search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏமனின் சோகோட்ராவை தாக்கியது வெப்பமண்டல புயல்- அவசர நிலை பிரகடனம்
    X

    ஏமனின் சோகோட்ராவை தாக்கியது வெப்பமண்டல புயல்- அவசர நிலை பிரகடனம்

    ஏமன் நாட்டின் சோகோட்ரா தீவில் வெப்பமண்டல புயல் தாக்கியதையடுத்து, அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. #TropicalStorm
    துபாய்:

    அரபிக் கடலில் அமைந்துள்ளது சோகோட்ரா தீவு. ஏமன் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த தீவில் இன்று கடுமையான வெப்பமண்டல புயல் தாக்கியது. இதன் காரணமாக தீவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு உயரமான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒருசில பகுதிகளில் உள்ளவர்கள் ஊரை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். 

    2 படகுகள் மூழ்கியதால் அதில் பயணம் செய்த 17 பேர் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை. அவர்கள் வெள்ளத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், தீவு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மழை வெள்ளம் காரணமாக ஊரைவிட்டு வெளியேறி மலைகளில் வசிக்கும் மக்கள் மற்றும் கிராமங்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாக அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

    இதேபோல் கிழக்கு ஆப்ரிக்காவில் நேற்று வெப்பமண்டல புயலின் தாக்கத்தினால் சோமாலிலேண்டில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #TropicalStorm
    Next Story
    ×