என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம் (World)
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முக்கியமானது - ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை
- ஜி20 என்பது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 19 நாடுகளையும், ஐரோப்பிய கூட்டமைப்பையும் உள்ளடக்கிய அமைப்பு.
- ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் இன்று தொடங்கியது.
பாலி:
ஜி-20 அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் உள்ள ஜலன் நுசாதுவாவில் இன்று தொடங்கியது. மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளனர்.
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளையும் ஐரோப்பிய கூட்டமைப்பையும் உள்ளடக்கிய அமைப்பாக ஜி-20 உள்ளது.
இதற்கிடையே, ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று தனி விமானம் மூலம் இந்தோனேசியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தோனேசியாவில் வசிக்கும் இந்தியர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். அவர்களுடன் மோடி சிறிது நேரம் உரையாடினார்.
இந்நிலையில், இன்று காலை ஜி-20 மாநாடு நடைபெறும் பாலி நகரில் உள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலுக்கு உலக தலைவர்கள் வந்தனர். அவர்களை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வரவேற்றார். காலை தொடங்கிய மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவரை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வரவேற்றார்.
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். இருவரும் கை குலுக்கியபடி சிரித்துக் கொண்டு பேசினார். மேலும் மோடியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆகியோர் வரவேற்றனர். அதன்பின் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
இன்று உலகம் ஜி-20 அமைப்பிடம் இருந்து அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. சவாலான உலகளாவிய சூழலில் ஜி-20 மாநாட்டுக்கு தலைமை தாங்கிய இந்தோனேசியாவுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் என அனைத்தும் சேர்ந்து உலகில் அழிவை ஏற்படுத்தியுள்ளன.
உலகளாவிய விநியோக சங்கிலிகள் அழிவில் உள்ளன. உலகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஏழைகளுக்கு ஏற்கனவே வாழ்க்கை ஒரு போராட்டமாக இருக்கும் சூழலில் அத்தியாவசிய பொருட்கள் நெருக்கடி மிகவும் கடுமையானது. அதை கையாள்வதற்கான நிதி திறன் அவர்களுக்கு இல்லை.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் ஐ.நா. போன்ற பல தரப்பு நிறுவனங்கள் தோல்வியடைந்து உள்ளன என்பதை ஒப்புக் கொள்ள நாம் தயங்கக் கூடாது. அவற்றில் பொருத்தமான சீர்திருத்தங்களை செய்ய தவறிவிட்டோம்.
கொரோனா தொற்று நோயின்போது இந்தியா தனது 130 கோடி குடிமக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தது. அதே நேரத்தில் பல நாடுகளுக்கு உணவு தானியங்களும் வழங்கப்பட்டன.
உணவுப் பாதுகாப்பின் அடிப்படையில் உரங்களின் தற்போதைய பற்றாக்குறை மிகப்பெரிய நெருக்கடியாக உள்ளது. இன்றைய உரத் தட்டுப்பாடு நாளைய உணவு நெருக்கடியாகும். உரம் மற்றும் உணவு தானியங்கள் ஆகிய இரண்டின் விநியோக சங்கிலியையும் நிலையானதாகவும் உறுதியுடனும் பராமரிக்க பரஸ்பர ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்.
இந்தியா இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. நிலையான உணவுக்காக தினை போன்ற சத்தான மற்றும் பாரம்பரிய உணவு தானியங்களை மீண்டும் பிரபலப்படுத்தி வருகிறது.
உக்ரைனில் போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்புவதற்கான வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் பலமுறை கூறியுள்ளேன்.
கடந்த நூற்றாண்டில் 2-ம் உலக போர் உலகில் அழிவை ஏற்படுத்தியது. அதன்பிறகு அக்கால தலைவர்கள் அமைதியின் பாதையில் செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டேன். இப்போது அது நமது முறை.
கொரோனா காலத்துக்குப் பிறகு புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் உள்ளது.
உலகில் அமைதி, நல்லிணக்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூட்டு உறுதியை காட்டவேண்டியது காலத்தின் தேவையாகும். உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் என்பதால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கு முக்கியமானது.
2030-ம் ஆண்டுக்குள் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும். எரிசக்தி விநியோகத்தில் எந்த கட்டுப்பாடுகளையும் நாம் ஊக்குவிக்கக் கூடாது. எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.
தூய்மையான ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது. வளரும் நாடுகளுக்கு காலக்கெடு, மலிவு நிதி, தொழில் நுட்பத்தின் நிலையான வழங்கல் ஆகியவை உள்ளடக்கிய ஆற்றல் மாற்றத்திற்கு அவசியம்.
அடுத்த ஆண்டு புத்தர் மற்றும் காந்தியின் தேசத்தில் ஜி-20 மாநாடு நடைபெறும்போது உலகிற்கு அமைதிக்கான வலுவான செய்தியை தெரிவிக்க நாம் அனைவரும் உடன்படுவோம் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்