என் மலர்
உலகம்

பிரதமர் மோடி, இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை- முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
- இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.
- இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் மோடி, தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை கடந்த 3-ந்தேதி தொடங்கினார்.
முதலில் தாய்லாந்துக்கு சென்றடைந்த அவர், பிம்ஸ்டெக் அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். மேலும் உறுப்பு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் நேற்று இரவு இலங்கைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளிவிவகாரத்துறை மந்திரி விஜித ஹேரத் தலைமையிலான உயர் நிலைக்குழு வரவேற்றது.
பின்னர் தலைநகர் கொழும்புவில் உள்ள தாஜ்சமுத்ரா நட்சத்திர விடுதியில் தங்கினார். அப்போது அங்கு அவரை இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இதுதொடர்பாக மோடி தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறும்போது, கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினர் எனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
மோடியை வரவேற்கும் வகையில் சாலைகளில் பிரமாண்ட விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே கடந்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன. இதையடுத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும், இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி இலங்கை பயணத்தை மேற்கொண்டார்.
இன்று காலை 9 மணியளவில் தலைநகர் கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு முப்படைகளின் சம்பிரதாய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். பீரங்கி குண்டுகள் முழங்கவும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கைக்கு வருகை தரும் ஒரு தலைவருக்கு முப்படை வரவேற்பு அளிப்பது இது முதல் முறையாகும். இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, பிரதமர் மோடியை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இலங்கை அதிபர் ஒரு சம்பிரதாய வரவேற்புடன் வரவேற்றார்.
நமது மக்களின் பகிரப்பட்ட எதிர்காலம் மற்றும் பரஸ்பர செழிப்புக்கான கூட்டாண்மையை வளர்ப்பதற்கான இருதரப்பு விவாதங்கள் நடக்கிறது என்று தெரிவித்தார். மேலும் சுதந்திர சதுக்கத்தில் ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு இதுபோன்ற வரவேற்பு அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே உடன் இருந்தார். வரவேற்பு முடிந்ததும் மோடிக்கு இலங்கை பிரதமர், மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்பின் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.
திரிகோணமலையின் சம்பூரில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத் திட்டம், தம்புள்ள என்ற இடத்தில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப் படுத்தக்கூடிய குளிர்பதன வசதித் திட்டம், இலங்கை முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரம் மத வழிபாட்டுத் தலங்களின் மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.
பின்னர் இலங்கை அதிபரின் செயலகத்தில் பிரதமர் மோடி-இலங்கை அதிபர் அனுர குமாரதிச நாயகே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாட்டு மந்திரிகள், அதிகாரிகள் கொண்ட உயர் நிலைக் குழு பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன்முடிவில் ராணுவம் உள்பட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இது இந்தியா-இலங்கை ராணுவ உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாக உள்ளது. இரு நாடுகள் இடையே முதல் முறையாக ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் பின்னர் தாஜ் சமுத்ரா நட்சத்திர தங்கும் விடுதியில் பிரதமர் மோடியை இலங்கைப் பிரதமர், வெளியுறவு மந்திரி மற்றும் அரசியல் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசுகிறார்கள். இன்று மாலை அமைதி காப்புப் படையின் நினைவிடத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, உயிர்த் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். இதையடுத்து, அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்படுகிறது.
நாளையும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்கிறார். நாளை காலை கொழும்பில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அனுராதபுரத்தில் உள்ள விமானப்படை தளத்துக்கு பிரதமர் மோடியும் அதிபர் அனுரா குமார திசாநாயகேவும் செல்கிறார்கள்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக ஜெயஸ்ரீ மகாபோதி ஆலயத்துக்குச் சென்று வழிபடுகின்றனர். பின்னர், காலை 10 மணியளவில் அனுராதபுரம் ரெயில் நிலையத்தில் புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ள மஹவ-ஓமந்தை ரெயில் பாதை திறப்பு மற்றும் மஹவ-அனுராதபுரம் ரெயில் சமிக்கை வசதியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த இரண்டும் இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களாகும்.
இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அனுரா குமார திசநாயகே தனது முதல் அரசு முறை வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வந்தார். தற்போது அவரது தலைமையில் அரசு அமைந்த பிறகு முதல் வெளிநாட்டு தலைவராக பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது. குறிப்பாக இந்திய பெருங்கடல் பகுதியில் தன்னை நிலைநிறுத்த சீனா விரும்பும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இலங்கைக்கு செல்வது இது 4-வது முறையாகும். கடைசியாக 2019-ம் ஆண்டு இலங்கைக்கு சென்றிருந்தார்.






