search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஆசிரியர்கள் போராட்டம்
    X
    ஆசிரியர்கள் போராட்டம்

    கொரோனா நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு- ஸ்டிரைக்கில் ஈடுபட பிரான்ஸ் ஆசிரியர் சங்கங்கள் அழைப்பு

    பள்ளிகளில் கொரோனா வேகமாக பரவி வருவதால், பணிக்கு வர முடியாத ஆசிரியர்களுக்கு பதிலாக போதுமான மாற்று ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன.
    பாரிஸ்:

    பிரான்சில் கொரோனா தொற்றுநோயை அரசாங்கம் கையாளும் விதம், கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நெறிமுறைகளை கண்டித்து ஆசிரியர் சங்கங்கள் வியாழக்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. அதிக அளவில் மாணவர்களை பள்ளியில் வைத்திருக்கும் வகையிலான தெளிவான விதிகளை ஏற்படுத்த  அதிகாரிகள் தவறிவிட்டதாக ஆசிரியர்கள் சங்கங்கள் குற்றம்சாட்டி உள்ளன.

    ஒமைக்ரான் பரவல் காரணமாக, பள்ளிகளின் வகுப்புகளை நடத்துவதற்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுவதாகவும், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி பெற முடியாமல் சிரமப்படுகிறார்கள், மருந்தகங்களுக்கு வெளியே பரிசோதனைகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள் எனவும் ஆசிரியர்கள் கூறுகின்றனர். 

    பள்ளிகள் இடையூறு இன்றி நடப்பதற்கு ஏதுவாக, பள்ளி ஊழியர்களுக்கு 5 மில்லியன் உயர்தர முக கவசங்களை வழங்குவதாகவும், கொரோனா தொற்று ஏற்பட்ட ஆசிரியர்கள் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்து, தனிமைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக 3,000க்கும் மேற்பட்ட மாற்று ஆசிரியர்களை நியமிப்பதாகவும் அரசு உறுதி அளித்தது.

    ஆனால், இதனை ஏற்க மறுத்த ஆசிரியர் சங்கங்கள், ஜனவரி 27 அன்று மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முன்னோட்டமாக, வியாழக்கிழமை நடக்கும் போராட்டம் இருக்கும் என்று கூறி உள்ளன. பள்ளிகளில் கொரோனா வேகமாக பரவி வருவதால், பணிக்கு வர முடியாத ஆசிரியர்களுக்கு பதிலாக போதுமான மாற்று ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன.

    கடந்த வாரம் ஆசிரியர்கள் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் நாட்டில் சுமார் பாதி அளவில் ஆரம்பப்பள்ளிகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×