search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ணாரியம்மன் கோவிலில் நாளை குண்டம் விழா
    X

    பண்ணாரியம்மன் கோவிலில் நாளை குண்டம் விழா

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்மிக்க பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது புகழ்மிக்க பண்ணாரி அம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் விழா சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த 4-ந்தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மன் சப்பரம் புதுவடவள்ளி, ராஜன் நகர், சிக்கரசம் பாளையம், புதுபீர்கடவு மற்றும் சத்தியமங்கலம் நகரின் பல்வேறு இடங்களில் வீதி உலா வந்தது.

    ஒவ்வொரு கிராமத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அம்மன் சப்பரத்தை வரவேற்று பயபக்தியுடன் வணங்கினர். மேலும் பல பக்தர்கள் அம்மன் சப்பரம் வரும் வழியில் தரையில் படுத்து அம்மனை வணங்கினர்.

    சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊர்களில் வீதிஉலா வந்த அம்மன் மீண்டும் கோவிலை சென்றடைந்தது. இதைதொடர்ந்து கம்பம் நடப்பட்டது. மலைவாழ் மக்கள் தாரை தப்பட்டை முழங்க அம்மன் புகழ்பாடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மேலும் விழாவையொட்டி தினமும் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்து வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு திருக்குளம் சென்று அம்மன் அழைத்தல் மற்றும் வரம் பெறுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இன்று இரவு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் மலைபோல் குவிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு குண்டம் வார்க்கப்படுகிறது.

    இதையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு குண்டம் இறங்கும் விழா தொடங்குகிறது. முதலில் கோவில் தலைமை பூசாரி குண்டம் இறங்க தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதிக்கிறார்கள். நாளை நடக்கும் குண்டம் விழாவுக்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பே பக்தர்கள் தடுப்பு கம்பங்களில் அமர்ந்து இடம் பிடித்து குண்டம் இறங்க காத்திருக்கிறார்கள்.

    இவர்கள் அமர்ந்துள்ள இடத்திலேயே சமைத்து சாப்பிட்டும் வருகிறார்கள். குண்டம் விழாவில் ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல் திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குகிறார்கள்.

    மேலும் கர்நாடக மாநில பக்தர்களும் ஆயிரக்கணக்கான பேர் பலந்து கொண்டு தீ மிதிக்கிறார்கள். குண்டம் விழாவை யொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுளகிறார்கள்.
    Next Story
    ×