search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி முடிவுக்கு வந்தது
    X

    மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி முடிவுக்கு வந்தது

    கோலாலம்பூரில் இருந்து பீஜிங் செல்லும் வழியில் 239 பயணிகளுடன் நான்காண்டுகளுக்கு முன்னர் மாயமான மலேசிய விமானத்தை தேடும் ஓசியன் இன்பினிட்டி நிறுவனத்தின் வேட்டையும் தோல்வியில் முடிந்தது. #MH370huntends #OceanInfinity
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் நகருக்கு 8-3-2014 அன்று 227 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 12 பணியாளர் என மொத்தம் 239 பேருடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் (எம்.ஹெச்.370) இந்திய பெருங்கடலுக்குள் (தெற்கு) விழுந்தது.



    இதையடுத்து, அந்த விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. ஆஸ்திரேலியக் கடற்படை கப்பல் ‘ஓஷன் ஷீல்ட்’ மற்றும் எச்.எம்.எஸ் ‘எக்கோ’ என்ற இரண்டு கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுதவிர மேலும் பல தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

    ஆனால், 1046 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் எந்த பலனும் கிடைக்காத நிலையில் தேடும் பணியை நிறுத்தி கொள்வதாக மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள் கடந்த ஆண்டு அறிவித்தன.

    இதற்கிடையில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் ‘கண்டுபிடித்தால் பணம் - இல்லாவிட்டால் சேவை இலவசம்’ என்னும் ஒப்பந்த அடிப்படையில் இந்திய பெருங்கடல் பகுதியில் மாயமான அந்த விமானத்தை தேட முன்வந்து விருப்பம் தெரிவித்தது. இந்த பணிக்காக ‘ஓசியன் இன்பினிட்டி’ என்னும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அதிநவீன கப்பல் தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த பணிக்கு மலேசிய போக்குவரத்து துறை மந்திரி லியோவ் டியாங் கடந்த 6-1-2018 அன்று அனுமதி அளித்தார்.



    ஆஸ்திரேலிய கடல் எல்லைக்கு உட்பட்ட ஆழ்கடல் பகுதியில் 8 நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தி சுமார் 80 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இரவு-பகலாக தேடும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், இதுவரை எந்த நல்ல செய்தியும் கிடைக்கவில்லை.

    இந்த தேடுதல் வேட்டையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என மலேசிய அரசு கெடு விதித்திருந்தது. அந்த கெடுக்காலம் முடிவடைந்ததாலும், தற்போது கடல் பகுதியில் தேடுதல் பணிக்கேற்ற பருவநிலை இல்லாததாலும் நான்காண்டுகளுக்கு முன்னர் மாயமான மலேசிய விமானத்தை தேடும் ஓசியன் இன்பினிட்டி நிறுவனத்தின் பணிகள் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமானத்தை பற்றிய மிகச்சிறிய தடயம் கிடைத்திருந்தாலும் ‘ஓசியன் இன்பினிட்டி’ நிறுவனத்துக்கு 7 கோடி அமெரிக்க டாலர்கள் கிடைத்திருக்கும். ஆனால், இந்த தேடுதல் வேட்டை தோல்வியில் முடிந்ததால் அந்நிறுவனம் வெறுங்கையுடன் திரும்ப நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #MH370huntends #OceanInfinity

    Next Story
    ×