search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
    X

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், தொடர்ந்து திருநடை திறந்து திருவிளக்கு ஏற்றுதலும், காலை 6 மணிக்கு பணிவிடையும், தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும், காலை 6.30 மணிக்கு திருக் கொடியேற்றமும் நடந்தது.

    காவி உடை அணிந்து தலைப்பாதை அணிந்த அய்யா வழி பக்தர்களின் அய்யா சிவ, சிவா, அரகரா, அரகரா என்ற பக்தி கோ‌ஷத்துக்கு இடையே பாலபிரஜாபதி அடிகளார் திருக்கொடியேற்றி வைத்தார்.

    தொடர்ந்து வாகன பவனியும், பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மமும் நடந்தது. நிகழ்ச்சியில் பல மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், இரவு வாகன பவனியும், அன்னதர்மமும் நடக்கிறது.

    வருகிற 31-ந்தேதி எட்டாம் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு தலைமை பதியின் வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், அன்னதர்மமும் நடக்கிறது.

    9-ம் நாள் விழாவில் இரவு அனுமன் வாகன பவனியும், 10-ம் நாள் விழாவில் இரவு இந்திர வாகன பவனியும் நடக்கிறது. அடுத்த மாதம் 3-ந் தேதி திங்கட்கிழமை 11-ம் திருவிழா நடக்கிறது. அன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், இரவு வாகன பவனியும், அன்னதர்மமும், கலையரங்கில் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
    Next Story
    ×