search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷிய படைகள் (கோப்பு படம்)
    X
    ரஷிய படைகள் (கோப்பு படம்)

    #லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- ரஷியா போர்: கீவ் நகரை சுற்றி வளைத்து தாக்கும் ரஷிய படைகள்

    உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையிலும் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷிய படைகளின் தாக்குதல் நீடித்து வருகிறது.
    02.04.2022


    02.50: ரஷிய எண்ணெய் கிடங்கை உக்ரைன் படைகள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்  இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  துருக்கியில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சியை கைவிட வேண்டும் என்று ரஷிய தூதுக்குழு வலியுறுத்தியது.  உக்ரைன் பாதுகாப்பிற்கு ஐரோப்பிய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று உக்ரைன் சார்பில் பங்கேற்ற தூதுக்குழுவினர் தெரிவித்தனர்.

    01.40: எல்லை அருகில் உள்ள எண்ணெய் கிடங்கை உக்ரைன் படைகள்
    தாக்கியதாக ரஷியா தெரிவித்துள்ள குற்றச்சாட்டை உடனடியாக ஆய்வு செய்ய முடியவில்லை என்று, உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.  உக்ரைன் படை இந்த தாக்குதலில் ஈடுபட்டதா இல்லையா என்பதை உறுதிபடுத்த முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
       
    01.04.2022

    16.00: ரஷியாவின் மேற்கு பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், இது எதிர்காலத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு தடையாக இருக்கும் என ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கான சூழ்நிலையை உருவாக்கும் விஷயம் அல்ல, என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறி உள்ளார்.

    15.45: உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறையை ரஷிய வெளியுறவு மந்திரி லாவ்ரோவ் பாராட்டினார். 

    15.00: உக்ரைன் எல்லைக்கு அருகே, ரஷியாவின் மேற்கு நகரமான பெல்கோரோட் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அந்த எண்ணெய் கிடங்கு பற்றி எரிகிறது. உக்ரைனின் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து வந்து தாக்குதல் நடத்தியிருப்பதாக பிராந்திய ஆளுநர் கூறி உள்ளார்.  

    14.30: உக்ரைன் மீது ரஷியா பிப்ரவரி மாதம் 24-ம் தேதியன்று படையெடுப்பு தொடங்கியது. அன்று முதல் தற்போது வரை ரஷிய தாக்குதலில் சிக்கி 153 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 245 குழந்தைகள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

    12.10: உக்ரைனின் தெற்கு மற்றும் டான்பாஸ் பிராந்தியங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், தேசத்துரோகம் செய்த 2 மூத்த அதிகாரிகள் பதவிநீக்கம் செய்யப்பட்டனர் என தெரிவித்தார்.

    08.45: உக்ரைன் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் ரஷியாவுடன் இணைந்து செயல்படுத்தி வரும் ஷக்லினில் இயற்கை எரிவாயு எடுக்கும் ஷக்லின்-2 திட்டத்தை ஜப்பான் கைவிட வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன.

    ஆனால், ரஷியாவுடன் இணைந்து மேற்கொண்டு வரும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடப்போவதில்லை என்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பாராளுமன்றத்தில் உறுதியாக தெரிவித்தார்.

    06.50:  செர்னோபில் அணுமின் நிலையத்தை விட்டு ரஷிய படைகள் வெளியேறி உள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    06.40: உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து ராணுவ நடவடிக்கையை திரும்ப பெறுவதாக புதின் தெரிவித்துள்ளதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக பைடன்-புதின் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. 

    04.00: உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி ரஷிய படைகள் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.  இந்த வாரம் உக்ரைன் தலைநகர் அருகே தனது ராணுவ நடவடிக்கையை குறைப்பதாக மாஸ்கோ உறுதியளித்த போதிலும், அந்நாட்டு படைகளின் தாக்குதல் தொடர்வதாகவும் பிரிட்டன் உளவுத்துறை அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

    02.20: புதின் தனது ஆலோசகர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்ற அமெரிக்காவின் கருத்தை ரஷியா நிராகரித்துள்ளது. அதிபர் புதின் மாளிகையில் என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையான தகவல்கள் பென்டகனிடம் இல்லை என ரஷிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

    31.3.2022

    22.30: அகழிகள் தோண்டியபோது கதிர்வீச்சு வெளிப்பட்டதையடுத்து ரஷிய படைகள் செர்னோபில் அணுமின் நிலையத்தை விட்டு வெளியேறத் தொடங்கியதாக உக்ரைனின் அரசு மின் நிறுவனம் கூறி உள்ளது.

    21.00: ரஷியாவிலிருந்து எரிசக்தி இறக்குமதியில் இந்தியாவுக்கு அமெரிக்கா எந்த ஒரு சிவப்பு கோடும் போடாது. ஆனால், கொள்முதல் செய்வதில் வேகமான நடவடிக்கையை விரும்பவில்லை என டெல்லி வந்துள்ள அமெரிக்காவின்  தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தெரிவித்தார்.

    16.04: டொனஸ்க் பிராந்தியத்தில் ரஷியா இரவு முழுவதும் ஒயிட் பாஸ்பரஸ் வெடிபொருளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக டொனஸ்க் பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார்.

    16.04: செர்னிவ், கீவ் அருகே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாக இங்கிலாந்து புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×