என் மலர்
செய்திகள்

யுனைடெட் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் அடாவடி: முன்பதிவு செய்திருந்தும் தாயின் மடியில் உட்கார வைக்கப்பட்ட சிறுவன்
விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தும், விமான நிறுவன ஊழியர்கள் செய்த அடாவடியால் தாயின் மடியிலேயே வலுக்கட்டாயமாக சிறுவன் பயணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்:
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள கபோலி பகுதியை சேர்ந்தவர் ஷிர்லே யாமாச்சி. இவர் தனது 2 வயது மகனுடன் ஹூஸ்டனில் இருந்து போஸ்டன் நோக்கி செல்ல யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த 29ம் தேதி பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தார். இருவருக்கும் தனித்தனியாக இருக்கை முன்பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து, குறிப்பிட்ட தினத்தில் ஹூஸ்டன் விமான நிலையம் சென்ற யாமாச்சியையும், அவரது மகனையும் விமான நிறுவன அதிகாரிகள் சோதனை செய்து விமானத்தில் குறிப்பிட்ட இருக்கைகளில் அமர வைத்தனர்.
விமானம் மேலே பறந்த சிறிது நேரத்தில் யாமாச்சியிடம் விமான நிறுவன ஊழியர்கள் சென்றனர். அருகில் உட்கார வைக்கப்பட்டிருந்த சிறுவனை அவரது மடியில் உட்கார வைத்துக் கொள்ளும்படி கூறினர். ஆனால், சிறுவனுக்கும் சேர்த்து முன்பதிவு செய்துள்ளேன் என யாமாச்சி அவர்களிடம் கூறினார்.
அதை காதில் வாங்காத ஊழியர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியில், குப்பைகள் கொட்டும் பகுதியில் சென்று உட்கார வைக்கப்படுவீர்கள் என அவர்களை மிரட்டினர். அதன்பின், சிறுவனை எழுப்பி யாமாச்சியின் மடியில் வலுக்கட்டாயமாக உட்கார வைத்தனர்.

அந்த சிறுவனின் இருக்கையில் வேறொரு பயணியை உட்கார வைத்தனர். இதற்காக அந்த பயணியிடம் 79 டாலர் பெற்றுக் கொண்டனர்.
இதைதொடர்ந்து, 3 மணி நேரத்துக்கும் மேலாக யாமாச்சி தனது மடியில் மகனை அமரவைத்தபடி பயணம் செய்தார்.
விமானம் போஸ்டன் விமான நிலையத்தை அடைந்ததும், யாமாச்சி யுனைடெட் விமான நிறுவன அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
இதுகுறித்து யாமாச்சி கூறுகையில், “ஹூஸ்டனில் இருந்து போஸ்டன் வரையிலான பயணத்துக்கு நான் முன்பதிவு செய்திருந்தேன். எனது மகனுக்கும் 969 டாலர் கொடுத்து முன்பதிவு செய்திருந்தேன். ஆனால் விமான நிறுவன ஊழியர்களின் அடாவடியால் எனது பயணம் மிக மோசமாக அமைந்துவிட்டது. எனது மகனை மடியில் வைத்து பயணம் செய்தது குறித்து எந்த ஊழியரும் வாய் திறக்காதது வேதனையை தந்தது. நான் இங்கிருந்து திரும்பி செல்ல இந்த நிறுவனத்துக்கு வரலாம் என முடிவு செய்திருந்தேன். ஆனால் இப்போது யோசிக்க ஆரம்பித்து விட்டேன்’’ என தெரிவித்துள்ளார்.
யாமாச்சியின் புகார் குறித்து விசாரித்த விமான நிறுவன அதிகாரிகள், அவரது புகார் உண்மை என கண்டறிந்தனர். இதையடுத்து, விமான நிறுவனம் யாமாச்சியிடம் மன்னிப்பு கோரியது. பயணிகளிடம் நடந்து கொள்வது பற்றி தங்கள் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப் போவதாகவும், அடாவடியில் ஈடுபட்ட விமான நிறுவன ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் பயணிகளிடம் அடாவடியில் ஈடுபடுவது இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பலமுறை தங்கள் விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






