search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே
    X
    இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே

    யாழ்ப்பாணம் சென்ற ராஜபக்சேவுக்கு மக்கள் எதிர்ப்பு

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களின் தவறான கொள்கை முடிவுதான் காரணம் என்பதால் நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர்கள் மீது அதிருப்தி எழுந்துள்ளது.
    கொழும்பு:

    இலங்கையில் ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சி நடந்து வருகிறது. ஈழத்தமிழர்கள் மீதான போர் தொடர்பாக எந்த விசாரணையையும் நடத்தமாட்டோம் என்று அறிவித்துள்ள அவர்கள், தற்போது பொருளாதார நெருக்கடியை சரி செய்ய கடுமையாக போராடி வருகிறார்கள்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களின் தவறான கொள்கை முடிவுதான் காரணம் என்பதால் நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர்கள் மீது அதிருப்தி எழுந்துள்ளது.

    இந்தநிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று ஒரு நாள் பயணமாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்றார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    ஆனால் அவரது வருகைக்கு ஈழத்தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஈழத்தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பிரதமர் மகிந்த ராஜபக்சே நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்ற இடங்களில் ஈழத்தமிழர்கள் திரண்டு நின்று எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். அவரது உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்களை செருப்பால் அடித்து அவமரியாதை செய்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை அடித்து விரட்டினார்கள். பலர் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய தாக்குதலில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் போன உறவுகளின் சங்கத்தலைவி ஈஸ்வரி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் ஜெனிட்டா ஆகிய இருவரும் காயம் அடைந்தனர்.

    அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல்- டீசல் பெறுவதில் மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள். சுமார் 6 மணி நேரம், 7 மணி நேரம் காத்திருந்து பெட்ரோல்- டீசல் பெறுகிறார்கள்.

    அப்படி காத்து நின்றவர்களில் 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை பெட்ரோல்- டீசலுக்காக காத்து நின்றவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
    Next Story
    ×