search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    துருக்கியில் நில நடுக்க இடிபாடுகளில் இருந்து 128 மணி நேரத்துக்கு பிறகு 2 மாத குழந்தை உயிருடன் மீட்பு
    X

    துருக்கியில் நில நடுக்க இடிபாடுகளில் இருந்து 128 மணி நேரத்துக்கு பிறகு 2 மாத குழந்தை உயிருடன் மீட்பு

    • நில நடுக்கத்தால் இரு நாடுகளும் பெறும் துயரத்துக்கு உள்ளாகி இருக்கின்றன.
    • துருக்கியில் நில நடுக்க பாதிப்புக்கு மத்தியில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.

    அங்காரா:

    துருக்கி-சிரியாவில் கடந்த 5-ந்தேதி ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் தரை மட்டமான ஆயிரக்கணக்கான வீடு, கட்டிட இடி பாடுகளில் தொடர்ந்து மீட்கும்பணி நடந்து வருகிறது.

    இந்த நில நடுக்கத்தால் இரு நாடுகளும் பெறும் துயரத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. கட்டிட இடி பாடுகளில் இருந்து பலியானவர்களின் உடல்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் நில நடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியது. இதில் துருக்கியில் பலியானோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    இடிபாடுகளில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அதே நேரத்தில் கட்டிட இடிபாடுகளில் இருந்து பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். 100 மணி நேரத்துக்கு பிறகு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்புக் குழுவினர் வெளியே கொண்டு வந்தனர். குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    இந்த நிலையில் துருக்கியில் 128 மணி நேரத்துக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து 2 மாத பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

    துருக்கியில் ஹடாய் நகரில் கட்டிட இடிபாடுகளை அகற்றிய போது ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே மீட்புக் குழுவினர் குழந்தையை மீட்க இடிபாடுகளை வேகமாக அகற்றினர். சில வீரர்கள் இடிபாடுகளுக்குள் சென்று பார்த்தனர்.

    பின்னர் அந்த பச்சிளம் குழந்தையை 128 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உடனே குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அந்த குழந்தை பிறந்து 2 மாதங்களே ஆகிறது. அந்த குழந்தையை மீட்டப்போது, அங்கிருந்த மீட்புக்குழுவினர், பொது மக்கள் கைகளை தட்டி மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

    அக்குழந்தை தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் 128 மணி நேரம் தாக்குப்பிடித்து அக்குழந்தை இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே போல் 5 நாட்களுக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து 2 வயது சிறுமி, கர்ப்பிணி பெண், 70 வயது மூதாட்டி ஆகியோரும் உயிருடன் மீட்கப்பட்டனர். காசியான்டெப் மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இதற்கிடையே துருக்கியில் நில நடுக்க பாதிப்புக்கு மத்தியில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் திருட்டில் ஈடுபட்ட 48 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    அடுத்து மூன்று நாட்களுக்கு கைது நடவடிக்கை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருட்டு அல்லது கடத்தலில் ஈடுபடும் நபர்கள் அரசின் உறுதியான கரங்களில் இருந்து தப்ப முடியாது என்று துருக்கி பிரதமர் எர்டோகன் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.

    சிரியாவில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. அங்கும் இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. மேலும் இடிபாடுகளில் மீட்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

    நில நடுக்கம் பாதித்த துருக்கி, சிரியா மக்களுக்கு 3 மாதங்களுக்கு அவசர கால விசாக்களை வழங்கு வதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு உள்துறை மந்திரி நான்சி டீசர் கூறும்போது, "நில நடுக்கம் பாதித்த பகுதிகளில் இருந்து தங்களது நெருங்கிய உறவினர்களை ஜெர்மனிக்கு அழைத்து வர துருக்கி, சிரியா மக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக விசா கெடுபிடி, அரசு விதிகள் ஆகியவை இருக்காது. இது அவசர கால உதவி" என்றார்.

    இந்திய பேரிடர் நிவாரண படையினர் துருக்கியில் மீட்புபடையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் நிவாரண பொருட்கள் இந்தியா சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே இந்தியா, நிவாரண பொருட்கள் அடங்கிய 7-வது விமானத்தை துருக்கிக்கு அனுப்பியது. அதிலிருந்து மருந்துகள், போர்வைகள் உள்ளிட்ட பொருட்களை துருக்கி அரசு அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

    Next Story
    ×