search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தோனேசியாவில் சுனாமி தாக்கிய பகுதியில் எரிமலை வெடிப்பு- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
    X

    இந்தோனேசியாவில் சுனாமி தாக்கிய பகுதியில் எரிமலை வெடிப்பு- பொதுமக்களுக்கு எச்சரிக்கை

    இந்தோனேசியாவில் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுலவேசி தீவில் எரிமலை வெடித்து சாம்பலைக் கக்கத் தொடங்கியதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #IndonesiaVolcanoErupts
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த 29-ந்தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு இருந்த பெரும்பாலான வீடுகள், கட்டி டங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமானது. வீடுகள் இன்றி தவிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழப்பு 1400ஐ எட்டியுள்ளது.

    இந்த சுனாமியின் தாக்கத்தில் இருந்து மக்கள் மீள்வதற்குள், சுலவேசி தீவில் உள்ள ஒரு எரிமலை (மவுண்ட் சோபூடன்) இன்று காலை வெடித்து சிதறி கடும் சீற்றத்துடன் சாம்பலைக் கக்கத் தொடங்கி உள்ளது. எந்த நேரத்திலும் நெருப்புக் குழம்பு வெளிப்படும் அபாயம் உள்ளது. எரிமலையில் இருந்து வெளிவரும் புகையானது வானில் 6000 மீட்டர் உயரத்திற்கு பரவி உள்ளது. இந்த சாம்பல் விமான என்ஜின்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்  அப்பகுதியில் விமானங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


    எரிமலை அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், சாம்பல் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முகமூடிகள் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

    பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் எரிமலைகள் நிரம்பிய பகுதியில் உள்ளது இந்தோனேசியா. இங்கு சிறியதும் பெரியதுமான 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உயிர்ப்புடன் இருக்கின்றன. #IndonesiaVolcanoErupts #IndonesianIsland
    Next Story
    ×