என் மலர்
உலகம்
பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில வரவேற்பு: ஜில் பைடனுக்கு வைரத்தை பரிசளித்தார்
- வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை வரவேற்றார் ஜோ பைடன்
- இரு தலைவர்களும் கட்டித்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க்கில் அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு துறைகளை சார்ந்த நிபுணர்களை சந்தித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
நேற்று ஐ.நா. தலைமையகத்தில் நடந்த உலக யோகா தின நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று மற்றவர்களுடன் யோகா செய்தார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன் சென்றார். ஆண்ட்ரூஸ் விமான நிலையத்தில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இருநாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது. அங்கிருந்து பிரதமர் மோடி காரில் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு சென்றார். காரில் இருந்து இறங்கிய அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் கைகுலுக்கி வரவேற்றனர். மோடியை வரவேற்கும் வகையில் இந்திய தேசிய பறவையான மயில் மற்றும் தாமரை மலர்களால் வெள்ளை மாளிகை அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
பின்னர் ஜோ பைடன் அளித்த விருந்தில் மோடி கலந்து கொண்டார். இதில் சைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டது. இந்த விருந்தில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்து கொண்டனர். இளம் நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சியை ஜோ பைடனும், மோடியும் கண்டு களித்தனர்.
இதைத்தொடர்ந்து ஜோ பைடனும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசினார்கள். இதுகுறித்து மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் வெள்ளை மாளிகையில் எனக்கு விருந்து அளித்த அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் ஆகியோருக்கு நன்றி. இருவருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினேன் என்று தெரிவித்து உள்ளார்.
வெள்ளை மாளிகை சென்ற பிரதமர் மோடி சந்தன கட்டையால் செய்யப்பட்ட கலைவண்ணம் மிக்க பெட்டியை ஜோ பைடனுக்கு பரிசாக வழங்கினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தலைசிறந்த கைவினைஞரின் கைவினைப்பொருளால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக சந்தனப் பெட்டியாகும். மைசூரில் இருந்து பெறப்பட்ட சந்தனமரத்தால் உருவாக்கப்பட்ட அந்த பெட்டியில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வடிவங்கள் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
அந்த பெட்டியில் வெள்ளியினால் செய்யப்பட்ட விநாயகர் சிலை மற்றும் எண்ணெய் விளக்கு போன்றவை இடம் பிடித்திருந்தன. கொல்கத்தாவில் உள்ள ஐந்தாம் தலைமுறை வெள்ளித் தொழிலாளிகளின் குடும்பத்தைச் சேர்ந்த கைவினைஞர்களால் கைவினைப்பொருளாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 95 சதவீதம் தூய்மையான வெள்ளி நாணயமும் இடம் பெற்றிருந்தது.
ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு 7.5 காரட் க்ரீன் டைமண்ட்-ஐ பரிசாக வழங்கினார்.
அதேபோல் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பழமையான கேமரா ஒன்றை பரிசளித்தார். அதோடு வனவிலங்கு புகைப்பட புத்தகம், கைகளால் உருவாக்கப்பட்ட பழங்காலத்து அமெரிக்க புத்தக பெட்டியையும் வழங்கினார்.








