search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிரவ் மோடியை நாடு கடத்தும் விவகாரம்- இந்தியாவின் கோரிக்கையை கோர்ட்டுக்கு அனுப்பியது பிரிட்டன்
    X

    நிரவ் மோடியை நாடு கடத்தும் விவகாரம்- இந்தியாவின் கோரிக்கையை கோர்ட்டுக்கு அனுப்பியது பிரிட்டன்

    பணமோசடி வழக்கில் தேடப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியை பிரிட்டனில் இருந்து நாடு கடத்துவது தொடர்பான இந்தியாவின் கோரிக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. #NiravModi #NiravModiExtradition
    லண்டன்:

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    தப்பி ஓடிய நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர் நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பதாக தெரியவந்தது. அவரை இந்தியாவிற்கு கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்தது.

    இந்நிலையில், நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான இந்தியாவின் கோரிக்கையை, பிரிட்டன் உள்துறை அமைச்சகம், லண்டன் நீதிமன்றத்திற்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கு லண்டன் நீதிமன்றத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அனுப்பப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வந்திருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



    இதையடுத்து நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான சட்ட நடைமுறை விரைவில் தொடங்க உள்ளது. இந்தியாவில் இருந்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் விரைவில் லண்டன் சென்று, வழக்கறிஞர்களை நியமித்து நிரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்களுடன் வழக்கை நடத்த உள்ளனர்.

    நிரவ் மோடி தற்போது லண்டனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பதாகவும், வைர வியாபாரம் செய்து வருவதாகவும் பிரிட்டன் நாளிதழ் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. #NiravModiExtradition
    Next Story
    ×