search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் பாராளுமன்ற கூட்டத்தை புறக்கணித்த சிறிசேனா ஆதரவு எம்பிக்கள்
    X

    இலங்கையில் பாராளுமன்ற கூட்டத்தை புறக்கணித்த சிறிசேனா ஆதரவு எம்பிக்கள்

    இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்தை அதிபர் சிறிசேனாவின் ஆதரவு எம்பிக்கள் மற்றும் ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் புறக்கணித்தனர். #SriLankanParliament
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்கரம சிங்கேவை அகற்றி விட்டு அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமிப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார்.

    அதை ரனில் விக்ரமசிங்கே ஏற்காததால் இலங்கை அரசியலில் குழப்பங்கள் நிலவுகிறது. அதை தொடர்ந்து இன்னும் 20 மாதங்கள் ஆட்சி காலம் இருக்கும் நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து சிறிசேனா உத்தரவிட்டார். அதற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

    இந்த சூழ்நிலையில் இலங்கை பாராளுமன்ற கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டம் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா தலைமையில் நடந்தது.

    ஆனால் இந்த கூட்டத்தை அதிபர் மைத்ரியபால சிறிசேனா மற்றும் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவு எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.

    இதுகுறித்து அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் எம்.பி. நிமல் டி சில்வா கூறியதாவது:-

    சபாநாயகர் கரு. ஜெயசூர்யா ஒருதலைபட்சமாக ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். ராஜபக்சேவை பிரதமராக ஏற்க மறுக்கிறார். எனவே, சபாநாயகர் தனது முடிவில் இருந்து மாறும்வரை பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம். தொடர்ந்து புறக்கணிப்போம் என்றார்.

    இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. ரவூப் ஹக்கீம் சபாநாயகர் கரு. ஜெய சூர்யாவை நேற்று சந்தித்தார். அப்போது சர்ச்சைக்குரிய முறையில் நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சேவை அச்சு மற்றும் டி.வி. ஊடகங்கள் பிரதமராக அங்கீகரித்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

    ராஜபக்சே தலைமையிலான ஆட்சியையும் ஊடகங்கள் அங்கீகரித்துள்ளன. எனவே சட்ட விரோதமான இந்த ஆட்சிக்கு ஊடகங்கள் அங்கீகாரம் வழங்க கூடாது என பாராளுமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ராஜபக்சேவை பிரதமர் என குறிப்பிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். #SriLankanParliament
    Next Story
    ×