search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    1992-ல் நியூசிலாந்துக்கு பாகிஸ்தான் கொடுத்த அதிர்ச்சி, மீண்டும் அரங்கேறும்: வாசிம் அக்ரம் நம்பிக்கை
    X

    1992-ல் நியூசிலாந்துக்கு பாகிஸ்தான் கொடுத்த அதிர்ச்சி, மீண்டும் அரங்கேறும்: வாசிம் அக்ரம் நம்பிக்கை

    1992-ல் தோல்வியை சந்திக்காமல் வந்த நியூசிலாந்தை வீழ்த்தியதுபோல் தற்போதும் நடக்கும் என வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. தொடரில் முதல் பாதியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் நிலையில் இருந்தன.

    இதனால் போட்டியில் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது. அப்போதுதான் இலங்கையிடம் இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது. அதன்பின் இலங்கை, பாகிஸ்தான், வங்காள தேசம் அணிகள் எங்களுக்கும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது என வரிந்து கட்டி இறங்கியுள்ளனர்.

    நியூசிலாந்து அணி இந்தத் தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காமல் சென்று கொண்டிருக்கிறது. 1992 உலகக்கோப்பை தொடரிலும் நியூசிலாந்து தோல்வியை சந்திக்காமல் சென்றது. பாகிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மீண்டும் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    தற்போதைய உலகக்கோப்பையில் பாகிஸ்தான் 6 போட்டியில் இரண்டில் வெற்றி, 3-ல் தோல்வி, ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது ஆகியவற்றின் மூலம் ஐந்து புள்ளிகள் பெற்றுள்ளது. அடுத்துள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்புள்ளது.

    நாளை நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதன்பின் ஆப்கானிஸ்தானையும், வங்காள தேசத்தையும் எதிர்கொள்கிறது. நியூசிலாந்தை வீழ்த்திவிட்டால், மற்ற இரண்டு அணிகளையும் வீழ்த்தி விடலாம் என்று அந்த அணி நினைக்கிறது.

    இந்நிலையில் 1992-ல் தோற்கடிக்க முடியாமல் இருந்த நியூசிலாந்தை எப்படி வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினோமோ? அதேபோல் தற்போதும் கைப்பற்றுவோம் என வாசிம் அக்ரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘நியூசிலாந்து அணி 1992-ல் எங்களிடம் மோதுவற்கு முன்பு வரை தோல்வியை சந்திக்காமல் இருந்தது. நாங்கள் அவர்களை வீழ்த்தினோம். மீண்டும் அவர்கள் தோற்கடிக்க முடியாத அணியாக இருக்கின்றனர். 1992-ல் என்ன நடந்ததோ? அது மீண்டும் நடக்கும் என நம்புகிறேன்.

    ஆனால், பாகிஸ்தான் வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள அணியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் இதுவரை 14 கேட்ச்களை பிடிக்க தவறியுள்ளன. உலகக்கோப்பை போன்ற தொடரில் இது சிறந்தது அல்ல’’ என்றார்.-
    Next Story
    ×