search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    போருக்கு தயாராகுங்கள்: ராணுவ தலைமை ஜெனரலை நீக்கி வடகொரிய அதிபர் அதிரடி
    X

    போருக்கு தயாராகுங்கள்: ராணுவ தலைமை ஜெனரலை நீக்கி வடகொரிய அதிபர் அதிரடி

    • ஆயுத தொழிற்சாலைக்கு சென்ற கிம் ஜாங் உன், உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தல்
    • தென்கொரியா- அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ள இருக்கும் நிலையில் கிம் ஜாங் உன் முடிவு

    கொரிய தீபகற்பத்தில் எப்போதுமே அசாதாரண சூழ்நிலைதான் நிலவி வருகிறது என்றால் அது மிகையாகாது. அதற்கு முக்கிய காரணம் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்துவதுதான்.

    வடகொரியாவிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தென்கொரியா அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னிற்கு பிடிக்கவில்லை. இதனால் தென்கொரியாவை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வடகொரியா ஆயுதங்கள் சப்ளை செய்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. கடந்த மாதம் அமெரிக்காவின் அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் தென்கொரிய கடற்பகுதியில் காணப்பட்டது. இதற்கு வடகொரிய ஆட்சேபனை தெரிவித்தது.

    வருகிற 21 மற்றும் 24-ந்தேதிகளுக்கிடையில் அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட இருப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

    இதை வடகொரியாவுக்கான அச்சுறுத்தல் என கிம் ஜாங் உன் பார்க்கிறார்.

    இந்த நிலையில் வடகொரியாவின் ராணுவ தலைமை ஜெனரலை நீக்கியுள்ளார். அவருக்குப் பதிலாக ரி யோங் கில் என்பவரை ராணுவ தலைமை ஜெனரலாக நியமித்துள்ளார். இவர் பாதுகாப்பு மந்திரியாகவும் இருந்து வருகிறார். அந்த பதவியில் தொடர்ந்து நீடிப்பாரா? எனத் தெரியவில்லை.

    அதனோடு போருக்கு தயாராகும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு ஏற்ப ஆயுத தயாரிப்பை அதரிக்கவும் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் ஆயுத தொழிற்சாலைக்கு சென்றிருந்தார். அப்போது ஏவுகணை என்ஜின், பீரங்கி மற்றும் ஆயுதங்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய கேட்டுக்கொண்டார்.

    அங்குள்ள மீடியா ஒன்று, கிம் ஜாங் உன் தென்கொரியாவின் தலைநகர் சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை வரைபடத்தில் சுட்டிக்காட்டியது போன்ற படத்தை வெளியிட்டுள்ளது. இதனால் கிம் ஜாங் உன் போர் தொடுப்பதற்கு, ராணுவத்தை தயார் படுத்துகிறார் என பார்க்கப்படுகிறது.

    வடகொரியா குடியரசு நிறுவப்பட்ட 75-ம் ஆண்டையொட்டி அடுத்த மாதம் வடகொரியா ராணுவ அணிவகுப்பை நடத்த இருக்கிறது. ராணுவத்தை பலப்படுத்த பல்வேறு குழுக்களை வடகொரியா பயன்படுத்தி வருகிறது. போருக்கு தயாராகும் வகையில், தற்போதைய நவீன ஆயுதங்களை கொண்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×