என் மலர்
செய்திகள்

பாரிசின் புகழ்பெற்ற நோட்ரே டேம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து
பிரான்சில் வரலாற்று சின்னமாக விளங்கும் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் மேற்கூரை மற்றும் பிரதான ஊசி கோபுரம் இடிந்து விழுந்தது. #FranceFire #NotreDameCathedral
பாரிஸ்:
பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள 850 வருட பழமையான தேவாலயம் நோட்ரே டேம் கதீட்ரல். பாரம்பரிய சின்னமாக திகழும் இந்த தேவாலயத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் இந்த தேவாலயத்தின் மேற்கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பரவிய தீ, தேவாலயம் முழுவதையுமே ஆக்கிரமித்து மேற்கூரை இடிந்து விழுந்தது.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குறிப்பாக பிரதான சின்னமாக கருதப்படும் ஊசி கோபுரத்தை பாதுகாக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அந்த கோபுரம் முற்றிலும் எரிந்து இடிந்து விழுந்தது.
ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு உதாரணமாக திகழ்ந்துவந்த இந்த பழமையான தேவாலயம் தீக்கிரையானது அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் புனரமைத்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த இந்த தேவாலயத்தில் தீப்பிடித்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 6 மில்லியன் யூரோ செலவில் இந்த தேவாலயத்தின் கோபுரம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது.
கதீட்ரல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். உயிரிழப்புகள் குறித்தோ, தீயில் சிக்கி யாரேனும் தவிக்கிறார்களா என்பது குறித்தோ விவரங்கள் வெளியாகவில்லை. #FranceFire #NotreDameCathedral
Next Story