search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு: உலக தலைவர்கள் 500 பேர் அஞ்சலி
    X

    ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு: உலக தலைவர்கள் 500 பேர் அஞ்சலி

    • இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்பட உலக நாடுகளை சேர்ந்த 500 தலைவர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்
    • இறுதி சடங்கினை பொதுமக்கள் பார்க்கும் வகையில் 125 தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

    லண்டன்:

    இங்கிலாந்து மகாராணியாக கடந்த 70 ஆண்டுகள் 214 நாட்கள் இருந்து வைர விழா கொண்டாடி சாதனை படைத்த ராணி எலிசபெத் (வயது 97) உடல் நலக்குறைவு காரணமாகவும், வயது மூப்பினாலும் கடந்த 8-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    கடந்த 5 நாட்களாக லட்சக்கணக்கான பொதுமக்கள் சுமார் 17 மணி நேரத்துக்கும் மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ராணி மேல் வைத்திருந்த அன்பால் நீண்ட வரிசையில் காத்திருந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இறுதிச்சடங்கில் பங்கேற்க இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 500 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ரஷியா, ஆப்கானிஸ்தான், மியான்மர், சிரியா, வட கொரியா ஆகிய நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

    ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், மன்னர் சார்லசை சந்தித்த இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு

    இங்கிலாந்தின் அழைப்பை ஏற்று இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பாகிஸ்தான் உள்பட உலக நாடுகளை சேர்ந்த 500 தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மன்னர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் என 2 ஆயிரம் பேர் லண்டனுக்கு வந்தனர்.

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் லண்டன் வந்தடைந்தார். நேற்று அவர் இந்திய மக்கள் சார்பில் ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் இங்கிலாந்து புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

    இன்று காலை வரை ராணி எலிசபெத் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு பகல் 11 மணிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கிற்கான நிகழ்ச்சிகள் தொடங்கியது. இறுதிச்சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவரது மனைவி ஜில் பைடன் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்றனர்.

    11 நாட்களுக்கு பிறகு வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் பூட்டிய பீரங்கி வண்டியில் ராணி எலிசபெத் உடல் வைக்கப்பட்டு இறுதி பயணம் தொடங்கியது. இந்த இறுதி ஊர்வலத்தில் மன்னர் 3-ம் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம், ஹாரி மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவ வீரர்களுடன் அணிவகுத்து வந்தனர்.

    200 இசைக்கலைஞர்கள் இசை எழுப்பியபடி செல்ல ராணி எலிசபெத்தின் உடல் லண்டனில் புகழ்பெற்ற வீதிகள் வழியாக பக்கிம்காம் அரண்மனைக்கு அருகில் உள்ள வெலிங்டன் ஆர்ச் வரை சென்றது.

    இந்த ஊர்வலத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ரோட்டோரம் திரண்டு இருந்த பொதுமக்கள் தங்கள் மகாராணிக்கு கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர்.


    ராணியின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி பிரார்த்தனை செய்யப்பட்டது. அப்போது உடல மேல் கிரீடம் செங்கோல் உள்ளிட்டவை வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல் விண்ட்சர் கோட்டைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்குள்ள சிறிய தேவாலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. ராணியின் உடல், அவரது கணவர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது பெற்றோரும், சகோதரியும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இறுதிச்சடங்கு நடைபெறும்போது ஒலித் தொந்தரவு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஹிமித்ரோ விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் தரை இறங்கவும், புறப்படவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது.

    பிரமாண்டமாக நடந்த இந்த இறுதி சடங்கினை பொதுமக்கள் பார்க்கும் வகையில் 125 தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேலும் பூங்காக்கள், ரெயில் நிலையங்கள், ஓட்டல்கள் மற்றும் பொதுஇடங்களில் பெரிய அளவிலான திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    1965-ம் ஆண்டு போர்க்கால பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் இறுதிச்சடங்கு பிரமாண்டமாக நடந்தது. 57 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இன்று ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு அதேபோன்று மிக பிரமாண்டமாக நடந்துள்ளது.

    மன்னர் காலத்தில் நடப்பது போன்று பாரம்பரிய முறைப்படி இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி டி.வி. சானல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பார்த்தனர்.

    இறுதி சடங்கையொட்டி பக்கிம்காம் அரண்மனை, பாராளுமன்ற கட்டிடம், வெஸ்ட் மின்ஸ்டர் அபேவை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×