search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புனித குர்ஆன் ஒப்புவிக்கும் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய துபாய் அரசு பரிசீலனை
    X

    புனித குர்ஆன் ஒப்புவிக்கும் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய துபாய் அரசு பரிசீலனை

    துபாயில் நடைபெறும் போட்டியில், புனித குர்ஆன் மனனம் செய்து ஒப்புவிக்கும் கைதிகளை, சிறைச்சாலையின் விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் ஒப்பிக்கும் அளவு மற்றும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    துபாய்:

    துபாய் அரசாங்கம் சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் புனித குர்ஆன் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், 22ஆவது சர்வதேச போட்டி துபாயில் ரமதான் மாதம் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி  20ம் தேதி வரையில் நடைபெறும். “22ஆவது சர்வதேச புனித குர்ஆன் விருது” எனக் குறிப்பிடப்படும் இந்த நிகழ்வு “ஸயீத் பதிப்பு” (Edition of Zayed) என்ற பொருளில் அமைந்துள்ளது.

    ஐக்கிய அரபு அமீரகத்தின்  குடியரசுத் தலைவர் ஷேக் கலீஃபா பின் ஸயீத் அல் நஹ்யான் இந்த ஆண்டுக்கான போட்டியை “ஸயீத் ஆண்டு” (Year of Zayed) என அறிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனர், மறைந்த ஷேக் ஸயீத் பின் சுல்தான் அல் நஹ்யானின் 100ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. அவர் ஐக்கிய அரபு அமீரகத்தை  நிறுவி மேம்படுத்துவதுவதற்கு அரும் பாடுபட்டவர். உள்ளூர் நிலையிலும் உலக அளவிலும் சாதனை புரிந்தவர்.

    இப்போட்டியில் இந்த ஆண்டு பங்கேற்கும்படி உலகம் முழுவதும் 145 நாடுகளுக்கும், பல்வேறு சமுதாயத்தினருக்கும் இந்த நிகழ்ச்சிகளை நடத்தும் நிர்வாக மற்றும் நிதிக் குழு  அழைப்பு விடுத்துள்ளது. இதில் பங்கேற்க நடப்பு ஆண்டில் இதுவரையில் மொத்தம் 104 பேர் பங்கெடுப்பதாக உறுதி செய்துள்ளனர். இவர்களில் தொடக்க நிலைத் தேர்வுகளில் நான்கு பேர் தகுதி இழந்ததாக நடுவர் குழு அறிவித்துள்ளது. இறுதிப் போட்டி பொதுமக்களின் முன்னிலையில் நடத்தப்படுவது கட்டாயமாகும்.

    குர் ஆன் மனனப் போட்டி துபாய் தொழில் வர்த்தக சபை அரங்கில் நடத்தப்பட்டு வருகிறது. உலகளாவிய போட்டியின்போது ஒவ்வோர் இரவும் தலா 8 அல்லது 9 பேர் இறுதிப் போட்டியில் பங்கேற்பர்.


    அமைப்புக் குழு சார்பில் ஒவ்வொரு இரவும் பார்வையாளர்களுக்கான அதிர்ஷ்ட குலுக்கல் போட்டியும் நடத்தப்படுகிறது. அதில் பலர் பணப் பரிசுளையும் விலையுர்ந்த பரிசுகளையும் வென்ற மகிழ்ச்சியில் நிறைவாகச் செல்கின்றனர்.

    புனிதக் குர் ஆன் மனனம் செய்து ஒப்பிக்கும் கைதிகளை சிறைச்சாலையின் விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் ஒப்பிக்கும் அளவு மற்றும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இதுபற்றி துபாய் அரசின் கலாசார மற்றும் மனித நேய உறவுகளுக்கான ஆலோசகரும் துபாய் சர்வதேச புனித குர்ஆன் விருது அமைப்புக் குழுவின் தலைவருமான இப்ராஹீம் முஹம்மது பூ மெல்ஹா கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதம மந்திரியுமான துபாயின் ஆட்சித் தலைவருமான ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் உத்தரவின்படி, புதிதாக துபாயில் உள்ள சிறைவாசிகளுக்கும் குர்ஆன் நினைவாற்றல் போட்டி நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.

    இத்திட்டத்தின் கீழ் முழுமையாக குர் ஆன் மனனம் செய்து ஒப்பிக்கும் கைதிகள் சிறைச்சாலையின் விதிகளுக்கு உட்பட்டு  அவர்கள் ஒப்பிக்கும் அளவு மற்றும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவர். இத்திட்டத்திற்கு கடந்த ஆண்டுகளில் மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. பல்வேறு சீர்திருத்த துறைகள் இந்த விருதுக் குழுவுடன் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன” என்று தெரிவித்தார்.

    -ஜெஸிலா பானு, துபாய்
    Next Story
    ×