search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தை அமாவாசை: வேதாரண்யம் - திருவையாறில் புனித நீராடி தர்ப்பணம் செய்த மக்கள்
    X

    தை அமாவாசை: வேதாரண்யம் - திருவையாறில் புனித நீராடி தர்ப்பணம் செய்த மக்கள்

    தை அமாவாசையையொட்டி வேதாரண்யம், திருவையாறில் புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உத்ராயனப் புண்ணிய காலத்தை முன்னிட்டு (சூரிய பகவான் வடக்கு நோக்கி நகரும் நாள்) தை அமாவாசையில் கோடியக்கரையில் ஆதிசேது என்ற சித்தர் கட்ட கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கடலில் புனித நீராடினர். பின்பு வேதாரண்யம் சன்னதி கடல் என்று அழைக்கப்படும் வேதநதியிலும் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பண திதி கொடுத்து வழிபட்டனர்.

    பின்பு வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்திலும் நீராடி சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். ரி‌ஷப வாகனத்தில் சந்திசேகர சுவாமி அலங்கரிக்கப்பட்டு மேல் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அருள்பாலித்தார். பின்பு திரிபங்கி வடிவிலான துர்க்கை அம்மனுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் மற்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி.ஸ்ரீகாந்த் தலைமையில் 500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் செய்திருந்தினர்.

    அதேபோல் பூம்புகார் கடலிலும், காவிரி கடலில் கலக்கும் சங்கம துறையிலும் நீராடி கடற்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின்னர் ரெத்தினபூரணேஸ்வரர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதேபோல் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி உத்திர பாத தரிசனம் செய்தனர்.

    இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறில் காசிக்கு வீசம் கூட என்ற பெயர் பெற்ற காவிரி புஷ்ய மண்டப படித்துறையிலும் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அங்கு வழியில் அமைக்கப்பட்டிருந்த கடைகளில் காய்கறிகள், பழங்கள் வாங்கி சென்று காவிரியில் நீராடி புஷ்ய மண்டபத்தில் உள்ள புரோகிதர்களிடம் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

    பின்னர் பிண்டத்தை காவிரியில் விட்டு வணங்கி அங்கிருந்து அய்யாறப்பர் கோவிலின் தெற்கு வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டார் சன்னதியின் வாசலில் குங்கிலியம் பொடி போட்டு வணங்கி சென்று ஆட்கொண்டாருக்கு அர்ச்சனை செய்தனர். பின்னர் கோவிலின் உள்ளே அய்யாறப்பர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு போலீசார் செய்திருந்தனர்.

    இதேபோல் கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் காலை முதல் பக்தர்கள் குளத்தின் 4 கரைகளிலும் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பண திதி கொடுத்து வழிபட்டனர். பின்னர் குளத்தில் கரையில் அமைந்துள்ள சோடச லிங்க சன்னதிகளில் சென்று வழிபட்டனர். பின்னர் அருகில் உள்ள சிவன் கோவில்களில் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
    Next Story
    ×