என் மலர்
உலகம்

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: ஐ.நா.சபையில் இந்தியா குற்றச்சாட்டு
- ஐ.நா.சபையின் முயற்சிகளில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது.
- இந்தியாவில் பாலியல் வன்முறையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:
போர் உள்ளிட்ட மோதல் தொடர்பான பாலியல் வன்முறை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது. இதில் இந்திய பிரதிநிதி எல்டோஸ் மேத்யூ புன்னூஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 1971-ம் ஆண்டு வங்காளதேச விடுதலை போரின்போது லட்சக்கணக்கான பெண்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் செய்த மொத்த பாலியல் வன்முறையின் கொடூரமான குற்றங்கள் முற்றிலும் வெட்கக்கேடான பதிவு ஆகும். 1971-ம் ஆண்டு அட்டூழியங்கள் முதல் மோதல் சூழ்நிலைகளில் பாலியல் வன்முறையின் நீண்ட மற்றும் தொடர்ச்சியான வரலாற்றை பாகிஸ்தான் ராணுவம் கொண்டுள்ளது.
இந்த வருந்தத்தக்க முறை இன்று வரை குறையில்லாமல் தொடர்கிறது. பாகிஸ்தானில் சிறுபான்மைப் பெண்கள் கடத்தல், கட்டாய மதமாற்றங்கள், இளம் வயது திருமணங்கள் மற்றும் பிற துஷ்பிரயோகங்கள் போன்ற துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பாகிஸ்தானின் நீதித்துறை பெரும்பாலும் இதுபோன்ற குற்றங்களை அங்கீகரித்துள்ளது.
மோதல் தொடர்பான கொடூரமான பாலியல் வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். மோதல் மண்டலங்களில் பாலியல் வன்முறை தனிப்பட்ட வாழ்க்கையை அழிப்பது மட்டுமல்லாமல் தலை முறை தலைமுறையாக சமூகங்களில் நீடித்த வடுக்களை விட்டுச்செல்கிறது.
பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐ.நா. பொதுச்செயலாளரின் அறக்கட்டளை நிதிக்கு பங்களித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐ.நா.சபையின் இந்த முயற்சிகளில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவில் பாலியல் வன்முறையை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு உள்ளன என தெரிவித்தார்.






