என் மலர்
உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
- இஸ்ரேல் படைகள் காசாவில் ஹமாஸ் அமைப்பினருடன் சண்டையிட்டு வருகின்றன.
- ஹமாஸ் காசா தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இருதரப்பிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் கடந்த இரு தினங்களில் வடக்கு எல்லை மற்றும் தெற்கில் சுற்றுப்பயணம் செய்தார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரேலியப் படைகள் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன. ஹமாஸ் காசா தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம் என்று தெரிவித்தார்.
Live Updates
- 30 Oct 2023 10:14 AM IST
காசாவில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களை பாதுகாக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் வலியுறுத்தியுள்ளார்.
- 30 Oct 2023 9:24 AM IST
வெள்ளிக்கிழமை தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் தகவல் தொடர்பு வசதியை பெற்றுள்ளது காசா.
- 30 Oct 2023 9:24 AM IST
காசாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு, நீர் இல்லாமல் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று 30 க்கும் மேற்பட்ட டிரக்குகள் மூலம் மனிதாபிமான உதவிப் பொருட்கள் சென்றடைந்தன.
- 30 Oct 2023 7:05 AM IST
மேற்கு கரை ஜெனின் பகுதி மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 30 Oct 2023 7:05 AM IST
காசாவில் உள்ள துருக்கி- பாலஸ்தீனம் நட்பு மருத்துவமனை அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் மனிதாபிமான உதவிகள் தடைபட்டுள்ளதாக, அந்த மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
- 29 Oct 2023 6:47 PM IST
பாலஸ்தீனத்தின் ரமல்லா பகுதியின் வடமேற்கிலுள்ள பெய்ட் ரிமா, நப்லு பகுதியில் உள்ள அஸ்கர் அகதிகள் முகாம் மற்றும் வடக்கே உள்ள டுபாஸ் நகர் ஆகிய 3 இடங்களிலும் ஹமாஸ் அமைப்பினரை தேடும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வந்தது. இதில் மறைவிடங்களில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்கினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 29லிருந்து 31 வரை வயதுடைய 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுவரை பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் 110 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
- 29 Oct 2023 1:42 PM IST
இரு தரப்பிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது. ஹமாஸ் தாக்குதலில் 1,405 பேரும், இஸ்ரேல் தாக்குதலில் 7,703 பேரும், மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் 109 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
- 29 Oct 2023 12:03 PM IST
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வளர்ந்து வரும் நெருக்கடி குறித்து பிரதமர் நரேந்திர மோடி, எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் சிசியுடன் தொலைபேசியில் பேசினார்.
- 29 Oct 2023 11:11 AM IST
காசாவில் தொலைத்தொடர்பு சேவைகள் இன்று மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இணைய தளம் மற்றும் செல்போன் சேவைகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
- 29 Oct 2023 9:05 AM IST
தங்களிடம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டுமெனில் இஸ்ரேல் சிறையில் வாடும் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.






