search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சிரியா: டமாஸ்கஸ் நகரில் அடுத்தடுத்து வெடித்த மூன்று கார் குண்டுகள் - 8 பேர் உடல்சிதறி பலி

    சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் இன்று ஒரே நாளில் தொடர்ச்சியாக மூன்று கார் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் 8 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
    டமாஸ்க்ஸ்:

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.

    இந்நிலையில், இன்று டமாஸ்கஸ் நகரின் மத்தியில் உள்ள தாஹிர் சதுக்கம் அருகே தீவிரவாதி ஓட்டி வந்த கார் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த பதற்றம் அடங்குவதற்குள்ளாகவே விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள பாதுகாப்பு படையினரின் நிலையை குறிவைத்து வந்த இரு கார் குண்டுகள் வெடித்தன.

    தாஹிர் சதுக்கம் அருகே வெடித்த கார்குண்டில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ரம்ஜான் விடுமுறைகள் முடிந்து இன்று வழக்கம் போல அனைவரும் தங்களது பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தீவிரவாதிகள் நடத்தியுள்ள இந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதல் கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் டமாஸ்கஸ் நகரில் நடைபெற்ற பெரிய தாக்குதல் ஆகும். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×