என் மலர்tooltip icon

    நைஜர்

    • நைஜரில் மொஹம்மத் பஸோம் அதிபராக பதவி வகித்து வந்தார்
    • நாட்டை பாதுகாத்து கொள்ள தங்களால் முடியும் என்கிறது சியானி அரசாங்கம்

    மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக பெரிய நாடு நைஜர்.

    அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள இந்நாட்டின் அதிபராக மொஹம்மத் பஸோம் என்பவர் பதவி வகித்து வந்தார்.

    பாதுகாப்பின்மையையும், பொருளாதார நலிவையும் காரணம் காட்டி, ஜூலை 26 அன்று ராணுவ கிளர்ச்சியில் அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது. இதில் பஸோம் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

    நாட்டின் பாதுகாப்பிற்கான தேசிய கவுன்சில் எனும் ஒரு ராணுவ அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி என்பவர் புதிய அதிபராக பதவியேற்றார்.

    ஆனால் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்க மறுத்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு, மீண்டும் பஸோம் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என சியானிக்கு நேற்று இரவு வரை கெடு விதித்திருந்தது. இதற்காக தேவைப்பட்டால் ராணுவ பலத்தை பிரயோகிப்போம் எனவும் எச்சரித்திருந்தது.

    ஆனால், இந்த அச்சுறுத்தலை பொருட்படுத்தாத சியானி அரசாங்கம், நாட்டை பாதுகாத்து கொள்ள தங்களால் முடியும் என கூறியது.

    இந்நிலையில் இந்த புதிய அரசாங்கம், அண்டை நாடுகளிடமிருந்து தாக்குதல் வரும் ஆபத்து உள்ளதாக கூறி, நைஜர் மீதான வான்வழி போக்குவரத்தை தேதி குறிப்பிடாமல் தடை செய்துள்ளது. இதனை மீறும் விதமாக போக்குவரத்து மேற்கொள்ளும் விமானங்களுக்கு உடனடியாக பதிலடி தரப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

    தற்போது அந்நாட்டின் வான்பரப்பில் எந்த விமான போக்குவரத்தும் நடைபெறவில்லை. அந்நாட்டை நோக்கி சென்ற விமானங்கள் இந்த தடையுத்தரவை அடுத்து வேறு வான்வழி பாதையில் மாற்றப்பட்டன.

    அண்டை நாடுகளான மாலி மற்றும் பர்கினா ஃபாஸோ புதிய நைஜர் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. தேவைப்பட்டால், ரஷியாவிடம் ராணுவ உதவியை நைஜர் கோரலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    • ராணுவ ஜெனரல் அப்துல்ரஹ்மானே டிசியானி தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
    • தேர்தலுக்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதாக உறுதி அளித்துள்ளார்.

    நியாமி:

    மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்துவிட்டு அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டார். இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ராணுவ ஜெனரல் அப்துல்ரஹ்மானே டிசியானி தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றியபோது கூறியதாவது:-

    நைஜர் மக்கள் மீது சொல்ல முடியாத துன்பங்களை ஏற்படுத்தவும், நம் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் விரும்பும் அனைவரையும் தோற்கடிக்க ஒட்டுமொத்த மக்களையும் ஒற்றுமைக்காக நாங்கள் அழைக்கிறோம். எங்களது உள்நாட்டு விவகாரத்தில் அண்டை நாடுகள், சர்வதேச சமூகங்கள் தலையிட வேண்டாம். தேர்தலுக்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

    ராணுவ புரட்சியை அடுத்து நைஜருக்கு மின் வினியோகத்தை அண்டை நாடான நைஜீரியா நிறுத்தியுள்ளது.

    • ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆதரவாக உள்ளவர்கள், ஆளுங்கட்சியின் தலைமை அலுவலகத்தை நோக்கி கும்பலாக சென்றனர்.
    • கும்பல் தீ வைத்ததில் ஆளுங்கட்சி அலுவலகம் கொழுந்துவிட்டு எரிந்தது.

    மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு அதிபர் முகமது பாசும் தலைமையிலான அரசை கவிழ்த்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொதுமக்களை துப்பாக்கி சூடு நடத்தி ராணுவம் விரட்டியடித்தது.

    இந்த நிலையில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆதரவாக உள்ளவர்கள், ஆளுங்கட்சியின் தலைமை அலுவலகத்தை நோக்கி கும்பலாக சென்றனர். அவர்களை பார்த்ததும் கட்சி அலுவலகத்தில் இருந்து தொண்டர்கள் அங்கிருந்து ஓடினர். பின்னர் அக்கும்பல் ஆளுங்கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்தது. இதையடுத்து அந்த கும்பலை கலைக்க போலீசார் புகை குண்டுகளை வீசினர். அந்த கும்பல் தீ வைத்ததில் ஆளுங்கட்சி அலுவலகம் கொழுந்துவிட்டு எரிந்தது. அங்கிருந்த வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    • நைஜரில் ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றினர்.
    • நைஜரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

    நியாமி:

    மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் திடீரென ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, அதிபர் முகமது பாசுமை சிறைபிடித்தனர்.

    நைஜர் அதிபர் முகமது பாசும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார் என மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் புதன்கிழமை பிற்பகுதியில் தோன்றிய வீரர்கள் குழு கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நைஜரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன என ராணுவ வீரர்கள் தேசிய தொலைக்காட்சியில் அறிவித்துள்ளனர்.

    அதிபருக்கு ஆதரவாக தலைநகர் நியாமியில் திரளான மக்கள் வீதிகளில் இறங்கினர். ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் இருந்த வீரர்கள் எதிர்ப்பை சமாளிக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர்.ஆனாலும் நகரம் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தது.

    ஆப்பிரிக்க ஒன்றியம், ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

    ×