search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குர்திஸ்தான்: மசூத் பர்ஜானி அதிபர் பதவியில் தொடரமாட்டார் - முக்கிய அரசு அதிகாரி தகவல்
    X

    குர்திஸ்தான்: மசூத் பர்ஜானி அதிபர் பதவியில் தொடரமாட்டார் - முக்கிய அரசு அதிகாரி தகவல்

    குர்திஸ்தானில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலைகள் காரணமாக மசூத் பர்ஜானி அதிபர் பதவியில் தொடரமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
    எர்பில்:

    ஈராக்கிய குர்திஸ்தான் அல்லது குர்திஸ்தான் பிராந்தியம் என்பது ஈராக்கின் ஒரு தன்னாட்சிப் பகுதியாகும். இதன் எல்லைகளாக கிழக்கே ஈரான், வடக்கே துருக்கி, மேற்கே சிரியா, தெற்கே ஈராக்கின் ஏனைய பகுதிகள் ஆகியன அமைந்துள்ளன. இப்பிராந்தியத்தின் தலைநகர் ஆர்பில். குர்திஸ்தான் பிராந்திய அரசு இதனை அதிகாரபூர்வமாக நிருவகித்து வருகிறது. இப்பகுதியின் அதிபராக கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து மசூத் பர்ஜானி செயல்பட்டு வருகிறார்.

    குர்திஸ்தான் பிராந்தியத்தில் சுதந்திர நாடு கோரி கடந்த செப்டம்பர் 25-ம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 92 சதவீத மக்கள் தனி நாட்டிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என அந்த வாக்கெடுப்பை நடத்திய குர்திஷ் அமைப்பினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து குர்திஸ்தான் தனிநாடாக பிரியும் என மசூத் பர்ஜானி அறிவித்தார்.

    அவரது இந்த அறிவிப்பிற்கு பின்னர் அப்பகுதியில் கலவரங்கள் அதிகரித்தது. தனிநாடாக பிரிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இது மசூத் பர்ஜானிக்கு நெருக்கடி அதிகரித்தது. இதனால் அவர் தனிநாடாக பிரிவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார்.

    பர்ஜானியின் பதவிக்காலம் வருகிற 1-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், நவம்பர் 1-ம் தேதிக்கு பிறகு பர்ஜானி அதிபர் பதவியில் தொடரமாட்டார் எனவும், தனது அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு பிரித்து வழங்க அவர் முடிவெடுத்துள்ளதாகவும் குர்திஸ்தான் அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து குர்திஸ்தான் பாராளுமன்றத்திற்கு, பர்ஜானி கடிதம் எடுதியுள்ளார் எனவும் அவர் கூறினார்.

    நவம்பர் 1-ம் தேதி குர்திஸ்தானில் அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருந்தது. எனினும் அங்கு நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×