search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே
    X
    இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

    மக்கள் போராட்டம் எதிரொலி- இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க கோத்தபய சம்மதம்

    ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆதரவு உள்ளது என்று முன்னாள் அமைச்சரும், அதிருப்தி எம்.பி.யுமான உதயகம்மன்பில தெரிவித்தார்.
    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகிறது.

    இதற்கிடையே இலங்கையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் மகிந்த ராஜபக்சே, மாற்று கருத்து உடையவர்களால் இடைக்கால அரசாங்கம் அமைப்பதால் எந்த பலனும் கிடைக்காது என்றும் ஒருவேளை இடைக்கால அரசாங்கம் அமைந்தால் நானே தலைவராக இருப்பேன் என்றும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் இலங்கையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அஸ்கிரிய பீடத்தின் ஆவண காப்பாளர் கலாநிதி மெதகம் தம்மானந்த தேரர் கூறும்போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து, சமீபத்தில் புத்தமத குருமார்கள் அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர். அந்த கடிதத்திற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதில் அனுப்பினார்.

    அதில், “இடைக்கால அரசாங்கத்தை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளதுடன், பொருளாதார பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதாகவும் பதில் வழங்கிஉள்ளார். குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இடம் பெறும் கலந்துரையாடல்கள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

    அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல்களை நடத்தி அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆதரவு உள்ளது என்று முன்னாள் அமைச்சரும், அதிருப்தி எம்.பி.யுமான உதயகம்மன்பில தெரிவித்தார்.

    அமைச்சர் பதவியில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சேவால் நீக்கப்பட்ட உதய கம்மன்பில கூறும்போது, “ஐக்கிய மக்கள் சக்தி கட்சியால் கொண்டு வரப்பட உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 113 உறுப்பினர்கள் ஆதரவு கிடைக்கும் வரை காத்திருக்குமாறு கூறினோம். தற்போது எங்களிடம் 120 பேரின் ஆதரவு உள்ளது.

    பதவியில் இருந்து விலக பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தரப்பில் கூறும்போது, “பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு இன்னும் பெரும்பான்மை பலம் இருப்பதால் பதவியை ராஜினாமா செய்வதற்கான சூழல் இல்லை. பிரதமருக்கு எதிராக 120 பாராளுமன்ற உறுப்பினர்களை தயார்படுத்தி இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

    Next Story
    ×