search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஸ்பெயின் பிரதமர் வந்திருக்கும் சமயத்தில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்- 3 பேர் பலி
    X

    ஸ்பெயின் பிரதமர் வந்திருக்கும் சமயத்தில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்- 3 பேர் பலி

    • உக்ரைன் மட்டுமே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான விதிமுறைகளையும் நேரத்தையும் நிர்ணயிக்க முடியும்.
    • ஆக்கிரமிப்பாளருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே நடக்கும் இந்த சண்டையில் இருவரையும் சமமாக நடத்த முடியாது.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையின் விளைவாக உக்ரைன் உள்கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்துள்ளன. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்காக உக்ரைன் படைகள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து நிதியுதவியும், ஆயுத உதவியும் வழங்குகின்றன.

    இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், உக்ரைனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றியபோது உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், உக்ரைன் மீதான ரஷியாவின் சட்டவிரோத மற்றும் நியாயமற்ற ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐரோப்பாவின் உறுதியான ஆதரவை தெரிவிக்கவே வந்திருப்பதாக கூறினார்.

    ஸ்பெயின் பிரதமர் சுற்றுப்பயணத்தை தொடங்கிய சமயத்தில், போர் தீவிரமாக நடைபெறும் உக்ரைனின் கிழக்கு பிராந்தியான டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷிய படைகள் ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளன. இதில் பொதுமக்கள் தரப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் காயமடைந்துள்னர்.

    இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இணைந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    4 லியோபார்ட் டாங்கிகள், கவச வாகனங்கள், நடமாடும் மருத்துவமனை உட்பட உக்ரைனுக்கு அதிக அளவிலான கனரக ஆயுதங்களை ஸ்பெயின் வழங்கும். மேலும் புனரமைப்பு பணிகளுக்காக கூடுதலாக 55 மில்லியன் யூரோக்களை வழங்கும்.

    உக்ரைன் மட்டுமே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான விதிமுறைகளையும் நேரத்தையும் நிர்ணயிக்க முடியும். மற்ற நாடுகளும் பிராந்தியங்களும் சமாதானத் திட்டங்களை முன்வைக்கின்றன. அவர்களின் அக்கறை பாராட்டத்தக்கது, ஆனால், அதே நேரத்தில், அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

    இது ஆக்கிரமிப்பு போர். ஆக்கிரமிப்பாளருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே நடக்கும் இந்த சண்டையில் இருவரையும் சமமாக நடத்த முடியாது. விதிகளை புறக்கணிப்பதை எந்த வகையிலும் ஆதரிக்கக்கூடாது. அதனால்தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சமாதான திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×