம்..
வீட்டு முன் .. பெண்கள் சாணி தெளித்து.. அதிகாலையில் கோலம் போட்ட நாட்கள் ..
சாணி பூசிய அடுப்பாங்கரை .. கரி படிந்த சமையக்கட்டு ... தரையில் உட்கார்ந்து .. ஊதாங்குழாயில் ஊதி ... புகையுடன் போராடி.. விறகை பற்றவைத்து .. சமையல் செய்த காலம்.
பெரியவர்களை ஜாதி பெயர் ... பட்டப்பெயர்... சொல்லி மரியாதையாக கூப்பிட்ட காலம் ..
வீட்டிலேயே பிரசவம் ... மிட் வைப் என்று சொல்லக்கூடிய நர்சு அம்மாக்கள்.. செலவில்லாமல் பிரசவம் பார்த்த காலம் ..
14..15 வயதில்கூட பெண்களுக்கு திருமணம்... ஒரு குடும்பத்தில் சகஜமாக எட்டு, பத்து பிள்ளைகள் பெற்றெடுத்த காலம்
எல்லாம் பாட்டி வைத்தியம் தான் ..
வீட்டிலேயே வடகம் ...முறுக்கு அச்சில் விரித்த துணியில் பிழிந்து ... அதனுடன் தாளிக்கிற வடகம் உருட்டி வெயிலில் காய போட்ட காலம்.
டெலிகிராம் தந்தி வந்தால் வீடே கூடி என்ன செய்தி வந்துள்ளது என்று ஆர்வத்துடன் கேட்ட சமயம்.
பொழுதுபோக்கு ... தாயம் .. பல்லாங்குழி.
சட்டினி .. துவையல் .. குழம்பு மிளகாய் கொத்தமல்லிஅரைப்பதற்கு அம்மி குலவி..
தோசை இட்லி மாவுக்கு ஆட்டுக்கல்...
குறவர்கள் கூவி விற்ற கொக்கு, மணிப்புறா, கௌதாரி, உள்ளான் மற்றும் காட்டு முயல்கள்..
கோமணம் கட்டி ... வீட்டு கேணியில் .. பூட்டுக்கயிறு போட்டு .. வாளியில் தண்ணீர் இறைத்து குளித்த காலம்..
பெரிய திண்ணை வீடுகள்.. நடந்து செல்பவர்கள் தைரியமாக வீடுகளில் செம்பு தண்ணி வாங்கி குடித்து .. திண்ணையில் ஓய்வெடுத்து சென்ற காலம்.
பள்ளிகளுக்கு ஒரு சின்ன மஞ்ச பையில்.. சிலேட்டு, சிலேட்டு குச்சி இரண்டு மூன்று புத்தகங்கள் .. ஸ்கூல் பாக் பற்றி தெரியாத காலம்
பள்ளிப் பிள்ளைகள் வாத்தியாரிடம் பிரம்படி வாங்கி .. பெஞ்சு மேல் ஏறி நின்ற காலம்.
பள்ளிப்பருவத்தில் சில்லு, பளிங்கி, பம்பரம் விளையாடிய காலம்..
"சாட் - பூட் – த்திரி" போட்டு ... ஐஸ் பாய்.. கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிய காலம்..
பசித்தால் .. தட்டு கடையில் பாட்டி விற்ற .. ஜவ்வு மிட்டாய் ..தேன் மிட்டாய் .. கமர்கட்டு
ஐஸ் அபூர்வமாக பார்க்கப்பட்ட காலம் ..; மரங்களில் ஏறி குரங்கு விளையாட்டு..
பட்டம் செய்து .. நூலில் மாஞ்சா தடவி .. டீல் விட்ட காலம்.
டி.வி., செல்போன் இல்லாத காரணத்தால்.. கதை சொல்பவர்களுக்கு நல்ல மவுசு ... குறிப்பாக சினிமா கதை கேட்பதென்றால் ஆர்வமுடன் கேட்ட காலம்.
சைக்கிள் டியூப் ரப்பரில் கேட்டாபெல்ட் செய்து சிட்டுக்குருவிகளை வேட்டையாடிய காலம்..
சைக்கிளில் ஊர் சுற்றிய காலம் ...
சைக்கிள் ரிம்மில் குச்சியை வைத்து ரோட்டில் ''ரோதை' ஒட்டிய காலம்... குரங்கு பெடல் போட்டு .. சைக்கிள் ஓட்ட கற்ற காலம் ..
சினிமா பைத்தியங்களாக .. ஒரு சினிமா விடாமல் .. நாலணா தரை டிக்கெட்டில் சினிமா பார்த்த காலம்.. படம் பார்த்த பிறகு அந்த பட பாட்டு புத்தகங்களை வாங்கி ... சினிமா பாடல்களை மனப்பாடம் செய்து பாடிய காலம் ..
பூரண மதுவிலக்கு.. குடிப்பழக்கம் என்னவென்று தெரியாத காலகட்டம்..
கரி என்ஜின் பொருத்திய ரெயில் வண்டியில் பயணம் செய்து தலைமுடியில் எல்லாம் கரித்தூள் ஆகிய காலம் ..
லாரி டயரில்.. தோல் வார் கோத்த செருப்பு வாங்கி ... எங்கு போனாலும் நடந்து சென்ற காலம் ..
போன் அபூர்வமாக இருந்த காலம் ... பக்கத்து பணக்கார வீட்டு போனை நம்பி வாழ்ந்த காலம் ..
மாட்டு வண்டி .. குதிரை வண்டியில் ... சவாரி செய்த காலம் ..
கார்கள் கிராமத்திற்கு சென்றால் ""பிளசர்" வந்திருக்கு" என்று ஆச்சிரியமாக பார்த்த காலம்..
சிறுவர்கள் மேல் வார் பொருந்திய அரை டவுசர் ..அரை டிராயர் ..போட்ட காலம் ..
மணிக்கூண்டு ராணி பூங்காவில் .. தினந்தோறும் .. மக்கள் கூடி .. ஆல் இந்தியா ரேடியோ .. ஆகாஷவாணி ஆறரை மணி நியூஸ் கேட்ட காலம்..
"நிரந்தரம் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் நிரந்தரமின்றி போக,மாற்றங்கள் மட்டுமே நிரந்தரமாக்கிப் போகும் காலத்தின் சுழற்சியால்.."
-எஸ்.பி.அந்தோணிசாமி
- சுவாசக் கோளாறுகளுக்கும் சிறந்த தீர்வாக உள்ளது.
- வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
நார்த்தங்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வர ரத்தம் சுத்தம் அடையும், வயிற்றுப்போக்கு, வாதம் நீங்கும், உடல் சூட்டை தணிக்கும். மேலும் மூட்டு வலிக்கு சிறந்தது. இதன் சாற்றை தண்ணீர், உப்பு அல்லது நாட்டு சர்க்கரை கலந்து பருக பித்த வாந்தி குணமாகும்.
துளசி சாறை அடிக்கடி குடிப்பதால், போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழுத்தத்தையும், அழற்சியையும் குறைக்கிறது. சுவாசக் கோளாறுகளுக்கும் சிறந்த தீர்வாக உள்ளது.
ஒரு கிண்ணத்தில் சிறிதளவு எலுமிச்சை சாறு, வெள்ளரிக்காய் சாறு, பாலாடை, தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் தயார் செய்யவும். இதை, வாரத்திற்கு மூன்று முறை கருமை உள்ள இடத்தில் தடவி ஊறவிட்டு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் ஒரு மாதத்தில் கருமை நீங்குவதை காணலாம்.
கிரீன் டீயை பஞ்சில் நனைத்து முழங்கை மற்றும் முட்டிகளில் தினமும் காலை மற்றும் மாலையில் துடைத்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறத் தொடங்கும்.

நெல்லிக்கனியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடேட் நோய் நொடிகளில் இருந்து உடலை காத்து, முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை இருக்க செய்யும் சக்தி இதற்கு உண்டு.
பச்சை மிளகாய் காரத்திற்கு மட்டுமல்ல...கலோரிகளை எரித்து கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது. வேகமாக செரிமானம் ஆகும். நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.
அதில் ஆண்டி பாக்டீரியா இருப்பதால் நோய் தொற்றுகள் வராமல் தடுக்கிறது. வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
-அகஸ்தியர் நாகலிங்கம்
- குடும்பத்திற்காக சம்பாதிக்கின்றேன் என்கிறார்கள்.
- நம்மில் பெரும்பாலோர் இப்படித் தான் இருக்கின்றோம் .
ஒருவன் எப்போது பார்த்தாலும் சுள்ளி பொறுக்கிக் கொண்டேயிருந்தான் .
அவனைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன் 'நீ எப்போது பார்த்தாலும் சுள்ளி பொறுக்கிக் கொண்டே இருக்கின்றாயே எதற்கு?' என்று கேட்டான் .
அவன் "குளிர் காய்வதற்கு" என்றான்.
கேட்டவனோ 'நீ குளிர் காய்வதை நான் பார்த்ததில்லையே?'என்றான்.
அவனோ "சுள்ளி பொறுக்கவே நேரம் சரியாக இருக்கின்றது .குளிர் காய நேரமில்லை"' என்றான் .
நம்மில் பெரும்பாலோர் இப்படித் தான் இருக்கின்றோம்

பணம் சம்பாதிப்பது வாழ்க்கையின் சுகங்களை அனுபவிப்பதற்கு. ஆனால், சிலர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள். அந்தப் பணத்தால் பெறக் கூடிய சுகங்களை அனுபவிப்பதில்லை.
கேட்டால் அதற்கு எல்லாம் நேரம் இல்லை என்கிறார்கள். இதென்ன பைத்தியக்காரத்தனம்?
பணம் சம்பாரிப்பது சிலருக்கு போதைபழக்கம் போல ஆகிவிட்டது. குடும்பத்திற்காக சம்பாதிக்கின்றேன் என்கிறார்கள். ஆனால், அவர்கள் குடும்ப வாழ்வை அனுபவிப்பதில்லை .
மனைவியிடமோ குழந்தைகளிடமோ சிரித்துப் பேசி மகிழ்வதற்கு நேரம் இல்லை என்கிறார்கள் .
இந்த இன்பங்களை அனுபவிக்கத்தானே பணம். இந்த இன்பங்களை அனுபவிக்கத் தடையாக இருக்கின்றது என்றால் பின் எதற்குப் பணம்.
ஒருவன் பெட்ரோல் வாங்கி சேமித்துக் கொண்டேயிருக்கின்றான். காரில் செல்வதில்லை என்றால் அவனைப் பற்றி என்ன நினைப்போம்?
எவனொருவன் தூங்க வேண்டிய நேரத்தில், எந்தக் கவலையும் இல்லாமல் ஆனந்தமாக உறங்குகின்றானோ அவன் தான் உண்மையில் பணக்காரன் .
எனவே அளவோடு உழைத்து ஆனந்தமாக வாழப் பழகிக் கொள்வோம்.
- ஒரு பிணத்தைப் பார்த்ததும் அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் போல் தோன்றிற்று.
- அரிச்சந்திரன் அமைதியாகக் தலை அசைத்தான்
அரிச்சந்திரன் சுடலை காத்துக் கொண்டிருக்கும் போது, அந்தச் சுடலைக்கு ஏராளமான பிணங்கள் கொண்டு வரப் படுவதைக் கண்டான்.
எந்தப் பிணத்தைப் பற்றியும் அவன் விசாரிப்பதில்லை, பணத்தை மட்டுமே வசூலித்தான்.
ஒரு பிணத்தைப் பார்த்ததும் அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் போல் தோன்றிற்று.
பிணம் தூக்கி வந்தவர்களிடம் கேட்டான்;
"ஐயா..இது யாருடைய பிணம் ?"
அவர்கள் சொன்னார்கள் :
"இந்த ஊரிலுள்ள பணக்காரர்களில் இவரும் ஒருவர்; வட்டிக்குப் பணம் கொடுப்பதே..இவருடைய தொழில்.."
அரிச்சந்திரன் அமைதியாகக் தலை அசைத்தான்.
பிணத்திற்கு நெருப்பு மூட்டிவிட்டு அவர்கள் சென்றார்கள்...
சிறிது நேரத்தில் நெருப்பின் வேகத்தால் நரம்புகள் இழுக்கப்பட்டுப் பிணம் எழுந்து உட்கார்ந்தது.
அரிச்சந்திரன் கத்தினான் " ..வட்டி வசூலாகி விட்டது..."
பிணம் மீண்டும் படுத்துக் கொண்டு விட்டது.
- கவியரசு கண்ணதாசன் .
- நாம் பயன்படுத்தும் டிஷ் வாஷர் கருவியை கண்டுபிடித்தவர் ஜோசப்பின் கோக்ரேன் என்ற பெண்.
- மின்சார காபி ஃபில்டரை மெலிட்டா பென்ஸ் என்ற பெண் கண்டுபிடித்தார்.
நாம் இன்று சமையலறைகளில் பயன்படுத்தும் மிக்சியை கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்தவர் இந்தியாவைச் சேர்ந்த உஷா மாதுர் என்ற பெண்மணி. அவரும் கணவர் சத்ய பிரகாஷ் மாதுரும் இணைந்து "சுமீத்" என்ற பிராண்டை சர்வதேச அளவுக்கு உயர்த்தினார்கள்.
நாம் பயன்படுத்தும் வாஷிங் மிஷினில் துணிகளைப் பிழியும் தொழில்நுட்பத்தை எல்லன் எக்லின் என்ற ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணி கண்டுபிடித்தார்.
நாம் பயன்படுத்தும் டிஷ் வாஷர் கருவியை கண்டுபிடித்தவர் ஜோசப்பின் கோக்ரேன் என்ற பெண்.
நாம் இன்று சமையலறையில் பரவலாக பயன்படுத்தும் மின்சார குளிர்சாதனப் பெட்டியை கண்டுபிடித்தவர் பிளாரன்ஸ் பர்பார்ட் என்ற பெண் (தெரு கூட்டும் கருவியும் இவர் கண்டுபிடித்ததே!).
நாம் துணிகளை இஸ்திரி செய்ய பயன்படுத்தும் அயர்ன் போர்டை கண்டுபிடித்தவர் சாரா பூன் என்ற ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணி.
மின்சார காபி ஃபில்டரை மெலிட்டா பென்ஸ் என்ற பெண் கண்டுபிடித்தார்.
இன்றைய சிசிடிவிகளுக்கு எல்லாம் முன்னோடி ஹோம் செக்யூரிட்டி சிஸ்டம் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணான மேரி வான் பிரிட்டன் பிரவுன் கண்டுபிடித்தது.
ஐஸ்கிரீம் செய்யும் கருவியை கண்டுபிடித்தவர் நான்சி ஜான்சன் என்ற பெண்மணி.
-நிவேதா லூயிஸ்
- ஏழை மூதாட்டிகளுக்கு மாதம் எவ்வளவு தேவைப்படும் என்று விசாரித்தார்.
- ஆதரவற்ற முதியோர்கள் எத்தனை பேர் எனக் கணக்கெடுக்க உத்தரவிட்டார்.
காமராஜர் முதல்வரான பிறகு கும்பகோணத்துக்கு ஒருமுறை வந்திருந்தார். காமராஜர் காரில் இருந்து இறங்கும் நேரத்தில் ஒருமூதாட்டி அவரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி போலீஸ்காரரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.
இந்தச் சண்டையைப் பார்த்து விட்டார் காமராஜர் அவரை விடும்படி போலீசாரிடம் சொல்ல, அந்த மூதாட்டி காமராஜரை நெருங்கினார்.
`ஐயா, என்னைப்போல வயசானவங்க முடியாத காலத்துலயும் கூடை தூக்கிப் பிழைக்க வேண்டியிருக்கு. எங்களுக்கு ஏதாவது செய்யணும்' என்றார்.
`ஆகட்டும் பார்க்கலாம்' என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார்.
சொல்லிவிட்டு நகர்ந்து விட்டாரே ஒழிய அந்த மூதாட்டி சொன்ன வார்த்தைகள் மனதுக்குள் வந்து மோதின.
கார் புறப்பட்டது. அதில் இருந்த அதிகாரிகளிடம் இந்த ஏழை மூதாட்டிகளுக்கு மாதம் எவ்வளவு தேவைப்படும் என்று விசாரித்தார்.
யோசித்த அதிகாரிகள், `இருபது ரூபாய் ஆகும்' என்றனர்.
சென்னை வந்து சேர்ந்ததும் மாநிலத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் எத்தனை பேர் எனக் கணக்கெடுக்க உத்தரவிட்டார். உடனடியாக முதியோர் பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
-சிங்காரவேலு பாலசுப்பிரமணியம்
- பார்வையாளர்களை ஒரே நாடகத்தைப் பலமுறை பார்க்கவைத்தது.
- எதையும் எதிர்கொள்ளும் அச்சமே அறியாத மனம் ராதாவின் சொத்து.
நாடகத்தில் இல்லாத வசனங்களைப் பேசி அதிர்ச்சியூட்டுவது எம்.ஆர். ராதாவின் வாடிக்கை. அதுவே பார்வையாளர்களை ஒரே நாடகத்தைப் பலமுறை பார்க்கவைத்தது.
'தூக்கு மேடை' நாடகத்தில் பாண்டியனாக நடித்த கலைஞரிடம் "உங்க அண்ணாவை தளபதி தளபதின்னு சொல்றீங்களே, அவரு எந்தப் போருக்குத் தளபதி" என்று திடீரெனக் கேட்டார் ராதா.
கலைஞர் சுதாரித்துக்கொண்டு, "வீணை வாசிக்கப்படும்போது மட்டும் வீணையல்ல. உறையில் இருந்தாலும் வீணைதான். அதுபோலத்தான் போருக்கும் அவர்தான் தளபதி. அமைதிக்காலத்திலும் அவர்தான் தளபதி" என்று சொன்னதாக பின்னாள்களில் கலைஞர் எழுதினார்.
எதையும் எதிர்கொள்ளும் அச்சமே அறியாத மனம் ராதாவின் சொத்து. அந்த நாடகத்துக்குத் தலைமை பெரியார். பாதி நாடகம் முடிந்து இடைவேளை நேரத்தில் பெரியார் பேசுகிறார். பார்வையாளரில் ஒருவர் எழுந்து, "இவரு பேச்சைக் கேட்க நாங்க காசுகொடுக்கலை. நாடகத்தைப்போடு" எனக் கத்துகிறார்.
மேக்அப் ரூமிலிருந்த ராதாவுக்குச் செய்தி போகிறது. பாதி மேக்கப்போடு வந்த ராதா, கத்தியவரைப் பார்த்து, "நாடகம் முடிஞ்சிடுச்சு, நீங்கள் போகலாம். இனி இவர்தான் பேசுவார்" என்றாரே பார்க்கலாம், பெரியாரே அசந்துவிட்டார். இந்தமாதிரி பதிலை அவரே எதிர்பார்க்கவில்லை.
- கவிஞர் நந்தலாலா.
- சங்கடங்கள் வரும் போது தடுமாற்றம் அடையாதீர்கள்...!
- எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும்.
எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...
தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்.
உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...
குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.
வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.
ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது ஊமையாய் இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.
சங்கடங்கள் வரும் போது தடுமாற்றம் அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது தடம் மாறாதீர்கள்.
வளமுடன் வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சனைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி நீங்கள் நன்றாக அறிவீர்கள், யார் உண்மையான நண்பர்கள் என்று...?
ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு நீங்கள் மட்டுமே காரணம்.
நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.
அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.
வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய பேச்சையும் கேட்பவர்.
எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.
நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை முட்டாள் என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு நம்பிக்கையையே ஆகும்.
அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம்.. கோபத்தை அடக்கி ஆளும் திறமை படைத்தவன் என்பதே அர்த்தம்.
மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை. அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!
-ராம்கி
- செல்வம் அழியும். ஆனா கல்வி அழியாது.
- உன்னைய கடைசிவரைக்கும் காப்பாத்தும். கைவிடாதுன்னு சொன்னார்.
என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன்.
'எவ்வளவு தேவை?'ன்னு கேட்டார்.
'3 ஆயிரம் தேவைப்படுது'ன்னு சொன்னேன்.
கேட்ட தொகைக்கு உடனே ஏற்பாடு செஞ்சுட்டு 'காலேஜுல சேர்றதற்கு முன்னால என்னைய வந்து பார்த்துட்டுப் போ'ன்னு சொன்னார்.
காலேஜ் அட்மிஷன் கிடைச்ச பிறகு எம்.ஜி.ஆர் கிட்ட விசயத்தைச் சொல்லலாமுன்னு போனதுமே, வீட்டுல இருந்தவங்க டிபன் சாப்பிடச் சொல்லிட்டாங்க. சாப்பிட்டு காத்திருந்தேன்.
அரசியல் காரணமா 1967ல எம்.ஜி.ஆர் ரொம்ப பிஸியா இருந்தார். குளிச்சு முடிச்சுட்டு ஏழு மணிக்கு அவர் ரூமுக்கு வந்தார். வந்ததும் யார் வெளியே உட்கார்ந்திருக்கிறா'ன்னு கேட்டார்.

'கலைவாணர் பையன் வந்திருக்கிறார்'ன்னு வீட்டுல இருந்தவங்க சொன்னதும், உடனே வரச்சொன்னார்.
நான் அவர் ரூமுக்குப் போனதும் முதல்ல 'டிபன் சாப்பிட்டியா?'ன்னு கேட்டார். அடுத்து 'காலேஜ்ல இடம் கிடைச்சாச்சா?'ன்னு கேட்டார்.
'இடம் கிடைச்சிடுச்சு. சேரப் போறேன். அதான் அதுக்கு முன்னால உங்கள பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்'ன்னு சொன்னேன்.
முன்ன உங்கப்பா எவ்வளவு இன்கம் டாக்ஸ் கட்டுனாருன்னு தெரியுமா?'ன்னு கேட்டார். 'எனக்குத் தெரியாது'ன்னு சொன்னேன்.
ஒன்றரைக்கோடி ரூபாய் வரி கட்டினாரு. அப்படின்னா அவர் எவ்வளவு சம்பாதிச்சிருப் பாரு?'ன்னு கேட்டார்.
'பல கோடி ரூபா இருக்கும்'னு சொன்னேன்.
'இப்ப உங்ககிட்ட எவ்வளவு இருக்கு?'ன்னு கேட்டார்.
'ஒன்னும் இல்லையே'ன்னு சொன்னேன்.
'செல்வம் அழியும். ஆனா கல்வி அழியாது. அதனாலதான் கல்விக்கு உதவி செஞ்சிருக்குறேன். அது உன்னைய கடைசிவரைக்கும் காப்பாத்தும். கைவிடாதுன்னு சொன்னார்.
"அவர் சொன்ன மாதிரியே நான் படிச்சு முடிச்சு வேலைக்குப் போய் நல்லா சம்பாதிச்சேன். இப்பவும் எனக்கு மாசாமாசம் பென்ஷன் வருது" என்கிறார்.
-பிரசாந்த்
- துறவி சிரித்துக் கொண்டேசொன்னார்
- உன் மனதில் உலகம் இருப்பதுதான் பற்று.
துறவு என்பது 'பொருள்கள்' சம்பந்தப்பட்டது அல்ல...'எண்ணங்கள்' சம்பந்தப்பட்டது..
துறவு 'வெளியே' சம்பந்தப்பட்டதல்ல...'உள்ளே' சம்பந்தப்பட்டது...
துறவு 'உலகம்' சம்பந்தப்பட்டதல்ல...'ஒருவன்' சம்பந்தப்பட்டது...
ஒருநாள் ஒரு பிச்சைக்காரன், ஒரு துறவியின் இருப்பிடத்திற்குசென்றான்...
துறவியோ, சொகுசு மெத்தையில், அழகுக் கூடாரத்தில், தங்கக் கட்டிலில் இருந்தார்.
இதைக் கண்ட பிச்சைக்காரன் அதிர்ச்சியடைந்து,
'இது என்ன அநியாயம்' என்று கூவினான்.
பின்னர் அவரிடம்..."ஐயா, மதிப்பிற்குரிய துறவியாரே !உங்கள் ஞானம் பற்றியும், துறவு பற்றியும், பெரிதும் கேள்விப்பட்டிருக்கிறன்.
ஆனால், உமது இந்தக் கோலம்...சொகுசான சுற்றுப்புறம்...என்னைக் குழப்புகிறதே"என்றான்.
துறவி சிரித்துக் கொண்டேசொன்னார்...
"இவைகளை எல்லாம் இப்படியே விட்டுவிட்டு உன்னுடன் வர நான் தயார். இப்பொழுதே தயார்."என்று சொல்லியபடியே துறவி உடனே எழுந்தார்.
விறுவிறுவென பிச்சைக்காரனுடன் நடந்தார்.
செருப்பைக் கூட அணியவில்லை..
சிறிது தூரம் சென்றவுடன் பிச்சைக்காரன் பதைபதைத்துக் கூறினான்.
"ஐய்யோ ! என்னுடைப் பிச்சைப் பாத்திரத்தை, உங்கள் கூடாரத்திலேயே வைத்துவிட்டேன். அது இல்லாமல், நான் என்ன செய்வேன்?
தயவு செய்து கொஞ்சம் இங்கேயே இருங்கள். நான் போய் அதைக் கொண்டு வந்துவிடுகிறேன்!"
துறவி பெரிதாகச் சிரித்தார்.
பின் கூறினார்:
என் நண்பனே! என் கூடாரத்தில் உள்ள தங்கக்கட்டில் பூமியின் மேல்தான் நிற்கிறது."என் இதயத்தின் மேல் அல்ல.!"
ஆனால், உன் பிச்சைப் பாத்திரம் உன்னை இந்த துரத்து துரத்துவதாக இருக்கிறதே!"
"உலகத்தில் இருப்பது,பற்று இல்லை...
உன் மனதில் உலகம் இருப்பதுதான் பற்று.
உன் மனதிலிருந்து, இந்த உலகம் மறைந்துவிட்டால்...அதுதான் துறவு."
-ஓஷோ
- கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
- கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்?
கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்குப் பல வீடு.
கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
கடல் திடலாகும், திடல் கடலாகும்.
கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.
கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது..
கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.
கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
கண் கண்டது கை செய்யும்.
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.
கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
கண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அணைக்கும்.
கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி
கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
கரணம் தப்பினால் மரணம்.
கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்.
கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது.
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
கல்லாடம் [நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
கல்லாதவரே கண்ணில்லாதவர்.
கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
கல்வி அழகே அழகு.
கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
கழனி பானையில் கைவிட்ட மாதிரி.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
கள்ள மனம் துள்ளும்.
கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
கறப்பது கால்படி என்றாலும் உதைப்பது பல்லு போகவாம்..
கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
கனிந்த பழம் தானே விழும்.
கனியை விட்டுக் காயைத் தின்பாளா?
- பிரகாஷ் முனுசாமி






