என் மலர்
உலகம்

கனடா வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு தொடர்பு என்ற குற்றச்சாட்டு வாபஸ்?.. கார்னி பயணத்தால் மாறிய காட்சி
- பிரதமர் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்க மாட்டார்.
- கனடாவில் சுமார் 28 லட்சம் இந்திய வம்சாவளியினர் உள்ளனர்.
கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று (வியாழக்கிழமை) இந்தியா வரவுள்ளார். மார்க் கார்னி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாகும். முதலில் மும்பை வரும் அவர், அங்கிருந்து டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்.
பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் கனடா மண்ணில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கும் இந்தியாவிற்குமான தொடர்பு குறித்த முந்தைய குற்றச்சாட்டுகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.
இது தொடர்பாக டொராண்டோ ஸ்டார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் சார்ந்த நடவடிக்கைகள் இப்போது தொடரவில்லை என்பதில் கனடா அரசு உறுதியாக உள்ளது" என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
"இந்திய அரசு கனடாவின் ஜனநாயகத்தில் தலையிடுவதாக நாங்கள் இன்னும் நம்பினால், பிரதமர் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்க மாட்டார்" என்று கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு இடையே கடந்த சில மாதங்களாக நடந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாகவே இந்த சுமுக நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
2023-இல் சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில், அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவைக் குற்றம் சாட்டியதால் உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்தியா இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.
தற்போது ட்ரூடோவின் பதவி விலகலுக்குப் பிறகு, இந்தியாவுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப கனடா முன்வந்துள்ளது.
கார்னியின் இந்தப் பயணத்திற்கு கனடாவில் உள்ள சில சீக்கிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. பழைய குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் தொடர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவில் சுமார் 28 லட்சம் இந்திய வம்சாவளியினர் உள்ளனர். கனடாவில் உள்ள சர்வதேச மாணவர்களில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் சுமார் 4 லட்சம் பேர் என்ற அளவில் உள்ளனர்.
சுமார் 600-க்கும் மேற்பட்ட கனடா நிறுவனங்கள் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கித் துறைகளில் செயல்பட்டு வருகின்றன. எனவே மோடி - கார்னி சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.






