search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கத்தில் உறவினர்களை இழந்தவர்கள்
    X
    நிலநடுக்கத்தில் உறவினர்களை இழந்தவர்கள்

    இந்தோனேசியா நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு

    இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் கடுமையாக இடிந்து தரைமட்டமானது.

    இந்த நிலநடுக்கத்தில் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டனர்.

    மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய பலரை உயிருடன் மீட்டனர். இந்த நிலநடுக்கத்தால் 27 ஆயிரத்து 800 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது. ஆனால், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியதால் அதில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்பட்டது.

    இந்நிலையில், நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்தோனேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் நேற்று வெளியிட்ட தகவலின் படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மொத்தம் 820 பேர் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×