என் மலர்
உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 500 பேர் பலி- 1000 பேர் காயம்
- நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் திடுக்கிட்டு எழுந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
- இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
காபூல்:
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 11.57 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
ஜலாலாபாத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 27 கிலோமீட்டர் தொலைவில், 8 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் மற்றொரு நில நடுக்கம் ஏற்பட்டது. இது 10 கி.மீ. ஆழத்தில் 4.5 ரிக்டர் அளவில் பதிவானது.
நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் திடுக்கிட்டு எழுந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் இருந்து விழுந்ததில் 500 பேர் உயிரிழந்தனர். மேலும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வருவதையும் கட்டிடங்கள் இடிந்து விழுவதும் போன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.






