search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வடகொரியாவில் பைபிள் வைத்திருந்ததால் குடும்பமே கைது.. 2 வயது குழந்தைக்கும் ஆயுள் தண்டனை: அமெரிக்கா தகவல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வடகொரியாவில் பைபிள் வைத்திருந்ததால் குடும்பமே கைது.. 2 வயது குழந்தைக்கும் ஆயுள் தண்டனை: அமெரிக்கா தகவல்

    • அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் ராஜதந்திர உறவு எதுவும் இல்லை.
    • வட கொரியாவில் 70,000 கிறிஸ்தவர்கள் உள்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    வட கொரியாவில் பல்வேறு மதத்தினர் இருந்தாலும் வடகொரிய அரசு நாத்திக அரசாக உள்ளது. மத உரிமைகள், மதச் சடங்குகள் செய்யும் உரிமைகள் உள்ளன. ஆனால், வட கொரிய அரசு எந்த மதத்தையும் ஊக்குவிப்பதில்லை. அதேசமயம், மத தண்டனைகள் உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

    இந்நிலையில், பைபிள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட பெற்றோருடன் அவர்களின் 2 வயது குழந்தைக்கும் வடகொரியா அரசு ஆயுள் தண்டனை விதித்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.

    சர்வதேச மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது:-

    வட கொரியாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் 70,000 கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறைக்கு அனுப்பப்பட்டவர்களில் இரண்டு வயது ஆண் குழந்தையும் இருந்தது. அவனது பெற்றோரிடம் பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

    மதப் பழக்கவழக்கங்கள் மற்றும் பைபிளை வைத்திருந்ததற்காக அந்தக் குடும்பம் கைது செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தை உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் 2009-ல் ஆயுள் தண்டனை பெற்று அரசியல் சிறை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் தாங்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும், பல்வேறு வகையான உடல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் விவரித்துள்ளனர். ஷாமனிச ஆதரவாளர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 90 சதவீத ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம்தான் பொறுப்பு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் ராஜதந்திர உறவு எதுவும் இல்லை. வட கொரியாவில் நீண்ட காலமாக மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கடந்த டிசம்பர் மாதம் ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு மற்ற நாடுகளுடன் அமெரிக்காவும் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×